
முருகபூபதி
மன்னர் அசோகன் என்பவர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரசாட்சி செய்த மன்னன்.நாடு பிடிக்கும் ஆசை அலெக்ஸாண்டருக்கும் நெப்போலியனுக்கும் ஹிட்லருக்கும் இருந்தது போன்றே அசோகனுக்கும் கலிங்கம் என்ற நாட்டை பிடிக்கும் ஆவல் இருந்தது. அந்த மன்னன் அந்தப்போரின் வெற்றியை மனதளவிலும்கூட கொண்டாட முடியாமல் மக்களின் உயிரிழப்பு குறித்து ஆழ்ந்த கவலையடைந்து புத்தமதத்தை தழுவி அன்பு மார்க்கத்தை போதிக்க முன்வந்ததுடன் இலங்கைக்கு தனது மகள் சங்கமித்தையையும் அரச மரக்கிளையுடன் அனுப்பிவைத்தார்.
அந்த அசோகன்தான் உலகிலேயே முதலாவது மிருகங்களுக்கான வைத்தியசாலையை உருவாக்கிய முன்னோடி.எந்த ஒரு விலங்கும் பிராணியும் நோயுற்றால் அதற்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் அவர் பின்பற்றிய அன்பு மார்க்கத்திலிருந்து தோன்றியது.விலங்குகளும் மற்றும் பிராணிகள் உயிரினங்களும் மனிதர்களைப்போன்று வாய்பேச முடியாத ஜீவன்கள். இந்தச்செய்தியை நடேசன் தனது மூன்றாவது நாவல் அசோகனின் வைத்தியசாலையில் மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்கின்றார்.
இந்நாவல் முதலில் கனடாவிலிருந்து வெளியாகும் பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியானது. அந்தப்பதிவுகள் இணைய இதழின் ஆசிரியர் கிரிதரன் அவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எமது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிக்கின்றேன்.
இந்நாவலை யுகமாயினி ஆசிரியர் (அமரர் ) சித்தன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவருக்கு இந்த ஆங்கிலப்பிரதியை நடேசன் சமர்ப்பணம் செய்துள்ளார்.இந்நாவல் தமிழில் நூலுருவமாகும் பொழுதே அதனை ஒப்பு (Proof Reading) நோக்கியிருக்கின்றேன்.நிறையப் பாத்திரங்கள் இந்நாவலில் வருகின்றன. சுமார் 30 பாத்திரங்கள் இருக்கலாம். ருஷ்ய இலக்கியமேதை லியோ ரோல்ஸ்ரோயின் உலகப்புகழ்பெற்ற போரும் சமாதானமும் நாவலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் வருகிறார்கள்.
அசோகனின் வைத்தியசாலையில் கொலிங்வூட் என்ற ஒரு பூணையும் மிக முக்கியமான பாத்திரமாக வருகிறது.நானூறு பக்கங்கள் கொண்ட இந்நாவலை எழுதி முடிப்பதற்கு நடேசனுக்கு – சுமார் மூன்று வருடகாலம் எடுத்ததாகச்சொன்னார்.
தமிழில் இந்த நாவலை முன்பு பதிவுகளில் தொடர்ந்து படிக்காத ஒரு வாசகன் முழுநாவலாக இவ்வாறு நூல் வடிவத்தில் முதல் தடவையாக படிக்க நேர்ந்தால் ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புத்தான் இந்நூல் என்ற முடிவுக்கும் வரலாம்.நான் இதனைப்படித்தபொழுது நடேசன் ஆங்கிலத்தில் சிந்தித்து ஆங்கிலத்தில் கற்பனை செய்து தமிழில் எழுதியிருக்கிறாரோ என்றும் நினைத்தேன்.சில அத்தியாயங்கள் தனித்தனி சிறுகதைகளுக்கு அல்லது குறுநாவலுக்குரியது போன்ற தோற்றத்தையும் காண்பிக்கின்றன.குறிப்பாக லயன் என்ற பாத்திரம். அவளது கதை வித்தியாசமானது. அவள் சம்பந்தப்பட்ட அத்தியாயங்களை படித்தபொழுது ஆங்கில த்ரில்லர் படங்களை பார்த்தது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.அதுபோன்று மற்றுமொரு பாத்திரம் பழைய சாமான்கள் பழைய வெற்று மதுப்போத்தல்கள் முதலானவற்றை தனது வீடு நிரம்பவும் சேகரித்துவைத்திருந்து – அநாதரவாக மரணிக்கும் ஒரு பாத்திரம்.
