Picture courtesy :help from chatgpt
நன்றி அம்ரிதா

இரவில் திடீரென விழித்தேன்
அந்த அசாதாரணமான கனவின் காட்சிகள் இன்னும் மனதில் நகர்ந்துகொண்டிருந்தன. படுக்கையிலிருந்து எழாமல் கையை நீட்டி மனைவியைத் தேடினேன். கைக்கு எட்டிய தூரத்தில் சியாமளாவின் கை பட்டது. அவளது மெதுவான குறட்டொலியும் கேட்டது.
நான் கண்டது கனவுதான்.
ஆனால், இப்படியொரு கனவு இதுவரை எனக்கு வந்ததில்லையே?
எனது வழக்கமான கனவுகளில் சிறுவயது நினைவுகள் வரும்; பழைய நண்பர்கள் வருவார்கள்; அந்த வயதில் பெருமூச்சுடன் பார்த்த பெண்கள் வருவார்கள்; சில சமயம் வேலைக்காலத்து மனிதர்களும் சம்பவங்களும் நிழல்களாக வந்து மறைவார்கள்.
ஆனால் இது அப்படியல்ல.
புதிய இடம். புதிய சம்பவம். இதுவரை நான் சந்தித்திராத ஒரு பெண்.
அதுவும், நான் முன்பு பார்த்திராத கோக்கேசிய நிலமான ஜோர்ஜியாவின் மலைப்பிரதேசத்தில், மனைவியுடன் விடுமுறைக்கு வந்து ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தபோது!
கனவுக்கு இடம், பொருள், காலம் என்று ஏதாவது இருக்க வேண்டுமா என்ன?
அன்றைய இரவின் தொடக்கமே அமைதியாக இருக்கவில்லை.
ஹோட்டலின் பின்புற மலையடிவாரத்திலிருந்து இரண்டு நாய்கள் தொடர்ந்து குரைத்துக்கொண்டிருந்தன. கோடைக்கால இரவு நீண்டுகொண்டே போவதை அவையும் உணர்ந்திருந்தனவோ என்னவோ.
ஹோட்டல் வரவேற்புக்குத் தொலைபேசி செய்தேன்.
“அவை மலைப்பிரதேச நாய்கள். அரசால் பாதுகாக்கப்படுபவை. இங்கிருந்து அவற்றைக் கலைக்க மட்டுமே எங்களால் முடியும். இப்போதைக்கு வேறு எதுவும் செய்ய முடியாது.”
வரவேற்புப் பெண்ணின் குரல் ஒரு இயந்திரத்தின் பதிவு செய்யப்பட்ட பதிலைப்போல் ஒலித்தது. இதே புகாரை இதற்கு முன்பும் பல விருந்தினர்களிடமிருந்து கேட்டிருக்க வேண்டும்.
நாய்களை இங்கிருந்து கலைத்தாலும் உணவு தேடி மீண்டும் வந்துவிடும் என்பது எனக்குத் தெரியும்.
“எதிர்ப்பக்கத்தில் வேறு அறை தர முடியுமா? கூடுதல் பணம் தரத் தயாராக இருக்கிறேன்,” என்றேன்.
“இன்றைக்கு எந்த அறையும் காலியாக இல்லை.”
வேறு வழியில்லை.
காதில் இயர்போனை வைத்துக்கொண்டு யூடியூப்பைக் கேட்டபடி படுத்திருந்தேன்.
எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.
கனவு ஒரு தொடர்ச்சியான கதையாக வரவில்லை. துண்டு துண்டான காட்சிகளாக வந்தது.
எனக்கு முன்னால் ஓர் இளம் பெண்.
பழங்காலத்தைச் சேர்ந்தவள்போல் உடையணிந்திருந்தாள். அவள் என்னோடு வாதிட்டுக்கொண்டிருந்தாள். இடையிடையே என்னை நோக்கி விரலை நீட்டி, நீதிமன்றத்தில் நிற்கும் குற்றவாளியைப்போல் என்னை நிறுத்தினாள்.
