ஜோர்ஜியா 1 — வைன் நதியாக ஓடும் தேசம்

ஜோர்ஜியா நாட்டைப் பற்றி எழுதுவதற்கு முன்பு, அந்த நாட்டைப் பற்றி என் மனதில் பல வருடங்களாகப் பதிந்திருந்த ஒரு கதையைச் சொல்ல வேண்டும்.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு கதை படித்தேன். அதில் வேறு நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், ஜோர்ஜியாவைச் சேர்ந்த ஆண் ஒருவரைத் திருமணம் செய்கிறாள். முதலிரவு முடிந்ததும் அவளுக்குத் தாகம் எடுக்கிறது. தண்ணீர் கேட்கிறாள். மாப்பிள்ளை வீட்டார் அவளுக்கு வைன் கொடுக்கிறார்கள். அவளது தாகம் அடங்கவில்லை; மேலும் அதிகரிக்கிறது. மீண்டும் தண்ணீர் கேட்கிறாள். அவர்களோ தொடர்ந்து வைனையே கொடுக்கிறார்கள். இறுதியில், காலையில் நாவறண்டு அவள் இறந்துபோகிறாள்.

இந்தக் கதையில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஜோர்ஜியாவில் இரண்டு நாட்களைக் கழித்தபோது, அந்தக் கதையின் அடிப்படைக் கரு எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

அஜர்பைஜான் எப்படிப் பெற்றோல் வளம் கொண்ட நாடோ, அதேபோல் ஜோர்ஜியா வைன் நதியாக ஓடும் நாடு என்று சொல்லலாம். குறிப்பாக கிழக்கு ஜோர்ஜியா எங்கும் திராட்சைத் தோட்டங்கள் பரந்து கிடக்கின்றன. எங்கள் சுன்னாகம் பகுதியில் ஒரு காலத்தில் விவசாயம் எவ்வாறு மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்ததோ, அதேபோல் இங்கு திராட்சைத் தோட்டங்களும் வைன் தயாரிப்பும் மக்களின் வாழ்க்கையோடு கலந்திருக்கின்றன.

பழங்காலத்தில் வீடுகளிலேயே குடிசைக் கைத்தொழிலாக, பெரிய மண் பாத்திரங்களில் வைனை நொதிக்க வைத்தார்கள். இன்றும் அந்தப் பாரம்பரிய முறை தொடர்கிறது. அதேவேளை, பெரிய தொழிற்சாலைகளில் நவீன உலோகத் தொட்டிகளையும் விஞ்ஞான முறைகளையும் பயன்படுத்தி வைன் தயாரிக்கிறார்கள்.

 ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான உறவு

சோவியத் ஒன்றியம் பதினைந்து நாடுகளாக உடைந்த பின்னர், அவற்றில் பல நாடுகள் ஐரோப்பாவை நோக்கி நகரத் தொடங்கின. ஜோர்ஜியாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய வேண்டும் என்ற விருப்பம் வலுவாக வளர்ந்தது. இது ரஷ்யாவுடனான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது.

ஜோர்ஜியாவின் அப்காசியா (Abkhazia), தெற்கு ஒசேத்தியா (South Ossetia) ஆகிய இரண்டு பகுதிகளும் இன்று ஜோர்ஜிய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அங்கு ரஷ்ய இராணுவம் நிலைகொண்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளும் சேர்ந்து பழைய ஜோர்ஜிய நிலப்பரப்பில் சுமார் இருபது சதவீதத்தை உள்ளடக்குகின்றன.

இதனால் நான் சந்தித்த வழிகாட்டிகள் முதல் பல சாதாரண ஜோர்ஜியர்கள் வரை ரஷ்யாவைப் பற்றிய கடுமையான எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினார்கள். அதேவேளை, ஏராளமான ரஷ்யர்கள் ஜோர்ஜியாவில் வசிக்கிறார்கள்; சுற்றுலாப் பயணிகளாகவும் வருகிறார்கள். அரசியல் பகைமைக்கும் அன்றாட மனித உறவுகளுக்கும் இடையே உள்ள இந்த முரண்பாடு எனக்கு சுவாரசியமாகத் தோன்றியது.

தனித்துவமான மொழியும் எழுத்தும்

ஜோர்ஜியா செல்வதற்கு முன்பே, ஜோர்ஜிய மொழி தனித்துவமானது என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அதற்கு மேல் அதிகம் தெரியாது.

