கருணாகரன்
—————————————
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் நீண்டகாலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் எழுத்தாளர் நடேசன். அங்கே 13 ஆண்டுகள் உதயம் என்ற பத்திரிகையை நண்பர்களோடு இணைந்து சவால்களின் மத்தியில் வெளியிட்டார். தமிழ்ப்பொது மனப்பாங்குக்கு மாற்றாக – யதார்த்தமாகச் சிந்திக்கும் நடேசன், மனித உரிமையாளராக – அவுஸ்ரேலியாவில் குடியேற முற்பட்ட இலங்கை அகதிகளின் உரிமைகளுக்காக உழைத்தவர். போருக்குப் பிந்திய இலங்கையில் அமைதிப் பணிகளிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான உதவிப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இலக்கியத்தில் வண்ணாத்திகுளம், உனையே மயல்கொண்டு, அசோகனின் வைத்தியசாலை என மூன்று நாவல்களும் வாழும் சுவடுகள் பாகம் 01, பாகம் 02 என இரண்டு அனுபவக் கதைத்தொகுதிகளும் மலேசியன் ஏர்லைன் 370 என்ற சிறுகதைத்தொகுதியும் என ஆறு நூல்களை எழுதியிருக்கிறார். அரசியல், பயணம், இலக்கியம் என தொடர்ந்து எழுதிவரும் நடேசனின் இணையத்தளம் http://noelnadesan.com இலங்கை வந்திருந்த நடேசனிடம் கிளிநொச்சியில் வைத்து 2015.01. 27 அன்று இந்த நேர்காணல் செய்யப்பட்டது.
1. மலேசியன் ஏர்லைன் 370 கதைகளின் உள்ளடக்கம் அல்லது அவற்றின் அரசியல் என்ன?
சிலகதைகள் இலங்கை அரசியல் புறவயப் பின்னணியில் எழுதப்பட்டவை. ஏனையவை அக விசயங்கள் சம்மந்தமானவை. குறிப்பாக உறவுகள் சம்மந்தப்பட்டவை. ஏனையவை, உளவியற் பிறள்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை.
2. ஈழத்தமிழ் இலக்கியம் பொதுவாகவே அரசியல் அழுத்தம் கூடியது என்ற அபிப்பிராயம் உள்ளது. இந்த அரசியலால் பலபரிமாணமுள்ள இலக்கியத்தை ஈழத்தமிழ் இலக்கியம் பெறத் தவறுகின்றது என்று சொல்லப்படுகிறதே!
ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்வனுபங்களின் மூலமாகப் பெற்ற அனுபவங்களைப் பதிவு செய்கிறார்கள் எழுதுகிறார்கள். கதை, கவிதை, நாவல் என்று எழுதுகிறார்கள். அது அவர்களுடைய தவறல்ல. அவர்களுடைய வாழ்க்கைச் சூழலில் இருந்து படைப்புகள் வருகின்றன. ஆனால் பலரது படைப்புகள் பதிவுகளைக் கடந்து சாகவரம் பெற்ற படைப்புகளாக மாறத் தவறிவிடுகின்றன. மேலும் போராட்ட காலம் முடிந்து சகஜவாழ்க்கைக்குத் திரும்பி வரும்போது இந்தப் பதிவுகள் சரித்திரத்தின் சிறு துண்டுகளாக மறக்கப்பட்டு விடுவதற்கான சாத்தியங்கள் உண்டு. மனித குலத்தின் அடிப்படையான அன்பு, காமம், விரோதம், குரோதங்களை இலக்கியமாக்கும்போது அவை காலத்தைக் கடந்து நிற்கக் கூடியன. ஆகவே, தற்போதைய நிலையில் ஈழத்தின் இலக்கிய சமூகம் விரிந்த இலக்கியப் பரப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய காலம் வந்துள்ளது. முக்கியமாக அகப் போராட்டங்கள், அக உணர்வு சார்ந்த விடயங்கள் இலக்கியத்தில் இடம்பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மனித உறவு சம்மந்தப்பட்ட படைப்புகளும் முக்கியமானவை.
3. அரசியல் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும் போது அதை இலக்கியமாக்காமல் எப்படிப் புறக்கணிக்க முடியும்? எப்படி அதிலிருந்து விலகியிருக்கலாம்? அப்படி விலகியிருப்பது தவறல்லவா?
அரசியலின் பாதிப்பு எக்காலத்திலும் எந்த ஒரு சமூகத்திலும் இருந்து கொண்டேயிருக்கும். அதை இலக்கியமாக்கக் கூடாது என்று சொல்லவில்லை. ரஷ்ய இலக்கியங்கள் – மார்க்ஸிம் கோர்க்கி, அடக்சாண்டர் ஸொல்வ்நிற்சின் (Solzhenitsyn) போன்றவர்கள் அரசியல் சமூக அரசியல் சார்பான இலக்கியங்களைப் படைத்தார்கள். இதே நேரத்தில் ரோல்ஸ்ரோய், தஸ்தாயெவ்ஸ்க்கி போன்றவர்கள் அக உணர்வு சம்மந்தப்பட்ட விடயங்களை நாவல்களாக்கினார்கள். இலக்கியமாக்கினார்கள். ஆனால் தற்போது தொடர்ந்தும் வாசிக்கப்படுவது பின்னர் குறிப்பிட்ட இருவருமே.