எங்கள் இருவரைத் தவிர அங்கு யாருமில்லை.
அவளுக்கு பதினாறு வயதுகூட இருக்குமா என்று தோன்றியது.
ஜிகினா வேலைப்பாடுகள் கலந்த கறுப்பு உடை அவளது கால்வரை மூடியிருந்தது. அதே நிறத் துணியால் தலையை மூடியிருந்தாள். முகம் மட்டும் வெளியே தெரிந்தது.
பூரண சந்திரனைப்போன்ற முகம்.
நீண்ட மூக்கில் பதித்திருந்த நீல இரத்தினம் நட்சத்திரம்போல் மின்னியது.
நிலவில் ஒரு நட்சத்திரமா?
கன்னங்களில் ரோஜாவின் மென்மையான நிறம். ஐந்தடி உயரம்கூட இருக்கமாட்டாள். ஒரு பேரழகியாகத் தெரிவதைவிட, சமீபத்தில்தான் சிறுமிப் பருவத்தைக் கடந்தவளாகத் தோன்றினாள்.
ஆனால் அவளது வார்த்தைகள் மட்டும் சிறுமிக்குரியவை அல்ல.
பழுத்த இரும்பைச் சுத்தியலால் அடிக்கும்போது சிதறும் நெருப்புப் பொறிகளைப்போல் அவை என்னை நோக்கித் தெறித்தன.
அவள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நான் தலைகுனிந்தேன்.
அப்போதுதான் சுற்றுப்புறத்தைப் பார்த்தேன்.
அது ஒரு பழைய இடுகாடு.
முழங்கால் உயரமுள்ள கல்லறைகள், வளர்ந்து நின்ற புற்களுக்கு நடுவே முளைத்த கற்களைப்போல் தெரிந்தன. பெயர்கள் இல்லை. எழுத்துகள் இல்லை. சமீபத்தில் யாராவது வந்து மலர் வைத்துச் சென்ற அடையாளம்கூட இல்லை.
பெயரற்ற இறந்தவர்களின் உலகம்.
அதன் நடுவே உயிருள்ள மனிதனாக நான் மட்டும்.
தூரத்தில் ஒரு பள்ளத்தாக்கு. அதற்கப்பால் குன்றுகள். அவற்றின் அருகே ஒரு கற்குகை.
இடுப்பளவு உயரமுள்ள குட்டை மரங்கள் காற்றுடன் போராடிக்கொண்டிருந்தன. பலமாக வீசிய காற்றின் சீறலில் உப்பின் சுவை கரித்தது.
அப்போதுதான் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.
ஜோர்ஜியா–அஜர்பைஜான் எல்லைப் பகுதியில், ஒரு சூஃபி துறவி வாழ்ந்ததாகக் கூறப்படும் குகைக்குச் சென்றிருந்தோம்.
குகையைப் பார்த்துவிட்டு சியாமளா உட்பட மற்றவர்கள் அனைவரும் வாகனத்திற்குத் திரும்பிவிட்டார்கள். நான் மட்டும் வழக்கம்போல் சாவகாசமாக ஒவ்வொரு அறையாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
கடைசியில் அங்கு வைக்கப்பட்டிருந்த பாரசீக மொழியில் எழுதப்பட்ட குர்ஆனையும் பார்த்துவிட்டு வெளியே வந்தேன்.
யாருமில்லை.
குகையிலிருந்து இறங்கி, மீண்டும் பல படிகளை ஏறி, புல்வெளியின் வழியாக நடந்தபோது காலணியின் கயிறு அவிழ்ந்தது.
குனிந்து கட்ட முயன்றேன்.
முதுகு ஒத்துழைக்கவில்லை.
எங்காவது உட்கார்ந்துதான் கட்ட வேண்டும்.