ஜோர்ஜிய மொழி கார்ட்வேலியன் (Kartvelian) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதன் எழுத்து வடிவம் மிகவும் தனித்துவமானது. முதல்முறையாகப் பார்க்கும்போதே வேறு எந்த எழுத்தோடும் எளிதில் குழப்ப முடியாத அளவுக்கு அதன் வளைவுகளும் வரிவடிவங்களும் தனித்து நிற்கின்றன.

இதில் என்னை மேலும் ஆச்சரியப்படுத்தியது, ஜோர்ஜிய மொழிக்கு வரலாற்றில் மூன்று விதமான எழுத்து வடிவங்கள் இருந்துள்ளன என்பதே. அவை வெவ்வேறு காலகட்டங்களிலும், மத மற்றும் அரச ஆவணங்களிலும், பின்னர் பொதுப் பயன்பாட்டிலும் பயன்படுத்தப்பட்டன. இன்று நாம் பொதுவாகக் காணும் எழுத்து வடிவம் ‘Mkhedruli’ எனப்படுகிறது.

சுமார் நான்கு மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாட்டின் மொழியும் எழுத்துப் பாரம்பரியமும் இவ்வளவு தனித்துவமாகப் பாதுகாக்கப்பட்டிருப்பது வியப்புக்குரியது. சோவியத் காலத்திலும் ஜோர்ஜிய மொழி அங்கு முக்கியமான மொழியாகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.

வைனின் தலைநகர் — தெலாவி

நாங்கள் முதலில் சென்றது தெலாவி (Telavi). இது ஜோர்ஜியாவின் முக்கிய வைன் பிரதேசமான ககேதியின் (Kakheti) மைய நகரம். ஒரு காலத்தில் கிழக்கு ஜோர்ஜியாவின் அரசியல் மையமாகவும் விளங்கியது. அங்குள்ள கோட்டை மதில்கள், தேவாலயங்கள், அரண்மனைகள் போன்றவை அதன் பழைய பெருமையின் அடையாளங்களாக இன்றும் நிற்கின்றன.

ரஷ்ய சார் பேரரசின் ஆதிக்கத்துக்குள் ஜோர்ஜியா சென்ற பின்னர், தெலாவியின் அரசியல் முக்கியத்துவம் குறைந்து சிறிய நகரமாக மாறியது.

அங்கு ஓர் இரவு தங்கினோம்.

அடுத்த நாள் எங்களுக்கு ஜோர்ஜிய பாண் தயாரிப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்தார்கள்.

சிட்னியில் படித்த காலத்தில் ஓர் இந்திய உணவகத்தில் வேலை செய்திருக்கிறேன். அங்கு சப்பாத்தியை வட்டமாகச் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு, ஒரு மாதத்தில் அந்த வேலையை விட்டுவிட்டேன்! ஆனால் ஜோர்ஜிய பாண் செய்வது எனக்கு அதைவிட இலகுவாக இருந்தது. நீளமாகத் தயாரிக்கப்பட்ட மாவை அடுப்பின் உட்புறச் சுவரில் ஒட்டுவது எனக்கு நன்றாகவே வந்தது.

மலையைக் குடைந்த வைன் தொழிற்சாலை

அங்கிருந்து எங்களை ஒரு பிரமாண்டமான வைன் தயாரிப்பு நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

சோவியத் காலத்தில், 1960களில் மலையைக் குடைந்து பல கிலோமீட்டர் நீளத்துக்கு சுரங்கங்களை உருவாக்கி, அங்கு வைனைத் தயாரித்தும் சேமித்தும் வந்திருக்கிறார்கள். சோவியத் ஒன்றியத்தின் பல பகுதிகளுக்கும் இங்கிருந்து வைன் அனுப்பப்பட்டதாக எங்களிடம் கூறப்பட்டது.

அங்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வைன் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பழமையான மண் பாத்திரங்களின் மாதிரிகளையும் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

ஜோர்ஜியர்களுக்கு வைன் என்பது வெறும் மதுபானமல்ல. அது அவர்களது உணவு, விருந்தோம்பல், குடும்பம், கொண்டாட்டம், பாரம்பரியம் ஆகியவற்றோடு கலந்த ஒரு கலாசார அடையாளம்.

விழாக்களின்போது நீண்ட நேரம் வைன் அருந்துவது வழக்கம். ஆனால் போதையில் ஒருவர் நடக்க முடியாமல் போவது பெருமைக்குரியதாகக் கருதப்படுவதில்லை என்றும் எங்களிடம் கூறினார்கள்.

இதைக் கேட்டபோது நான் அங்கிருந்த இளைஞரிடம்,

“உங்கள் நாட்டில் சட்டப்படி எந்த வயதில் குடிக்கலாம்?” என்று கேட்டேன்.

