தமிழ்ப்பிழை தவிர்ப்போம்.

இன்று, ஆவணம் என்ற சொல், document, archival material போன்ற ஆங்கிலப்
பதங்களுக்கு ஈடான தமிழ்ச்சொல்லாக, தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆவணம் என்றால் கடை, சந்தை, வியாபாரம் என்று பொருள். ஆபண (ஆ-பண்:
விலைகூறல், விற்றல், வாங்கல், பண்டமாற்று) என்ற சம்ஸ்கிருதச் சொல்லானது,
ஆவண என்ற பிராகிருதத்தூடாக, சங்ககாலத்திலேயே தமிழுக்கு வந்துவிட்டது.
ஆவண மறுகு = ஆவண வீதி, கடைத்தெரு; ஆவண மாக்கள் = வணிகர்களின்
விலைப்பிரமாண (உண்டியல்) ஓலைகளைக் கையாண்டவர்கள்; பிற்காலத்தில்,
ஆவணக்காரன் = கடைக்காரன்; ஆவண ஓலை = அடிமை அல்லது நிலம்
விற்றுவாங்கிய உறுதி அல்லது உரிமை ஓலை. விலைத் தொடர்பற்ற எதுவும்
ஆவணமன்று.
எல்லா document உம் ஆவணம் என்பது இருபதாம் நூற்றாண்டின் பிற்பாகம்வரை
எந்தத் தமிழ் இலக்கியத்திலோ அகராதியிலோ காணப்படாத சொற்பயன்பாடு.
சொற்பிறப்பையும் பயன்பாட்டுப் பொருத்தத்தையும் பார்க்காமல், புதிய பொருள்
வெளிப்பாடுகளுக்கு, புதிதாக நல்ல தமிழ்ச் சொல்லைக் கையாளுகிறோம் என்ற
நினைப்பில் நுழைந்துவிட்டது. அடிமைச் சீட்டும் காணி உறுதியும் ஆவணமானால்
எல்லாப் பதிவேடும் ஆவணம் என்று கருதியிருக்கலாம்.
இதனால், சுவடு, சுவடி, பதிவு, பதிவேடு, சீட்டு, உறுதி, சான்று, ஓலை, ஏடு, இதழ்,
மடல் என்று சொல்வளத்துடன் தேவைக்கேற்பப் பயன்பட்ட எத்தனையோ தூய
தமிழ்ப்பதங்கள் இன்று பொருத்தமற்ற ‘ஆவணத்தால்’ மாற்றீடு செய்யப்படுகின்றன.
பிழையாயினும், திரும்பத்திரும்ப நிறையத்தரம் எழுதினால், பயன்பாட்டால்
சரியாகிவிடும் என்பது ஒரு வாதம். பிழை என்று தெரிவதைச் சரியாக்குவதுதான்
தமிழ்மரபு.
Document என்ற பொருளில் ஆவணம் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.
இனி எப்படி மாற்றுவது? மாற்றமுடியாது; மாற்றத் தேவையில்லை என்பது மற்றொரு
வாதம். பரவலாக இருந்திருந்தாலும் தமிழிற்குத் தேவையற்றவை என்று உணரப்பட்ட
எத்தனையோ சொற்கள், எடுக்கப்படவேண்டிய இடங்களில் எடுக்கப்பட்ட
முயற்சிகளால் மாற்றப்பட்டுவிட்டன. தமிழ்நாட்டில் பரவலாக இருந்த ரஸ்தா, தெருவும்
சாலையும் ஆகிவிட்டது. சரித்திரம் வரலாறாகிவிட்டது.

