அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழக நினைவுகள்: 2

நான் கழகத்தின்  செயலாளராக இருந்த காலத்தில் மெல்பன் நகரின்  மத்திய பகுதியில் உள்ள லோட் சிமித் மிருக வைத்தியசாலையில் , மிருக வைத்தியராக வேலை செய்து கொண்டிருந்தேன்.

அது ஒரு டசினுக்கு மேலான மிருக வைத்தியர்களைக் கொண்ட வைத்தியசாலை. அங்கு மிருக வைத்தியரைப் பார்க்க இரு மணிநேரத்திற்கும் அதிகமாக  மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் காத்திருப்பார்கள். அந்த இடத்தையே  பின்னணியாக  வைத்து  எனது நாவலான  அசோகனின் வைத்தியசாலையை எழுதினேன். அங்கு  வேலை செய்பவர்களையும் அதில் சித்திரித்திருந்தேன். . அது மிகவும் பிசியான இடமென்பது மட்டுமே  இங்கு  எனது  இந்தக் கட்டுரைக்குத்  தேவையானது.

அங்கு 91 -97  காலப்பகுதியில்  வேலை செய்தபோதே அவுஸ்திரேலிய தமிழ்  அகதிகள் கழகத்திலிருந்தேன். அங்கு  இரண்டு கிழமையில்  எட்டு நாட்களுடன்   ஒரு வார விடுமுறை நாளிலும் வேலை செய்ய வேண்டும் . இதன் காரணத்தால் சில வாரநாட்களில்  எனக்கு விடுமுறை கிடைக்கும். இதனால்  வீட்டு வேலைகள் மட்டுமல்ல,  எனது அகதிகள்  கழகத்தின் வேலைகளைச்  செய்வதற்கும்  நேரம் கிடைக்கும்.

இப்படியான ஒரு காலத்தில் எங்களுக்கு நண்பராக  இருந்த திருகோணமலையை சேர்ந்த  உதயகுமாரின்  கடைசித்  தம்பி இலங்கையில் இருந்து அடிலயிட் விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவரது சகோதரர்கள் இருவர்  வாகனத்தில்,  மெல்பனிலிருந்து  அடிலயிட் சென்று அவர்களது தம்பியை மெல்பன் அழைத்து வரும்போது ,  பாதையில் நடந்த துரதிஸ்டவசமான வாகன விபத்தால் உதயகுமாரின் தம்பி  மோகன் இறந்துவிட்டார்.  அத்துடன் இலங்கையிலிருந்து வந்த வசந்த குமார் கை முறிந்த நிலையில்   உயிர் தப்பினார். எனக்கும்  சியாமளாவிற்கும்  அந்தக்  குடும்பத்தினரை நன்றாகத் தெரியும். அவர்கள்  எல்லோருக்கும் சியாமளாவே குடும்ப வைத்தியர்.   ஒரு விதத்தில் அவுஸ்திரேலியாவுக்கு  நாம் வந்தபின்னர்,   எங்களுக்குத் தெரிந்தவர்கள் குடும்பத்தில் நடந்த முதல் மரணச்  சம்பவம் என்பதுடன்,  அவர்கள் இளம் குடும்பத்தினர்  என்பதால் அந்தச் சோகம்  எல்லோரையும் அதிகமாக பாதித்தது.

காலங்கள் செல்ல வசந்தன் கைமுறிவு குணமாகி வெளியே வந்தார் . அதன் பின்பாக அவுஸ்திரேலியா அரசிடம்  அகதிகளுக்கான  விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தார் என்பதைஅறிந்தேன்.  ஆனால்,  அந்த விண்ணப்பத்தில் அவர் எழுதியது எதுவுமே எனக்குத்  தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லைத்தானே? 

சில காலத்தின் பின்பு அவரது அகதி  விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது .

வழமைபோன்று   அவரது வழக்குரைஞர் சுயாதீனமான விசாரணைக்கு (Independent tribunal) அந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தார். அக்காலத்தில் யாரோ சொல்லியே நான் அச்செய்தியை அறிந்தேன்.

அது எப்போது நடந்தது என்பதை   மறந்துவிட்டபோதிலும், தலையறுந்த கோழியாக வைத்தியசாலையில் நான்  ஒடித்திரிந்து  வேலை செய்யும் நாளன்று நான்கு பூனைகளுக்கும்   இரண்டு பெரிய  நாய்களுக்கும்  கருத்தடை  அறுவை சிகிச்சை செய்யவேண்டும் .   அத்துடன் ஒரு காலில்   எலும்பு முறிந்த பூனைக்கு  அதன் முறிவைச்  சரிப்படுத்த வேண்டும். இவையெல்லாம் முதல் நாளே எனக்கு ஒதுக்கப்பட்ட பணிகள். ஒரு விதத்தில் அன்று மிகவும் பிசியான நாளான போதும்,    எலும்பு முறிவு சிகிச்சைகளை  நான் விரும்பிச்  செய்வதால் அந்த நாளை கோயில் வாசலில் முகம் பார்த்தபடியிருக்கும் யாசகனாக   எதிர்பார்த்திருந்தேன்.

