நாவல்

வண்ணாத்திக்குளம்

அனுஷிராம்

இலங்கை அரசியல் வரலாற்றில் 1980 முதல் 1983 வரையிலான காலம் மிக முக்கியமானது. தமிழர்களுக்கு எதிரான இலங்கை இனவாத அரசின் வன்முறை உச்சத்தைத் தொட்டதும், இதன் காரணமாக ஆயுதம் ஏந்தியதும் இந்தக் காலகட்டத்தில்தான்.

புலிகளின் வளர்ச்சி, தமிழ் இளைஞர்கள் குடும்பங்களை விட்டு இயக்கத்தில் சேர்வது, ஆயுதக் குழுக்களுக்கு இடையே எழுந்த சகோதர யுத்தம், தமிழர்கள் மீதான தாக்குதல், யாழ்ப்பாண நூலகம் எரிப்பு என இலங்கைத் தீவே ரணகளமாக இருந்த நேரமது.

அந்தக் காலகட்டத்தில் ஒரு தமிழ் இளைஞனுக்கும், ஒரு சிங்களப் பெண்ணுக்கும் இடையே மலர்ந்த காதலை அழகான நாவலாக வடித்துள்ளார் டாக்டர் என்.நடேசன். இவர் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர். தொழில் முறையில் இவர் ஒரு மிருக வைத்தியர். தன்னுடைய தொழிலையே நாவலின் கதாநாயகனுக்கும் கொடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்களர்கள் அதிகம் வசிக்கும் மதவாச்சி என்ற இடத்துக்கு மிருக வைத்தியத் தொழில் செய்ய செல்லும் சூரியன்தான் கதையின் நாயகன். தான் தங்கும் விடுதியில் வசிக்கும் ருக்மன் என்ற சிங்கள இளைஞரின் தங்கை சித்ராவை இவர் காதலிப்பதும், அதனையொட்டி நிகழும் சம்பவங்களும் நாவலாக்கப்பட்டுள்ளன.

பிரச்சினைக்குரிய கருத்தைப் பின்புலமாக வைத்துக் கொண்டு, அதில் ஒரு காதலைச் சொல்லுவது இயக்குநர் மணிரத்னத்தின் பாணி. அத்தகைய பாணிக் கதைதான் இது என்றாலும், மணிரத்னத்தை நடேசன் பின்பற்றுகிறார் என்று சொல்லத்தகாது. ஏனெனில் இக் கதையை 15 வருடங்களுக்கு முன்பே தான் எழுதியதாகவும், இதுதான் தன்னுடைய எழுத்துலக அரிச்சுவடி என்றும் நடேசன், என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

வண்ணாத்திக்குளம் இவரது முதல் நாவல் என்பதை, இவரது தற்போதைய படைப்புகளை வாசிக்கும் எவரும் ஒத்துக் கொள்வர். இந்தப் புத்தக்கத்துக்கு சிறப்பான முன்னுரை எழுதிய டி.பி.எஸ்.ஜெயராஜ் குறிப்பிட்டபடி, பிரச்சார நெடி மிகுந்த பாத்திரங்களை உலவ விடக் கூடிய வாய்ப்பினை கதையின் போக்கு ஏற்படுத்திக் கொடுத்தபோதிலும் நடேசன் அதை கவனமாகத் தவிர்த்துள்ளார்.

அதேபோல் இலங்கைப் பிரச்சினையைப் பின்புலமாக வைத்து எழுதும்போது, அதுவும் ஒரு தமிழர் எழுதும்போது, சிங்கள மக்கள் அனைவரையும் இனவாதிகள் என்ற ரீதியில் சித்தரிக்கும் வாய்ப்பிருந்தும் அதையும் கவனமாகத் தவிர்த்துள்ளார். கலவர நேரத்தில் கதாநாயகன் சூரியனுக்கு பல சிங்களர்கள் மனிதாபிமானத்துடன் உதவி செய்வதை கோடிட்டு காட்டுவதன் மூலம் ஒரு சார்பாக இந்த விஷயத்தை இவர் அணுகவில்லை என்பது புலனாகும்.

நாவலில் காதல்தான் பிரதான விஷயம். அதற்கு ஊடாகச் செல்லும் நூலாகத்தான் இலங்கைப் பிரச்சினை உள்ளது. அதனால் ஒரு நல்ல காதல் கதையை வாசித்த திருப்தியைத் தருகிறது வண்ணாத்திக்குளம். காதல் பகுதிகளில் ஆசிரியரின் சிருங்கார ரசம் நயமாக வெளிப்படுகிறது.

அவளுடைய கண்களின் இமைகளாக இரண்டு வண்ணத்திப்பூச்சிகள் ஒட்டப்பட்டிருக்குமோ என நினைத்தேன் என்ற வரியிலும்,

சித்ராவின் வட்டமுகமும், நீளவிழிகளும் சமவெளியில் தழுவிக் கொண்டு சத்தமில்லாமல் ஓடும் ஆற்றின் ஓட்டத்தைப் போல் இருந்தது என்ற வரியிலும் வர்ணனை தன்னளவில் உச்சத்தை எட்டியுள்ளது.

சூரியன் என்ற பாத்திரத்தின் தன்மையில் கதை விவரிக்கப்படுவதால், ஒரு இலங்கைத் தமிழரின் மூன்று ஆண்டுகால சுயசரிதையைப் படித்த உணர்வு ஏற்படுகிறது. நாவல் என்ற கட்டமைப்பிற்கு உண்டான இலக்கணங்கள் இல்லாவிட்டாலும், கதையில் இருக்கும் சத்தியம் அதற்கு உயிரோட்டத்தைக் கொடுத்துவிடுகிறது. பிரச்சினையின் தீவிரத்துக்குள் முழுமையாக நுழையாமல், சூரியனின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து கதை செல்வதில் நாவல் ஆசிரியரின் சாமர்த்தியம் தெரிகிறது.

பிழைகள் அதிகம் இன்றி இதைப் பதிப்பித்திருக்கிறது மித்ர ஆர்ட்ஸ்  கிரியேஷன்ஸ்.

இந் நாவலைப் படிக்கும் எவரும் ஒரு நல்ல காதலை அருகில் இருந்து பார்த்த உணர்வைப் பெறுவது நிச்சயம். அதுதான் ஆசிரியர் டாக்டர் என். நடேனுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

(வண்ணாத்திக்குளம்: டாக்டர் என்.நடேசன், மித்ர ஆர்ட்ஸ்  கிரியேஷன்ஸ், 32ஃ9 ஆற்காடு சாலை, சென்னை24 பக்கங்கள்: 144, விலை ரூ.50)

வண்ணத்திக்குளம்

வ. ந. கிரிதரன்

டாக்டர் என்.நடேசனின் ‘வண்ணாத்திக்குளம்’ மித்ரா பதிப்பகத்தினரால் அழகாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. . நாவலில் அங்காங்கே வண்ணத்திக்குளம் என்றே விபரிக்கப்படுகிறது. அதுவே நல்ல பெயராகவுமிருக்கிறது. இந்நிலையில் எதற்காக வண்ணாத்திக்குளம் என்று நூலின் பெயரை வைக்க வேண்டுமென்பதன் காரணம்தான் புரியவில்லை.

சுவையான நடையில் நகரும் நாவலின் களம் புதிது. வெகு சில படைப்பாளிகளே கைவைத்த கரு. இலங்கை சுந்திரம் பெற்ற காலத்திலிருந்து நாட்டை ஆண்டு வரும் சிங்கள, பௌத்த அரசுகளால் திட்டமிட்ட முறையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு தன் தனித்துவத்தை இழந்த பிரதேசம்தான் வண்ணத்திக்குளமென்று ஒருபோதில் அழைக்கப்பட்ட பதவியாப் பிரதேசம். அத்தகையதொரு பகுதியில் வாழுமொரு சிங்களப் பெண்ணான சித்ராவுடன் நாயகன் சூரியனுக்குக் காதல் அரும்புகிறது. நாவலொரு காதல் கதையாகவிருந்தாலும், மிகவும் நிதானமாக நகர்கிறது. அரசியல் பின்னணியில் நாவல் கூறப்பட்டிருக்கிறது. கதை சொல்லியின் பார்வையில், மற்றவர் பார்வையிலெனப் பல்வேறு பார்வைகள். நாவல் நடைபெறும் காலத்தில் நடைபெறும் இயக்கமொன்றின் மூன்று தாக்குதல்கள் விபரிக்கப்பட்டுள்ளன. அதனத்தொடர்ந்து இடம்பெற்ற ஜூலை 1983 இனக்கலவவரம். இருவேறு இனங்களைச் சேர்ந்த காதல் ஜோடி நாட்டில் வாழ முடியாத நிலையில், அழகான தீவை விட்டே அந்நியதேசத்துக்குப் புறப்படுவதுடன் கதை முடிவுறுகிறது.

இந்நாவலை ஒரு காதல் கதையென்று கூறலாமா? அல்லது அரசியல் நாவலென்று கூறலாமா? அல்லது அரசியல் கலந்த காதல் கதையென்று கூறலாமா?

ஒவ்வொருவர் பார்வையும், முடிவுகளும்  வேறு வேறானவையாகவிருந்த போதிலும், இந்நாவல் இலங்கைத் தீவின் அரசியல் சூழல் பற்றி, அச்சூழல் அத்தீவின் மக்களைப் பாதிப்பது பற்றி விபரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தின் அரசியல் நிகழ்வுகளை ஓரளவு ஆவணப்படுத்துகிறது. 

கதை சொல்லியான சூரியன் ஒரு மிருக வைத்தியர். அவரது பார்வையில் ஆங்காங்கே தீவின் அரசியல் அலசப்படுகிறது. விரிவாகவல்ல, சுருக்கமாக. அதே சமயம் கதை சொல்லி மிருக வைத்தியராகவிருப்பதால் சில சம்பவங்கள் வாசகர்களுக்குப் புதுமையாகவும், சுவையாகவுமிருக்கின்றன. குறிப்பாக யானையொன்றுக்கு மரணபரிசோதனை செய்த அனுபவம். இதனை அவர் ஏற்கனவே சிரியர் தனது ‘வாழும் சுவடுகள்’ நூலிலும் வணப்படுத்தியுள்ளதாக ஞாபகம். அதிலிருந்து நாவல் சிரியரின் சொந்த அனுபவங்களையே சிறிது கற்பனை கலந்து விபரிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆசிரியரின் நடை சரளமானது. சில சம்பவங்கள் நெஞ்சை அள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் பின்வரும் சம்பவம். வவுனியாவில் விமானப்படையினர் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து படைவீரர்கள் தமிழர்களைத் தாக்கத் தொடங்கி விடுகின்றார்கள். அச்சமயம் அந்தக் கலவரச் சூழலில் தமிழனான கதைசொல்லியும், சிங்களப் பெண்ணான அவனது காதலி சித்ராவும் அகப்பட்டு விடுகின்றார்கள். அப்பொழுது நிகழ்ந்த உரையாடலினை ஆசிரியர் பின்வருமாறு விபரிக்கின்றார்:

‘மற்றைய படைவீரர் எங்களை நோக்கி வந்தபடி ‘எங்கே போகிறாய்?’

