கானல் தேசம் – உனையே மயல்கொண்டு

மதிப்பீடு : சி. செல்வராசா

ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் 1972-76 வரை பேராதனைப்பல்கலைகழகத்தில் படித்த காலத்தில் நிறையச் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகளும் வாசித்து மகிந்தேன். அதன் பின் அரசறிவியலில் சிறப்புத்தேர்ச்சி பெற்று 1977-87 வரை பத்தாண்டுகள் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்தபோதோ அல்லது 1987ல் அவுஸ்திரேலியா வந்து கடந்த 32 வருடங்களாக இந்த நாட்டில் வாழ்கின்றவேளையிலோ இந்த அரசறிவியல் மற்றும் இலங்கை அரசியல் பற்றி வாசித்து எழுதியது மட்டுமே. நாவல், சிறுகதை, கவிதை பெரிதாக வாசித்து இன்பம் பெறவில்லை. இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பின் நண்பர் நொய்யல் நடேசனின் “கானல் தேசம்” பற்றி அறிந்து அதை ஆவலுடன் வாங்கி வாசித்தேன். இலங்கை அரசியலுடன் அதுவும் ஆயுதப்போராட்ட அரசியலுடன் இணைந்த கதை என்பதால் ஆரவத்துடன் வாசிக்கத்தொடங்கினேன். பல்வேறு உலகவிளையாட்டுப்போட்டிகளைப் பார்க்கும் குழப்பங்களுக்கு மத்தியில் வேகமாக வாசித்து முடித்தேன். தன்மைக்குத் திருப்தியாக இருந்தது . “இந்த மிருக வைத்தியரா இப்படி எழுதியிருக்கிறார்” என்று வியந்து போனேன். சண்டைக் காலத்தில் ஊரில் சீவிக்காவிட்டாலும் ஊரில் இருந்தவர்போல் இடங்கள், நிகழ்வுகள், போராளிகள் போராடிய இடங்கள், அவர்கள் நடத்திய வதைமுகாம்கள், சித்திரவதைகள் மேலும் வெளிநாடுகளில் இயக்கங்களின் ஆதரவாளர்கள்/ அடியாட்கள் செய்த திருகுதாளங்கள் , பணமோசடிகள் என்பவற்றோடு அரசாங்கங்களின் உளவு வேலைகள் எனப் பல்வேறு தகவல்களை நாவலினூடாக அவர்சொல்லும்விதம் அதில் நாவனின் கதையோட்டம் இரசனை குழம்பிவிடாமல் பார்த்துக்கொண்டு கதையை நகர்த்திச்செல்லும் உத்தி என்பன மிகவும் சிறப்பாக அமைந்து ஒரு நல்ல நாவலை , அதுவும் நம் வாழ்வோடு இரண்டறக்கலந்த ஒரு பக்கத்தைப் பின்நோக்கிப் புரட்டிப்பார்க்க நடேசனின் “கானல் தேசம்” எனக்கு உதவியது. “எல்லாப் பொடியளும் எந்த இயக்கம் என்று பாராமல் எமக்கு விடுதலை பெற்றுத்தானே போனவ்கள். அவங்களில ஒருபகுதியை இன்னொருபகுதி சுட்டுத்தள்ளி அழித்தது எந்தவித்த்திலும் நியாயமான செயல் அல்ல, இதுவே எம் இனத்தின் அழிவின் ஆரம்பம் ஆகும்” என்பது என் கருத்து.

நடேசனின் “கானல் தேசம்” நாவலை வாசித்து முடித்ததும் அவரது மற்றொரு நாவலான “உனையே மயல் கொண்டு” என்ற நாவலை வாசித்தேன். இது எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. எம்மில் பலருக்கு ஏற்பட்ட பல நிதர்சமான அனுபவங்கள் இந்த நாவலில் இழையோடுவதனால் மிக நெருக்கமாக எம்கதையை நாமே வாசிப்பதுபோல் நாவலை வைக்க மனம் இல்லாமல் வாசித்தேன்.

கதையில் வரும் சந்திரன்- மஞ்சுளா- ஷோபா-ஜூலியா, இராசம்மா-இராசநாயத்தார்- போன்ற கதாபாத்திரங்கள் நாம் அன்றாடம் காணும் மனிதர்கள். அவர்களது எண்ணங்களும், போக்குகளும், செயற்பாடுகளும், பிரச்சனைகளும், மனப்போராட்டங்களும், மன அழுத்தங்களும்இவற்றுக்கிடையே அவர்களின் இல்லறவாழ்வும் இதற்கு அடிப்படையான உடல்உறவு இன்பமும் அதன் பிறழ்வும் எவ்வாறு மனித வாழ்வினை இயக்கிச்செல்கின்றன அல்லது இடறிவிழுத்துகின்றன என்பதை நொய்யல் நடேசன் நல்ல ஒரு நாவலாக எமக்குத் தந்துள்ளார். “வாழ்க்கை என்பது சந்தோசமாக வாழ்வதற்கே! ஆனால் அதிகமானோருக்கு ஏன்எல்லோருக்குமே அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் வாழ்வு இன்பமாக சந்தோசமாக அமைவதில்லை” என்றே நான் கருதுகின்றேன். இதனால் அவரவர் வாழ்வில் ஏற்படும் ஏமாற்றங்கள், தோல்விகள், விரக்திகள் என்பவற்றுக்கு வடிகால் தேடி ஒவ்வொருவரும் தமக்குத்தெரிந்தவகையில் செயற்படுவதே மனித இயல்பு. இதே இந்தக் கதையில் வரும் சந்திரனும் செய்ய முயற்சிக்கின்றான். இது இந்த நாவல் பற்றிய விமர்சனம் அல்ல. ஒரு வாசகனின் மனவோட்டம். அன்புடன் , சிட்னியிலிருந்து சி. செல்வராசா

Advertisements
Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நடேசனின் வண்ணாத்திக் குளம்


பாலியல் வயது இளையயோடும் ஒரு காதல் கதை. இப்படித் தான் இந்த வண்ணாத்திக் குளம் குறுநாவலின் தொடக்கத்தை என்னால் முதலில் உணரமுடிந்தது.
ஆனால் இக்கதைப் பின்னணியின் ஆழத்தை ஒரு தமிழன் என்ற பகுப்பாய்வில் நின்று கொண்டு நான் வாசித்த போது தான், ஏதோ ஒரு ஏக்கம் இளையோடுவதை உணர முடிந்தது. கதையின் கருத்து உணர்த்தும் உள் நோக்கம் எல்லா வாசகர்களுக்கும் கொண்டு சென்றிருக்குமா என்ற கேள்வியோடு தான் இதை எழுதுகிறேன்.
பெரும்பான்மையான இடங்கள் ஒவ்வொன்றிலும் ஏதோ நடக்க வேண்டி நடை முறை சரி முறையில் நடக்காமல் பாதை மாறிப் போகும் நிலையை இக் கதையின் கதா நாயகன் சுதாகரித்துக் கொண்டு தனது முடிவுகளைத் தெளிந்த மனத்துடன் தெரிவாக்கிக் கொண்டு நகரும் தன்மை என்னைக் கவர்ந்து நிற்கிறது. ஏக்கமே இந்த நாவலின் முதன்மை உணர்வாக நான் நுகர்ந்த நுகர்வின் பகுதி.
கதாநாயகன் விமானத்தில் அவன் தன் தாய் மண்ணையும் மனிதர்களையும் விட்டுப் பிரியும் அந்த வான வெளிப் பரப்பின் பார்வையில் பதிவாகிய கடைசிப் பக்கம் இன்னும் எனக்கு மன ஆழத்தில் ஊன்றிக் குத்தப்பட்ட அந்த ஆணியின் வலி சுமக்கும் பகுதி என்பதாலோ என் மனதில் இன்னும் இப்பகுதி உளன்று கொண்டிருக்கிறது.நடேசனின் இந்த நாவவலுக்குப் பின் வந்த நாவல்கள் வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்தும் விமர்சனத் தாக்கம் இந்த நாவலில் ஏற்படுத்தாத போதும் தெளிவான வாசிப்போடு நகர்ந்து செல்லும் வாசகனின் மனதை விட்டு அகல மறுக்கும் சம்பவங்களின் கோர்வை தான் நாவலை உயர்த்தி நிற்கின்றது என்பேன்.இதனால் தான் இந்த நாவல் ஒரு திரைப் படப் பிரதியை உருவாக்க முடிந்திருக்கும் என்பதும் என் எண்ணம்.
நல்ல நாவலைப் படித்த மனத்தாங்கலுடன் விடை பெறுகின்றேன்.

