கனடா – ரொறன்ரோவில்  அநுரகுமார திசநாயக்கா  நிகழ்த்திய உரை:2 .மாகாண சபைகள்.

இப்பொழுது பேசப்படுகின்ற 13 ஆம் திருத்தச் சட்டம், 13 ப்ளஸ், மாகாண சபை போன்றவை தொடர்பாக எங்களுடைய நிலைப்பாடு. நாங்கள் பொதுவாக நம்புகின்ற விதத்தில் மாகாண சபைகள் இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு அல்ல  என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால்,  இன்று அந்த மாகாண சபைகள் என்பது அந்த குடிமக்களின் உரிமையாகி இருக்கிறது. இன்று அந்த மாகாண சபைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. அது அவர்களின் உரிமையாக இருக்கிறது. அது அவர்களினால் வென்றெடுக்கப்பட்ட உரிமையாக கருதப்படுகிறது. அதை இப்போது இல்லாமல் செய்ய முடியாது.

அப்படியானால் இப்போது என்ன செய்ய வேண்டும்? அவர்கள் மாகாண சபை என்பது தங்களுடைய உரிமை என்று ஏற்றுக் கொள்கிறவர்களாக இருந்தால், அதில் இருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்த்து,  அதை அவர்களுடைய உரிமையாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும். நாங்கள் அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம்.

அது தீர்வா?  இல்லையா?  என்பதைப் பற்றி எதிர்காலம் முடிவெடுக்கட்டும். அது அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்ததா ?  இல்லையா  ?  என்பதை அவர்களுடன் பேசுவோம். ஆனால்,  தற்போது அவர்கள் அந்த அமைப்புக்குள் தங்களுடைய அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்று நம்புகிறவர்களாக இருந்தால்,  அதை நாங்கள் பாதுகாக்க வேண்டும். ஆகவே, அவர்களுக்கு அரசியலுக்குள் – அரசியல் முறைமைக்குள் நியாயமான முறையில் கலப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.

நான்காவது –  ஏனைய பொதுவான விடயங்கள். அவற்றில் சில விஷயங்கள் அரசியல் விஷயங்கள். நான் உங்களுக்கு முன்பும் சொல்லியிருக்கிறேன். உண்மையான விஷயங்கள் என்ன? நான் முதல் விடயமாக சொல்ல விரும்புவது, இனிமேல் வடக்கில் எக்காலத்திலும் ஒரு யுத்தம் ஏற்படப் போவதில்லை. ஆனால், வடக்கிலே இருக்கின்ற பெற்றோர்கள்,  பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதே யுத்தம் செய்வதற்காகத்தான் என்று தெற்கில் ஒரு படத்தைக் காட்ட முயற்சிக்கிறார்கள்.

  “மீண்டும் புலிகள் உருவாகுகிறார்கள், புலிகள் மீண்டும் புத்துயிர் பெற்று இருக்கிறார்கள்.  “ என்ற பிரசாரங்கள். அதெல்லாம் நடக்கப் போவதில்லை. அது ஏன்? யுத்தத்தால் தென்னிலங்கையில் நடந்த வற்றையெல்லாம் நாம் வெறும் சம்பவங்களாக பட்டியலிடலாம்.

கொழும்பு மத்திய வங்கியின் மீதான தாக்குதல், எண்ணைக் கூட்டுத்தாபனத்தின் மீதான தாக்குதல், கோட்டை புகையிரத நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டது, பஸ்களில் குண்டுகள் வெடித்தன என்று அச்சம்பவங்களை ஒரு அப்பியாச புத்தகத்தின் இரண்டு மூன்று  பக்கங்களில் எழுதலாம்.

ஆனால்,  வடக்கில்  முப்பது வருடங்களாக யுத்தம்தான் இருந்தது. வடக்கிலே இயக்கங்களுக்கு இடையிலான மோதலும் இருந்தது. இந்திய ராணுவம் வந்தபொழுது யுத்தம் இருந்தது. நாங்கள் வடக்கிற்கு சென்ற பொழுது அவர்கள் எங்களுக்கு காட்டினார்கள்.