‘யாழ்ப்பாணம்’

‘தெமிலயோ’ என்றபடி நெஞ்சில் சப்மெஷின் துப்பாக்கி அழுத்தப்பட்டது. 

அப்போது நான் எதிர்பார்க்காமல் சப்மெஷின் துப்பாக்கியை கையால் பிடித்தபடி ‘மகே சுவாமி புருஷய’ என கூறினாள் சித்ரா….’

மேற்படி உரையாலில் வரும் ‘மகே சுவாமி புருஷய’ என்னும் தலைப்பில், அக்கூற்றினை முடிவாக அவைத்து அருமையான சிறுகதையொன்றினைப் படைத்திருக்க முடியும். அந்த அளவுக்கு நெஞ்சைத் தொடும் வகையில் அந்தச் சொற்பதம் அமைந்துள்ளது. அந்தப் பெண்ணின் இனம், மதம் கடந்த காதலை அந்த வார்த்தைகள் அப்படியே உணர்த்திவிடுகின்றன. நடை ஆசிரியரின் பலங்களிலொன்று. மேற்படி நடையில் அதிகமான விபரித்தலுடன், சிந்தனையோட்டத்துடன் கதை நகர்ந்திருக்குமாயின் அது நாவலின் கனத்தினைச் செறிவினை அதிகரித்திருக்கும்.

இந்நாவல் தீவின் அரசியல் நிகழ்வுகளைப் பற்றி ஆங்காங்கே விபரிக்கிறது. ஜே.வி.பியின் நடவடிக்கைகளை ஓரளவு விமரிசனம் செய்கிறது. கதை சொல்லியின் காதலியின் சகோதரன் ஒரு ஜே.வி.பி உறுப்பினன். இலங்கை அரசின் அடக்குமுறைக்குள் ஜே.வி.பியினரும் ஆட்படுவது நாவலில் கோடிட்டுக் காட்டப்படுகிறது. ஜே.வி.பி.யின் இந்திய எதிர்ப்பு வாதம், மலையகத் தமிழர்கள் மீதான நிலைப்பாடுகள், தோட்டத் தொழிலாளர்களின் மீதான வடகிழக்குத் தமிழர்களின் நிலைப்பாடு என்பவை கதை சொல்லியினால் விமரிசனத்துள்ளாக்கப்படுகின்றன. ‘உங்கள் அடிப்படை கொள்கையில் மாற்றம் வேண்டும். அந்த தொழிலாளர்களுக்கு பிரசாஉரிமை வேண்டும் என்றபோது எவரும் வாய் திறக்கவில்லை.  எல்லோருமாக சேர்ந்து இந்தியாவுக்கு அனுப்பப் பார்த்தார்கள். சிங்கள இடது சாரிகள் மட்டுமல்ல, இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களும் ஈடுபட்டார்கள். இதன் மூலம் இலங்கையின் சிங்களத் தொழிலாளர்கள் தங்களது சகோதர தொழிலாளர்களின் பலத்தை இழந்தார்கள். வட, கிழக்கு தமிழர்கள் தமிழ் பேசும் சகோதரகளை இழந்தார்கள்.’ (கதை சொல்லி; பக்கம் 85)

கதைசொல்லி ஜே.வி.பியின் தலைவர் ரோகண விஜேவீராவைச் சந்திக்கும் சந்தர்ப்பமொன்று நாவலில் வருகிறது. அதில் அவர் ஜே.வி.பியின் இந்திய எதிர்ப்பு வாதம், இனவாத நிலைப்பாடு ஆகியவற்றை விமரிசனத்துக்குள்ளாக்குவார். டொன் நந்தசிறி விஜயவீர என்னும் தனது இயற்பெயரை ரோகண விஜயவீர என மாற்றியதனைக் கதைசொல்லி ‘ மார்க்சீச கொள்கைகளை ஏற்றுக் கொண்டு இயக்கத்தை வழி நடத்தும் விஜயவீர அந்தக்கால சிங்கள மன்னர்களின் கீர்த்தனைகளை உயர்த்தி பேசியது அவரது அரசியல் தன்மையை காட்டியது’ என விபரிப்பார். அன்று இந்திய எதிர்ப்பு வாதம் போதித்த ஜே.வி.பி இன்று இந்தியாவின் செல்லப்பிள்ளையாகவும், இனவாதம் அதிகம் மிகுந்ததொரு கட்சியாகவும் மாறியிருக்கிறது காலத்தின் கோலங்களிலொன்று. 

நாவலில் தமிழீழ விடுதலை அமைப்பொன்றின் மூன்று தாக்குதல்கள் விபரிக்கப்பட்டுள்ளன. வவுனியா விமானப்படை வீரர்கள் மீதான தாக்குதல், யாழ் நாச்சிமார் கோயிலடியில் தேர்தல் கூட்டமொன்றில் நிகழ்ந்த தாக்குதல் மற்றும் னைக்கோட்டைப் பொலிஸ் நிலயம் மீதான தாக்குதல் ஆகியவற்றைக் கூறும் நாவல் அவற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட படையினரின் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களையும் கூறும்.  வரலாற்றில் பதிந்து விட்ட யாழ்நூலக எரிப்பு பற்றியும், அதற்குக் காரணமாக அன்றைய ஐக்கியதேசியக் கட்சியின் அமைச்சர்களான காமினி திசாநாயக்க, சிறில் மத்தியூ போன்றவர்கள் அச்சமயம் யாழ்நகரில் இருந்ததையும் நாவல் பதிவு செய்யும்.

தனிநாடு கோரிக்கை பற்றிக் கதை சொல்லி ‘தமிழ் அரசியல்வாதிகள் அவசரப்பட்டு விட்டார்கள்’ என்கின்றார் (பக்கம் 128). யாழ்நகரில் 1983இல் பல தமிழர்கள் துரோகிகளாகக் கொல்லப்பட்டதையும் குறிப்பிடுகிறார். (பக்கம் 129). மிகவும் பெரிதான, சர்ச்சைக்குரிய விடயங்களை ஓரிரு வரிகளில் கூறிவிட்டுக் கதை சொல்லி நகர்ந்து விடுகின்றார். தனிநாட்டுக் கோரிக்கை விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் அவசரப்பட்டு விட்டார்கள் என்று சொல்வதற்கில்லை.  நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும், சிங்களப் பெரும்பான்மை அரசுகளுக்கும் இடையில் நிகழ்ந்த தோல்வியுற்ற பேச்சு வார்த்தைகளும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும், தரபப்டுத்தல் போன்ற பாரபட்சமான கொள்கைகளும்.. இவ்விதமாகப் பல காரணங்களும், நீண்டதொரு வரலாறுமிருக்கையில் தமிழ் அரசியல்வாதிகள் அவசரப்பட்டு விட்டார்களென்று, தன் பக்க நியாயத்தினை மிகவும் தர்க்கபூர்வமாக நிறுவாமல் முடிவாகக் கூறுவது, மற்றும் இது போன்ற கூற்றுக்கள் இந்நாவலையொரு தீவிரமான அரசியல் நாவலென்ற பிரிவுக்குள் அடக்குவதைத் தவிர்த்து விடுகின்றன. ஒரு தீவிரமான அரசியல் நாவலொன்றில் இது போன்ற பிரச்சினைகள் அதிக அளவில் ஆழமாக விபரிக்கப்படவேண்டும் அல்லது பாத்திரங்களின் அன்றாட வாழ்க்கையினூடு புலப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும் துரோகிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதைக் குறிப்பிடும் கதைசொல்லி சிங்களப் படையினர் தமிழ்ப்பகுதிகளில் நடாத்திய படுகொலைகளை, நிலவிய அரசியல் சூழலை, அதன் தீவிரத்தினை விபரிக்கத் தவறிவிட்டார். மேலும் துரோகிகளெனப் பொதுவாகக் கூறுவதன் மூலம் ஆசிரியர், துரோகிகள் பற்றிய விரிவான விளக்கத்தைப் பதிவு செய்யும் சந்தர்ப்பத்தினை இழந்து விட்டார். பலர் அரசியல் ரீதியில் படுகொலை செய்யப்பட்டாலும், சாதாரண களவு போன்ற சமூகவிரோதச் செயல்களை, ஏற்றத்தாழ்வுமிக்க சமுதாய அமைப்பு காரணமாகப் புரிந்த பலர், துரோகிகளாகக் கொல்லப்பட்டதை விரிவாக விபரிக்கும் சந்தர்ப்பத்தினை இதன் மூலம் ஆசிரியர் இழந்து விடுகின்றார்.

ஆனாலும் நாவல் நடையில், கதைக்களனில் , குறிப்பிட்டகாலச் சம்பங்களை ஆவணப்படுத்தலில் குறிப்பிட்டு விளங்குகின்றது. தீவின் முரண்பட்டு நிற்கும் இரு இனங்களைச் சேர்ந்த காதலர்கள், சொந்த மண்ணில் வாழமுடியாத நிலையில் அந்நிய மண்ணை நாடிப் பறப்பதுடன் கதை முடிகிறது.

வண்ணத்திக்குளத்தின் உறவுகள் இலங்கை முழுவதும் விரியுமானால்.. எனக் கதை சொல்லி ஏங்குகிறார். தீவின் முக்கியமான பிரச்சினைகளிலொன்று திட்டமிட்ட குடியேற்றங்கள். அக்குடியேற்றங்களிலொன்றான பதவியாவைக் களமாகக் கொண்டு விரியும் நாவலில் வரும் பல்வேறு இன மாந்தர்கள அனைவரும் பரஸ்பரம் அன்பு கொண்டவர்களாகவும், தீவிரமான பிரச்சினைகளை இனங்கண்டு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அங்கு வாழும் சிங்கள மக்களுக்கே தாங்கள் அத்து மீறிக் குடியேற்றப்பட்டிருந்த விடயம் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. ஒரு காலத்தில் அப்பகுதிக்கு வண்ணத்திக்குளம் என்றொரு பெயர் நிலவியதை அறிந்து வைத்திருக்கின்றார்கள். யாழ் நூலகம் எரிக்கப்பட்டதைக் கேட்டு அங்குள்ள சிங்கள மக்கள் கவலைப்படுகின்றார்கள். இத்தகைய வண்ணத்திக்குளத்தில் வாழும் இரு வேறு சமூகங்களுக்கிடையில் காணப்படும் புரிந்துணர்வும், நம்பிக்கையும், அன்பும் ‘இலங்கை முழுவதும் விரியுமானல்…’ என்று ஏங்கிக்கொண்டே கதை சொல்லி தன் துணையுடன் நாட்டை விட்டே பறக்கின்றார். ஆனால் அவரது ஏக்கம் நிறைவேறுவது அவ்வளவு சுலபமல்ல என்பதைத்தான் 1983இலிருந்து இன்றுவரையிலான காலகட்டம் புலப்படுத்தி நிற்கிறது.