“மாற்றம் ஒன்றுதான் மாறாதது” என்றால், பொருத்தமற்றது என்று உணரப்பட்ட
எதுவும் மாறலாம்; எதையும் எப்பவும் மாற்றலாம். உணரப்போவது யார் என்பதுதான்
கேள்வி.
“ஆவணங்களை ஆவணப்படுத்துகிறோம்” என்று எழுதினால் வியாபாரங்களை
வியாபாரம் செய்கிறோம் என்றுதான் பொருள். ஆவணப்படம் என்றால்
வியாபாரப்படம். Document இற்கு இதுவரை தமிழ் நாகரிகத்தில் தமிழ்ச்சொல்
இல்லாமலா இந்த ஆவணம் வந்துசேர்ந்தது?
ஆங்கில Document இற்கு இன்று இருக்கும் எல்லாப் பொருளும் தரக்கூடிய நல்ல
தமிழ்ச் சொல் சுவடி எனலாம். சுவடு (பதிவு) இருப்பதெல்லாம் சுவடிதான்.
ஏட்டுச்சுவடி, நூற்சுவடி, காகிதச்சுவடி, வரலாற்றுச் சுவடி, நிழற்படச் சுவடி,
திரைப்படச்சுவடி, சுவடிப்படம், சுவடிச்சான்று, எண்ணிமச்சுவடி (digital document),
என்று சொல்லுருக்கள் பல. Documentation: சுவடிப்படுத்தல், சுவடியாக்கம்; Archives:
சுவடிச்சாலை, சுவடிக்காப்பகம்; Archive (verb): சுவடிக்காப்பிடு; Archivist:
சுவடியாளர், சுவடிக்காப்பாளர்.

தமிழ்ப்பிழை தவிர்ப்போம் 2
ஆவணம் – பொருளும் வழக்காறுகளும்

சம்ஸ்கிருதம்:

ஆபண: market, shop (A Sanskrit-English Dictionary, Monier Williams; A
Comparative Dictionary of Indo-Aryan Languages, entry no. 1191; Mahabharata
usage cited); commerce, trade (A Sanskrit-English Dictionary; Sanskrit Lexicons
cited).
ஆ+பண: root traced to பண் (CDIAL, 1191); பண்: to barter, purchase, buy, negotiate,
bargain, bet, stake (A Sanskrit-English Dictionary).

பிராகிருதம்:

ஆவண: market, shop (CDIAL, 1191); P > V change.

சிங்களம்:

அவண அவுணு: market (CDIAL, 1192); அவுணு: shop, “Salpila” (Sinhala-Sinhala
Dictionary of Sorata); அவுனு: place where fish is sold, meat market ( Clough’s
Sinhala-English Dictionary).

தமிழ் இலக்கியம்:

ஆவண-மறுகு: கடைத்தெரு (அகநானூறு, 122: 3-4).

ஆவண-மாக்கள்: வணிகர்கள் உண்டியல் மூலம் அனுப்பும் விலைப் பிரமாணங்களைக்
கையாள்பவர்கள், “கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார் பொறி கண்டு அழிக்கும்
ஆவண மாக்களின்” (அகநானூறு, 77: 7-8).
ஆவணம்: அடிமை வாங்கிய உரிமை ஓலை (அப்பர் தேவாரம், 6: 24: 3); அடிமை
உரிமை (சம்பந்தர் தேவாரம் 3: 120: 8).

தமிழ்க் கல்வெட்டுக்கள்

ஆவணம்: விலை, விலையாகக் கொண்டது (966 CE, South Indian Inscriptions, VII,
811).
ஆவணக்-களம், ஆவணக்-களி, ஆவணக்-களரி, விலையாவணக்-களம்: நிலம், பொன்,
போன்றவை விற்றல் வாங்கல் நடைபெறும் களம், 914 CE, South Indian Inscriptions,
XIX, 191; 936 CE, SII, XVII, 636; 1260 CE, SII, V, 303; 1232 CE, Inscriptions of
Pudukkottai State, 301).
ஆவணக்காறன்: கடைக்காரன் (1050 CE, Journal of Thamizhakath Tholliyal
Kazhakam, 2, pp 6-8).
விலையாவண ஓலை: விற்றுவாங்கிய சான்றோலை, உறுதி (771 CE, South Indian
Inscriptions, XIV, 19).

[பார்க்க: தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி, சாந்தி சாதனா, 2002, 2003]

தமிழ் நிகண்டுகள்

ஆவணம்: கடை, தெரு, புனர்பூசம் (திவாகரம், 5: 132, 133; 1: 83); உரிமை, அங்காடி,
தெரு, புனர்பூசம் (பிங்கலம், 10: 119); அங்காடி, பீடிகை, கூலம், புனர்பூசம் (சூடாமணி,
5: 46; 1: 70).

அங்காடி, பீடிகை, கூலம்: கடைத்தெருவைக் குறிக்கும் சொற்கள். 

