எஸ். ராமகிருஷ்ணன்.

டலை அறிந்து கொள்வது காமத்திலிருந்தே துவங்குகிறது. உடல் ஒரு வெளி. அதன் அகப்பரப்பு நாம் அறியாதது. எல்லா உணர்ச்சிகளையும் போலவே காமமும் இயல்பாக வெளிப்படவும் கடந்து செல்லவும் வேண்டியது. ஆனால் ஒழுக்கக் கோட்பாடுகளும், கலாச்சாரத் தடைகளும், காமம் குறித்த சொல்லாடல்களையும், பகிர்தலையும் ரகசியமான செயல்பாடாக மாற்றியிருக்கின்றது.

அதிலும் பெண்கள் தங்களுடைய பாலுணர்வுகள் குறித்த விருப்பு வெறுப்புகளை காலம் காலமாக தங்களுக்குள்ளாகவே ஒடுக்கி வந்திருக்கிறார்கள். அடக்கபட்ட பாலுணர்ச்சிகளின் கொந்தளிப்பு மற்றும் உடல் ரீதியான பகிர்தலில் ஏற்படும் நெருக்கம் மற்றும் விலக்கத்திலிருந்தே நவீன நாவல்கள் துவங்குகின்றன. சென்ற நுப்ற்றாணடு வரை பேரின்பம் என்று மட்டுமே அடையாளப்படுத்த பட்ட பாலுறவு இந்த நூற்றாண்டில் அகப்பிரச்சனை என்று சுட்டிக் காட்டப்படுகிறது.

தமிழ் உரைநடையில் பாலின்பம் குறித்த எழுத்து எப்போதுமே கலாச்சார தணிக்கையொன்றிற்கு உள்ளாகியே வந்திருக்கிறது. இந்த தணிக்கையை எழுத்தாளனே மேற்கொண்டு விடுகிறான். அல்லது மதம், அறநெறி, சமூகக் கட்டுபாடு ஏற்படுத்தும் தடைகள் காரணமான பயம் அவனை நிர்பந்தபடுத்துகிறது.

தமிழில் நு¡ற்றுக்கணக்கான குடும்ப நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றில் கூட கணவனும் மனைவியும் தங்களுக்குள் உடலின்பம் கொள்வது இயல்பாக எழுதப்படவில்லை. ஆனால் சங்கக் கவிதைகள் காமத்தைப் பாடியிருக்கின்றன. முற்றிய காமத்தின் காரணமாக உடல் கொள்ளும் மாற்றங்களும் மனப்போக்கில் ஏற்படும் கொந்தளிப்புகளும் கவிதைகளாகியிருக்கின்றன.

ஆண்டாள் மிக இயல்பாக தன் காம உணர்வுகளை பாடலில் பதிவு செய்திருக்கிறாள். வெள்ளிவீதியார் கையில்லாதவன் முன்னால் வெயிலில் வைக்கப்பட்ட வெண்ணெய் உருகி போவதை போன்றதே காமம் என்று அடையாளம் காட்டுகிறார்.காமப்பிரதி என்று தனித்து அடையாளமிட்டு வாசிக்கபடுவதற்கான தனிப்பிரதிகள் எதுவும் தமிழில் இல்லை. மாறாக காமம் குறித்து இலக்கிய தளத்தில் நடைபெற்ற பெரும்பான்மை சொல்லாடல்கள் ஒழுக்க கட்டுபாடுகளையும் அதை மீறும் போதும் அடையும் தண்டனையையுமே வலியுறுத்துகின்றன..

ஒரு நூற்றாண்டின் முன்பாக ஐரோப்பிய இலக்கியம் கடந்து சென்று விட்ட பாலுணர்ச்சிகளின் இயல்பான பதிவுகள் இன்றும் தமிழில் மிகுந்த சர்ச்சைக்கும், மிரட்டலுக்குமே உள்ளாகி வருகின்றன.

நடேசனின் நாவல் பாலின்பத்தின் அகச்சிக்கல்களையே பேசுகின்றது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து, ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடி சென்ற ஒரு ஆணின் பார்வையில் அவனது உடலின்பம் குறித்த சிக்கல்களும் அதன் விளைவுகளும் விவரிக்கபடுகின்றன.

நாவல் இரண்டு தளங்களில் இயங்குகின்றது. ஒன்று கணவன் மனைவிக்குள் உடலின்பம் சார்ந்து ஏற்படும் பேசாமௌனமும் அதன் விளைவுகளும் பற்றியது. இன்னொன்று புகலிடத்தில் உள்ள நிம்மதியற்ற பிழைப்பின் விளைவாக ஏற்படும் மனவெறுமையும், அதைப் போக்கி கொள்வதற்காக பீறிடும் காமமும் பற்றியது. இரண்டு தளங்களின் ஊடாக புலம்பெயர்ந்து சென்ற நினைவுகளும் கடந்த கால இடர்பாடுகள் இன்றும் ரணங்களாக ஆறாமல் இருப்பது பதிவு செய்யப்படுகிறது.

நாவலிலின் தனித்துவம் அதன் நுட்பமான கதை சொல்லும் முறை. மற்றும் கதாபாத்திரங்களின் துல்லியமான உணர்ச்சி வெளிப்பாடு. சந்திரன் அவன் மனைவி ஷோபா, சந்திரனோடு நட்பு கொள்ளும் ஜீலியா என்று மூன்று முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியே நாவல் விவரிக்கபடுகிறது. பெரும்பாலும் அன்றாட வாழ்வின் நிகழ்வுகள். அதில் ஏற்படும் சிறு சிறு சந்தோஷங்கள் மற்றும் கசப்புணர்வுகள் , பெரும்பாலும் சுயசிந்தனை வழியாகவே வெளிப்படுத்தபடுகிறது.

நாவலின் அடித்தளமாக வலியும் வேதனையும் வெளியே சொல்லமுடியாத அவமானமும் கொண்டவர்களாக புகலிடம் தேடி இலங்கையிலிருந்து வெளியேறிவர்களின் வாழ்க்கை விவரிக்கபடுகிறது. குறிப்பாக பெண்கள் மீதான வன்முறை அவர்கள் மனதில் தீராத ரணமாக உறைந்து போயிருப்பதை நாவல் மிக நுட்பமாக பதிவு செய்திருக்கிறது. அது போலவே ஏதோவொரு தேசத்தில் பிழைப்பிற்காக சென்று வாழ நேரும் போது எதிர் கொள்ளும் கலாச்சார தனிமை நாவலில் மிக அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மனத்தடையற்ற உடலின்பத்தை ஜுலியா சந்திரனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள். அது ஒரு சிகிட்சை போன்றே உணர முடிகிறது. உடல் தன்னளவில் அடங்க மறுக்கும் போது காமம் அதை சாந்தம் கொள்ள செய்கிறது. சந்திரன் தன்வாழ்வில் காமத்தின் அடர்ந்த சுகந்தத்தை ஜுலியாவிடமே அறிந்து கொள்கிறான்.

யுத்தம் உடலில் வெளித்தெரியாத மாற்றங்களையும் வடுக்களையும் உருவாக்கியிருக்கிறது. உயிரிழப்பை விடவும் வேதனைமிக்கமது அவமானமும் வலியும் நிறைந்த நினைவுகள். அது நிம்மதியற்று எதிலும் சாந்தி கொள்ள முடியாத மனப்போக்கினை உருவாக்கி விட கூடியது. அதன் விளைவு இந்த நாவல் முழுவதும் எதிரொலிக்கபடுகிறது.

புகலிடங்களில் வசிக்கும் பெரும்பாலும் ஆண்கள் அந்நிய கலாச்சாரத்தினுள் தங்களை கரைத்து கொண்டுவிடுகிறார்கள். ஆனால் பெண்களும் குழந்தைகளும் வயதானவர்களும் அதை எதிர் கொள்ள முடியாமலும் அதே நேரம் தங்களது பூர்வ நினைவுகளிலிருந்து வெளிவர முடியாமலும் ஊஞ்சலாடுகிறார்கள் .

நடேசனிடம் மிக நுட்பமான கதைசொல்லும் திறனிருக்கிறது. அதே நேரம் வேதனைகளை மிகைபடுத்தாமல் பதிவு செய்யும் நுட்பமும் கைவந்ந்திருக்கிறது. அவ்வகையில் இந்த நாவல் முக்கியமானது என்றே தோன்றுகிறது.

இந்த நாவல் மிக விரிவாகவும் இன்னும் பல தளங்களிலும் வளர்ந்து செல்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. நடேசன் அதை மிகச் சுருக்கமாகவே பதிவு செய்திருக்கிறார் என்பதே அதன் சிறிய பலவீனமாக தோன்றுகிறது.

இயல்பும் எளிமையும் வாழ்வை பதிவுசெய்வதில் தனித்துவமும் கொண்டிருக்கிறது என்பதாலே இந்த நாவல் என் விருப்பத்திற்குரியதாக இருக்கிறது. அவ்வகையில் நவீன தமிழ் இலக்கியத்திற்கு இது புது வரவு என்றே கூறுவேன்.

