தாத்தாவின் வீடு  

 வாசிப்பு அனுபவ பகிர்வு  கறுப்பையா ராஜா  மெல்பேன்

தமிழ்நாட்டு வேரல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் எழுத்தாளர் நோயல் நடேசன் அவர்களின் ஆறாவது நாவல்  தாத்தாவின்வீடு. இதற்க்கு முன் இவரின் ‘அசோகனின் வைத்திய சாலை,  எனும் நூலின் இரண்டாம்

பதிப்பையும் வேரல் பதிப்பகம் வெளியிட்டு இருக்கும்.

அசோகனின் வைத்திய சாலை எனும் நாவலை 2026 இல் பவளவிழா

கண்டமூத்த பத்திரிகையாளரும்,எழுத்தாளரும்,சமூகசெயற்பாட்டாளருமான

மதிப்பிற்குரிய முருகபூபதி ஐயா அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருப்பார் .

அந்த நூலின் முன்னுரையை மதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு ஜெயமோகன்

மிக விரிவாகவும் செறிவாகவும் எழுதியிருப்பார்.அதற்க்கு நன்றி பாராட்டும்

விதமாக இந்த தாத்தாவின் வீடு எனும் நாவலை , நோயல் நடேசன்

அவர்கள் திரு ஜெயமோகன் அவர்களுக்கு சமர்ப்பித்து இருப்பார்.

திரு ஜெயமோகன் அவர்கள் ஆற்றிய நாவல் எனும் கலை, எனும் உரை

ஒன்றில் ஒரு நல்ல நாவல் அதை வாசிக்கும் வாசகனுக்கு அந்த நாவலில்

சென்று வாழ்ந்த அனுபவத்தை தர வேண்டும் என்பார்.  ‘தாத்தாவின் வீடு’ ‘

எனும் இந்த நாவல் அதை உறுதி செய்கிறது.

நோயல் நடேசன் அவர்களின்  ‘ கானல் தேசம்’  எனும் புனைவு நாவல்

இலங்கையில் போருக்கு பின்னரான வாழ்வை சொல்லுகின்றன என்றால்  ‘தாத்தாவின் வீடு’ ‘ புனைவு நாவல் இலங்கையில் போருக்கு முன்பான பரபரப்பு ஏதும் அதிகம் இல்லாத நிலப்பகுதிக்கு அழைத்துச்சென்று அங்கு மெதுவாய் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் எவ்வாறு போருக்கு முந்தய பதட்டத்தை மெல்ல ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் சொல்லியிருப்பார்.

தாத்தாவின் வீடு ஆஸ்திரேலியாவில் இருந்து தன் மனைவியோடு இலங்கையின் எழுவைதீவிற்கு வரும் நட்சத்திரன் தான் பிறந்தது முதல் வாழ்ந்த பத்து ஆண்டுகளை எண்ணியபடி அங்கே தங்குகிறான் ,அன்றையநடு இரவில் எதோ சத்தம் கேட்க மெல்லிய நிலவொளியில் அலைகளின் ஓசையை கேட்டபடி சத்தம் வந்த திசையில் செல்லகிறான் அங்கே அவன் காண்பது இறந்து போன நட்சத்திரனின் தாத்தாவை ,திடுக்கிட்டு அகனவிலிருந்து விழிக்கும் நட்சத்திரன் பத்து வருட காலம் தாத்தாவோடு வாழ்ந்த தன் மிக இள வயது ஞாபகங்களை தன் மனைவியிடம் சொல்ல ஆரம்பிக்கிறான் நாமும் அவனோடு அந்த வாழ்க்கைக்குள் செல்கிறோம் .

மிகச்சிறிய எழுவைதீவில் வசிக்கும் முன்னூறு குடும்பங்கள் ,அவர்களில் பாதிபேர் மீன்பிடித்தொழில்,அவர்களின் தினசரி வாழ்க்கை ,வறண்ட தென்னையும் பனையும் நிறைந்த நிலப்பரப்பு,கள் இரக்கும் தொழில், அங்கு நிலவும் குடிநீர் பஞ்சம் ,நோய்,திருவிழா,படகு பயணம் இப்படியான அவர்களின் அன்றாட வாழ்வில் சிறுவன் நட்சத்திரன் மூலமாக நம்மையும் காண செய்கிறார் .

