



எங்கள் பயணம் ஜோர்ஜியாவின் தலைநகரான திபிலிசியை நோக்கித் தொடர்ந்தது. செல்லும் வழியில், அரக்வி (Aragvi) ஆற்றங்கரையில் அமைந்துள்ள அனானுரி (Ananuri) என்ற இடத்தில் பழமையான கோட்டையும் தேவாலயங்களும் கொண்ட அழகிய வரலாற்றுத் தொகுதி ஒன்று உள்ளது.
இன்று நாம் காணும் அனானுரி கோட்டைத் தொகுதியின் முக்கிய கட்டிடங்கள் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இது ஒரு காலத்தில் அரக்வி பிரதேசத்தை ஆண்ட பிரபுக்களின் முக்கிய அரணாக இருந்தது. கோட்டைச் சுவர்கள், காவல் கோபுரங்கள், தேவாலயங்கள் எனப் பல கட்டிடங்கள் இன்றும் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. 2007ஆம் ஆண்டு முதல் அனானுரி, UNESCO உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்ப்பதற்கான ஜோர்ஜியாவின் தற்காலிகப் பட்டியலில் (Tentative List) இடம்பெற்றுள்ளது.
ஆனால் இந்தக் கோட்டையைச் சுற்றி வரலாற்றைவிட மனதில் நிற்கும் ஓர் ஐதீகம் உள்ளது.
ஒரு காலத்தில் எதிரி மன்னனின் படைகள் இந்தக் கோட்டையை நீண்ட நாட்களாக முற்றுகையிட்டதாகக் கூறப்படுகிறது. எவ்வளவு காலம் முற்றுகையிட்டும் கோட்டைக்குள் இருந்தவர்களைப் பட்டினியால் பணியவைக்க முடியவில்லை.
“இத்தனை நாட்களாக இவர்களுக்கு உணவும் தண்ணீரும் எங்கிருந்து வருகின்றன?”
இந்தக் கேள்வி முற்றுகைப் படையினருக்குப் புதிராக இருந்தது.
கோட்டையிலிருந்து வெளியுலகிற்குச் செல்லும் இரகசியச் சுரங்கப்பாதை ஒன்று இருக்க வேண்டும்; அதன் வழியாகத்தான் உணவும் தண்ணீரும் கொண்டு செல்லப்படுகின்றன என்று அவர்கள் ஊகித்தனர்.
அந்தச் சுரங்கத்தின் இருப்பிடத்தை அறிந்ததாகக் கருதப்பட்ட அனா என்ற இளம் பெண்ணை அவர்கள் பிடித்தனர். சுரங்கத்தின் இரகசியத்தைச் சொல்லும்படி அவளைச் சித்திரவதை செய்தனர்.
ஆனால் அனா சொல்ல மறுத்தாள்.
தனது உயிரை இழந்தாலும் கோட்டையையும் அதற்குள் இருந்த மக்களையும் காட்டிக்கொடுக்க மறுத்தாள் என்பதே உள்ளூர் ஐதீகம். அவளது தியாகத்தை நினைவுகூரும் வகையில் அவளது பெயர் அனானுரியுடன் இணைக்கப்பட்டதாகவும் கதை சொல்லப்படுகிறது.
வரலாற்றுச் சான்றுகளால் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல இது. ஆனால் ஒரு சமூகத்தின் நினைவில் வீரமும் விசுவாசமும் எவ்வாறு ஒரு பெண்ணின் பெயருடன் இணைந்து வாழ்கின்றன என்பதற்கு அழகான உதாரணம்.
கோட்டைக்குள் தேவாலயங்களும் உள்ளன. ஜோர்ஜிய வரலாற்றையும் Georgian Orthodox Christianity-யையும் பிரித்துப் பார்க்க முடியாது. அதன் தேவாலயங்களின் கட்டிட அமைப்பும் வழிபாட்டு மரபுகளும் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களிலிருந்து வேறுபட்டவை.
புனித நகரான Mtskheta
அங்கிருந்து நாங்கள் சென்ற அடுத்த இடம் Mtskheta.
திபிலிசியிலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில், Aragvi மற்றும் Mtkvari என்ற இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்தப் பழமையான நகரம் அமைந்துள்ளது.
Mtskheta சாதாரணமான சிறுநகரமல்ல.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுவரை, அக்காலத்தில் Iberia அல்லது Kartli என்று அழைக்கப்பட்ட கிழக்கு ஜோர்ஜிய அரசின் தலைநகரமாக இது விளங்கியது. இப்பகுதியில் வெண்கலக் காலத்திலிருந்தே மனிதக் குடியேற்றம் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.
அலெக்சாண்டர் மகா இப்பகுதியைக் கைப்பற்றியதாக ஜோர்ஜியப் பழைய வரலாற்றுக் குறிப்புகள் கூறினாலும், அதை நவீன வரலாற்றாசிரியர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வதில்லை.
பிற்காலத்தில் இந்தப் பகுதி ரோமப் பேரரசுடனும் பாரசீக உலகுடனும் நெருங்கிய அரசியல், வர்த்தக மற்றும் கலாசாரத் தொடர்புகளைக் கொண்டிருந்தது.
கி.பி. நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் ஜோர்ஜிய அரசின் அதிகாரப்பூர்வ மதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், Mtskheta நாட்டின் முக்கிய ஆன்மிக மையமாகியது. தலைநகர் பின்னர் திபிலிசிக்கு மாற்றப்பட்டபோதும் அதன் மத முக்கியத்துவம் குறையவில்லை.
இன்றும் Georgian Orthodox Church-இன் முக்கிய ஆன்மிக மையமாக Mtskheta விளங்குகிறது. அந்த வகையில், கத்தோலிக்கர்களுக்கு வத்திக்கான் கொண்டிருக்கும் ஆன்மிக முக்கியத்துவத்துடன் ஓரளவு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம்.
Mtskheta-வின் முக்கிய வரலாற்றுச் சின்னங்கள் UNESCO உலகப் பாரம்பரியப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளன.
நாங்கள் வண்டியிலிருந்து இறங்கி நடந்தபோது உயரமான மதில்களுக்குள் பிரம்மாண்டமாகத் தெரிந்தது Svetitskhoveli Cathedral.
“ஜோர்ஜியாவில் எங்கு பார்த்தாலும் தேவாலயங்கள்தானே!”
என்ற எண்ணத்தில் நான் முதலில் அதிக ஆர்வம் காட்டாமல் வெளியே ஒரு மரத்தடியில் நின்றிருந்தேன்.
அப்போது சியாமளா என்னை அழைத்தார்.
உள்ளே சென்ற பிறகுதான் அந்த தேவாலயத்தின் முக்கியத்துவம் எனக்குப் புரிந்தது.
**எவ்வளவு முக்கியம் என்கிறீர்களா?**
ஜோர்ஜிய கிறிஸ்தவ மரபின்படி, சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து அணிந்திருந்ததாக நம்பப்படும் ஓர் உடையுடன் இந்த இடம் தொடர்புடையது.
அதன் பின்னால் ஒரு சுவாரசியமான மத ஐதீகம் உள்ளது.
கி.பி. முதல் நூற்றாண்டில் Mtskheta-வைச் சேர்ந்த Elias என்ற யூதர் ஜெருசலேமில் இருந்ததாகவும், இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவரது உடையை ஒரு ரோமப் படைவீரனிடமிருந்து பெற்று ஜோர்ஜியாவுக்குக் கொண்டு வந்ததாகவும் Georgian Orthodox மரபு கூறுகிறது.
Elias அந்த உடையை தனது சகோதரி Sidonia-விடம் கொடுத்தபோது, இயேசுவின் மரணத்தை நினைத்து ஏற்பட்ட பேரதிர்ச்சியில் அவள் அந்த உடையை மார்போடு அணைத்தபடியே இறந்துவிட்டதாகக் கதை தொடர்கிறது.
அவளது கைகளிலிருந்து அந்த உடையைப் பிரிக்க முடியாததால், அதனுடனேயே அவளைப் புதைத்தனர்.
