அஜர்பைஜான் –2 சில்க் பாதை

சீனாவுக்கும் ஐரோப்பா, எகிப்து போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான தரைவழி வணிகப் பாதைகள் கிறிஸ்துவுக்கு முன்பு இரண்டாம் நூற்றாண்டில், சீனாவின் ஹான் அரச வம்சத்தின் காலத்தில் விரிவடைந்தன. பிற்காலத்தில் **‘சில்க் பாதை’ (Silk Road) என்று அழைக்கப்பட்ட இந்த வணிக வலையமைப்பு, பல நூற்றாண்டுகளாக கிழக்கையும் மேற்கையும் இணைத்தது.

இது ஒரு தனியான நேர்கோட்டுப் பாதையல்ல. பல இடங்களில் தொடங்கி, ஒன்றோடு ஒன்று இணைந்து, மீண்டும் பல கிளைகளாகப் பிரிந்து சென்ற வணிகப் பாதைகளின் வலையமைப்பு. சீனர்கள் மட்டுமல்ல, இந்தியர்களும் இந்தப் பாதைகளில் இணைந்து வணிகம் செய்தார்கள். குறிப்பாக காஷ்மீர் வழியாக இந்தியாவிலிருந்து சென்ற பாதைகள் மத்திய ஆசிய வணிகப் பாதைகளுடன் இணைந்தன.

இது சாதாரணமான ஒரு பயணப் பாதையுமல்ல. வியாபாரிகள் தங்கள் பயணத்தை முடிக்க மாதங்களோ, சில சமயங்களில் ஆண்டுகளோ எடுத்திருக்கலாம். ஒட்டகங்கள், குதிரைகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வண்டிகளுடன் அவர்கள் குழுக்களாகப் பயணித்தார்கள். கொள்ளையர்களிடமிருந்து பொருட்களைப் பாதுகாக்க ஆயுதம் தாங்கிய காவலர்களும் உடன் சென்றார்கள்.

இந்த சில்க் பாதையால் வியாபாரம் மட்டும் நடைபெறவில்லை. மொழிகள், கலாசாரங்கள், அறிவு, தொழில் நுட்பம், கலைகள், மதங்கள் எனப் பலவும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பரவின. குறிப்பாக புத்த மதம் இந்தியாவிலிருந்து மத்திய ஆசியாவுக்கும் அங்கிருந்து சீனாவுக்கும் பரவுவதில் இந்த வணிகப் பாதைகள் முக்கிய பங்கு வகித்தன. அதேபோல் நோய்களும் இந்தப் பாதைகளின் வழியாகப் பரவின. ஐரோப்பாவையே உலுக்கிய பிளேக் எனும் கொள்ளை நோயின் பரவலுக்கும் மத்திய ஆசிய வணிகத் தொடர்புகள் ஒரு முக்கிய வழியாக இருந்ததாக வரலாறு கூறுகிறது.

கிழக்கு நாடுகளுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான இந்தத் தரைவழி வணிகம் பல நூற்றாண்டுகள் தொடர்ந்தது. 1453ஆம் ஆண்டு ஒட்டோமான் பேரரசு பைசாந்தியப் பேரரசின் தலைநகரான **கொன்ஸ்டான்டினோப்பிளை (Constantinople)** கைப்பற்றியது ஐரோப்பிய வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது. அதன்பின் கிழக்கத்திய பொருட்களை நேரடியாகப் பெறுவதற்கான புதிய கடல்வழிகளைத் தேடும் ஐரோப்பிய முயற்சிகள் மேலும் தீவிரமடைந்தன.

போர்த்துக்கல், ஸ்பெயின் போன்ற நாடுகள் கடல்வழி வணிகத்தில் தீவிரமாக இறங்கின. வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல்வழியை அடைந்ததும், கொலம்பஸ் மேற்கே பயணித்ததும் இந்தப் பெரும் கடல்வழித் தேடல்களின் பகுதிகளே. ஆரம்பத்தில் வணிகத்தை நோக்கமாகக் கொண்ட இந்த முயற்சிகள் பின்னர் அரசியல் மற்றும் இராணுவ ஆதிக்கமாக மாறின. இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளில் வணிக நிலையங்கள் உருவாகி, பின்னர் அவை காலனிகளாக மாறின. அடுத்த ஐந்து நூற்றாண்டுகளின் உலக வரலாற்றையே இந்த மாற்றம் பெரிதும் தீர்மானித்தது.