நடேசனின் “உனையே மயல் கொண்டால் “

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

நடேசனின்’ உனையே மயல் கொண்டால்” எல்லோருக்கும் தெரியவேண்டிய ஒரு முக்கிய விடயத்தைச்சொல்லும் நாவல்.

‘பைபோலார் டிஸீஸ்- (bipolar dieases-disorder (manic depression) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒரு மனவியாதியால் துயர் படும் ஒரு பெண்ணையும் அவளைத் திருமணம் செய்து அல்லற்படும் கணவரையும் பின்னிப்பிணைந்த நாவல்.

மன நலம் பாதிக்கப்பட்ட ஆணோ பெண்ணோ சாதாரண மனிதர்கள் மாதிரி வாழ்க்கை நடத்துவது கடினம். தாம்பத்திய வாழ்வின் முக்கிய அம்சமான ‘பாலியல்’ உறவை மன நலம் பாதிக்கப்பட்டவர்களால் சந்தோசமாக அனுபவிக்க முடியாது.

பாலியல் உறவுக்கு ஆரோக்கியமான மனநிலை முக்கியம். உதாரணமாக,மனநிலை பாதிக்கப்பட்ட ஆண்கள், ஆண்மையின் பூரண விறைப்பையடைவதும், தாம்பத்திய உறவை அனுபவிப்பதும் மிகவும் கடினம். இதைப்புரியாமல் பலர் தங்களுக்கு ஏதோ ‘ பிழை’ இருப்பதாக நினைத்துக் குடிக்க தொடங்கி. அடுப்பில் இருந்து நழுவி நெருப்பில் விழுந்து அழிந்த கதையாக வாழ்க்கையை முடித்துக்கொள்வதுமுண்டு.

நடேசனின் நாவல் ‘ பைப்போலர்’ வருத்தம் வந்த சோபா என்ற பெண்னின் வாழ்க்கையைப் பற்றியது. பைப்போலார் வருத்தம் உள்ளவர்களுக்கு அடிக்கடி மூட் மாறும்(Mood swings) . மிக மிக சந்தோசமும் ஆழமான சோகமும் ( Deep depression) இவர்களை ஆட்டிப்படைக்கும்.

அமெரிக்காவில் 2.3 கோடி மக்கள் இந்த மனவருத்ததால் கஷ்டப்படுகிறார்கள். அதில் 20 வீதமானவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள்.

இந்த வருத்ததிற்குக் காரணம் என்னவென்று தெரியாவிட்டாலும் ஒருமனிதனின் வாழ்க்கையில் நடந்த அதி துக்கமான சம்பவங்களும்((Trauma) , சிலவேளைகளில் பாரம்பரியமும்(Genetic ) காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் ஆசிய நாட்டுப்பெண்களில் 6% வீதமானவர்கள் ஏதோ ஒரு வித மன வருத்ததிற்கு ஆளாகிறார்கள் என்று லண்டன் மனவைத்திய அமைப்புக்கள் கணிப்பிட்டுகின்றன.இவர்களில் பலர் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்வதுமுண்டு(self harming).

நடேசனின் ”உனையே மயல் கொண்டால்” அவுஸ்திரேலியாவில் வாழும் ஒரு தமிழ்த் தம்பதிகளுக்குள் நடக்கும் பாலியற் பிரச்சினை, அந்தப் பிரச்சினை வருவதற்கான உந்துகோல்கள், பிரச்சினை வரும்போது ஒரு சாதாரண மனிதனின் சாதாரண உணர்வுகளின் போராட்டம், மனதை வெல்ல முடியாமல் காமத்தின் தணலுக்குள் வீழ்ந்துபோகும் அனுபவம் அதன் மூலம் தெரிந்து கொண்ட உண்மைகள், அந்த உறவாற் கிடைத்த குற்ற உணர்வு, கிடைத்த தண்டனை என்பனபற்றி மிகவும் எளிமையாகவும் யதார்த்தமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது.

மனவியாதி பற்றிய தமிழ்ச் சமுகத்தின் கணிப்பும் கதாபாத்திரங்கள் மூலம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் கதையின் ஒரு நாயகியாகிய சோபாவுக்கு வந்த அதிர்ச்சிகளில் 83ம் ஆண்டு இனக்கலவரம் மட்டுமன்றி, சோபாவின் தமயன் கார்த்திக்கின் மரணமும் ஒன்று. அவன், டெலோ இயக்கத்தில் இருந்தான் என்ற குற்றத்தால் புலிகளால் எரித்துக்கொல்லப்பட்டவர்களில் ஒரு தமிழன்.

அந்தச் சம்பவம் அந்தக்குடும்பத்தின் அத்திவாரத்தையே அழித்த சம்பவம் என்பது சோபாவின் வாழ்க்கையின் குழப்பத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

‘சிங்களவர் வீடு வாசலை எரித்தார்கள்,ஆனால் யாழ்ப்பாணத்தவர்கள் என் பிள்ளையை எரித்துக் கொன்று விட்டார்கள். சிங்களவன் நாங்கள் தமிழர்கள் என்ற காரணத்தால் எங்களை அடித்தார்கள்.யாழ்ப்பாணத்தவர்கள் என்ன காரணத்தால் என் பிள்ளையைக்கொன்றார்கள்” என்ற இராசம்மாவின் புலம்பல் இயக்கங்களில் சேர்ந்து இறந்த பல இளைஞர்களின் புலம்பலும் சோகமுமாகும்.

” எப்போது எனக்கு இந்த மனநிலையில் ஒரு மாற்றம் வந்தது? எண்பத்தி மூன்றில் காடையர்கள் என்னை நிர்வாணமாக்கியபோதா? கார்த்திக்கின் எரிந்த உடலை பார்த்தபோதா? கார்த்திக்கும் அவனது நண்பர்களும் எப்படித் தோட்டங்கள் வீடுகள் என ஒளிந்தபோது துரத்தித் துரதிச் சுட்டான்கள் எனக்கார்த்திக்கின் நண்பர்கள் விபரித்தபோதா” எனப்பலவாறு சோபாவின் மனம் குமைந்தது, என்கிறார் ஆசிரியர்.

இன்றைய கால கட்டத்தில் எனக்குப்பிடித்த தமிழ் எழுத்தாளர்களின் வரிசையில் அ. முத்துலிங்கம், பொ. கருணாஹரமூர்த்தி நடேசன் போன்றோரின் எழுத்தில் இலக்கியத்திறமை மட்டுமன்றி யதார்த்தமும் இருப்பதாகக் கூறுவேன்.இவர்கள் வார்த்தைகளை வைத்து ‘இலக்கிய விளையாட்டு’ விளையாடாதவர்கள். சொல்ல வந்ததை நேர்மையாகச் சொல்பவர்கள். சொல்லும் விடயத்தை, முடிந்தவரைக்கும் விளக்கமாகச் சொல்பவர்கள். இலக்கியத் தரத்துடன் சொல்பவர்கள். ‘புதிய உத்திகள்’ என்று எப்படியெல்லாமோ, எதையோ சொல்லி வாசகர்களைக்குழப்பாதவர்கள். தாங்கள் கண்ட அனுபவத்துடன் வாசகர்களையும் இனைத்துக்கொள்பவர்கள். எழுதும் விடயத்தை விறு விறுப்பாக எழுதுபவர்கள்.

நடேசனின் நாவல் புலம் பெயர்ந்த தமிழர்களின்’ பழைய’ வாழ்க்கையின் ஏக்கத்தையோ, புதிய உலகின் எதிர்பார்ப்பையோ காட்டாமல் நடைமுறைச் சம்பவங்களைக்கோர்த்த ஒரு யதார்த்தப்படைப்பு.

பல மனிதர்கள் சொல்ல விரும்பாத, சொல்லத்தயங்கும், மன நலப்பிரச்சினைகளும் அதன் பாதிப்பால் வரும் பாலியற் பிரச்சினைகளும் கதைப்பொருளாக எடுக்கப்பட்டிருக்கிறது.

நடேசன் வைத்தியத் துறையனுபவம் உள்ளவர் என்பதால் இந்தநாவலின் நாயகர்களான் கணவன் , மனைவி, காதலி என்போரின் மனநிலைப்பிரச்சினையை விரிவான, சமுதாய,பாலியல், விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார்க்கவும் உதவி செய்கிறார்.

கதையின் பரிமாணங்கள்.

-இலங்கையிலிருந்து மேற்துறைப்படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்குப்போய் அங்கு வாழ்க்கையை அமைத்துக்கொண்ட தமிழ் குடும்பஸ்தனைப்பற்றிய கதையிது.