அப்போதுதான் அந்தப் பழைய இடுகாடு கண்ணில் பட்டது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான இடுகாடு என்று எங்கள் வழிகாட்டி சொல்லியிருந்தார்.
“இந்த சூஃபியின் குகைக்கு அருகில் புதைக்கப்பட்டால் சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்று அக்கால மக்கள் நம்பினார்கள். அதனால் இங்கு பலரைப் புதைத்தார்கள்.”
அங்கு அமர்வதற்கு வேறு இடமில்லை.
முழங்கால் உயரமுள்ள ஒரு கல்லறையின் மீது அமர்ந்து காலணிக் கயிற்றைக் கட்டினேன்.
எழுவதற்கு முன்பு சுற்றிப் பார்த்தேன்.
என்னைப் பார்க்க யாருமில்லை.
இது உண்மையில் நடந்தது.
ஆனால் கனவில் அந்தப் பெண் ஏன் வந்தாள்?
அவள் என் முன்னால் நின்றாள்.
மதுரையை எரிக்கப் புறப்பட்ட கண்ணகி எப்படியிருந்திருப்பாளோ, அப்படியொரு கோபம் அவளது முகத்தில்.
விரலை என்னை நோக்கி நீட்டினாள்.
“யார் நீ? ஏன் என் கல்லறையை அவமதித்தாய்?”
“அது உன் கல்லறை என்று எனக்கு எப்படித் தெரியும்? இதோ பார், தடியுடன் நடக்கிறேன். குனிந்து நின்றபடி காலணிக் கயிற்றைக் கட்ட முடியவில்லை. அதனால்தான் ஒரு நிமிடம் அமர்ந்தேன். இதில் என்ன தவறு?”
“இறந்தவர்களை மதிக்க வேண்டும் என்பது தெரியாதா? அதுவும் கன்னிப்பெண்ணான என் கல்லறையின் மேல் ஓர் ஆண் அமர்ந்திருக்கிறாய். அது எனக்கு மிகப் பெரிய அவமதிப்பு.”
“தாயே, எல்லாப் பாவங்களுக்கும் பாவவிமோசனம் இருக்கிறதுதானே?”
அவளது கண்கள் மேலும் விரிந்தன.
“யாரைத் தாயே என்கிறாய்? என் பெயர் மும்தாஜ்.”
“சரி, மும்தாஜ். இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?”
“எங்கள் ஷியா மரபில் இதற்குத் தண்டனை உண்டு.”
“தலையை வெட்டப்போகிறாயா?”
அவள் பதில் சொல்லவில்லை.
“சரி, தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதற்கு முன்பு ஒன்றைச் சொல். பதினைந்து, பதினாறு வயதுகூட இல்லாத நீ ஏன் இறந்தாய்?”
“அதை உனக்கு ஏன் சொல்ல வேண்டும்? சொன்னால் எனக்கு என்ன கிடைக்கும்?”
“நான் ஒரு எழுத்தாளன். மனிதர்களையும் அவர்களது கதைகளையும் அறிய விரும்புகிறவன்.”
“எழுத்தாளனா?”
அதுவரை கோபத்தில் சிவந்திருந்த முகம் மெதுவாக மாறியது.
உதட்டோரத்தில் சிறிய புன்னகை முளைத்தது.
“அப்படியானால் கேள்.
“என் தந்தை ஒரு பணக்கார அல்பேனியக் கம்பளி வியாபாரி. அவரிடம் வேலை செய்த அரஷை நான் காதலித்தேன்.
“ஒருநாள் அவன் பக்கத்து ஊருக்குப் போகும் முன்பு என்னிடம் சொல்ல வந்தான். அதை என் பாட்டி பார்த்துவிட்டாள். அவனை உடனே வேலையிலிருந்து அனுப்பும்படி அப்பாவிடம் சொன்னாள்.
“என் தந்தை பாட்டியின் பேச்சை மீறமாட்டார்.