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

கரையில் மோதும் நினைவலைகள் 1 கள்ளவிசா


நடேசன்
62ஆவது பிறந்ததினம் கடந்த மார்கழி 23 ஆம் திகதியன்று மாலை 6.30 மணிவரையும் வேலை செய்தேன். வெளியே சென்று காலையில்; ரெஸ்ரோரண்ட் ஒன்றில் உணவருந்துவோம் என்று மனைவி கேட்டபோது மறுத்துவிட்டேன். கோதில்லாத நண்டு வீட்டில் சமைக்கப்பட்டிருந்தது. வீட்டில் உணவு சிறந்ததாக இருக்கும்போது வெளியில்போகத்தேவையில்லையே? ஆனால், வாய்க்கு இதமாகவும் சமிப்பதற்கு வசதியாகவும் வெள்ளை வைன் போத்தல் ஒன்றை வாங்கிவருவதற்கு நினைத்தேன். நியூசிலாந்து ஓய்ரர் பே சவன் பிலாங் எனக் கேட்டேன். வெள்ளை வைனும் கடல் உணவுக்குப் பொருத்தமானது

எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள வைன்கடைக்குச் சென்று காரில் இருந்து இறங்கியதும், வெக்கை முகத்தில் அடித்தது. வெய்யில் எரித்தது. காற்றை யாரோ திருடிவிட்டார்களோ என்பதுபோல் மரங்கள் அசையவில்லை. மெல்பனின் கோடையில் 9 மணிக்குப் பின்பாகவே இரவு ஊர்ந்து வரும். வேறு ஒருவரும் இல்லை. மதுக்கடையில் வேலை செய்பவரை பல முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இதுவரை பேசியதில்லை. அவரது முகத்தில் ஏதோ சோகம் தெரிவதுபோல் எனக்குப் பட்டது. இரவு நேரங்களில் அதிகமாக வேலை செய்பவர். அவர் ஒரு வெள்ளை அவுஸ்திரேலியர். எனது வயதிருக்கும். கண்ணாடி போடாதவர் தீர்க்கமான பார்வையுடன் மிகவும் திடகாத்திரமானவர்.

‘உங்களுக்கு நத்தாருக்கு விடுமுறையில்லையா?”

‘நான் வருடம் முடிந்த பின்பாக பென்டிகோ போகவேண்டும். அதற்கு முதல் போக முடியாது. எனக்கு இங்கு வேலை உள்ளது’ என்றார்.
நத்தார்ப் பண்டிகையை இந்த மனிதர் தனிமையில் கழிக்கவேணடும் என்ற கழிவிரக்க உணர்வு எனக்குள் ஏற்பட்டது. நத்தார் விடுமுறையை எவ்வளவு ஆவலாக அவுஸ்திரேலியர்கள் கொண்டாடுவார்கள். நத்தாரில் இருந்து புதுவருடம்வரை வைத்தியசாலை ஹோட்டல் மற்றும் பொலிஸ் போன்றவற்றைத் தவிர எல்லா அலுவலகங்களும் மூடப்பட்டுவிடும். அவற்றிலும் எண்ணிக்கை குறைந்தவர்களே வேலை செய்யும் காலம். ஜனவரி மாதம் அதிகமாக வேலையிராது. பலர் விடுமுறைக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்கள் வசதிக்கேற்ற விடுமுறையைக் கழிக்கப் போய்விடுவார்கள். அப்படி திறந்திருக்கும் அலுவலகங்களிலும் எதுவித வேலையும் நடைபெறாது. பத்திரிகைகள் செய்திகளற்று எயிட்ஸ்நோய் வந்தவர்களாக மெலிந்துவிடும். தொலைக்காட்சிகளில் பழைய காட்சிகளை மீண்டும் காண்பிப்பார்கள்.

அந்த மனிதர் குடும்பத்தோடு இராமல் இந்த வயதில் 300 கிலோ மீட்டர்களுக்கப்பால் தனித்து இருப்பது என் மனதை வாட்டியது.

‘பெண்டிக்கோவில் வேலையில்லையா?’

அந்தக்காலத்தில் பெண்டிக்கோ , பலரட் முதலான பிரதேசங்களில் தங்கச்சுரங்கங்களில் வேலைக்கு வந்தவர்களாலே மெல்பன் என்ற நகரமே உருவாகியது. தங்கம் தற்போது முடிந்துவிட்டது. தற்பொழுது பெண்டிக்கோ ஒரு விவசாய நகரம்.

‘பழத்தோட்டங்கள் இப்பொழுது இல்லை. எல்லாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள்.’
‘எப்படி மாடு வளர்ப்பு?’

‘அது பரவாயில்லை. பால் உற்பத்தி நடக்கிறது. பழத்தோட்டங்கள் இல்லாததால் தற்பொழுது வேலை கிடைப்பது கடினம்.’

‘அங்கிருந்த ஆரஞ்சுத் தோட்டங்களுக்கு என்ன நடந்தது?’

‘ஆரஞ்சு ஜுஸ் வெளியில் இருந்து வருகின்றது. சீனாவில் இருக்கும் எனது மகன் இந்த கோடைகால விடுமுறைக்கு அங்கு வரும்படி அழைத்தான். அந்த விமான டிக்கட் மிகவும் மலிவாக இருந்தது. ஆனால் அந்தப் பணத்தில் நமது நாட்டில் உள்ள குயினஸ்லாண்து போக முடியாத நிலைமை உள்ளது’ என்றார்
‘உண்மைதான். அவுஸ்திரேலியாவிற்கு நான் வந்து 30 வருடங்களாகிவிட்டது. பார்த்துக் கொண்டிருக்க எல்லாமே விலையேறியது. இங்கு ஒரு இடத்திற்கு செல்வதைவிட அதே பணத்தில் வெளிநாடு செல்ல முடியும். நான்கூட சிலமாதம் முன்பாக குயின்சிலாண்து சென்றேன். அந்த 3 நாட்களுக்கு செலவழித்த பணத்தில், எனது நாடான இலங்கைக்கு செல்ல முடியும். அவுஸ்திரேலியா தற்பொழுது உலகத்திலே எக்ஸ்பென்சிவ் நாடாக மாறியுள்ளது’
‘உண்மைதான்’
‘டோனால்ட் ட்றம்பின் கூற்றில் உண்மையிருக்கிறது’ என்றபோது அவர் சிரித்தார்.

‘நத்தார் வாழ்த்துக்கள்’ கூறி விடைபெற்றேன்

பொருளாதார நிலைமை பொதுவாக மேற்கு நாடுகளில் இன்று இப்படித்தான் உள்ளது. சாதாரண தொழிலாளர்களது வேலைகள் மறைந்து விட்டன. விவசாயப்பொருட்கள், உடை, உணவு மற்றும் எலக்ரோனிக் பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் நுகர்வோர் குறைந்த விலைகளில் பெற்று நன்மைகள் அடைந்தாலும், உள்ளுரில் பலருக்கு வேலை வாய்ப்பு போய்விட்டது. இதனால் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதைப் பல உள்ளுர் அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்றவிதமாக பாவிக்கிறார்கள். திறந்த பொருளாதாரம், முதலாளித்துவம் என்பன தேவனின் கட்டளையாக இருந்தவை. அந்தக் கொள்கைகளுக்கு தற்போதைய நிலை எதிராக இருப்பதால் அரசாங்கத்தில் உள்ளவர்கள் இதைச் சமாளிக்கத் திணறுகிறார்கள். நான் அவுஸ்ரேலியாவுக்கு குடிவந்த எண்பதுகளில் விடயம் எதிர்மாறாக இருந்தது. ஒரு சந்ததியில் எதிர்காற்று வீசுகிறது
1987ஆம் ஆண்டு ஜுன் மாதம் எனது மனைவியும், ஐந்து வயதில் மகனும் மூன்று வயதில் மகளுமாக சிட்னி விமான நிலயத்தில் வந்திறங்கியபோது எங்களிடம் ஒரு சூட்கேசில் துணிகளும், எனது பொக்கட்டில் அவுஸ்திரேலிய ஐம்பது டொலர் நோட்டும் இருந்தன. மிகக் குறைந்த பொதிகளோடு வந்து இறங்கியபோது விமான நிலையத்திற்கு வெளியே மழை பெய்தது. ஆனால் விமான நிலையத்தின் உள்ளே சீதோஷ்ணம் சூடாக இருந்ததால் குளிர் தெரியவில்லை. பல இனத்தவர்கள் பல விதமான உடைகளில் அங்கிருந்தார்கள். விமானப்பயணம் ஒரு புது அனுபவம் மனைவி ஏற்கனவே இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு விமானத்தில் பயணித்திருந்தார். சிங்கப்பூர் வழியாக வந்ததால் மலைப்பில்லாத போதும் புதிய உலகத்தில் சஞ்சரிப்பதாக இருந்தது.