 “இதோ,  இது இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பாதிப்பு, இது இலங்கை இராணுவத்தால் சுடப்பட்ட அடையாளம்.  “ இவ்வாறு ஒரே வீட்டில் காட்டினார்கள்.                ஏனென்றால்,  அங்கே முப்பது  வருடங்களாக யுத்தம்தான் இருந்தது. தென் இலங்கையில் யுத்தத்தோடு தொடர்பான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதுவும் பெரும் பாதிப்புக்களை கொடுத்துத்தான் இருக்கின்றன.

ஆனால்,  வடக்கில் நடந்தது முழு யுத்தம். வடக்கின் தாய் தந்தையர்கள் தங்களுடைய பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பது யுத்தத்துக்கு அனுப்புவதற்காக அல்ல. தென்னிலங்கைத்  தாய்மார்கள்,  தந்தைமார்கள் போலவே அவர்களுக்கு நல்ல கல்வி, நல்ல தொழில் தேடிக் கொடுத்து, நல்லதொரு திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து, வீடு வாசலைக் கட்டிக்கொடுத்தல் போன்ற எதிர்பார்ப்புத்தான் அவர்களுக்கும் இருக்கின்றன.

அந்த எதிர்பார்ப்புக்கான கதவுகளை நாங்கள் அவர்களுக்கு மூடிவைத்திருக்கிறோம். எனவே உண்மையிலேயே அடி மட்டத்தில் வாழும் அந்தத் தமிழ் மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. அந்த கடந்த  முப்பது வருட கால யுத்தத்தின் காரணமாக வடக்கிற்கு அவ்வாறான பல்வேறு வாய்ப்புகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. அவர்களுடைய வாழ்க்கைக்கான பல்வேறு வாய்ப்புகள் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றன.

 ஆகவே அந்த வடக்கை குறிப்பாக மையப்படுத்தி அந்த மக்களுடைய நாளாந்த வாழ்க்கையை மேம்படுத்தக் கூடியவகையில் மிக வேகமான அபிவிருத்தித்  திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட  வேண்டும். ( கை தட்டல் )

ஏனெனில் அந்த மக்களுக்கு முப்பது வருட வாழ்க்கை இல்லாமல் போயிருக்கிறது. எனவே நாங்கள் இந்தப் பிரச்சினையை இரண்டு விதமாக பார்க்க வேண்டும்.

மேற்தளத்தில் அரசியல் பிரச்சினை, அடித்தளத்தில் மக்களின் நாளாந்த பிரச்சினை. இந்த இரண்டுக்கும் தீர்வை பெற்றுக் கொடுப்பதுதான் எங்களுடைய நிலைப்பாடாக இருக்கின்றது. ( கைதட்டல் ).

இதையேதான் நாங்கள் வடக்கிலும் சென்று சொல்லுகிறோம்.  தெற்கிலும் சொல்லுகிறோம். நாங்கள் பல்வேறு வட- கிழக்கு அரசியல்வாதிகளோடும் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம். அவர்களோடு பேசுகிறோம்.

  “ நாங்கள்  முப்பது  வருடங்களாக  ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டோம். இறுதியாகக் கிடைத்த பலன் என்ன? இன்னும் முப்பது  வருடங்கள்  மோதிக்கொள்வதா? இன்னும் முப்பது  வருடங்கள் சண்டை பிடிப்பதா?

அல்லது நாங்கள் அனைவரும்  சேர்ந்து வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் இருக்கின்ற மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணப்போகின்றோஂமா? ஆகவே,  நாங்கள் இவைகள் தொடர்பாக அந்தந்த அரசியல் கட்சிகளுடன் பேசுவதற்கும்  தயாராக இருக்கிறோம்.                                ( கைதட்டல் )

அடுத்ததாக மனோரஞ்சன் அவர்கள் கூறிய அடுத்த விடயம். அதாவது மக்களுடைய மனங்களில் இருக்கின்ற அந்த எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக எங்களுக்கு உணர்வு பூர்வமாக புரிதல் இருக்கிறதா என்பதே?