4. அரசியல் முரண்களை அல்லது அரசியல் நெருக்கடிகளை ஏதோ வகையில் எதிர்கொண்டுதானாக வேண்டும் எனும் நிலை இருக்கும் போது அதற்கான இலக்கிய வழிகாட்டியும் இலக்கிய வெளிப்பாடும் இருக்கும் அல்லவா? உதாரணமாக 1980 களில் ஈழப்போராட்டத்துக்கு வீச்சாக பலஸ்தீனக் கவிதைகளும் லத்தீன் அமெரிக்க இலக்கியங்களும் தமிழ்ப்பரப்பில் அதிகளவில் அறிமுகம் செய்யப்பட்டதைப்போல, மரணத்துள்வாழ்வோம் கவிதைகள் வந்ததைப்போல அரசியல் சார்ந்த படைப்புகள் வந்துதானே ஆகும்?
அப்படியான படைப்புகள் வருவதும் அந்த மாதிரியான படைப்புகள் எடுத்தாளப்படுவதும் அந்தக் காலத்தின் கட்டாயமாகும். அவைகள் அந்தக் காலத்துக்கான உணர்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தவல்லவை என்பதால் அவை எடுத்தாளப்படுகின்றன. ஆனால், அந்தக் காலம் முடிந்தவுடன் அல்லது அந்தக் காலம் கடந்தவுடன் திகதிகள் கடந்த சில மருந்துகள் மாதிரி தங்கள் காலத்தை முடித்துக்கொள்கின்றன. அதாவது காலாவதியான மருந்துகளைப் போலாகி விடுகின்றன.
ரஷ்யாவில் வார் அண்ட் பீஸ் இருக்கும் கவர்ச்சியும் முக்கியத்துவமும் இடதுசாரிகளால் கொண்டாட்பட்ட தாய் நாவலுக்கு இன்று இல்லை. இதேவேளை மேற்கு நாடுகளால் கொண்டாடப்பட்ட கூலாக் (Gullah archipelago) என்ற நாவல் (நோபல் பரிசு பெற்றது) இப்பொழுது மேற்கு நாடுகளில் கதைக்கப்படுவதில்லை.
5. ஆனால், உங்களுடைய கதைகளிலும் நாவல்களிலும் உள்ளோட்டமாக அரசியல் விவகாரங்கள் பேசப்படுகின்றனவே. இதை ஏன் நீங்கள் தவிர்க்க முனையவில்லை?
எங்களுடைய கடந்த 30 வருடத்தில் அரசியல் தவிர்க்க முடியாத ஒரு அம்சம்தான். ஆனால், ஒரு சில கதைகளைத் தவிர, அநேகமான கதைகள் உள்ளோட்டமாக அல்லது மறைமுகமாக அரசியல் விடயங்களை உணர்த்தினவே தவிர, அவற்றில் தனி மனிதர்களில் இந்த அரசியல் ஏற்படுத்திய அக – புற பாதிப்புகள்தான் எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதை நீங்கள் அவதானிக்க முடியும்.
6. வண்ணாத்தி குளம், உனையே மயல் கொண்டு, அசோகனின் வைத்தியசாலை ஆகிய உங்களுடைய மூன்று நாவல்களில் எந்த நாவல் வடிவத்திலும் கூறு முறையிலும் உள்ளடக்கத்திலும் உங்களுக்குத் திருப்தியாக இருக்கிறது?
ஒவ்வொரு நாவல்களும் என்னுடைய படி முறை வளர்ச்சியைக் காட்டும். வண்ணாத்திகுளம் நேரடியாக எளிய நடையில், கதை சொல்லுவது. உனையே மயல்கொண்டு இரண்டாவது நாவல். அது போரின் உளவியல் பாதிப்புகளை எடுத்தாள்வதற்காக திட்டமிட்டு எழுதப்பட்டது. அசோகனின் வைத்தியசாலை பல்வேறு பாத்திரங்களையும் அவர்களின் குணாம்சங்களையும் மையப்படுத்தி அவுஸ்ரேலிய வாழ்க்கைச் சூழலில் சொல்வது. ஒரு நல்ல நாவலுக்குத் தேவையான தத்துவார்த்தப் பின்னணி, வாழ்க்கைச் சாரம், முக்கியமாக மனிதர்களால் பெரிதும் சொல்லப்படுகிற மனச்சாட்சி என்பது என்ன என்ற கேள்வியை சாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.
