அஜர்பைஜான் 1 — காற்றின் நகரமும் கம்பளிகளின் கதையும்

அஜர்பைஜான், ஆர்மேனியா, ஜோர்ஜியா ஆகிய மூன்று சிறிய நாடுகளும் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் காக்கசஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ளன. வரலாற்றில் இவை அருகிலிருந்த பெரிய பேரரசுகளான பாரசீகம், ஒட்டோமான் துருக்கி, ரஷ்யா ஆகியவற்றின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தன. கடந்த நூற்றாண்டில் சோவியத் ஒன்றியத்தின் கீழும் இருந்தன. கிழக்கையும் மேற்கையும் இணைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க சில்க் பாதையில் அமைந்திருந்ததால், இப்பகுதி எப்போதும் பெரிய பேரரசுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

1991-இல் சோவியத் ஒன்றியம் சிதைந்த பின்னர் இந்நாடுகள் சுதந்திரம் பெற்றன.

அஜர்பைஜான் பல நூற்றாண்டுகளாகத் துருக்கிய மற்றும் பாரசீகச் செல்வாக்குகளுக்கு உட்பட்டிருந்தது. பெரும்பான்மையான மக்கள் ஷியா இஸ்லாமியர்களாக இருந்தாலும், நாட்டு அரசு மதச்சார்பற்றது.

எங்கள் பயணம் அஜர்பைஜானின் தலைநகரான பாகுவிலிருந்து தொடங்கியது.

அஜர்பைஜானின் தலைநகர் பாகு (Baku), கஸ்பியன் கடலின் கரையில் அமைந்துள்ளது. மற்ற கடல்களைப் போலல்லாமல், கஸ்பியன் கடல், ரஷ்யா, ஈரான், கசகஸ்தான், துர்க்மெனிஸ்தான், அஜர்பைஜான் ஆகிய நாடுகளால் முற்றிலும் சூழப்பட்ட ஒரு உள்நாட்டுக் கடல். புவியியல் ரீதியாக இதை உலகின் மிகப்பெரிய உப்பு ஏரி என்றும் குறிப்பிடலாம்.

கஸ்பியன் கடலுக்கு அடியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் அஜர்பைஜானின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. பாகுவில் பல புதிய கட்டிடங்கள் மிக அழகான நவீனக் கட்டிடக்கலையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. ஐரோப்பியக் கட்டிடக்கலையின் செல்வாக்கையும் நகரின் பல பகுதிகளில் காண முடிந்தது. கட்டாரில் பிரம்மாண்டமான கட்டிடங்களைப் பார்த்து நான் வியந்ததைப் போலவே, இங்கும் கஸ்பியன் கடற்கரையை மாலையாக அலங்கரித்திருந்த கட்டிடங்கள் என்னைக் கவர்ந்தன.

எங்களது திட்டமிட்ட சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பாகுவுக்குச் சென்றோம். மெல்பேர்னுக்கும் பாகுவுக்கும் இடையிலிருந்த நேர வித்தியாசத்திற்கு உடலைப் பழக்கப்படுத்திக் கொள்வதும் அதற்கொரு காரணம்.

நாங்கள் இறங்கியபோது கோடைக்கால வெப்பநிலை 32°C அளவில் இருந்தது.

விமான நிலையத்திலிருந்து நகருக்குச் செல்லும்போது பாகு மிகவும் சுத்தமாகவும், அகன்ற வீதிகளைக் கொண்டதாகவும் தெரிந்தது. ஆனால் வீதிகளில் அதிகமான மக்கள் நடமாட்டம் இல்லாதது என் கவனத்தை ஈர்த்தது.

இரண்டு நாட்கள் முன்பே சென்றிருந்ததால், எங்களது சுற்றுலா அட்டவணையில் இல்லாத சில இடங்களைப் பார்க்கத் திட்டமிட்டிருந்தேன். பாகுவிலுள்ள கம்பளி அருங்காட்சியகத்தைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால், அதைத் தவறவிட விரும்பவில்லை.

அஜர்பைஜானில் கம்பளி நெய்வது வெறும் தொழில் அல்ல; அது அவர்களது குடும்ப வாழ்க்கையோடும் கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந்த ஒன்று.

குழந்தை பிறந்ததும் புதிதாக நெய்யப்பட்ட கம்பளியில் குழந்தையைத் தவழவிடும் வழக்கம் இருந்ததாக அறிந்தேன். பெண் குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு நெசவுத் தறி வழங்கப்பட்ட மரபும் இருந்திருக்கிறது. பல தலைமுறைகளாகப் பெண்களின் வாழ்க்கையோடு கம்பளி நெசவு இணைந்திருந்தது. குடும்ப மற்றும் சமூக நிகழ்வுகளும் கம்பளி விரிப்புகளின் மீதே நடைபெற்றன.