-அவனது மனைவிக்குக் குழந்தை பிறந்தபின் மன நலப்பிரச்சினையேற்பட்டுக் குடும்பவாழ்க்கையின் அர்த்தத்தைக் கேள்வி கேட்கப்பண்னுகிறது. குடும்ப வாழ்வில் ஏற்படும் பாலியல் உறவின் வெறுமை கணவனுக்கும் மனைவிக்குமிடையில் எத்தனை பிளவையும், வெறுமையையும், சந்தேகங்களையும் சங்கடங்களையும் உண்டாக்குகிறது என்பதைப் பகிரங்கமாகச் சொல்கிற நாவல் இது.

–மன நலப் பிரச்சினை வந்தால் ஆணோ பெண்ணோ தங்களின் பாலியலின் தேவைகளை எப்படி இழக்கிறார்கள், உணரும் சக்தியிழக்கிறார்கள் என்பதைச் சாதாரணமானக் குடும்பக்கதையூடாகக் காட்டியிருக்கிறார் நடேசன்.

-ஆசிய மக்களிடையே மனநல நோய் பற்றிக் கடைப்பிடிக்கும் இரகசியங்கள், பொய்மைகளை உடைத்து உண்மைகளுக்கு முகம் கொடுக்க இந்நாவல் மிகவும் உதவியாயிருக்கும்.

மனிதன் பேசத்தெரிந்த ஒரு மிருகம். மூன்று பெரு உணர்வுகள் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. பசி,செக்ஸ், பாதுகாப்பு என்பன மிகவும் முக்கியமானவை.இன்றைய கால கட்டத்தில் மத்தியதர வாழ்க்கை நடத்தும் மனிதன் பசியை வெல்லத் தன் படிப்பைப் பாவித்துப் பிழைத்துக்கொல்கிறான்.

பசியை வெல்ல எடுத முயற்சிகளில் வெற்றி கொண்டதுபோல் பாலியலில் வெற்றி கொள்ளப் பெரும்பாலானவர்களால் முடியவில்லை. வயிறு நிறைந்தால் பசிபோய்விடும். பாலியிற் தேவை நினைவுகள் இரவும் பகலும் ஒரு மனிதனை ஆட்டிப்படைப்படைப்பதாகச் சொல்லப்படுகிறது. குடித்தால் வெறிப்பது மது, பெண்னைப் பார்த்தால் வெறிதருவது காமம் என்பதன் உண்மையை இந்நாவலின் பல இடங்களில் ஆசிரியர் படம் பிடிக்கிறார்.

எதையும் எளிதாக வாங்க முடியுமான மேற்கைய நாகரிகத்தில் உண்மையான அன்பை வாங்குவது கஷ்டம் என்பதும் கதையினூடே சொல்லப்படுகிறது.

கடந்த வாழ்க்கையின் தொடர்கள் எப்படி மனிதனை வாட்டுகிறது, உருக்குலைக்கிறது, உருப்படியாக்குகிறது, மாற்றுகிறது என்பதை இந்நாவலை ஆழமாகப் படிப்பவர்களுக்குப்புரியும்.

எங்கள் சமூகத்தில் சொல்லப்படாத சில விடயங்களை டாக்டர் நடேசன் சொல்கிறார்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த துயர் சம்பவங்கள் எப்படி அவள் வாழ்க்கையைப்பாதிக்கிறது, அந்தப்பாதிப்பை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பதை இந்நாவல் படிப்பவர்கள் உணர்வார்கள்.

பாலியல் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பல பெண்கள் மனம் விட்டுப்பேச மாட்டார்கள். மனத்தின் அடியில் புதைத்து விடுவார்கள்.

நல்லா சாப்பாடு இல்லாத ஏழையைத் தொற்றுவியாதிக்கிருமிகள் தாக்கினால் ஏழையின் உடம்பு தாங்காது.

அதேபோல் மனதில் பல குழப்பங்களைப்புதைத்து வைத்திருக்கும் பெண்ணுக்கும், அவளின் வாழ்க்கையை சரியான விதத்தில் கொண்டு நடத்த அவள் மன நிலை விடாது. ‘ மூட்’ அடிக்கடி மாறும். ஒரு நேரம் சந்தோசமும் மறு நேரம் துக்கமுமாகித் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுவார்கள். இதை ஆங்கிலத்தில்’ பைபோலார்’ நோய் என்று கூறுவார்கள்.

இந்த மன நிலைஉள்ளவர்களுடன் வாழ்க்கை நடத்துவது முள்போல் நடப்பதற்குச் சமம். இதைப்புரிந்து கொண்டு வைத்தியம் தேடாமல் இருப்பவர்கள் பலர். அதிலும் ஆசியா நாட்டவர்களைப் பொறுத்தவரையில் ‘ மன நலம்’ பற்றிய விடயங்கள் மிகவும் இரகசியமாகவைக்கப்படுகின்றன. தோல்வியான வாழ்க்கையாக மதிக்கப்படுகிறது. மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக பூட்டி வைத்திருக்கப்பட வேண்டியவர்கள் என்ற கண்ணோட்டம் இன்றும் எங்களிடையே பரவலாக இருக்கிறது.

எங்கள் தமிழர்களிற் பலர், ‘விசர்’ பிடித்தவர்கள் என்று மற்றவர்கள் சொல்லி விடுவார்கள் என்பதற்காக எதையும் மறைத்து வைத்து விடுவார்கள். இலங்கையில் எட்டு மாகாணங்களும் அங்கொடை என்ற பைத்திய வைத்தியசாலை மட்டும் இருக்கும்போது வடக்கு மாகாணத்திற்கு மட்டும் மேலதிகமாக இன்னுமொரு வைத்தியாசால மந்திகையில் தேவைப்படுகிறது என்பதன் மூலம், எங்களில் எத்தனைபேர் மன நல சேவையை வேண்டி நிற்கிறார்கள் என்பது புரியவரும்.

மன நலப் பிரச்சினைகள் மறைக்கப் படத்தேவையற்றவை. அதிகப்படி வேலைசெய்யும் இயந்திரம் பழுதடைவதுபோல் அதிகப்படி துன்ப துயர் அனுபவித்த மனங்களும் சிலவேளை குழம்பிப்போகின்றன. இவை சமுதாயத்திலிருந்து மறைத்து வைக்கப்படவேண்டியவையல்ல. மனிதர்கள் ஒருத்தருக்கொருத்தர் உண்மையான அன்பு காட்டுவதன் மூலமோ அல்லது மன நலத்தைச் சீர் படுத்தும் மருந்துகள் கொடுத்தோ குணமாக்கப்படவேண்டியவை என்பதை இக்கதைமூலம் சொல்லித் தமிழ் மக்களுக்கு ஒரு அரிய சேவை செய்திருக்கும் நடேசனுக்கு எனது பாராட்டுக்கள்.

உனையே மயல் கொண்டு

ஜேகே

சந்திரன் அவுஸ்திரேலியாவிலே விஞ்ஞான முதுமானி ஆராய்ச்சி மாணவனாக இருக்கிறான். மனைவி ஷோபா, மிக இளம்வயதில் திருமணம் முற்றாக்கப்பட்டுபுகைப்படத்தில் பார்த்த சந்திரனை நம்பி அவுஸ்திரேலியாவுக்கு வந்திறங்கியவள். அவுஸ்திரேலியா வந்து இரண்டாம் வருடமே குழந்தை.குழந்தைப்பேற்றோடு ஷோபாவின் தாயும் தந்தையும் வந்திணைகிறார்கள்.

குழந்தை பிறந்த சில நாட்களிலேயே ஷோபாவின் நடவடிக்கைகளில் மாற்றம் உருவாகிறது. மனம் ஒரு நிலையில் இல்லாமல் திடீரென்று அதி உச்ச கோபத்தையும் சமயத்தில் அதியுச்ச மகிழ்ச்சியையும் காட்டத்தொடங்குகிறாள். இது உடலுறவு வாழ்க்கையிலும் பிரதிபலிக்க ஆரம்பிக்கிறது. ஷோபாவுக்கே தன்னில் ஏற்படும் மாற்றம் புரிகிறது. தன்மீதான கழிவிரக்கம், கோபம் மேலும் அதிகரிக்கிறது.

இந்தச்சமயத்தில் சந்திரன் ஜூலியா என்கின்ற நடுத்தர வயதுப் பெண்ணைச் சந்திக்கிறான். உதவி செய்கிறான். உறவு ஆரம்பிக்கிறது. ஜூலியா மூன்று முறை திருமணம் செய்து இப்போது தனித்திருப்பவள். இரண்டு பிள்ளைகள். இருவருமே பெரியவர்கள்.வயதுக்கு வந்த மகன் வீட்டில் இருக்கத்தக்கதாகவே ஜூலியா சந்திரனோடு உறவு கொள்கிறாள்.