வண்ணாத்திக்குளம்

பாவண்ணன்

நோயல் நடேசன் எழுதிய இக்கதையைப் படித்து முடித்ததும் எங்கள் ஊரான புதுச்சேரியில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வந்தது.  புதுச்சேரியில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புகைவண்டி நிலையத்தை நோக்கிச் செல்லும் கிளைப்பாதையொன்றில் கௌஸ் சுப்பரமணியர் கோயில் என அழைக்கப்படும் முருகர் கோயில் உள்ளது. காலம் காலமாக அந்தக் கோயிலைக் கட்டிக்காத்து வந்த கௌஸ் எனப்படும் முஸ்லிம் பெரியவரின் பெயராலேயே அக்கோயிலும் அழைக்கப்பட்டு வந்தது.

திடீரென கடந்தவாரம் உடல்நலம் குன்றி அவர் மறைந்துவிட்டார்.  இஸ்லாமியரை அடக்கம் செய்யக்கூடிய இடத்தில் அவரது உடலை எடுத்துச்சென்றபோது அவருடைய குடும்பத்தாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வாழும் காலத்தில் அவர் இஸ்லாமிய நெறியைச் சரியான முறையில் பின்பற்றவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டது. இறுதியில் நடந்ததையெல்லாம் ஒரு பிழையாக நினைத்து அப்பிழைக்காக வருந்துவதாக அறிவித்து அக்குடும்பமே மன்னிப்புக் கேட்டபிறகுதான் அடக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கௌஸ் என்கிற தனிமனிதனுடைய மனம் இந்த உலகத்தைப் பார்த்ததற்கும் பழகியதற்கும் அடக்கம் செய்ய மறுத்த மக்கள்கூட்டத்தின் கூட்டுமனம் தனிமனிதனையும் உலகத்தையும் பார்த்ததற்கும் பழகியதற்கும் உள்ள வேறுபாடு அதிர்ச்சியும் அச்சமும்  அளிக்கக்கூடியதாக இருந்தது.

மனம் செயல்படும் விதத்தைப்போன்ற விசித்திரம் வேறெதுவும் உலகில் இல்லை என்பதற்காக இதைக் குறிப்பிட நேர்கிறது.  எந்தப் புள்ளியிலிருந்து எதைநோக்கிப் பறக்கும் அல்லது எங்கே இறங்கும் என்று எந்தவிதமான் கணிப்போடும் மனத்தை அணுகமுடியாது. காற்றைப்போன்றது அதன் இயக்கம். அதற்கென தீர்மானிக்கப்பட்ட திசையெதுவும் இல்லை. இயங்குதல் மட்டுமே அதன் செயல்பாடு. அது இயங்கிக்கொண்டே இருப்பதற்குத் தேவையான சக்தியை அதன் கலாச்சாரம் வாரி வழங்குகிறது. அதைக் கண்காணிக்கும் அல்லது கட்டுப்படுத்தும் காவலனாக இருக்கும் சக்தியும் கலாச்சாரமேயாகும்.

தொடர்ந்து ஒருவருடைய செயல்பாடுகளையும் பேச்சையும் கவனிக்கும்போது ஓரளவு அவர் மனம் பயணிக்கிற திசையையும் எண்ண அலைவரிசைகளையும் அறிந்துகொள்ள முடியும். ஆனால் அதே மனிதர் மற்ற சக மனிதர்களுடன் இணைந்து கூட்டாக இயங்கி ஈடுபடும் செயல்களுக்கும் தனிப்பட்ட நிலையில் அவர் புரியும் செயல்பாடுகளுக்கும் துரதிருஷ்டவசமாக எவ்விதமான தொடர்பையும் உருவாக்க இயலாமல் போய்விடுகிறது. 

கல்லு¡ரியில் ஓரளவு நல்ல மதிப்பெண்களோடும் நல்ல ஒழுக்கத்தோடும் நடந்துகொள்ளும் மாணவன், மாணவர் பட்டாளத்துக்குள் ஒருவனாக மாறும்போது நடுத்தெருவில் ஓடுகிற பேருந்தை நிறுத்தி தீவைத்துக் கொளுத்தும் செயலைத் துணிச்சலாகச் செய்பவனாக மாறுவது எப்படி? எந்தவிதமான வம்புப்பேச்சிலும் ஈடுபடாத ஒரு அப்பாவியுடைய நெஞ்சில் உறங்கும் ஏதோ ஓர் உணர்வைத் து¡ண்டிவிட்டதும் கும்பலில் ஒருவனாக மாறிக் கற்களைவீசித் தாக்கும் ஆளாக உருமாறுவது எப்படி? எதன் அடிப்படையில் நிகழ்கிறது இந்த மாற்றம்? மனிதமனத்தின் தனிப்பட்ட இயக்கத்துக்கும் சமுகமனத்தின் கூட்டு இயக்கத்துக்கும் இடையே ஏன் இந்த முரண்பாடு  உருவாகிறது? 

ஒரு மனிதனுடைய மனற்றலையும் குணநலன்களையும் ஒரு குறிப்பிட்ட சதவீத அளவாக நினைத்துக்கொண்டோம் என்றால் நு¡று மனிதர்கள் கூடிஇயங்குகிற ஒரு சமுகத்தின் மனற்றலும் குணநலன்களும் அக்குறிப்பிட்ட சதவீத அளவின் நு¡று மடங்காக இருப்பதுதானே தர்க்கப்படி சரியாக இருக்க முடியும். ஆனால் அத்தர்க்கம் ஏன் ஒவ்வொருமுறையும் செல்லுபடியாகாமல் போகிறது? தனிப்பட்ட மனிதனுக்கு இல்லாத ஒரு வலிமை ஒரு கூட்டத்துக்கு இடையே நிற்கும்போது அபரிமிதமாகப் பொங்கிப் பிரவகிக்கத் தொடங்குகிறது. கட்டுப்பாடற்ற அந்த ராட்சச வலிமை தனிப்பட்ட நெறிகளையோ எண்ணங்களையோ சற்றும் மதிக்காமல் வேறொரு திசையில் இழுத்துச் சென்றுவிடுகிறது. கட்டுப்பாடற்ற இச்சமுகவலிமை  அழிவுக்கே வித்திடுகிறது. இந்த வலிமைதான், தனியாக இருக்கும்போது ஒரு நியாயம், கூட்டாக இருக்கும்போது இன்னொரு நியாயம் என்று சகஜமாக எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது.

தனிமனிதனுடைய மனத்துக்குப் பழகிப்போன கண்ணியத்தையோ மதிப்பீடுகளையோ சமுகமனிதர்களின் மனத்துக்குள் செலுத்த முடியாமல் போயிருப்பதுதான் நம் மிகப்பெரிய தோல்விக்குக் காரணம். உலகெங்கும் உருவாகியிருக்கிற போர்களுக்கும் பிரிவினைகளுக்கும் மரணங்களுக்கும் அழிவுகளுக்கும் இத்தோல்விதான் காரணம்.  குருஷேத்திரப்போரின் காலத்திலிருந்து தொடர்ந்து ;சமுகமேடையில் இத்தகு தோல்விகளே  அரங்கேறி வருகின்றன.

சிங்களர் தமிழர் பிரிவினையை ஒட்டி யோசிக்கும்போது இந்த எண்ணங்கள் அலையலையாக எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு சிங்களப்பெண்ணை ஒரு தமிழன் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதில் தொடக்கத்தில் சில பிரச்சனைகள் இருந்தாலும் இறுதியில் இருவருக்கிடையேயும் திருமணம் சாத்தியமாகிறது. தன்னைப் புரிந்துகொள்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் ஒருவர் மற்றொருவருக்கு வழங்குவதில் யாருக்கும் எந்தத்தடையும் இல்லை. ஒரு தமிழன் சகஜமாக சிங்களநண்பனுடைய வீட்டுக்கு விருந்துண்ணச் செல்கிறான். சிங்களப்பெண் தமிழன்வீட்டில் வந்து புட்டும் மீன்குழம்பும் சாப்பிட்டுப்போகிறாள். தமிழர்கள் பாணியில் புடவை அணிந்துகொள்கிறாள். பேருந்து நிலையத்தில் எதிர்பாராத விதமாக உருவாகிற கலவரத்தில் அகப்பட்டு அவதியுறும் நேரத்தில் தன் கணவன் என்று சொல்லி ஒரு தமிழனைச் சிங்களப்பெண் காப்பாற்றுகிறாள். சிங்கள முரடர்களிடமிருந்து தப்பிக்க ஒரு சிங்களக் குடும்பமே தமிழனுக்கும் சிங்களப்பெண்ணுக்கும் அடைக்கலம் தருகிறது. பாதுகாப்புக்குத் துப்பாக்கியும் தருகிறது.

தனிப்பட்ட அளவில் எல்லாருமே நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சமுகமாக மாறும்போது அவர்கள் பார்வையும் செயல்பாடும் நம்பிக்கைகளும் வர்களிடமிருந்து முற்றிலுமாக வேறுபட்டுவிடுகின்றன. இருவர் பக்கங்களிலும் அவநம்பிக்கையே எஞ்சுகிறது. தம் தரப்பில் நிகழ்ந்த இழப்புகளையும் புண்களையும் நினைத்து நினைத்து உறுமி ஆத்திரம்கொண்டு பழிவாங்கத் துடிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் இன்னொருவரை அழிப்பதே இறுதி லட்சியமாகிவிடுகிறது. அனைவரையும் அழித்து விட்டுச் சுடுகாட்டுமண்ணை உரமாக்கி நாம் எதைப் பயிரிடப்போகிறோம் என்பது புரியவில்லை.

இந்த தர்க்;கங்களை மனம் அசைபோட இந்த நெடுங்கதை து¡ண்டுகிறது. மிக எளிய கதையே இது. சிங்களப்பெண்ணுக்கும் தமிழனுக்கும் இடையே உருவாகும் காதலும் திருமணமும் உயிர்ப்பற்றினால் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணத்தின் தொடக்கமும் என்கிற அளவில் உள்ள கதை. பின்னணியில் இனக்கலவரங்களால் ஏற்பட்ட இழப்புகளின் அடையாளங்கள் அங்கங்கே நிலைநிறுத்தப்படுகின்றன. முக்கியமாக யாழ்ப்பாண நு¡லக எரிப்பு குறைந்த வார்த்தைகளில் ஆற்றலுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட அளவில் தமிழனுக்கு ஆதரவு தருவதில் சிங்களன் மனத்துக்கும் சிங்களனுக்கு ஆதரவு தருவதில் தமிழன் மனத்துக்கும்  எவ்விதமான தடையும் உருவாகவில்லை. ஆனால் கூட்டுநிலையில் அது ஏன் சாத்தியப்படவில்லை என்கிற கேள்வியை இக்கதை மறைமுகமாக ஒருவிதமான குழந்தைமையுடன் முன்வைக்கிறது. இக்கேள்வி பல தளங்களிலும் ஒரு நாவலுக்கே உரிய விதத்தில் கூர்மையான விவாதங்களாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதுதான் மிகப்பெரிய குறை.  ஆனால் ஒரு ராட்சசனின் முன்னால் சென்று அச்சமின்றிச் சிரித்துக் கேள்வி கேட்கிற குழந்தையைப்போல கேள்விகேட்கிற ஒரு கலைஞனுடைய கேள்வியை எப்படி உதாசீனப்படுத்தமுடியும்?