காலையில் ஒன்பது மணியிலிருந்து மதியம் பதினொரு மணி வரையில்  நான்கு பெண் பூனைகளுக்கும் கருத்தடை  அறுவை சிகிச்சை செய்து முடித்தேன். பூனைகள் சத்திர சிகிச்சையின்போது  அதிகம்  இரத்தம் சிந்தாத பிராணிகள்.  எனது நேர்சாக வேலை செய்யும் சாம் என்பவன்  ஏற்கனவே மூன்று வருடங்கள் மிருக வைத்தியம் படித்தவன் என்பதால்  பூனைகளுக்கு  மயக்க மருந்து கொடுத்து , அவற்றின் வயிற்று மயிரை மழித்து மேசைக்குக் கொண்டு வரும்போது அறுவைச் சிகிச்சை செய்வது  இலகுவாக இருக்கும் .  அதன் பின்பு நாய்கள் இரண்டுக்குமான சிகிச்சையை முடிக்க கிட்டத்தட்ட நண்பகல் ஒரு மணிக்கும்  மேலாகி விட்டது .

மதிய உணவுக்குத் தயாராக இருந்தபோது எனது நண்பர்கள் வந்து பக்கத்திலுள்ள மதுசாலைக்கு அழைத்தனர். ஒரு மணி நேரம் எங்களுக்குக் கிடைக்கும் அந்த இடைவெளியில் பியர் அருந்தி, உணவுண்டு மீண்டும் வேலைக்கு வரவேண்டும் . விருப்பமோ இல்லையோ எங்களது கிராமங்களில் பெண்கள் கிணற்றடியில் தண்ணிர் எடுக்கும்போதே  ஊர்வாய் மெல்லும் இடம்போல்   அந்த மதுச்சாலை மாறிவிடும்.  ஆண்- பெண் உறவுகள் பற்றியும் மற்றவர் வேலையில் விடும்   தவறுகளைப்பற்றியும் பேசி  தங்கத்தை உராயும் தட்டானாக  நாங்கள் அந்த மதிய நேரத்தில் உராய்ந்து பார்த்துவிட்டு வரும்போது,  மனதில் அமைதி ஏற்படும். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்கள் , பெண்கள் என வேலை செய்யுமிடத்தில் ஒரு மணி நேரத்திற்கு  உராய்வதற்கு தேவையான தங்கம் உள்ளது.

இரண்டரை மணிக்கு வந்து,  சத்திர சிகிச்சைத் தியேட்டருக்குள் பிரவேசித்து,  கால் முறிந்த  அந்த ஆண் பூனைக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கியபோது மூன்று மணியாகிவிட்டது.

அந்தக்  காலில் முறிந்த இரு பகுதி  எலும்புகளை வெளியே  எடுத்துக் கொண்டிருக்கும்போது ,   “ நோயல்  ‘உமக்கு அகதிகள் ரிபியூனலில் இருந்து தொலைபேசி  அழைப்பு வந்துள்ளது.  “ என்று   வரவேற்பு பகுதியில்  இருந்து  லின் என்ற பெண் வந்து சொன்னாள்.

உடனே என்ன செய்வது என்று  எனக்குத் தெரியவில்லை. அறுவை சிகிச்சையைத்  தொடங்கவிட்டேன்.  நாம் செலுத்தும் வாகனத்தை ரோட்டருகில் நிறுத்திவிட்டு  தொலைபேசியில்   பேசுவது போன்று, சத்திர சிகிச்சையை நிறுத்திவிட்டு, வரும் அழைப்பிற்கு பதில் சொல்ல முடியாது. அவ்வேளையில்  யாரோ ஒருவனின் அகதி விண்ணப்பமும் அவனது வாழ்வும்  அந்த தொலைபேசி வயரில் முறுகி பிணைந்துள்ளது என்பது   எனது மூளையில் மின்னல் வெட்டாகத்  தெரிந்தது .