சந்திர‌ன் ஷோபா, ஜூலியா என்ற இரு உறவுகளாலும் தடுமாறுகிறான். இந்த நிலையில் ஷோபாவுக்கு வந்திருப்பது பைபோலர் டிஸ் ஓர்டர் எனப்படும் மனவியாதி என்பது தெரியவருகிறது. வியாதிக்கு காரணம் ஷோபாவின் இளவயது யுத்த அனுபவங்கள். ஷோபா எண்பத்து மூன்று கலவரத்தின்போது கடுமையாக பாதிக்கப்பட்டவள். பின்னர் யாழ்ப்பாணத்தில் டெலொவில் இணையும் அவள் தமையனையும் பலி கொடுக்கிறாள். இச்சம்பவங்கள் அவளின் ஆழ்மனதில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இப்போது நோயாக வெளிப்படுகிறது. அவர்களின் வீட்டிற்கு மீளவும் ஷோபாவின் பெற்றோர்கள் வந்து சேர்கிறார்கள்.

ஷோபாவின் வியாதியை எப்படி அவளும் சந்திரனும் எதிர்கொள்கிறார்கள். இது சந்திரன் ஜூலியாவுக்கிடையான உறவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கின்ற வகையிலான உறவு மற்றும் உணர்வுச்சிக்கல்கள்தான் நாவலின் மீதிக்கதை.

“உனையே மயல் கொண்டு”நோயல் நடேசன் எழுதிய இரண்டாவது நாவல். அவருடைய முதல் நாவலான வண்ணாத்திக்குளம் மிக எளிமையான வாசிப்பனுபவத்தைக்கொடுக்கக்கூடிய ஒரு நேர்கோட்டு நாவல். அனேகமான ஈழத்து எழுத்தாளர்கள் கடித்துத்துப்பிய, இனக்கலவரத்தை மையப்படுத்திய தமிழ் சிங்களக் காதல் கதை. நடேசனுடைய மூன்றாவது நாவலான அசோகனின் வைத்தியசாலை முற்றிலும் புதியகளமான அவுஸ்திரேலிய மிருக வைத்தியசாலையை மைதானமாக வைத்து, வேறுபட்ட இனத்து மனித உணர்வுகளோடு விளையாடப்பட்ட ஒரு கிளாசிக் நாவல்.வண்ணாத்திக்குளத்துக்கும் அசோகனின் வைத்தியசாலைக்கும் நடுவிலே சிக்கிய நாவல்”உனையே மயல் கொண்டு’.

இது பாலின்பத்தின் அகச்சிக்கல்களை பேசும் சிறந்த நாவல் என்கிறது எழுத்தாளர் எஸ். ராவின் முன்னுரை. இது பை போலர் திஸ் ஒர்டரை சொல்லும் ஒரு நாவல் என்கிறது ராஜேஸ்வரி சண்முகத்தின் முன்னுரை. எனக்கென்னவோ “உனையே மயல் கொண்டு” நாவல் புலம்பெயர் வாழ்க்கையின் அதிர்ச்சிகளையும் அகச்சிக்கல்களையுமே முதன்மையாக முன் வைக்கிறது என்று நினைக்கத்தோன்றுகிறது. காமத்தையும் பைபோலர் திஸ் ஓர்டர் நோயையும் அதன் கருவிகளாக்கியிருக்கிறார் நடேசன். ஆனால் நாவல் முழுதும் அகச்சிக்கல்தான். சந்திரனின், ஷோபா, ஜூலியா என்கின்ற மூன்று பாத்திரங்களின் அகச்சிக்கல்கள். மூவரும் ஏதோ ஒரு தனிமையில் தத்தமது அகநெறிகளுடன் தாமே முரண்பட்டு முண்டியடித்துக்கொள்கின்றார்கள். அந்த முண்டியடிக்கும் புள்ளியாக காமம் இருக்கிறது. இதிலே யார் கெட்டவர், யார் நல்லவர், யார் செய்தது சரி, எது பிழை என்கின்ற வேண்டாத வேலைகளை நடேசன் செய்யவில்லை. அவர்களை அவர்களாகவே உலாவவிட்டு பின்தொடர்கிறார். சந்தர்ப்பங்களை உருவாக்கி அவற்றை அப்பாத்திரங்கள் எப்படி எதிர்கொள்கின்றன என்று பரிசோதிக்கிறார். நாவலில் சந்திரன் பரிசோதிக்கும் ஈகோல் பக்டீரியாபோல. இவற்றை ஒரளவுக்கு தெளிவாக எதிர்கொள்பவள் ஜூலியாதான். அவள்தான் தான் என்ன செய்கிறோம் என்பதில் தெளிவாகவே இருக்கிறாள். அதற்கு அவளின் வாழ்க்கை அனுபவங்கள், நாட்டின் கலாச்சாரம் துணைபோகிறது. ஷோபா தனக்கு வியாதி இருக்கிறது என்பதை அறிந்ததும் உடனடியாக தடுமாறினாலும் நாளடைவில் தெளிவாகிறாள். ஒரு புலம்பெயர் குடும்பத்துக்கு, அதுவும் யாழ்ப்பாண வாழ்க்கைப் பின்னணியில், யுத்த பின்னணியில் வளர்ந்த ஒரு ” சுத்த யாழ்ப்பாணத்தான்” சந்திரன்தான் இந்த வாழ்க்கையின் அதிர்ச்சிகளை முகம்கொடுக்கமுடியாமல் திணருகிறான். அதிகமாகத் தன்னோடு முரண்படுகிறான். ஒரு கட்டத்தில் சந்திரனே சொல்லுவான்.

“எனக்கேன் குண்டல்ராவ் போன்று ஒரே நேர்கோட்டில் வாழ்க்கை இல்லை?”

இதுதான் நாவலின் கதை. நேர்கோட்டில் இல்லாமல்போனதால்தான் சந்திரன் நாவலின் முக்கிய பாத்திரம் ஆகினான். இல்லாவிட்டால் குண்டல்ராவ் ஆகியிருப்பான்.

இந்த இடத்திலே இன்னொரு நாவலை குறிப்பிட்டு சில விஷயங்களை அலச ஆர்வமாக இருக்கிறது. “The Immigrant” என்று மஞ்சு கபூர் எழுதிய ஆங்கில நாவல் ஒன்று இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரே கதைகரு. கனடாவில் பல் வைத்தியனாக தொழில் புரியும் ஒரு இளைஞன் இந்தியாவிலே திருமணம் முடித்து மனைவியை கூட்டி வருகிறான். அவனுக்கு பாலியல் உறவில் ஒரு பலவீனம் இருக்கிறது. அது கொஞ்சம் குற்ற உணர்வாக வெளிவந்து மனைவியுடனான குடும்பவாழ்க்கை கசக்கிறது. அவனுக்கு கிளினிக்கில் வேலைபார்க்கும் இன்னொரு பெண்ணோடு உறவு. மனைவிக்கு புது நாடு. புது இடம். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருடைய அகச்சிக்கல்களும் விரியும். முடிவில் மனைவிக்கும் ஒரு தொடர்பு ஏற்படுகிறது. காமத்தை வைத்து உள முரண்பாடுகளை மிக நுணுக்கமாக பின்னியிருப்பார் மஞ்சு கபூர். வாசிக்கும்போது “விசர்” பிடிக்கும்.

இன்னொன்று “அனல்காற்று”. அது காமத்தை, அதுவும் சந்திரா என்ற பெண்ணின் காமத்தை வைத்து ஜெயமோகன் எழுதிய நாவல். அருண், சந்திரா, சுசி என்று மூன்றுபேரை சுற்றி நிகழும் கதை. சந்திராவுக்கு ஒரு மகன் கூட உண்டு. ஜெயமோகன் காமத்தை வைத்து அக முரண்பாடுகளோடு விளையாடியிருக்கும் நாவல். அவர் கொஞ்சம் கொஞ்சமாக நாவலை ஊதி ஊதி ஜூவாலையாக்கி இறுதியில் எரிமலையாக்குவார். எரிமலை பின்னர் சடக்கென்று அடங்கிவிடும். “காமத்தின் அனல்காற்று குளிர்ந்துதான் ஆகவேண்டும் ஆனால், குளிரும் கணத்திற்கு முன்னர் அது செடி கொடிகளுடன் நகரையே கொளுத்திவிடுகிறது” என்பார் ஜெயமோகன்.