எங்களுக்கு மக்களுடைய வேதனைகள் –  துக்கம் என்பன ஒரு ஃபேஷன் அல்ல. நாங்கள் வாழ்க்கையின் வேதனைகளை நன்றாக உணர்ந்த மனிதர்கள். ஒரு பிள்ளை வறுமையில் இருக்கும் பொழுது அந்தப் பிள்ளைக்கு இல்லாமல் போவது வெறும் ஒரு நேர உணவு மட்டுமல்ல. நாங்கள் நினைக்கலாம் ஒரு குடிமகன் ஏழையாக இருப்பதால் ஒரு வேளை உணவு மட்டும்தான் கிடைப்பதில்லை என்று…. அப்படி இல்லை.

இந்த சமூகத்தில் பல்வேறு விடயங்கள் அவர்களுக்கு கிடைக்காமல் போகின்றன. ஒரு மனிதன் என்கின்ற கௌரவமும் இல்லாமல் போகின்றது. ஒரு பாடசாலையில் ஆசிரியர் மிகவும் விரும்புவது நல்ல வெள்ளை நிறம் கொண்ட கொழு கொழுன்னு இருக்கும் பிள்ளையைத்தான். வறுமையால் காய்ந்து சுருங்கிப் போன குழந்தையை அல்ல. அவர்கள் கல்வியிலும் ஒதுக்கப்படுகிறார்கள்.

பொலிசுக்குப் போய் ஒரு முறைப்பாடு செய்யப் போனாலும் அங்கே பொலீசார் நீண்ட நேரம் தாமதிப்பது ஒரு வறுமைப்பட்டவரின் முறைப்பாட்டை பதிவு செய்வதற்குத்தான். ஒரு வங்கிக்குப்  போனால் வரிசையில் இறுதியாக நிற்க வைக்கப்படும் ஒருவர் வறுமையானவராகத்தான் இருப்பார்.

எனவே வறுமை என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினை அல்ல. அது ஒரு சமூகப் பிரச்சினை. இது நாங்கள் அனுபவப்பட்டது. நான் தனிப்பட்ட முறையில் அனுபவப்பட்டது. இந்த வறுமை என்பது சாதாரண சமூக வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பிரச்சினை. எனவே,  சாதாரண குடிமக்கள் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை –  எதிர்பார்ப்பு,  அவற்றை அவர்கள் எப்படி உணர்கிறார்களோ அதைப் போலவே எங்களாலும் அவற்றை உணர முடிகிறது.

மக்கள் எவ்வளவு நம்பிக்கையோடு இந்த நாட்டில் தலைவர்களை உருவாக்கினார்கள், அரசாங்கங்களை உருவாக்கினார்கள். நாட்டில் இரண்டு முறை மக்கள் அந்த சந்தர்ப்பத்தை எமது நாட்டில் தலைவர்களுக்கு கொடுத்தார்கள். அதாவது எமக்குத் தெரிந்த காலத்தில். ஒருமுறை சந்திரிக்காவுக்கு கொடுத்தார்கள்.

17 வருடகால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை தோற்கடித்து சந்திரிக்கா அதிகாரத்துக்கு வருகின்ற பொழுது மக்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பும் புத்தெழுச்சியும் காணப்பட்டது. ஆனால்,  சந்திரிக்கா மிகக் குறுகிய காலத்திலேயே அந்த மக்களின் எதிர்கால எதிர்பார்ப்பையும் புத்தெழுச்சியையும் இல்லாமல் செய்துவிட்டார்.