  “ எதற்கும் பார்த்துக்கொள்  “  என  நேர்ஸ் சாமிடம் சொல்லிவிட்டு,  கையுறையை கழற்றி  கூடையில் எறிந்துவிட்டு ,  கையைக் கழுவாது  சென்று அந்த தொலைபேசியை எடுத்தபோது,  அங்கு அவுஸ்திரேலிய ஆணின் குரல் தன்னை அகதி ரிபியூனலின் அதிகாரி என  எனக்கு அறிமுகப்படுத்தியது.  “  உங்களை வசந்தகுமார் என்பவர் சாட்சியாகப் போட்டுள்ளார். “   என்றார் அவர்.

 ‘ அடப்பாவி,  எனக்கு எதுவும் சொல்லவில்லையே  ‘  என மனதுள் திட்டியபடி அவரிடம் சொன்னேன்:    “ நான் ஒரு மிருக வைத்தியன். நீங்கள் அழைத்தபோது  அரைவாசியில் எனது ஓப்பரேசனை விட்டு விட்டு வந்தேன். எனக்கு ஐந்து நிமிடம் தரமுடியமா?  “  எனக்கேட்டு விட்டு வெளியே வந்தேன். அந்த ஐந்து நிமிட இடைவெளியில்  நான் இலங்கைக்கு மட்டுமல்ல திருகோணமலை பிரதேசத்தில்  கடற்படை,   விமானப் படை முகாம்களை மனஓடையில் தரிசித்து அவற்றின் உட்புகுந்து வெளிவந்தேன்.  

அப்பொழுது எனது மேலதிகாரியும் நண்பனுமான ஜோஷே என்பவன்  கும்பிடப்போன தெய்வமாக  வாசலில் பிரசன்னமாகியபோது,                            “ தயவு செய்து எனது ஒப்பரேசனை உங்களால்  செய்து முடிக்க முடியுமா?  “ எனக்கேட்டேன்.

  “ ஏய் உனது வேலைக்கு நீ  சம்பளம் வாங்குகிறாய்தானே ?   உனது வேலையை  நான் செய்யவேண்டுமா?  “  என்று எகத்தாளமான சிரிப்புடன்  கேட்டார்.  

  “ இப்பொழுது என்ன? வேண்டும் என்றால் உன் காலில் விழவேண்டுமா ? ஒரு அவசரமான தொலைபேசி அழைப்பு. ஒரு அகதியின் விண்ணப்பம் சம்பந்தமாக நான் ரிபியூனலின் அதிகாரியுடன்  பேசவேண்டும்.  “  என்றேன்

ஜேஷே கிழக்கு தீமோரைச்  சேர்ந்தவனானதால் ஏற்கனவே அகதி விடயங்களை அறிந்தவன்.     “ சரி,  நாளை எனது மதிய உணவுக்கு நீ பொறுப்பு   “  என்று சொன்னதும் எனது கையிலிருந்த பூனையின்  இரத்தத்தைக் கழுவிவிட்டு,   மீண்டும் தொலைப்பேசியை எடுத்தேன்

எனக்காக அந்த அதிகாரி காத்திருந்தார்

  “ வசந்தன் திருகோணமலையைச்  சேர்ந்தவர்.  அங்கு நடந்த சம்பவங்களால் தனக்கு அங்கு இருக்க முடியாது. மீண்டும் ஊர் சென்றால் தனது உயிருக்கு உத்தரவாதமில்லை என இங்கு அகதி அந்தஸ்து வேண்டும்  என்று கேட்டிருக்கிறார்.  “ என்றார் அந்த அதிகாரி.

நல்லவேளையாக அக்காலத்தில் திருகோணமலையில் சிலரைக் கடற்படை சுட்டுக் கொன்ற விடயத்தைப் பத்திரிகையில் படித்திருந்தேன். ஒரு கிளாஸ் ஐரிஸ் கின்னேர்ஸ் பியரை  நான்  குடித்திருந்தாலும் எனது மூளை  பிரகாசமாக ஒளிர்ந்தது.

 “ திருகோணமலையில் பல குண்டு வெடிப்பு  சம்பவங்கள் நடந்துள்ளன.   அதன் காரணமாக இலங்கைப் படையினர் இளைஞர்களைப் பிடித்து விசாரிப்பார்கள்.   பலர் கைது செய்யப்பட்டு பல  வருடங்களாக  சிறையில் உள்ளார்கள்.  திருகோணமலை,  கடற்படை , விமானப்படை மற்றும் இராணுவம் குடிகொண்டுள்ள இராணுவ நகரம் (Garrisons Town)  என்பதால்,  அங்கு அடிக்கடி பிரச்சினைகள் நடக்கும். தனிப்பட்ட முறையில் வசந்தகுமாரது நிலை பற்றி எனக்குத்  தெரியாதபோதும்,  அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் பயந்து இலங்கையை விட்டு வெளியேறிய  பல திருகோணமலை இளைஞர்களை நான் இந்தியாவில் சந்தித்திருக்கிறேன்.  “  என்றேன்.