“உனையே மயல் கொண்டு” நாவல் “The Immigrant”போன்றோ, “அனல் காற்று” போன்றோ வரக்கூடிய அத்தனை அடிப்படைக்கூறுகளையும் கொண்டது. நடேசன் அதனை முழுமைப்படுத்தாமல் வெறுமனே ஆங்காங்கே தொட்டுவிட்டுப்போய்விட்டார் என்பது எனக்கு மனவருத்தம். ஜெயமோகன் சொல்லும் அந்த நகர் எரிப்பு உச்சக்கணங்கள் இந்நாவலில் வெறும் அடுப்போடு நின்றுவிட்டது. ஷோபாவின் பை-போலர் டிஸ் ஓர்டர், உடலுறவில் அவளது அணுகுமுறை, அதனூடான புலம்பெயர் தமிழரின் அகச்சிக்கல், ஜூலியா சந்திரன் உறவு என்று அத்தனை புள்ளிகளிலும் மெல்ல மெல்ல நாவலை கட்டி எழுப்பியிருக்கலாம். எழுப்பியிருந்தால் நாவலின் தளமே வேறு. நடேசனுக்கே அந்த நாவலை முழுமைப்படுத்தாத வருத்தம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் முதலாவதாக வாசித்த நடேசனின் நாவல் அசோகனின் வைத்தியசாலை. அப்போதே அவர் எழுத்தின் வாசகனாகிவிட்டேன். உடனடியாகவே வண்ணாத்திக்குளம் வாசித்தேன். சாதாரண கதை என்றாலும் கதை சொல்லும்பாணி உட்கார்த்தி வைத்தது. “உனையே மயல் கொண்டு” நாவலும் அப்படித்தான். ஆரம்பித்தால் நிறுத்தமுடியாது. அதே சமயம் வேகமாகவும் வாசிக்கமுடியாது. நடேசனின் கதை சொல்லும் பாணியில் ஒருவித மோன நிலை இருக்கிறது. நாவல் எறும்புக்கூட்டம்போல சீராகப்போகும். கலைக்க மனம் வராது. கடும் பூச்சுகள் இல்லாமல் உள்ளதை உள்ளபடி raw வாகச் சொல்லுவார். சமயத்தில் அதை மீறி விவரணங்கள் வரும்போது வாசிப்பு ஒட்டாது. கவனிப்பார் என்று நம்புகிறேன்.

தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் நடேசன். அவருடைய மூன்று நாவல்களும் ஏதோ ஒரு சலனத்தை எங்கோ ஒருமூலையில் வாசகனுக்கு ஏற்படுத்தும். அவருடைய சிறுகதைகளில் அது எனக்கு கிடைப்பதில்லை. அவருடைய அரசியலிலும் அது கிடைப்பதில்லை. நடேசன்

என்னைப்பொறுத்தவரையில் சிறந்த நவாலாசிரியர். இன்னுமொரு இருபது வருடங்களுக்குப்பின்னரான வாசிப்புலகத்திலும் நடேசனின் இடம் ஒரு நல்ல நாவலாசிரியர் என்ற அந்தஸ்தோடே இருக்கும் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையை மனதில் வைத்து, நீளத்தைப்பற்றி யோசிக்காமல் ஒரு முழுமையான நாவலை அவர் எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

http://www.padalay.com

உனையே மயல் கொண்டு.

Elanko DSe

குடும்ப அமைப்புக்கள் மீது காலங்காலமாக பல்வேறு விதமான உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. திருமணம்/உறவுமுறைகள் போன்றவை தொடர்ந்து அதிகாரத்தைத் தேக்கிவைக்கவும், எதிர்ப்பாலினர் மீது அதிகாரத்தை பிரயோகிக்கவுமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்ற குரல்கள் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே உரத்து எழுப்பப்பட்டிருக்கின்றன. சேர்ந்து வாழ்தல் (Living Together) இன்னபிற, திருமணம்/குடும்ப அமைப்புக்களுக்கு மாற்றாக முன்வைக்கப்பட்டாலும், இன்றும் குடும்பம் என்ற அமைப்பு முழுமையாக உடைக்கப்படாமலே -இன்னுமின்னும்- இறுக்கமடைந்து வருகின்றது. மேலும், ஒரளவு அடிப்படை உரிமைகள் சட்டத்தால் வரையறுக்கப்பட்ட குடும்ப அமைப்புக்களின் உள்ளேயே அதிகாரமும் வன்முறையும் அதிகளவு பிரயோகிக்கப்படும்போது, சட்டங்களுக்கு உட்படாத சேர்ந்து-வாழ்தல் போன்றவற்றினூடாக வன்முறை/அதிகார துஷ்பிரயோகம் நிகழ்த்தப்படும்போது சட்டரீதியாக எதையும் அணுகுகின்ற போக்கும் இல்லாதுபோய்விடுகின்றது என்பது கவனத்திற்குரியது.

ஆண்-பெண்-அரவாணிகள் இன்னமும் ஒரு சமத்துவமான சூழலில் வாழமுடியாத நிலை இருக்கும்போது ஆகக்குறைந்தது திருமணம் என்ற ‘சட்டம்’ அங்கீகரிக்கின்ற ஒரு அமைப்பை தமது பாதுகாப்பின் நிமித்தம் பலர் நாடுகின்றார்கள். பொருளாதாரரீதியில் தன்னைத்தானே எவரின் துணையின்றியும் இன்றைய சூழலில் பொருந்தி வாழமுடியும் என்று நினைக்கின்ற பெண்கள்/ஆண்கள் திருமணம் என்ற அமைப்பை உடைத்து, சேர்ந்து-வாழ்தல் என்ற அடுத்த கட்டத்திற்கு நகர முயல்கின்றனர். எனினும் அமைப்புக்குள்ளோ/ அமைப்பின்றியோ எவர் வாழ்ந்துகொண்டிருந்தாலும், இருப்பின் அர்த்தம் எதுவென்ற கேள்வி எல்லோரையும் தொடர்ந்து துரத்திக்கொண்டே இருக்கின்றது.

உனையே மயல் கொண்டு என்ற நாவல், குடும்பம் என்ற அமைப்புக்கூடாக புலம்பெயர்ந்தவர்களின் உளவியல் பிரச்சினைகளை ஒரளவு அக்கறையோடு அணுகுகின்றது. கலாநிதிப் பட்டத்திற்காய் ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திரனையும், அவர் வாழ்வில் குறுக்கிடும் இரு பெண்களையும் சுற்றிக் கதை நகர்கின்றது. பதினெட்டு வயதில் திருமணமாகி, ஒரு வருடத்திற்குள் குழந்தையொன்றையும் பெற்று, அடிக்கடி மனோநிலை மாறுகின்ற ஷோபனாவின் மீதான ஈடுபாடு காலப்போக்கில் சந்திரனுக்குக் குறைகின்றது. மேலும் அடிக்கடி மனவழுத்தத்திற்கு ஆளாகும் ஷோபனாவோடு, குழந்தை பிறந்ததற்குப் பின்பாக ஒரிருமுறைகளே சந்திரனால் உடலுறவில் ஈடுபட முடிகின்றது. அவ்வாறான திருப்தியின்மையில் இருக்கின்ற சந்திரனுக்கு விவாகரத்துப் பெற்ற ஜூலியாவுடன் நெருக்கம் அதிகரிக்கின்றது. சந்திரன் ஏற்கனவே திருமணமானவன் என்றறிந்தும் மனத்தடையில்லாது ஜூலியாவுக்கு சந்திரனோடு இயல்பாய்ப் பழக முடிகின்றது.

இவ்வாறு முக்கோண உறவுகளாய் கதை நகர்ந்துகொண்டிருக்கையில், ஷோபனாவை உளவியல் நிபுணரிடம் கூட்டிச்செல்ல சந்திரன் முயற்சிக்கின்றார். உளவியல் ஆலோசனை பெறுவதே தீண்டத்தகாத விடயமாக இருக்கும் ஒரு சமூகத்தில் ஷோபனாவை வைத்தியரிடம் கூட்டிச்செல்லுதல் அவ்வளவு இலகுவான விடயமல்ல. உளவியல் ஆலோசனைகளின்போது ஷோபனாவால் முழுமையாக குடும்ப உறவில் ஈடுபடமுடியாததற்கு, அவர் 83 ஜூலைக் கலவரத்தில் சிங்களக்காடையர்களால் நிர்வாணமாக்கப்பட்டு வெருட்டப்பட்டிருக்கின்றார் என்று தெரிகின்றது (அதன் நீட்சியில் ஷோபனாவிற்கு bipolar disorder இருக்கின்றதென நாவலில் குறிப்பிடப்படுகின்றது). மேலும் கலவரத்தால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயரும் ஷோபனாவின் குடும்பத்திலிருந்து அவரது தமையன் இனப்பிரச்சினை எழுச்சிபெற்ற காலங்களில் போராளிக்குழுவில் சேர்ந்து இன்னொரு போராளிக்குழுவால் கொல்லப்பட்ட பாதிப்பின் படிவும் ஷோபனாவில் இருக்கக்கூடும் என்றும் கதையின் ஓட்டத்தில் சொல்லப்படுகின்றது (ரெலோ-புலிகள் மோதல்). இவ்வாறு பல்வேறு உளவியல் அழுத்தங்களோடு இருக்கும் ஷோபனாவிற்கு உடலுறவு உட்பட எதிலும் முழுமையாக ஈடுபடமுடியாதிருக்கின்றது.

