சிறுகதை: மனக்கோலம்

பல வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில்,  அகதி முகாங்களில் வேலை செய்த காலத்தில் கண்ட  உண்மை சம்பவத்தை வைத்து எழுதியது

நடேசன்

பஸ் வந்து சேர்ந்த போது உச்சி வெயில் அடித்தது. நாங்கள் இருவரும் மட்டும் தான் பிரயாணிகள். தங்களது வேலை செய்து முடித்த திருப்தியுடன் டிரைவரும் கண்டக்டரும் பஸ்ஸை விட்டிறங்கி பெயர் தெரியாத இரு மரங்களின் பின்னே சென்றார்கள். இயற்கையில் பசளை இல்லாத கடற்கரை சார்ந்த மண்ணில் இவர்களின் உரங்களை நம்பி வளரும் மரங்கள்.

கண்டக்டரிடமோ அல்லது டிரைவரிடமோ நாங்கள் போகவேண்டிய பாதையை கேட்டிருக்க வேண்டும். ஐந்து நிமிட நேரமாகியும் இயற்கை உபாதைகளை நீக்க சென்றவர்கள் வரவில்லை. பொறுமை இழந்து சிறிது தூரத்தில் இருந்த பெட்டிக்கடைக்காரரிடம் கேட்கலாம் என நினைத்துக் கொண்டு அங்கு சென்றோம்.

மேசையின் முன்வரிசையில் இனிப்பு பதார்த்தங்கள் போத்தில் வரிசையாக இருந்தது. கதிரையில் அமர்ந்து அன்றைய தினத்தந்தியை கடைக்காரர் உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்தார். எம்மைப் பார்த்தவுடன் “சிலோன் காரங்களா” என்றார். தூரத்தில் பார்த்தவுடன் சிலோன்காரர் என்று அடையாளம் கண்டு கொண்டார் என்று சிறிது ஆச்சரியப்பட்டாலும் “ஆமாங்க சிலோன் அகதிகள் குடியிருக்கும் புயல் பாதுகாப்பு மண்டபத்திற்கு செல்ல வழி எது?” என சிறிது அவர் பாணியிலே கேட்டேன்.

“அதோ அந்தப்பக்கம் போங்கோ பதினைந்து நிமிடத்தில் மண்டபம் வந்து விடும்.”

அவர் காட்டிய பாதை காலடி தடத்துடன் சில மரங்களுக்கூடாக தெரிந்தது. எந்த மேகமும் இல்லாத அகன்று விரிந்த நீலவானம் அந்தப்பக்கம் கடல் பகுதி என காட்டியது.

கடைக்காரரிடம் நன்றி கூறிவிட்டு நடக்கி தொடங்கியபோது இருந்த சில மரங்களும் தொலைந்து விட்டன. இப்போது நானும் எனது மருத்துவ நண்பன் நாதனும் மதிய வெயிலில் நடந்து கொண்டிருந்தோம். எமது நிழல் கூட எமக்கு இருக்கவில்லை. மருந்துகள் நிறைந்து பைகள் தோளில் அழுத்தியது.

புயல் பாதுகாப்பு மண்டபம் கண்களுக்கு தெரிந்ததால் வேகமாக நடந்தோம்.

எண்பத்தைந்துகளில் இலங்கைத்தமிழர்கள் தமிழ் நாட்டு கரையோரங்களில் உள்ள புயல் பாதுகாப்பு மண்டபங்களில் சாடின்மீன் தகரங்களில் அடைப்பது போல் நிரப்பப் பட்டார்கள். நாகபட்டினத்துக்கு அருகில் உள்ள கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மண்டபத்தில் உள்ளவர்களை சந்திக்க சென்னையில் இருந்து நேற்று இரவு பஸ் ஏறி பின்பு நாகபட்டினத்தில் காலையில் இருந்து பஸ் எடுத்து இந்த கிராமத்துக்கு வந்து நண்பகலில் வந்து சேர்ந்தோம்.

மண்டபத்திற்கு அருகில் வந்த போது மண்டபத்தை சுற்றி அடுப்புகளில் சமையல் நடந்து கொண்டிருந்தது. குஞ்சு குருமான்களாக,  குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். காற்றில் கலந்து வந்த சமையல் மணம் பசியை தூண்டியது. காலையில் நாகபட்டினத்தில் உண்ட இட்டலி பஸ்ஸில் குலுக்கலில் விரைவாக சமிபாடு அடைந்து விட்டது போலும்.