சிட்னியில் இறங்கியதும், வரிசையில் காத்திருந்த எங்களது பாஸ்போட்டைப் பார்த்த அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரி தனது கண்ணாடிக் கூட்டினுள் இருந்து கவனமாக எமது இலங்கைப் பாஸ்போட்டுகளை திருப்பித் திருப்பி பார்த்து எமது முகத்தையும் உற்றுப்பார்த்து செய்த பரிசோதனையின் பின்பு ‘அவுஸ்திரேலியா உங்களை வரவேற்கிறது’ என்றார் சிரித்தபடியே. இப்பொழுது பார்த்தால் அது வழமையான அவுஸ்திரேலியரின் நடைமுறை எனத் தெரிந்தாலும், அன்று நீல சேர்ட்டும் முகக்கண்ணாடியும் அணிந்த அவரது சிரிப்பு சொர்க்கத்திற்கு கதவைத் திறக்கும் பரிசுத்த பீட்டரின் வார்த்தையாக இருந்தது.
விமானம் ஏறிய சென்னை விமான நிலயத்தில் எமது அனுபவம் மிகவும் துன்பகரமான நினைவு. இன்னமும் அந்த ஒரு மணிநேர விசாரணையை மறக்கமுடியாது. சித்திரவதை உபகரணங்களைப் பாவிக்காத இன்குசிசன்((Inquisition) எங்களது அவுஸ்திரேலிய விசா கள்ளவிசா என எங்களை இமிக்கிரேசனில் தடுத்து வைத்து பல கேள்விகளைக் கேட்டார்கள்.

‘எவ்வளவு காலம் இந்தியாவில் இருக்கிறீரகள்? ”

‘எந்த இடத்தில் இருந்தீர்கள்?”

‘எப்படி இந்த பாஸ்போட்டில் விசா வந்தது?”

‘உறவினர்கள் அவுஸ்திரேலியாவில் எங்கிருக்கிறார்கள்?”

எங்களுக்குப் பின்பாக வரிசையில் வந்தவர்கள் எல்லோரும் எம்மை கடந்த போனார்கள்.அவ்வாறு கடந்து போனவர்கள், எங்களைப் பின்னால் தள்ளுவதுபோல் உணர்வு. எர் கண்டிசன் இருந்தாலும் வேலை செய்யாதது மாதிரியாக வேர்த்தது. வயிற்றில் சில இரசாயன மாற்றங்கள்.இரைச்சலுடன் புறப்படும் ஒவ்வொரு விமானமும் எங்கள் வமானமாக இருக்குமோ என்றொரு எண்ணம் அதைவிட எம்மை ஏற்றிக்கொண்டு சென்றாலும் பஸ் மாதிரி நின்று கொண்டுபோக வேண்டுமோ என்ற சிந்தனை மனதைக் குடைந்தது. இல்லை எனத் தர்க்கித்தாலும் மனதில் மாறும் நினைவுகளுக்கு தடையில்லையே?

குடும்ப உறவினரான மனைவியின் அண்ணரால் அழைக்கப்பட்ட நிரந்தர குடியுரிமையுடன் வருகிறோம் என்றால் அவர்கள் நம்பவில்லை. அது ஒரு இரவு நேரப் பயணமானதால் புது டில்லியில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்திற்குத் தொடர்பு கொண்டு கேட்க வழியில்லை. இந்தியாவை விட்டுப் போக நினைத்து வீட்டையும் காலிபண்ணி பொருட்களை எனது நண்பர்களிடம் கொடுத்துவிட்டேன். ஏற்கனவே அண்ணன் தம்பி பெற்றோர்கள் அவுஸ்திரேலியாவில் இருப்பதால் வர்ணமான கனவுகளுடன் இருந்த மனைவிக்கு ஆத்திரம். அன்றைக்கு அதை என்னில் காட்டமுடியாது. நான் மட்டுமே இமிகிரேசன் ஆபீசருடன் பேசியபடி இருப்பதால் மகளை இடுப்பில் வைத்தபடி அவள் தலையில் கண்ணீரால் ஈரமாக்கினாள். அதைப் பார்த்த மகனுக்கு எதுவும் புரியவில்லை. தாயை பார்த்தபடி நின்றான். மகளுக்கு எதுவும் புரியாத இரண்டு வயது. நான் மனைவியை சமாதானப்படுத்தியபடி இமிகிரேசன் ஆபிசரிடம் தர்க்கம் செய்தபோது விமானம் புறப்படும் நேரமாகிவிட்டது. ஒரு மூலையில் நிற்கச் சொல்லிவிட்டு இதுவரையும் கேள்வி கேட்ட அதிகாரி நகர்ந்துவிட்டார்.
அந்த இடைவெளியில் எந்த வழியால் அவுஸ்திரேலிய விசா உண்மையானது என்று அவர்களை நம்பச் செய்யமுடியும் என்பதை நான் யோசித்துக் கொண்டிருந்தேன். இவர்கள் எங்களை நிறுத்துவதற்கு முடிவு செய்து விட்டார்கள் என நினைத்திருந்தபோது இறுதியில் ஒருவர் வந்து எங்களைப் போகலாம் என்றார்.

அந்த சித்திரவதையின் பின்பாக அவர்கள் சொன்ன வார்த்தை ஆறுதலாக இருந்தாலும் ஆத்திரத்தையே அளித்தது. எந்த ஒரு தேவையும் இல்லாமல் ஏன் எங்களை இவர்கள் இப்படிச் செய்யவேண்டும் என்ற கேள்வியுடன் சென்னை இமிக்கிரேசன்காரனைத் திட்டியபடி அந்த சிங்கப்பூர் விமானம் எங்களை விட்டுப் போய்விடுமோ என்ற அவசரத்தில் சென்றபோது வாசலில் ஒருவர் மிகுதியான இந்தியப் பணத்தை தன்னிடம் தரும்படி கேட்டார். என்னிடம் சிறிது இந்தியப் பணம் இருந்தது ஆனால் என்னிடம் இல்லை என வெடுக்கெனச் சொன்னேன். உண்மையில் எங்கோ காட்டவேண்டிய ஆத்திரத்தை யாரிடமோ கட்டியதற்கு பிற்காலத்தில் வெட்கப்பட்டேன்.
விமானத்தில் ஏறி அமர்ந்து ஆர அமர யோசித்தபோது இந்திய இமிகிரேசேன் எங்களுக்கு வைத்த அந்த விசாரணையில் எங்களிடம் போலியான அவுஸ்திரேலிய விசா இருந்திருந்தால் அந்த இடத்தை விட்டு விலகியிருப்போம். ஒருமணி நேரமாக எல்லோரும் போனபின்பும் எங்களை வைத்திருந்தபோது நாங்களும் சளைக்காமல் தொடர்ச்சியாக நின்றதால் அது உண்மையான விசாதான் என அவர்களை நினைக்க வைத்தது. அக்காலத்தில் போலி விசாக்களில் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கும் மற்றைய நாடுகளுக்கும் சென்றார்கள். அக்காலத்தில் எலக்ரோனிக் அல்லது தற்போதைய அவுஸ்திரேலிய பாஸ்போட்டில் உள்ள மைக்கிரோசிப் Microchip) )முறை இருக்கவில்லை. அப்படியாக இருந்திருந்தால் என்ன நிலை என இப்பொழுது திரும்பிப் பார்க்க முடிகிறது.
மறுநாள் காலை சிட்னி விமான நிலையத்தில் எனது மனைவியின் தாய் தந்தை மற்றும் மனைவியின் அண்ணா மோகன், அண்ணி மாலா ஆகியோர் வரவேற்க வந்திருந்தார்கள். மனைவியைப் பொறுத்தவரை அவர்கள் பலர் பல வருடங்களின் பின்பாக குடும்பத்தில் ஒன்றாகும் சந்தர்ப்பம். நான் ஏற்கனவே மனைவியின் தாயாருடன் இந்தியாவில் மனஸ்தாபப்பட்டவன். அவரைப் பொறுத்தவரை இந்தியாவில் தனது மகளை வைத்து கொடுமைப்படுத்தும் நாற்பத்து ஏழு நாட்கள் கணவன் என்பதும் பேரப்பிள்ளைகளையும் இளைய மகளையும் தங்களிடம் இருந்து பிரித்தவன் என்ற பலதரப்பட்ட நல்லெண்ணங்களுடன் இருப்பவர்கள். அவுஸ்திரேலியாவுக்கு நாங்கள் வந்தது அவர்களுக்கு மிகவும் சந்தோசமான விடயம். அவர்கள் மகளைத்தேடி மழைக்கால அட்டைமாதிரி வந்து விட்டார்கள் ( அசோகனின் வைத்தியசாலையில் இந்த மழைக்கால அட்டையாக ஒட்டிக்கொண்டார்கள் என்ற படிமத்தை பாவித்துள்ளேன்)