இந்த நீண்ட வரலாற்றைக் கொண்ட சில்க் வணிகப் பாதையின் ஒரு கிளை சென்ற இடத்தில்தான் நாங்கள் அஜர்பைஜானின் தலைநகரான “பாகு”” (Baku) நகரில் நின்றோம்.

பாகுவை இரண்டு முகங்களைக் கொண்ட நகரமாகப் பார்க்கலாம். ஒன்று, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுச் செல்வத்தால் எழுந்த நவீன பாகு. மற்றொன்று, கோட்டை மதில்களால் சூழப்பட்ட பழைய நகரம். அங்கேதான் புகழ்பெற்ற “சிர்வான்ஷாக்களின் அரண்மனை (Palace of the Shirvanshahs)” அமைந்துள்ளது.

அந்தப் பழைய நகருக்குள் எங்கள் பாதங்களைப் பதித்து நடந்தபோது, சில்க் பாதையின் முக்கியமான ஓர் இடத்தில் நிற்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. சுற்றிப் பார்த்தபோது அதற்கான சாட்சியங்கள் இன்னமும் நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றின. பழைய கட்டிடங்கள், கற்கள் பதிக்கப்பட்ட குறுகிய நடைபாதைகள், வியாபாரிகள் தங்கியிருந்த பழைய தங்குமிடங்கள் என அந்தக் காலத்தின் தடயங்கள் அங்கே இன்னமும் மவுனமான சாட்சியமாக இருந்தன.

சில்க் பாதையின் முக்கிய வழித்தடங்களில் ஒன்று தற்போதைய ஈரானின் **தப்ரிஸ் (Tabriz)** நகரத்தின் வழியாகச் சென்றது. மற்றொரு கிளை காஸ்பியன் கடற்கரையிலுள்ள பாகுவைத் தொட்டுச் சென்றது. அக்காலத்தில் இப்பகுதி பல்வேறு பேரரசுகளின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தது. வணிகர்களுக்கென பாதுகாப்பான தங்குமிடங்கள் அமைக்கப்பட்டிருந்ததைப் பார்க்கும்போது, வணிகத்திற்கு ஆட்சியாளர்களின் பாதுகாப்பும் ஆதரவும் இருந்திருக்க வேண்டும் என்பதை உணர முடிகிறது.

நாங்கள் மெதுவாக அந்தப் பகுதியில் நடந்தபோது எங்கள் வழிகாட்டி ஒரு பெரிய பழைய கட்டிடத்தைக் காட்டினார்.

“இது இந்திய வியாபாரிகள் தங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட இடம்,” என்றார்.

அதற்கு அருகில் **புகாரா காரவான்சராய் (Bukhara Caravanserai)** இருந்தது. மத்திய ஆசியாவின் புகாரா பகுதியிலிருந்து வந்த வியாபாரிகள் தங்கிய இடம் அது.

இந்திய வியாபாரிகள் தங்கியதாகக் கூறப்பட்ட கட்டிடத்துக்குள் நான் உடனே சென்று பார்த்தேன். மிகவும் உறுதியான அந்தக் கட்டிடம் இன்றும் பெரிதாகப் பாதிக்கப்படாமல் நிற்கிறது. தற்போது அங்கே சிறிய வியாபார நிலையங்கள் இயங்குகின்றன. அக்காலத்தில் சரக்குகளைச் சுமந்து வந்த குதிரைகளும் ஒட்டகங்களும் நகரின் அருகே நிறுத்தப்பட்டு, அவற்றுக்கு உணவும் தண்ணீரும் அளித்து பராமரிக்க வசதிகள் இருந்ததாக அறிந்தேன்.

அக்கால வியாபாரிகளையும் அவர்கள் கடந்துவந்த ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரங்களையும் நினைத்தபோது வியப்பாக இருந்தது.