7. அவுஸ்ரேலியாவில் மாத்தளை சோமு, ரஞ்சகுமார், முருகபூபதி, தாமரைச்செல்வி, கோகிலா மகேந்திரன், மாவை நித்தியானந்தன், ஆ.ஸி. கந்தராஜா, அருண் விஜயராணி, நட்சத்திரன் செவ்விந்தியன், கிருஸ்ணமூர்த்தி, கே.எஸ்.சுதாகர் என இன்னும் பல முதன்மைப்படைப்பாளிகள் உள்ளனர். இவர்களுடைய படைப்பு மற்றும் இலக்கியச் செயற்பாடுகள் எப்படி இருக்கின்றன? இவர்களை விடப் புதிய தலைமுறையினரில் யாராவது உள்ளனரா?
முருகபூபதி மட்டும்தான் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். ஒன்று இலக்கியவாதியாகவும். மற்றது பத்திரிகையாளராகவும். அவுஸ்ரேலிய வாழ்க்கை நெருக்கடியானது. மேலும் இலக்கியம் வயிற்றை நிரப்பக் கூடிய ஒரு தொழிலாகத் தமிழில் இல்லை. புலம்பெயர்ந்தவர்களில் பலருடைய வாழ்க்கையும் தங்களுடைய இருப்பையும் குடும்பங்களின் தேவைகளையும் உறுதி செய்வதில் ஏராளமான நேரத்தை எடுத்துக்கொள்கிறது. இந்த நிலையில் தமிழ் இலக்கியத்துக்காக உழைப்பது என்பது மிகக் கடினமான விடயம், பலரைப் பொறுத்தவரையிலும். இந்த நிலையில் முருகபூபதி, கே.எஸ். சுதாகர் போன்றவர்கள் எனக்குத் தெரிந்தவரையில் இலக்கிய முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறார்கள்.
இளம் எழுத்தாளர் என்றால் ஜே.கே என்ற ஜெயக்குமார் – இளையவர் எழுதிக்கொண்டிருக்கிறார். இது மெல்பேணில். சிட்னியிலும் சில முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அவஸ்ரேலியப் புலம்பெயரிகளிடையே ஒரு தேக்க நிலைதான் தற்போது தெரிகிறது.
8. ஆனால், அரசியல் ரீதியாகச் சிந்திப்பதால்தான் இவர்களில் பெரும்பாலானவர்களும் எழுதுவதைத் தவிர்த்து வருகின்றனரோ என்ற கேள்வி எழுகிறது. போராட்டத்தின் வீழ்ச்சியும் அதனால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் கூடப் பலருக்கு எழுதமுடியாத நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கலாம். தவிர, இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையில் பயணிக்க வேண்டிய தேவையை எழுத்துச் சிலவேளை இல்லாமலாக்கி விடும் என்ற அச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த மாதிரியான காரணங்களின் விளைவாக எழுதாமல் விடுவதற்கான நிலைமை உண்டாக்கியிருக்குமா?
புலம்பெயர்ந்திருப்பவர்கள் அரசியல் ரீதியான இலக்கியங்களைப் படைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் ஒரு தடையாக உள்ளது என்று சொல்ல முடியாது. மற்றது, இலங்கையில் கடந்த காலங்களில் எந்த இலக்கியமும் தடைசெய்யப்பட்டதாகவோ, எந்த இலக்கியவாதிக்கும் அவருடைய இலக்கியத்தின் காரணமாக பெரும் பிரச்சினை ஏற்பட்டதாகவோ இல்லை. அப்படியான நிலை உருவாகியதாகவும் தெரியவில்லை. தமிழ்நாட்டைப்போல அமைப்புகள், குழுக்கள், சாதியச் சங்கங்கள் போன்ற எவையும் தடைகளை விதித்தாக இல்லை. என்னைப்பொறுத்தவரையில் தனிப்பட்ட காரணங்கள்தான் அந்தந்த இலக்கியவாதிகளின் படைப்புச்செயற்பாடுகளுக்கான காரணங்களாக இருக்கும் எனக் கருதுகிறேன். எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் இப்படித்தான் நிகழ்கிறது.
9. ஆனால், இலங்கையில் கருத்துச் சுதந்திரத்துக்கும் படைப்புச் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் இருந்தது என்று சொல்லப்பட்டதே. புத்தக வெளியீடுகளைக் கூட நடத்துவதற்கு சுதந்திரம் இல்லை. புலனாய்வாளர்களின் கண்காணிப்பின் மத்தியில்தான் எதையும் செய்ய வேண்டியிருக்கிறது என்பதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
ஏந்த ஒரு நாட்டிலும முற்றான கருத்து சுதந்திரம் படைப்பு சுதந்திம் இருப்பது இல்லை. எனவே இது எமக்கு மட்டும் தனிப்பட்டவிடயம அல்ல. அலைகள் மேல் படகு செலுத்துவது போன்றது . தற்காலத்தில் உருவாகிய பயங்கரவாதம் இவ்வளவு காலமும் கஸ்டப்பட்டு கிடைத்தவற்றை மீணடும் அரசாங்களிடம் கொடுத்துவிடும் நிலமையை உருவாக்கிறது. அதேவேளையில் தற்போது இணையம் எந்தக்காலத்திலும் கிடைக்காத சுதந்திரத்தை நமக்கு அளித்திருக்கிறது. மேலும படைப்பு சுதந்திரத்தை பறிப்பவர்கள் அரசாங்கம் மட்டுமல்ல வன்முறை இயக்கங்கள் ஏன் பத்திரிகை ஆசிரியர்கள் மட்டும் சாhமனியர்களா?. அவர்களும் பலரது கருத்தை வெளியிட மறுத்தவர்கள்தானே
10. படகுமூலமாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழையும் அகதிகள் – குறிப்பாக ஈழத்தமிழ் அகதிகளில் யாரேனும் எழுத்து மற்றும் இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறார்களா? இந்த அகதிகளின் வாழ்க்கை இலக்கியமாக்கப்பட்டிருக்கிறதா?