வசந்தகுமார் பற்றிய விசாரணையை முடித்துக்கொண்டு  தமிழ்நாட்டில் அகதி மக்களுடன்  நான் செய்த வேலைகளையும் அவரிடம் சொன்னபோது,  பத்து நிமிடங்கள் அந்த அதிகாரி  கேட்டபடியிருந்தார்.   

“ எதற்காக நீங்கள்  அவுஸ்திரேலியாவுக்கு  வந்தீர்கள்  “ என்று அவர் என்னை விசாரித்தபோது,   “  நான் படிக்க வந்தேன்.  “  என்றேன். இறுதியில் நன்றி சொல்லிவிட்டு,  தற்போது  நான் செய்யும்  வேலையைப் பற்றியும் விசாரித்தார்.

அரை மணிநேரமாக நடந்த இந்த உரையாடலை முடித்துவிட்டு,  நான்  சத்திர சிகிச்சை அறைக்குப் போனபோது,  ஏற்கனவே பூனையின்  எலும்புக்குள்  ஒரு உருக்கு கம்பியை வைத்து   அந்த வேலையை முடித்து விட்ட  ஜோஷே     “ இந்தா,  நீயே இனி மிகுதி வேலையையும்  செய்.   “  என்று விட்டுச் சென்றான்.

நான் அந்த எலும்பு முறிவு சேர்ஜரியை செய்ய ஆர்வமாக இருந்தபோதும்  அன்று தவறிவிட்டது.  அத்துடன்  அந்த வசந்தன் எனக்கு இதைப்பற்றி முற்கூட்டியே  சொல்லாதுவிட்டு  என்னை நிலைகுலைய வைத்துவிட்டானே  என வாயாலும் மனதாலும் அவனைத் திட்டினேன்.

  பின்னொரு நாளில் வசந்தனைக் கண்ட போது,  அன்று  நான் பட்ட முழு கஷ்டத்தையும் சொல்லாது.   “  குறைந்த பட்சம்  உனது விசாரணை நாள் பற்றியும்,  அதற்கு உங்களது பெயரைக்  கொடுத்திருக்கிறேன்   என்று   எனக்குச்  சொல்லியிருக்கலாம்.  அல்லது வழக்குரைஞராவது அதை முற்கூட்டியே எனக்கு  அறிவுறுத்தியிருக்கலாம்   “ என்றேன்

பதிலெதுவும் பேசாது அசட்டுச்  சிரிப்புடன்  வசந்தன் அன்று என்னைக் கடந்தான்.

நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள், எனது  மேலதிகாரி ஜோசேயும் எனது நேர்சாக வேலை செய்த சாமும்தான்  என்பதால்,  அடுத்த நாள் எனது செலவில்  அவர்கள் இருவருக்கும் அதே மதுச்சாலையில் மதிய உணவு  வாங்கிக்  கொடுத்தேன். வழக்குரைஞருக்கு எந்தக் கஷ்டமும் இல்லாது  வசந்தனுக்கு அகதி அந்தஸ்து கிடைத்திருக்கும். எனக்குத்தான்  இருவருக்கான மதிய சாப்பாட்டுக்கான பணம்  செலவழிந்தது.

வங்கிகளின்  கடனட்டையில் செலவழித்த பணத்தின்  புள்ளிகளாக  (Fly buy points) ஒவ்வொரு முறையும் கிடைக்கும். சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா போவதற்கு அந்தப் புள்ளிகளைப் பாவித்து விமான டிக்கட்டை பதிவு செய்தேன். அதேபோன்று   இறந்தபின் எமனிடம்  எனது  கணக்கை  ஒப்புவிக்கும் சித்திரகுப்தன் எனது  கணக்கில்  நான் இப்படிச்  செய்த விடயங்களை வரவு வைப்பானோ  எனக்குத் தெரியாது.

மதநம்பிக்கையில் வாழும் சகலருக்கும் அந்தக் கணக்கில் நம்பிக்கையுண்டு.  ஆனால்,  நான்  இறந்தபின்னர்  அந்தக் கணக்கால் யாருக்கு என்ன பிரயோசனம் என   நினைத்தேன்.  அதிலும் பார்க்க   அந்த கடனட்டையில் மதுவுக்கும் உணவுக்கும் செலவழித்த பணத்தில் வரும் ஃபிளை பை பொயிண்ட்டுகளால் வாழும் காலத்தில் நன்மை உள்ளது.  அதில் வரும் லாபத்தை நம்மால் பார்க்க முடிகிறதேயென  எண்ணினேன்.

—0—

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.