தமிழ் அகராதிகள்: [1960 கள் வரை]
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரகராதி

ஆவணம்: 
சொற்பிறப்பு:  ஆ-பண
பொருள்:

  1. கடைவீதி, market, bazaar
  2. தெரு, street
  3. உரிமை, right to property, ownership
  4. அடிமைத்தனம், slavery, bondage, service
  5. உரிமைப்பத்திரம், bond, deed
  6. புனர்பூசம், the seventh nakshatra resembling bazaar

எல்லாப் பொருட்பயன்பாடுகளும், ‘விலை, விற்பனை-கொள்வனவு’ தொடர்பால்
வந்தவை (சம்ஸ்கிருத  ஆபண).
3, 4, 5: விற்றுவாங்குதல் தொடர்பால் வந்த உரிமை, அடிமைத்தனம்,
உரிமைப்பத்திரம்.
6: புனர்பூச மீனில் (நட்சத்திரம்/ constellation) இருக்கும் இரு மீன்களையும் (Castor
and Pollux) இணைத்து, ஒரு தெருவாக உருவகப்படுத்தியதால் வந்தது.

1990 களின் பின்:
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி

ஆவணம்: ஒரு தகவலை எழுத்தில் அல்லது பிற முறையில் பதிவு செய்திருக்கும்
வடிவம், பத்திரம்; document, record, papers

ஆவணப்படுத்து: தகவல்களை வரிசைப்படுத்தல், பட்டியலிடுதல் (இலங்கைத் தமிழ்);
arrange information in a particular order.
ஆவணக்காப்பகம்: பொது முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களைப்
பாதுகாப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட இடம்; archive
ஆவணப்படம்: (பொழுதுபோக்குப் படமாக இல்லாமல்) தகவல் தரும் முறையில்
எடுக்கப்படும் படம்; documentary

இன்றைய பொருட் தடுமாற்றம் எப்படி வந்தது?

  1. 1950 களின் பின்வந்த ஆங்கிலம்-தமிழ் கலைச்சொல் அகராதிகள்,
    சொற்கோவைகளில் தொடங்கியது. Document இற்கான தமிழ்ச் சொல்லாக ஆவணம்,
    சுவடி என்ற இரண்டையும் குறிப்பிட்டார்கள். காணிப்பதிவாளர் அலுவலகம்
    போன்றவற்றில் இருந்த உறுதி, bond, deed. title deed போன்ற விற்றல் வாங்கல்
    உரிமை தொடர்பான பத்திரங்கள் ஆவணம் என்றும் சொல்லப்படலாம் என்பதால்
    எல்லா document உம் ஆவணம் என்ற தடுமாற்றம் வந்துவிட்டது.
  2. நூலகம், சுவடிச்சாலை போன்ற இடங்களில் ஆங்கிலத்தில் படித்து, படிப்பித்து,
    தமிழில் தொழில்செய்ய வந்தவர்களுக்கு, தங்கள் துறைப்பயன்பாடுகளுக்கு சொல் அடி
    ஒன்றாக இருக்கும்படி ஒரு சொல் தேவைப்பட்டது. எல்லாவற்றுக்கும் பொருத்தமாக
    இருக்கக்கூடிய, சுவடு என்ற அடியிலிருந்து வந்த சுவடி, ஏட்டுச்சுவடி மட்டுந்தான்
    என்று நினைத்துத் தள்ளிவிட்டார்கள். பதிவு, எற்கனவே registration என்று வழக்கில்
    வந்துவிட்டது. பத்திரம் வடமொழி என்று நீக்கியவர்கள், அதுவரை பெரிதும்
    பயன்படாமல் இருந்த அதே வடமொழி ஆவணத்தை, தங்கள் புதிய தேவைகளுக்கு
    வளைத்துக்கொள்ளலாம் என்று வரித்துக்கொண்டார்கள். சொற்பிறப்போ அல்லது
    இதற்குப் பின்னால் ‘விலைகூறல்’ என்ற பொருத்தமற்ற பொருள் இருப்பதோ
    புலப்படவில்லை. ஆவணவியல், ஆவணகம், ஆவணக்காப்பகம், ஆவணப்படம்,
    ஆவணப்படுத்தல், ஆவணங்களை ஆவணப்படுத்தல், ஊரை ஆவணப்படுத்தல்,
    முதியோரை ஆவணப்படுத்தல் என்றெல்லாம் வந்துவிட்டன.
  3. கலைச்சொற் குழப்பத்தில் தொடங்கி, துறைசார்ந்தவர்களின் ஒற்றைச் அடிச்சொல்
    தேவையால் வளர்ந்த தவறு, ஊடகங்கள், எழுத்தாளர்களின் பின்பற்றலால்
    வலுப்பட்டது. அரசு ஆவணம், பயண ஆவணம், வரலாற்று ஆவணம், பிறப்பு

