



நமது இதிகாசமான மகாபாரதத்தில் வரும் சகோதரச் சண்டையின் வடிவத்தை, கிரேக்கர்களின் தொன்மக் கதைகளிலும் நாம் பார்க்க முடிகிறது. கிரேக்கர்களின் கதைகளிலிருந்து சிலவற்றை வியாசர் கடன் வாங்கி எழுதியிருப்பாரோ என்ற சந்தேகம்கூட, ரஷ்யாவின் எல்லையருகே ஜோர்ஜியாவில் உள்ள கஸ்பேஜி (Kazbegi) மலையின் அடிவாரத்தில் நின்றபோது எனக்கு ஏற்பட்டது.
நிரந்தரமாக வெண்பனிப் படலத்தைப் போர்த்திக்கொண்டு, வெண்மேகங்கள் துயிலும் இந்த மலை ஓர் உறங்கும் எரிமலை. இது கடைசியாகக் கிறிஸ்துவுக்கு முன்பு சுமார் 750-ஆம் ஆண்டளவில் வெடித்ததாகக் கூறப்படுகிறது.
ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் காக்கேசிய மலைத்தொடரில், கிழக்கு ஜோர்ஜியாவில் அமைந்துள்ள கஸ்பேஜி மலையின் உயரம் சுமார் 5,047 மீட்டர் — 16,558 அடி.
கிரேக்கர்களின் ஒலிம்பியக் கடவுள்களுக்கு முன்பிருந்த தெய்வங்களை ‘டைட்டன்கள்’ (Titans) என்பார்கள். வானத்தைக் குறிக்கும் யுரேனஸ் (Uranus), பூமியைக் குறிக்கும் கையா (Gaia) ஆகியோருக்குப் பிறந்தவர்களே இவர்கள். ஆறு ஆண்களும் ஆறு பெண்களுமாகப் பன்னிரண்டு டைட்டன்கள் இருந்ததாகக் கிரேக்கத் தொன்மம் கூறுகிறது.
அவர்களில் குரோனஸ் (Cronus) தனது சகோதரியான ரியாவை (Rhea) மணந்தார். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளில் ஒருவரான சூஸ் (Zeus), பின்னர் தந்தையை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றி ஒலிம்பியக் கடவுள்களின் தலைவரானார்.
நமது இயக்க கதைகள்போல் இருப்பதாக தலை சுற்றுகிறதா?
கிரேக்கர்களின் கடவுள்கள் மனிதர்களைப் போலவே காதலிப்பார்கள்; சண்டையிடுவார்கள்; பொறாமைப்படுவார்கள்; அதிகாரத்திற்காகப் போராடுவார்கள்; மனித ஆண்களுடனும் பெண்களுடனும் உறவுகொண்டு பிள்ளைகளையும் பெறுவார்கள். அதனால்தான் அவர்களது தொன்மக் கதைகள் நமக்கு மிகவும் நெருக்கமானவையாகத் தோன்றுகின்றன.
சூஸ் தலைமையிலான புதிய கடவுள்களால் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்ட டைட்டன்களைப் பார்க்கும்போது, அரசிலிருந்து விரட்டப்பட்ட பாண்டவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். அந்த டைட்டன்களின் வழிவந்தவர்களில் ஒருவர்தான் புரோமிதியஸ் (Prometheus). உறவுமுறையில் பார்த்தால் சூஸுக்கு ஒரு வகையில் உறவினர்.
மனிதர்களிடமிருந்து நெருப்பு பறிக்கப்பட்டபோது, அவர்கள் இருளிலும் குளிரிலும் தவித்தனர். அதைப் பொறுக்க முடியாத புரோமிதியஸ், சூஸிடமிருந்து நெருப்பைத் திருடி மீண்டும் மனிதர்களுக்குக் கொடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சூஸ், புரோமிதியஸை காக்கேசிய மலைப்பகுதியில் சங்கிலியால் கட்டிவைத்து தண்டித்தார். ஒவ்வொரு நாளும் ஒரு கழுகு வந்து அவரது ஈரலைக் கொத்தித் தின்னும். ஆனால் தெய்வீக சக்தி கொண்ட புரோமிதியஸின் ஈரல் மீண்டும் வளர்ந்துவிடும். மறுநாள் கழுகு மீண்டும் வரும். இவ்வாறு முடிவில்லாத தண்டனை தொடர்கிறது.
இறுதியில் கிரேக்கர்களின் மாவீரனான ஹெரக்ளீஸ் (Heracles/Hercules) வந்து புரோமிதியஸை விடுவிப்பதாகக் கதை முடிகிறது.
புரோமிதியஸ் மனிதர்களுக்கு நெருப்பைக் கொடுத்தவர் மட்டுமல்ல; அறிவு, தொழில்நுட்பம், நாகரிக வளர்ச்சி ஆகியவற்றின் குறியீடாகவும் கிரேக்கத் தொன்மத்தில் போற்றப்படுகிறார்.