முதலாவது கடந்த ஐந்து வருடங்களாக அகதிகளாக வந்தவர்கள், இன்னமும் தங்களை அவுஸ்ரேலியாவில் நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர்களுடைய வாழ்க்கை பெரும்போராட்டமாக – கேள்விக்குறியாக இருக்கும்பொழுது இலக்கியம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை. அதேவேளையில் இவர்களுடைய அகதி வாழ்க்கைகள் இன்னமும் பதிவு செய்யப்படுவதும் நடக்கவில்லை. சில மாதங்களின் முன்பு, அவுஸ்ரேலிய கலை இலக்கியச் சங்கம் ‘சமூகத்தின் கதை சொல்லல்’ என்ற பெயரில் சில அகதிகளின் அகதி வாழ்க்கையை வெளிக்கொணர்ந்தது. இதைத் தவிர்ந்த அளவில் வேறு முயற்சிகள் நடந்ததாகத் தெரியவில்லை.
11. கனடா, பிரான்ஸ், லண்டன் போன்ற நாடுகளில் இளம் படைப்பாளிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்;. இந்த மாதிரி அவுஸ்ரேலியச் சூழலில் நிகழாததற்கு என்ன காரணம்?
அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர், மருத்துவர்கள் போன்ற சமூகத்திலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட மேற்தட்டு வர்க்கத்தினரே ஆரம்பத்தில் சென்றவர்கள். இவர்களைப் பொறுத்தவரையில் தமிழ் இலக்கியம் படிப்பதில்லை என்பதே தங்களுடைய தகுதியாக நினைப்பவர்கள். ஆனால், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளுக்குத் தமிழர்கள் சமூகமாகவே புலம்பெயர்ந்தார்கள். அவர்களில் பல இலக்கியவாதிகள் ஏற்கனவே இலக்கியத்தில் பரிச்சயமாக இருந்தார்கள். இவர்கள் அங்கெல்லாம் இலக்கிய இதழ்களை வெளியிட்டும் எழுதியும் செயற்பட்டார்கள். இது தொடர்ந்தது. இதேவேளை நான் சொன்னமாதிரி உயர்வர்க்கத்தினர் அவுஸ்ரேலியாவுக்குப் புலம்பெயர்ந்திருந்த காரணத்தினால் இவர்களுடைய வீட்டு மொழி ஆங்கிலத்தில் அமைந்தது. ஆனால் கனடா, பிரான்ஸ் போன்ற மேற்குலக நாடுகளில் சமூகமாக புலம்பெயர்ந்திருந்தபடியாலும் சாதாரணமானவர்கள் அதிகமாக புலம்பெயர்ந்திருந்த காரணத்தினாலும் அங்கெல்லாம் வீட்டு மொழி அநேகமாக தமிழிலேயே உள்ளது. அத்துடன் தமிழ் இதழ்கள், இலக்கியச் செயற்பாடுகள் போன்றவையும் அங்கே அதிகமாக இருந்தன. சனத்தொகையும் கனடா, லண்டன், பிரான்ஸ் போன்ற இடங்களோடு ஒப்பிடுகையில் ஈழத்தமிழர்கள் அந்த அளவுக்கு செறிவாக அவுஸ்ரேலியாவில் இல்லை. இதெல்லாம் இளம் படைப்பாளிகளின் உருவாக்கத்துக்குத் தூண்டற்காரணிகளாக அமையவில்லை.
12. இலக்கியத்திற்கு அப்பால் சினிமா, நாடகம் போன்ற வடிவங்களில் உங்களுடைய ஈடுபாடுகள்?
ஒரு காலத்தில் ஏராளமான சினிமாப்படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். கடந்த பல வருடங்களாக தமிழ்ப்படங்கள் பார்ப்பதையே தவிர்த்துக்கொண்டு வருகிறேன். அதிர்ஸ்டவசமாக அவுஸ்ரேலியாவில் உலகெங்கும் உள்ள சிறந்த படங்களை தெரிவு செய்து பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் வசதி உள்ளபடியால், அந்த உலகப் படங்களைப் பார்த்து, இப்படியான நல்ல படங்கள் எமது சமூகத்திற்கு எப்போது கிடைக்கும்? தமிழில் இந்த மாதிரியான படங்களை எப்போது எடுப்பார்கள் என்று யோசிப்பேன். மற்றும்படி சினிமாவில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. இப்போதைக்கு நான் ரசிகன்தான்.
