நாலுகால் சுவடுகள்

நூல்  அறிமுகம்  – மதுமாலினி   மெல்பேர்ன் அவுஸ்திரேலியா

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்று சொல்வார்கள்.

அப்படிப்பட்ட ஒரு நட்பு, ஒரு சந்திப்பு, ஒரு உறவு -ஒருவருடைய வாழ்க்கையில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு டாக்டர் நோயல் நடேசனின் எழுத்துலகப் பயணம் ஒரு நல்ல உதாரணம் என்று நான் நினைக்கிறேன்.

முருகபூபதி ஐயாவுடனான அவருடைய நட்பு, தொழிலால் கால்நடை மருத்துவராக இருந்த டாக்டர் நோயல் நடேசனை, வாழ்க்கையின் பிந்தைய பருவத்தில் எழுத்துலகிற்குள் அழைத்து வந்திருக்கிறது.

அவர் ஏன் எழுதத் தொடங்கினார் என்பதற்கான பதில், அவருடைய முதல் புத்தகமான வாழும் சுவடுகள் நூலிலேயே இருக்கிறது.

அந்த நூலில் 56 கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கால்நடை மருத்துவராக அவர் பணியாற்றியபோது சந்தித்த விலங்குகளும், அவற்றின் உரிமையாளர்களும், அந்தச் சந்திப்புகள் அவருக்குள் ஏற்படுத்திய அனுபவங்களும் அந்த நூலின் அடிப்படையாக இருக்கின்றன.

அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாகத்தான் எனக்கு நாலுகால் சுவடுகள்தெரிகிறது.

வாழும் சுவடுகள்நூலில் 56 கதைகள் என்றால், இந்த நூலில் 20 கதைகள்.

இந்த இருபது கதைகளுமே அவருடைய உண்மையான அனுபவங்களிலிருந்து வந்தவை. அவருடைய கிளினிக்கில் நடந்த சம்பவங்கள்; அங்கே சிகிச்சைக்காக வந்த பிராணிகள்; அந்தப் பிராணிகளுடன் வந்த அவர்களுடைய உரிமையாளர்கள்; அவர்களுடனான உரையாடல்கள்; அந்த மனிதர்களின் வாழ்க்கையில் அவர் பார்த்த துயரங்கள், உறவுகள், இழப்புகள், நம்பிக்கைகள் — இவை எல்லாமே இந்த நூலுக்குள் கதைகளாக வந்திருக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் ஆரம்பித்து இலங்கை சென்று பின் இந்தியா வில் முடிகிறது கதைகள் . குறிப்பாக, கொரோனா காலத்தில் அவர் சந்தித்த அனுபவங்களும் இந்த நூலுக்குள் பதிவாகியிருக்கின்றன. ஆனால் இந்த நூலை நான் ஒரு விலங்குகளைப் பற்றிய புத்தகமாக மட்டும் பார்க்கவில்லை.

எனக்கு இது, நாலு கால் சுவடுகளின் வழித்தடத்தில், இரண்டு கால் மனிதர்களின் மனச்சுவடுகள். ஒரு கால்நடை மருத்துவமனைதான் இந்த நூலின் களம். ஆனால் அந்த மருத்துவமனைக்குள் வருவது வெறும் நாய்களும் பூனைகளும் மட்டுமல்ல.  வற்றுடன் மனிதர்களும் வருகிறார்கள்.

ஒவ்வொரு விலங்கிற்குப் பின்னாலும் ஒரு மனிதக் கதை இருக்கிறது.

ஒரு நாய்க்கு நோய் வந்திருக்கிறது என்றால், அந்த நாயைத் தூக்கிக்கொண்டு வரும் மனிதருக்கும் ஒரு கவலை இருக்கிறது. ஒரு நாய் இறக்கும்போது, அது ஒரு விலங்கின் மரணம் மட்டுமல்ல — அந்த வீட்டில் ஒரு உறவு முடிவடைகிறது.

சில கதைகளில் பிராணிகளின் நோயைப் பார்க்கிறோம்.

சில கதைகளில் அவற்றின் உரிமையாளர்களுடைய வாழ்க்கையைப் பார்க்கிறோம்.

சில இடங்களில் குடும்ப உறவுகளைப் பார்க்கிறோம்.

சில இடங்களில் தனிமையைப் பார்க்கிறோம்.

சில இடங்களில் மரணத்தை எதிர்கொள்ளும் மனித மனதைப் பார்க்கிறோம்.

சில இடங்களில் கலாசாரம், மத நம்பிக்கை, சமூகப் பின்னணி ஆகியவை ஒரு பிராணியை எப்படிப் பார்க்கிறோம் என்பதையே மாற்றிவிடுவதைப் பார்க்கிறோம்.