ஜோர்ஜியர்களின் அமிரானி
இதேபோன்ற ஒரு வாய்மொழித் தொன்மக்கதை ஜோர்ஜியர்களிடமும் உள்ளது. அதன் கதாநாயகன் அமிரானி (Amirani).
வேட்டையுடன் தொடர்புடைய ஒரு பெண் தெய்வத்திற்கும் மனிதனுக்கும் பிறந்த அமிரானி, குறைமாதக் குழந்தையாகப் பிறந்ததாகக் கதை கூறுகிறது. பின்னர் அதிசயமான முறையில் பல மிருகங்களின் கருப்பைகளில் வளர்க்கப்பட்டு, அசாதாரண வலிமை கொண்ட வீரனாக உருவாகிறான்.
இதைக் கேட்டபோது, மகாபாரதத்தில் உத்தரையின் கருவில் இருந்த குழந்தையான பரீட்சித் அதிசயமாகக் காப்பாற்றப்பட்ட கதை எனக்கு நினைவுக்கு வந்தது.
அமிரானி தொடர்ந்து தீய சக்திகளுடனும் டிராகன்களுடனும் போரிட்டு மனிதர்களைப் பாதுகாக்கிறான். மனிதர்களுக்கு நெருப்பையும் இரும்பைப் பயன்படுத்தும் அறிவையும் கொடுத்த வீரனாகவும் அவன் கொண்டாடப்படுகிறான். ஆனால் புகழின் உச்சியை அடைந்தபோது அவனுக்குள் பெருமிதம் பிறக்கிறது. கடவுளையே எதிர்க்க முற்படுகிறான். அதன் விளைவாக, கடவுள் அவனை காக்கேசிய மலைப்பகுதியிலுள்ள ஒரு குகையில் சங்கிலியால் கட்டிவைத்துத் தண்டிக்கிறார்.
இங்கும் ஒரு கழுகு அவனது ஈரலைக் கொத்துகிறது.ஆனால் அமிரானிக்கு ஒரு விசுவாசமான நாய் இருக்கிறது — குர்ஷா (Qursha). அது தொடர்ந்து சங்கிலியை நக்கி, அதை வலுவிழக்கச் செய்கிறது. அமிரானி விடுதலை பெறப்போகும் தருணத்தில் சங்கிலி மீண்டும் வலுப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவனது தண்டனையும் தொடர்கிறது.
புரோமிதியஸும் அமிரானியும் வெவ்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் இருவரும் மனிதர்களுக்காகச் செயல்படுகிறார்கள்; நெருப்புடன் தொடர்புபடுகிறார்கள்; கடவுளின் அதிகாரத்தை எதிர்க்கிறார்கள்; இறுதியில் காக்கேசிய மலையில் சங்கிலியால் கட்டப்பட்டுத் தண்டிக்கப்படுகிறார்கள்.
இத்தகைய தொன்மக் கதைகள் வெறும் பொழுதுபோக்குக் கதைகள் அல்ல. பல நூற்றாண்டுகளாக அந்நியப் படையெடுப்புகளையும் பேரரசுகளையும் எதிர்கொண்ட ஜோர்ஜியர்களின் மனதில் எதிர்ப்புணர்வுக்கும் விடாமுயற்சிக்கும் இவை உரமிட்டிருக்கலாம்.
மலை உச்சியில் ஒரு தேவாலயம்
கஸ்பேஜி மலையின் அடிவாரத்தில், சுமார் 2,170 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கெர்கெட்டி திரித்துவ தேவாலயத்தின் (Gergeti Trinity Church) முன்பாக நின்றபடிதான் நான் அந்தப் பனிபடர்ந்த மலையைப் பார்த்தேன்.
எதிரே பனிமலைகள். கீழே பள்ளத்தாக்கு. சுற்றிலும் விரிந்த நிலப்பரப்பு.
‘இவ்வளவு தனிமையான மலைப்பகுதியில் ஏன் ஒரு தேவாலயத்தைக் கட்டினார்கள்?’ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
ஜோர்ஜியா நான்காம் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடு. ஆர்மீனியாவுக்குப் பின்னர் மிக ஆரம்பத்திலேயே கிறிஸ்தவத்தை அரச மதமாக ஏற்றுக்கொண்ட நாடுகளில் ஜோர்ஜியாவும் ஒன்று. பிற்காலங்களில், ஆபத்தான காலங்களில் விலைமதிப்புள்ள சமயப் பொருட்களையும் செல்வங்களையும் பாதுகாப்பதற்கும் இந்த மலைப்பகுதி தேவாலயங்கள் பயன்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இன்னொரு கேள்வி எழுகிறது.
இவ்வளவு உயரத்தில் தேவாலயம் கட்டுவதற்கான இடத்தை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள்?
இதற்கும் ஒரு பழைய கதை இருக்கிறது.