வண்ணாத்திக்குளம்

 டாக்டர் நடேசன் எழுதிய ‘ வண்ணாத்திக்குளம் நாவலைப்படித்ததும், நீண்ட காலமாகத் தொடரும் 

இராஜேஸ் பாலா

 அனல் வெயிலிலிருந்து காப்பாற்ற குழிர்ந்த நீர்வீழ்ச்சி தலையிற் கொட்டிய புத்துணர்வு வந்தது.

  இங்கு குறிப்பிடப்பட்ட அனற் காற்று லண்டனில் கொதிக்கும் வெயிலை முன்படுத்தி எழுதப்பட்டதல்ல.

 கடந்த சில வருடங்களாக இலக்கியம் என்ற பெயரிலும், ஊடகக் கருத்துக்கள் என்ற பெயரிலும் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியாகும் விடயங்களைப் பற்றிய தாக்கத்தின் வெளிப்பாடுதான் இந்த அனல் வெயில் உவமேயம்.

இன்றைய புலம் பெயர்ந்த பல இலக்கியங்களைப் படிக்கும்போது,  ஒரு குறிப்பிட்ட இலக்கிக்கியத்தைப் படைக்கும் எழுத்தாளனின் சிந்தனை நேர்மை,சமுதாயக்கடமை,எதிர்காலச் சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள், அரசியற் தெளிவு என்பன இருக்கின்றனவா என்ற எதிர்பார்ப்புக்கள் தவிர்க்கமுடியாதவை.

இலக்கியம் என்பது ஒரு சமுதாயத்தின் சரித்திரத்துடன் பின்னிப் பிணைந்தது.

 இலக்கியப்படைப்புக்கள் மூலம் அப்படைப்பு பரிணமித்த காலகட்டத்தில், அக்கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் கலை கலாச்சாரம், பழக்கவழக்கங்கள்,பண்பாடு எப்படியிருந்தன என்பன பற்றி அடுத்த தலைமுறை அறிந்து கொள்கிறது. அவை மட்டுமல்லாது, சொந்த உறவுகளுக்குள்ளும், அவர்களின் வாழ்க்கையோடு தொடர்புள்ள மற்ற வித்தியாசமான மொழிகலாச்சாரங்களைக் கொண்ட மக்களுக்கிடையிலுமிருந்த தொடர்புகளையும் உறவுகளையும் இலக்கியங்கள்  வெளிப்படுத்துகின்றன.

 தமிழர்கள் மட்டுமல்லாது எந்த இன மக்களினதும் கடந்த கால வாழ்க்கைமுறைகள் அந்தக் கலாச்சாரத்தச் சேர்ந்த எழுத்தாளனால், சிற்பியால், கவிஞனால் அவர்களின் படைப்புக்கள் மூலம் நித்தியமாக்கப்படுகின்றன.

 எழுத்தாளர் நடேசன் தனது சிறு நாவலின் மூலம் இலங்கைத் தமிழரின் வாழ்க்கையில் ‘ தமிழர் விடுதலை’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட விடயங்களையும் அதனாற் சாதாரண சிங்கள் தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத மாற்றங்களையும் மிகவும் யதார்த்தமாகச் சொல்கிறார்.

 புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் இதுவரையும் பல நாவல்களைப்படைத்திருக்கிறார்கள். ஏன் புலம் பெயர்ந்தார்கள்? என்ன அடிப்படையில் அந்த புலம் பெயர்வு நடந்தது என்றெல்லாம் பல கோணங்களிற் பல படைப்புக்கள் வந்திருக்கின்றன.

பெரும்பாலானவர்கள் , தாங்கள் பிறந்த நாட்டைவிட்டு நாடோடியாக ஓட வேண்டியதை மிகவும் துன்பநிகழ்ச்சியாக எழுதியிருக்கிறார்கள்.

 ஒரு சிலரின் எழுத்தில் தன்னை ஓடப்பண்ணிய காரணங்கள் இன்னும் ஒருதரம் வராத ஒரு சூழ்நிலை வரவேண்டும் என்ற நப்பாசை தெரிகிறது. ஒரு சிலர் , தங்களை நாட்டை விட்டோடக்காரணமாகவிருந்த சிங்களப்பேரினவாததைப் பழிவாங்கவேண்டும் என்று தங்கள் எழுத்துக்கள் மூலம் குமுறுவார்கள்.

நடேசனின் எழுத்தில் எந்தவிதமான பழிவாங்கல் குமுறல்களோ அல்லது தன்னைப்பற்றிய தனிப்பட்ட பொருமல்களோ கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலையால் புலம் பெயரும் ஒருத்தனின் மன நிலையையும் அந்த சூழ்நிலை எப்படி வளர்ந்தது என்பது பற்றியும் ஒரு தனி மனித நோக்கில் எழுதியிருக்கிறார். அந்த எழுத்தின் வலிமை என்னவென்றால் தமிழ் இனத்தின் விடுதலைக்காக் என்று சொல்லிக்கொண்டு பத்திரிகைகளிற் கொட்டப்படும்  வண்டிக்கணக்கான இலட்சக்கணக்கான சிங்கள இனத்துவேச குப்பைகளைத் தாண்டிக்கொண்டு இவரின் நாவல் இலங்கையிலுள்ள அத்தனை மக்களுக்கும் விடுதலை வேண்டும் என்பதை இலங்கைவாழ் பல்லின மக்களின் வாழ்க்கை மூலம் காட்டுகிறார்.

 சூரியா என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மத்திய வர்க்கத்து மிருவைத்தியருக்கும் சித்திரா என்ற சிங்கள ஏழை ஆசிரியைக்கும் உண்டான காதலும் அவர்கள் திருமணம் செய்து கொண்டதும் மட்டும் இந்த நாவலின் கருத்தல்ல. இளம் காதலர்களைப் பின்னணியாக வைத்துக்கொண்டு இலங்கையில்- முக்கியமாக யாழ்ப்பாணத்திலும் பதவியா போன்ற சிங்கள ஏழைமக்கள் வாழும் குடியேற்ற இடங்களிலும் நடந்த வாழ்க்கை மாற்றங்களை மூன்றாம் மனிதனாகச் சொல்லிக் கொண்டு போகிறார்.

 தனது சுயசரிதத்தை எழுதுவதுபோல் இந்த நாவலை எழுதியிருந்தாலும் சிங்கள- தமிழ் இளம் தலைமுறைகள் எப்படி இலங்கை அரசியற் போக்கை மாற்ற நினைக்கிறார்கள் அவர்கள் நினைப்பதற்கு என்னென்ன அரசியல் போக்குகள் காரணிகளாகவிருக்கின்றன என்று  தனது அளந்தெடுத்த மட்டுமட்டான வார்த்தைகள் மூலம் தெளிவாகச் சொல்லிக் கொண்டுபோகிறார்.

 நாவலின் சுருக்கம்:

 இருபத்தந்து வயதுள்ள சூர்யா என்ற யாழ்ப்பாணத்து ( நைனாதீவைச்சேர்ந்தவர்) மிருகவைத்தியர் ஒருவர் மதவாச்சிக்கருகிலுள்ள பதவியாக்( வண்ணாத்திக்குளம்) குடியேற்றப்பகுதிக்கு உத்தியோகம் பார்க்கப்போகிறார். சிங்களச் சினேகிதனின் அழகிய தங்கையில் காதல் வருகிறது. தாய் தகப்பனுக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் அவர்கள் தங்களின் மகனின் சந்தோசத்துக்காக எதையும் விட்டுக்கொடுப்பார்கள் என்று புரிந்து கொண்டவர்.

 தனது உத்தியோக நிமித்தமாக,அதிகாலையில் மதவாச்சிச் சந்தியில் றெயினிலிருந்து இறங்குவதுடன் நாவல் தொடங்குகிறது. அந்த நிமிடத்திலிருந்து அரசியற் சூழ்நிலைகளின் மாற்றத்தால் விமானம் ஏறும் வரை அவருடன் வாசகர்களாகிய நாங்களும் பதவியா, வன்னி, அனுராதபுரம், யாழ்ப்பாணம், நைனாதீவு என்று பலமிடங்களுக்குப் போய்ப் பல மனிதர்களைச்சந்திக்கிறோம். இவர் நாவலில் வரும் அத்தனை மனிதர்களும் இரத்தமும் தசையுமுள்ள நடமாடும் மனிதர்கள், ஒரு கற்பனாவாதி எழுத்தாளினின் செயற்கைப் பாத்திரங்களல்லர்.

 நாவல் ஆசிரியர் தனது நாவலில் தனது பாத்திரங்கஎப்படிக் காண்கிறார் என்பதற்கு இந்த நாவலுக்கு முன்னுரை எழுதிய பிரபல எழுத்தாளர் டி.எஸ். பி. ஜெயராஜ் பின்வருமாறு சொல்கிறார்.

”சமகால அரசியல் சூழலில், ஆதிக்கம் செலுத்துகின்ற அரசியல் போக்குகளும் நெறிகளும் எத்திசையிற் சென்றாலும்,சாதாரணமக்களிடம் அவர்கள் எந்த இனமாகவிருந்தாலும்சரி, அடிப்படை மனித நேயமும் உத்தம குணங்களுமே நிறைந்திருப்பதை நடேசன் நன்குணர்ந்திருப்பதுடன் நன்றாக உணர்த்தியுமுள்ளார்”

நாவல் ஆசிரியர், தமிழ், சிங்கள இளம் தலைமுறையினர் இன்றைய அரசியற் பிரச்சினகளை எப்படிப்பார்க்கிறார்கள் என்பதைப் பின்வரும் சம்பாசணைகள் மூலம் தொடுகிறார்.

”நாட்டைப்பிரிக்க முடியும் என்றோ,நாட்டைப்பிரித்தால் தமிழர் பிரச்சினை தீரும் என்றோ நான் நினைக்கவில்லை. ஆனால் பண்டார, இந்த நாட்டை தொடர்ச்சியாக ஆண்டுவந்த சிங்களக்கட்சிகள்தான் இன்றைய அவலங்கள் முழுவற்கும் பொறுபேற்க வேண்டும்” என்று தனது கதாநாயன் வார்த்தைகள் மூலம் தனது கருத்தைச்சொல்கிறார் ஆசிரியர் .