“பதினெட்டு வயது. ஆனால் எங்களில் பலர் பன்னிரண்டு, பதின்மூன்று வயதிலேயே சுவைக்கத் தொடங்கிவிடுவோம்,” என்றார்.

“ஒரு விருந்தில் எவ்வளவு குடிப்பீர்கள்?”

“ஒரு லீட்டர் வைன் சாதாரணமாக இருக்கும். சில சமயங்களில் மிருகக் கொம்புகளில் வைனை நிரப்பிக் குடிப்பார்கள். பெரிய கொம்பாக இருந்தால் அளவும் அதிகமாகும்,” என்றார்.

“பெண்களுக்கும் ஆண்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதா?” என்று கேட்டேன்.

“அப்படி ஒன்றுமில்லை. ஆனால் உடல் அமைப்பின் காரணமாகப் பெண்கள் பொதுவாகக் குறைவாகக் குடிப்பார்கள்,” என்றார்.

அப்போது சியாமளா,

“உங்கள் நாட்டில் ஈரல் நோய்கள் எப்படி?” என்று கேட்டார்.

அதற்கு அவர்,“நாங்கள் தினமும் குடிப்பதில்லை,” என்று சிரித்தபடி பதிலளித்தார்.

தோல் பைகளிலிருந்து போத்தல்கள் வரை

பழைய காலத்தில் ஜோர்ஜியாவில் மிருகத் தோலால் செய்யப்பட்ட பைகளில் வைனை நிரப்பி, மாடு அல்லது குதிரை வண்டிகளில் எடுத்துச் சென்று விற்றதாகக் கூறினார்கள். அதைக் கேட்டதும் வடசென்னையில் ஒரு காலத்தில் வண்டிகளில் தண்ணீர் எடுத்துச் சென்று விற்றது என் நினைவுக்கு வந்தது.

“இப்போது நாங்கள் மில்லியன் கணக்கான போத்தல் வைனை உற்பத்தி செய்கிறோம்,” என்று எங்கள் வழிகாட்டி பெருமையுடன் கூறினார்.

இங்கு நாம் ‘சிவப்பு வைன்’ என்று சொல்வதைச் சிலர் ‘கறுப்பு வைன்’ என்று குறிப்பிடுகிறார்கள். அதேபோல், நாம் வெள்ளை வைன் என்று அழைப்பவற்றில் சில, இங்கு பொன்னிறம் அல்லது அம்பர் நிறத்தில் காணப்பட்டன.

எங்களுக்கு காலையிலேயே வைன் ருசிக்கக் கொடுத்தார்கள். அந்த நேரத்தில் அதிகமாக அருந்துவதற்கு மனம் வரவில்லை. எங்களுடன் வந்தவர்களில் சுமார் அரைவாசிப்பேர் சீனப் பாரம்பரியம் கொண்டவர்கள்  . அவர்களில் சிலர் மதுபானத்தை அருந்தாமல் நாக்கில் வைத்து ருசித்துவிட்டு விட்டார்கள். நானும் இன்னொரு அவுஸ்திரேலியரும் மட்டும் கொஞ்சம் குடித்தோம்.

ஒரு கவிஞரின் வைன் மாளிகை

அதன் பின்னர் ஒரு வைன் அருங்காட்சியகத்திற்குச் சென்றோம். அது ஒரு காலத்தில் தனியார் மாளிகையாக இருந்தது.

பல நூற்றாண்டுகளாக வீடுகளில் குடிசைக் கைத்தொழிலாக நடைபெற்ற வைன் தயாரிப்பை நவீன தொழில்முறைக்கு எடுத்துச் சென்ற முன்னோடிகளில் ஒருவருடன் அந்த இடம் தொடர்புடையதாக இருந்தது. ரஷ்ய அரச சேவையுடன் தொடர்புடையவராகவும் கவிஞராகவும் இருந்த அவர், பிரான்சுக்குச் சென்று அங்குள்ள வைன் தயாரிப்பு முறைகளைப் பார்த்த பின்னர் ஜோர்ஜியாவில் நவீன முறையிலான வைன் உற்பத்தியை வளர்த்ததாக எங்களிடம் கூறப்பட்டது.

பின்னர் அவர் செல்வந்தராகவும் முக்கியமான மனிதராகவும் உயர்ந்தார். பூங்காவால் சூழப்பட்ட அவரது மாளிகை இன்று அருங்காட்சியகமாக உள்ளது.

அங்கும் எங்களுக்கு வைன்!