நாங்கள் சென்றது கோடைக்காலம். காஸ்பியன் கடலிலிருந்து வெப்பம் கலந்த காற்று வீசியது. அதிக தூரம் நடப்பதே எங்களுக்குக் கடினமாக இருந்தது. அப்போது நான் நினைத்துப் பார்த்தேன்: சீனாவிலிருந்து பட்டு, இந்தியாவிலிருந்து வாசனைப் பொருட்கள், நகைகள் மற்றும் பல விலையுயர்ந்த பொருட்களைச் சுமந்துகொண்டு, மத்திய ஆசியாவைக் கடந்து, காஸ்பியன் கடலைச் சுற்றி ஐரோப்பாவை நோக்கிப் பயணித்த அந்த வியாபாரிகளின் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

வழிநெடுக தங்களுக்கான உணவு, தண்ணீர், பாதுகாப்பு மட்டுமல்ல; ஒட்டகங்களுக்கும் குதிரைகளுக்கும் தேவையான தீனி மற்றும் நீரையும் உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. பாலைவனங்கள், மலைகள், கடுமையான குளிர், வெப்பம், கொள்ளையர்கள், நோய்கள் என்று எத்தனை ஆபத்துகளைக் கடந்து அவர்கள் பயணித்திருப்பார்கள்!

இப்பகுதியில் ஆரம்பகாலத்தில் **சோராஸ்டிரியம் (Zoroastrianism)** முக்கியமான மதமாக இருந்தது. பிற்காலத்தில் 7ம் நூற்றாண்டில் இஸ்லாம் பரவிய பின்னர் சமூகமும் வணிக அமைப்புகளும் பெரிதும் மாறின. பல்வேறு காலங்களில் முஸ்லிம், யூத மற்றும் பிற வணிக சமூகங்களும் காஸ்பியன் பிராந்திய வணிகத்தில் பங்கேற்றனர்.

சிர்வான்ஷாக்களின் அரண்மனை மட்டுமல்ல, அது அமைந்துள்ள பாகுவின் பழைய மதில்சூழ்ந்த நகரமும் இன்று  “யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பகுதியாக”  பாதுகாக்கப்படுகிறது.

பாகு ஆரம்பத்திலிருந்தே சிர்வான்ஷாக்களின் தலைநகராக இருக்கவில்லை. அவர்களது முக்கிய மையமாக நீண்டகாலம்  “ஷமாக்கி (Shamakhi) “ இருந்தது. அப்பகுதியைத் தாக்கிய நிலநடுக்கங்கள் மற்றும் அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து பாகுவின் முக்கியத்துவம் அதிகரித்தது. பாகுவிலுள்ள சிர்வான்ஷாக்களின் அரண்மனை இன்று அருங்காட்சியகமாக உள்ளது. அங்கு அரச குடும்பத்தினரின் கல்லறைகளும் காணப்படுகின்றன. பழைய நகரின் அருகே புகழ்பெற்ற கன்னிக்கோபரம்  “ Maiden Tower “ காவல் கோபுரம்போல் உயர்ந்து நிற்கிறது.

இந்தப் பெயர் வரக் காரணம்: அரச குடும்பத்தில் பிறந்த பெண் காதலித்தவனை  திருமணம் செய்ய முடியாததால் இந்தக் கோபுரத்தின் மேல் ஏறி தற்கொலை செய்த பின் இந்தக் காவல் கோபுரம் கன்னிக்கோபுரமாகிறது

அங்கிருந்து நாங்கள் சென்ற மற்றொரு இடம் எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது — “ Museum of Miniature Books “.

உலகின் பல நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட மிகச் சிறிய புத்தகங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை  “Zarifa Salahova “ என்ற பெண் தனது தனிப்பட்ட சேகரிப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ளார். ஆயிரக்கணக்கான சிறிய புத்தகங்கள் அங்கு உள்ளன.

ரஷ்ய இலக்கியத்தின் புகழ்பெற்ற புஷ்கின், தஸ்தயெவ்ஸ்கி, கோகோல் போன்றவர்களது படைப்புகளுடன் ஷேக்ஸ்பியர், ரவீந்திரநாத் தாகூர் போன்ற உலக இலக்கிய ஆளுமைகளின் நூல்களையும் பார்க்க முடிந்தது. பைபிளும் குர்ஆனும் சிறிய வடிவங்களில் அங்கு இருந்தன.

அங்கு நான் பார்த்த மிகச் சிறிய புத்தகம் என் கைவிரல் நகத்தின் அளவிலேயே இருந்தது. அதை நான் புகைப்படம் எடுத்துப் பின்னர் பெரிதாக்கிப் பார்த்தேன். பல புத்தகங்களின் எழுத்துகளைப் பூதக்கண்ணாடியின் உதவியின்றி வாசிப்பதே சாத்தியமில்லை என்று தோன்றியது.