தாயின் முழு அன்பிலும் ,தந்தையோடு முரண்பட்டும் ,தாத்தாவை ஆதர்சமாக கொண்டும் சிறுவன் நட்சத்திரன் வளருகிறான்,ஊரில் உள்ளவர்கள் தாத்தாவின் ஆலோசனை கேட்டே முடிவுகளை எடுக்கின்றனர்,கடற்கரையில் வரும் கள்ளத்தோணிகளும் ,கடத்தல் நடவடிக்கைகளும் ,மனநலம் பதித்த ஒரு பெண்ணின் கொலையும் ,தீவுக்குள் கொண்டு விடப்படும் வெறிநாய்களும் ஒரு கட்டத்தில் கடற்படையை வரவைக்கிறது அதில் விழும் ஒரு கொலை ஊரை ரெண்டுபட வைக்க ,கூட்டு குடும்பமாய் வாழும் தாத்தாவின் வீடு அதன் பின்பு என ஆனது என்பது நாவல் விவரிக்கும் கதை, நாவல் வாசிக்கும் வாசகனாக நாவல் வாசிப்பில் நான் பெற்றுக்கொண்டது மொத்த நாவலும் தாத்தாவினை மையப்படுத்தியே சொல்வதால் நாம் நம்சிறு வயது ஞாபகங்களுக்குள் சென்று உறவுகளோடு வாழ்ந்து திளைக்கமுடிகிறது . கடத்தல் தோணிகள் நடமாட்டம் ,வெறிநாய்கள் தீவில் விடப்படுவது தொடர்ந்து வரும் கடற்படை ,பிளவுபடும் ஊர் போன்றவை படிமமாக சொல்லப்படும் இலங்கை தீவின் கதையோ என உணர்வளிக்கின்றது.

 நட்சத்திரனின் அப்பு வேறு ஊரில் பணிபுரிய காரணமான 1958 இல்ஏற்பட்ட முதல் இன கலவரத்தையும் தொட்டு செல்கிறார்.கள்ளத்தோணியில் ராமநாதபுரத்தில் இருந்து அடைக்கலம் கேட்டு வந்த ராமலிங்கத்தை பாதுகாக்க மலையகத்தில் இருந்து வந்ததாக சொல்லசொல்வதன் மூலம் 1964 இல் ஏற்பட்ட சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் அதன் தொடர்ச்சியாக நாடற்றவர்களாக ஆக்கப்பட்ட மக்களின் கதையையும் உணர்த்துகின்றார்.

தென்னையும் பனையும் நிறைந்து கிடந்த நிலங்களில் வாழ்ந்த தமிழர்களின்வாழ்வில், கள் அருந்துதல் என்பது ஒரு சாதாரண சமூக வழக்கமாகவும் விருந்தோம்பலின் ஓர் அங்கமாகவும் இருந்தது என்பதை நாவலில் இயல்பான அன்றாட காட்சிகளாக காண்பிக்கின்றார்.

நாவலில் குடும்ப வன்முறை என்பது எப்படி சிறுவர்களின் இள மனதைப் பாதிக்கின்றது என்பதையும் அழுத்தமாக சொல்லியிருப்பார். நாவலின் இறுதியில் மனிதர்களின் விலங்கு இயல்புகள் பரிணாமத்தில்

மறையாமல் தொடர்கின்றன .குடும்பம்,சமூகம்,தேசம்&என்ற வடிவங்களில், என நம்மை சிந்திக்க செய்கின்றார்.

ஓர் வாசகனாக வாசித்து ரசித்த விஷயங்களை பகிர்ந்துகொள்வதில் மிக்கமகிழ்ச்சி அடைகிறேன் .தாத்தாவின் வீடு நாவலை முழுமையாக வாசித்து வாசிப்பு இன்பம் பெறுக, நன்றி.

நன்றி :திண்ணை

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.