அருங்காட்சியகத்திற்குள் சென்றபோது, கம்பளி என்பது வெறும் பயன்பாட்டுப் பொருள் என்ற எனது எண்ணம் மாறியது. அது ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்திருந்ததுடன், அவர்களது கலை, நம்பிக்கை, வாழ்க்கை முறை, வரலாறு ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் ஊடகமாகவும் இருந்தது. பட்டு விரிப்புகள் குறிப்பாக அலங்காரத்திற்காக நெய்யப்பட்டன.

காக்கசஸ் மலைத்தொடரின் தென்கிழக்கு அடிவாரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கால்நடை வளர்ப்பு நடைபெற்று வந்துள்ளது. இங்குள்ள செம்மறியாடுகளின் கம்பளியே நூலாக்கப்பட்டு இறுதியில் அழகிய கம்பளி விரிப்புகளாக மாறுகிறது.

நல்ல புல்வெளிகளும் ஏற்ற காலநிலையும் இருப்பதால் தொன்மைக் காலத்திலிருந்தே இப்பகுதியில் மந்தைகள் மேய்க்கப்பட்டன. நல்ல தரமான கம்பளியைத் தரும் செம்மறியாடுகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன.

ஆடுகளிலிருந்து கம்பளி கத்தரிக்கப்பட்ட பின்னர் அது சுத்தப்படுத்தப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, நூலாகத் திரிக்கப்படுகிறது. பின்னர் தாவரங்கள் மற்றும் கனிமங்களிலிருந்து பெறப்பட்ட இயற்கைச் சாயங்களைப் பயன்படுத்தி நூல்களுக்கு நிறமூட்டப்படுகிறது. வெங்காயத் தோல் போன்ற சாதாரணப் பொருட்களிலிருந்துகூட நிறச்சாயம் தயாரிக்கப்பட்டது என அறிந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

நூலைத் தயாரித்து பதப்படுத்தும் ஆரம்ப வேலைகளில் ஆண்களும் ஈடுபட்டிருந்தனர்; நெசவுப் பணியில் பெண்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.

அருங்காட்சியகத்தில் தொன்மையான காலத்திலிருந்து அண்மைக்காலம் வரையிலான பல்வேறு கம்பளிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. வெவ்வேறு பிரதேசங்களில் உருவான கம்பளிகளின் வடிவமைப்பிலும் நிறங்களிலும் வேறுபாடுகளைக் காண முடிந்தது. ஒவ்வொரு பிரதேசமும் தனக்கென ஒரு கலைமொழியை உருவாக்கியிருந்தது.

பிற்காலக் கம்பளிகளில் மனிதர்கள், நிகழ்வுகள், கதைகள் ஆகியவையும் ஓவியங்களைப் போல நெய்யப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்தபோது, கம்பளி என்பது தரையில் விரிக்கப்படும் பொருள் மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் வரலாற்றைச் சுமந்து செல்லும் ஆவணம் என்பதையும் உணர முடிந்தது.

அஜர்பைஜானின் பாரம்பரிய கம்பளி நெசவுக் கலை யுனெஸ்கோவால் மனிதகுலத்தின் அரூபமான கலாச்சாரப் பாரம்பரியமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகக் கட்டிடமே ஒரு சுருட்டப்பட்ட கம்பளியைப் போன்ற வடிவத்தில் அழகாக அமைந்திருந்தது.

என்னால் மூன்று மணி நேரம் அந்தக் கம்பளிகளுடன் செலவிட முடிந்தது. வழக்கமாக இப்படியான அருங்காட்சியகங்கள் சியாமளாவுக்கு சற்றுப் போரடிக்கும். ஆனால் அன்று நான் கவனிக்காமல் விட்ட சிலவற்றை அவரே எனக்குக் காட்டியபோது, அவரும் அந்தக் கம்பளி உலகத்தை ரசித்திருப்பதை உணர்ந்தேன்.

மாலையில் கஸ்பியன் கடற்கரைக்குச் சென்றோம். அங்கு வீசிய காற்று எங்களை இழுத்து வீழ்த்திவிடுமோ என்ற அளவுக்குப் பலமாக இருந்தது. பாகு நீண்டகாலமாகவே “காற்றின் நகரம்” என்று அழைக்கப்படுவதன் காரணம் அப்போது புரிந்தது.

