
மைக்கேல் கொலின்
மகுடம் பதிப்பகத்தின் 117 வது வெளியீடாக புலம் பெயர் எழுத்தாளர் நோயல் நடேசன் அவர்களின் ‘சாந்தா குருஸ் தேவதை’ என்ற நாவலை வெளியிடுவதில் பெருமகிழ்வடைகின்றேன்.
நீண்ட காலமாக அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் மிருக வைத்தியரும், எழுத்தாளருமான நோயல் நடேசன் அவர்கள் தமிழ் இலக்கியப் பரப்பிற்கு அப்பாலும் நன்கு அறியப்பட்ட ஒருவர்.
வெறுமனே எழுத்து முயற்சிகளுடன் நின்று விடாது ஈழத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பல சமூக சேவை முயற்சிகளிலும் முன் நின்று உழைப்பவர்.
சாந்தா குருஸ் தேவதை இவரது ஏழாவது நாவல்.
வண்ணாத்திக்குளம், உனையே மயல் கொண்டு, அசோகனின் வைத்தியசாலை, கானல்தேசம், பண்ணையில் ஒரு மிருகம், தாத்தாவின் வீடு ஆகியவை இவரது முன்னைய நாவல்களாகும்.
இவரது நான்கு நாவல்கள் ஆங்கிலத்திலும் ஒரு நாவல் சிங்களத்திலும் மொழி பெயர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் சாந்தா குருஸ் தேவதையும் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவரவிருப்பது ஒரு மகிழ்வான செய்தியாகும்.
கி.பி.1505 ம் ஆண்டு இலங்கையை கைப்பற்றிய போர்த்துக்கேயர் கொழும்பு, காலி, திருகோணமலை, யாழ்ப்பாணம் போன்ற கரையோரப் பிரதேசங்களையே முதலில் கைப்பற்றிக் கொண்டனர். கோவாவை தலைமையகமாகக் கொண்ட அவர்கள் ஆட்சியில் கத்தோலிக்க மதம் இங்கு பரவியது. அவர்களைத் தொடர்ந்து 1656 ல் இலங்கையை கைப்பற்றிய ஒல்லாந்தர் 140 வருடங்கள் தமது ஆட்சியை இங்கு நிலை நாட்டியிருந்தனர்.
போர்த்துக்கேயருக்கும், ஒல்லாந்தருக்கும் இடையில் காலியில் சாந்தா குருஸ் கோட்டையில் நடைபெற்ற யுத்தத்தை வரலாற்றுச் சம்பவங்களுடனும், ஆதாரங்களுடன் பேசும் சாந்தா குருஸ் தேவதை ஈழத்தில் நடைபெற்ற விடுதலைப்போராட்ட காலகட்டத்தையும் அதன் இறுதி யுத்தத்தையும் பதிவு செய்வதன் ஊடாக சமகால நாவலுக்குரிய தன்மையும் பெற்று விடுகிறது.
சம காலத்தில் இறந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் நடைபெறுவதாக நகரும் இந்த நாவலில் இரண்டு காலத்தையும் இணைப்பதற்காக கனவுகளையும் அமானுஷ்ய நிகழ்வுகளையும் இணைத்து மாய யதார்த்தவாத பண்புகளை அதிகம் கொண்டதாகவும், காலப் பயணத்தில்( Time Travel ) பயணிக்கும் தனமையுடன் இந்நாவல் அமைந்துள்ளதானது நாவல் உருவாக்கத்தில் நவீன கோட்பாடுகளை பரீட்சிக்கும் எழுத்துருவாகவும் இது வடிவங் கொள்கிறது.
வெறுமனே மெஜிக்கல் ரியலிச பண்புகளுடன் மட்டுமல்லாமல் அறியாதவயதில் உறவுமுறைகளினாலேயே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் பெண் குழந்தைகளின் வாழ்க்கை அவர்கள் வளர்ந்த பின்பும் அந்த சம்பவத்தின் தாக்கம் அவர்கள் வாழ்க்கையை எவ்வாறு பலியாக்குகிறது என்பதனையும், இன்றைய நவீன உலகில் குறிப்பாக வெளிநாடுகளில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒருபாலுணர்வு பற்றியும் பேசுவதன் ஊடாக சாந்தா குருஸ் தேவதை நவீன நாவல் என்ற அந்தஸ்தை பெற்றுவிடுகிறது.
புதிய புதிய களங்களையும், புதிய கருக்களையும் தனது எழுத்து முயற்சிகளில், பரிசீலித்துப்பார்க்கும் நோயல் நடேசன் தொடர்ந்து எழுத வேண்டும்.
பின்னூட்டமொன்றை இடுக