 ஆனால், 40ம் ஆண்டுகளிற் தமிழ்த் தலைவர்கள் தமிழர்களின் முன்னேற்றத்திற்காக என்ன செய்தார்கள் என்பதைச் சொல்லவில்லை. நாவலின் ஒரு இடத்தில் இந்தியத்தமிழர்களைப் இலங்கைப் பிரஜாவுரிமையற்றவர்களாக்கியதால் அவர்கள் இலங்கைச் சிங்களத் தொழிலாளர்களுடன் சேர்ந்து அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவது தவிர்க்கப்பட்டது என்று மேலெழுந்தவாரியாகச் சொல்லப்படுகிறது.

 ஆனால் ஜி.ஜி. பொன்னம்பலம் சிங்களப் பெரும்பான்மை மக்களிடம் சிறுபான்மைத் தமிழருக்கு 50க்கு 50 வீதம்  பாராளுமன்றப்பிரதி நிதித்துவம் கேட்டதுதான் சிங்கள இனம் தமிழர்களை’ வைக்கவேண்டிய இடத்தில்’ வைக்கவேண்டும் என்ற சிங்கள தேசிய( இனவெறி?) உணர்வைக்கொண்டு வந்தது என்பதையும் வரலாறு தெரிந்து  கொள்ள வேண்டியவர்களுக்குச் சொல்லவேண்டும்.

 இந்த நாவல் 1980-83 காலப்பகுதியில் நடந்ததாக ஆசிரியர் சொல்கிறார்.

 அந்தக்கால கட்டத்தில், 1977ம் ஆண்டு இனக்கலவரத்தையடுத்து  இலங்கையில் தமிழர்களுக்கிடையிலும் சிங்களவகளுக்கிடையிலும் இருந்த உறவில் பெரியதொரு இடைவெளி பிறந்தது. ஆனாலும் இந்த நாவலின் கதாநாயகன் சிங்களப்பகுதிக்குப் போனபோது இவர் ஒரு தமிழன் என்பதால் அந்த ஊர் மக்கள் இன விரோதத்துடன் நடத்தவில்லை என்பதைக் கதையோட்டத்துடன் சொல்கிறார். அதற்குக்காரணம் அவரும் தன்னை ஒரு இலங்கைப்பிரஜையாகப் பார்த்துத்து அவரது  உறவைத்தனுடன் வேலைசெய்யும் சகாக்களுடன் தொடர்கிறார். அவர்களிற் சிலர் ஜே.வி.பியினராகவிருந்ததையும் அவருடன் தொடர்பாகவிருந்ததால் தனக்கும் பிரச்சினை வரக் கூடிய கட்டமிருந்தது என்று அக்காலகட்டத்தில் சிங்கள இளைஞர்களை அரசாங்கம் எப்படிக்கண்காணித்தது என்று எழுதிகிறார்.

 தமிழ்ப் பகுதிகளில் 1980ம் ண்டு முற்பகுதியிலேயே ‘ ஈழம் கேட்டுப் போராடும் பெடியன்கள்’ எப்படிச் சமுதாயத் துரோகிகளைக்கொலை செய்து மற்றவர்களுக்குப் பாடம் புகட்டும் தோரணையில் கொலைசெய்யப்பட்ட துரோகிகளைக் கம்பத்தில் கட்டிவைத்தார்கள் என்று சில சம்பவங்களை ஆங்காங்கே விபரிக்கிறார்.

 25 ண்டுகளுக்குப்பின்னும் தமிழ்ப்பகுதியில்’ துரோகிகளின்(??) மரணங்கள் இன்னும் தொடர்கிறது என்பது எங்கள் விடுதலைப் போராட்டத்தின் ‘வளர்ச்சியைப்படம்’ பிடித்துக்காட்டுகிறது.

இலங்கை அரசியல் எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் லஞ்சத்தில் வாழ்கிறது என்பதைப்பல இடங்களில் எடுத்துக்காட்டுகிறார்.

விவசாய வளர்ச்சிக்கு வசதியற்ற நிலப்பரப்பில் வாழும் யாழ்ப்பாணத்து மக்கள் தங்கள் வாழ்க்கைக்குக் கல்வியை நம்பியிருப்பவர்கள். அந்தக் கல்வியின்  மேம்பாட்டுக்குப் பிரச்சினை வந்தபோது ( தரப்படுத்தப்படல்) அவர்களின் வாழ்க்கையின் நடக்கும் அரசியல் பொருளாதார மாற்றங்கள் எப்படி இலங்கை அரசியலையே மாற்றிவிடப் பண்ணியது என்பது இவர் நாவலைப் படிக்கும் இளம் தலைமுறையினர் தெளிவாகப் புரிந்து கொள்வர்.

தங்கள் வாழ்க்கையை ஓட்ட நாங்கள் எப்போதும் எங்கேயோ இடம் பெயர்வர்களாக்விருக்கிறோம் . முதலில் கொழும்பிலும் இப்போது அயல்நாடுகளுக்கும் அலைகிறோம், என்பதை உருக்கத்துடன் இவர் நாவல் பிரதிபலைக்கிறது

மக்களின்  பிரச்சினைக்கு அரசியல்வாதிகள் ஒருநாளும் ஒன்றும் செய்யப்போவதில்லை அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக்ச் சாதாரண தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதைப் பின்வரும் வசனங்கள் மூலம் சொல்கிறார்.

”..எந்தக்காலத்திலும் நான் அரசியல்வாதிகளச் சந்தித்ததோ பேசியதோ,கிடையாது.பேராதனைப்பல்கலைக்கழகத்தில் சக மாணவர்களிடம் பேசிய அரசியல் மட்டும்தான்.யாழ்ப்பாணத்தில்லரசியற் கூட்டங்களுக்குச் சிறுவயதில் சென்றபோது அவர்கள் பேச்சுக்களைக்கேட்டு இருக்கிறேன். வயது வந்ததும் அந்தப் பேச்சுக்களின் போலித்தனங்கள், சந்தர்ப்பவாதங்களும் புரிந்தபின் நல்ல அபிப்பிராயம் ஏற்படவில்லை.னால் என்னால் அரசியலை வெறுக்க முடியவில்லை.இதைவிட மிகவும் கவனமாக உள்நாட்டு வெளிநாட்டு அரசியலைக்கவனித்து வந்தேன். என்னோடு படித்த சிலருக்கு இலங்கை எந்த வருடம் சுதந்திரம் அடைந்தது என்றுகூட சரியாகத் தெரியாது”(பக்கம் 54).

 இவரது நாவல் என்ன சொல்கிறது? சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்லியிருக்கிறாரா என்று சில விமர்சகர்கள் வினவலாம்.

 அரசியலால் பிரிக்கமுடியாத மனித உறவின் பிணைப்புக்களையும் அந்த உறவுகளுக்கு வரும் சோதனைகளையும் இவர் தனது நாவல்மூலம் சொல்ல வருகிறார். சொல்ல வந்ததை நேர்மையாகக் கோர்த்திருக்கிறார். ஒரு கலைஞன் தனது அனுபங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தன்னால் முடிந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறான். ஒரு நாவலாசிரியன் தனது உள்ளத்துக் கற்பனையை, உள்ளார்ந்த உண்மையை வார்த்தைகளால் வண்ணம் சேர்க்கிறான். மனசுத்தியற்ற படைப்பாளியால் நல்ல படைப்புக்களப் படைக்க முடியாது.

 அந்தப்படைப்பாளியின் ஆதிமூல உறவுகள், அனுபவங்கள், படிப்பு, என்பன அவனது படைப்பில் முக்கிய இடத்தைப்பெறுகிறது. நடேசனின் மனித நேயம் பற்றிய கோட்பாடுகள் அவர் எழுத்துக்களுக்கு மகுடம் சூடுகின்றன.

சாதாரண மக்களைப் பிரித்துவைக்கும் இனவாத அரசியல், சீதனம் என்ற பெயரில் மனிதர்களை விலைபேசுதல் என்ற குரூரமான ஆசைகளுக்கு  அப்பாற்பட்ட ஒரு மனிதநேயமுள்ள குடுமபப் பின்னணியிலில் பிறந்து வளர்ந்த அதிர்ஷ்டசாலியிவர்.அதை இவரின் கதாநாயகன் மூலம் நாங்கள் தெரிந்து கொள்கிறோம். கதாநாயகனின் தகப்பன் மூலம் இவரின் இந்த அருமையான நாவலுக்கு  விதையிட்ட  மூலஸ்தானத்தை நாங்களும் தரிசிக்கிறோம் அது அவரின்  பெற்றோர்கள்.

”…. படிச்ச முட்டாள், நான் மற்ற தகப்பன் மாதிரி  சீதனம் வேண்டுமென்றோ குறந்த பட்சமாக நாங்கள் பார்த்துப்பேசிய பெண்ணைத்தான் நீ மணக்க வேண்டும் என்றோ எதிர்பார்க்கவில்லை எதிர்காலத்தில் நீ நிம்மதியாக இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்” (பக்கம்78) இப்படித் தகப்பனுக்குப் பிறந்த மகனாற்தான்  சூரியா போன்ற கதாநாயகர்களைப் படைக்கமுடியும்.

அந்தக் கதாநாயகன், அரசியல் என்றபெயரில் சாதாரண தமிழர்கள் பகடைக்காய்களாவது பற்றித் துக்கப்படுகிறான்.

தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க ஆயுதங்கள் எடுப்பதாலும், ஆயுதங்கள் எடுத்தவர்கள் தங்களுக்குல் பிரிவுபட்டு அடித்துக் கொள்வதால் நடக்கும் மனித அழிவுகள் பற்றியும் துக்கப்படுகிறான்.

”… தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் தமிழரசுக்கட்சியும ;ஒருவரை ஒருத்தர் எதிர்த்தபோது அதிக ஆள் சேதமில்லை.ஒருவரது கூட்டத்திற்கு கல்லெறிந்து குழப்புவது, துரோகிகள் என்று வாயால் திட்டுவதும்தான். ஆனா¡ல் ஆயுதங்களை ஏந்தியவர்கள் பிளவுபடும்போது நிலமை மோசமடையும்” (பக்கம் 90).

”… ” எனக்குத் தெரிந்தவரை இலங்கையில் எல்லோரும் மனிதத் தன்மையைஇழந்து கொண்டிருக்கிறார்கள்” (பக்கம் 102) இப்படித் தனது தங்கத்தைப்பல இடங்களில் வெளிப்படுத்துகிறார்.

1983ம் ஆண்டுக்கலவரத்தின் பின் பிறந்த நாட்டைவிட்டு அந்நியனாய் வெளியேறுபோது அவர்படும் துக்கத்தைப் பல புலம் பெய்ர்ந்த தமிழர்கள் அனுபவித்திருப்பார்கள்.

 இப்படி அல்லற் படும் தமிழரின் கதி என்ன என்ற கேள்விக்கு அவரின் ஒரு கூற்றை முன்வைக்கலாம்.