விமான நிலயத்திற்கு வந்தவர்கள் எங்களுக்குத் தேவையான குளிருடுப்புகளைக் கொண்டு வந்திருந்தார்கள். அவற்றைப் போட்டுக்கொண்டு வெளியே வந்தபோது இரும்புக் கம்பிகளாக மழை, வானத்தை புவியுடன் இணைத்தது. குளிர் என் விரல்கள்மீது ஊசியாகியது. விமான நிலையக் கார் பார்க்கில் இதுவரை பார்க்காத அளவு பலதரப்பட்ட கார்கள் மழையில் குளித்தபபடி நின்றன.
கண்ணுக்கு மழை மூட்டமான அந்தக்காலை நேரத்தில் அந்தக் கார்களில் ஒன்றில் எல்லோரும் ஏறிக் கொண்டோம்.
பின் சீட்டில் ஒடுங்கியபடி இருந்தேன். எனது பொக்கட்டில் ஜம்பது டொலர் நோட்டுடன், எனது கையில் வைத்திருந்த பெட்டியில் மிருகவைத்தியர் என்ற கடுதாசியும் இருந்தது. இவைகள்தான் எனது சொத்து. இவற்றைக்கொண்டு எனது குடும்பத்தை கொண்டு செல்லமுடியுமா என சிந்தித்தேன். எனது மனைவியும் படித்தவர். அவளின் உதவியும் பயன்படும் என்ற சிந்தனை எனக்கு அன்று வரவில்லை. ஆண் வர்க்கத்திற்கே உரிய பொறுப்பை ஏற்று நடத்தும் தன்மை என்னிடம் இருந்தது. குடும்பத்தில் மூத்தவனாக பிறந்ததால் எனது குடும்பத்தை சுமார் நான்கு வருடங்கள் பார்த்த நான் இப்பொழுது மற்றவர்கள் தயவில் வாழம் நிலை வந்துவிட்டது என்பது திடீரெனத் தாக்கிய நோயாகத் தெரிந்தது. அதிலும் மனைவியின் உறவினர்கள் தயவில் வாழ்வதா?

எனது எதிர்காலத்தை அன்றைய சிட்னியின் குளிர்கால நிலை பிரதிபலித்தது என எனக்குத் தோன்றியது.

எனது சிந்தனையோட்டத்திற்கு ஏற்ற வேகத்துடன் கார் சிட்னியின் மேற்குப் பிரதேசமான துங்காபேயை நோக்கிச் சென்றது.

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

கானல் தேசம் ஏற்புரை – கான்பராவில் பேசவிருந்தது.


ஆங்கிலத்தில் pregnant pause என்று ஒரு வார்த்தையுள்ளது . அதாவது கேள்விக்கு பல பதில்களை வைத்தபடி கேட்பது. உதாரணமாக- do you love me ? என்றால் அதற்கு பல பதில்கள் இருக்கலாமல்லவா? அப்படியான கேள்வியைக் கேட்டு விட்டு பதிலுக்காக காத்திருக்கும் அந்த இடைவேளை pregnant pause என்பது.

அதேபோல் பல உண்மைகளைத் தெரிந்து கொண்டு பேசாமல் இருப்பது மிகவும் கடினமானது . அதிலும் பத்திரிகை ஆசிரியராகவும் பின்பு ஒரு நாவலாசியராக மாறிய எனக்கு அப்படியான கர்ப்பமான உணர்வு உருவாகியது மே 2009 பின்பாக . அதன் விளைவே கானல்தேசம் எனும் நாவல்.

கற்பனையில் உண்மையில்லை என்று வாதாடுபவர்கள் மத்தியில் கானல்தேசம் ஒரு கற்பனையான நாவல் என்ற உண்மையை இங்கு வைக்கிறேன்.

வரலாறு ஆற்றில் ஓடும் தண்ணீர் போன்றது. நீங்கள் அள்ளிய தண்ணீர் , நான் அள்ளிய தண்ணீரல்ல . முற்றிலும் வேறானது. உண்மைகளே வேறாக இருக்கும்போது கற்பனைகள் , சிந்தனைகள் எவ்வளவு வேறுபடும்? . இதை ஏன் இப்படி கற்பனை செய்தாய் என்றெல்லாம் கேட்க முடியாது. 60 மில்லியன் வருடங்கள் முன்பாக அழிந்த டைனோசரை வைத்து ஹோலிவூட்டில் படம் எடுத்திருக்கிறார்கள். அதே போல் பல வருடங்கள் முன்பாக சென்று ஸ்ரார் வார் ( star War) படமெடுக்கும்போது பத்து வருடங்கள் முன்பாக நடந்த இலங்கைப் போரை வைத்து கற்பனை செய்யக்கூடாது என்பது என்ன நியாயம் ?

நான்அறிந்த விடங்கள் பல. அதில் சில

2006 ஆண்டு போர் தொடங்கு முன்பே அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரியாக இருந்தவர் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சின் செயலாளராகிறார்.

2004 இல் அவுஸ்திரேலியாவில் சுனாமிக்கு சேகரிக்கப்பட்ட பணத்திற்கு இரு வருடகாலமாக வலை விரிக்கப்படுகிறது. 2007 இல் இங்கு அதற்கு பொறுப்பானர்கள் சிலர் கைது செய்யப்படுகிறார்கள்.
சேகரிக்கப்பட்ட பணம் அவர்களை பாதுகாக்க இங்கு செலவாகிறது.

விடுதலைப்புலிகளின் கப்பல்கள் சம்பந்தமான துல்லியமான அறிக்கை இலங்கைக்கு செல்கிறது.

போர்கப்பல்களில் இருந்த எரிபொருள் பற்றாது என்பதால், எரிபொருளை வேறு கப்பலில் கொண்டு சென்று, ஆழ்கடலில் பல நாள் காத்திருந்து, இலங்கை கடற்படை விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை பூமத்தியரேகையின் அமைதியான கடல்ப் பகுதியில் மூழ்கடிக்கப்படுகிறது .

மலாக்கா நீரணை அந்தமான் பகுதிகளை அவுஸ்திரேலிய வேவு விமானங்கள் அமெரிக்கா சார்பில் உளவு பார்க்கின்றன.

2009 may 16 சனிக்கிழமை ஐந்துமணியளவில் தலைவர் பிரபாகரன் பிடிபட்டதாக எனக்கு தகவல் வருகிறது. உடனே உதயம் ஆசிரியரானதால் அந்தத் தகவலை வைத்து கோத்தபாய ராஜபக்‌ஷவிடம் போன் பண்ணி கேட்டேன் – அவர் அதை மறுக்கிறார் .

ஞாயிறு காலையில் எனது இந்திய நண்பரிடமிருந்து ஒரு ஈ மெல் வருகிறது – இந்திய உளவுப்பிரின் தகவலின்படி ஈழத்தில் எல்லாம் முடிந்தது உண்மையா ? என்று.

2009 ஜுலையில் நான் சந்தித்த ஒரு சிங்கள ரிப்போட்டர் தான் நந்திக்கடலின் இந்த பக்கத்தில் இருந்தபோது(Embedded reporter) ஒரு கொமாண்டர் பெரியவரை பிடித்ததாக சொன்னார் என்றார்.