மீண்டும் இன்னொரு வைன் அருங்காட்சியகத்திற்குச் சென்றோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மண் பானைகளில் வைன் தயாரித்த காலத்திலிருந்து, பின்னர் பெரிய ஓக் மரப் பீப்பாய்களுக்கும் நவீன உற்பத்தி முறைகளுக்கும் அது எவ்வாறு மாறியது என்பதை அங்கு விளக்கியிருந்தார்கள்.

அந்த இடத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான திராட்சைக் கொடி ஒன்று இன்னும் உயிருடன் இருப்பதாகவும், அதிலிருந்து கிடைக்கும் திராட்சை வைன் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார்கள். அந்தப் பழைய கொடியிலிருந்து புதிய செடிகளையும் தொடர்ந்து உருவாக்குவதாகச் சொன்னார்கள்.

நான் ஏற்கனவே ஓரளவு வைன் தயாரிப்பைப் பற்றி அறிந்தவன்தான். ஆனால் ஜோர்ஜியாவில் இரண்டு நாட்கள் சுற்றிய பின்னர், எனக்கே நான் ஒரு வைன் தயாரிப்பு வல்லுநராகிவிட்டதுபோல் உணர்ந்தேன்!

திராட்சைக்கு காவலாக ரோஜாக்கள்

திராட்சைத் தோட்டங்களில் நான் கவனித்த மற்றொரு சுவாரசியமான விஷயம், திராட்சைக் கொடிகளின் வரிசைகளின் முனைகளில் ரோஜாச் செடிகளை நட்டிருந்தது.

“ஏன் ரோஜாக்களை இங்கே நட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

திராட்சையைத் தாக்கக்கூடிய சில நோய்கள் முதலில் ரோஜாச் செடிகளில் அறிகுறிகளை வெளிப்படுத்தக்கூடும்; அதனால் முன்கூட்டியே கவனித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று விளக்கினார்கள்.

வெள்ளைத் திராட்சை இருந்த இடங்களில் மஞ்சள் ரோஜாக்களையும், கறுப்பு அல்லது சிவப்புத் திராட்சை இருந்த இடங்களில் சிவப்பு ரோஜாக்களையும் நட்டிருந்தார்கள்.

இதில் எந்த அளவுக்கு விஞ்ஞானப் பயன் இருக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால் திராட்சைத் தோட்டத்தில் வரிசையாக நிற்கும் ரோஜாக்கள் அழகாக இருந்ததுடன், நீண்ட காலமாகத் தொடரும் ஒரு பாரம்பரியத்தையும் நினைவூட்டின.

 வைனும் தொன்மமும்

ஜோர்ஜியாவில் வைன் வெறும் விவசாய உற்பத்திப் பொருளாக மட்டும் இல்லை. அதனுடன் தொன்மங்களும் கதைகளும் இணைந்திருக்கின்றன.

கழுகின் முகத்தையும் சிங்கத்தின் உடலையும் கொண்ட கிரிஃபின் (Griffin) போன்ற தொன்ம உயிரினங்கள் திராட்சையையும் தெய்வீக உலகையும் இணைக்கும் கதைகளில் இடம்பெறுவதாக எங்களிடம் கூறப்பட்டது. அதற்கான பெரிய உருவச்சிலையையும் அங்கு வைத்திருந்தார்கள்.

வைனைத் தங்கள் நாகரிகத்தின் ஒரு பகுதியாகவும், கடவுளின் கொடையாகவும் பார்க்கும் எண்ணம் ஜோர்ஜியர்களின் கலாசாரத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதை உணர முடிந்தது.

எங்களைப் போன்ற சுற்றுலாப் பயணிகளுக்கும் அந்த எண்ணத்தைப் பதிய வைக்க அவர்கள் தவறவில்லை.

வைன் தயாரிக்கும் இடங்கள், திராட்சைத் தோட்டங்கள், பழைய மண் பானைகள், நிலத்தடி சுரங்கங்கள், அருங்காட்சியகங்கள், மாளிகைகள் — எங்கு சென்றாலும் வைன் எங்களைத் தொடர்ந்து வந்தது.

இப்படியே ஜோர்ஜியாவில் எங்கள் முதல் இரண்டு நாட்கள் **வைனோடு தொடங்கி, வைனோடு முடிந்தன.**

அப்போது பல வருடங்களுக்கு முன்பு நான் படித்த அந்தக் கதை மீண்டும் நினைவுக்கு வந்தது.

தாகத்திற்குத் தண்ணீர் கேட்ட பெண்ணுக்கு அவர்கள் ஏன் தொடர்ந்து வைன் கொடுத்தார்கள் என்பது இப்போது கொஞ்சம் புரிந்தது!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.