

அஜர்பைஜானின் தலைநகர் பாகுவிலிருந்து எங்கள் அடுத்த பயணம் ஷமகி (Shamakhi) என்ற பழமையான நகரத்தை நோக்கி இருந்தது.
ஷமகி, இன்றைய அஜர்பைஜானின் முன்னாள் தலைநகர் அல்ல; மத்தியகாலத்தில் இப்பகுதியை ஆண்ட “ஷிர்வான்ஷாக்களின் (Shirvanshahs) முக்கிய தலைநகரமாக” விளங்கிய நகரம். பலமுறை ஏற்பட்ட கடுமையான பூகம்பங்களாலும் போர்களாலும் நகரம் அழிவுக்குள்ளாகி மீண்டும் மீண்டும் எழுந்திருக்கிறது. 1191-இல் ஏற்பட்ட அழிவுக்குப் பின்னர் ஷிர்வான்ஷாக்களின் ஆட்சிமையம் ஒரு காலத்திற்கு பாகுவுக்கு மாற்றப்பட்டது.
மலைப்பகுதியை நோக்கி அமைந்துள்ள ஷமகியின் இயற்கைச் சூழல், கஸ்பியன் கடற்கரையில் அமைந்துள்ள பாகுவின் வறண்ட நிலப்பரப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது.
கடந்த ஐந்து நாட்களாக நாங்கள் தங்கியிருந்த பாகுவே உலகின் மிகத் தாழ்வான உயரத்தில் அமைந்த தேசியத் தலைநகரமாகக் குறிப்பிடப்படுகிறது. அது கடல் மட்டத்திலிருந்து சுமார் 28 மீட்டர் கீழே அமைந்துள்ளது.
பாகுவிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷமகியை நோக்கிச் செல்லும் வழியில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்வையிட்டோம்.
டிரி பாபாவின் சமாதி
நாங்கள் முதலில் சென்றது டிரி பாபா (Diri Baba) சமாதி.
மலைச்சரிவோடு ஒன்றிணைந்திருப்பது போல் தோன்றும் இந்த இரண்டடுக்குக் கட்டிடம் 1402-ஆம் ஆண்டு ஷிர்வான்ஷா இப்ராஹிம் முதலாம் ஆட்சியில் கட்டப்பட்டது. பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த மதிப்பிற்குரிய சூஃபி ஞானி ஒருவருடன் இந்த இடம் தொடர்புபடுத்தப்படுகிறது. அவர் இறந்தபின் அவரது நினைவாக இந்த சமாதி எழுப்பப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
பழைய சில்க் வணிகப் பாதைக்கு அருகில் இருந்ததால், பல நூற்றாண்டுகளாக வணிகர்களும் பயணிகளும் யாத்திரிகர்களும் இந்த இடத்திற்கு வந்து சென்றுள்ளனர்.
மேலே ஏறிச் சென்றபோது, அவரது கல்லறையின் அருகே திருக்குர்ஆன் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அது அவருடன் தொடர்புடைய பழைய திருக்குர்ஆன் என்று எங்களுக்கு விளக்கப்பட்டது.
அங்கிருந்து வெளியே வந்தபோது எதிரே புல்வெளியில் பரந்து கிடந்த பழைய மயானம் என் கவனத்தை ஈர்த்தது. ஏராளமான கல்லறைகள் அங்கு காணப்பட்டன.
அதைப் பற்றி வழிகாட்டியிடம் கேட்டேன்.
அவர் சிரித்தபடி,
“இந்த ஞானியின் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டால் சொர்க்கம் கிடைக்கும் என்று மக்கள் நம்பினார்கள். அதனால் இறந்தவர்களைப் பல இடங்களிலிருந்தும் கொண்டு வந்து இங்கே புதைத்தார்கள்,” என்றார்.
தனது சொந்தப் புண்ணியத்தை மட்டும் நம்பாமல், அந்த சூஃபி ஞானியின் புண்ணியத்திலும் கொஞ்சம் பங்கெடுத்து சொர்க்கத்தை அடைய முயன்றிருக்கிறார்கள்.
இக்காலத்தில் கடன் வாங்கி வாழ்க்கையை நடத்துவதுபோல், அக்காலத்தில் புண்ணியத்தையும் கடன் வாங்க முயன்றிருக்கிறார்களோ?
என்று நினைத்துக்கொண்டேன்.
“பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்ட இந்த மயானம் இப்போது கைவிடப்பட்டுள்ளது,” என்று வழிகாட்டி மேலும் கூறினார்.