13. உங்களுடைய எழுத்துகள் புலி எதிர்ப்பு எழுத்துகள் என்றும் நீங்கள் புலி எதிர்ப்பாளர் என்றும் ஒரு அடையாளம் உண்டே. இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? இதை நீங்கள் விரும்புகிறீர்களா?
தமிழர்களின் குறுந்தேசியத்தை எதிர்க்கவேண்டிய தேவை தமிழ் மக்கள் மேல் அக்கறை கொண்ட சகலருக்கும் இருக்கிறது. காரணம், தமிழ்க்குறுந்தேசியம் பிற சமூகங்களில் இருந்து எங்களைப் பிரித்துத் தனிமைப்படுத்தி, வலியையும் அழிவையும் தரவல்லது. இந்தக் குறுந்தேசியத்தின் ஆரம்பகால சக்தியாக அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியினர்; இருந்தார்கள். 1977 இல் எனது மாணவப்பருவத்தில் என்னுடைய எதிர்ப்பைக் காட்டுவதற்காக தமிழீழத்துக்கு வாக்களியுங்கள் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு மறுப்பாக வாக்களிக்காமல் என்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். இதுவே என்னுடைய முதல் எதிர்ப்பு அரசியல். இக்காலத்தில் 1977 இன் பிறகு, அக்கால இலங்கை அரசாங்கத்தினால் தொடர்ச்சியாகத் தமிழர்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டபோது அந்தக் காலத்தில் உருவாகிய ஆயுத எதிர்ப்பை மனமறிந்து ஆதரவளித்தேன்.
அந்த ஆயுதங்கள் குறுந்தேசியத்தின் பிற்காலப் பிரதிநிதிகளாகிய புலிகளின் மூலம் சகோதர இயக்கங்களையும் அப்பாவிச் சிங்கள முஸ்லிம் மக்களையும் கொலைவாசலில் நிறுத்தியது. இதை நான் மட்டும் அல்ல, உலகம் முழுவதிலும் உள்ள நியாய உணர்வு கொண்டவர்களும் ஜனநாயகவாதிகளும் ஏற்றுக்கொள்ளாமல் மறுத்தோம். தற்போதைய நிலையில் புலிகள் இராணுவரீதியாக அழிக்கப்பட்டிருந்தாலும் இந்தக் குறுந்தேசியத்தை மீண்டும் கையில் எடுப்பதற்குப் பல சக்திகள் முன்வந்திருக்கின்றன. இவர்களை தொடர்ச்சியாக எதிர்ப்பது தமிழ்ச் சமூகத்தின் மீது – தமிழ் பேசும் மக்களின் மேல் பற்றுள்ளவர்களுக்குள்ள கடமையாகும். புலிகளுக்கு முன்பும் இந்தக் குறுந்தேசியவாதம் இருந்தது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகும் அது இருக்கிறது. நான் முன்னரும் அதை எதிர்த்தேன். புலிகளின் காலத்திலும் எதிர்த்தேன். இப்பொழுதும் எதிர்க்கிறேன். எதிர்காலத்திலும் எதிர்ப்பேன். ஆகவே தமிழ்க்குறுந்தேசியவாதத்தையும் அதன் குறைகளையும் எதிர்க்கின்றேனே தவிர, புலிகளை எதிர்ப்பதோ ஆதரிப்பதோ அல்ல என்னுடைய கவனமாகும்.
14. தமிழ் இலக்கியத்தின் முகம் இன்று பல்வகைத்தன்மையுடையதாக – புதிய பல திணைகளை உள்ளடக்கியதாக மாறியிருக்கிறது. ஆனால் புதிய திணையின் அடையாளங்களையும் குணத்தையும் கொண்டதாக – அப்படி மாறியிருக்க வேணுமே தவிர, அது அப்படி மாறவில்லை என்ற கருத்தும் உள்ளது. நீங்கள் இதில் எந்தக் கருத்தை ஆதரிக்கிறீர்கள்? அதற்கான காரணம் என்ன?
தமிழர்களின் பாரம்பரியமான கலாச்சாரச் சூழலும் பண்பாட்டு மரபும் தமிழ்மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்த திணைகளுக்குள் உள்ளடங்கியிருந்தது. இதையொட்டியே இதுகாலவரையான இலக்கியங்களும் கலைகளும் வந்தன. ஆனால் நாங்கள் இப்பொழுது அந்நியமான – வேறுபட்ட புவியியல் – நில – கலாச்சாரச் சூழலில் வாழ்கிறோம். புதிய ஒரு கலாச்சாரச் சூழலில் வாழவேண்டியுமுள்ளது. அதாவது, வேறுபட்ட சமூகங்களுடன் இணைந்து – இயைந்து வாழ்கிறோம். இப்படி பிற சமூகங்களுடன் அவர்களுடைய கலாச்சாரத்துடன் கலந்து வாழும்போது புதிய பல்முகத்தன்மையுடைய ஒரு சூழல் உருவாகிறது. இதிலிருந்துதான் உண்மையில் புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியச் சூழல் உருவாகிறது.