ஷோபனாவின் இந்த உளவியல் பிரச்சினையை(bipolar disorder) அறிந்துகொள்கின்ற சந்திரனுக்கு, தான் ஷோபனாக்குத் தெரியாமல் இன்னொரு உறவில் ஈடுபட்டு வருவது யோசிக்க வைக்கின்றது. என்ன என்றாலும் தன்னை நேசிக்கும்… தன்னிடம் முழுமையாக ஒப்படைத்த ஷோபனாவிற்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று சந்திரன் சிந்திக்கத்தொடங்குகின்றார். இதற்கிடையில் சந்திரன் கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வுகளை எழுதுவதில் மும்முரமாய் ஈடுபடுகையில் ஜூலியா இன்னொரு ஆணுடன் நெருங்கிப் பழக்த் தொடங்குவதும் சந்திரனுக்குத் தெரியவருகின்றது. இனித் தான் நல்லதொரு ‘ஆண்பிளையாக’ இருக்க முயற்சிக்கலாம் என்று நினைக்கின்றபோது ஷோபனா சந்திரனின் இன்னொரு உறவைக் கண்டுபிடிக்கின்றார். இவ்வாறு பல்வேறு சிக்கல்களில் அகப்படுகின்ற சந்திரன் வேலையின் நிமித்தம் இன்னொரு நகருக்கு மனைவியின் கட்டளையின்படி செல்வதோடு நாவல் முடிகின்றது (நீ மெல்பேண் வருவாய்தானே?…./ எனக்கு தற்போது மன ஆறுதல் ஏற்பட சில காலம் தேவை’ ப 147).நாவல் இருவேறு திசைகளை நோக்கி வாசகர்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றது.

உளவியல்ரீதியான பிரச்சினை வெளிப்படையாகத் தெரிகின்ற ஷோபனாவிற்கும் சந்திரனுக்கும் இடையில் ஒன்றுமாய்.., இன்னொரு பக்கத்தில் சந்திரனுக்கும் ஜூலிக்குமான நெருக்கங்களுக்கிடையில் கதை விரிகின்றது. நாவலில் ஷோபனாவின் உளவியல் பிரச்சினைக்கு காரணம் தேட டொக்ரர் கந்தசாமியிடம் ஆலோசனைப்பெறப்போகின்ற சந்திரன் -தான் இரண்டு பெண்களுக்கிடையில் தத்தளிக்கும்- தனது உளவியல் பிரச்சினை குறித்து எதையும் பகிர்ந்ததாய்க் காணவில்லை. தமிழ்ச்சமூகம் உளவியல் பிரச்சினைகளை அலட்சியமாய் ஒதுக்கித் தள்ளுகின்றது என்கின்ற புரிந்துணர்வு இருக்கின்ற சந்திரன், இவ்வாறு தனது மனைவிக்குத் தெரியாது ஈடுபடுகின்ற உறவு, மனைவிக்குத் தெரியவரும்போது தனது துணை இதைவிட இன்னும் ஆழமான மனச்சோர்வுக்கு ஆளாகிவிடுவார் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றார்.

சந்திரனின் தனது பேராதனை வளாகக் காதலை பொருளாதார வசதியின் நிமித்தம் நிராகரிக்கின்றபோது, ‘நீ ஒரு அசலான யாழ்ப்பாணத்தான்’ என்று ஒரு சிங்கள நண்பன் கூறுவதை சந்திரன் தனது புலம்பெயர் -ஆஸ்திரேலியா- வாழ்விலும் மிகவும் கவனத்துடனேயே கடைப்பிடிக்கின்றார். தன்னைவிட வயது மூத்த ஜூலியா உடலுறவில் தரும் உயரிய இன்பத்தைப் போல, அதற்குப்பின் அரசியல் தத்துவம் இன்னபிறவற்றை தன்னுடன் உரையாடுவது குறித்து மனம் மகிழும் சந்திரன் பதினம்வயதில் நிற்கின்ற ஒரு பெண்ணைத் திருமணஞ்செய்யும்போது இவற்றை அந்த வளரிளம்பெண்ணால் ஈடுகட்டமுடியாது என்று ஆழமாய் யோசிக்கமுடியாது போந்தது எந்தவகையில் என ஆராய வேண்டியிருக்கின்றது. மேலும் தான் இன்னொருவருடன் உறவில் ஈடுபடுவதை, தமிழ் நண்பர்களிடையே சந்திரன் பகிரப் பயப்பிடுகின்றார். அவர்கள் ஒரு கொலையைப்போலத்தான் எடுத்துக்கொள்வார்களென தனது இந்திய நண்பனிடம் சொல்லிக்கொள்ளவும் செய்கின்றார். இங்கேதான் சந்திரனின் இன்னொரு அசலான யாழ்ப்பாண முகம் வெளிப்படுகின்றது. தனது இருத்தலுக்கு தமிழ் அடையாளத்தை எளிதாய் சுவீகரித்து, கொழும்பிலிருந்து ஒரு இளம்பெண்ணைத் தனது துணையுமாக்குகின்ற சந்திரனுக்கு தனது மனதுக்கு/சமூகத்துக்கு எதிரான விடயமொன்றைச் செய்யும்போது மட்டும் தமிழ் அடையாளம் வெறுப்பூட்டுகின்றது. மேலும் ஜூலியாவை இன்னொரு ஆணுடன் நெருக்கமாய் காண்கின்ற சந்திரன் -வெறுப்பில்- பாலியல் தொழில் செய்யும் விடுதியை நாடிச் செல்கின்றார். அங்கே காத்திருக்கின்ற நேரத்தில் ‘ஞானம்’ பிறந்து –நல்லவேளை எந்தப் பெண்ணும் எனக்குப் பிடிக்காமல் போனது. ஜூலியாவின் மீது ஏற்பட்ட கோபத்தினால் என்னையே கெடுத்திருப்பேன்’ ப -138– என வெளியேறுகின்றார். சந்திரன் பாலியல் விடுதியை விட்டு வெளியேறிவிட்டார்;ஆனால் கதைசொல்லி இன்னும் நகரவில்லை.

இதற்கடுத்து மேலைத்தேய பாலியல் விடுதிகள் பற்றி வாசிப்பவர்களுக்கு கதைசொல்லி விரிவுரை செய்யத்தொடங்குகின்றார். தனிப்பட்ட விருப்பின் பேரிலேயும் அரசாங்கத்தின் அனுமதியுடந்தான் இவர்கள் பாலியல் தொழில் செய்கின்றார்கள் எனவும் எழுதச்செய்கின்ற கதைசொல்லி, பாலியல் தொழில்/பாலியல் தொழிலாளி என எழுதாமல் விபச்சாரம்/விபச்சாரி என எழுதுவதிலேயே அவரது நிறத்தை வெளிக்காட்டிவிடுகின்றார். மேலும் ‘தனிப்பட்டமுறையில் விபச்சாரியுடன் உறவு கொள்ள சந்திரன் விரும்பவில்லை’ (ப 139) எனச் சந்திரனை ஒரு புனிதபிம்பமாக ஆக்கவும் கதைசொல்லி மிகவும் கஷ்டப்படுகின்றார்.நாவலின் முக்கிய குறையாக ஷோபனாவின் பாத்திரம் முழுமையாக வளர்க்கப்படாமல் சிதைக்கப்பட்டதைக் குறிப்பிடவேண்டும். சந்திரனே முக்கியபாத்திரமாகவும், கதை சொல்லி ஒரு ஆணாகவும் இருக்கும்போது ஒரு பெண்ணின் பாத்திரத்தை வளர்ப்பது கடினமானது என்றபோதும், இன்னொரு பக்கத்தில், ஜூலியாவின் பாத்திரத்தின்போது, அவரது மூதாதையர்களின் ஜரிஷ் பின்புலம் குறித்தும் அவரது முன்னைய உறவுகள் குறித்து விரிவாக நாவலில் பேசப்படுவது குறித்தும் கவனிக்கவேண்டியுள்ளது. இதை இன்னொருவகையாய், ஷோபனாவின் பாத்திரம் முழுமையாக வளர்த்தெடுக்கும்போது, நாவலில் சந்திரனுக்கான முக்கிய இடம் இல்லாது தானாகவே ஒழிக்கப்பட்டுவிடும் என்ற பயத்தால், ஷோபனா இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கின்றார் எனவும் ஒரு வாசகர் எடுத்துக்கொளும் வாசிப்புச் சாத்தியமுண்டு. ஓ.எல் பரீட்சையில் சித்தியடையாத ஷோபனாவை, கலாநிதிப்பட்டம் செய்துகொண்டிருக்கின்ற சந்திரன் தனது துணையாக எவ்வாறு தேர்ந்தெடுத்துக்கொண்டார் எனவும் கேள்வி கேட்கவேண்டியிருக்கிறது (கதையில் நேரடியாகச் சொல்லாவிட்டாலும் இவ்வாறான தேர்வுக்கு யாழ்ப்பாணியர்கள் எதிர்பார்க்கும் கொழுத்த சீதனத்தைத் தவிர வேறெதுவும் இருக்குமுடியாதெனத்தான் வாசிக்கும்போது நினைக்கத்தோன்றுகினறது). எனெனில் ஜூலியாவுடனான உறவிலிருக்கும்போது அரசியல் தத்துவம் இன்னபிற ஈடுபாடுகளை ஜூலியா பேசும்போது சந்திரனின் பாத்திரம் மனமுவகை கொள்கின்றது. தனக்கான அலைவரிசையில் ஒருவரைத் தேர்ந்தெடுக்காது இருக்கும் சந்திரன் (அல்லது சந்திரனைப் போன்றவர்கள்) ஷோபனா போன்றவர்கள் உளவியல்ரீதியான பிரச்சினைகளில் இல்லாது இயல்பாய் இருந்தாலும் இன்னொரு உறவைத் தேடி (இங்கே உடல்தேவைக்குப் பதிலாக, உளத்தேவைக்காய்) போகமாட்டார்கள் என்பதை எங்ஙனம் நம்புவது?