இரண்டாவது கோத்தபாய.  அவர்களுக்கு 2019 இல் சந்தர்ப்பம் கிடைத்தது. இலங்கையில் அவ்வளவு காலமும் அரசியலில் ஈடுபடாத சாதாரண மனிதர்கள் கோத்தபாயவின் மேடையில் ஏறினார்கள். அவ்வளவு காலமும் இலங்கை அரசியலில் அவ்வளவு ஆர்வம் காட்டாத வெளிநாட்டில் வாழ்ந்த இலங்கையர்கள் கோத்தாவுக்கு வாக்களிப்பதற்காக விமானங்களை வாடகைக்கு அமர்த்தி இலங்கைக்கு வந்தார்கள். மிகப் பெரிய துறைசார் நிபுணர்கள் கோத்தாவிற்கு ஆதரவாக செயல்பட்டார்கள். ஆனால்,  கோத்தாபய,  ஓரிரு வருடங்களுக்குள்ளேயே அந்த மக்களுடைய எதிர்பார்ப்புக்களை எல்லாம் சிதறடித்தார்.

அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை சிதறடிப்பதற்கு எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எங்கள் நாட்டின் மக்கள் பாவம். அவர்கள் பாவம்… நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் எவ்வளவு ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்? எவ்வளவு எதிர்பார்ப்புக்களுக்குப் பின்னால் போய் அந்த எதிர்பார்ப்புகள் சீரழிக்கப்பட்டுள்ளன?

எனவே எங்களுக்கு அந்த மக்களுடைய உணர்வுகள், எதிர்பார்ப்புகள், அவர்களுடைய இதயத்தில் உள்ள இதயத் துடிப்பு நன்றாக விளங்குகின்றது. அந்த இதயங்களின் வலி – அதனுடைய பிரச்சினைகள் எல்லாம் எங்கள் அரசியல் மேடைகளை அலங்கரிப்பதற்கான விடயங்கள் அல்ல. நாங்கள் வறுமையைப் பற்றி பேசுவது வெறும் பெஷனுக்காக அல்ல.

 நாங்கள் வறுமையைப் பற்றிப் பேசும்போது எங்களுடைய வாழ்க்கையிலே உண்மையாக நாங்கள் முகம் கொடுத்து அனுபவித்த அந்த உணர்வோடுதான் பேசுகிறோம்.

ஆகவே,  மனோரஞ்சன் சொன்ன விஷயத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனவேதான் நாங்கள் சொல்கிறோம்:  எங்களுக்கு எந்தவிதமான நியாயமான உரிமையும் கிடையாது அந்த மக்களுடைய அந்த உணர்வுகளை எதிர்பார்ப்புகளை சிதறடிப்பதற்கு. அந்த மக்களை ஒரு சிறிய அளவில்கூட ஏமாற்றுவதற்கு எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ( கைதட்டல் )

அது போதும்.. அது போதும்…அந்த மக்கள் பாவம். இல்லையா…? அரசாங்கத்தை உருவாக்குகிறார்கள், அரசாங்கத்தை கவிழ்க்கிறார்கள்…எதிர்பார்ப்புகளுடன் பட்டாசு கொளுத்துகிறார்கள், பாற்சோறு உண்கிறார்கள் அவர்கள் என்னதான் செய்யவில்லை..? ஆனால்,  ஓரிரு வருடங்கள் தான் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் … அவை மீண்டும் சிதறடிக்கப்படுகின்றன.

எனவே நாங்கள் நினைக்கிறோம் அந்த மக்களுடைய அடி மனதுகளின் வேதனைகளில் இருந்து வருகின்ற உணர்வுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் அரசியலை நாங்கள் செய்ய வேண்டும் என நினைக்கிறோம். எனவே நாளைக்கும் உங்கள் முன்னால் வந்து எங்களால் இப்படிப் பேசக் கூடியதாக இருக்க வேண்டும். ஆகவேதான் முதலிலேயே உங்களுக்குச் சொன்னேன்.  நாங்கள் அந்த நம்பிக்கையை பாதுகாப்போம். ஆகவே நாளையும் உங்கள் முன்னால் வந்து இப்படியே பேசக்கூடிய ஒரு அரசை நாங்கள் உருவாக்குவோம்.

ஆகவே,  இனப் பிரச்சினை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்னுடைய கருத்துக்கள்  இவைதான்.  அனைவருக்கும் நன்றி.

—0—

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.