அதனால்தான் இந்த நூலில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் , டாக்டர் நோயல் நடேசன் விலங்குகளைப் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை; அந்த விலங்குகளின் வழியாக மனிதர்களைப் பார்க்கிறார். இடைச்செறுகளாக அவரின் நிலைப்பாடுகளையும் சொல்லியிருப்பது , வாசகர்களுக்காக தன் கருத்தை மாற்றாமல் இருப்பதுதான் அதன் சிறப்பு. Tatoo பற்றியும் , transgender குறித்தும் , தமிழ் மற்றும் சிங்களாதவர்களோடன நட்பு பற்றியும் , தனது கருத்தை ஒளிவு மறைவு இல்லாமல் கூறியிருப்பார். ஒரு கால்நடை மருத்துவருக்கு ஒரு நாய் என்பது ஒரு நோயாளியாக இருக்கலாம்.ஆனால் அந்த நாயை வளர்க்கும் மனிதருக்கு அது குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருக்கலாம். அந்த வித்தியாசத்தை இந்த நூல் தொடர்ந்து நமக்கு உணர்த்துகிறது.

ஒரு மருத்துவராக அவர் பார்க்கும் பார்வையும், ஒரு எழுத்தாளராக அவர் பதிவு செய்யும் பார்வையும் இங்கே ஒன்றாகச் சேர்கிறது.

அதனால்தான் இந்த இருபது கதைகளையும் படிக்கும்போது, நாம் ஒரு veterinary clinicக்குள் உட்கார்ந்திருப்பது போலவும், அந்த clinicக்குள் வந்து செல்லும் பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையை ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருப்பது போலவும் எனக்குத் தோன்றியது.

இந்த நூலின் இன்னொரு சிறப்பு அவர் சந்தித்த மனிதர்களை மிகப்பெரிய கதாபாத்திரங்களாக உருவாக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.

ஒரு சிறிய சம்பவம்.

ஒரு நோயுற்ற நாய்.

ஒரு வயதான உரிமையாளர்.

ஒரு குடும்பத்தின் முடிவு.

ஒரு மருத்துவரின் ஒரு கேள்வி.

அவ்வளவுதான்.

அந்தச் சிறிய சம்பவத்தின் பின்னால் ஒரு பெரிய மனித வாழ்க்கை தெரிகிறது.

அதுதான் இந்த நூலின் சுவடு.

நாலுகால் சுவடுகள் என்று தலைப்பு வைத்திருந்தாலும், அந்த நான்கு கால்களின் தடத்தைப் பின்தொடர்ந்து சென்றால், இறுதியில் நாம் வந்து சேருவது மனிதர்களின் மனதுக்குள்ளே.

அஸ்தியில் பங்கு என்ற முதல் கதையில் இறந்த நாயின் அஸ்தியை பிரிந்த தம்பதியர் சமமாக பங்கிட்டு கொள்ளும் கதை.

நினைவாற்று வாழ்தல் கதையில் கொரோனா வின் தாக்கம் பற்றி பேசப்படுகிறது.

பான்பராகஇல் நோய் சாதி பார்த்து வருவதில்லை, தோளில் வாளோ நூலோ இருந்தாலும் அதற்கு தெரியப்போவதில்லை என்ற கருத்தை மறைமுகமாக சொல்கிறார்.

மற்ற பிராணிகளை போலவே தனது நாய் சிண்டி யையும் ஒரு கட்டத்தில் கருணை கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது. அப்போது ஒரு பாசக்கார உரிமையாளருக்கும் , மருத்துவருக்குமான போராட்டத்தை நேர்த்தியாக சொல்லி இருப்பார். Dr. சியாமலா விற்கு உடல் நலம் குன்றியபோது சிண்டி அவருக்கு ஒரு மன நல மருத்துவர் போல் இருந்துருக்கிறான்.

சில நேரங்களில் கருணை கொலை செய்ததன் மூலம் அவர் மரண தேவனாக இருந்தாலும் , பல இடங்களில் அவர் தேவதூதனாக கட்டாயம் இருந்திருப்பார் என்பது என் நம்பிக்கை.

20 கதைகளுக்கும் ஒரே இடம் தான் களம் என்றாலும் , ஒவ்வொன்றும் வித்தியாசமானவை.

டாக்டர் நோயல் நடேசனின் இந்த எழுத்துப் பயணம் இன்னும் பல சுவடுகளை நமக்குத் தர வேண்டும் என்று வாழ்த்தி, இந்த நூலை உங்களிடம் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி thinnai.com.

நாலுகால் சுவடுகள்: காலச்சுவடு பதிப்பகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.