அஜர்பைஜான்: 3 கோபுஸ்தானிலிருந்து அக்கினிக் கோயில் வரை

எங்கள் பயணத்தில், சேற்றுக் குழிகளிலிருந்து மீத்தேன் எரிவாயு வெளியேறும் இடத்தைப் பார்ப்பதற்காக, பாகுவிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோபுஸ்தானுக்கு (Gobustan) சென்றோம். இப்படியான சேற்று எரிமலைகள் உலகில் அரிதானவை. உலகிலுள்ள சேற்று எரிமலைகளில் பெரும் பகுதி அஜர்பைஜானில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எங்கள் பயண அட்டவணையில் இப்படியொரு இடத்தைத் தவறவிட முடியுமா?

கஸ்பியன் கடலை ஒட்டியபடி நாங்கள் பயணித்த பகுதி பாலைவனத்தைப் போன்ற வறண்ட நிலப்பரப்பாக இருந்தது. ஆங்காங்கே, எங்கள் ஊர் வீடுகளின் தோட்டக் கிணறுகளில் காணப்பட்ட துலாக்களைப் போல, எண்ணெய்க் கிணறுகளின் இயந்திரங்கள் கண்களுக்குத் தெரிந்தன. கஸ்பியன் கடற்காற்று வெக்கையுடன் கலந்து, சீட்டியடிப்பதுபோல் ஒலித்தபடி வழியெங்கும் தனது இருப்பைக் காட்டிக்கொண்டிருந்தது.

“எண்ணெய் எப்பொழுதும் பாலைவனத்தில்தான் கிடைக்குமோ?” என்ற எண்ணத்தை என்னால் தவிர்க்க முடியவில்லை.

கோபுஸ்தானை அடைந்ததும், கறுப்பு நிறச் சேற்றுக் குவியல்களைப் போன்ற பல மேடுகளைக் கண்டோம். பச்சைத் தாவரங்களே இல்லாத, கரிய மண் பரந்திருந்த அந்தப் பகுதி வேற்றுக் கிரகமொன்றின் நிலப்பரப்பைப் போலக் காட்சியளித்தது.

அந்தச் சேற்றுக் குவியல்களில் ஏறிப் பார்த்தபோது, சிறிதும் பெரிதுமாகக் குமிழிகள் தோன்றி, எரிவாயு தொடர்ந்து மேலே வந்து சத்தத்துடன் வெடித்துக்கொண்டிருந்தது. ஒரு குழியில் யாரோ நெருப்பைப் பற்றவைத்திருந்ததால், அங்கு தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.

நிலத்தின் அடியிலிருந்து வாயுக்கள் மேலே வருவதால் இந்தச் சேற்றுக் குமிழிகள் உருவாகின்றன. அந்தச் சேற்றை விரல்களால் தொட்டுப் பார்த்தேன். ஆச்சரியமாக என் விரல்கள் குளிர்ந்தன.

“இந்தப் பகுதியைச் சுற்றி சுமார் 350 சேற்று எரிமலைகள் உள்ளன,” என்றார் எங்கள் வழிகாட்டி.

இந்தச் சேற்றை உடல் ஆரோக்கியத்திற்கும் அழகுப் பராமரிப்பிற்கும் நல்லது என்று நம்பும் சிலர், போத்தல்களில் எடுத்துச் சென்று முகத்திலும் கைகளிலும் பூசுவதாகவும் கேள்விப்பட்டேன். ஆனால் அவுஸ்திரேலியாவிற்கு இப்படியான மண் மற்றும் இயற்கைப் பொருட்களைக் கொண்டுவருவதில் கட்டுப்பாடுகள் இருப்பதால், எங்கள் குழுவினர் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை.

கல்லில் எழுதப்பட்ட ஆதிமனிதர்களின் செய்திகள்

இந்த இடத்திற்கு அருகில் ஆதிகால மனிதர்கள் வாழ்ந்த பகுதிகளும், அவர்கள் பாறைகளில் செதுக்கிய ஆயிரக்கணக்கான ஓவியங்களும் உள்ளன. Gobustan Rock Art Cultural Landscape யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பகுதியாகப் பாதுகாக்கப்படுகிறது.

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்திற்குச் சென்றபோது, பாறைகளில் வண்ணங்களால் தீட்டப்பட்ட பல ஆதிகால ஓவியங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் கோபுஸ்தானில் நான் கண்டவை வேறுபட்டவை. இவை வண்ணங்களால் வரையப்பட்டவை அல்ல; கற்களாலோ வேறு கூர்மையான கருவிகளாலோ பாறைகளில் ஆழமாகச் செதுக்கப்பட்டவை.