மேலும் சந்திரனின் இன்னொரு அறிவுஜீவி முகம் வேறொரு இடத்தில் வெளிப்படுகின்றது. காய்கறிக்கடையில் சந்திக்கும் வயது முதிர்ந்தவர், ‘தம்பி உங்களைப்போல இளம்பிள்ளையல் படிக்க வரலாம். எங்களைப்போல வயதானவர்கள் மருத்துவ வசதியில்லாமல் சாக வேண்டியதா?’ என்று கூறும்போது சந்திரன் மகாத்மாகிவிடுகின்றார். இப்படிப்பட்ட ‘பொய் பித்தாலாட்டங்கள்’ காட்டி வருகின்றவர்கள் மீது சந்திரனுக்கு (அல்லது கதைசொல்லிக்கு) கோபம் வருகின்றது. இந்தச் சந்திரன் தீவிரமான போர்சூழலுக்குள் வாழ முயன்றிருந்தால், என்ன காரணம் காட்டியாவது ஈழத்தை விட்டு புலம்பெயரும் பிறரின் சோகத்தை விளங்கிக்கொள்ள முயன்றிருப்பார். ஆனால் அவர்தான் அசல் யாழ்ப்பாணத்தவர் ஆயிற்றே. படிப்பை முன்வைத்து பறந்துவந்துவிடுவார். படிப்பை மூலதனமாக்க முடியாதவர்கள் எப்படித் தப்பியோடிவருவது என சந்திரன் இன்னொரு ஆய்வை இன்னொரு கலாநிதிப் பட்டத்திற்காய்ச் செய்யவேண்டுமெனச் சொல்லவேண்டியிருக்கின்றது.

சந்திரனின் பாத்திரம் ஒரு சராசரி யாழ்ப்பாண அறிவுஜீவியாக வார்க்ப்பட்டதையும், ஆண்மய்ய பார்வையினுடாக நாவல் படைக்கப்பட்டதன் பலவீனங்களையும் மீறி, புலம்பெயர் சூழலை மையமாக கொண்டு இந்நாவல் எழுதப்பட்டதால் கவனத்துக்குரியதாகின்றது. மேலும் நமது சமூகம் எளிதாய்ப் புறக்கணிக்கும் உளவியல் பிரச்சினை என்பது ஏதேனும் ஒருவகையில் குடும்ப வாழ்வைச் சிதைக்கக் காரணமாகக்கூடுமென நாவல் சொல்லவரும் புள்ளி முக்கியமானது.

நமது தமிழ்ச்சமூகத்தில் பெற்றோராகும், ஆண்/பெண் பிறகு, தமது தனிப்பட்ட வாழ்வு குறித்து அக்கறை கொள்ளாதுபோகும் திசைகள் நோக்கி நாம் நமது உரையாடலை வளாத்தெடுக்கவேண்டும். உடலுறவு/தங்களுக்கென தனிப்பட்ட நேரம் ஒதுக்குதல்/தங்களுக்குப் பிடித்ததைச் செய்யாதிருத்தல் போன்றவற்றோடு குழந்தைகளே தமக்கான அனைத்துமென பெற்றோர்கள் மாறும்போது, -மத்தியவயதுகளில் பெற்றோராக இருப்போருக்கு- தமக்கிடையிலான உறவு மீதான சோர்வும்/சலிப்பும் வருவதைத் தடுப்பற்கான மாற்றுவழிகள் குறித்து நிறைய யோசிக்கவேண்டியிருக்கின்றது.

  https://djthamilan.blogspot.com/

உனையே மயல் கொண்டு

எஸ். கிருஸ்ணமூர்த்தி

எஸ். கிருஸ்ணமூர்த்தி

ஊரிலே சிறுவர்கள் நாய், பூனைகளை கல்லால் அடிப்பதை வேடிக்கை பார்த்திருக்கிறேன். அதைத் தடுப்பதற்கு முயற்ச்சியோ அல்லது அவை மீது அனுதாபமோ ஏற்படவில்லை. ஏதோ பிராணிகள் உணர்வற்ற வெறும் ஜடங்கள் என்ற எணணமே மேலோங்கி இருந்தது. டொக்டர் நடேசன் விலங்குகளைப் பற்றி அனுபவக் கட்டுரைகள் பல இங்குள்ள தமிழ் பத்திரிகையில் அடிக்கடி இடம் பெற்றது. அதை வாசித்த போது உணர்வுகள், உணர்ச்சிகள் மட்டுமல்ல அதற்கு ஆசாபாசங்களும் உள்ளன என்பனவற்றை அறிந்து கொண்டேன். அவரது படைப்புக்களை வாசிக்க வாசிக்க விலங்குகளை நேசிக்கத் தொடங்கினேன். விலங்குகள் மட்டுமல்ல அவரது எழுத்துக்களும் என்னை வசீகரித்தது. விலங்குகளின் கதை சொன்ன டொக்டர் நடேசன் மனிதர்களின் உணர்வுகளைப் .பற்றி ஏனையோர் சொல்லத் தயங்கிய, விடயங்களை நாவலாக்கியுள்ளார்; மாறுபட்ட கருப் பொருளை மையமாக்கி புதிய வடிவத்தில் தந்துள்ள நவீனமே உனையே மயல் கொண்டு.

பொதுவாகவே டொக்டர் என்.எஸ். நடேசன் ஏனைய படைப்பாளிகளிடம் இருந்து வேறுபடுகிறார். இவரது முதலாவது நாவலான வண்ணாத்திகுளம் தமிழ் சிங்களக் காதல், சிங்கள இளைஞரின் கிளர்ச்சியான ஜே.வி.பியின் போராட்டம், இனக் கலவரம், தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பம் என பல தளங்களுடாக கதையை நகர்த்தியுள்ளார். இதே போல் இந்த நாவலும் பல தளங்களிலூடாக செல்கின்றது.

கதையின் கரு பைபலோர் டிஸீஸஸ் என்று அழைக்கப்படும் ஒரு மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவளது கணவனுக்கும் இடையிருக்கும் பாலியல் மையமாகக் கொண்டுள்ளது. பாலியல் பிரச்சனையை நாவலாக்குவது கயிற்றில் நடப்பது போன்றது. கதையை நகர்த்தும் போது விரசமில்லாமலும் அதேவேளை ஆபாசம் என்று எல்லாவற்றையும் மூடி வைக்காமல் சரியான அளவில் சொல்ல வேண்டும். இதை கதாசிரியர் அழகாக கையாண்டுள்ளார்;

புலம் பெயர்ந்த நாடாகிய அவுஸ்திரேலியாவின் பிரதான நகரான சிட்னியை களமாகக் கொண்டு நாவல் புனையப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தவர்களது சில படைப்புக்கள் பகைப்புலம் வெளிநாடாக இருந்தாலும் முக்கிய கதாப்பாத்திரங்கள் இலங்கையாராகவோ அல்லது தமிழராகவோ இருக்கும். ஆனால் நாவலில் வரும் ஜூலியாவை வெள்ளைக்காரப் பெண்ணாகப் படைத்துள்ளார் ஆசிரியர். இந்தப் பாத்திரத்திரத்தை ஒரு தமிழ் பெண்ணாக வடிவமைத்திருக்க முடியும். வேற்று இனப்பெண்ணை இந்த பாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்ததன் மூலம் அவர்களது வாழ்க்கை முறைகள் பிரச்சனைகள் என்பவற்றை நாவலில் கொண்டு வந்துள்ளார். இதே போல் சந்திரனுடன் வேலை செய்யும் குண்டல்ராவை ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த பண்ணையார் குடும்பத்திலிருந்து வந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படி, அவுஸ்த்திரேலியா பல்கலாச்சார நாடாக இருப்பதால் காதாப்பாத்திரங்களும் அதற்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும்.