பின்பு ஒரு இந்திய அரசியல்வாதியும் பத்திரிகையாளர் ஒருவரும் ஜோர்டானில் அவ்வேளையில் இருந்த மகிந்த ராஜபக்‌ஷவிடம் தொடர்பு கொண்டபோது அவரும் மறுத்ததாகவும் அறிந்தேன் .

இவைகள் உண்மையானவை. ஆனால் , விக்கிலீக்ஸிடம் கிடைத்தது போல் என்னிடம் ஒரு Chelsea Manning எந்த கோப்பையும் தரவில்லை

பத்திரிகை நடத்திய போது தவிர்க்க முடியாது வந்த சந்தர்ப்பங்களால் உளவுத்துறைகள் இயங்கும் முறையை அறிய நேர்ந்தது.

அதேபோல் இலங்கையில் அரசின் அதிகாரிகள் மற்றும் இயக்கத்தை சேர்ந்தவர்களுடன் பழகியபோது தெரிந்து கொண்ட தகவல்கள் இங்கு நாவலாகிறது

இவைகளை வைத்து நான் ஒரு கதை சொல்ல முயற்சித்தேன்.

இது ஒரு நாவலா என்பதற்கு என்னிடம் பதிலிருக்கிறது. இலங்கையில் நடந்த போரினால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வந்து இங்கு தங்கள் கதையை மட்டுமல்ல தங்கள் மனங்களில் நினைத்தவற்றை சொல்கிறார்கள் . 1958 காலத்தில் இருந்து தமிழினத்தின் வரலாறு வருகிறது.
நான் ஒரு பத்திரிகையாளராக செய்தியை எழுதும்போது அதற்காக இரண்டு பக்கமும் ஆராய்ந்து நடு நிலையாக எழுதவேண்டும். நான் கற்பனை செய்யும்போது அந்தக் கட்டாயம் இல்லை . கற்பனையில் ஒழுக்கம் மீறலாம்.வன்முறையில் ஈடுபடலாம் அதற்கான உரிமை கதை சொல்பவனுக்கு காலம் காலமாக அளிக்கப்பட்டுள்ளது.

எனது நாவலில் காதாநாயகன் கதாநாயகி மட்டுமல்ல. நியாஸ் முஸ்லீம் பாத்திரம் தனது துணுக்காய் வதைமகாமின் சித்திரவதைக் கதையை சொல்கிறது . சிங்கள இராணுவ அதிகாரிகள் இருவர் தனது கதையை கூறுகிறார்கள். அதேபோல் கார்த்திகா என்ற போராளி -செல்வி என்ற கரும்புலி தங்கள் வரலாற்றை கூறுகிறார்கள். பலர் கதை சொல்கிறார்கள் .

இந்த நாவலில் வழிகாட்டும் கதாபாத்திரமாக ஆவியொன்று வருகிறது. பெற்றோர்கள் உறவினர்களின் நினைவுகள் எப்படி நாம் இடம்பெயர்ந்த பின்பும் வழி நடத்தமுடியும் என்பது ஒரு மாயா யதார்த்தமான பரீட்சார்தமான முயற்சி. எனது அசோகனின் வைத்தியசாலையில் கொலிங்வுட் என்ற பூனை மனச்சாட்சியின் குரலாக இயங்குவது போல் கானல் தேசத்தில் ஒரு பாட்டியின் ஆவி இயங்குகிறது.

அரசியலாக இந்த நாவல் எழுதப்பட்டாலும் இங்கு அழகியல் உள்ளது. அது ஆழமாக இருக்கிறது.
–0—

இந்த ஏற்புரை விரைவாக விமானத்தைப் பிடிக்க சென்றதால் கான்பராவில் பேசமுடியவில்லை

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

டாக்டர் நோயல் நடேசனின் “எக்ஸைல்” குறித்து எனது நோக்கு.

கலாநிதி மு. ஸ்ரீகௌரிசங்கர்
எக்ஸ்ஸைல் என்றால் என்ன? ஆங்கிலத்தில் பின்வருமாறு விளங்கப்படுத்தியுள்ளார்கள்.
Exile: the state of being barred from one’s native country, typically for political or punitive reasons.

அதாவது ஒருவர் தேசத்தினின்று அகற்றப்படுதல் அல்லது வேறு நாட்டில் தலைமறைவு வாழ்வு வாழுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.
இது ஏன் நடைபெறுகிறது என்பதிற்கு பல விளக்கங்கள் கொடுக்கப்படமுடியும் என்றாலும் நடேசன் அவர்கள் இங்கு தனது அனுபவம் மூலம் வித்தியாசமான ஓர் உணர்வை பதிவுசெய்துள்ளார்.

“84 ஏப்பிரலில் எனக்கு குருட்டு பூனை இருட்டில் பாய்வது போன்றது இந்தப்பயணம். நாட்டைவிட்டு வெளியேறும் பலர் வியாபாரம், உல்லாசப்பயணம், முதலான காரணங்களினால் பிரியும் போது அந்தப்பயணம் உணர்வு கலந்தது அல்ல. ஆனால் நான் இப்போது வெளியேறும்போது எனது நாடு, மக்கள், உறவினர் முதலான பந்தங்கள் அறுபடுகிறது. எட்டு மாத கர்ப்பிணியான மனைவியையும் இரண்டு வயதே நிரம்பாத மகனையும் விட்டு எதற்கு பிரதேசம் போகிறோம் என்பது தெரியாமல் எனது பயணம் தொடங்குகிறது.” என்று நடேசன் தனது எக்ஸயில் அனுபவத்தை ஆரம்பிக்கிறார்.

நனவிடை தோய்தல் உத்தியில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் எமது வாசகர்களுக்கு புதிய வரவு. அவர்கள் இதுவரையில் தங்கள் வாழ்க்கையில் பார்க்கத்தவறிய பக்கங்களை இந்த நூலின் மூலம் அறிந்துகொள்வதற்கான வாய்ப்புக்களை டாக்டர் நடேசன் அவர்கள் ஏற்படுத்தியுள்ளார்.

இந்நூலை அறிமுகம் செய்வதில் நான் மிகவும் பெருமை அடைகிறேனென்று கூறினால் அது மிகையாகாது. அதற்குமுன் யார் இந்த நடேசன் மற்றும் அவரின் பின்புலம் என்ன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

இவரது தொழில் விலங்கு மருத்துவம். அது சார்ந்த உண்மையும் புனைவும் கலந்த கதைகளையே தொடக்கத்தில் எழுதியவர். அத்தகைய எழுத்துக்களின் ஊடாகவே சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள், பயண இலக்கியங்கள் என தனது பார்வையை விரிவுபடுத்திக்கொண்டவர்.

இவரது அத்தகைய படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன. வடக்கில் எழுவை தீவில் பிறந்து, அங்கு ஆரம்பக்கல்வியைக்கற்று, யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியான இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பை தொடர்ந்த காலத்தில் இலங்கை அரசியலின் அரிச்சுவடியும் தெரியாமல், அங்கு 1974 ஆம் ஆண்டில் நடந்த நான்காவது உலகத்தமிழாரய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கச்சென்றவர்.

அதிலிருந்து அவரின் அரசியல் சார்ந்த பயணம் அவரை அறியாமலே அவருடன் ஒட்டிக்கொண்டது.
அங்கு நடந்த நிகழ்வுகள் மற்றும் அநியாயச்ச்சாவுகள் என்பவற்றை தன கண் முன் கண்ட நடேசன் அதிலிருந்து மீண்டு வருவதற்குள் இவரது அந்த மாணவப்பருவம், அன்றைய அரசின் கல்வி மீதான தரப்படுத்தலையும் எதிர்கொண்டது. அக்காலப்பகுதியில் வடபகுதி மாணவர்களை அரசியல் எவ்வாறு ஆட்கொண்டது என்பதை இந்த நூலில் இவ்வாறு பதிவுசெய்கிறார்.

” எனது வயதையொத்த இளைஞர்கள் அரசியல் சாயம் படாமல் தப்பமுடியாது. ஹோலி பண்டிகை காலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடாதவனும் வர்ணத்தை பூசிக்கொள்வதுபோல் அரசியல் வாடை என்னைத் தழுவியது.”
மேலும் பல சுவாரசியமான சம்பவங்களையும் இந்நூலில் டாக்டர் நடேசன் அவர்கள் பதிவுசெய்துள்ளார்.