அவற்றில் வேட்டைக் காட்சிகள், விலங்குகள், மனித உருவங்கள், படகுகள் போன்றவை இருந்தன. அவற்றைப் பார்த்தபோது, வெறும் அழகுக்காகச் செதுக்கப்பட்ட படங்களாக எனக்குத் தோன்றவில்லை. மாறாக, மற்றவர்களுக்குச் செய்திகள் அல்லது குறியீடுகளை விட்டுச் சென்ற ஒரு பழங்கால அறிவிப்புப் பலகையைப் போல அவை காட்சியளித்தன.

இப்படியான பாறைச் செதுக்கல்களுக்கு ஆங்கிலத்தில் Petroglyphs என்று பெயர். தமிழில் இவற்றை பாறைச் செதுக்கோவியங்கள் அல்லது கல்லோவியங்கள் என்று அழைக்கலாம்.

அவுஸ்திரேலியா, ஈரான் உட்பட உலகின் பல பகுதிகளில் இத்தகைய பாறைச் செதுக்கோவியங்கள் காணப்படுகின்றன. அவற்றின் காலம் இடத்துக்கு இடம் வேறுபடுகிறது. கோபுஸ்தானில் மட்டும் 6,000-க்கும் மேற்பட்ட பாறைச் செதுக்கோவியங்கள் உள்ளன. அவை பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவை.

இந்தப் பகுதியில் பாறைகள் இயற்கை மாற்றங்களாலும் நில அதிர்வுகளாலும் உடைந்து சரிந்துள்ளன. மேலும் சில பாறைகள் உறுதியற்றவையாக இருப்பதால், பாதுகாப்புக் காரணங்களுக்காகச் சில இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

பாறைகளில் மழைநீரைச் சேகரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறிய குழிகளையும், சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் குழிகளையும் காண முடிந்தது. தண்ணீருக்குப் பஞ்சமான இந்த வறண்டபிரதேசத்தில், தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு ஆதிமனிதர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதற்கு அவை சாட்சிகளாக இருந்தன.

யானர் டாக் — எரியும் மலை

யானர் டாக் (Yanar Dag) பாகுவிற்கு அருகிலுள்ள மற்றொரு விசித்திரமான இயற்கை இடம். அங்கு மலைச்சரிவின் ஒரு பகுதியில் நிலத்தடியிலிருந்து வெளிவரும் இயற்கை எரிவாயு தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது.

பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் இயற்கைத் தீ பற்றிய குறிப்புகள் இருந்தாலும், இன்று நாம் காணும் யானர் டாக் தீ “4,000 ஆண்டுகளாக இடைவிடாமல் எரிகிறது” என்று உறுதியாகக் கூறுவதற்கு வரலாற்றுச் சான்றுகள் போதுமானதாக இல்லை. இருப்பினும், அஜர்பைஜானின் இயற்கை எரிவாயு வளத்திற்கும் அதன் பழமையான அக்கினி மரபுகளுக்கும் இது ஒரு முக்கியமான அடையாளமாக உள்ளது.

அக்கினியைத் தூய்மையின் அடையாளமாகக் கருதிய சொராஸ்டிரிய மரபுகளுடன் அஜர்பைஜானுக்கு நீண்ட வரலாற்றுத் தொடர்பு உள்ளது.

இன்றைய அஜர்பைஜானியர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்களாக இருந்தாலும், இஸ்லாத்திற்கு முந்தைய பாரசீக மற்றும் சொராஸ்டிரிய பண்பாட்டு மரபுகளையும் தங்கள் வரலாற்றின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். குறிப்பாக, வசந்தத்தின் வருகையைக் குறிக்கும் Novruz Bayram தேசிய அளவில் கொண்டாடப்படுகிறது. அந்தக் கொண்டாட்டத்தில் நெருப்பும் முக்கிய இடம் பெறுகிறது.

இதுவரை சொராஸ்டிரிய மதத்தின் வரலாற்றை நான் பெரும்பாலும் ஈரானுடன் மட்டுமே இணைத்துப் பார்த்திருந்தேன். அஜர்பைஜானுக்கு வந்தபோது அதன் தாக்கம் கஸ்பியன் கடலின் இந்தப் பகுதியிலும் ஆழமாகப் பதிந்திருப்பதை உணர முடிந்தது.

சொராஸ்டர் — ஒரு பழமையான சிந்தனையாளர்

இப்போது சொராஸ்டிரிய மதத்தை உருவாக்கிய சொராஸ்டர் (Zoroaster / Zarathustra) பற்றிச் சிறிது பார்ப்போம்.