“அரஷ் வெளியேற்றப்பட்டான். “
“நான் வீட்டிற்குள் அடைக்கப்பட்டேன்.”
“என்னைக் காண முடியாமல் அவன் பைத்தியக்காரனைப்போல் அலைந்தான். நானும் அவனை நினைத்து பித்துப்பிடித்தவள்போல் இருந்தேன்.
“என்னைத் திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று வீட்டார் முடிவு செய்தார்கள். “
“மாப்பிள்ளை வீட்டாரும் பெரிய கம்பளி வியாபாரிகள். “
“திருமணம் விமரிசையாக நடந்தது. விலை உயர்ந்த கம்பளிகள், கம்பளித் தறிகள் என்று பரிசுகள் குவிந்தன.
“என் பாட்டிக்குத்தான் அதிக மகிழ்ச்சி.
“பல வருடங்களாக மற்றவர்களின் திருமணங்களுக்கு அவள் கொடுத்த மொய்ப்பணம் எல்லாம் என் திருமணத்தின் மூலம் திரும்பி வந்தது.”
“நான் மட்டும் மரப்பொம்மையைப்போல் மணப்பெண்ணாக அமர்ந்திருந்தேன்.
“என் கணவனுக்கும் எனக்கும் இடையில் எதுவும் நடக்கவில்லை.
“திருமணமான சில நாட்களில் என் கணவன் வெளியே சென்றிருந்தான்.
“அப்போதுதான் செய்தி வந்தது.
“அரஷ் இறந்துவிட்டான். “
“என்னால் தாங்க முடியவில்லை.”
“அரளி விதைகளை அரைத்துக் குடித்தேன்.”
அவள் சிறிது நேரம் மௌனமாக இருந்தாள்.
“நான் தற்கொலை செய்துகொண்டது வெளியே தெரிந்தால் குடும்பத்திற்கு அவமானம் என்று நினைத்தார்கள். அருகிலிருந்த பூங்காவில் பாம்பு கடித்து இறந்ததாகக் கதை கட்டிவிட்டார்கள்.”
“அதை நீ எப்படி அறிந்தாய்?”
அவள் சிரித்தாள்.
“என்னைப்போல் எத்தனை பெண்கள் இறந்து இங்கே வந்திருக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் வந்து சொல்லமாட்டார்களா?”
“உன் கதை லைலா–மஜ்னுவின் கதைபோல் இருக்கிறது.”
அவளது முகம் மீண்டும் தீவிரமானது.
“லைலா–மஜ்னு முதலில் அரபிய வாய்மொழிக் கதைதான். பாரசீக கவிஞர் நிசாமி கஞ்சவி அதை எழுத்தில் வடித்ததால் அது காவியமாகியது. லைலாவின் காதல் உலகத்திற்குத் தெரிந்தது. “
“என் காதல் மட்டும் ஏன் பெயரற்ற கல்லறைக்குள் கிடக்க வேண்டும்?”
அந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.
“எல்லாவற்றுக்கும் உன் பாட்டியைத்தான் குற்றம் சொல்கிறாயே?”
“வேறு யாரைச் சொல்வது? அவள் ஒரு டைரி வைத்திருந்தாள். உறவினர்கள், நண்பர்கள் என்று அரை நூற்றாண்டாக யார் வீட்டுத் திருமணத்திற்கு எவ்வளவு மொய் கொடுத்தாள் என்பதையெல்லாம் எழுதி வைத்திருந்தாள். அந்தப் பணத்தை வசூலிக்கவே என்னை மணப்பெண்ணாக்கினாள் “
“என் பாட்டி பெரிய சதிலீலாவதி!”
எனக்குச் சிரிப்பு வந்தது.
“மும்தாஜ், இப்போது என்னையும் உன் பாட்டியின் வரிசையில் சேர்த்துவிட்டாயா?”