”தமிழ் அரசியல்வாதிகள் அவசர்ப்பட்டு விட்டார்கள் என்பது மட்டுமல்ல தாங்கள் வைத்த திட்டத்திற்கு எந்த அத்திவாரமும் இல்லாமல் இறங்கிவிட்டார்கள். இவர்களது செயல், ஓடும் வண்டியில் கண்டக்டர் எம்மை அடித்து விட்டாலோ திட்டிவிட்டாலோ வாக்குவாததில் ஈடுபட்டு  வண்டியில் இருந்து குதிப்பது மட்டுமல்லாமல் குடும்பத்தையே குதிக்கச் செய்கிற குடும்பத்தலைவரின் பொறுப்பற்ற செயலைப்போன்றது என்றும் விளங்கிக் கொண்டேன்” (பக்கம் 128)

 அரசியல்வாதிகள் மக்களைத் தங்களின் சுய இலாபத்திற்குப் பணயம் வைத்துக் கொடுமைகளைச் செய்யும்போது அதைத் தட்டிக்கேட்பது மனித நேயத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் அத்தனை மனிதர்களினதும் கடமை என நினைக்கிறேன். அத மிகவும் திறமையாகத் தனது நாவல் மூலம் செய்திருக்கிறார் ”வண்ணாத்திகுளம்” என்ற நாவலைப் படைத்த சிரியர் டாக்டர் நடேசன். ந்ல்லதொரு நாவல் வெளிவந்திருக்கிறது. தமிழ் வாசகர்கள் பெருமைப்படவேண்டிய விடயம். படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் ஒரு நல்ல  படைப்பு ”வண்ணாத்திக்குளம்”.

வண்ணாத்திக்குளம்

சுமதி ரூபன்

 ‘வண்ணாத்திக்குளம்’ குறுநாவல் 80-83ம் ஆண்டுகளில் எமது நாட்டுப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த குறுநாவல் காதலைச் சொல்கிறதா? இல்லைஅரசியலைச் சொல்கிறதா? என்று விமர்சகர்கள் கொஞ்சம் தடுமாறினார்கள். எதைச் சொல்ல வருகிறது என்பதை கதை சொல்லி வாசகர்களுக்கு அடையாளப்படுத்ம் தேவை என்ன என்பது எனக்குப் புரியவில்ல. காதலும் அரசியலும் எல்லோர் வாழ்க்கையிலும் பின்னிப் பிணந்த ஒன்று. முக்கியமாக எமது நாட்டில் அரசியலின் பாதிப்பு என்பது எல்லா மக்களுக்கும் பொதுவாகிப்போய் விட்ட ஒரு விடயம். எனவே எந்தப்படைப்பாயினும் அரசியல் காதல் என்பதிலிருநது எந்த ஒரு படைப்பாளியும் தப்பிவிட முடியாது.

வண்ணாத்திக்குளம் சூரியன் எனும் ஒரு தமிழ் இளைஞனின் ஒரு குறிப்பிட்ட காலததைக் குறித்து   நிற்கின்றது. கதை சொல்லி கனமான ஒரு கருவை எடுத்து, கனமான பல தளங்கள இணைத்து ஒரு கனமற்ற குறுநாவலை வாசகர்களுக்குப் படைத்துள்ளார் என்பது எனது சுருக்கமான விமர்சனம். எந்த ஒரு விடயத்தயும் கதை சொல்லி ஆழமாகப் பார்க்கவில்லை. தனது மனதிற்குள் ஆழமாக வடிவமைதது; விட்டு எழுதும் போது மேலோட்டமாக வடித்விட்டாரோ என்ற அச்சம் எனக்குள்.. அதே வேளை தான் மனக்குள் வடித்த அந்த ஆழமாக கதைவடிவம் வாசகர்கள் படிக்கும் போது அவர்களச் சேர்ந்து விடும் என்று அவர் கணித்திருக்கவும் கூடும் என்று எண்ணுகின்றேன்.

கதை சொல்லி சேகுவேரா என்று பொதுவாக அழைக்கப்பட்ட ஜே.வீ.பி யினரின் அரசியல் கொள்கைகள் நோக்கு என்பவற்றையும் அவர்கள் தமிழ் சிங்கள மக்களால் எப்படிப் பார்க்கப் படுகின்றார்கள் என்பது பற்றியும் எழுத்தில் வடித்ததிலும் பார்க்க இக்குறுநாவலை விமர்சனம் செய்த டி.பி.எஸ் ஜெயராஜ் அது பற்றி விளக்கமாக் கூறினார். அத்தோடு முன்னுரையில் படைப்பாளி அதிகப்பிரசங்கித் தனத்தயும் மேதாவித்தனத்தை காட்டாமல் சொற் சிக்கனத்துடன் படைத்ள்ளார் என்றும் பாண்டித்தியம் நிறைந்த திறனாய்வு கொள்ளும் வித்தகர்கள் ‘இலக்கியமா’? என்று கேள்வி எழுப்பக் கூடும் என்றும் கூறியுள்ளார். இந்தக் கேள்வி விமர்சகருக்கே ஏற்பட்டதா என்ற சந்தேகம் எனக்கு. மிக மேலோட்டமாக ஆழமான ஒரு கருவைப் படைக்கும் படைப்பாளியை தட்டிக்கொடுப்பதிலும் பார்க்க விமர்சனங்கள் வைத்து அவரின் எழுத்தை ஆழமாக்க விமர்சகர்கள் உதவ வேண்டும்.

படைப்பாளியான நடேசன் நன்றியுரையின் போது மிகவும் அடக்கமாக நான் பெரிய இலக்கியவாதியல்ல, என்னுடய பல மறக்கமுடியாத அனுபவங்கள குறிப்பாக எழுதி வைத்து10 பல ஆண்டுகளின் பின்னர் நேரம் கிடைத்த போது அதனை ஒரு படைப்பாக்கினேன். இது நிறைவான ஒரு படைப்பு என்று நான் கூறவில்ல என்றும் கூறினார்.

சூரியன் எனும் இக்குறுநாவலின் நாயகன் படைப்பாளி வாசகர்கள் மனதில் ஒரு நன்குணம் கொண்டமுற்போக்குத் தனமான அறிவாளியாகத் தொடக்கத்திலிருந்தே காண்பித்து; விட்டுப் பின்னர் சூரியன், சித்ரா எனும் சிங்களப்பெண்ணக் கண்டு காதல் வயப்படும் போது அவன் ஒரு பதினாறு வயது இளஞன் போல் சித்தரித்ள்ளார். வண்ணாத்ப்பூச்சி போல்; கண் சிமிட்டும் அவள் அழகில் அவன் மயங்கும் போதே தன் மனதையும் அவளிடம் சூரியன் பறிகொடுதது விடுகின்றான். அ.கந்தசாமி, காலம் செல்வம் போன்றோர் தமது விமர்சனத்தில் குறிப்பிட்ட போல் கதையின் நாயகி சித்ரா வெறும் காதல் பதுமையாக வந்து செல்லாமல் சித்ரா மேல் சூரியனுக்குக் காதல் வருவது அவளின் அறிவுபூர்வமான செயலாலோ , பேச்சாலோ என்பது போல் காட்டியிருந்தால் சித்ரா எனும் நங்கை வாசகர்கள் மனதில் ஓரு நல்ல நாயகியாகப் பரிணமித்திருப்பாள்.

இதே வேளை எனக்குள் ஒரு சிறு குழப்பம். சூரியனும் சித்ராவும் இருமுறை சந்தித்துக் கொண்ட பின்னர் சேலை வாங்குவதற்கென்று சூரியன் வவுனியா செல்ல முடிவெடுத்த    சித்ராவையும் வரும்படி கேட்டுக்கொள்கின்றான். இருவரும் பேருந்தில் சந்தித்க் கொள்கின்றார்கள். வவுனியாவில் கடைத் தெருவில் பிரச்சனை. இதனால் இருவரும் மீண்டும் பேருநது நிலையத்திற்கு வந்து காத்திருக்கும் போது சிங்கள ஆமி சூரியனின் மார்பில் துப்பாக்கியை வைத்து கேள்வி கேட்கின்றபோது அவனக் காக்க எண்ணிய சித்ரா சூரியனைத் தன் கணவன் என்று கூறுகின்றாள். என வாசிப்பின் புரிதலில் இருநது; சூரியனும் சித்ராவும் ஒருவருக்கொருவர் வாயால் தமது காதலக் கூறவில்லயே தவிர இருவரும் காதலிக்கத் தொடங்கி விட்டார்கள். இருவருக்குமே தெரிந்த ஒன்று இந்த அனர்த்தத்தின் பின்னர் இருவருமாக சூரியனின் இடத்திற்கே செல்கின்றார்கள். சித்ராவின் அண்ணன் ருக்மனிடம் தற்செயலாகக் கடைத்தெருவில் சித்ராவைச் சந்தித்ததாக சூரியன் பொய் சொல்கின்றான். ஆனால் விமர்சகர்கள் அனவரும் சித்ரா சூரியனைக் கணவன் என்று கூறிய பின்னர் தான் அவர்களுக்குள் காதல் வந்ததாக விமர்சனம் செய்கின்றார்கள். அத்தோடு டி.பி.எஸ் ஜெயராஜ் அவர்கள் ‘மிஸ்டர் அண்ட மிஸிஸ் ஐயர்’ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை இந்தக் காட்சியுடன் ஒப்பிட்டும் விமர்சித்தார். மிஸ்டர் அண்ட் மிஸிஸ் ஐயரில் ஒரு முஸ்லீம் இளஞனிடம் தெரியாமல் தண்ணீர் வாங்கிக் குடித் விட்டேனே என்று முகத்தச் சுளிக்கும் பிராமணப் பெண் திருமணமானவள். வளர்க்கப்பட்ட முறை வாழ்க்கை முறை எப்படியாயினும் அவளுக்குள்ளும் மனிதநேயம் இருக்கின்ற என்பதை அவள் செய்கை காட்டி நிற்கின்றது. அத்தோடு ஊரின் அனர்த்தங்களில் இருந்து   தப்பிச் செல்ல அந்த இளஞனின் உதவி அவளுக்குத் தேவையும் படுகின்றது. ஆனால் வண்ணாத்திக்குளத்தின் நாயகி தன் காதலனைக் காக்க அவனக் கணவன் என்கின்றாள். இதைத்தானே அனேக நாயகிகள் செய்வார்கள்;.