நடேசன் இந்நாவலில் எம்மை – நாம் முன்னர் பார்த்தறியாத உலகத்திற்கு அழைத்துச்செல்கின்றார். தமிழில் படைப்பு இலக்கியத்திற்கு இது புதிய வரவு. புதிய அறிமுகம். அதாவது எம்மில் எத்தனைபேர் மருத்துவமனைகளில் இருக்கும் சவ அறைகள் பற்றி இலக்கியத்தில் அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். இந்த உலகில் பிறந்த அனைவருமே ஒருநாள் இறப்பது நிச்சயம்தான். ஆனால் – இறந்தபிறகு என்ன நடக்கும் என்பதை மற்றவர்களின் மரணச்சடங்கில்தான் நாம் பார்க்கின்றோம்.விலங்குகள் பிராணிகளின் சவ அறை எப்படி இருக்கும்? நடேசனின் நாவல் அது பற்றியும் பேசுகிறது. பதட்டத்துடனும் அதிர்வுடனும் அந்த அத்தியாயங்களை படித்தேன்.முற்றிலும் புதிய களம் இந்த நாவலில் விரிகிறது. நாம் பார்க்கத்தவறிய – பார்க்கத்தயங்கும் – பேசத்தயங்கும் செயல்படுத்துவதற்கு அஞ்சும் பல பக்கங்கள் இந்நாவலில் திரைப்படக்காட்சிகளாக வருகின்றன.
பல பாத்திரங்கள் வந்த பொழுதும் ஒரே ஒரு தமிழ்ப்பாத்திரம் சிவநாதன் சுந்தரம்பிள்ளை மாத்திரம்தான். அவனது மனைவி பிள்ளைகள் இந்நாவலில் இரண்டாம் பட்சம்தான். காலோஸ் சேரம் என்ற மற்றும் ஒரு மிருகவைத்தியர் மிகவும் சுவாரஸ்யமான பாத்திரம். எனக்கு அவர் சம்பந்தப்பட்ட அத்தியாயங்களை படித்தபொழுது மறைந்துவிட்ட இந்தியாவின் பிரபல – புகழ்பூத்த பத்திரிகையாளர் இலஸ்ரேட்டட் வீக்கிலியின் பிரதம ஆசிரியர் குஷ்வந் சிங்தான் நினைவுக்கு வந்தார்.குஷ்வந்த் சிங் மிகவும் உற்சாகமான சுவாரஸ்யமான மனிதர். அவர் பாலியல் விடயங்களையும் வெளிப்படையாகவே பேசுபவர் எழுதுபவர். அதில் அவரிடம் ஒரு நேர்மையும் இருந்தது.
இந்நாவலின் கார்லோஸ் சேரம் பல இடங்களில் எம்மை வாய்விட்டு சிரிக்கவைக்கின்றார்.இதற்கு மேலும் இந்நாவல் பற்றி நான் சொன்னால் வாசிக்கப்போகும் உங்களின் ஆவலில் நான் குறுக்கிட்டவனாகிவிடுவேன்.
நன்றி திண்ணை கொம்
வேரல் பதிப்பகம் -தமிழில்
English. The veterinary hospital – Amazon.com
மறுமொழியொன்றை இடுங்கள்