இப்பொழுது எம்மைச்சுற்றி ஒரு பாரிய சிறுவர் கூட்டம் கூடி நின்றது. என்னுடன் வந்த நாதன் “ தம்பிமார் இந்த முகாமின் தலைவர் யார்” பக்கத்தில் நின்ற சிறுவனின் தலையை தடவியபடி கேட்டான்.

“அதோ அவர்தான் என பல சிறுவர்கள் ஒருமித்த குரலில் கை கட்டினார்கள்.

காம்பின் வாசலில் நின்ற ஐம்பதுக்கு சற்றே மேல் மதிக்கத்தக்கவர் வாயில் இருந்த சுருட்டை எறிந்து விட்டு எம்மை நோக்கி வந்தார்.

ஆறடி உயரத்தில் அகலமான தோள்களும், பரந்து விரிந்த நெஞ்சும் கடின உடல் உழைப்பில் ஈடுபட்டவர் என்பதை எடுத்துரைத்தது. தலைபாதி நரைத்திருந்தாலும் அடர்த்தியான கரிய மீசை கம்பீர தோற்றத்தை கொடுத்தது.

“நீங்கள் யார்?” என்று மீசையை தடவியபடி.

“நாங்கள் சென்னையில் உள்ள மருத்துவ நிலையத்தில் இருந்து வந்திருக்கிறோம்.” என எம்மை அறிமுகப்படுத்தினோம்.

காம்பின் உள்ளே வரும்படி எங்களை சைகையால் கூறிவிட்டவரை பின் தொடர்ந்தோம்.

“இல்லை. இப்பத்தான் பஸ்ஸை விட்டு இறங்கி நேரே வருகிறோம். பசி இல்லை” என்றான் நாதன்.

அகதி முகாங்களில் வந்து அவதிப்படுபவர்களிடத்தில் மேலும் சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் என்ற நினைப்பு அவனுக்கு.

“நாங்கள் பலருக்கு சாப்பாடு போட்டவர்கள். காலத்தின் கோலத்தால் இப்படி நாடு விட்டு நாடு வந்து அகதிகளாக இருக்கின்றோம். எங்கள் குணம் மாறாது” என்று சிரித்தார்.

எங்கள் தயக்கத்தை மீண்டும் பார்த்துவிட்டு மீண்டும் “இருக்கிறதை பகிர்ந்து சாப்பிடுவோம். வாருங்கள்” என உள்ளே சென்று செம்பு நிறைய தண்ணீருடன் திரும்பி வந்தார்.

தோளில் இருந்த மருந்து பையை இறக்கி வைத்துவிட்டு கையை கழுவினோம்.

“பெரியவருக்கு எந்த ஊர்” என்றான் நாதன்.

“வங்காலை. நாங்கள் ‘போட்டு’ வைத்து மீன் பிடித்தவர்கள்”

உள்ளே சென்றதும் வர்ண வர்ண சேலைகள் மண்டபம் முழுக்க கட்டப்பட்டிருந்தது. குடும்பத்துக்கு எட்டடி சதுரமாக. பெண்களின் சீலைகளால் ஒவ்வொரு குடும்பத்தின் பிரத்தியேக பாவிப்புக்காக பிரிக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது.

“தற்சமயம் இதுதான் எங்களுக்கு வசிப்பிடம்” என்று ஒரு பகுதியை காட்டினார்.

ஓலைப்பாயை நிலத்தில் விரித்து விட்டு இருக்க சொன்னார். இரவு முழுக்க பஸ்பிரயாணம் செய்த உடம்புக்கு இருக்கும்போது ஆறுதலாக இருந்தது.

“மேரி சாப்பாடு கொண்டு வா” என்றதும் சேலைகளின் மறைப்பில் இருந்து கனிவான சிரிப்புடன் ஒரு கையில் சாப்பாட்டு கோப்பையும் மற்றக் கையில் அலுமினிய பானையுடன் நாற்பதுகளில் மதிக்க தக்க பெண் தோன்றினாள்.

சோற்றை எமது கோப்பைகளில் வைத்தபடி “தம்பியவை எந்த இடம்?”

“முன்பு யாழ்ப்பாணம் தற்போது சென்னை” என்று சொல்லி சோறு மேலும் போட வேண்டாம் என தடுத்தான் நாதன்.

பேரை கேட்க முன்பு இடத்தை அறியும் மரபு எம்தமிழர் விழுமியங்களில் ஒன்றோ என பலகாலம் நான் வியந்தது உண்டு.