மேலும் கலப்புத் திருமணம். சிங்களப்பெண் தமிழ் ஆணைக் காதலிக்கின்றாள். பெரும் புயல் ஒன்று வீசப்போவதாக எண்ணி வாசித்தேன். ஒரு வித சலசலப்பும் இன்றி மிகவும் இலகுவாக இரு குடும்பங்களிடமும் இருந்தும் பச்சைக் கொடி காட்டி விட்டார்கள். அதிலும் சிங்களக்குடும்பத்தில் மிகமிக எளிதாகக் காட்டி விட்டார்கள். அது கொஞ்சம் கொச்சத் தனமாக இருந்த போல் பட்டது. ஒரு தமிழ் இளஞன் வீட்டிற்கு வருகின்றான். சில காலத்தின் பின்னர் மகளப் பெண் கேட்கின்றான். பெண்ணின் தாயார் சிறிது வெட்கம் கூடப்படுகின்றார். அவன் ஒரு தமிழ் இளஞன். அவன் குடும்பம் , உறவுகள் எப்படியானவை. மகள் எதிர்காலத்தில் எப்படியான சிக்கல்களச் சந்திக்கப் போகின்றாள் என்ற எந்த வித எண்ணமும் இன்றி பல்கலக்கழகத்தில் படித்த நல்ல வேலயில் இருக்கும் இளைஞனைக் காதலிக்கும் யாழ்ப்பாணத்த் தமிழ் பெண்கள் ‘மாப்பிள்ள பிடித்துவிட்டாள்’ என்ற பதத்தில் விமர்சிப்பது போல்தான் இதிலும் நல்ல படித்த இளைஞன் என்பதால் எந்த சங்கோஜமுமின்றி பெண்ணின் பெற்றோர் சம்மதம் கூறியது எனக்குச் சங்கோஜமாக இருந்தது. அடுத்து சூரியனின் குடும்பம். மகன் காதலிப்பது சிங்களப்பெண் என்று தெரிந்த போது தந்தையின் சில விதண்டாவாத விமர்சனத்தோடு அங்கும் பிரச்சனை முடிகின்றது. காதல் அரசியல் என்று எழுத்து  சென்று கொண்டிருக்கும் போது மனதில் நிற்கும் மனத்தைத் தாக்கும் சம்பவங்கள் வரப்போகின்ற என்ற எதிர்பார்த்த எனக்குள் பல முறை எழுப்பிப் பின்னர் ஒன்றுமே இல்லாதது போய் விட்டது எனக்குள் பலத்த ஏமாற்றத்தத் தந்தது.

படைப்பாளி இந்த எழுத்து முறையைத்தான் படைப்பு முழுவதிலும் கொண்டு செல்கின்றார். மனித வாழ்க்கை அனர்த்தங்களால் அடிபட்டுப் போய்க் கொண்டிருக்கும் வேளையில்  ஒவ்வொரு சிறிய நகர்வும் வாசகர்கள் எந்த விதப் பாதிப்பிற்குள்ளும் கொண்டு செல்லாமல் நழுவி நழுவிச் சென்று கொண்டிருக்கின்ற. அனைததுச் சம்பவங்களயும் ஒரு தகவல் தரும் வடிவில் இங்கே ஆமி அடித்ததுஅங்கே பெடியங்கள் தாக்கினாங்கள் என்பதாயும் விமர்சகர் காலம் செல்வம் குறிப்பட்டிருந்த போல் புதிதாக ஒரு இடத்திற்கு நாயகன் செல்லும் போது அந்த இடத்திற்கு வாசகர்களயும் அழைத்துச் செல்லக் கதை சொல்லி தவறிவிட்டார். இருந்தும் அரசியல் பிரச்சாரம் செய்யும் பல சந்தர்ப்பங்கள் கதை சொல்லிக்குக் கிடத்திருந்தும் அதனச் செய்யாதது வாசகர்களிற்கு படைப்பாளி மேல் ஒரு மதிப்பைக் கொண்டுவந்திருக்கும்.

இப்படைப்பில் வரும் தலமுடி வெட்டும் ஆறுமுகம் எனும் பாத்திரத்தினூடாக பலரின் அரசியல் பார்வைகள படைப்பாளி கொண்டு வந்திருக்க முடியும். தவறி விட்டார். அதே போல் சுந்தரம்  ருக்மன், காமினி போன்றவர்களயும் ஏனோ வீணடித் விட்டார்.

இனக்கலவரங்கள்இ மாறுபட்ட அரசியல் கொள்கை, கலப்புத் திருமணம் போன்ற காத்திரமான தளங்களயும், தனது சொந்த அனுபவங்களான மிருகப்பரிசோதனை போன்றவற்றயும் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து  படைப்பாக்கியிருந்தால் அண்மையில் பலராலும் பாராட்டப்பட்ட ‘புலிநகற்கொன்றை’ போன்ற ஒரு காத்திரமான முழு நாவலை நடேசன் அவர்களால் கொடுத்திருக்க முடியும்.

விமர்சகர்கள் அனவராலும் ஒட்டு மொத்தமாகத் தரப்பட்ட ஒரு விமர்சனம் இப்படைப்பில் பல குறைகள் இருப்பினும் வாசகர்களுக்கு படிக்கும் போது சோர்வைத் தரவில்லை.. படித்து முடிக்கும் ஆவல் இருந்தது. என்னுள்ளும் அப்படியான ஒர் உணர்வு எழுந்தது அதற்குக் காரணம் நாம் அறியாத மேட்டுப்பாளயம், திருநெல்வேலி, பாண்டிச்சேரி, கொல்லம் என்று இல்லாமல், கொக்குவில், வவுனியா, மதவாச்சி, பதவியா, கொழும்பு என்று எம்மோடு தொடர்புடைய எம்மைப் பழைய நினவிற்குள் இழுத்துச் செல்லும் ஊர்களிற்கு கதை சொல்லி எம்ம அழைத்ச் சென்றது தான்.

விமர்சகர் ராஜேந்திரா யாழ்ப்பாணத்ப் பெண்களின் கோழைத்தனத்தயும், பிற்போக்குத்தனத்தையும் கடுமையாக விமர்சித்தார். மனதிற்கு வேதனயாக இருந்தாலும் அதுதான் உண்மை என்பதனால் மௌனமாக இருந்து விட்டேன். கலப்புத் திருமணம் வேண்டாம் கடைசி சாதி தராதரம் பார்க்கும் தன்மையயாவது யாழ்ப்பாணமக்கள் விட்டொழிக்க மாட்டார்களா?

வண்ணாத்திக்குளம்-குறுநாவல்

மாலதி முருகபூபதி

இலக்கியம் காலக்கண்ணாடி. தான் தோன்றிய காலப்பகுதியிலே மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது? என்பதை எடுத்தியம்பும் வல்லமை பெற்றதே இலக்கியம்.

அவ்வகையிலே என். எஸ் நடேசன் எழுதிய வண்ணாத்திக்குளம் என்ற குறுநாவலானது 1980-83 கால கட்டத்திலே இலங்கை மக்களின் வாழ்க்கை முறை அதாவது இலங்கையின் அரசியல் பொருளாதார – சமூக நிலையினை அப்படியே அறிய வைக்கிறது.

எத்தனையோ தமிழ்க்கிராமங்கள் தம் பெயரை இழந்து இன்று சிங்களப் பெயருடன் வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். பதவியாக்குளம் எனத் தற்பொழுது வழங்கி வரும் இடம் முன்னர் வண்ணத்திக் குளம் என்ற பெயரில் இருந்தமையை இந்நாவல் வாயிலாக அறிய முடிகிறது.

புத்தளம்-மன்னார் வீதியிலே தற்பொழுது வண்ணாத்தி வில்லு- என்ற இடம் இருக்கிறது என்பதை எத்தனை பேர் அறிவோம்.?

சில சிற்றூர்கள் இன்னும் அந்த பெயருடன் தொடர்ந்தும் வாழ்கின்றன. உதாரணமாக நஞ்சுண்டான் கரை, வண்ணாத்தி வில்லு, பொன்பரப்பி, போன்றவை அத்தகையவை. இவை என்றும் நெஞ்சு விட்டகலாத சிற்றூர்கள்.

நடேசன் தமது நாவலில் குறிப்பிடுகின்ற வண்ணாத்திக்குளம் தற்போது பதவியாக்குளம் எனப்படுகின்றது. இது ஒரு சிங்களக் குடியேற்றப் பிரதேசமாக சிங்களக்குடிகளே நிரம்பிய பிரதேசமாக மாறியுள்ளது.

வண்ணாத்திக்குளம்-குறுநாவலானது ‘காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே’ என்ற பாடப்படிகளை நினைவூட்டினாலும் 1980 -1983களில் தமிழ் – சிங்கள இன மோதல்களின் தன்மையினை வெளிக்கொணர்ந்து காட்டுவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய திரு டி.பி.எஸ் ஜெயராஜ் அவர்கள்-அரசியல் போக்கின் அகோரத்தனத்தினால் அப்பாவி மானுடர்கள் பொசுங்கியும், நசுங்கியும் போகின்றதை எடுத்துக்காட்டவோ அல்லது அளப்பரிய இடர் நடுவிலும் மனிதப்பண்புகளதை தளராமல் காப்பாற்ற முயற்சிப்பதை இன்றைய நிலையில் இலக்கியத்தினால் மாத்திரமே பூரணமாக வெளிச்சம் போட்டுக்காட்ட முடிகிறது.

மிகமிகத் தேவையான அக்காரியத்தை நடேசன் இச் சிறுநூல் மூலம் கணிசமான அளவில் செய்து காட்டியுள்ளார்.

எனக் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது, பொருத்தமானது.

மிருக வைத்தியராக இலங்கையில் தாம் கடமையாற்றிய இடங்களை வைத்தே- அதாவது தமது சொந்த அனுபவங்களை வைத்தே நடேசன் இக்குறு நாவலை புனைந்துள்ளார்.

சுருக்கமாக சொல்லப் போனால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் மிருக வைத்தியர் ஒருவர் தொழில் நிமித்தமாக மதவாச்சி சென்று தான் தங்கியிருக்கும் விடுதியில் கூடவே தங்கியிருக்கும் பதவியாவைச் சேர்ந்த சிங்கள இளைஞனின் தங்கையை சந்தர்ப்பவசத்தில் கண்டு, காதல் கொண்டு பதிவுத் திருமண மூலம் பந்தத்தை ஏற்படுத்திய போதிலும் நாட்டு நிலையால் ஒருமித்த அவ்விரு உள்ளங்களும் நிம்மதியாக தமது வாழ்க்கையை ஓட்ட முடியாது வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டதை மிக அழகாக- எளிமையான நடையில் சொற்றொடர்கள், உவமானங்கள் பழமொழிகளை எழுதி மெருகூட்டி எழுதியதுடன் ஊர் வழக்குகளையும் எழுதிக் காட்டியுள்ளார்.

நயினாதீவு செல்லாத ஒருவருக்கு நயினாதீவு பற்றிய அறிவையும் அங்கு சென்று வந்த உணர்வையும் ஏற்படுத்துகின்ற மாதிரி எழுதியுள்ளாhர். தம் எழுத்தின் மூலம் எழுவைதீவுக்கு எம்மை அழைத்தே சென்று விடுகிறார்.