ஆவணம், காணி ஆவணம், என்றவாறெல்லாம் வந்து, பதிவேடு, சீட்டு, சான்று,
சான்றிதழ், உறுதி, போன்ற பல்வேறு பதங்கள் காணாமலாகிவருவதை இன்றைய
நாளேடுகளில் பரக்கக்காணலாம்.

  1. ஒரு சொல்லின் பொருளும் பயன்பாடும் காலப்போக்கில் மாறுவது இயல்பானது.
    எப்பொழுதுமே நடந்துவருவது. ஆனால், ஆவணத்தின் செய்தி அப்படியல்ல.
    கலைச்சொல்லாக்கக் குளறுபடி கண்மூடித்தனமாகப் பின்பற்றப்பட்டதால் வந்தது.
    இப்படியான பிசகுகள் தொடர்வதற்கு இடமளிப்பது தமிழ் மரபிற்கு எற்புடையதா?

என்ன செய்யலாம்?

  1. மாற்றப்படவேண்டியது என்று உணரப்பட்டால் நொண்டிச்சாக்குகள்
    தேவையில்லை. பல்லாயிரக்கணக்கான பதிவுகளில் வந்துவிட்டன என்று மலைக்க
    வேண்டியதில்லை. அப்படியே விட்டுவிடலாம், அதுவே சரியாகி விடும் என்று
    கைவிடவும் வேண்டியதில்லை. கடந்த காலங்களில், அச்சிற் பதிவான சொற்களை,
    பரவலானவை என்றெலாம் பார்க்காமல் ஆயிரக்கணக்கில் கைவிட்டிருக்கின்றோம்,
    மாற்றியிருக்கின்றோம். அதற்காக அந்தப் பதிவுகளை யாரும் அழிக்கவில்லை. அரசு
    முடிவால், அறிஞர் பயன்பாட்டால், ஊடகங்களால், பாடநூல்களால் வந்த
    செம்மையாக்கங்கள் எத்தனையோ. இது கணனி ஊழி. திருத்தங்கள் எளிது. செயற்கை
    நுண்ணறிவுக்குச் சொல்லிக்கொடுத்தால் அது தவறுகளை இடித்துரைத்துக்கொண்டே
    இருக்கும்.
  2. அரசு முடிவால் நிறுவனங்களில் சொற்திருத்தம் வருவது ஈழத்தமிழருக்குக்
    கிடைக்குமா தெரியாது. இலங்கையில் ஏற்கனவே நல்ல தமிழில் இருந்த சுவடிக்
    காப்பகத்தையும் இப்போது யாரோ குழப்பியிருக்கிறார்கள். தமிழக அரசு தமிழகத்தில்
    திருத்துவது உலகத்தமிழருக்கு உதவும்.
  3. தற்போது ஆவணத்தை வைத்துச் செயலாற்றும் நிறுவனங்களில் இருப்பவர்கள்
    திருத்தத்தின் தேவையை உணர்ந்துகொண்டால் திருத்தத் தயங்க வேண்டியதில்லை.
    இவர்களுடைய தொழில்சார்ந்த ஒருசொற் தேவையையும், Document, Archival
    meterial போன்றவற்றை வேறுபடுத்தவேண்டிய தேவையையும் புரிந்துகொள்ளலாம்.
    எற்கனவே, தமிழ்ப்பிழை தவிர் 1 இல் குறிப்பிட்டதுபோல, சுவடு என்ற அடியில்

பிறந்த சுவடியின் சொற்பிறப்பும் சொற்றொடர்களும் தேவைகள் அனைத்துக்கும்
பொருத்தமானவை. சுவடிகளை வைத்துத்தான் நூலகம், சுவடிக்காப்பகம் இரண்டுமே
இயங்குகின்றன. பிரித்துக்காட்ட வேண்டுமானால் archival material ஐ, தொல் சுவடி
அல்லது அருஞ்சுவடி எனலாம்.