கடற்கரைக்கு அருகில் தாமரைப்பூவை நினைவூட்டும் வடிவில் ஒரு ஷாப்பிங் பிளாசா இருந்தது. இவ்வளவு அழகான வணிக வளாகத்தை நான் இதற்கு முன்பு பார்த்ததாக நினைவில்லை. எங்களுக்கு வாங்குவதற்கு எதுவும் தேவையில்லை. அங்கிருந்தவை பெரும்பாலும் உயர்தர ஃபேஷன் பொருட்கள். எனவே கண்களால் மட்டும் ஷாப்பிங் செய்துவிட்டு வெளியே வந்தோம்!

மாலையில் பாரம்பரிய அஜர்பைஜானிய உணவகமொன்றுக்குச் சென்றோம். அங்கு தேநீரை எலுமிச்சைத் துண்டுடன் பரிமாறினார்கள்.

இறைச்சி, பூசணி, கீரை அல்லது சீஸ் போன்றவற்றை மெல்லிய மாவுக்குள் வைத்து மடித்து சுடும் உணவான குடாப் (Qutab) அங்கு பிரபலமானது. அஜர்பைஜானிய உணவுப் பாரம்பரியத்தின் முக்கிய உணவுகளில் இதுவும் ஒன்று.

அடுத்த நாள் இரவு நகரைப் பார்ப்பதற்காக எமிலியா என்ற இளம் பெண் வழிகாட்டியுடன் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தோம்.

“பாகுவின் உண்மையான அழகைப் பார்க்க வேண்டுமென்றால் இரவில் பார்க்க வேண்டும்” என்று பலர் சொல்லியிருந்தார்கள்.

நகரின் மத்தியில் உள்ள மூன்று உயரமான Flame Towers கட்டிடங்கள் இரவில் மின்விளக்குகளால் எரியும் நெருப்புக் கனல்களைப் போலத் தோன்றும் என்றும் கூறினார்கள். அதை நாமும் பார்த்துவிடுவோம் என்று நினைத்தோம்.

இஸ்லாம் வருவதற்கு முன்பே இப்பகுதியில் சொராஸ்ட்ரிய மதத்தின் செல்வாக்கு இருந்தது. நெருப்பு அந்த மதத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. இயற்கையாகவே நிலத்திலிருந்து வெளிப்படும் எரிவாயு காரணமாக அஜர்பைஜானின் சில பகுதிகளில் நெருப்பு தொடர்ந்து எரிந்தது. அதனால் நெருப்பு அந்நாட்டின் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாகவும் மாறியுள்ளது.

சொராஸ்டர் (Zoroaster) எங்கு பிறந்தார் என்பது இன்றும் உறுதியாகத் தெரியவில்லை. ஈரான், மத்திய ஆசியா அல்லது இன்றைய ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பகுதிகள் எனப் பல கருத்துகள் உள்ளன. ஆனால் அஜர்பைஜான் உட்பட பழைய பாரசீக உலகில் சொராஸ்ட்ரிய மதம் முக்கிய செல்வாக்குடன் இருந்தது என்பதில் சந்தேகமில்லை.

ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இஸ்லாம் இப்பகுதியில் பரவியபோது சொராஸ்ட்ரிய மதத்தின் அரசியல் மற்றும் சமூகச் செல்வாக்கு குறைந்தது. ஆனால் அதன் கலாச்சாரத் தொன்மங்கள் முற்றிலும் மறைந்துவிடவில்லை. இன்றும் அஜர்பைஜானின் நெருப்பு சார்ந்த அடையாளங்களில் அதன் நிழலைப் பார்க்க முடிகிறது.

பின்னர் Martyrs’ Lane எனப்படும் தியாகிகள் நினைவிடத்திற்குச் சென்றோம்.

1990 ஜனவரியில் சோவியத் இராணுவம் பாகுவுக்குள் நுழைந்தபோது பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அஜர்பைஜானில் இந்த நிகழ்வு “Black January” என நினைவுகூரப்படுகிறது. சோவியத் தலைவர் மிகைல் கோர்பச்சேவ் மேற்குலகில் சீர்திருத்தவாதியாகப் பாராட்டப்பட்டாலும், பல அஜர்பைஜானியர்களின் வரலாற்று நினைவில் அவரது பெயர் வேறுவிதமாகப் பதிந்திருக்கிறது.