சொராஸ்டர் வாழ்ந்த காலத்தைப் பற்றித் தெளிவான வரலாற்றுத் தகவல்கள் இல்லை. சில மரபுகள் அவரை கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் குறிப்பிடுகின்றன; ஆனால் நவீன ஆய்வாளர்கள் பலர் அதைவிட மிகவும் முற்பட்ட காலத்தை முன்வைக்கின்றனர். அவர் வாழ்ந்த இடமும் உறுதியாகத் தெரியவில்லை. பண்டைய ஈரானிய உலகின் கிழக்குப் பகுதியில் அவர் வாழ்ந்திருக்கலாம் என்பதே பொதுவான கருத்து.

அவரது வாழ்க்கையைப் பற்றிய பல கதைகள் மிகவும் பிற்காலத்தில் எழுதப்பட்டவை. குழந்தையாக இருந்தபோது அவரைக் கொல்ல முயன்றதாகவும், ஓநாய்களிடையே விடப்பட்டதாகவும், மாடுகள் மற்றும் குதிரைகளின் குளம்புகளுக்கிடையே போடப்பட்டதாகவும், நெருப்பிலிருந்தும் உயிர்தப்பியதாகவும் பல புராணக் கதைகள் உள்ளன.

இவை ஒரு வரலாற்று மனிதரைப் பிற்காலத்தில் ஞானியாகவும் தீர்க்கதரிசியாகவும் கட்டமைத்த கதைகளாக இருக்கலாம்.

சொராஸ்டர் தனது முப்பதாவது வயதில் ஒரு தெய்வீக ஞான அனுபவத்தைப் பெற்றதாக மரபு கூறுகிறது. அதன் பின்னர் அவர் அகுரா மஸ்டா (Ahura Mazda) என்ற உயர்ந்த இறைஞானத்தை மையமாகக் கொண்ட போதனையை முன்வைத்தார்.

சடங்குகளுக்கும் மிருகப் பலிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்த அக்கால மதகுருக்கள் அவரது போதனைகளை எதிர்த்ததாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அவருக்குப் பெரிதாக ஆதரவு கிடைக்கவில்லை. பின்னர் ஒரு மன்னரின் ஆதரவைப் பெற்றதும் அவரது போதனைகள் பரவத் தொடங்கின என்று சொராஸ்டிரிய மரபுகள் கூறுகின்றன.

சொராஸ்டர் தனது 77-ஆவது வயதில் ஒரு மத எதிரியால் கொல்லப்பட்டார் என்பதும் பிற்கால மரபுகளில் காணப்படும் செய்தியாகும்; இதையும் உறுதியான வரலாற்றுத் தகவலாகக் கொள்ள முடியாது.

நல்ல எண்ணம், நல்ல சொல், நல்ல செயல்

சொராஸ்டிரிய சிந்தனையில் அகுரா மஸ்டா உயர்ந்த இறைவனாகக் கருதப்படுகிறார். உலக வாழ்க்கை நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதில் மனிதனுக்கு எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்ற சுதந்திரம் உள்ளது.

அந்தத் தத்துவத்தின் சாரத்தை மூன்று எளிய சொற்றொடர்களில் கூறலாம்:

நல்ல எண்ணங்கள் — நல்ல வார்த்தைகள் — நல்ல செயல்கள்.

சொராஸ்டர் மனிதனை வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லச் சொல்லவில்லை. மாறாக, உலகில் வாழ்ந்துகொண்டே அறத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நெருப்பு சொராஸ்டிரியர்களுக்கு கடவுள் அல்ல; அது தூய்மை, ஒளி, உண்மை ஆகியவற்றின் அடையாளம். அதனால் அவர்களது வழிபாட்டில் நெருப்புக்கு முக்கியமான இடம் கிடைத்தது.

மனிதனின் செயல்களுக்கு இறுதியில் விளைவுகள் உள்ளன; நன்மையைத் தேர்ந்தெடுத்து அறத்துடன் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை என்ற கருத்தும் இந்த மதத்தில் வலியுறுத்தப்படுகிறது.

பிற்காலத்தில் பல பாரசீகப் பேரரசுகளின் காலத்தில் சொராஸ்டிரிய மதம் மிகுந்த செல்வாக்கைப் பெற்றது. குறிப்பாக சசானியப் பேரரசில் அது அரச ஆதரவு பெற்ற முக்கிய மதமாக இருந்தது.