புலம்பெயர்ந்து பிற தேசங்களில் – தொலைதூரங்களில் வாழ்ந்தாலும் அவர்கள் இன்னும் தாங்கள் முன்னர் வாழ்ந்த தாய்மண்ணில்தான் மனத்தளவில் வாழ்கிறார்கள். இதனால் அவர்கள் தாய்த் திணையின் இலக்கியத்தையே தரமுடிகிறது.
என்னுடைய வண்ணாத்திகுளம் நாவல் அப்படியானதுதான். அவுஸ்ரேலியாவில் புலம்பெயர்ந்து பத்து ஆண்டுகள் வாழ்ந்தாலும் சொந்த மண்ணின் கதையை – இலங்கையில் வாழ்ந்த கதையை எழுதினேன். உனையே மயல் கொண்டு… அவுஸ்ரேலியாவில் நடந்த கதை. ஆனால் அந்தக் கதையின் முக்கிய பாத்திரங்கள் இலங்கையில் வாழ்ந்ததும் அதன் தாக்கங்களும் அதன் தொடர்ச்சியாகப் புலம்பெயர்ந்ததுமாகும். அசோகனின் வைத்தியசாலை 100 வீதமும் புலம்பெயர்ந்த மண்ணில் நடந்த கதை.
15. உங்களுடைய எழுத்துகளில் உங்கள் தொழில் சார் அனுபவத்தோடு கலந்த வாழும் சுவடுகள் என்ற அறிவனுபவக் கதைகளைப் பற்றிச் சொல்லுங்கள்?
வாழும்சுவடுகள் மிருக வைத்தியராக நான் சந்தித்த செல்லப்பிராணிகளும் அவற்றின் உரிமையாளர்களும் என் மீது ஏற்படுத்திய தாக்கத்தின் படிமங்களாகும். இந்தக் கதைகள் ஒரு விதத்தில் அவுஸ்ரேலியாவில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் ஏற்பட உறவுகளையும் அவர்களில் அவைகளின் பிரிவுகள், சேர்வுகளும் ஏற்படுத்திய தாக்களும் புனைவுமொழியில் எழுதப்பட்டுள்ளன.
இந்தக் கதைகளின் மூலம் அவுஸ்ரேலியச் சமூகத்தின் குறுக்கு வெட்டு முகத்தை வாசகர்களுக்குத் தர முடிகிறது.
16. தமிழிலக்கியத்தின் இன்றைய வளர்ச்சி, இதில் ஈழத்தமிழிலக்கியம், புலம்பெயர் இலக்கியம் போன்றவற்றின் இடம் பற்றிய உங்களுடைய அவதானம் என்ன?
தமிழிலக்கியத்தில் சிறுகதை, கவிதை போன்றவற்றில் உலக இலக்கியத்துக்குச் சமாந்தரமான அளவில் படைப்புகள் வந்திருக்கின்றன. ஆனால், நாவல் இலக்கியத்தில் 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்ததைப்போன்ற மறுமலர்ச்சி ஏற்பட்டதாக சொல்ல முடியாது. நவினத்துவம் பின்நவீனத்துவம் ஐரோப்பாவின் பொருளாதாரவளர்சியோடு சமூகவளர்சியும நடத்திருக்கிறது.
200 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸில் அந்தக் காலத்தில் பால்சைக் போன்றவர்கள் பாலியல் விடயங்களை துணிகரமாக அணுகி எழுதியதைப்போல இன்னும் நாங்கள் பல விடயங்களை அணுகவில்லை. அதற்கு முக்கியமான காரணம், இலக்கியவாதிகளை நான் நினைக்கவில்லை. தமிழ்ச்சமூகம் இவற்றை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை. இதனால்தான் பெருமாள் முருகன் போன்றவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை நீங்கள் அவதானிக்கலாம். தமிழ் இலக்கியத்தின் பெரும்பகுதி தமிழ் நாட்டில்தான் உள்ளது. தமிழ்நாட்டின் சமூக அமைப்பு இன்னமும் சாதி, மதம் வட்டாரம் என்ற ஐரோப்பாவின் கைத்தொழில் புரட்சிநடந்த காலத்தின் முன்பான நிலஉடமை அமைப்பின் பிடியுக்குள் பிடிக்குள் – கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் ஐரோப்பாவில் நடந்த இலக்கிய நவீனத்துவமோ அதற்குப் பின்னர் நடந்த பின்நவீனத்துவ விடயங்களோ பெரும்பாலான அளவிற்கு எழுதப்படவில்லை.
உதாரணமாக போல்சாக், கேள் வித் த கோல்டன்( Girl with the Golden eyes ) 19 ஆம் நூற்றாண்டில் வந்த சமூக நாவல் எமது சமூகத்தில் வருவதற்கான சாத்தியக்கூறு இன்னமும் இல்லை என்பதை பெருமாள் முருகனின் மாதொருபாகனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காட்டுகிறது.