“காம்பிற்கு மருந்து கொண்டு வந்திருக்கிறார்கள்” என இடையில் பெரியவர் குறுக்கிட்டார். மீண்டும் “தம்பியவை நல்லா சாப்பிடுங்கோ,” என கூறிவிட்டு “எங்கே ரீட்டா? மீண்டும் கோயிலுக்கு போய்விட்டாளா?” என மனைவியிடம்

“இல்லை இப்பத்தான் வந்தாள் வெளியே விளையாடுகிறாள்” எனக்கூறிவிட்டு சென்றாள்.

“ மகள் பற்றி தான் கவலை” என தனக்குள்ளே கூறிக்கொண்டு உணவை உண்டார்.

அவரது விடயத்தில் தலையிடாமல் மௌனமாக இருந்தோம். கவலைக்கா பஞ்சமில்லை. அகதி முகாமில் சிலநாள், சில வாரங்கள் என எண்ணிக் கொண்டு ஒதுங்குபவர்கள், மாதங்கள், வருடங்கள் என வாழும் போது ஏற்படும் துயரம் துன்பங்கள், ஆறுதல் வார்த்தைகளால் தீர்வு படக்கூடியவையா?

உணவு அருந்தி முடிந்ததும்இ புயல் பாதுகாப்பு மண்டபத்தின் ஒருபகுதி மருத்துவ மனையாக்கப்பட்டது. ஐம்பதுக்கு மேற்பட்டவர்களை டாக்டர் நாதன் பரிசோதித்தபோது நான் கம்பவுண்டராக தொழிற்பட்டு மருந்துகளை வழங்கினேன். மூன்றுமணி நேரத்தில் எமது மருத்துவ முகாம் மூடப்பட்டது.

மாலை நேரத்து கடற்காற்று வீசத்தொடங்கியதும் கடற்காற்றை காலாற சென்று பார்த்தபோது பல வள்ளங்கள் கடற்கரையில் கட்டப்பட்டிருந்தது. பெரும்பாலானவற்றில் மடுமாதாவின் பெயர் இருந்ததால் அவை மன்னாரை சேர்ந்தவை என அறியமுடிந்தது.

காலம் மாறுவதை பார்த்தாயா? அக்காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்களை கள்ளத்தோணி என அழைத்தோம். இப்பொழுது எம்மவர் அதே மாதிரி தோணிகளில் தமிழ் நாட்டிற்கு வர வேண்டி இருந்தது என்றேன் நாதனிடம்.

திரும்பி வந்தபோது, தேனீர் தயாராக இருந்தது. தேநீர் குடிக்கும்போது “இஞ்சருங்கோ, ரீட்டாவை பற்றி பேசுங்க” என்றார் கணவரிடம்.

“என்னத்தைப் பேசி” என பெரியவர் சலித்துக்கொண்டார்.

“சொல்லுங்கோ மனம் ஆறுதல் அடையும்” என உற்சாகப்படுத்தினான் நாதன்.

“அவளை இங்கே கூப்பிடு”.

“இவள்தான் நம்மட மகள் ரீட்டா” என சுமார் 18 வயது பெண்ணை எமக்கு அறிமுகப்படுத்தினார். அப்பாவித்தனமான சிரிப்புடன் அலைந்த கண்களுடன் எங்களை நோக்கி வந்தாள்.

“எங்கே போனாய் ரீட்டா?” என சிறிது காரமான குரலில்.

எங்களைப் பார்த்தபடி ”எனக்கு இந்த பகுதியில் சாத்தான் இருப்பதாக செய்தி வந்தது. அதுதான் கோவிலுக்கு சென்று என் தாய்மார்களை பார்த்தேன்.

“அதுக்கென்ன இப்போ?

“ஆண்டவரிடம் முறையிட்டால் சாத்தான் வராது என தாய்மார்கள் சொன்னார்கள். அதுதான் ஏசு குமாரனிடம் விண்ணப்பித்தேன்”.

“உன்னை சிஸ்டர்மாரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன்” என கடிந்தார். ”

“அம்மா பாருங்க அப்பா ஏசுகிறார்” என கூறும் போது கண்களில் கண்ணீர் வந்தது.

“சரி அவளை பேசாதீங்கள்” தாயார் இடைமறித்தார்.

“அப்பா பேசமாட்டார்.  நீங்கள் அழவேண்டாம்” என நாதன் கூறியதும் “நீங்கள் நல்ல டாக்டர்தானே “எனக் கூறிக்கொண்டே எங்கள் இருவருக்கும் இடையில் குழந்தைகள் மாதிரி இடித்துக் கொண்டு அமர்ந்தாள். நாங்கள் விலகி வசதியாக இருக்க இடம் விட்டோம்.

“நானும் டொக்டருக்கு படிக்கிறேன். எனது புத்தகத்தை காட்டட்டுமா” என்றதும் நாதன் தலையை ஆட்டியதும் ஒரு விநாடியில் புத்தகத்துடன் வந்து கொடுத்தாள். நாதன் புத்தகத்தை பார்த்தபோது வெளிப்புறத்தில் “ ஒன்பதாவது வருடம் விஞ்ஞானம்” என எழுதப்பட்டிருந்தது.

“சரி இந்தப் புத்தகத்தில் எந்த பாடம் படிக்கிறீர்கள்” என நாதன் கேட்டதும் பதில் சொல்லாமல் “நான் நல்லா படிப்பேன்” என கூறி புத்தகத்தை மீண்டும் வாங்கினாள். “நான் சிஸ்டரிடம் போகிறேன்” என தந்தையை பார்த்தபடி.

“நாளைக்கு போகலாம்”

“இல்லை. நான் போவேன்”

“அவள் போகட்டும்” என்றாhர் தாயார்.

தாய் சொல்லி முடிக்கவில்லை .இரண்டு எட்டில் வெளியேறினாள்.

“இப்பொழுது மருந்து கொடுப்பதில்லையா” என நாதன் வினவினான்.

“சென்னையில் பெரிய டாக்டரிடம் காட்டி மருந்து எடுத்தோம். அடிக்கடி எங்களால் போக முடியவில்லை என இயலாமையுடன் கூறினார்.

“ இந்த சிசேபிரினியா மனவியாதி. எப்படி ரீட்டாவுக்கு வந்தது” என்றேன். “

நாங்கள் இந்த காம்பிற்கு வந்து ஆறுமாதம் தான். எங்கள் சொந்த ஊர் வங்காலை. இவளோடு ஒரு பொடியன் சினேகமாக இருந்தான். உறவுக்காரன் என்றதால் நாங்கள் ஏதும் சொல்லவில்லை. பொடியன் திடீர் என இயக்கத்தில் சேர்ந்து விட்டான். எங்களுக்கு பெரிய கவலை. என்னத்தை செய்யிறது. இப்படி இருக்கும் போது ஒருநாள் ‘போட்டில்’ இயக்கத்திற்கு ஆயுதம் வந்து இறங்கியது. நாங்களும் கூட பொடியளுக்கு உதவி செய்தோம். எப்படியோ ஆமிக்காரன் மணந்து பிடித்திட்டான். ஊரை சுத்தி வளைத்து அந்த பொடியனை பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள். அதற்கு பின்பு இவளுக்கும் இப்படியாகி விட்டது. அடிக்கடி ஆமி வந்து கொடுத்த தொல்லையினால் நாங்களும் வள்ளத்தில் ஏறி இங்கு வந்து விட்டோம்”.

“பெரியவர், தலையிடி, காய்ச்சல், இருமல் என சொல்லியவர்களுக்கு எங்களால் மாத்திரை கொடுக்க முடிந்தது உங்கள் மகளுக்கு வந்த நோய்க்கு எங்களிடம் ஒன்றுமில்லை. இக்காலத்தில் சிசேபிரினியாவுக்கு நல்ல மருந்துகள் உண்டு. பலர் குணமாகி உள்ளார்கள்” என்றான் நாதன்.

நான் எழுந்து “இப்பொழுது வெளிக்கிட்டாதான் நாகபட்டினத்திற்கு பஸ் எடுக்கலாம்” என கூறி எழுந்தேன்.

“சரி போய் வாருங்கள்” என கணவனும் மனைவியும் விடை கொடுத்தார்கள்.

வெளியே வந்ததும் “எப்படி இந்த வயதில் சிசோபிரினியா வந்தது?” என்றேன்

“இந்தவயதில்தான் மூளையின் முக்கிய பகுதிகள் முதிர்ச்சியடைவது. இக் காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் மனத்தின் வளர்ச்சி நிலையை பாதிக்கும்.”
இலங்கையில் ஆயுத போராட்டத்தில் மரணங்கள், உடல் ஊனங்கள் கணக்கு வரலாம். இந்த ரீட்டா போன்றவர்களின் மனப்பாதிப்பை யார்தான் கணக்கெடுப்பார்கள் என நினைத்தேன்.

குறிப்பு: காதில் கேட்பது கனவில் காணுவது போன்ற உணர்வுகள் (Hallucinations) தன்னைப் பற்றிய ஒருகனவுலக நினைப்பு(Delusions) மற்றும் தொடர்பற்ற பேச்சுக்கள் சியோபிரினியாவின்(schizophrenia) முக்கிய குணங்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.