  1. நாளேடுகள் உள்ளிட்ட ஊடகங்களின் ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பை
    உணர்ந்துகொள்ள வேண்டும். ஊடகங்களின் சொற் பயன்பாட்டுத் தவறுகள்
    பொதுமக்களிடம் விரைவாகவும் பரவலாகவும் சென்றுவிடுகின்றன. ஆவணத்திற்குச்
    சுவடி தவறற்ற மாற்றீடாயினும், தேவைக்கேற்ப, கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ்,
    காணி உறுதி போன்றவற்றைப் பயன்படுத்தல் தமிழ்ச்சொல்வளத்திற்கு
    வேண்டப்படுவது.
  2. அனைத்துக்கும் இன்றியமையாதது தமிழ்கூறும் நல்லுலகின் அறிஞர்களதும்
    எழுத்தாளார்களதும் விழிப்புணர்வு. உயர்ந்தோரால் வந்த மொழிவழக்குத் தவறுகள்
    உயர்ந்தோராலேயே தீர்க்கப்படல் வேண்டும். தவறு வந்தது போலவே போகும்.
    “வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே
    நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான” (தொல்காப்பியம் 1592).

தமிழ்ப்பிழை தவிர்ப்போம் -3
வரலாற்றியலும் ஆவணக் குழப்பமும்

வரலாற்றுச் சான்றுகளை வரலாற்று ஆவணங்கள் என்று எழுதும் தவறு
அண்மைக்காலங்களில் பரவலாகிவருகின்றது. தேடலின்மையால் வந்த
அறியாமையால் இக் கட்டுரையாளரும் இந்தத் தவறைச் செய்திருக்கிறார்.
தேடியபொழுது இந்தக் குழப்பம் கடந்த சில பத்தாண்டுகளுக்குள்தான்
நுழைந்திருப்பது புலனாயிற்று.
தமிழ் இலக்கிய, மற்றும் பொறிப்பு வழக்காறுகளின்படி, வரலாற்று
ஆவணம் என்றால், வரலாற்றுக் கடை, வரலாற்றுக் கடைத்தெரு,
வரலாற்றை விலைகூறி விற்ற பற்றுச்சீட்டு என்றுதான் பொருள்.
இதையே வரலாற்றுச் சான்று (historical evidence), வரலாற்றுச் சுவடி
(historical document), சுவடிச் சான்று (documentary evidence) என்று
இடத்திற்கேற்ப எழுதினால் தவறான தமிழ் என்று யாரும் கூறமுடியாது.
சான்றில்லாமல் வரலாறு இல்லை. எழுதப்பட்ட சான்றின் வருகையே
வரலாற்றுக் காலத்தையும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தையும்
பிரிப்பதாக வரைவிலக்கணம் செய்யப்பட்டது. பின்னையதற்கு
தொல்லியற் சான்றுகள் மட்டுமே. சான்று இரண்டுக்கும் வேண்டும்.
சான்று என்ற உயிர்ச்சொல்லுக்கே ஆவணக் கோளாறு வந்துவிட்டது.
எழுதப்பட்ட சான்று (written evidence) என்பது, நிழற்படம், ஒலிப்பதிவு,
ஒளிப்பதிவு, எண்ணிமப்பதிவு என்றெல்லாம் வளர்ந்துவிட்டதால் சுவடிச்
சான்று (documentary evidence) என்ற சொற்றொடருக்குத் தேவை
வந்தது. Document என்ற ஆங்கிலப் பதத்தின் லத்தின் மூலம், written
instruction, official paper, proof, என்ற பொருட்களில்
பயன்படுத்தப்பட்டிருந்தது. அதன் இன்றைய பொருள் விரிவு: A piece of
written, printed, or electronic matter that provides information or
evidence, or that serves as an official record; (verb) record in written,

