
‘சாந்தா குருஸ் தேவதை’ என்ற இந்த நாவல், என் வாழ்க்கையில் நேரடியாக அனுபவித்த என் வாழ்வின் எந்த ஒரு சிறு பகுதியையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, ஒரு புதிய மொழிநடையிலும் கதை சொல்லும் முறையிலும் எழுத வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து உருவானது. அதற்காகப் பல ஆண்டுகள் வரலாற்றை ஆராய்ந்து, பல்வேறு ஆதாரங்களைத் தேடிப் படித்தேன்.
இலங்கையில் போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் காலியில் நடத்திய போரைக் கதைப்பகுதியாக எழுதும்போது, அந்தப் போரைப் பற்றிய குறிப்புகளைப் பல இடங்களில் தேடிப் படித்தேன். காலிக்கு மூன்று தடவைகள் சென்று, அங்குள்ள கோட்டையின் அமைப்பை நேரில் பார்த்து, பல புகைப்படங்களை எடுத்தேன். அருங்காட்சியகத்திற்குச் சென்று அக்காலத்தைச் சேர்ந்த பொருட்களையும் பார்வையிட்டேன். அது மட்டுமல்லாமல், போர்த்துக்கேயர் ஆசியாவில் காலனிய ஆட்சி நடத்திய கிழக்குத் திமோருக்குச் செல்லும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அங்குள்ள முக்கியமான வரலாற்றுத் தளங்களையும் நேரில் பார்த்தேன்.
ஆனால், தகவல்களைச் சேகரித்து அவற்றை அப்படியே வைத்து ஒரு வரலாற்று நாவலை எழுதினால், அதை யார் ரசிப்பார்கள்?
அதனால்தான் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைப்பதற்காக கனவையும் இறப்பையும் கதை சொல்லும் கருவிகளாகப் பயன்படுத்தினேன். நோபல் பரிசு பெற்ற டோனி மொரிசன் போன்ற எழுத்தாளர்கள் எனக்கு துணையாக நின்றார்கள். கனவுகளும் நினைவுகளும் மனித வாழ்வின் யதார்த்தத்தின் ஒரு பகுதிதான் என்பதை அவர்களின் படைப்புகள் எனக்கு உணர்த்தின.
எங்கள் காலத்தின் மிகப் பெரிய பேசுபொருளாக இருந்த ஈழப்போர் முடிந்துவிட்டதாகச் சொல்லப்பட்டாலும், அதன் காயங்கள் இன்னும் முழுமையாக ஆறவில்லை. புயல் கடந்துவிட்டாலும் தூறல் நம்மைத் தொடர்ந்து நனைப்பதுபோல், அந்தப் போரின் நினைவுகளும் அதன் உளவியல் தாக்கங்களும் இன்னும் எங்களுக்குள் இருக்கின்றன. அந்தத் தூறலில் நானும் சிறிது நனைந்துகொண்டேன்.
இதற்கு அப்பால், சமூகத்தில் சிறு வயதிலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகளின் மனதில் ஏற்படும் ஆழமான பாதிப்புகளையும் பேச விரும்பினேன். பொதுவாக, குற்றவாளியை வெளிப்படுத்தி, அவனுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்தவுடன் சமூகம் தனது கடமையை முடித்துவிட்டதாக நினைத்துக்கொள்கிறது. பாதிக்கப்பட்ட குழந்தை பின்னர் வழக்கம்போல சமூகத்தில் வாழ்ந்துவிடும் என்றும் கருதுகிறது.
ஆனால் அது உண்மையல்ல.
அத்தகைய காயங்கள் உடலில் தெரியும் காயங்களைப் போல எளிதில் ஆறுவதில்லை. அவை மனதின் ஆழத்தில் நீண்ட காலம் வாழ்கின்றன. அவற்றின் தாக்கத்தைப் பற்றி பேசுவதும், பாதிக்கப்பட்டவரின் உள்ளுணர்வுகளையும் வாழ்வின் மீதான அதன் தாக்கத்தையும் புரிந்துகொள்வதும் நம் சமூகத்தில் இன்னும் போதுமான அளவில் நடைபெறவில்லை.
இவ்வாறு, வரலாறு, போர், நினைவுகள், கனவுகள், மரணம், பாலியல் வன்முறையின் உளவியல் காயங்கள் எனப் பல முக்கியமான விடயங்களை இந்தச் சிறுநாவலின் வழியாகத் தொட்டுப் பார்க்க முயன்றுள்ளேன்.
நீளமாகவும் அகலமாகவும் எல்லாவற்றையும் விவரிப்பதைவிட, சில முக்கியமான கேள்விகளை முன்வைத்து, அவற்றை வாசகரின் மனதில் அடையாளப்படுத்திச் செல்ல வேண்டும் என்பதே இந்த நாவலின் நோக்கம்.
‘சாந்தா குருஸ் தேவதை’, பல ஆண்டுகளாக எனது நட்புக்கும் அன்புக்கும் உரிய எழுத்தாளரான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்திற்கு அன்புடன் சமர்ப்பணம்.
பின்னூட்டமொன்றை இடுக