நாகோர்னோ-கரபாக் மோதல்களிலும் பின்னர் நடந்த போர்களிலும் உயிரிழந்தவர்களுக்கான நினைவுகளும் இப்பகுதியில் உள்ளன. அருகிலேயே துருக்கிய வீரர்களுக்கான நினைவுச் சின்னமும் பள்ளிவாசலும் உள்ளன; அவை முதலாம் உலகப்போரின் இறுதிக்காலத்தில், 1918-இல் பாகுவுக்காக நடந்த போரில் உயிரிழந்த ஒட்டோமான் வீரர்களை நினைவுகூர்கின்றன.

அங்கு இறந்தவர்களின் படங்களில் இளம் ஆணும் பெண்ணும் திருமண அலங்காரத்தில் இருந்த ஒரு படம் என் கவனத்தை ஈர்த்தது.

அதைப் பற்றி வழிகாட்டியிடம் கேட்டேன். அவர்கள் திருமணம் செய்யவிருந்த இளம் ஜோடி என்றும், அன்றைய வன்முறையில் இளைஞன் உயிரிழந்த பின்னர் அந்தப் பெண்ணும் இறந்ததாகவும், இருவரின் நினைவும் ஒன்றாகப் பேணப்படுவதாகவும் அவர் கூறினார்.

அந்தக் கதை நெஞ்சை நெகிழ வைத்தது.

அந்த இரவுப் பயணத்தில் பல நாட்டவர்கள் எங்களுடன் இணைந்திருந்தார்கள். அவர்களில் ஒரு பாகிஸ்தானியத் தம்பதியுடன் நாங்கள் நெருக்கமாகப் பழகினோம்.

தற்போதைய மத்திய கிழக்கு அரசியலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அந்தப் பாகிஸ்தானியக் கணவர்,

“ஈரான் கொஞ்சம் சமாதானமாகப் போகலாம்,” என்றார்.

அப்போது எங்களுடன் வந்திருந்த பஹ்ரைனைச் சேர்ந்த ஒரு விரிவுரையாளர்,

“எங்கள் நாடு அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமான பாதுகாப்பு உறவில் இருக்கிறது. அதனால் ஈரானுடன் சுதந்திரமாக உறவை அமைத்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல,” என்றார்.

“இஸ்லாம் அமைதியின் மதம் என்பதெல்லாம் என்ன?”

என்று மனதுக்குள் நினைத்தேன். ஆனால் பேசவில்லை.

மதங்களைக் காட்டிலும், அரசியல் அதிகாரங்களும் பேரரசுகளின் போட்டிகளுமே இந்தப் பிரதேசத்தில் அதிக நெருப்பை மூட்டியிருக்கின்றன என்று தோன்றியது. ஏழாம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை மேற்காசியாவின் பல பகுதிகள் ஏதோ ஒரு வகையில் நெருப்பும் புகையும் எழும் நிலமாகவே தொடர்ந்து வருகின்றன.

அஜர்பைஜானில் ரஷ்யாவைப் பற்றிய வரலாற்றுக் கசப்பை உணர முடிந்தது. அதேபோல் பல நூற்றாண்டுகளாக இருந்த பாரசீக ஆதிக்கத்தின் நினைவுகளும், இன்றைய ஈரானுடனான அரசியல் உறவுகளும் சிலரிடம் எதிர்மறையான உணர்வுகளை உருவாக்கியுள்ளன.

சோவியத் கால அனுபவங்களையும் அவர்கள் மறந்துவிடவில்லை.

நமது நாட்டிலும் இப்படித்தானே?

வரலாறு முடிந்துவிடுகிறது; ஆனால் அது விதைத்த வெறுப்புகள் அடுத்த தலைமுறைகளுக்குள்ளும் முளைத்துக்கொண்டே இருக்கின்றன.

அஜர்பைஜானில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஷியா மரபைச் சேர்ந்தவர்கள்; சுன்னி முஸ்லிம்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். யூதர்களும் கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். அரசு மதச்சார்பற்ற தன்மையை வலியுறுத்துகிறது.

மது எங்கும் கிடைக்கிறது. பெண்கள் பெரும்பாலும் மேற்கத்திய உடைகளில் வீதிகளில் நடமாடுகிறார்கள். உடை தொடர்பான அரச கட்டுப்பாடுகள் எதையும் நாம் காணவில்லை.

எங்களுக்கு வழிகாட்டியாக வந்த எமிலியா சொன்ன ஒரு விஷயம் என்னைச் சிந்திக்க வைத்தது.