ஷமகியின் ஜும்மா பள்ளிவாசல்
அடுத்து ஷமகி நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசலைப் பார்வையிட்டோம்.


இதன் ஆரம்பம் கி.பி. 743-ஆம் ஆண்டுக்குச் செல்கிறது. அஜர்பைஜானின் மிகப் பழமையான பள்ளிவாசலாகவும், கோக்கேசியப் பிராந்தியத்தின் மிகப் பழமையான இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.
பல நூற்றாண்டுகளில் இது பலமுறை அழிந்து மீண்டும் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில் ஷமகியைத் தாக்கிய கடுமையான பூகம்பங்களால் பெரும் சேதம் ஏற்பட்டது. 1918-ஆம் ஆண்டு நடைபெற்ற வன்முறை மோதலின்போது பள்ளிவாசல் தீக்கிரையானது. பின்னர் பலமுறை புனரமைக்கப்பட்டு, சமீபத்திய பெரிய மறுசீரமைப்பு 2013-இல் நிறைவடைந்தது.
இந்தப் பகுதி ஒருகாலத்தில் கோக்கேசிய அல்பேனியா (Caucasian Albania) என்ற பழைய அரசியல் மற்றும் பண்பாட்டுப் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் அரபு ஆட்சியும் இஸ்லாமிய செல்வாக்கும் இப்பகுதியில் பரவின.
நாங்கள் உள்ளே சென்றபோது அதிக கூட்டம் இல்லை. உயர்ந்த மினார்களும் விசாலமான தொழுகை மண்டபமும் கொண்ட அந்தக் கட்டிடம், பல நூற்றாண்டுகள் கடந்தும் தொடர்ந்து வாழும் ஒரு மத வரலாற்றின் அடையாளமாகத் தோன்றியது.
ஷெகி கான்களின் அரண்மனை
அதன்பின் எங்கள் பயணம் ஷெகி (Sheki) நகரை நோக்கித் தொடர்ந்தது.

அங்கு அமைந்துள்ள ‘ஷெகி கான்களின் அரண்மனை (Palace of Sheki Khans) ‘ 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஷெகியின் வரலாற்று நகரப்பகுதியுடன் சேர்த்து இந்த அரண்மனை 2019-ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
பழமையான மரங்கள் சூழ்ந்த தோட்டத்தின் நடுவே அமைந்திருந்த அந்தச் சிறிய அரண்மனை, அதன் அளவைவிட அதன் கலைநுணுக்கத்தால் எங்களை அதிகம் கவர்ந்தது.
குறிப்பாக அதன் **ஷெபெகே (shebeke)** எனப்படும் வண்ணக் கண்ணாடி ஜன்னல்கள் அபூர்வமானவை.
சிறு வண்ணக் கண்ணாடித் துண்டுகளை நுண்ணிய மரச்சட்டங்களுக்குள் பொருத்தி, **ஆணியோ பசையோ பயன்படுத்தாமல்**, ஒன்றுடன் ஒன்று பூட்டிக்கொள்ளும் விதத்தில் ஜன்னல்கள் உருவாக்கப்படுகின்றன.
அந்தக் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படும் இடத்தையும், கலைஞர்கள் அவற்றைச் செய்வதையும் நேரில் பார்த்தபோது வியப்படைந்தேன்.
நூற்றுக்கணக்கான சிறிய மரத்துண்டுகளும் வண்ணக் கண்ணாடித் துண்டுகளும் ஒன்றோடொன்று இணைந்து இறுதியில் ஒரு பிரம்மாண்டமான ஜன்னலாக உருவெடுப்பது ஒரு பெரிய புதிரைச் சேர்ப்பதைப் போன்றிருந்தது.
அரசப் பழம் — மாதுளை
அஜர்பைஜானில் மாதுளை வெறும் பழமல்ல. அது அந்நாட்டின் கலாசார அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. வளம், செழிப்பு, காதல், நீண்டகால உற்பத்தித்திறன் போன்ற பல குறியீடுகளோடு மாதுளை அங்கு தொடர்புபடுத்தப்படுகிறது.
மாதுளைச் சாறு அங்கே மிகவும் மலிவாகக் கிடைத்தது. சில இடங்களில் பாட்டில் தண்ணீரைவிடவும் குறைந்த விலையில் கிடைத்தது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழம் என்பதால், சியாமளா தண்ணீருக்குப் பதிலாக அடிக்கடி மாதுளைச் சாறு குடித்தார்.
அரண்மனையின் சுவர்களிலும் அலங்காரங்களிலும் மாதுளை வடிவங்கள் பலவற்றைக் கண்டேன்.
அதைப் பற்றி வழிகாட்டியிடம் கேட்டேன்.
“மாதுளை இங்கே அரசப் பழம்,” என்றார்.
ஏன்?” என்று கேட்டேன்.
அவர் மாதுளையின் உச்சியைச் சுட்டிக்காட்டிச் சிரித்தார்.
“அதன் தலையில் கிரீடம் இருக்கிறதே!” என்றார்.
அதுவும் ஒரு நல்ல விளக்கமாகத்தான் இருந்தது!
மாதுளையின் ஏராளமான விதைகள் செழிப்பையும் வளத்தையும் குறிக்கின்றன; ஒன்றோடொன்று நெருக்கமாக அமைந்திருப்பதால் சமூக ஒற்றுமைக்கும் குடும்பப் பிணைப்புக்கும் உருவகமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் விளக்கினார்.
கானின் அந்தப்புரம் எங்கே?
இஸ்லாமிய மன்னரின் அரண்மனை என்றவுடன், பல மனைவிகளுக்கென தனித்தனி அறைகள் இருக்கும் என்ற எண்ணத்துடன் நான் அரண்மனை முழுவதும் அவற்றைத் தேடிக்கொண்டிருந்தேன்.
எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.
இறுதியில் வழிகாட்டியிடம் கேட்டுவிட்டேன்.
“அந்தப்புரத்தில் பல அறைகள் இல்லையா?”
அவர் சிரித்தார்.
“நீங்கள் நினைப்பதுபோன்ற பெரிய ஹரீம் இங்கே இல்லை. அத்தகைய அரசவை மரபுகள் எல்லா முஸ்லிம் அரசர்களிடமும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை,” என்றார்.
அவர் சொன்னதை முழுமையாக நம்ப முடியாமல் அவரைப் பார்த்தேன்.
மதம் கொடுத்த உரிமையைப் பயன்படுத்தாமல் விட்ட ஆண்களும் இருந்தார்களா? என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.
ஷெகியிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கிஷ் (Kish) என்ற சிறிய கிராமம் உள்ளது.
கிஷ் — பழைய கிறிஸ்தவத்தின் தடம்

கோக்கேசிய அல்பேனியாவின் ஆரம்பகால கிறிஸ்தவ வரலாற்றுடன் தொடர்புடைய முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று.
இங்குள்ள கிஷ் தேவாலயத்தின் இடம் மிகப் பழமையான வழிபாட்டுத் தலமாக இருந்திருக்கிறது. தொல்லியல் ஆய்வுகள் இந்த இடத்தில் கிறிஸ்தவத்திற்கு முற்பட்ட காலத்திலேயே வழிபாட்டு நடவடிக்கைகள் இருந்ததற்கான தடயங்களைக் கண்டறிந்துள்ளன. தற்போது காணப்படும் தேவாலயக் கட்டிடத்தின் பெரும்பகுதி மத்தியகாலத்தைச் சேர்ந்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன.
உள்ளூர் கிறிஸ்தவ மரபின்படி, புனித எலிஷா (St. Elishe/Elisha) முதல் நூற்றாண்டில் இந்தப் பகுதிக்கு வந்து கிறிஸ்தவத்தைப் பரப்பியதாகவும், இங்கு ஒரு வழிபாட்டுத் தலத்தை நிறுவியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இது **மத மரபில் வழங்கப்படும் கதை**; இன்று காணப்படும் கட்டிடம் முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தவில்லை.

நாங்கள் தேவாலயத்திற்குள் சென்றபோது, தரையில் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி வழியாக கீழே பார்க்கும்படி வழிகாட்டி கூறினார்.
அதன் கீழே அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழைய கல்லறைகளும் மனித எலும்புக்கூடுகளும் தெரிந்தன.
சில எலும்புக்கூடுகள் இரண்டு மீட்டர் அளவுக்கு நீளமாக இருந்தன. 2000-களின் தொடக்கத்தில் அஜர்பைஜான்–நோர்வே ஆய்வுக் குழுவினர் இங்கு அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
கார்பன் காலக்கணிப்பு ஆய்வுகள், தேவாலயத்தின் கீழிருந்த வழிபாட்டுத் தலம் கி.மு. 3000 காலப்பகுதி வரை செல்லக்கூடும் என்றும், இன்று காணப்படும் தேவாலயக் கட்டிடம் பெரும்பாலும் மத்தியகாலத்தைச் சேர்ந்தது என்றும் சுட்டிக்காட்டுகின்றன.