கலை இலக்கியம் மூளையின் இரண்டு பக்கத்தில் உள்ள Temporal lobe என்ற பகுதியில் இருந்துதான் காமம், குரோதம், அன்பு போன்ற அடிப்படை உணர்வுகள் வருவது. இப்படியான உணர்வுகள் எல்லாம் சமூகம் சமயம் கலாச்சாரம் மற்றும் மரபு என இரும்பு சங்கிலாயால் பிணைக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தில் இந்த உணர்வுகளின் வெளிப்பாடாக வரும் இலக்கிய விடயங்கள் வீச்சுடன் வருவதற்கான சாத்திப்பாடுகள் தற்போது குறைவு.
இதேநேரத்தில் தமிழ் வாசகப்பரப்பில், மறைபொருளாகச் சொல்லும்போது அதைப் புரிந்துகொள்கிற இலக்கிய வாசிப்பும் அரிது.
ஈழத்தில் நடந்த அரசியற் போராட்டங்கள் இலக்கிய வளர்ச்சிக்கு தடையாக இருந்தது மட்டுமல்ல, இலக்கியத்தை கோட்பாட்டு அரசியல் தத்துவங்களுக்குள் கொண்டு சென்றபடியால் இயல்பான இலக்கிய வெளிப்பாடு சாத்திமில்லாமல் போய்விட்டது. தமிழ் நாட்டில் இதற்கு சமாந்திரமான இடதுசாரியம் திராவிடம் என இருந்தாலும் பெருநிலப்பரப்பானதால் அங்கே இலக்கியத்தில் பன்முகச் செறிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இலக்கிய வளர்ச்சியானது பொருளாதார உறவுகளோடுதான் ஐரோப்பாவில் தங்கியிருந்தது. அதாவது எந்த பொருளைப்போலும் நுகர்வோரிலே தங்கியுள்ளது.அது பொருளாதாரம் சார்ந்தது. அதேமாதிரியான பொருளாதார வளர்ச்சியோ மாற்றமோ தமிழ் நாட்டில் ஏற்படும் போது இலக்கிய வளர்ச்சி தொடர்ச்சியாக மேன்மை பெறும். அப்படி வளர்கிறபோது மதம், சாதியம் போன்றவற்றின் கட்டுமானங்களும் வடிவங்களும் உடையும். இந்த உடைப்பு பலவற்றுக்கான வாய்ப்புகளை உண்டாக்கும்.
புலம்பெயர் இலக்கியம்
புலம்பெயர் இலக்கியம் என்பது தமிழில் மிகச் சிறிய பகுதி மட்டுமே. அதிலும் பெரும்பாலாவை நனவிடை தோயும் படைப்புகளே. அதற்கு அப்பால் புலம்பெயர் இலக்கியம் தமது வாழ்சூழலை வைத்துப் படைக்கப்படுவது மிகக் குறைவாகவே உள்ளது. காமு பிரெஞ்சைச் சேர்ந்தவர். ஆனால் அவர் வாழ்ந்தது அல்ஜீரியாவில். அவர் அல்ஜீரியாவை வைத்துத்தான் தன்னுடைய முக்கியமான படைப்புகளை எழுதினார். அந்த மாதிரி நமது புலம்பெயர் படைப்பாளிகள் முயற்சிக்க வேண்டும். மற்றது புலம்பெயர் படைப்புகள் என்று தனியாக அடையாளப்படுத்தப்படுவதோ முன்னுரிமை அளிக்கப்படுவதோ தேவையற்றது என்றே கருதுகிறேன்.
மாமரம் எங்கே முளைக்கிறது என்பது முக்கியமானதல்ல. மாம்பழம்தான் முக்கியம். அதைப்போலத்தான் இலக்கியம்தான் முக்கியமே தவிர, அது எங்கே இருந்து வருகிறது என்பது அல்ல. முதலில் நாம் ஒரு எழுத்து படைப்பாக – இலக்கியமாக இருக்க வேண்டும் என்பதையே பார்க்க வேண்டும். அதற்கே முன்னுரிமையும் முக்கியத்துவமும் இருக்கும். ஈழ இலக்கியத்தின் அடையாளமும் அப்படித்தான். தமிழிலக்கியத்தில் அல்லது உலக இலக்கியத்தில் அது நிற்கக் கூடிய அளவுக்கு வந்து விட்டால் அடையாளங்களை அதுவாகவே தகர்த்து விடும்.
17. ஆனால், அரசியற் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ரஷ்ய, சீன, லத்தீன் அமெரிக்க, மலையாள இலக்கியங்களும் அரசியற் கோட்பாட்டின் அடிப்படையில் எடுக்கப்படும் சினிமாக்களும் புகழ்பெற்றவையாக – சாகாவரம் பெற்றவையாக உள்ளனவே.