புத்தகங்கள், நாடுகள் வாரியாக மிகவும் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எனக்கு அங்கே சில மணி நேரம் நின்று ஒவ்வொன்றாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆனால் நேரம் அனுமதிக்கவில்லை. அவசரமாகச் சில புகைப்படங்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறினேன்.

அன்று இறுதியாக நாங்கள் சென்றது, முதல் நாள் இரவில் வெளியே நின்று ரசித்த “Heydar Aliyev Center “. உலகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரான  “Zaha Hadid “ வடிவமைத்த அந்தக் கட்டிடம், அஜர்பைஜானின் முன்னாள் ஜனாதிபதி ஹைதர் அலியேவின் பெயரில் அமைந்துள்ளது.

வெளியிலிருந்து பார்க்கும்போதே வியப்பை ஏற்படுத்திய அந்தக் கட்டிடம், உள்ளேயும் மிகவும் தரமான அருங்காட்சியக அனுபவத்தை அளித்தது.

ஒரு பகுதியில் அஜர்பைஜானின் பாரம்பரிய இசைக்கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் எப்படிப்பட்ட ஒலியை எழுப்புகின்றன என்பதும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு இசைக்கருவியின் முன்பும் நாம் நின்றபோது, அந்தக் கருவியின் இசையைக் கேட்க முடிந்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதுமட்டுமல்ல; நவீன கலை வடிவங்கள், பெண்களின் பலவகையான பாரம்பரிய உடைகள், பொம்மைகள், ஓவியங்கள் எனக் கண்கொள்ளாக் காட்சிகள் நிறைந்திருந்தன. முதல் நாள் இரவில் வெளியிலிருந்து கட்டிடத்தின் அழகை ரசித்தோம்; மறுநாள் பகலில் அதன் உள்ளே சென்று அஜர்பைஜானின் கலாசாரத்தையும் வரலாற்றையும் பார்த்தோம்.

அங்கிருந்து மீண்டும் காஸ்பியன் கடற்கரைக்கு வந்தபோது இரவு பகலாக மாறியதுபோல் பாகு ஒளிர்ந்தது. கட்டிடங்கள் நட்சத்திரங்களைப்போல் மின்னின.

காஸ்பியன் கடலின் எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் இன்று அஜர்பைஜானுக்குப் பெரும் செல்வத்தை அளிக்கின்றன. அதேவேளை எண்ணெய் உற்பத்தியால் காஸ்பியன் கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருப்பதையும் அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.

அஜர்பைஜானின் எண்ணெய் இன்று மட்டுமல்ல, வரலாற்றிலும் மிக முக்கியமானது. இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் ஒன்றியத்தின் போர் இயந்திரத்திற்கு தேவையான எண்ணெயின் பெரும்பகுதியை பாகுவின் எண்ணெய் வயல்கள் வழங்கின. அந்த எண்ணெய் வளம் ஹிட்லரின் படைகளுக்குக்கூட பாகுவை ஒரு முக்கிய இலக்காக மாற்றியது.

எங்கள் வழிகாட்டி இன்னொரு சுவாரசியமான தகவலையும் கூறினார். ஜோசப் ஸ்டாலின், “இப்போது நிலத்திலிருந்து எண்ணெயை எடுப்போம்; கடலுக்கடியில் உள்ள எண்ணெயை எதிர்காலத்திற்காக வைத்திருப்போம்” என்று கூறியதாக அவர் சொன்னார். அது வரலாற்றில் உறுதிப்படுத்தப்பட்ட மேற்கோளா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் காஸ்பியன் கடலைப் பார்த்தபடி அந்தக் கதையைக் கேட்டபோது, பாகுவின் கடந்த காலமும் நிகழ்காலமும் ஒரே இடத்தில் சந்திப்பதுபோல் எனக்குத் தோன்றியது.

ஒரு காலத்தில் இந்த நகரத்தின் வழியாக ஒட்டகங்களும் குதிரைகளும் பட்டையும் வாசனைப் பொருட்களையும் சுமந்துகொண்டு சென்றன. இன்று அதே நகரத்தின் செல்வம் நிலத்தடியிலும் கடலடியிலும் இருந்து குழாய்கள் வழியாக துருக்கியூடாக  ஐரோப்பாவை நோக்கிச் செல்கிறது.

பொருட்கள் மாறிவிட்டன. பயணிக்கும் வழிகள் மாறிவிட்டன. ஆனால் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் பாகுவின் முக்கியத்துவம் மட்டும் இன்னும் மாறவில்லை.

தொடரும்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.