இந்த நாவல் பல பின்னணிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. சந்திரனின் பல்கலைக்கழக் காதல், இனக்கலவரம், இயக்க மோதல்கள், வயதான பெற்றோரின் பிரச்சனை, அவுஸ்த்திரேலியா நடப்புக்கள் இலங்கை இனப்பிரச்சனை எனக் கதை செல்கிறது. சிலவற்றை அழமாகவும், சிலவற்றை மேலோட்டமாகவும் விபரிக்கிறது. புலம்பெயர்ந்த பல படைப்பக்கள் பிரச்சாரத்தன்மையாகவும், ஒருசார்பு அரசியலாகவும் இருக்கின்றன. இங்கேயும் அரசியல் பேசப்படுகிறது. அது போதனையாக இல்லாமல் விவாதமாக இருக்கிறது.

சில இடங்களில் எமது சமுதாயத்தின் குறைபாடுகளை தனக்கே உரித்தான பாணியில் நையாண்டி செய்கிறார். உதாரணத்திற்கு ஒன்று, இலங்கையில் நடக்கும் சண்டை ஏதோ இவர்களது காசிலதான் நடப்பது போலவும், அரசியலில் அக்கறை இல்லாதவர்களை துரோகிகள் என வசைபாடுவதும் இவனுக்கு ஒத்துவரவில்லை சிட்னி வாழ் இலங்கைத் தமிழரிடம் இருந்து அந்நியமாக வாழ்ந்தான். இவனது சொந்தப் பிரச்சனை இலங்கையின் அரசியல்பிரச்சனை போல் சிக்கலாக இருக்கும் போது இவன் என்ன செய்யமுடியும். இன்னொன்று, எங்கள் சமுகத்தில் மனோவியாதிக்காரருக்கு மட்டுமல்ல மனநலமருத்துவர்களுக்கும் நல்ல பெயர்கிடையாது. மனநோயாளர்களை சமூகம் வேண்டாதவர்களாகப் பார்க்கிறது. தாய்தந்தையரால் பராமரிக்கப்படாவிட்டால் பிச்சைக்காரர்களாத்தான் எம்மூரில் வாழ்வார்கள். மனநோயளர்கள் மீது கல் எறிந்து விளையாடும் ஒரு சமூகத்திலிருந்து வந்தவர்கள் நாங்கள்.

இவர் கதை சொல்வதில் கையாண்ட நடை என்னை மிகவும் வசீகரித்துள்ளது. முன்பு சுஜதா இதைக் கையாண்டார். இப்போது முத்துலிங்கத்திடமும் காணப்டுகிறது. நான் சுவைத்த சிலவற்றை பகிர்கிறேன்.

கதவை மூடிவிட்டு ரெலிவிசனை உயிர்ப்பித்தான்.

அடுத்தது, மதுவின் மயக்கத்தில் வார்த்தைகளை சீராகக் கோர்ப்பதில் சிரமம் இருந்தது. போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

வன்செயலினால் மனிதர்கள் இறப்பதும் காயப்படுவதும் ஊடகங்களாலும் தொண்டு நிறுவனங்களாலும் புள்ளி விவரப்படுத்தப்படுகின்றன. வன்முறைகளிலிருந்து உயிர்தப்பியவர்களது மனத்தில் ஏற்பட்ட ரணங்களின் வேதனைகளை எவரும் கண்டுகொள்வதில்லை. எந்த நாட்டில் போர் நடந்தாலும் பாதிக்கப்பை அடைபவர்கள் பெண்கள் என இந்தப் புத்தகத்தைப்பற்றி இதன் ஆசிரியர் டொக்டர் நடேசன் குறிப்பிடுகிறார். இந்தப் பிரச்சனையை நாவலில் இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கலாம்.

இன்னொன்று முக்கியமாக் குறிப்பிடப்பட வேண்டும் புத்தகத்தின் வடிவமைப்பு மிகவும் நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.பொவின் மித்ர வெளியீடா வந்திருக்கும் இந்தப் புத்தகம் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தில் ஓர் புதிய வரவு என்பதில் சந்தேகமில்லை.

உனையே மயல் கொண்டு

பிரியா ராமநாதன்

பொதுவாக நான் நாவல்கள் வாசிப்பதில்லை .. ஆனால் , நேற்று எதேச்சையாய் இந்த நாவல் என் கண்ணில் சிக்கியது . இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து australiaவிற்கு புகலிடம் தேடிச் சென்ற ஒரு ஆணின் பார்வையில் , அவனது உடலின்பம் குறித்த சிக்கல்களையும் அதன் விளைவுகளையும் விபரிக்கும் “உனையே மயல் கொண்டு ” !

நாவல், இரண்டு தளங்களில் இயங்குகிறது . ஓன்று , புகலிடத்தில் உள்ள நிம்மதியற்ற பிழைப்பின் விளைவாக ஏற்ப்படும் மனவெறுமையும் , அதை போக்கிக் கொள்வதற்க்காக பீறிடும் காமம் பற்றியது , இன்னொன்று கணவன் மனைவிக்குள் உடலின்பம் சார்ந்து ஏற்ப்படும் பேசா மௌனமும் அதன் விளைவுகள் பற்றியது. “bipolar disorder ” என்ற ஒரு மனோவியாதியை (மன அழுத்தம்) வைத்தே கதை நகர்த்தப்பட்டிருக்கும் . பல மனிதர்கள் சொல்ல விரும்பாத , சொல்லத் தயங்கும் மன நலப் பிரச்சினைகளும் , அதன் பாதிப்பால்வரும் பாலியலுமே கதைப்பொருள் . பாலியல் உறவுக்கு ஆரோக்கியமான மனநிலை முக்கியம். ஆனால் , மனநலப் பிரச்சினையை எதிர்நோக்கும் ஆணோ , பெண்ணோ தங்களின் பாலியல் தேவைகளை எப்படி இழக்கிறார்கள், உணரும் சக்தியை எப்படி இழக்கிறார்கள் என்பதையும் , தங்களின் பிரச்சினையை புரிந்துகொள்ளாமல் , தங்களுக்குள் ஏதோ ” பிழை ” இருப்பதாக நினைத்து குடிக்கத் தொடங்குவதும் , பிறழ்வான வாழ்வில் தொலைந்துபோவதும் என்று அடுப்பில் இருந்து நழுவி நெருப்பில் வீழ்ந்து அழிந்த கதையாக வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் விபரீதங்களும் நிறைந்த நம் சமூகத்தில் , ஒழுக்கக் கோட்பாடுகள் , கலாசாரத் தடைகள் என்ற பெயரில் காமம் தொடர்பான சொல்லாடல்களை ரகசியமான செயல்பாடாக மாற்றிவைக்காமல் ஆசிரியரின் கதை சொல்லும் திறன் ரசனை !

உனையே மயல் கொண்டு”

சி. செல்வராசா. சிட்னி

நாவலை வாசித்தேன். இது எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. எம்மில் பலருக்கு ஏற்பட்ட பல நிதர்சமான அனுபவங்கள் இந்த நாவலில் இழையோடுவதனால் மிக நெருக்கமாக எம்கதையை நாமே வாசிப்பதுபோல் நாவலை வைக்க மனம் இல்லாமல் வாசித்தேன்.

கதையில் வரும் சந்திரன்- மஞ்சுளா- ஷோபா-ஜூலியா, இராசம்மா-இராசநாயத்தார்- போன்ற கதாபாத்திரங்கள் நாம் அன்றாடம் காணும் மனிதர்கள். அவர்களது எண்ணங்களும், போக்குகளும், செயற்பாடுகளும், பிரச்சனைகளும், மனப்போராட்டங்களும், மன அழுத்தங்களும்இவற்றுக்கிடையே அவர்களின் இல்லறவாழ்வும் இதற்கு அடிப்படையான உடல்உறவு இன்பமும் அதன் பிறழ்வும் எவ்வாறு மனித வாழ்வினை இயக்கிச்செல்கின்றன அல்லது இடறிவிழுத்துகின்றன என்பதை நொய்யல் நடேசன் நல்ல ஒரு நாவலாக எமக்குத் தந்துள்ளார். “வாழ்க்கை என்பது சந்தோசமாக வாழ்வதற்கே! ஆனால் அதிகமானோருக்கு ஏன்எல்லோருக்குமே அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் வாழ்வு இன்பமாக சந்தோசமாக அமைவதில்லை” என்றே நான் கருதுகின்றேன். இதனால் அவரவர் வாழ்வில் ஏற்படும் ஏமாற்றங்கள், தோல்விகள், விரக்திகள் என்பவற்றுக்கு வடிகால் தேடி ஒவ்வொருவரும் தமக்குத்தெரிந்தவகையில் செயற்படுவதே மனித இயல்பு. இதே இந்தக் கதையில் வரும் சந்திரனும் செய்ய முயற்சிக்கின்றான். இது இந்த நாவல் பற்றிய விமர்சனம் அல்ல. ஒரு வாசகனின் மனவோட்டம்.