அந்தக் காட்சியைப் பார்த்தபோது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.
மதங்கள் இருக்கும் வரை மதமோதல்களை முற்றிலும் தவிர்க்க முடியுமா?
ஒவ்வொரு காலத்திலும் மதம் என்பது நம்பிக்கை மட்டுமல்ல; அதனுடன் அதிகாரமும் சமூகச் செல்வாக்கும் இணைந்திருந்தன. புதிய மதங்களும் புதிய அரசுகளும் தோன்றியபோது பழைய நம்பிக்கைகள் மறைந்தன, மாறின, அல்லது புதிய மதங்களுக்குள் கலந்து கொண்டன.
கிஷ் தேவாலயத்தின் அடியில் அமைதியாகக் கிடந்த அந்தப் பழைய எலும்புக்கூடுகள், மனிதர்களின் நம்பிக்கைகள் மாறிக்கொண்டே இருந்தாலும் மனித வரலாறு மட்டும் அடுக்கடுக்காகத் தொடர்கிறது என்பதற்கான சாட்சிகளாக எனக்குத் தோன்றின.
அஜர்பைஜானில் இன்றும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகங்கள் வாழ்கின்றன. ரஷ்ய மற்றும் ஜோர்ஜிய ஆர்த்தடாக்ஸ் மரபுகளைப் பின்பற்றுபவர்களும் அவர்களில் உள்ளனர்.
அரபு ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவர்கள் போன்ற ‘வேதம் பெற்ற மக்கள்’ சில காலங்களிலும் இடங்களிலும் சிறப்பு வரி செலுத்தி தங்கள் மதத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர் என்று வழிகாட்டி விளக்கினார்.
விடைபெற்ற அஜர்பைஜான்
இப்போது அஜர்பைஜானை விட்டு ஜோர்ஜியாவுக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்தது.
எங்கள் எல்லைக் கடத்தல் மலைப்பகுதியில் அமைந்திருந்தது. சுங்கச்சாவடியை அடைவதற்காக ஏராளமான படிகளை ஏற வேண்டியிருந்தது. அதுவும் வெறும் கையோடு அல்ல—எங்கள் கனமான பயணப் பெட்டிகளையும் இழுத்துக்கொண்டு!
அஜர்பைஜான் வழிகாட்டிக்கு கைகாட்டி விடைபெற்று சுங்கச்சாவடியை நோக்கி ஏறத் தொடங்கினோம்.
அப்போது என் நண்பன் ஒருமுறை சொன்ன வார்த்தைகள் அசரீரி போல மனதில் ஒலித்தன:
“உன் பொதிகளை நீயே தூக்கிச் செல்லும் உடல் வலிமை இருக்கும் வரையில்தான் உன்னால் உலகம் சுற்றிப் பயணம் செய்ய முடியும்.”
இருவரும் பெட்டிகளை இழுத்துக்கொண்டு அந்தப் படிகளில் ஏறியபோது, உலகப் பயணம் பற்றிய தத்துவ சிந்தனையைவிட வேறு ஒரு சாதாரணமான சிந்தனைதான் எனக்கு வந்தது:
“குறைந்தபட்சம் இந்த உடைந்த படிகளையாவது சீரமைத்திருக்கலாமே!”
படிகளைத் தாண்டியதும் ஆற்றின் மேல் அமைந்திருந்த பாலத்தைக் கடப்பது சற்றே எளிதாக இருந்தது.
இறுதியாக ஜோர்ஜியாவின் சுங்கச்சாவடியையும் கடந்து, எங்களுக்காகக் காத்திருந்த வாகனத்தில் ஏறினோம்.
அஜர்பைஜானில் கடந்த நாட்களின் நினைவுகளையும், கஸ்பியன் கடலின் காற்றையும், மலைகளில் ஒட்டிக்கொண்டிருந்த பழமையான சமாதிகளையும், நூற்றாண்டுகளைக் கடந்த பள்ளிவாசல்களையும், கண்ணாடிக்குக் கீழே உறங்கிக்கொண்டிருந்த பழைய மனிதர்களையும் மனதில் சுமந்தபடி எங்கள் பயணம் அடுத்த நாட்டை நோக்கி நகர்ந்தது.
பின்னூட்டமொன்றை இடுக