அவள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து பின்னர் ஒரு பெரிய cedar மரம் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
நான்காம் நூற்றாண்டில் ஜோர்ஜியாவில் கிறிஸ்தவம் பரவியபோது, அந்த மரம் வெட்டப்பட்டு ஆரம்பகால தேவாலயத்திற்காக ஏழு தூண்கள் செய்யப்பட்டதாக மரபு கூறுகிறது. அவற்றில் ஒரு தூண் அதிசயமாக உயர்ந்து நின்றதாகவும், Saint Nino பிரார்த்தித்த பின்னரே அது தனது இடத்தில் வந்து நின்றதாகவும் நம்பப்படுகிறது.
அதனால்தான் இந்த தேவாலயத்திற்கு **Svetitskhoveli — “உயிரளிக்கும் தூண்” என்ற பொருளுடைய பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த இடத்தில் முதன்முதலில் நான்காம் நூற்றாண்டில் ஒரு தேவாலயம் அமைக்கப்பட்டது. பின்னர் பல்வேறு காலங்களில் கட்டிடங்கள் சேதமடைந்து மீண்டும் கட்டப்பட்டன. இன்று நாம் காணும் பிரம்மாண்டமான Svetitskhoveli Cathedral பெரும்பாலும் 11ஆம் நூற்றாண்டில், 1010–1029 காலப்பகுதியில் கட்டப்பட்டது.
தேவாலயத்திற்குள் சென்றபோது அதன் பழமையான சுவரோவியங்களும், கல்லால் ஆன பிரம்மாண்டமான கட்டமைப்பும் என்னைக் கவர்ந்தன.
அதைவிட என்னைத் திடுக்கிட வைத்தது அதன் தரை.
பல ஜோர்ஜிய அரசர்களின் கல்லறைகள் தேவாலயத்தின் தரைப்பகுதியில் அமைந்துள்ளன. அவர்கள் மீது நாம் நடந்து செல்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டதும், கால் வைப்பதற்கே எனக்குச் சங்கடமாக இருந்தது. முடிந்தவரை கல்லறைக் கற்களைத் தவிர்த்து விலகி நடந்தேன்.
காலம் எவ்வளவு விசித்திரமானது!
ஒரு காலத்தில் நாட்டை ஆண்ட மன்னர்கள் இன்று நாம் நடந்து செல்லும் தரைக்குக் கீழே அமைதியாக உறங்குகிறார்கள்.
பின்னர் அரசியல் அதிகாரத்தின் மையம் திபிலிசிக்கு நகர்ந்தபோது Mtskheta தனது தலைநகர் அந்தஸ்தை இழந்தது. இலங்கையில் அனுராதபுரம் அரசியல் தலைநகரம் என்ற நிலையை இழந்த பின்னரும் வரலாற்று மற்றும் மத முக்கியத்துவத்தைத் தக்கவைத்திருப்பதைப்போல, Mtskheta-வும் ஜோர்ஜிய மக்களின் வரலாற்றிலும் ஆன்மிக நினைவிலும் தொடர்ந்து வாழ்கிறது.
இன்று அது ஒரு சிறிய நகரமாக இருக்கலாம்.
ஆனால் இரண்டு நதிகள் சங்கமிக்கும் அந்தச் சிறிய நிலப்பரப்பில், பண்டைய Iberia அரசு, ரோம–பாரசீக உலகின் தாக்கங்கள், ஜோர்ஜிய கிறிஸ்தவத்தின் பிறப்பு, மன்னர்களின் கல்லறைகள், இயேசுவின் உடையைப் பற்றிய இரண்டாயிரம் ஆண்டுப் பழமையான ஐதீகம்—எல்லாமே ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து கிடக்கின்றன.
சில நகரங்களின் பெருமையை அவற்றின் பரப்பளவால் அளக்க முடியாது. அவற்றின் நினைவுகளின் ஆழத்தால்தான் அளக்க முடியும். Mtskheta அத்தகைய ஒரு நகரம்.
மறுமொழியொன்றை இடுங்கள்