அரசியலிலே தமக்கிருந்த ஈடுபாட்டினை,எனக்குப் புது அனுபவமாக இருந்தது எந்தக்காலத்திலும் நான் அரசியல் வாதிகளை சந்தித்ததோ, பேசியதோ கிடையாது. பேராதனைப் பல்கழைக்கழகத்தில் சக மாணவர்களிடம் பேசிய அரசியல் மட்டும் தான். யாழ்ப்பாணத்தில் அரசியல் கூட்டங்களுக்கு சிறுவயதில் சென்றபோது அவர்கள் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். வயது வந்ததும் அந்தப் பேச்சுக்களின் போலித்தனங்களும், சந்தர்ப்பவாதங்களும் புரிந்தபின் நல்ல அபிப்பிராயம் ஏற்படவில்லை. ஆனால் என்னால் அரசியலை வெறுக்க முடியவில்லை. இதை விட மிகவும் கவனமாக உள்நாட்டு. வெளிநாட்டு அரசியலைக் கவனித்து வந்தேன்’ எனக் குறிப்பிடுவதன் மூலம் வெளிப்படுத்துகிறார்.

பண்டாரா என்ற ஜே.வி.பி இளைஞனுடன் உரையாடிய பின் தன் மனநிலையை – அனுராதபுரத்தின் இடிந்த கட்டிடங்களும் பண்டாரவின் வேகமான அரசியல் நிலை பற்றிய கேள்விகளும் கற்பாறையில் விழுந்தெழும் அருவியாக தெறித்து மனதில் நீர்த்திரையை உருவாக்கியது என அழகாக விளங்க வைக்கிறார் ஆசிரியர்.

தீவுப்பகுதிகளில் மாத்திரமல்ல வடமராட்சிப்பகுதியிலும் நடமாடி மிக நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார். என்பதை கடை வீதியை கடந்து போகும் போது எதிரிலே ஒரு மாடு வந்தது. சடுதியாக பிரேக் பிடித்தேன். மோட்டார் சைக்கள் மாட்டில் மெதுவாக மோதி நின்றது. மாடு வேலியில் நீளக்கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. தங்களின் பக்கத்து வீட்டுப்புல்லையும் தின்ன வேண்டும் என்ற தாராள மனப்பான்மை கொண்ட வடமராட்சிக்காரரை மனதில் திட்டியபடி வியாபாரி மூலையை நோக்கிச் சென்றேன்’ என்ற அடிகள் மூலம் அறிய முடிகிறது.

ஆசிரியரின் மனஉணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்த சில வரிகள்:- ‘காதல் உணர்வின் அத்திவாரத்தில் மனித உறவுகள் கட்டப்படுகின்றன.’ ‘நான் மற்றவர் கருத்தை கேட்பதும் என்னுடைய கருத்தைத் தெரிவிப்பதுவும் தானே பேச்சுச் சுதந்திரம்’ இனத்துவேசத்தின் அடிப்படை அறியாமை’ மௌனமே உலகெங்கும் ஒரு மொழியாக இருந்தால் பல பிரச்சனைகள் குறையுமே’.

தமிழ் சிங்கள இனத்துவேஷம் நிரம்பிய காலத்துப் பெற்றோரின் மனநிலையை இவ்வாறு கூறுகிறார். அதாவது சிங்களப் பெண்ணை மகன் திருமணம் செய்யப் போவதாக கேள்விப்பட்டதும் தகப்பனார் கூறும் கூற்று இவ்வாறு அமைகின்றது:- ‘ தம்பி நீ வளர்ந்து விட்டாய். உனக்குத் தெரியும் உனது செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் நீயே பொறுப்பு.’ ‘கலவரம் நடந்தால் பொடிச்சியோடு நீ எங்கே போவாய்?’

தாயார் கூறும் கூற்று ‘சிங்களத்தியை கல்யாணம் கட்டிக்கொண்டு யாழ்ப்பாணத்திலும் இருக்க முடியாது.. அந்த மதவாச்சியிலும் நீ இருக்க முடியாது.’ இவ்வாறு பெற்றோரின் மனவுணர்ச்சி அழகாக காட்டப்படுகிறது.

பத்து மாதம் பல இன்னல்களுக்கு மத்தியில் சுமந்து உலகிலே தவழ விடும் அருமை அன்னையை யார் மறப்பார். அவ்வகையிலேயே திரு. நடேசனும் தமது படைப்பினைத் தமது தாயாருக்கு படையலாக்கியுள்ளார்.

நாவலிலே குறுநாவல்-நெடுங்கதை என்ற வகைகளுண்டு. திரு நடேசனின் இப்படைப்பு குறு நாவலைச் சாரும்.

‘வண்ணாத்திக்குளம்’ ஆம். வண்ணத்துச் சிறகுகளால் மாந்தர் தம் மனதைக் கவரும் வண்ணத்துப் பூச்சிகள் நிறைந்த குளமாக இருந்திருக்குமோ? அல்லது வண்ணத்துப் பூச்சிகள் போன்ற கண்களையுடைய மகளிர் நீராடுகின்ற தடாகங்களை நிறைய் பெற்றிருந்ததோ அவ்வூர். பேச்சு வழக்கிலே ‘வண்ணாத்திப்பூச்சி’ என்று தானே குறிப்பிடுவோம்.

எவ்வாறிருப்பினும் வண்ண நிiவுகளை மீட்டெடுத்ததற்காக வண்ணாத்திக்குளம்’ எனப் பெயரிட்டு வண்ண அட்டையுடன் அடக்கமாக வளர்த்தெடுத்த குறுநாவல் தனது முடிவுக்காகத் திடீரென குறுக்கியதன் காரணம் யாதோ எனப் படபடக்கிறது இதயம்.

காதலுடன் இலங்கை அரசியலின் யதார்த்த நிலையினையும் துல்லியமாக எழுதிய இக்குறுநாவலின் ஆசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.

வண்ணாத்திக்குளம் -யசோ.

ஒரு காலகட்டத்தின் பதிவு.

சார்பற்ற நிதர்சனம்.

எதிர்காலம் பேசப்போகிற

இறந்த காலம்.

‘புலிகளுக்கும் சிங்கங்களுக்கும்’ நடுவே

ஒரு மனிதக் குரல்.

‘மனிதத்தின்’ குரல்.

நடேசன் என்ற மனிதன்

வாழ்ந்த சுவடும் கூட.

வண்ணாத்திக் குளத்திற்குள்

தேடலாம்;மனிதம் மிக்க நடேசனும்

கிடைக்கலாம்.

தொலைந்த மனிதம் தேடுகிறோம்.

‘கேளுங்கள் தரப்படும்;தட்டுங்கள் திறக்கப்படும்

தேடுங்கள் கிடைக்கும்’என்றார் யேசு பிரான்.

ஆம்,

தேடுங்கள் கிடைக்கும்

வண்ணாத்திக் குளத்துள்.

வரலாற்று உண்மை தோய்ந்த

மனிதத் துளி.

மனிதத்தின் துளி.

திரைப்படமாகாத கதை வசனம்- வண்ணாத்திக்குளம்

தமிழ்த் திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைந்தாலும் அவரது நினைவு என் நெஞ்சில் நிரந்தரமாக இருக்கும்.

ஏன் தெரியுமா?

.

சென்னையிலிருந்து – எஸ்பொ போர் நிறுத்த காலத்தில் தொலைப்பேசியில் “உமது வண்ணாத்திக்குளம் நாவலைத் திரைப்படமாக எடுக்க இயக்குனர் மகேந்திரன் விரும்புகிறார். அவர்தான் முள்ளும் மலரை எடுத்தவர். என்றார்.

எனக்குச் சந்தோசம் தாங்க முடியவில்லை.

“அப்படியா? “ என வாய் கேட்டாலும் இதயம் நெஞ்சுக் கூட்டில் துள்ளி விளையாடியது. மதவாச்சியில் மிருக வைத்தியராக வேலை செய்தபோது நடந்த சம்பவங்களை வைத்து எழுதியது. அதுவும் 20 வருடங்கள் பழைய கொப்பில் கிறுக்கப்பட்டு என்னுடன் இந்திய, அவுஸ்திரேலியா எனத் தேசங்கள் மட்டுமல்ல சிட்னி- வாணம்பூல்- அடிலயிட்- மெல்பேன் என நகரங்கள் புலம் பெயர்ந்தது.

அப்படியான எனது எழுத்திற்கு இவ்வளவு அதிஸ்டமா?

“படமாக்க அனுமதி கேட்டார்” “

“நீங்களே ஓம் எனச் சொல்லுங்கள்”

மீண்டும் ஒரு நாள் எஸ் பொ தொலைப்பேசியில் மகேந்திரன் உம்மோடு பேசவிரும்புகிறர் என்று சொன்னதும் எதிர் பக்கத்தில் “நாவலைப்படித்தேன். திரைப்படம்போல் காட்சிகள் வந்திருக்கு. அத்துடன் இலங்கைத் தமிழர் போராட்டம் பற்றிய தகவல்கள் வந்திருப்பதால் சினிமாவாக்க விரும்புகிறேன். ” என்றார் . கரகரத்த குரலின்

“தாராளமாக. எனது முழு சம்மதம்”என்றேன்.

தமிழ்நாட்டின் தலைசிறந்த இயக்குநர் நமது கதையை வாசித்ததுடன் அதைப் பாராட்டினார் என்ற திருப்தியுடன்,பொறுப்பான ஆணிடம் மகளை திருமணம் செய்து கொடுக்கும் தந்தையின் மனநிலையில்.

எஸ்.பொ அவுஸ்திரேலியா வந்த போது எனக்கு அவர் எழுதிய கதை வசனத்தின் ஒரு பிரதியைக் கொண்டு வந்தார்.

காலச் சக்கரங்கள் கடந்து சென்றன.

எஸ் பொவிடம்போது என்ன நடக்கிறது என்பேன்.

தற்போதுள்ள இலங்கை அரசியலால் பணம் போடுவதற்குப் பலர் தயங்குகிறார்கள் எனப்பதில் வந்தது.

மீண்டும் சண்டை கடந்தகாலத்தில் சென்னையில் இயக்குநர் மகேந்திரனை அவரை வீட்டில் சந்தித்தேன். இலங்கையில் தமிழர்கள் நிலைபற்றி கவலையோடு பேசினார்

அந்த நேரத்தில் எனக்கு சினிமாவைப்பற்றி பேச வாய் வரவில்லை

2009 ல் எனது வீட்டிற்கு ஜெயமோகன் வந்தபோது அவரிடம் அதைக் காட்டினேன் . வாசித்து விட்டு கொஞ்சம் பழைய பாணியாக இருக்கிறதென்றார்.

எனது நாவல் திரைப்படமாக வராத போதிலும் எனது புத்தக அடுக்கில்
இன்னமும் மகேந்திரனது கதையின் பிரதி இருந்தபடி அவரை நினைவு படுத்தியபடியிருக்கிறது.