photographic, or other form (Concise Oxford English Dictionary, 12th
Edition, 2011).
Document இன் பொருள் விரிவுகளுக்கு அதைவிடச் சிறப்பான
சொற்பிறப்புடன் ஈடுகொடுக்கக்கூடிய தமிழ்ச்சொல் சுவடி. வடமொழி
ஆவணத்திற்கு, செயற்கையாகப் புதிய பொருள் விளக்கங்கள் கற்பித்து,
கொண்டுவர வேண்டியதில்லை.
மனித இனம் விட்டுச்சென்ற, விட்டுச்சென்றுகொண்டிருக்கின்ற, சுவடுகள்
பதியப்பட்ட பல்வேறுவகைச் சுவடிகளைப் பேணிக் கையாள்வதில்
தொழில் வேறுபாடுகள் இருப்பின், அவற்றை வேறுபடுத்திக்காட்ட
ஒட்டுமொழியான தமிழில் சுவடிக்கான ஒட்டுச்சொற்கள் நிறையவே
உண்டு. ஏற்கனவே ஆவணத்திற்கு ஒட்டிப் பட்டியலிட்ட
முன்னறிவுடையோருக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை.
கல்வெட்டை ஆவணம் என்று எழுதும் பழக்கமொன்றும் சென்ற
நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் தொடங்கியது. வடமொழிச்
சொல்லான சாசனம் போல, கல்வெட்டு, செப்பேடு எல்லாவற்றையும்
ஆவணம் உள்ளடக்கும் என்று நினைத்திருக்கலாம். சாசனத்திற்கு,
பொறிப்பு என்ற நல்ல தமிழ்ச் சொல்லை த. சண்முகசுந்தரம் போன்ற
ஈழத்து அறிஞர்கள் பயன்படுத்தியிருந்தனர்.
கல்வித்துறையில் ஆவணத்தின் இன்றைய பயன்பாட்டுப் பிசகுக்கு
நூலகவியல் சொற்களஞ்சியங்கள் முனைப்பாகப் பங்களித்திருந்தமை
தெரிகிறது.
சொல்லின் பொருள் காலப்போக்கில் மாறிவந்தமைக்குச் சிறந்த
எடுத்துக்காட்டென்று கூறி, வியாபாரத்திற்கும் நூலகத்திற்கும்
முடிச்சுப்போடலாமா?
இங்கு காலப்போக்கு ஒன்றும் இல்லை. ஒரு குறித்த காலகட்டத்தில் ஒரு
குறித்த குழுவினரின் தேடலற்ற கலைச்சொல்லாக்கமும், நிறுவனங்களில்
தவறைத் திருத்திக்கொள்ள விரும்பாத மனப்பான்மையும் எவ்வாறு
நற்பொருளற்ற, நற்பின்னணியற்ற சொல்லொன்றை, கலைமகளின்
கோயில்களுக்குள்ளேயே கொண்டுவரலாம் என்பதற்குச் சிறப்பற்றதொரு
எடுத்துக்காட்டுத்தான் ஆவணம்.

தமிழ் கூறும் நல்லுலகம் கண்டுகொள்வதாக.
இதுவரை நல்ல தமிழில் வரலாற்றுச் சான்று என்று எழுதிக்கொண்டிருந்த
வரலாற்றுத்துறை சார்ந்தவர்களும் கண்டுகொள்வார்களாக.

தமிழ்நாடு திருத்தும்வரை ஈழத்தமிழர் காத்திருக்க வேண்டுமா?

தமிழ்ப்பிழை தவிர்ப்போம் 4

வடமொழி ஆபணத்திலிருந்து தமிழுக்கு வந்து, கடை, கடைத்தெரு, சந்தை,
பணப்பரிமாற்றம், விற்றுவாங்கிவந்த உரிமை, போன்ற பொருட்களில் வழங்கிவந்த
ஆவணம் என்ற சொல், தமிழ்நாட்டின் அண்மைக்காலத்துக் கலைச்சொல்லாக்கக்
குழறுபடியால் எப்படி Document என்ற ஆங்கிலச் சொல்லுக்குரிய தமிழ்சொல்லாகப்
பரவலாகிறது என்பதை முன்னைய தொடர்களில் பார்த்தோம். இதற்கு நல்லதமிழ்
மாற்றீடுகள் எவை என்றும் பார்த்தோம்.