அரசியற் கோட்பாட்டுகளுக்குள்ளால் வரும் இலக்கியங்களோ பிற கலைப்படைப்புகளோ, அந்த அரசியற் கோட்பாடுகள் செல்வாக்குச் செலுத்தும் காலத்தில் மிக வலுவானவையாக கொண்டாடப்படும். இது மதம் அரசியல் சார்ந்த இலக்கியத்துக்கும் பொருந்தும். அல்லது அத்தகைய அரசியற் கோட்டுத்தளத்தில் எங்களுடைய மனம் இருந்தால், இயங்கினால் அந்தப்படைப்புகள் செல்வாக்கைப் பெற்றிருக்கும். ஆனால், அப்படியான ஒரு நிலை எப்போதும் இருக்கும் என்று சொல்ல முடியாது. யதார்த்த நிலைமைகள் வேறாகி விடும்.
18. உலக இலக்கியமும் – தமிழுக்கு அப்பால் இன்றைய விமர்சனத்துறையும் எப்படியான நிலையில் உள்ளன? பிற மொழிப்படைப்பாளிகள் எந்தமாதிரியெல்லாம் செயற்படுகிறார்கள்?
இலக்கியம் என்பது பிற மொழிகளில் குறிப்பாக மேற்கில் தொடர்ச்சியாக கல்வி நெறியாகப் பயிற்றப்படுகிறது. அப்படிச்செய்யும்போது இலக்கியத்தின் கட்டுமானங்கள் பற்றிய புரிதலுடன்தான் பெரும்பாலான மாணவர்கள் பாடசாலையை விட்டே வெளிவருகிறார்கள். இவர்களில் நுட்பங்களை தெரிந்தவர்கள்தான் பத்திரிகைத் துறையிலும் ஊடகத்துறையிலும் இருப்பார்கள். அதனால், அவர்கள் ஒரு நாவலையோ, சிறுகதை நூலையோ, கவிதைத் தொகுதியையோ அறிமுகப்படுத்தும்போது வாசகர்களுக்கு இலக்கியத்தின் கூறுபாடுகளை – நுணக்கங்களை – இலக்கியப்படைப்பின் பெறுமதியை உணர்ந்தே அறிமுகப்படுத்துவார்கள். அத்துடன் இலக்கியப் படைப்பை அவர்கள் வெளியிடும்போதும் கவனமெடுக்கிறார்கள். ஒரு பிரதியை உயர்ந்த தரத்தில் உள்ளவரே எடிற் செய்து அதை பதிப்புக்கு அனுப்புகிறார். வெளியீட்டு நிறுவனங்கள் இதற்காக பொருத்தமானவர்களை மிக உயர்ந்த சம்பளம் கொடுத்தே வைத்திருக்கின்றன. அந்த அளவுக்கு இலக்கியப்படைப்பை பெறுமதியாக உணர்கிறார்கள். அதனால் அதைப்பற்றிய அறிமுகத்தையும் விமர்சனத்தையும் பெறுமதியாக வைக்கிறார்கள்.
மற்றது படைப்புகளை வகைப்படுத்துவது முக்கியமானது. அதாவது இலக்கியப்படைப்புகள், ஜனரஞ்சகமான – வணிகப் படைப்புகள் என வகைப்படுத்தியே ஊடகங்களில் அறிமுகம் செய்வது நிகழும்.
படைப்பாளிகளைப் பொறுத்தவரையில் அவரவர் ஆளுமை, இயல்புக்கு ஏற்ற மாதிரி இருக்கிறார்கள். மற்றது இலக்கியம் அவர்களுக்கு வாழ்வதற்கான அடிப்படையான பொருளாதாரத்தையும் உத்தரவாதத்தையும் கொடுக்கிறது. தமிழில் அது இல்லையே. உதாரணமாக காபிரியேல் காரிஸியா மாக்ஸ்வெல்லின் புத்தகம் ஒன்றை (Love in the Time of Cholera) பல்லில் தகடு போட்ட பெண்ணுடன் உடலுறவு என்ற ஒரு வார்த்தையால் அந்தப் பெண் சிறுமியென புரிந்ததால்(காரணம்; அந்த உடலுறவு குற்றமானது என்பதால்) அந்த நாவல் விக்ரோரிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை- இந்த நாவலில் ஏற்பட்டசர்ச்சையால் முதல்வாசிப்பில் தவறவிட்ட அந்த வார்த்தையை தெரிந்து கொள்ள நான் இரண்டாவது தடவை வாசித்தேன்
அந்த மாதிரி ஒரு நுணுக்கமான பார்வை ஆங்கில வாசகர்களிடம் இருக்கிறது.
19. அடுத்ததாக நீங்கள் எழுதும் நாவல் என்ன? அல்லது வேறு படைப்புகள் என்ன?
இலங்கை தமிழ்போராட்டத்தில் வெளிநாட்டுதொடர்புகள் அதன் தாக்கங்களை வைத்து ஒரு நாவல் எழுதுவதற்கு முயற்சிக்கிறேன். ஆனால் தகவல் சேகரிப்புடன் இருக்கிறேன் அத்துடன் கற்பனை பல இடங்களில் வற்றிவிடுவிகிறது
நன்றி அம்ரிருதா
மறுமொழியொன்றை இடுங்கள்