அந்தக்காலத்தில் பிரபலமான “கல்லெறி” கலாச்சாரத்தையும் அதனை தொடர்ந்து வந்த கார் இலக்கத்தகடுகளில் உள்ள சிங்கள ஸ்ரீ அளிக்கும் போராட்டம் என்பவற்றையும் இதில் பதிவுசெய்துள்ளார். அன்று நிகழ்ந்த கல்லெறிதல்தான், காலப்போக்கில் துப்பாக்கி வேட்டுக்கள் என்று சொல்லவரும் நடேசன், “புடையன் பாம்பு அக்காலத்தில் குட்டியாக இருந்தது” எனச்சொல்லிவிட்டு அந்த அங்கத்தை கடந்து செல்கிறார். இதில் எவ்வளவு உண்மை புதைந்துள்ளது என்பதை நீங்கள் வாசிக்கும் போது புரிந்துகொள்வீர்கள்.
டாக்டர் நடேசன் அவர்கள் ஒரு ஆயுதம் ஏந்திய போராளியா? அல்லது இயக்கங்களின் அரசியல் ஆலோசகரா ? அல்லது அரசியல் கட்சி தலைவரா ? இல்லவேயில்லை. அப்படியென்றால் அவரால் எவ்வாறு இப்படி ஒரு போராட்டகால நிகழ்வுகளின் உண்மையை பதிவுசெய்ய முடிந்தது?

டாக்டர் நடேசன், ஆயுதம் ஏந்திய எந்தவொரு தமிழ் இயக்கத்திலும் இணைந்திராதுவிட்டாலும், அவற்றின் தலைவர்கள், தளபதிகள், மற்றும் போராளிகளுடன் உறவைப்பேணியிருப்பதும் தெரிகிறது. அவரின் இந்த உறவின் பகிர்வே இந்நூல் என்றால் அது மிகையாகாது.
இந்த நூலில் ஒவ்வொரு அங்கத்தையும் இலங்கை தமிழர் அரசியலில் ஈடுபட்டவர்களை சுயவிமர்சனம் செய்யத்தூண்டும் விதமாகவே எழுதியிருப்பதுடன் எமது சமூகத்தையும் கேள்விக்குட்படுத்துகிறார்.

அதுமட்டுமல்ல, ஈழத்துக்கான ஆயுதப்போராட்டம் அதன் ஆரம்ப எத்தனிப்புகளுடன் தீவிரமடைந்து 1980 களில் இயக்கங்கள் சேர்ந்து தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அமைப்புக்கள் சேர்ந்து உருவாக்கிய தமிழர் மருத்துவ நிறுவனத்தின் செயலாளராக இருந்தவர் இந்த நடேசன் அவர்கள். அவ்வேளையில் அந்தஅமைப்பில் இருந்த 5 பிரதான இயங்கங்களின் தலைவர்களோடு இருந்த நட்பு மற்றும் அவர்களுடன் சேர்ந்து செயற்பட்ட மற்றும் முரண்பட்ட நிகழ்வுகள் மூலம் பெற்ற அனுபவங்களின் தொகுப்பே இந்த நூலாகும்.
இலங்கை – தமிழக, தமிழ் அரசியல் தலைவர்கள் ஆயுதம் ஏந்திய இயக்கங்களின் தலைவர்கள், மக்கள் தொண்டில் ஆர்வம் காண்பித்த மருத்துவர்கள், ஆயுதத் தரகர்கள், இந்திய மத்திய உளவுப்பிரிவைச்சேர்ந்தவர்கள், காணமலாக்கப்பட்டவர்கள் என பலரும் இந்த எக்ஸைலில் வருகிறார்கள்.

அதுமட்டுமல்ல, சில பல சிரிக்கவைக்கும் நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளார். உதாரணமாக இலங்கையிலிருந்து தமிழ்நாடு சென்ற நடேசன் இராமேஸ்வரத்தில் இந்தியக்கரையில் இறங்கும்போது,கையில் பணம் இருந்தாலும் அதனை செலவிடாமல், எடுத்துச்சென்ற சிங்கப்பூர் குடை, லக்ஸ் சோப் முதலானவற்றைக்கொடுத்து சமாளிக்கும் காட்சி, இராமேஸ்வரத்தில் இறங்கியதும் ரயில் ஏறி சென்னை செல்லாமல் அந்த ஊரைச்சுற்றிப்பார்க்கும் போது சந்நியாசி ஒருவரினால் “கங்காதீர்த்தம் ” பருகும் காட்சி என்று பல இடங்களில் நடேசன், படிம உத்தியோடும், உவமான உவமேயங்களுடனும், அங்கதமாகவும் காட்சிகளை சித்திரிப்பதனால், இந்த நூலை வாசகர்கள் மிகவும் சுவாரசியமாக அனுபவிக்கமுடியும்.

இவ்வாறு ஒவ்வொரு அங்கத்திலும் பல துல்லியமான காட்சிகள் வருகின்றன.

மதவாச்சியா, அநுராதபுரம் பிரதேசங்களில் மிருக வைத்திய பணிநிமித்தம் வாழ்ந்த காலத்தில் அமைச்சர் தொண்டமான் உட்பட பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பழகியிருப்பவர் நடேசன். அவர்களுடன் உறவாடிய பாணியிலேயே சென்னையில் அக்கால கல்வி அமைச்சர் அரங்கநாயகத்துடனும் உரையாடும்போது, தமிழக திராவிட கலாசாரத்தின் பிரகாரம் வணக்கம் சொல்லாதமையினால், அமைச்சரின் அடியாளிடம் வாங்கிக்கட்டிக்கொள்கிறார்.

இரண்டு நாடுகளின் அரசியல்வாதிகளிடத்திலும் அடியாள்களிடத்திலும் நிலவும் வேறுபாடு இங்கு அம்பலமாகின்றது.

மேலும் ஒரு சுவாரசியமான ஆனால் கனமான செய்தியாக ஆயுத போராட்டத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் ஈடுபட்டவர் சிங்கப்பூரில் கைதாகி மரணதண்டனைக்குற்றவாளியாகி, இறுதிநேரத்தில் அங்கு நேர்ந்த அரசியல் மாற்றத்தினால் தப்பிவந்து சென்னையில் அடைக்கலமாகின்றார்.

அவருடைய அடுத்த எதிர்காலத்திட்டம் என்ன தெரியுமா…? சென்னையில் ஒரு தோசைக்கடை வைத்து பிழைப்பது! இந்தக்காட்சி ஈழப்போராட்டத்தின் மொத்த வடிவத்தையே கேள்விக்குட்படுத்துகிறது. அதுமட்டுமல்ல இதன்மூலம் ஒரு போராளி எவ்வளவுதூரம் நொந்துபோயுள்ளான் என்பதையும் அறிய முடிகிறது.

இன்றும் இந்த அவலநிலை ஈழத்தில் தொடர்வது மிகவும் கவலையான ஒரு நிகழ்வாகும்.

இயக்கங்கள் கூட்டணியாக இருந்தபோதும் அவர்களிற்கு இடையில் இருந்த நம்பிக்கையின்ன்மையையும் எதிர்காலத்தில் இக்கூட்டணியின் நிலைமை குறித்த தனது அவநம்பிக்கையையும் நாசூக்காக குறித்துள்ளார்.

ஈழப்போராட்டத்தில் ஆயுதக்கலாசாரத்திற்கு பலியாகாமல், ஆயுதங்களை நேசித்தவர்களுடனெல்லாம் நெருங்கிப்பழகியிருக்கும் நடேசன், தனது இந்துக்கல்லூரி, பேராதனை பல்கலைக்கழக வாழ்க்கை, வட மத்திய மாகாணத்தில் விலங்கு மருத்துவ பணி, தென்னிந்தியாவில் மருத்துவ நிலையத்தில் மேற்கொண்ட தன்னார்வத்தொண்டு, போரில் கால் ஊனமுற்றவர்களுக்காக ஜெய்ப்பூர் வரையும் சென்ற அனுபவங்கள் என்பனவற்றை விரிவாக நினைவுக்குறிப்புகளாக பதிவுசெய்துள்ளார். இந்த அனுபவங்களின் திரட்சியாக நடேசன் மெல்பேண் வந்து இறங்கியதும் நடக்கும் சந்திப்பில் தனது கைக்குட்டையை எடுத்து காண்பித்து, “போரில் துன்புற்ற மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு இனியாவது பயன்படுங்கள்” என்ற வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் என்பவற்றில் பெரும்பாலானவை சுயவிமர்சனப்பாங்கில் எழுதப்பட்டிருந்தவை. இலங்கை – இந்திய பாதுகாப்புத் தரப்பைச்சேர்ந்தவர்களும் ஐக்கியநாடுகள் சபைக்காக இலங்கையில் பணிபுரிந்த மேற்குலக வாசிகளும், ஆண்கள் – பெண்கள் உட்பட முன்னாள் போராளிகளும் , படைப்பாளிகளும் எழுதும் நூல்கள், ஆவணங்கள், ஆய்வுகள் வந்தவண்ணமிருக்கின்றன.
போர் முடிவடைந்த பின்னர் வெளிவந்த பல நூல்கள், அதனை நியாயப்படுத்தியும் கேள்விக்குட்படுத்தியும் பூகோள அரசியலை முதன்மைப்படுத்தியும், தவறவிட்ட இராஜதந்திரங்களை சித்திரித்தும் வெளியாகியிருக்கும் பின்னணியில், எந்தப்பக்கமும் சாராத ஒரு மனிதநேய வாதியின் தார்மீகக்குரலாக நடேசனின் எக்ஸைல் ஒலிக்கிறது.