“என் பாட்டி எனக்குக் கணவர் தேடிக்கொண்டிருக்கிறார். நான் திருமணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறேன். பாட்டியிடம் ஒரு டயரி இருக்கிறது. இதுவரை மற்றவர்களின் திருமணங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறார் என்பதை எல்லாம் அதில் எழுதி வைத்திருக்கிறார். அந்தப் பணத்தை என் திருமணத்தில் திரும்ப வசூலிப்பதுதான் அவருடைய முக்கிய நோக்கம். மற்றபடி என் வாழ்க்கையைப் பற்றி அவருக்குப் பெரிய கவலை இல்லை!”

என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

பிறகு,“என் பாட்டி மட்டுமல்ல; இந்த நாட்டிலுள்ள எல்லாக் கிழவிகளும் இப்படித்தான் ஒரு டயரியோடு அலைகிறார்கள்!”

என்று சொல்லியபடி தனது ஜீன்ஸைச் சற்றுக் கீழே இழுத்து வயிற்றை அகலமாகக் காட்டினாள்.

சியாமளா என் காதருகே,

“இவளுடைய பேச்சு எப்படி இருக்கிறது?” என்றார்.

“தனிமனித சுதந்திரம், சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம்,” என்றேன்.

இறுதியாக நாங்கள் சென்ற இடம், ஈராக்கில் பிறந்த உலகப் புகழ்பெற்ற பெண் கட்டிடக் கலைஞர் சாகா ஹடிட் (Zaha Hadid) வடிவமைத்த ஹெய்தர் அலியேவ் கலாச்சார மையம் (Heydar Aliyev Centre).

நவீன உலகக் கட்டிடக்கலையின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

சாகா ஹடிட்டின் கட்டிடங்களில் நேர்கோடுகளையும் கூர்மையான மூலைகளையும் தவிர்த்து, வளைவுகளையும் தொடர்ச்சியான மேற்பரப்புகளையும் பயன்படுத்துவது ஒரு முக்கிய தன்மை. இங்கும் கஸ்பியன் கடலின் அலைகளை நினைவூட்டுவதுபோல் கட்டிடம் தரையிலிருந்து எழுந்து வளைந்து கூரையாக மாறுகிறது.

ஆனால் எமிலியாவுக்கு வேறு விளக்கம் இருந்தது.

“இது மார்லின் மன்றோவின் காற்றில் மேலெழும் பாவாடையைப் பார்த்து வடிவமைக்கப்பட்டது!” என்றாள்.

அவள் நகைச்சுவையாகத்தான் சொன்னாள்.

ஆனால் இருபத்திரண்டு வயதான அந்தப் பெண்ணின் குறும்பையும் தன்னம்பிக்கையையும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

சோவியத் ஒன்றியத்தின் பொருளாதாரக் கொள்கைகள் இறுதியில் தோல்வியடைந்து சிதறிப்போனது.  ஆனால் குறிப்பாக பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, பொதுச் சுகாதாரம் ஆகிய துறைகளில் சோவியத் அமைப்பு ஏற்படுத்திய மாற்றங்களின் தடயங்களை அதன் முன்னாள் குடியரசுகளுக்குச் செல்லும்போது பார்க்க முடிகிறது. முஸ்லிம் பெரும்பான்மை சமூகங்களில் பெண்களைப் பொதுக் கல்விக்கும் தொழில்களுக்கும் பெருமளவில் கொண்டு வந்ததில் சோவியத் காலம் முக்கிய பங்கு வகித்தது.

அஜர்பைஜானிலும் தலைமுறை தலைமுறையாக வீட்டுக்குள் அமர்ந்து கம்பளி நெய்வதே பெண்ணின் வாழ்க்கை என்று கட்டுப்படுத்தப்பட்டிருந்த ஒரு சமூக அமைப்பிலிருந்து, பெண்களைப் பள்ளிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் வேலைத்தளங்களுக்கும் பொதுவெளிக்கும் கொண்டு வந்த மாற்றத்தில் சோவியத் காலத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.

பாகுவின் கம்பளி அருங்காட்சியகத்தில் பழைய பெண்களின் விரல்கள் நெய்த கம்பளிகளைப் பார்த்தேன்.

அதே பாகுவின் இரவு வீதிகளில், ஜீன்ஸ் அணிந்து தனது பாட்டியின் திருமண டயரியைப் பகடி செய்தபடி சிரித்துக்கொண்டிருந்த எமிலியாவையும் பார்த்தேன்.

அந்த இரு காட்சிகளுக்கிடையேதான் அஜர்பைஜானின் கடந்த நூற்றாண்டு சமூக வரலாற்றின் ஒரு பகுதி அடங்கியிருக்கிறது என்று எனக்குத் தோன்றியது.

தொடரும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.