“இல்லை. நீ எழுத்தாளர் என்று சொன்னாய் அல்லவா? எனக்கு ஓர் உதவி செய். பிறகு உன்னை மன்னிக்கிறேன்.”
“என்ன உதவி? உன் தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன்.”
அவள் என்னை நேராகப் பார்த்தாள்.
“என் கதையை எழுது.
“நானும் காதலுக்காக இறந்த லைலாதான். அவளைப்போல் எனக்கும் அமரத்துவம் வேண்டும், அதுமட்டுமல்ல.
“என் பாட்டியைப்போன்றவர்கள் இன்னொரு மும்தாஜை உருவாக்காமல் இருக்க வேண்டும். அதற்காக என் கதையை எழுது.”
சிறிது நேரம் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“என் மகளைப்போல் நினைத்து உனக்கு வாக்குத் தருகிறேன். நிச்சயமாக எழுதுவேன்.”
அவளிடம் விடைபெற்று எங்கள் வாகனத்தை நோக்கி நடந்தேன்.
சில அடிகள் சென்றதும் என் அருகே யாரோ நடப்பதை உணர்ந்தேன்.
திரும்பிப் பார்த்தேன்.
ஒரு நவீன இளம்பெண்.
நீல ஜீன்ஸ். வெள்ளை மேல்சட்டை.
உற்றுப் பார்த்தேன்.
மும்தாஜ்!
“நன்றி,” என்றாள்.
“என்ன இது? சற்று முன்பு பழங்கால உடையில் இருந்தாய். இப்போது ஜீன்ஸுக்கு மாறிவிட்டாயே?”
அவள் சிரித்தாள்.
“புராதன ஆவி என்றால் புராதன உடையிலேயே இருக்க வேண்டுமா? நாங்கள் நாகரிகமாக மாறக்கூடாதா?”
என்று சொல்லியபடி ஜீன்ஸைச் சற்றுக் கீழே இழுத்து, மேல்சட்டையைச் சிறிது உயர்த்தினாள்.
அவளது வயிற்றில் சிறிய தொப்புள் தெரிந்தது.
ஏவாளுக்குப் பிறகு பிறந்த எல்லாப் பெண்களையும் போல அவளுக்கும் தொப்புள் இருந்தது.
ஆவிக்கும் தொப்புள் இருக்குமா?
இது என்ன கேள்வி?
படுக்கையில் விழித்துக்கிடந்தேன்.
மனிதர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போனால் ஏதாவது காரணம் சொல்லித் தப்பித்துக்கொள்ளலாம்.
ஆனால் ஆவிக்குக் கொடுத்த வாக்குறுதி?
அதுவும் நள்ளிரவில், பெயரற்ற கல்லறையிலிருந்து எழுந்துவந்து தனது கதையைச் சொன்ன ஒரு பெண்ணுக்கு?
படுக்கையிலிருந்து மெதுவாக எழுந்தேன்.
சியாமளாவின் தூக்கம் கலைந்துவிடாதபடி கம்ப்யூட்டரைத் திறந்தேன்.
எழுதத் தொடங்கினேன்.
வழக்கத்தைவிட விரல்கள் வேகமாக ஓடின.
நான் எழுதுகிறேனா?
அல்லது என் பின்னால் நின்று மும்தாஜ்தான் என் விரல்களை இயக்குகிறாளா?
“என்ன, இரவில் தூங்காமல் கம்ப்யூட்டரோடு?”
சியாமளாவின் குரல் கேட்டது.
நான் பதில் சொல்லவில்லை.
திரையில் வார்த்தைகள் தொடர்ந்து பிறந்துகொண்டிருந்தன.
விடிவதற்குள் கதையை எழுதி முடித்தேன்.
தலைப்பை மட்டும் எழுதாமல் சிறிது நேரம் யோசித்தேன்.
பின்னர் இரண்டு வார்த்தைகளைத் தட்டச்சு செய்தேன்:
லைலா மஜ்னு..
மறுமொழியொன்றை இடுங்கள்