ஒரு கழுகிடம் இறைச்சித் துண்டைக் கொடுத்து அனுப்பினால், அது பறந்து சென்று மலையில் எந்த இடத்தில் அமர்கிறதோ, அந்த இடத்தையே புனிதமானதாகக் கருதி தேவாலயம் கட்டுவதற்குத் தேர்ந்தெடுத்தார்கள் என்று உள்ளூர் மரபுக்கதை கூறுகிறது.
வரலாற்றில் ஜோர்ஜியாவை நோக்கிப் படைகளுடன் வந்தவர்கள் ஒருவர் இருவர் அல்ல.
ரோமானியர்கள், மங்கோலியர்கள், திமூர் (Timur) தலைமையிலான படைகள், பாரசீகர்கள், ஒட்டோமான்கள், இறுதியில் ரஷ்யர்கள் எனப் பல பேரரசுகள் வெவ்வேறு காலங்களில் ஜோர்ஜியாவில் ஆதிக்கம் செலுத்தின. ஆனால் அவர்களால் ஜோர்ஜியர்களின் மொழியையும் மதத்தையும் முற்றாக அழிக்கவோ மாற்றவோ முடியவில்லை.
நான்கு மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட ஒரு சிறிய நாடு, பல பெரிய பேரரசுகளின் நடுவே தனது மொழியையும் பண்பாட்டையும் அடையாளத்தையும் தக்கவைத்திருப்பது சாதாரண விடயமல்ல.
மலையும் நாய்களும்
இந்த மலைப்பகுதியில் சோவியத் காலத்தில் அமைக்கப்பட்ட அழகான பார்வை மேடைகளும் உள்ளன. உண்மையில் இந்தப் பகுதி அற்புதமான இயற்கை அழகைக் கொண்டது. பலர் இங்கு மலையேற்றத்திற்காக வருகிறார்கள். முழுக் குளிர்காலத்தில் பனியால் மூடப்பட்டிருக்கும்போது இந்த இடம் இன்னும் அழகாக இருக்கும் என்று நினைத்தேன்.
ஜோர்ஜியாவில் என்னை வியக்கவைத்த மற்றொரு விடயம் நாய்களுக்கு அங்கு கிடைக்கும் சுதந்திரம்.
மேற்கத்திய நாடுகளில் காண்பதைவிட, இலங்கை அல்லது இந்தியாவைப் போலவே ஜோர்ஜியாவின் பல இடங்களிலும் நாய்களைச் சுதந்திரமாகக் காண முடிகிறது. அவை வளர்ப்பு நாய்களாக இருக்கலாம்; தெருநாய்களாக இருக்கலாம்; மலைகளில் சுற்றித் திரியும் நாய்களாகவும் இருக்கலாம். பெரும்பாலானவை அமைதியானவை.
அந்த மலைநாய்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஒரு சிறிய அருவியைப் பார்த்துவிட்டு, மலைப்பிரதேச நகரமான குடௌரியில் (Gudauri) தங்கினோம். மலையில் அமைந்திருந்த ஒரு நட்சத்திர ஹோட்டலில் எங்களுக்கு அறை கொடுக்கப்பட்டது. எங்களது அறை ஹோட்டலின் கீழ்ப்பகுதியில் இருந்தது.
நள்ளிரவில் தொடர்ச்சியாக நாய்கள் குரைத்துக்கொண்டிருந்தன.
தூங்க முடியவில்லை.
அடுத்த நாள் காலையில் ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டேன்.
“அவை மலைநாய்கள். உணவுக்காக கீழே வரும்போது குரைக்கும். அவற்றை எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. அவை பாதுகாக்கப்படுகின்றன,” என்றார்கள்.
“அப்படியானால், மறுபக்கத்தில் ஓர் அறை தாருங்கள்,” என்றேன்.
“அறை இல்லை,” என்று மன்னிப்புக் கேட்டார்கள்.
நானும் ஒரு மிருக வைத்தியனாக இருந்துவிட்டு, இதற்கு மேல் என்ன சொல்ல முடியும்?
அன்றிரவு மீண்டும் நாய்களின் குரல் கேட்டபோது எனக்கு அமிரானியின் கதை நினைவுக்கு வந்தது.
ஒருவேளை வெளியே குரைத்துக்கொண்டிருந்த அந்த மலைநாய்களில் ஒன்று, சங்கிலியால் கட்டப்பட்ட தனது எஜமானனை விடுவிப்பதற்காக நூற்றாண்டுகளாகச் சங்கிலியை நக்கிக்கொண்டிருக்கும் அமிரானியின் விசுவாசமான நாய் — குர்ஷாவாக (Qursha) இருக்குமோ?
அப்படி நினைத்துக்கொண்டு, காதுகளில் ஒலிவாங்கியை மாட்டி இசையைக் கேட்டபடியே அன்றிரவு தூங்கிப்போனேன்.
தொடரும்.
மறுமொழியொன்றை இடுங்கள்