எக்ஸைல் – இலங்கையில் மகிழ் பதிப்பகத்தின் புதிய வெளியீடு. நடேசனுக்கு எமது வாழ்த்துக்கள்.

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

கானல் தேசம் காலச்சுவட்டில் இரண்டாம் பதிப்பு

எதிர் மறையான கருத்துகள் பலமானவை .உத்வேகத்தைக் கொடுப்பவை.

2016வது ஆண்டில் வந்த புத்தகங்களில் சிறந்தது வாழும்சுவடுகள் எனக் கவிஞர் சல்மா ஆனந்தவிகடனில் சொன்னார். அதேபோல் ஜெயமோகன் ராமகிருஸ்ணன் போன்றோர் அதைத் தமிழுக்குப் புதுவரவெனச் சிலாகித்தனர்.

அதேபோல் 13 ஆண்டு அசோகனின் வைத்தியசாலையைப் பலர் நன்றாகச் சொன்னார்கள். இரண்டும் முதல் பதிப்பைத் தாண்டாது பதுங்கு குழிகளில் கிடக்கின்றன.

2019 ஆண்டு தைமாதம் வெளிவந்த கானல் தேசம் இரண்டாவது பதிப்பை நோக்கிப் பிரவேசிப்பதான நேற்று எனது நண்பர் சொன்னார் . அதை காலச்சுவடு கண்ணனும் உறுத்திப்படுத்தினார்.

யாருக்கு நன்றி சொல்லவேண்டும்?

முகவுரையை மட்டும் படித்துவிட்டு ஒரு மணி நேரம் மூவரை வைத்து ஐரோப்பா முழுவதும்
அறிமுகம் செய்த IBC மற்றும் முன்னுரையை வைத்தே புத்தகத்தை அலசிய நண்பர் சுறுக்கர் எனச் செல்லமாக அழைக்கப்படும் தியாகராஜன், புத்தகத்தை கசப்பின் இதிகாசமாக அலசிய நண்பர் தெய்வீகன் மற்றும் ஆங்காங்கு முகநூலில் நெருப்பு வைத்த பலருக்குமே முதற்கண் நன்றி சொல்லவேண்டும்.

புத்தகத்தை வெளிக்கொண்டு வர உழைத்த கருணாகரன் தயாளன் அவர்களுடன் காலச்சுவடு கண்ணனுக்கே எல்லாப் புகழும்

எழுத்தாளர் ராஜேஸ்வரி, டாக்டர் முருகாநந்தம் நண்பர் சுகு சிரீதரன், ஹாஸீன் மற்றும் எழுத்தாளர் தீரன் நவ்சத்துக்கு நன்றிகள் .

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மெல்பனில் வாசிப்பு அனுபவங்கள் சங்கமித்த இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல்

விலங்கு மருத்துவராகவிருந்து இலக்கியப்படைப்பாளியான நடேசனின் நூல்கள் பற்றிய மதிப்பீடு

ரஸஞானி
படைப்பிலக்கியத்துறைக்கு வரும் பெரும்பாலானவர்கள் ” தாங்கள் எழுத்தாளரானதே ஒரு விபத்து ” என்றுதான் சொல்லிவருகிறார்கள். முதலில் வாசகர்களாக இருந்து, பின்னர் தாமும் எழுதிப்பார்ப்போம் என்று முனைந்தவர்கள், தமது படைப்புகளுக்கு கிட்டும் வாசகர் அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் தொடர்ந்து எழுதி பிரகாசிக்கிறார்கள்.

தமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர்களும் வாசகர் மதிப்பீட்டை காலத்திற்குக்காலம் கணித்துவைத்துக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகருகிறார்கள்.

இந்தப்பின்னணியில்தான், அவுஸ்திரேலியா மெல்பனில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வதியும் விலங்கு மருத்துவர் நொயல் நடேசன் அவர்கள், இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கி சுமார் இருபது வருட காலத்துள் கவிதை தவிர்ந்த இலக்கியத்தின் இதர துறைகளிலும் தன்னை தக்கவைத்துக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

இவர் இங்கு தொடங்கிய உதயம் (இருமொழிப்பத்திரிகை) மாத இதழில் தனது தொழில் சார்ந்த அனுபவமாக முதலில் எழுதிய பத்தி: நடுக்காட்டில் பிரேத பரிசோதனை. நடேசன் விலங்கு மருத்துவராக மதவாச்சி தொகுதிக்கு அருகில் பதவியா பிரதேசத்தில் பணியாற்றியபோது, தந்தங்களுக்காக ஒரு யானையை சிலர் வேட்டையாடிக் கொன்றுவிடுகிறார்கள். அவர்களை தேடிக்கைது செய்த பொலிஸார், அந்த யானையின் சடலத்தை பரிசோதனை செய்து மரணச்சான்றிதழ் பெறுவதற்காக நடேசனை அழைத்துக்கொண்டு அந்த நடுக்காட்டிற்குச்சென்றார்கள்.

அந்த அனுபவத்தையே தனது முதல் பத்தி எழுத்தாக எழுதியிருந்தார் நடேசன். அத்தகைய புதிய பாணி எழுத்து வாசகர்களை ஈர்த்ததையடுத்து, தொடர்ந்தும் தனது தொழில் சார் அனுபவங்களை எழுதிவரலானார். அவ்வாறு எழுதப்பட்ட பத்தி எழுத்துக்களின் தொகுப்பு: வாழும் சுவடுகள். இதனை சென்னையில் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ( அமரர்) எஸ். பொன்னுத்துரை நடத்திய மித்ர பதிப்பகம் வெளியிட்டது.

பின்னர், வாழும் சுவடுகள் தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகத்தினால் இரண்டாம் பதிப்பும் வெளியானது.
அதனைத்தொடர்ந்து நடேசன் தனது பதவிய பிரதேச தொழில் சார் அனுபவங்களின் பின்னணியில் வண்ணாத்திக்குளம் என்ற நாவலையும் எழுதினார். இதனையும் மித்ரவே வெளியிட்டது.

இதன் இரண்டாம் பதிப்பினை இலங்கையில் டொமினிக்ஜீவா அவர்களின் மல்லிகைப்பந்தல் வெளியிட்டது.
வண்ணாத்திக்குளம் நாவலை மெல்பனில் வதியும் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான திரு. நல்லைக்குமரன் குமாரசாமி ஆங்கிலத்திலும் (Butter fly Lake) , இலங்கையில் வதியும் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான மடுளுகிரயே விஜேரத்தின சிங்களத்திலும் (சமணளவெவ) மொழிபெயர்த்தனர்.

தமிழ்ச்சிறுகதைகள், நாவல்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி படமாக்கி இயக்கியிருக்கும் ( அமரர்) ‘முள்ளும் மலரும்’ மகேந்திரனின் கவனத்தையும் இந்த வண்ணாத்திக்குளம் ஈர்த்ததனால், அவரும் இதற்கு திரைக்கதை வசனம் எழுதி படமாக்குவதற்கு முயற்சித்தார். கதையின் பின்னணி இலங்கை என்பதனால், எங்கள் தேசத்தின் அரசியல் நெருக்கடி சூழ்நிலைகளினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
நடேசன் சிறுகதைகளும், நாவல்களும், அரசியல் மற்றும் இலக்கியம் சார்ந்த ( நூல் விமர்சனங்கள்) கட்டுரைகளும், பயண இலக்கியங்களும் தொடர்ந்து எழுதிவருகிறார்.