இந்த ஆவணவழுவானது, ‘டாக்குமென்ட்’ என்பதையும் கடந்து, நூல், வரலாற்றுச்
சான்று, கல்வெட்டு என்றெல்லாம் போய், உயிரியல் ஆவணம் என்று தொல்லியல்
உயிர்ச்சுவடு (fossil) வரை வந்திருப்பதை தமிழ்நாட்டு நாளேடுகளிற் காணலாம். தவறு
உணரப்படும்போது, முன்பு தஸ்தாவேஜு என்ற உருதுச் சொல்லைத் தந்து, திருப்பி
எடுத்துக்கொண்ட தமிழகம் இதையும் கவனித்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

அதுவரை ஈழத்தமிழர் காத்திருக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. நல்லதமிழ்ப்
பயன்பாட்டை ஈழத்தமிழர் முன்வைத்தால், அது பிழை, ஆவணந்தான் சரி என்று
யாரும் சொல்லிவிடமுடியாது.

தமிழ்நாட்டு நூலகக் கலைச்சொல்லாக்கத்தால் வழிப்படுத்தப்பட்டு, ஈழத்தில் இருந்த
சுவடியைத் தொலைத்த நூலகங்களைப்பற்றியும், பதிவு, பதிவேடு, சீட்டு,
உறுதிகளைத் தொலைத்த ஊடகங்களைப்பற்றியும், சான்றுகளைத் தொலைத்த
வரலாற்று எழுத்துக்களைப்பற்றியும் ஏற்கனவே பார்த்துவிட்டோம்.

ஆவணம் என்பது நூலக மொழிநடை. அது அறிந்தே அறிமுகப்படுத்தப்பட்ட
கலைச்சொல்லாக்கம், என்று சொல்லப்படுகிறது. கலைச்சொல்லாக்கத்தில்
நிகழ்ந்ததொரு தவறு “நூலக மொழிநடை” ஆகிவிடமுடியாது.

Document ஐயும் Archive ஐயும் வேறுபடுத்துவது எப்படி என்று கேட்கப்படுகிறது.
இதற்குத், தமிழில் சுவடியும் அருஞ்சுவடியும் இருக்கின்றன.

ஆவணம் இயக்கங்கள் கையாண்ட சொல். அதைக் கைவிடலாமா என்றும்
கேட்கப்படுகிறது. என்றுமே இயன்றவரை வடமொழியைத் தவிர்த்து, தனித்தமிழை
முன்னெடுத்த இயக்கங்களின் கொள்கைக்கு, ஆவணம், அதுவும் பொருட்தவறான
ஆவணம், முற்றிலும் முரணானது.

இந்தத் தவறை அடுத்த தலைமுறைக்கும் அன்றாடம் ஊட்டிவிடுவதில் ஊடகங்களும்
ஈழத்தமிழுக்குப் பாரிய தொண்டாற்றிவரும் சில நிறுவனங்களும் முன்னிற்பது
வருத்தத்திற்குரியது.

ஊடக எழுத்தாளர்களின் தமிழ் வழுவைத் திருத்துவது ஊடக ஆசிரியர்களின்
பெரும்பொறுப்பு. கூர்ந்தாராயாமல் தமிழ்நாட்டு ஊடகங்களைப்
பின்பற்றவேண்டியதில்லை.

நிறுவனங்களின் சொல்லாடலில் திருத்தம் கொண்டுவருவது அவற்றின்
ஆளுங்குழுக்களை வழிநடத்தும் ஒருசிலரின் கைகளிலேயே இருக்கின்றது.
இப்படியான நிறுவனங்களின் நலன்விரும்பிகள், இவற்றிற்கு நிதியளிப்போர்,
நூல்களையும் ஏனைய சுவடிகளையும் கொடுப்போர், இவற்றில் தங்கள் வாழ்வையும்
பணிகளையும் பதிவிட முன்வருபவர்கள் போன்றோர் கவனித்து, ஆவணம் என்றால்
வியாபாரம் என்று தெரிந்துகொண்டு, இடித்துரைத்தால் திருத்தம் எளிதாகலாம்.

எல்லோரும் எழுதுகிறார்கள் என்று பிழையைத் தொடருவது முன்னோடிகளுக்கு
அழகல்ல.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.