ஏழாம் நூற்றாண்டில் அரபுப் படைகள் பாரசீகத்தை வென்ற பின்னர் இஸ்லாம் படிப்படியாகப் பரவியது. சொராஸ்டிரியர்களின் சமூக, அரசியல் நிலையும் காலப்போக்கில் குறைந்தது. மதமாற்றங்கள், வரிகள், சமூக அழுத்தங்கள் உள்ளிட்ட பல காரணிகளால் சொராஸ்டிரியர்களின் எண்ணிக்கை குறைந்தது.

பின்னர் சில சொராஸ்டிரியர்கள் இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்குப் புலம்பெயர்ந்தனர். அவர்களது வழித்தோன்றல்களே இன்று பார்சிகள் (Parsis) என்று அழைக்கப்படுகின்றனர். இந்தியா மட்டுமல்லாது ஈரான், அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளிலும் சொராஸ்டிரிய சமூகங்கள் வாழ்கின்றன. குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் சமூகத்திற்குள்ளேயே திருமணம் செய்யும் பாரம்பரியம் போன்ற காரணங்களால் அவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது.

பாகுவின் அக்கினிக் கோயிலில் பிள்ளையார்

பாகு நகரத்திற்கு வெளியே உள்ள அதேஷ்கா அக்கினிக் கோயிலுக்கு (Ateshgah of Baku) சென்றபோது எனக்கு இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது.

கோட்டை போன்ற அந்த வளாகத்தில் இந்து சமய அடையாளங்களையும், சமஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகளையும் கண்டபோது வியந்தேன்.

“இவை இங்கே எப்படி வந்தன?”

கஸ்பியன் கடல் வழியாகவும் பழைய தரைவழி வணிகப் பாதைகள் வழியாகவும் இந்திய வணிகர்கள் இந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் இங்கு தங்கி வழிபட்டதற்கான சான்றுகளாக இந்தக் கல்வெட்டுகள் உள்ளன. இந்த வளாகம் சொராஸ்டிரியர்களுடன் மட்டும் தொடர்புடையதல்ல; இந்து மற்றும் சீக்கிய வணிகர்கள், யாத்திரிகர்கள் ஆகியோருடனும் தொடர்புடையதாக வரலாற்று ஆய்வுகள் காட்டுகின்றன.

இந்த இடத்தில் இயற்கை எரிவாயுவால் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. ஆனால் பிற்காலத்தில் பாகு பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பெருமளவில் எடுக்கப்பட்டபோது, இயற்கையாக வந்த எரிவாயு குறைந்து அந்த நெருப்பு அணைந்தது. இன்று காணப்படும் நெருப்பு குழாய் வழியாக வழங்கப்படும் எரிவாயுவால் எரிகிறது.

“1960-களில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இந்தப் பகுதிக்கு வரவிருந்ததால், இந்த இடம் மீண்டும் சீரமைக்கப்பட்டது,” என்று எங்கள் வழிகாட்டி கூறினார். இதற்கான துல்லியமான வரலாற்றுச் சான்றை நான் தனியாகச் சரிபார்க்கவில்லை என்பதால், இதை வழிகாட்டியிடம் கேட்ட தகவலாகவே எடுத்துக்கொள்கிறேன்.

இங்குள்ள அறைகளில் அக்காலத் துறவிகள் மற்றும் யாத்திரிகர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை உருவங்கள் மூலம் காட்டியுள்ளனர். அவற்றைப் பார்த்தபோது இந்தியாவின் துறவிகளின் சாயல் எனக்குத் தெரிந்தது.

பிரெஞ்சு எழுத்தாளர் அலெக்சாந்தர் டூமா (Alexandre Dumas) உட்பட பல புகழ்பெற்ற பயணிகள் இந்த அக்கினிக் கோயிலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று இந்த இடம் அருங்காட்சியகமாகவும் வரலாற்று நினைவிடமாகவும் பாதுகாக்கப்படுகிறது.

கோபுஸ்தானின் கரிய சேற்றிலிருந்து மேலெழும் வாயுக் குமிழிகள், யானர் டாக்கில் எரியும் இயற்கை நெருப்பு, பாறைகளில் ஆதிமனிதன் விட்டுச் சென்ற செய்திகள், அதேஷ்காவில் நான் கண்ட இந்தியத் தடங்கள் — இவை அனைத்தையும் ஒரே நாளில் பார்த்தபோது, அஜர்பைஜான் எனக்கு வெறும் எண்ணெய் வளமுள்ள ஒரு நாடாகத் தெரியவில்லை. நிலத்தின் அடியில் எரிவாயுவையும், பாறைகளில் மனித வரலாற்றையும், நெருப்பில் ஒரு பழைய மதத்தின் நினைவையும் பாதுகாத்து வைத்திருக்கும் நாடாகத் தெரிந்தது.

தொடரும்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.