இதுவரையில், வாழும் சுவடுகள் ( இரண்டு பதிப்புகள்) – வண்ணாத்திக்குளம் ( இரண்டு பதிப்புகள்) – உனையே மயல்கொண்டு – அசோகனின் வைத்தியசாலை – கானல் தேசம் (நாவல்) – நைல்நதிக்கரையோரம் ( பயண இலக்கியம்) மலேசியன் ஏர்லைன் 370 – எக்ஸைல் ( சுயவரலாறு) ஆகியனவற்றை வரவாக்கியுள்ளார்.
இவற்றில் உனையே மயல்கொண்டு நாவல் (Lost in you) ஆங்கிலத்தில் தமிழ்நாட்டைச்சேர்ந்த பார்வதி வாசுதேவ் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அசோகனின் வைத்தியசாலை நாவலை தமிழ்நாட்டில் ( அமரர்) யுகமாயினி சித்தன் பிரசாத் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

சமீபத்தில் வெளியான நடேசனின் எக்ஸைல் நூலை இலங்கையில் பல்கலைக்கழக விரிவுரையாளர் விமல் சாமிநாதன் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இவ்வாறு இரண்டு தசாப்த காலத்துள் நடேசன் எழுதிய நூல்கள் குறித்து, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பாவண்ணன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கிரிதரன், சுமதி ரூபன், டீ.பி. எஸ். ஜெயராஜ்,… உட்பட பலர் தங்கள் வாசிப்பு அனுபவத்தை மதிப்பீடாக ஏற்கனவே எழுதியுள்ளனர்.

நடேசனின் நூல்கள், அவுஸ்திரேலியாவில் சில மாநில நகரங்களிலும் இலங்கையிலும் கனடாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டு விமர்சிக்கப்பட்டுள்ளன.

இந்தப்பின்னணியில், அண்மையில் மெல்பனில் நடேசன் எழுதிய அனைத்து நூல்களுடன் சமீபத்தில் வெளியான கானல் தேசம் மற்றும் எக்ஸைல் ஆகிய நூல்கள் அறிமுகத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட்டன.

அறிமுகத்திற்கும் – விமர்சனத்திற்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த இரண்டு வகையான மதிப்பீடுகளும்தான் வாசகர்களுக்கும் படைப்பாளிக்கும் மத்தியில் உறவை பாலமாக உருவாக்குகின்றன.
வாசகரிடம் பரவலாக சென்றடையாத ஒரு நூலை அரங்கேற்றும்போது அதனைப்படித்தவர் விமர்சன ரீதியாக அணுகும்போது, வாசிப்பு அனுபவத்தின் ருசிபேதம் வாசகரை மயக்கமடையச்செய்யலாம்.
புதிய நூலை அறிமுகப்படுத்துவதற்கும் ஏற்கனவே வெளியான நூலை விமர்சிப்பதற்கும் இடையே பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன.
இதனையும் கவனத்தில்கொண்டு அண்மையில் மெல்பனில் வேர்மன்ட் தெற்கு கல்வி நிலையத்தில் நடந்த நடேசனின் நூல்கள் பற்றிய மதிப்பீட்டு அரங்கில் பின்வருவோர் தத்தம் கருத்துக்களை முன்வைத்தனர்.

புதிய நூல்களான கானல் தேசம் (நாவல்) எக்ஸைல் சுயவரலாறு ஆகியனவற்றை மருத்துவர் நரேந்திரன், கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர் ஆகியோர் அறிமுகப்படுத்திப்பேசினர்.

வண்ணாத்திக்குளம் – உனையே மயல்கொண்டு – அசோகனின் வைத்தியசாலை ஆகிய நாவல்களை முறையே எழுத்தாளர் ஆவூரான் சந்திரன், வாசகிகள் கலாதேவி பாலசண்முகன், சாந்தி சிவக்குமார் ஆகியோரும், நைல்நதிக் கரையோரம் (பயண இலக்கியம்) வாழும் சுவடுகள் (தொழில் சார் அனுபவங்கள்) முதலானவற்றை எழுத்தாளர் சண்முகம் சபேசன், வாசகி விஜி இராமச்சந்திரன் ஆகியோரும் விமர்சித்துப்பேசினர்.

இந்நிகழ்ச்சிக்கு சிட்னியிலிருந்து வருகை தந்திருந்த இலக்கிய ஆர்வலர் திரு. செல்வராஜா தலைமை தாங்கினார். திரு. முருகபூபதி பேச்சாளர்களை அறிமுகப்படுத்தினார்.

வண்ணாத்திக்குளம் நாவல் இலங்கையின் வடமத்திய பிரதேசத்தில் ( மதவாச்சியா – பதவியா) காடும் காடு சார்ந்த பின்தங்கிய பகுதியில் வாழும் தமிழ் – சிங்கள ஆண் – பெண் காதல் உறவை சித்திரிக்கிறது.

உனையே மயல்கொண்டு நாவல் இலங்கை யில் 1983 கலவரத்தின் பின்னணியில் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண்ணின் பாலியல் சார்ந்த அகச்சிக்கல்களையும் அதனால் அவள் கணவனது மனப்பிரழ்வையும் சித்திரிக்கிறது.

அசோகனின் வைத்தியசாலை முற்று முழுவதும் அவுஸ்திரேலியாவில் மெல்பனை பின்புலமாகக்கொண்டு எழுதப்பட்ட முழுமையான புகலிட இலக்கிய வரவு.

புதிய நாவல் கானல்தேசம், இலங்கையில் நீடித்த போரில் சம்பந்தப்பட்ட இயக்கங்கள், இலங்கை – வெளிநாட்டு புலனாய்வுப்பிரிவு தொடர்பான பின்னணியில் காதலையும் காமத்தையும் பாதிக்கப்பட்ட மக்களின் கனவுகளையும் பேசுகிறது.

நைல் நதிக்கரையோரம் ( பயண இலக்கியம்) எகிப்தின் பிரமீட்களையும் பூத உடல்களை பதப்படுத்திய அக்கால மம்மிகளைப்பற்றியும் மத்திய கிழக்கின் முன்னைய அரசுகள் பற்றியும் பயணிகளுக்கு வழிகாட்டும் தகவல் களஞ்சியமாகி யிருக்கிறது.

வாழும் சுவடுகள் , விலங்கு மருத்துவத்தின் மகத்துவம் பற்றியும் ஜீவகாருண்யத்தையும் பற்றிய சுவாரசியமான கதைகளைச் சொல்கிறது.

புதிய நூல் எக்ஸைல், நடேசன் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலப்பகுதியில் தனது துணைவியார் மருத்துவர் சியாமளாவுடனும் ஆயுதம் ஏந்திய இயக்கங்களுடனும் இணைந்து போரினால் பாதிக்கப்பட்டு தாயகத்திலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்களுக்கு மேற்கொண்ட மருத்துவ உதவிகளைப்பற்றியும் அந்தப்பணியில் கிட்டிய அனுபவங்களையும் அங்கதச்சுவையுடன் பேசுகிறது.

மெல்பனில் நடந்த நிகழ்வில் உரையாற்றியவர்கள், நடேசனின் பன்முக அனுபவங்களை சிலாகித்துப்பேசினர். ஆரம்ப வகுப்பிலிருந்து உயர்தர வகுப்புக்குச்செல்லும் மாணவனின் கல்வி வளர்ச்சியின் படிமுறையை இனம்காண்பிப்பதுபோன்று எதிர்பாராமல் படைப்பிலக்கியவாதியான நடேசனின் இரண்டு தசாப்த கால எழுத்தூழியத்தை மதிப்பீடு செய்யும் வகையில் இந்த அரங்கு இடம்பெற்றது.
நிகழ்ச்சியின் இறுதியில் நடேசன் தனது ஏற்புரையில், தனது வாழ்வின் அனுபவங்களையே ஏனைய எழுத்தாளர்கள் போன்று சித்திரிக்க முயன்றிருப்பதாகவும், வாசகர்களின் கணிப்புகளை கவனிப்பதன் ஊடாக தன்னை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ளவும் முடியும் எனத் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவின் வெண்பனிக்கால பருவகாலத்தில் இதமாக நடந்த இந்த இலக்கிய ஒன்றுகூடல் பலதரப்பட்ட வாசிப்பு அனுபவங்களையும் சங்கமிக்கச்செய்தது.
—0—

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக