தோப்பில் முகம்மது மீரானின் சாய்வுநாற்காலி – நாவல்

வாசிப்பு அனுபவம்
நடேசன்

தோப்பில் முகம்மது மீரான் எழுதிய சாகித்திய அக்கடமி விருது பெற்ற நாவல் சாய்வுநாற்காலியை அவரை நினைவு கூர்ந்து பேசுவதற்காக இரண்டாவது முறையாக வாசித்தேன்.

காதலித்தபோது தெரியாத பெண்ணின் பக்கங்களை பிற்காலத்தில் மனைவியாக்கியபின் புரிந்து கொள்வது போல் இருந்தது.

முதல்முறை வாசித்தபோது கண்ணில்படாத பல புதிய தருணங்கள் அவிழ்ந்து அழகு காட்டியது. இம்முறை இலகுவாக நாவலின் புதிய இடுக்குகள், மடிப்புகளுக்குள் பயணிக்க முடிந்தது.

தாத்தா குதிரை வைத்திருந்தார் என்ற பாரம்பரிய பெருமைகளை பேசியபடி நிகழ்காலத்தை வீணாக்கும் சமூகங்களை நம்மால் நாள்தோறும் நம் எதிரே தொலைக்காட்சியில் தெரிகிறது. முன்னாள் மகோன்னதங்கள் பின்னாளில் சிதிலமாகிறது.
சமூகங்கள் மட்டுமல்ல தனிமனிதர்கள் பாரம்பரிய பெருமைகளை இறுகப் பிடித்தபடியே தொங்கும்போது நிகழ்காலம் அவர்களைக் கடந்து விட்டு செல்கிறது.

பவுரீன் பிள்ளை என்ற வீரனின் வழிவந்த முஸ்தபாகண்ணு தனது வாழ்நாளைச் சாய்வு நாற்காலியில் இருந்தவாறு வீணடிக்கும் கதையே இந்தநாவல் .

தனியொரு மனிதனது கதை மட்டுமல்ல, ஐந்து தலைமுறையை சேர்ந்தவர்களது கதை; இவர்கள் வாழ்ந்த தென்பத்தன் கிராமத்தின் சரித்திரம்; திருவிதாங்கூர் இராஜ்ஜியத்தின் வரலாறும் பிணைந்து நாவலில் வருகிறது.

திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மா, அரசாள்வதற்கு உறுதுணையாக இருந்த வீரனான பவுரீன்பிள்ளைக்கு அரசர் அளித்த வெகுமதிகள் , நில புலன்கள், வீடு, தோட்டம் என்பன அவரை ஒரு செல்வந்தராக்கியது. அவரிடமிருந்து ஒரு பரம்பரை உருவாகிறது. ஆண் பரம்பரையினர் தென்பத்தன் கிராமத்தில் வளமாக வாழ்ந்து வழிகாட்டி வருகிறார்கள். அந்தப்பரம்ரையில் இறுதியாக வரும் முஸ்தபாகண்ணு, அந்தச் செல்வத்திற்கும் புகழிற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார் .

அடங்க மறுக்கும் காமத்தையும் , அதற்காக எதையும் செய்யத்தயங்காத மனநிலையும் கொண்டவர் முஸ்தபா கண்ணு. அவரது செயல்களைத் தூண்டும் அவரது இதயம் எப்படியானது..? என்ற முன்னறிவிப்பு எமக்கு நாவலின் முதல் அத்தியாயத்திலேயே தெளிவாகிவிடுகிறது.

ஊரில் உள்ள மதராசா மீது தென்னை மரமொன்று விழுந்ததால் படித்துக் கொண்டிருந்த குழந்தைகள் இறந்துவிட்டன. ஊரே பதறுகிறது.

முஸ்தபா கண்ணு சாய்வு நாற்காலியில் கிடந்தபடி – “அதென்ன கரச்சல் ? எனக்கேட்ட போது,

“ மதரஸாவுக்கே மேலே தெங்கு விழுந்து நிறையப் புள்ளியோ மௌத்தாபோச்சாம் “ என்கிறாள் மனைவி மரியம் பீவி.
எந்த உணற்சியுமற்று சிகரட்டைப்பற்றியவரிடம்,

“எழும்பிமாருங்கோ – நம்ம புள்ளையோ இல்லையா –? “ என்றாள் மரியம்பீவி

தாடியை கையால் ஒதுக்கிய முஸ்தபாக்கண்ணு,

“மணி எட்டாச்சு – பசியாற உண்டோ ?? “ எனக்கேட்கிறார்.

இந்தச் சிறிய சம்பவத்தையும் அது தொடர்பான உரையாடலையும் முதல் அத்தியாயத்திலே எமக்கு அறிமுகப்படுத்தி, அந்தப் பாத்திரத்தின் மனநிலையை தெரியப்படுத்தும்போது, இனிவரும் நிகழ்வுகள் எப்படியிருக்கும் என்பதை வாசகர்கள் புரிந்து விடுகிறார்கள்.
இனிமேல் அதிர்ச்சியும் அடையவேண்டியதில்லை என்ற போதிலும் பெண்களை பால்கறக்கும் மாடுகளாக தொழுவத்தில் கட்டியபின்பு பால் வற்றியதும் கிழட்டு மாடு பிரயோசனமில்லையென அதபு பிரம்பால் அடித்து கொலை செய்வதை படிக்கும்போது நெஞ்சம் திடுக்கிடுகிறது.

நாவலில் வரும் முஸ்தபாக்கண்ணுவை வாசகர்களால் வெறுக்கப்படும் பாத்திரமாக்குவதில் தோப்பில் முகம்மது மீரான் வெற்றி காண்கிறார்.

நாற்பது வருட திருமணத்தில் கண்ட பயன் என்ன..? என ஏங்கித் தற்கொலை செய்ய முயன்றாலும் மரியம்பீவியால் முடியவில்லை.
வாப்பாவின் நடத்தையை வெறுத்து வீட்டை விட்டு சென்ற மகனைக் ஒரு முறையானும் காணவேண்டும் என்ற எண்ணம் தற்கொலையைத் தடுக்கிறது. இதன் மூலம் தாயின் தாயின் மனநிலையைப் நமக்கு படம் பிடித்துக்காட்டி மரியம்பீவியையும் மறக்க முடியாத பாத்திரமாக்கியிருக்கிறார் .

இந்தக் கதையில் வரும் அஃறிணைப் பொருட்களான சவ்தாமன்ஸிலின் சாய்வு நாற்காலி, அலுமாரி, பிரம்பு மற்றும் வாள் என்பன உயிர் வாழும் மனிதர்களைப்போல் நாவலின் பக்கங்களிலிருந்து எழுந்து வந்து கதை சொல்வதனால் அவையும் வாசிப்பவர்களது மனதில் வாழ்கின்றன.

ஒரு பிரம்பு, போர்க்கருவியாகி பல பெண்களின் உயிர்களை கொன்று விடுகிறது. பூண்போட்ட அந்த அதபு பிரம்பை முஸ்தபாக் கண்ணின் மகன் பலமுறை உடைக்க முயன்றும் அது உடையாதிருப்பதிலிருந்து தொடரும் பெண்ணடிமைத்தனம் படிமமாக வருகிறது

முஸ்தபாகண்ணுக்கு எடுபிடியாக வரும் இஸ்ராயில் ஒரு வித்தியாசமான பாத்திரம். மரியம்பீவியிடம் அன்பு செலுத்தி , அவளைத் தாயாக நினைத்து முஸ்தபாகண்ணிடம் இருந்து அவளை பாதுகாக்க நினைப்பதன் மூலம் சிறிய பாத்திரமாக சிருட்டிக்கப்பட்டாலும் இஸ்ராயிலும் முழுமையான பாத்திரம்தான்.

நஸீமாவின் பாத்திரம் வித்தியாசமானது . பெண்களை தனது காமத்திற்குப் பலியாக்கி பின் கொலைகளைச் செய்து வரும் தனது காக்காவான முஸ்தபாகண்ணை வெறுப்புடன் பார்த்து தனது கணவனை உறவில் இருந்து விலக்கியிருப்பதும் இறுதியில் கணவன் ஒரு மீன்காறியுடன் சென்றதனால் அவனில் மீன் மணப்பதை புரிந்துகொள்ளும்போது தனது தவறை உணர்வதாகவும் கதை நகருகிறது.

காமம் பிணியாக பீடித்த முஸ்தபாகண்ணும் , காசநோயுடன் வாழும் மரியம்பீவியும் , காமத்தை அடக்கியபடி மன உளைச்சலோடு எப்பொழுதும் படுக்கையில் இருக்கும் நஸீமாவும் சவ்தா மன்ஸிலை நோயாளிகள் வாழுமிடமாக்கியிருக்கிறார்கள்.

தோப்பில் முகம்மது மீரான் சாய்வுநாய்காலி என்பதற்குப் பதிலாக சவ்தா மன்ஸில் என்ற பெயரை நாவலுக்கு வைத்திருக்கலாம் . மேலும் முஸ்தபாக்கண்ணு எந்த இடத்திலாவது ஈரமுள்ள நெஞ்சத்தினராக காட்டப்பட்டிருந்தால் அல்லது அவரது குரூரமான குணத்திற்கான நியாயங்கள் சொல்லப்பட்டிருந்தால் அந்தப் பாத்திரம் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.

நகைச்சுவை இழையோடும் நாவல். மொழிநடையில் மலையாளமும் அரபும் கலந்திருந்தபோதிலும் ஆழ்ந்து படிப்பவருக்குத் தடையாகவில்லை.

சாய்வு நாற்காலி – தமிழ் நாவல்களில் முக்கியமானதெனக் கருதுகின்றேன்.

________________________________________

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

யாழ்ப்பாணத்திற்கு விமானசேவை


நடேசன்

பலாலிக்கு இந்திய விமானம் வந்திறங்கியது என்ற செய்தி பல காலமாக மனதின் ஆழத்திலிருந்த பாடசாலை நினைவுகளை கிளறிவிட்டது. பல விடயங்களைப் போர் உண்டு ஏப்பம் விட்டுவிட்டது. புதிதாக ஒரு தலைமுறை எதையும் தெரியாது குண்டுகளின் ஓசையிலும் , வெடிகளின் மணத்திலும், போரின் காயங்களையும் சுமந்தபடி வாழ்கிறது.
ஆனால், நாங்கள் போர் தீண்டாத காலங்களை ருசித்தவர்கள் . அமைதியின் நினைவுகள் எம்மிடமுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பன்னிரண்டாம் தரத்தில் படித்தபோது, இலங்கையில் மொழிவாரியான தரப்படுத்தலுடன் மாவட்ட ரீதியாக மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை வந்ததால் உயர் வகுப்பில் படித்த பல மாணவர்களின் மனதில் அவநம்பிக்கை தோன்றியது . இலங்கையில் படித்து பல்கலைக்கழகம்போக முடியாது போனதால் பலர் ஆயுதங்களை கையில் எடுத்தார்கள்

பணவசதியுள்ள எனது நண்பர்கள் இங்கிலாந்து , இந்தியா என படிக்கச் சென்றார்கள். அவர்களில் ஒருவன் என்னுடன் படித்த பாலா . செல்வாக்கான வைத்தியரின் மகன். அவனே எங்கள் வகுப்பில் வசதியானவன். அவனுக்குத் திருச்சி புனித யோசப் கல்லூரியில் பி எஸ்சி படிக்க இடம் கிடைத்தது.

சித்திரை மாதம் . விடுமுறையாக அதனைக் கழித்துவிட்டு, மீண்டும் கல்லூரி வந்த சமயம், ஒரு நாள் காலையில் பரிசோதனைச்சாலையில் வைத்து எல்லோரிடமும் பெருமையுடன் சொன்னான்.

ஒளி சிந்தும் கண்களுடன் முகத்தின் பூரிப்பும் எம்மை ஆட்கொண்டபோதிலும் எனக்குச் சிறிது பொறாமை தலைகாட்டியது. அவனது பணம் அதிஸ்டத்தை வழங்கியுள்ளது என நினைத்தாலும் சில கணத்தில் சந்தோசமடைந்து அவனை வாழ்த்தினேன். எங்களது தாவரவியல் வகுப்பாசிரியரும் எமது சந்தோசத்தில் கலந்து கொண்டார் .அவரது மகிழ்வுக்கு வேறு காரணம்.
பாலா ஏற்கனவே பாடங்களில் கவனமெடுக்காதது மட்டுமல்ல, மற்றவர்கள் படிப்பிற்கு இடையூறாக இருப்பதால் .அவரைப் பொறுத்தவரையில் அவன் செல்வது மகிழ்வான விடயமே.

அவன் புறப்பட்டபோது, வழியனுப்ப , வகுப்பில் உள்ள இருபது பேர்களும் பலாலி நோக்கி வாகனமொன்றில் சென்றோம். .அது எங்களுக்கு உல்லாசப் பிரயாணமாக அமைந்தது.
அப்பொழுது அங்கு பெரிய விமான நிலையமில்லை. எல்லோரும் விமானத்தின் அருகே சென்று அவனைத் திருச்சிக்கு வழியனுப்பினோம் . அவனது முகம் பார்ப்பதற்கு நடிகர் விஜயகுமாரைப்போலிருக்கும். என்ன, நிறம் மட்டும் குறைவு. நீலச்சட்டை. அதே நிறப்பாண்ட் அணிந்தபடி விமானமேறினான் .

74 ஆம் ஆண்டில் நடந்தாலும், அவன் விமானப் படிக்கட்டுகளில் ஏறியது இன்னமும் எனது நினைவில் பசுமையாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் நான் செய்ய விரும்பியதை அவன் செய்கிறான் என்பதுடன் அதுவே என்னைப் பொறுத்தவரை முதல் முறையாக விமானத்தருகே சென்றதுமாகும்.

வடமாகாணத்திற்குத் திருச்சியுடன் இருந்த விமானத் தொடர்பு பிற்காலத்தில் துண்டிக்கப்பட்டது . ஆனால் பிறகு வேதாரணியம், ராமேஸ்வரம் எனக் கடலால் தொடர்புகளை இயக்கங்கள் மேற்கொண்டார்கள் என்பது நமது வரலாறு.

யாழ்ப்பாணமென்பது இலங்கையின் ஒரு துண்டிக்கப்பட்ட பிரதேசம். சிறிய நிலமே. மனிதர்களின் கழுத்துப்போல் ஆனையிறவுடன் இணைக்கிறது. சில மணி நேரம் மண்வெட்டியால் கொத்தினால் இலங்கையில் இருந்து இலங்கையின் பிரதான பகுதியில் இருந்து பிரித்துவிடலாம். இப்படியான பிரதேச அமைப்பு எங்களை அறியாமலே எங்கள் மனங்களில் உள்நோக்கிய தன்மையை ஏற்படுத்துகிறது. தாராளமான தன்மை, மற்றவர்களை வரவேற்றல் குறைந்து , எவரையும் அச்சத்துடன் பார்க்கத்துண்டுகிறது. இதையே சில இடதுசாரிகள் யாழ்ப்பாண மையவாதம் என்பார்கள். உண்மையில் இது சூழ்நிலையால் உருவாகிய அச்சமல்லாது வேறொன்றுமில்லை.

தமிழகத்திற்கும் யாழ்ப்பாணத்திற்குமான தொடர்புகள் அரசியல் மொழி கலாச்சார ரீதியானவை . ஒரு காலத்தில் காலையில் சென்று இரவு படம் பார்த்துவிட்டுத் திரும்பியதாக பழைய தலைமுறையினர் சொல்லியதை கேட்டிருக்கிறேன் . ஆனால், இரு நாடுகளினதும் சுதந்திரத்தின் பின்னர் இந்த வழக்கம் நின்று விட்டது. அல்லது இரகசியமாக நடந்தது.
சமீபத்தில் பலாலி விமான நிலையத்தை சர்வதேசிய தரத்திற்கு மாற்றியதால் இந்தியாவிலிருந்து மட்டுமல்ல உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் இந்தியாவின் ஊடாக பலரும் இலங்கை வரும்போது யாழ்ப்பாணத்தில் புதுவெள்ளம் மனங்களில் பாய்வதுடன் வணிகரீதியாக தொடர்பாடுகளும் ஏற்படும் .

இதுவரை இலங்கைக்கு ஏராளமான உல்லாசப்பிரயாணிகள் வந்தாலும், அவர்கள் எவரும் வடபகுதிக்கு வருவதில்லை . இதனால் இலங்கை அரசால் மட்டுமல்ல உல்லாசப்பிரயாணிகளால் புறக்கணிக்கப்பட்ட பிரதேசமாகவும் வடபகுதி மாறியிருந்தது. .

யாழ்ப்பாணம் மனிதவளம் மட்டுமே உள்ள பிரதேசம். உல்லாசப்பிரயாணிகளின் வருகையால் பலருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அத்துடன் போக்குவரத்து கட்டுமானங்கள், வணிக நிறுவனங்கள், மற்றும் வங்கிகள் எனப் புதிய மாற்றங்களும் தோன்றும்.
முப்பது வருடப் போரினால் யாழ்ப்பாணத்தில் கல்வியறிவு மட்டுமல்ல, ஆங்கில மொழி அறிவும் குறைந்துள்ளது. உலகத்தின் வர்த்தக மொழியை நாங்கள் புறக்கணிக்க முடியாது.

இதுவரையும் இந்தியாவுக்குத் தலயாத்திரையோ உல்லாசப்பிரயாணமோ போவதற்கு கொழுப்பிற்குச் சென்று அங்கு தங்கி, அதிக பணத்தைச் செலவு செய்து போக வேண்டும். அந்த மாதிரியான தேவையற்ற செலவுகள் குறைக்கப்படுகிறது .

உலகம் சுருங்கிவிடுகிறது எனச் சொல்லியபடி இருந்தாலும், இப்படியான போக்குவரத்து தொடர்புகளே சொற்களை நிஜமாக்குகின்றன.
மக்கள் திலகம் எம்ஜி. ராமச்சந்திரன் அறுபதுகளில் சரோஜாதேவியுடன் சினிமா நடிகராக கொழும்பூடாக ஒரு புயல் நாளில் யாழ்ப்பாணம் வந்தது நினைவில் உள்ளது. அவர் நடித்த படங்களைப் பார்க்க எனது அண்ணன், மச்சான் இருவரும் கட்டுமரத்தில் கடலில் வீட்டுக்குத் தெரியாமல் சென்றதும் அதற்காக வீட்டிலிருந்தவர்கள் அவர்களைத் திட்டித்தீர்த்ததும் அவ்வேளையில் பாலகனாக இருந்த எனக்குத் தெரியும்.

என் போன்ற தமிழர்கள் எப்பொழுதும் குறைபடுவது இதுவரையும் எந்தவொரு தமிழக முதல்வரும் இலங்கைத் தமிழரை போருக்கு முன்போ பின்போ பார்க்க வரவில்லை . இந்த மனக்குறையைத் திருச்சியிலிருந்த பலாலி வரும் விமானசேவை தீர்க்குமா? ?

நன்றி -புதியதலைமுறை
—0—

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த தங்கேஸ்வரி

இலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த தங்கேஸ்வரி
கிழக்கிலங்கையில் பறிபோகும் தமிழ்ப்பெயர்கள்
முருகபூபதி
” தமிழ்மக்களுக்குப் பல குறைகள் உண்டு என்பதனை பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த சகல அரசியல் தலைவர்களும் ( கட்சிகளும் இயக்கங்களும்) ஏற்றுக்கொண்டு நீண்டகாலமாகிட்டது. அதனால் பல ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டன. மாநாடுகள் கூட்டப்பட்டன என்பது கண்கூடு.
ஆனால், ஒரு பெரும்பான்மை மொழி மற்றுமொரு சிறுபான்மை மொழியினை ஆக்கிரமித்து, அமிழ்த்தி சாகடித்துவிட்டு, தான் மட்டும் மேலெழும்பி உலகைப்பார்ப்பதானது நியாயமற்ற செயல் என்பது இங்கு கவனிக்கப்படுவதில்லை. படிப்படியாக வாழை மரத்தில் ஊசி ஏற்றுமாப்போல் அக்கைங்கரியம் நடைபெற்று வந்துள்ளது. அரச திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் அவற்றின் வெளியீட்டு பிரசுரங்கள் அரசுக்கு நிதி தேடித்தரும் அதிர்ஷ்ட லாபச்சீட்டுக்கள் என்பவற்றில் எல்லாம் அக்கைங்கரியம் சாதுரியமாகவே மேற்கொள்ளப்படுவது குறித்து பொதுவாக எவரும் சிரத்தைகொள்ளாமல் இருப்பதுதான் கவலைக்குரியது”

இந்த வரிகள் அடங்கிய ஒரு நீண்ட கட்டுரையை சுமார் 32 வருடங்களுக்கு முன்னரே (27-04-1985) வீரகேசரியில் ரிஷ்யசிருங்கர் என்ற புனைபெயரில் எழுதியிருக்கின்றேன். எனக்கு இந்தப்புனைபெயரைச்சூட்டியவர் அச்சமயம் வீரகேசரி பிரதம ஆசிரியராகவிருந்த ஆ. சிவநேசச்செல்வன்.
மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்டன!!??
இலங்கையில் தமிழ்மொழி அமுலாக்கலுக்கென அமைச்சும் இயங்குகின்றது.
1977 இற்குப்பின்னர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை, தாம் அங்கம் வகித்த தமிழரசுக்கட்சிக்கு “கையசைத்துவிட்டு” , அன்றைய ஜே. ஆரின். ஐ.தே.க. அரசுடன் “கைகுலுக்க” வந்தபோது அவருக்காக உருவாக்கப்பட்டது தமிழ் மொழி அமுலாக்கல், இந்துகலாசார பிரதேச அபிவிருத்தி அமைச்சு. அதன்பின்னர் இந்த அமைச்சு, பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசுகளினாலும் யாராவது ஒரு தமிழருக்கு – (அவ்வேளையில் ) அரசு ஆதரவாளருக்கு தரப்படும். இது தொடர்கதை.
ஆனால், தமிழ் மொழி அமுலாக்கலிலும் இதுதான் தொடர்கதை!?

எனது கட்டுரையில் வீதிகள், ஒழுங்கைகள், தெருக்கள் யாவும் ” மாவத்தைகளா”கிவிட்டதையும், கிராம எழுச்சி, கிராமோதயவாகிவிட்டிருப்பதையும், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் சதொசவாகிவிட்டதையும், கிராம எழுச்சிச்சபை, “கிராமோதய மண்டலய” என மாறியிருப்பதையும் இவ்வாறு மொழிக்கபளீகரம் செய்யப்பட்ட இதர தமிழ் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டி எழுதியிருந்தேன்.

இன்றும் இலங்கையில் நிலைமை அப்படியேதான் இருக்கிறது!!!
அரசின் அதிர்ஷ்ட லாபச்சீட்டுக்களின் பெயர்களைப்பாருங்கள்:
ஜாதிக சம்பத, சம்பத்ரேகா, செவன, கொவிசெத, அத கோடிபதி, நியத்த ஜய, கோடிபதி சனிதா, சுபிரி தெலக்‌ஷபதி.
இலங்கையில் மூவின மக்களும் ( இதில் இரண்டு தமிழ்ப்பேசும் சிறுபான்மை இனத்தவர்கள்) இந்த அதிர்ஷ்டத்திற்காக பணம் கொடுத்துவருகிறார்கள். இலங்கை நாளிதழ்களிலும் தினமும் வரும் அதிர்ஷ்ட லாப விளம்பரங்களில் தமிழைத்தேடவேண்டும்.

சில மாதங்களுக்கு முன்னர் 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு இலங்கை வங்கியின் கௌரவிப்பு விளம்பரத்திற்கும் “ரண் கெகுளு” என பெயர் சூட்டப்பட்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது.
இந்தப்பின்னணிகளுடன் மட்டக்களப்பில் வதியும் எழுத்தாளரும் சமூக ஆய்வாளரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வி கதிர்காமன் தங்கேஸ்வரி அவர்கள் நாம் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்திய மாநாட்டில் வெளியிட்ட கட்டுரைக்கோவையில் எழுதியிருக்கும், ” கிழக்கிலங்கையில் தொலையும் தொன்மைகளும் தொன்மைக்கிராமங்களும்” என்ற ஆய்வை பார்க்கலாம்.
அதிலிருந்து ஒரு பந்தி: எமது பண்டைய ” வன்னிமைகள்” சிங்களத்தில் “ரட்ட” எனவாகிவிட்டன. குளம் ” வெவ” எனவும் – உதாரணம்: கலாவெவ. மாதுறை என்பது” மாத்தற” ,தேவேந்திரமுனை என்பது “தெவினுவர”,மாயவனாறு என்பது, “தெதுறு ஓயா”, காளி தேசம் என்பது ” காலி”, கடம்ப நதி என்பது ” மல்வத்து ஓயா”, பட்டிப்பளையாறு என்பது “கல்லோயா”, முதலிக்குளம் என்பது “மொரவெவ” , மணலாறு என்பது ” வெலிஓயா”, பார்வதி கிராமம் என்பது ” பதவியா”, திருகோணமலை என்பது “திருக்கிணாமலை”, அரிப்புச்சந்தி என்பது ” அலியொலுவ” , யாழ்ப்பாணம் என்பது ” யாப்பனே” , எனவும் நாடுமுழுவதுமே தமிழ்ப்பெயர்கள் மாற்றப்பட்டுவருகின்றன.
(மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) இன்றைய பதவியா முன்னர் வண்ணாத்திக்குளம் என அழைக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறார்.)
“இப்படி தொலைந்துபோகும் தொன்மையையும் தொலைந்துபோன கிராமங்களைத் தேடுவதும் தமது கட்டுரையின் நோக்கமாகும்”- என்று பதிவுசெய்துள்ள தங்கேஸ்வரி, விரிவஞ்சி, கிழக்கே மாத்திரம் நிகழ்ந்துள்ள அதிர்ச்சிகரமான மாற்றங்களை அந்த ஆய்வில் விரிவாக எழுதியிருந்தார்.

இன்றும் இலங்கையில் பிரதேசம் பறிபோவது பற்றி யாராவது எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும்தான் இருக்கிறார்கள். இந்நிலையை மாற்றுவதற்கான செயல்தான் இல்லை.
” நாட்டை விட்டே ஓடிவிட்டீர்கள், நிலம் பறிபோவது பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?, ஊரின் பெயர் தொலைந்துவிட்டதே என்று ஏன் கலங்குகிறீர்கள்?” என்று இந்தப்பதிவைப்பார்க்கும் எவரும் எனக்கு எதிர்வினையாற்றலாம்!!!

எங்கிருந்தாலும் எங்கள் தாயகம் என்ற உணர்வுடன் வாழ்வதனால், எமது தேசத்தின் கோலம் பற்றி அங்கிருந்தே ஆய்வுசெய்தவர் பற்றி நான் எழுதிவரும் ” பெண்ணிய ஆளுமைகள்” தொடரில் இங்கு எழுதவிரும்புகின்றேன்.
சின்னத்தம்பி கதிராமன் – திருவஞ்சனம் தம்பதியரின் மகளாக 1952 இல் பிறந்திருக்கும் செல்வி தங்கேஸ்வரி, தனது ஆரம்பக்கல்வியை கன்னன்குடா மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக்கல்வியை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ரோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலையிலும் உயர்நிலைக்கல்வியை வின்ட்சன் மகளிர் கல்லூரியிலும் பெற்றவர்.
களனி பல்கலைக்கழகத்தில் தொல்லியலில் சிறப்புப்பட்டமும் பெற்றுள்ளார். தொல்பொருளியல் வரலாற்று ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்கும் தங்கேஸ்வரியின் தொடக்கால எழுத்துக்கள் 1972 இல் வீரகேசரியிலிருந்து ஆரம்பித்திருக்கிறது. நாட்டுப்புற கதைகளும் எழுதியவர்.

விபுலானந்தர் தொல்லியல், குளக்கோட்டன் தரிசனம், மாகோன் வரலாறு, மட்டக்களப்பு கலைவளம், கிழக்கிலங்கை வரலாற்றுப் பாரம்பரியங்கள், கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு முதலான ஆய்வு நூல்களை வரவாக்கியிருப்பவர்.
பிரதேச அமைச்சின் கீழ் இயங்கிய மட்டக்களப்பு மாவட்ட கலாசார திணைக்களத்தின் செயலாளராகவும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பிரிவில் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றியிருப்பவர்.

2004 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றமும் சென்றவர். தமது ஊரில் பல சமூக அமைப்புகளிலும் அங்கம் வகித்து இயங்கியிருக்கும் தங்கேஸ்வரி சமீபகாலமாக உடல்நலம் குன்றியிருப்பதாக அறிந்து, சிகிச்சைக்காக அவர் கொழும்பு வந்திருந்தபோது தொடர்புகொண்டு உரையாற்றினேன்.
அதற்கு முன்னர் 2015 இல் மட்டக்களப்பிற்கு நான் சென்றிருந்த வேளையிலும் தமது இல்லத்திற்கு அழைத்து உபசரித்தார்.
தங்கேஸ்வரி உடல்நலக்குறைபாட்டினால் கடந்த சில வருடங்களாக எழுதவில்லை. எனினும் அவருடைய ஆய்வுகள் எமது சமூகம் சார்ந்திருப்பதனால், தமிழ் அரசியல் தலைவர்களின் கண்களுக்கும் அவை எட்டவேண்டும்.
இவர் தமது ஆய்வுகளுக்காக வடக்கு – கிழக்கு அமைப்புகளின் பாராட்டு விருதுகளையும், கனடா தமிழ் சமூக கலாசார சம்மேளனத்தின் விருதும் பெற்றிருப்பவர். மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டவர்.
கலை, இலக்கிய ஆர்வலர். படைப்பிலக்கியத்துறையில் ஈடுபடாவிட்டாலும் சமூக ஆய்வுகளே இவரது எழுத்தூழியம். அதனால் இவரது ஆய்வுக்கட்டுரைகள் எமது ஈழத்தமிழர்களுக்கும் உலகடங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் ஆவணங்களாகத்திகழுகின்றன. தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உசாத்துணையாகவும் விளங்குகின்றன.

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பல ஊர்களும் குளங்களும் எவ்வாறு பெயர்மாற்றம் பெற்றிருக்கின்றன என்பதையும் தங்கேஸ்வரி விளக்கியிருக்கிறார்.
இலங்கைகுறித்தும் இங்கு பூர்வீக குடிகளாக வாழ்ந்த தமிழ் மக்கள் பற்றியும் றொபர்ட் நொக்ஸ், அட்சியன் ரேலண்ட், கிறிஸ்தோபர் சுவைட்சர், பேராசிரியர் கிளைக்கோன் ஆகியோர் தரும் ஆதாரங்களையும் முன்வைத்து, சமகாலத்தில் பறிபோகும் ஊர்கள் பற்றியும் ஊர்களின் பெயர்கள் தொடர்பாகவும் விரிவாக பதிவுசெய்துள்ளார்.
இந்த ஆய்வுக்கட்டுரை வெளியான சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் ( 2011) கட்டுரைக்கோவையின் பிரதிகள் மாநாட்டின் இலங்கை இணைப்பாளர் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனை தொடர்புகொண்டால் பெற்றுக்கொள்ளலாம்.
தற்பொழுது, இலங்கை அரசில் தமிழ்மொழி விவகாரம் தொடர்பான அமைச்சராகவிருக்கும் திரு. மனோ. கணேசன் அவர்களின் பார்வைக்கும் தங்கேஸ்வரியின் ஆய்வு பதிவாகியிருக்கும் குறிப்பிட்ட கட்டுரைக்கோவை செல்லவேண்டும்.
கலிங்க நாட்டிலிருந்து கி.பி. 1215 இல் இலங்கைக்கு படையெடுத்து வந்து ஆட்சிசெய்த மாகோன் பற்றி ஆய்வுசெய்திருக்கும் தங்கேஸ்வரி, இந்தத் தமிழ்மன்னன், இரண்டாம் பராக்கிரமபாகுவின் காலத்தில் பொலன்னறுவையை தலைநகராகக்கொண்டு ஆட்சி செலுத்தியதாகவும் பகைவர்கள் நெருங்கவே முடியாத வகையில் அரண்கள் அமைத்திருந்ததாகவும் இவை தொடர்பான விபரங்கள் தம்பதெனிய வம்சம் பற்றிய ஆய்வுகளில் சொல்லப்பட்டிருப்பதாகவும் விளக்கியிருக்கிறார்.

“சிங்கள வரலாற்று நூல்களில் மாகோன் வரலாறு உரிய முக்கியத்துவம் பெறவில்லை என்பதும் மகாவம்சம், சூளவம்சம் முதலிய ஆவணங்களைத்தொகுத்தவர்கள் பௌத்த பிக்குகள் என்பதால், அந்த ஆவணங்களில் அவன் புகழை மறைக்கும் வகையிலேயே பல செய்திகள் பதிவாகியுள்ளன என்பதும் இங்கு மனங்கொள்ளத்தக்கது” எனக்கூறும் தங்கேஸ்வரி உண்மையைத்தேடி உழைத்திருக்கிறார்.
ஒவ்வொரு தேசத்தினதும் வரலாற்றுக்கு முந்திய காலத்து நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியில் ஆய்வுக்குட்படுத்துவதே தொல்லியல் ஆய்வுகள் எனக்கூறும் தங்கேஸ்வரி, அதற்கு உசாத்துணையாக பின்வருவன அவசியம் எனவும் வலியுறுத்துகிறார்.
புவிச்சரிதவியல் ( Geology) , மானிடவியல் (Anthropology) , சாசனவியல் (Zithology) , நாணயங்கள் (Coins) , இலக்கியங்கள் (Literature) , ஓலைச்சுவடிகள் (Manuscripts), கர்ண பரம்பரைக்கதைகள் (Mythology), இவற்றோடு மேலாய்வு (Exploration), அகழ்வாராய்ச்சி (Excavation).
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்த நிலை இன்றில்லை. அரசியல் பாராளுமன்ற பாதையில் செல்லும்போது ஆட்சி அதிகாரத்திற்கு வருபவர்களுக்கு ஏதோ வகையில் துணைபோகும் தேசிய சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகளாக தெரிவாகும் தலைவர்கள்தான் நில ஆக்கிரமிப்பு, மொழி ஆக்கிரமிப்பு குறித்து குரல் எழுப்பவேண்டும்.
இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்கள் படிப்படியாக எவ்வாறு சிங்களமொழியில் அழைக்கப்பட்டு வருகின்றன என்பதையும் அரச திணைக்களங்களின் பிரசுரங்களிலும் சாதுரியமாக நிகழும் மொழிமாற்றங்களையும் தெரிந்துகொள்வதற்கு தங்கேஸ்வரியின் ஆய்வுகள் குறிப்பிட்ட சிறுபான்மைத்தமிழ் முஸ்லிம் தலைவர்களுக்கு உதவியாக இருக்கும்.
நேற்றைய செய்திதான் நாளைய வரலாறு! எனவே செய்திகளை தரும் ஊடகவியலாளருக்கும் பொறுப்புணர்வு அவசியமானது.

1985 ஆம் ஆண்டு வீரகேசரியில் ” ஒரு மொழியை பிறிதொரு மொழி சாதுரியமாக ஆக்கிரமிப்பது உகந்ததா?” என்ற கேள்வியை எழுப்பி எழுதியிருந்த எனது கட்டுரையின் இறுதியில்,
” ஆங்கிலம் சர்வதேச மொழியாகவும் அதேசமயம் விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு சிறந்த உசாத்துணையாகவும் ஊடகமாகவும் திகழ்ந்தது. அதனால் எழக்கூடிய குறைகளைக்கூட மன்னித்துவிட முடியும்.
அதேசமயம் ஒரு விடயத்திற்கு தமிழ்ப்பதம் இருக்கும்பொழுது அதனை பிரயோகிக்காமல் அரசகரும மொழியையே பயன்படுத்த முனைவதுதான் விந்தையானது வேதனையானது.

அவ்விதம் மாற்றீடு செய்யப்பட்ட சொற்பிரயோகங்கள் பலவற்றை இங்கே பட்டியல்போட்டு விவரித்துக்கொண்டு போகலாம். ஆனால், விரிவஞ்சி அதனைத்தவிர்க்கிறோம்.சகல இனத்தவர்களையும் சமத்துவமாக நடத்த முனைவதாகக் கூறும் அரச பீடத்தினர், இதுவிடயத்திலும் கருத்தூன்றிச் சிந்திக்கவேண்டும் என்பதற்காகவே இங்கு இதுபற்றிச்சுட்டிக்காட்டப்பட்டது.மொழிகள் வளர்ச்சியடையவேண்டுமே தவிரசிதைந்து சின்னாபின்னமாகிவிடக்கூடாது.அதுஎந்தமொழியானாலும் சரி!”
செல்வி தங்கேஸ்வரி, கிழக்கிலங்கையில் தமிழ்ப்பெயர்கள் மாறியிருக்கும் கோலத்தை விரிவாகச்சுட்டிக்காண்பித்துள்ளார். அவற்றில் சில:
குடும்பிமலை (தொப்பிகல)-முதலிக்குளம் (மொரவெவ) -பெரியகுளம் (நாமல்வந்த)-பெரியவிளாங்குளம் (மகாதிவுள்வெவ)-தீகவாபி(திகாமடுள்ள) -பனிக்கட்டி முறிப்பு (பனிக்கட்டியாவ)-குமரேசன் கடவை( கோமரன் கடவ)- வெல்வேரி (வில்கம)-வெண்டரசன் குளம் (வெண்டபுர)-கல்மட்டியான் குளம்( கல்மட்யாவ) -வானுர் (வான்வெவ)- புடவைக்கட்டு (சாகரபுர)-தம்பலகாமம் (தம்பலகமுவ)- வைரியூற்று (சுதேங்கபுர)- அரிப்புச்சந்தி(அலியொலுவ)-கல்லாறு – (சோமபுர)-நிலாப்பனை (நீலபேவ)- ஆண்டான்குளம் (ஆனந்தகம)-பருத்தித்தளவாய்(பதியந்தலாவ)
நடக்கவிருக்கும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் கிழக்கிலங்கையில் எதிரும் புதிருமாக சவால்விட்டுக்கொண்டிருக்கும் தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் கவனத்திற்கு இந்தச்செய்திகளையும் சமர்ப்பிக்கின்றோம்.இப்படியே சென்றால் புதிய அரசியலமைப்பு மட்டுமல்ல இலங்கைக்கென புதிய வரைபடமும் தோன்றிவிடும்!!! அதில்தமிழைத்தேடுவோம்!தமிழ் ,முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுக்கு இந்தப்பதிவை சமர்ப்பிக்கின்றோம்.இலங்கையின் வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை தனது தீவிர ஆராய்ச்சிகளினால் வெளிப்படுத்தியிருக்கும் எங்கள் இலக்கியக்குடும்பத்தின் சகோதரி செல்வி தங்கேஸ்வரி பூரண சுகம்பெற்று, மீண்டும் எழுத்தூழியத்தில் ஈடுபடவேண்டும் என வாழ்த்துகின்றோம்.

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவில் சில நாட்கள்

ஹொஸ்டனில் ஏறிய விமானம் இருபதினாயிரம் அடிகள் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. திரைப்படங்களில்லாத விமானப்பயணம். கையில் இருந்த புத்தகத்தை வாசித்தவாறே, விமானப்பயணத்தின் பாதையை தொலைக்காட்சித் திரையில் இடைக்கிடையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
தரை இறங்குவதாக விமானத்திலிருந்து அறிவிப்பு வந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தேன் . இறுதியில் தரையில் தட்டி, விமானம் நின்றது. அமெரிக்கர்கள் மட்டும் கைதட்டினார்கள் .
அப்போது மீண்டும் தொலைக்காட்சி திரையைப் பார்த்தபோது 8200 அடிகள் எனக்காட்டியது . ஏன் விமானம் தரையிறங்கவில்லை. அந்தரத்தில் நிற்கிறதா? என யோசித்தபடியே இருந்தபோது விமானத்தின் கதவுகள் திறக்கப்படும் என அறிவிப்பு வந்தது. என்னைச் சுதாரித்துக்கொண்டு இறங்கினேன்.
ஈகுவடோரின் தலை நகரமான கீற்றோ. அந்திய மலையின் முகட்டில் உள்ளது. உலகத்தின் அதி உயர்வான நாட்டின் தலைநகரம். இது பூமத்திய ரேகையில் உள்ளது. இந்த இடம் 1934 இல் ஸ்பானியர்களால் இன்கா அரசிடமிருந்து வெல்லப்பட்டது. தற்போது நாம் காணும் இந்த நகரம் இன்கா மன்னர்களால் கட்டப்பட்ட நகரின் சிதைவுகளின்மேல் ஸ்பானியர்களால் உருவாக்கப்பட்டது .
இன்கா அரசை 15 ஆம் நூற்றாண்டிலே கைப்பற்றினார்கள். அதற்கு முன்பு அதாவது கொலம்பசுக்கு முன்பு எனச் சொல்லப்படும் காலத்தில் பல பூர்வ குடிகள் 10000 வருடங்களாகத் இப்பகுதியில் தொடர்ச்சியாக வாழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளது
கொலம்பியாவில் உள்ள கற்றகேனா என்ற ஸ்பானியர்களால் கட்டப்பட்ட நகரைப் பார்த்தேன் . அங்கும் 400 வருடங்களுக்கு மேலான நகர அமைப்பை அப்படியே பாதுகாக்கிறார்கள். அதைப்பார்த்த எனக்கு இம்முறை கனடா சென்றபோது கீற்றோ நகரத்தைப் பார்க்கும் ஆசை ஏற்பட்டது. என்னோடு நண்பன் ஒருவன் வருவதற்குத் தயார் என்று சொல்லிவிட்டு கடைசியில் காலை வாரிவிட்டான். ஆனாலும் முன்வைத்த காலை பின்வைக்காது தனியாகப் புறப்பட்டேன்
மொழி தெரியாத நாட்டில் நடு இரவில் போய் இறங்கியபோது மெதுவான பதட்டமிருந்தது. ஆனால் குடிவரவு அதிகாரிகளது சிரித்த முகத்தை பார்த்தவுடன் அந்தப் பதட்டம் போய்விட்டது .
இதுவரை சிம்பாப்வே கிழக்குத் தீமோர் என நான் பயணித்த இடங்களில் புழக்கத்தில் இருந்த அமரிக்கா டொலரே இங்கும் பாவனையில் உள்ள பணமாகும்.

கீற்றோ தேவாலயங்கள் பல அமைந்த நகரம். இந்த தேவாலயங்கள் பிரமாண்டமானதாக அமைக்கப்பட்டுள்ளனன.
முதல் நாளிலே ஒழுங்கு பண்ணியிருந்த வழிகாட்டியுடன் சென்ற தேவாலயம் (Basilica del Voto Nacional), தென் அமெரிக்காவிலே மிகப்பிரமாணடமானது. அழகான வளைவுகளையும், வண்ண கண்ணாடிகளையும் கொண்டது. உயரத்தில் ஏறிப்பார்ககும்போது அதன் வளைவின் அழகை ரசிக்கமுடியும். வளைந்தபடி செல்லும் ஏணிகளில் ஏறுவது கொஞ்சம் கடினமானது. ஆனால் கஸ்டப்பட்டு ஏறியபின் அங்கு நின்று முழு தேவாலயத்தையும் பார்க்கலாம். இந்த தேவாலயத்தைக் கட்டியவர்கள் பூரணமாக்காமல் விட்டார்கள். இதைகட்டி முடித்தால் உலகம் அழியும் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்தது
சிறகுகள் கொண்ட மேரியின் சிலையொன்று கீற்றோ. மலைக்குன்றில் உள்ளது. பல இடங்களில் மலைகளில் இயேசுநாதரைப் பார்த்த எனக்கு வித்தியாசமாக இருந்தது.

கத்தோலிக்க மதத்தில் உள்ள கன்னிமேரி, இங்கு நமது காளிபோல் வெள்ளி சங்கிலி கொண்டு சாத்தானை போரிட்டுத் தோற்கடித்துவிட்டு தனது காலில் போட்டு மிதித்தபடி நிற்கிறாள். கன்னிமேரியின் உருவத்தில் ஒரு நடனத் தாரகையின் லாவகம், நளினம் தெரிகிறது. 12 நட்சத்திரங்களைத் தனது கிரீடமாக அணிந்து வெள்ளியில் செய்த சிறகுகள் கொண்டு தேவதையாகக் காட்சியளித்தாள் . தாய்மை தெரியச் சாந்தமாகத் தெரியும் வழக்கமான கன்னிமேரியின் சிலைகளுக்கு முற்றும் வேறாக இருந்தது.
இந்துமதம் மற்றும் கத்தோலிக்க மதத்தில் சிற்பிகள், ஓவியர்கள் , இலக்கியவாதிகளால் கற்பனையான கதைகளும் , வடிவங்களும், மற்றும் ஓவியங்களும் மதநம்பிக்கைக்கு அப்பால் மனித வாழ்வுக்கு வளமூட்டுகின்றன . இந்த இரண்டு மதங்களும் இல்லாதபோது வாழ்வில் எத்தனை விடயங்களை இழந்திருப்போம் .கத்தோலிக்க மதமில்லாத விதத்தில் இலக்கியத்தில் மாயயதார்த்தம் என்ற கதை சொல்லல் வந்திராது. இந்து மதமில்லாதபோது மிருகங்களைக் கொண்ட கதைகளே உலகத்தில் இருந்திராது. இந்த கதைகளற்ற குழந்தைகளில் வாழ்வு எப்படி வறுமையாக இருக்கும் என நினைக்க வைத்தது.

Posted in Uncategorized | 3 பின்னூட்டங்கள்

கூனன் தோப்பு -குடியேற்றம்


வாசிப்பு அனுபவம்
நடேசன்
கடற்கரை அருகே ஒரு ஆற்றின் இரு பக்கத்திலும் காலம் காலமாக அமைதியாக வாழும் கிறீஸ்தவர்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே நடந்த கலவரங்களையும் அதன் விளைவாக அழியும் அப்பாவி மக்களின் அவலங்களையும் பேசும் கதையிது . இதைப்

படித்தபோது இலங்கையில் நடந்த பல சம்பவங்கள் என் மனதில் வந்து போனது.
கொழும்பான் சேமது நானா இதில் முக்கியமான பாத்திரம் . கொழும்பில் இருந்து பல வருட காலம் வேலை செய்து விட்டு ஊருக்குத் திரும்பியவர். ஏழையாக கொழும்புக்கு தோணியில் சென்று மீண்டும் ஏழையாக ஊர் திரும்புகிறார்.
அவரது குடும்பத்தினரே முக்கிய பாத்திரங்கள். அவரது மகன் அலி, கிறீஸ்த்தவப்பெண்ணின் கோழியைத் திருடியதுதான் கலவரத்தின் ஆரம்பப்புள்ளி .

“ எப்படி ஒரு கோழித் திருட்டை மிகச் சிக்கலான மத மோதலாக்குவது என நீங்கள் கேட்கலாம்…?
கோழியை மட்டும் திருடியது வலுவான காரணமல்ல என்பதால் அந்த கிறீஸ்தவப் பெண்ணின் முலையைத் திருகியதாக வதந்தி கொழுத்தி வைக்கப்படுகிறது.

கிறீஸ்துவப் பெண்ணான லில்லியைக் காதலிக்கும் புஸ்பாபஸ் என்பவன் ஒரு முஸ்லீம் சண்டியனின் தம்பியை போட்டு உதைத்துவிடுகிறான்.

பிறகென்ன…? கிறீஸ்தவச் சண்டியர்களுக்கு இரத்தம் கொதிக்கிறது. ஹோமரின் இலியட்டில் ஹெலனுக்காக தொடங்கிய போராகியது.

கலவரம் சூடு பிடித்து, பலர் இரண்டு பக்கமும் இறக்கிறார்கள் . அந்தத் தருணத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பலர் அப்பாவிப் பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்குகிறார்கள். இந்த நேரத்தில் காவலுக்கு வந்த பொலிஸ்க்காரரும் தனது பங்கிற்கு ஒரு அப்பாவிச் சிறு பெண்ணிடம் தனது உடற்பசியைத் தீர்த்துக் கொள்ளுகிறார் . வள்ளங்கள்- வலைகள் -வீடுகள் எரிக்கப்பட்டு மக்கள் நடுத்தெருவிற்கு வருகின்றனர்

இந்தக்கலவரங்கள் நடக்குமெனத் தெரிந்த முஸ்லீம் பணக்காரர்கள், தங்களது குடும்பங்களுடன் நகரங்களுக்கு சென்று நட்சத்திர விடுதிகளில் தங்கி விடுகிறார்கள். ஏழை இஸ்லாமிய மக்கள் கிறீஸ்தவர்களுக்கு எதிராக ஜிகாத் என்று புனிதப் போரில் ஈடுபடுகிறார்கள்

இங்கும் கோழி அலி மற்றும் புஸ்பாஸ் என்ற ஆண்பாத்திரங்கள் அழகாக பின்னப்படுகின்றன. இந்த நாவலில் சிகரமாக நிற்பது உரையாடல்களே . தோப்பில் முகம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு கதாபாத்திரங்களால் சொல்லப்பட்ட நாவல் என்றேன். இங்கு கூனன்தோப்பு உடையாடல்களால் சொல்லப்படுகிறது
கதாசிரியர் சொல்வதை விட, பாத்திரங்கள் தங்கள் மொழிகளால் உரையாடும்போது கதை மனதில் நிற்கும். அதற்காகத்தான் ஆரம்பகால ஆங்கிலேய ஜெர்மனிய நாவல்களில் (Pamela By Pamela by Samuel Richardson , க The Sorrows of Young Werthe b Johann Wolfgang von Goethers கடிதங்களால் கதை சொன்னார்கள் .
தோப்பில் முகம்மது மீரானின் உரையாடல்கள் வட்டார மொழியுடன் அரேபிய சொற்களும் கலந்துள்ளதால் இதனைக் கூர்மையாக அவதானித்து படிக்கவேண்டும்.

கிறீஸ்தவர்களது தளபதியாக கலவரத்தில் ஈடுபடும் புஸ்பாஸ் என்பவன் காதர் என்ற முதலாளிக்கும் கிறீஸ்த்தவப் பெண்ணுக்கும் பிறந்தவன் . அவனை துலுக்கனுக்குப் பிறந்தவனாக கிறீஸ்த்தவர்கள் ஏசும்போது தனது தகப்பனை கொலை செய்யவும் அவன் நினைக்கிறான்.

அவனது தாயைப்பார்த்து “ மேகரயில உள்ளவனுக்கு இஞ்ச உள்ள பம்பளிஞ் வளுவோ இடம் கொடுத்ததனாலேதானே அவனுக இஞ்ச வரனுவோ “ என லில்லியின் தாய் கூறினாள்.

ஊரிலிருந்து சென்று நகரத்தில் தங்கும் ஹாஜியார் முதலாளிக்கு இரவாகியதும் சினிமா பார்க்க ஆசை . மனைவி மகளோடு படத்திற்குப் போகும்போது மகளிடம், “ முட்டாக்கு போடவேண்டாம் துலுக்கச்சீனு சொல்லுவாங்கோ “ வாப்பா மகளை விலக்கினார்.
அவர்கள் பார்த்த அந்தப்படம், 71 ஆம் வருடத்தில் வங்காள அகதிகள் உயிருக்காக ஓடிவருவதையும் அதில் குழந்தைகள் இறப்பதையும் மக்கள் வயோதிபர்களை முதுகில் ஏற்றியபடி செல்வதையும் அகதிகள் தப்பிக்கும்போது துப்பாக்கி குண்டடிபட்டு இறப்பதுமான அவலக் காட்சிகளைக் கொண்டது

“ காக்கா நம்மட ஊரிலும் இப்படித்தான் “ என சுலைமான் ஹாஜியாரிடம் காண்பித்தான்.

“அனுபவிக்கட்டும்” என்றார் ஹாஜியார்.

இப்படியாக பல இடங்களில் போலிகளையும் பொய்மைகளையும் தோலுரித்த வண்ணம் உரையாடல்கள் செல்கின்றன.

குடியேற்றம்
தோப்பில் முகம்மது மீரானின் கடைசி நாவல். காலச்சுவடு பதிப்பித்தது . இது மற்றய இவரது நாவல்களில் இருந்து மட்டுமல்ல, நாவல் வடிவத்திலிருந்தும் வேறுபடுகிறது. ஆங்கிலத்தில் உள்ள Frame Narrative வகையைச் சேர்ந்தது. பல கதைகள் இங்கு சொல்லப்பட்டு நாவலாகிறது.

ஒரு காலத்தில் கடல் வாணிபத்தில் கொடி கட்டிப்பறந்த மரைக்காயர் பிற்காலத்தில், அதே வியாபாரத்தில் ஈடுபட்ட பறங்கியரால் ஒடுக்கப்படுகிறார்கள். ஆனால், மரைக்காயர்கள் அவர்களது தலைவனான சின்னத்தம்பி மரைக்காயரது தலைமையில் விட்டுக் கொடுக்காமல் வீரப்போர் செய்கிறார்கள். காட்டிக் கொடுப்பும் துரோகமும் சேர்ந்து மரைக்காயர்கள் அழிக்கப்படுகிறார்கள்.
தலைவர்கள் அழிந்ததும் சாதாரண மக்கள் இதுவரையும் வாழ்ந்த கடற்கரைப் பிரதேசத்தை விட்டு விலகி உயிர் தப்பிவாழ உள்நிலப்பகுதிகளுக்கு வரும் போது, அவர்களுக்கு மிகவும் தாழ்வான எதற்கும் பிரயோசனமற்ற காட்டுப்பகுதியில் ஓடக்கரை என்ற பகுதியில் இடம் கிடைக்கிறது. அங்கு குடிசைகளில் வாழ்கிறார்கள்.

இவர்களது நிலத்திற்கு மேட்டுப்பகுதியில் வாழும் இராவுத்தர்கள், மரைக்காயர்களிடம் வாடகை வசூலிப்பதோடு இவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக நடத்துகிறார்கள் .

இப்படியான குடியேற்றத்தில் வாழ்பவர்களது கதைளே இங்கு நாவலாகிறது.

பொதுவாக இஸ்லாமியர்கள் எல்லாம் ஒரே மாதிரியான மார்க்கமாக நமக்குத் தெரிகிறபோதும் அவர்களிடையே உள்ள பணமுள்ளவன்
பணமற்றவன் இராவுத்தன்- மரைக்காயன் எனப்பல பேதங்கள்.

பல கதைகளை உள்ளடக்கிய நாவலில் மய்யத்தை ஏற்றும் சந்தூக் என்ற வண்டியை ஓட்டும் மைதீன் பாத்திரம் மிகவும் காத்திரமானது . மிகவும் ஏழ்மையானவன். , சமூகத்தில் ஒரு மய்யம் விழுந்தாலே அவன் வீட்டில் அடுப்பெரியும் . அவன் அதில் கிடைக்கும் பணத்தில் பெரும்பகுதியை குடித்துவிடுவான். மையம் எடுப்பதால் அவனது வண்டியில் மற்றவர்கள் எதுவித பொருட்களையும் ஏற்றவிடமாட்டார்கள் . ஒரு முறை முதலிரவுத் தம்பதிகளுக்கு படுப்பதற்கு மெத்தையை ஏற்றியற்காக அந்த மெத்தையை எரிக்கச் சொல்லி விட்டார்கள் .
வீரம் விளைந்த பெரியதம்பி மரைக்காயரின் வம்சமான மைதீன், அவமானத்தால் இந்த மையம் தள்ளும் வேலை வேணாம் என கடலில் மீன் பிடிக்கச் சென்றுவிடுகிறான் . ஆனால், அவனால் தொடர்ந்து மீன் பிடிக்க முடியவில்லை . காரணம் பறங்கியரால் கொலை செய்யப்பட்ட மூதாதையரின் இரத்தவாடை கடலில் வருவதால் மீண்டும் மய்யத்தை தள்ள வந்துவிட்டான்.
இதுபோல் தன் மகளை அடித்த கணவனை கண்டதும் செய்யக்கா மருமகனை அடித்துவிட்டார் இதனால் அவமானமடைந்தவன் தூக்குப்போட்டு இறந்துவிட்டான். அவனது மய்யத்தை புதைக்கப் பணமில்லாததால் அவனது உடல் மூன்று நாட்களில் அழுகிவிடுறது. இறுதியில் புதைக்கப்பட்டாலும் பலரது மரணங்களுக்கு அவனது ஆவி காரணமாகப் பேசப்படுகிறது.

எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதை, விறகு வெட்டி வேலனது கதை . முஸ்லீம் குமர் பல காலமாக கரையேறாது இருப்பதால் வேற்று மதத்தவனை சுன்னத்துப்பண்ணி நிக்கா செய்துவைக்க தாயும் கல்யாணத் தரகனும் திட்டம் போடுகிறார்கள். வேலனுக்கு சுன்னத்து சடங்கு நடந்து ஏழு நாட்கள் புண் ஆறியபின் கல்யாணத்திற்கு தயாராகிய அவன் காபீர் என பெண் மறுத்துவிடுகிறாள் . ஆனால் வேலன் கல்யாணத்திற்காக தரகனின் முன்னும் பின்னும் அலைகிறான்.

வீணாக அப்பாவி இளைஞர்கள் பணக்காரர்களால் ஐ சிஸ் (ISIS) ஆக இனம் காணப்பட்டு துன்புறுத்தப்படுவதும் இங்கு வருகிறது . முற்காலத்தின் பிரச்சினைகளும் தற்கால பிரச்சினைகளும் ஒன்றாகி – கிட்டத்தட்ட ஐந்து நுற்றாண்டுகள் வாழ்ந்த பாத்திரங்கள் மூலமாக இணைக்கப்பட்டு கதையாகிறது.
மிகவும் அடிமட்டத்து மக்களது கதை அழகாக சொல்லப்படுகிறது.
—0—

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

அஞ்சுவண்ணம் தெரு-தோப்பில் முகமது மீரான்


நடேசன்
தோமஸ் காடியின் நாவலான த மேயர் ஒவ் காஸ்ரபிரிஜ் ( Thomas Hardy – mayor Of Casterbridge) உலக நாவல்களின் வரிசையில் அதனது ஆரம்ப அத்தியாயத்திற்காக விதந்து பேசப்படும் ஆங்கில நாவல்.

அந்த நாவலின் முதலாவது அத்தியாயம் மனைவியை ஐந்து பவுனுக்காக சந்தையில் ஏலம் விட்டு ஒரு கடலோடிக்கு விற்கும் சம்பவத்தை சித்திரிக்கிறது. அதனை எழுதப்பட்டிருந்த முறையால் அந்த நாவலுக்குள் நம்மை உள்ளே இழுத்துச் செல்லும். அதன் பின்விளைவாக தொடரும் கதையை எவரால் விடமுடியும்? யாரால் புத்தகத்தை கீழே வைக்க முடியும் ?

தோப்பில் முகமது மீரானது அஞ்சு வண்ணம் தெரு தமிழ்நாவல் வரிசையில் தோமஸ் காடியின் நாவல்போல் முக்கியமானது. முதல் அத்தியாயம் மலையாளத்து மகாராஜா வீதிவலம் போகும்போது அவரைப் பார்த்த இஸ்லாமியப் பெண்ணைக்கண்டு, அவளது அழகில் மயங்கி அந்தப்பெண்ணை மணப்பதற்காக தனது பரிவாரங்களை அனுப்புவதாக தகவல் அனுப்புகிறார் .

அந்த மகாராஜாவின் ஆட்கள் வருவதற்கு முன் எட்டு ஆண்பிள்ளைகளைத் தப்பிச் செல்ல அனுமதித்து விட்டு, அவளின் தந்தை தனது பெண்ணை மகாராஜாவாக இருந்தாலும், ஒரு காபீரைக் திருமணம் செய்யக்கூடாது என்று ஒரு ஆழமான குழியை வெட்டி அந்த குழியில் புதைக்கிறார்.

புதைக்கப்பட்ட அந்தப் பெண் பிற்காலத்தில் அந்த ஊருக்கே தாயாகிறாள்- தெய்வமாகிறாள். அவளது சமாதியருகே தைக்கா பள்ளிவாசல் கட்டப்பட்டு நம்பிக்கைகள் தொன்மக் கதைகள் பின்னப்படுகின்றன.

சோழ மற்றும் பாண்டிய நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு குடியேறிய ஐந்து இஸ்லாமிய நெசவாளர் குடும்பங்களால் உருவாகியதே இந்த அஞ்சுவண்ணம் தெரு நாவலின் ஆரம்பப்புள்ளி. இங்கு வாழ்பவர்கள்
புதைக்கப்பட்ட அந்தப் பெண்ணைத் தங்கள் காவல் தெய்வமாக நினைக்கிறார்கள்

அஞ்சுவண்ணம் தெருவில் மேற்குப்புறத்தில் உள்ள தாருல் ஸாஹினா என்ற வீட்டின் மாடி அங்குள்ள தைக்கா பள்ளியைவிட உயரமாக உள்ளது என்பதால் அந்த வீட்டினர் நோய் , வறுமை, மற்றும் பாம்பு பேய்களால் துன்பப்படுவார்கள் என்ற சாதாரண மக்களின் நம்பிக்கையே நாவலின் ஊடுபாவாக இறுதிவரையும் இழையோடுகிறது .

வீட்டில் இருந்து கெட்டு நொந்த ஷேக் மதார் சாகிபிடமிருந்து வாப்பா அந்த வீட்டை வாங்கி மகளையும் , மருமகனையும் குடிவைப்பதாக – வாப்பாவின் மகன் சொல்வதாக கதை தொடங்குகிறது.

2008 இல் பதிப்பிக்கப்பட்ட இந்த நாவலில் தற்கால அரசியல் தெளிவாக பேசப்படுகிறது. இதுவரையும் தர்ஹா வழிபாட்டுடன் தக்கலை பீரப்பா பாடலுடன் , ஆலீம்புலவரின் மொஹராஜ் மாலை என்ற காவியமும் பாடியபடி மலேசிய தொப்பியும் அணிந்தபடி வழிபாடு நடத்தியவர்களை, புதிதாக சவூதி சென்று வந்த வஹாபிய கொள்கையைக் கொண்ட தௌஹீத் கட்சியினர் எதிர்க்கின்றனர்.
தெருவெங்கும் இரத்த ஆறு ஓடுகிறது. தொன்மையான தைக்கா மசூதி, தொழுவதற்கு எவருமற்று அழிவதுடன், ஊரில் வெளிநாட்டு பணத்தில் புதிதாக தௌஹீத் கட்சியினரின் ஒரு பள்ளி கட்டப்படுகிறது. ஆனால், அதில் ஏற்படும் மோதலில் அந்த மசூதியின் நிர்வாகம் இந்து வக்கீலின் கையில் செல்வதாக நாவல் முடிகிறது.

இருதரப்பின் சண்டையில் இங்கும் அப்பாவிகள் இறக்கிறார்கள் . எந்தப் பகுதியிலும் சேராது சுக்குக் காப்பி விற்று வயிறு வளர்க்கும் இஸ்மாயில் மரணமடைகிறான் . இருபகுதியினரும் அவனைத் தியாகியாக்கிறார்கள்.

இந்த நாவலில் எனக்கு பிடித்த விடயம்: நாவல் சம்பங்களுக்குப் பதிலாக வலிமையான கதாபாத்திரங்களால் உருவாகி இருக்கிறது .
மிகவும் ஏழையாக தெருவில் வாழும் மம்மத்தமா என்ற பாத்திரம் மறக்கமுடியாதது. ஆதிகாலத்து வீரனின் வழி வந்து விதவையாகியதால் திண்ணைகளில் படுத்துறங்கி வாழ்க்கை நடத்தியபோதிலும், தனது நாக்கை வாளாக்கி அந்த தெருவுக்கே ராணியாக வாழ்கிறாள். அவளிடம் பலரது இரகசியங்கள் இருப்பதால் மற்றவர்கள் பயந்துவிடுகிறார்கள். மூன்று குழந்கைளுடன் நெருப்பாக வாழும் அவளது வாழ்க்கையில் ஒரு முறை குளிர்ந்திருப்பது மிகவும் அழகாக நாவலில் வெளிவருகிறது.

மம்மத்தமாவின் நாக்கின் கூர்மை- அவளது வார்த்தைகளில்:

“ அவன் அப்பன் பெருநாள் தொழுகைக்குப் போகமாட்டான். உம்மாக்காரி வட்டி வாங்கி தின்னிட்டு கொழுத்துப் போய்கிடக்குதா. அவொ பிள்ளைக்கு புதிசா ஒரு இஸ்லாம் கெடச்சிருக்கோ? தெருவை ரண்டாக்கம் இஸ்லாம்- “

அபூஜலீல் என்ற தவ்கீத்தவாதியையும் அவனது கூட்டத்தையும் மீன்கத்தியுடன் தனி ஒருத்தியாக எதிர்க்கும் மம்மத்தமா தமிழ் இலக்கியத்தின் மறக்கமுடியாத பாத்திரம்.

மொஹராஜ்மாலை என்ற காப்பியத்தைத் தந்த வம்சத்தில் வந்த வாஜா அப்துல் லத்தீப், ஹஜ்ரத் என்ற காப்பியத்தை பாடி குர் – ஆனை மனப்பாடம் செய்து ஓதுபவர் . மிகவும் செல்வாக்காக வாழ்ந்தவர். காரில் வந்து அழைத்தபோதே பிரசங்கத்திற்கு செல்லும் அவர், இலக்கியங்களை அழிக்கவேண்டுமென குரலெழுந்தபோது குமுறுகிறார். அவர் மேலட்டை கிழிந்த மொஹராஜ் மாலையை நெஞ்சுடன் அணைத்தபடி அதன் வரிகளைப் பாடியபடி தர்கா மற்றும் மக்கள் உள்ள இடங்களில் அலைகிறார் . பிற்காலத்தில் மனைவி மகனால் கவனிக்கப்படாது உடையற்று பாயில் ஒட்டியபடி வாழும் பாத்திரமாகிறார்.

மனிதர்களின் கனவுகள் சில இடங்களிலும் தொன்மமான நம்பிக்கைகள், பல இடங்களிலும் கதையை நகர்த்துகின்றன. பல இடங்களில் நகைச்சுவை நாவலின் மீது படர்ந்துள்ளது . அதில் முக்கியமானது: தாருல் ஸாஹினா என்ற வீடு தைக்கா பள்ளி உயரமாக இருப்பதால் அங்கு வாழ்பர்கள் நொந்துபோவார்கள் என்ற கருத்தே கதையின் ஓடுபாவாக இருந்த விடயம் மர்மமாக இறுதி வரையும் இருந்து அவிழும் விதம் நாவலை கீழே வைத்தபோது சில நிமிடங்கள் புன்முறுவலை தொடரவைத்தது. .

தற்காலத்தில் உலகமெங்கும் இஸ்லாமிய சமூகத்தின் இரு பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று மோதுவது போன்று, இந்த நாவலிலும் மோதுகின்றன. பாரம்பரியத்தினதும் அடிப்படைவாதிகளினதும் இழுபறிகள் கொலைகள் இங்கும் நடக்கின்றன. யுத்தங்கள் அரச மற்றும் இராணுவத்தின் தலையீடுகள் இங்குமுண்டு. அணுவைத் துழைத்து ஏழ்கடலை புகுத்திய குறள் என்பதுபோல் இந்த இந்த அஞ்சுவண்ணம்தெரு நாவல் இருக்கிறது.
—0—

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இலங்கை மாணவர் கல்வி நிதியம்- வருடாந்த பொதுக்கூட்டமும்

இலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 – 2019 )
அவுஸ்திரேலியா

31 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும்
வருடாந்த பொதுக்கூட்டமும்

இலங்கையில் நீடித்த போர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, 1988 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் முப்பத்தியோராவது ஆண்டு நிறைவு நிகழ்வும், வருடாந்த பொதுக்கூட்டமும் இம்மாதம் 19 ஆம் திகதி ( 19-10-2019) சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு சனசமூக நிலையத்தில் ( Vermont South Community House – Karobran Drive, Vermont South VIC 3133) நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெறும்.

இதுவரையில் நூற்றுக்கணக்கான அன்பர்களின் ஆதரவுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிய கல்வி நிதியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான செயல் அமர்வும், மாணவர்களின் முன்னேற்றம் பற்றிய தகவல் அமர்வும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு நிதியத்தின் உறுப்பினர்களையும், மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்களையும் அன்புடன் அழைக்கிறது இலங்கை மாணவர் கல்வி நிதியம்.

இந்நிகழ்வில் கிடைக்கப்பெறும் நன்கொடைகள் நிதியத்திற்கே வழங்கப்பட்டு, மாணவர்களின் நிதிக்கொடுப்பனவில் சேர்த்துக்கொள்ளப்படும்.

2018 – 2019 காலப்பகுதிக்கான ஆண்டறிக்கை – நிதியறிக்கை என்பனவும் இந்நிகழ்வில் சமர்ப்பிக்கப்படும்.
இலங்கை மலையகத்தில் வறுமைக்கோட்டில் வதியும் ஏழைத்தமிழ் மாணவர்களுக்கும் கல்வி நிதியம் உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளதுடன், அவர்கள் தொடர்பான தகவல் அமர்வும் இக்கூட்டத்தில் இடம்பெறவுள்ளது.

இம்மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்களையும் வருகை தருமாறு கல்வி நிதியம் அன்புடன் அழைக்கின்றது.

மேலதிக விபரங்களுக்கு:

முருகபூபதி ( தலைவர் ) 0416 625 766
திவானா கிருஷ்ணமூர்த்தி ( செயலாளர்) 0402 034 152
வித்தியா ஶ்ரீஸ்கந்தராஜா ( நிதிச்செயலாளர்) 0404 808 250
விமல் அரவிந்தன் ( துணை நிதிச்செயலாளர் ) 0414 446 796

இணையத்தளம்: http://www.csefund.org

மின்னஞ்சல்: kalvi.nithiyam@yahoo.com

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக