புக்கட் – ஜேம்ஸ் பாண்ட் தீவுக்கு அப்பால்

ஒரு வாரம் புக்கட் செல்ல முடிவு செய்தபோது, “எனது வயதுக்கு ஏற்றபடி என்ன பார்க்கலாம்?” என்று ChatGPT-யிடம் கேட்டேன். அது முதலில் பரிந்துரைத்த இடம் ஜேம்ஸ் பாண்ட் தீவு. அதோடு, நாங்கள் அங்கு இருக்கும் இரண்டாவது நாள் மழையில்லாத நாளாக இருக்கும் என்றும் தெரிவித்தது. இயற்கையும் தொழில்நுட்பமும் சில நேரங்களில் நம்மைவிட நன்றாகத் திட்டமிடுகின்றன.

1974-ஆம் ஆண்டு வெளியான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான த மான் வித்த கோல்டன் கன்  (The Man with the Golden Gun) படத்தின் முக்கிய காட்சிகள், புக்கட்டிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள Khao Phing Kan தீவிலும், அதற்கு அருகிலுள்ள Ko Tapu என்ற கடலிலிருந்து செங்குத்தாக எழுந்திருக்கும் சுண்ணாம்புப் பாறையையும் பின்னணியாகக் கொண்டு படமாக்கப்பட்டன. அந்தப் படத்திற்குப் பிறகு, அந்தத் தீவு உலக வரைபடத்தில் “ஜேம்ஸ் பாண்ட் தீவு” என்ற புதிய பெயரைப் பெற்றது. இன்று அது புக்கட்டின் மட்டுமல்ல, தாய்லாந்தின் சுற்றுலா அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

அதிகாலையில் சுற்றுலாக் கப்பலில் ஏறி இரண்டு மணி நேரம் கடலைக் கிழித்துச் சென்றோம். வழியில் இரண்டு கடற்குகைகளுக்குள் சிறிய ரப்பர் கட்டுமரங்களில் செல்ல வேண்டியிருந்தது. குகையின் வாயில் மிகவும் தாழ்வாக இருந்ததால், படகில் நிமிர்ந்து அமர முடியாது; படுத்துக்கொண்டே உள்ளே செல்ல வேண்டும். அந்த இருள் நிறைந்த சுரங்கப்பாதையைக் கடந்து வெளிச்சத்துக்குள் நுழைந்தபோது, ஒரு மறைந்த உலகிற்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது.

பல மில்லியன் ஆண்டுகளாக உருவான சுண்ணாம்புப் பாறைகள், அவற்றின் உச்சியில் கூடாரம்போல் விரிந்த மரங்கள், அமைதியாக நின்ற கடல், பறவைகளின் குரல்கள்—இவை அனைத்தும் சேர்ந்து இயற்கையே செதுக்கிய ஒரு பேராலயத்தை நினைவூட்டின. அங்குள்ள அமைதியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அதன் பிறகு ஜேம்ஸ் பாண்ட் தீவை அடைந்தோம். அருகிலுள்ள Ko Tapu பாறையைப் பின்னணியாக வைத்து புகைப்படம் எடுக்க சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.

ஒரு காலத்தில் நான் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் தீவிர ரசிகன். The Man with the Golden Gun திரைப்படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். டிராகுலா திரைப்படங்களால் புகழ்பெற்ற கிறிஸ்டோபர் லீ, தங்கத் துப்பாக்கியுடன் ஜேம்ஸ் பாண்டை எதிர்கொள்ளும் காட்சி இன்னும் என் நினைவில் தெளிவாக உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் காட்சிகள் எடுக்கப்பட்ட இடத்தில் நின்றபோது, சினிமாவும் வாழ்க்கையும் ஒரு கணம் ஒன்றாக இணைந்தது.

மாலை நேரத்தில் Koh Panak குகைக்குச் சென்றோம். இருள் சூழ்ந்ததும், படகிலிருந்து கையை நீரில் அசைத்தோம். உடனே நீர் சிறிய நீல ஒளியால் மின்னியது. கடலில் வாழும் நுண்ணுயிர்களின் உயிரொளி அது. இரவின் அமைதியில் அந்த ஒளி, மின்மினிப் பூச்சிகள் கூட்டமாகப் பறப்பதைப் போலத் தோன்றியது.

முழு நாள் பயணம் என்பதால், கப்பலிலேயே இரண்டு வேளை உணவு வழங்கப்பட்டது. தாய்லாந்தின் சுற்றுலா ஏற்பாடுகளில் காணப்படும் ஒழுங்கும் நேர்த்தியும் பாராட்டத்தக்கது.

தாய்லாந்தில் பெரும்பாலோர் புத்தமதத்தினர். ஆனால் புக்கட்டில் கணிசமான அளவு முஸ்லிம்கள் வாழ்கின்றனர். படகுச் சேவையில் பணியாற்றுபவர்களும் பெரும்பாலும் அவர்களே. முன்னொரு காலத்தில் மீன்பிடித் தொழிலில் இருந்தவர்கள், இன்று சுற்றுலாத் துறையின் முக்கிய அங்கமாக மாறியுள்ளனர்.

எங்கள் கப்பலின் கப்டன் எப்போதும் தியானத்தில் இருப்பவரைப் போல அமைதியாக இருந்தார்.

“நீங்கள் புத்த மதத்தவரா?” என்று கேட்டேன்.

“இல்லை, நான் முஸ்லிம். ஆனால் எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. புத்தமதத்தவர்கள் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள்,” என்றார்.

அந்த ஒரு வாக்கியம், பல அரசியல் உரைகளைவிட ஆழமாக என் மனதில் பதிந்தது. மதங்கள் மனிதர்களைப் பிரிப்பதில்லை; மனிதர்கள்தான் மதங்களைப் பிரிக்கிறார்கள் என்பதை மீண்டும் நினைவூட்டியது. தாய்லாந்தும் இந்தோனேசியாவும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். இலங்கையும் மியான்மரும் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

நாங்கள் தங்கியிருந்த கமலா பகுதியில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக இருந்தனர். பெரிய மசூதியும் இருந்தது. சமஸ்கிருதத்தில் “கமலா” என்ற சொல்லுக்கு “தாமரை” என்று பொருள். ஒரு பண்டைய இந்தியச் சொல், ஒரு தாய் கடற்கரை கிராமத்தின் பெயராக உயிரோடு இருப்பது வரலாற்றின் நீண்ட பயணத்தை நினைவூட்டியது.

அடுத்த நாள் புக்கட்டின் தென்முனையில் சூரிய அஸ்தமனத்தை ரசித்தோம். அங்கு சுற்றுலா வழிகாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தபோது தற்போது அதிகமாக வருபவர்கள் ரஷ்யர்கள், சீனர்கள், இந்தியர்கள் என்று கூறினார்.

“ரஷ்யர்கள் சிக்கனமாக இருப்பார்கள். சீனர்கள் கூட்டமாக வருவார்கள். இந்தியர்கள் மட்டும் எப்போதும் தாமதமாக வருவார்கள்,” என்று சிரித்தபடி சொன்னார்.

“இஸ்ரேலியர்கள்?” என்று கேட்டேன்.

“வருவார்கள்; ஆனால் கொஞ்சம் அகங்காரம் அதிகம்,” என்றார்.

இவை அனைத்தும் பொதுவான அபிப்பிராயங்களே. ஒரு நாட்டைச் சேர்ந்த அனைவரையும் இவ்வாறு வகைப்படுத்த முடியாது. ஆனால் ஒவ்வொரு சமூகமும், தங்கள் அனுபவங்களின் அடிப்படையில் மற்றவர்களைப் பற்றிய கருத்துகளை உருவாக்குவது மனித இயல்பு என்பதை உணர முடிந்தது.

பின்னர் மீன் சந்தைக்குச் சென்றோம். மீன், நண்டு, இறால், கணவாய், மட்டி என்று வாங்கி அருகிலுள்ள உணவகத்தில் சமைக்கக் கொடுத்தோம். பத்து நிமிடங்களில் அனைத்தும் உணவாக எங்கள் முன் வந்தது.

எழுவைத்தீவில் பிறந்த எனக்கு இவை புதிதல்ல. ஆனால் இவ்வளவு வகையான கடலுணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டது வாழ்க்கையில் முதல் முறை. மீதமிருந்ததைப் பொதியாக எடுத்துச் சென்று மறுநாளும் சுவைத்தோம்.

மூன்றாவது நாள் ஒரு பெரிய புத்த விகாரைக்குச் சென்றோம். எங்களுடன் வந்திருந்த இரண்டு அவுஸ்திரேலியப் பெண்களில் ஒருவர், பிக்குவின் சிலைக்கு அருகில் இருந்த யானைச் சிலையைக் காட்டி,

“யானைக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?” என்று கேட்டார்.

வழிகாட்டிக்குத் தெரியவில்லை.

நான் விளக்கினேன்.

“சித்தார்த்தர் பிறப்பதற்கு முன், அவரது தாய் மகாமாயாதேவி கனவில் வெள்ளை யானை ஒன்றைக் கண்டதாக புத்த மரபு கூறுகிறது. அதனால் யானை புத்தமதத்தின் புனிதச் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.”

அவர் ஆச்சரியத்துடன் நன்றி கூறினார். ஒரு பயணத்தில் சில நேரங்களில் வழிகாட்டியைவிட மற்றொரு பயணிதான் வழிகாட்டியாக மாறிவிடுகிறார்.

புக்கட்டின் பழைய நகரில் சீனர்களின் கட்டிடக்கலை இன்னும் உயிரோடு உள்ளது. தகரச் சுரங்கத் தொழிலுக்காக வந்த சீனர்களின் சந்ததியினர் இன்று அந்த நகரின் பொருளாதாரத்தை வழிநடத்துகின்றனர்.

காஜு பருப்பு தொழிற்சாலையில் பெரும்பாலும் மியான்மரிலிருந்து வந்த பெண்கள் வேலை செய்தனர். முகத்தில் பூசும் தனகா அவர்களை எளிதில் அடையாளம் காட்டியது. குறைந்த சம்பளத்தில் நீண்ட நேரம் உழைத்தாலும், தங்கள் நாட்டைவிட பாதுகாப்பான வாழ்க்கையை அவர்கள் இங்கு காண்கிறார்கள் என்றார் வழிகாட்டி. அந்த உரையாடல், ஒரு நாட்டின் அரசியல் தவறுகள் எத்தனை தலைமுறைகளின் வாழ்க்கையையும் மாற்றிவிடுகின்றன என்பதை மீண்டும் நினைவூட்டியது.

மழை காரணமாக இரண்டு நாட்கள் கடற்கரைகள் மூடப்பட்டிருந்தன. ஒரு நாள் நீச்சல் குளத்தில் இருந்தபோது, தென்னாப்பிரிக்காவில் பிறந்து தற்போது ஆஸ்திரியாவில் வாழும் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் அறிமுகமானார்.

“என் பாட்டி இந்தியர். ஆனால் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியாது,” என்றார்.

“குடும்பப் பெயர் என்ன?” என்று கேட்டேன்.

“பிள்ளை.”

அவ்வளவுதான் போதுமானது.

“உங்கள் முன்னோர்கள் தென் தமிழ்நாட்டைச் சேர்ந்திருக்கலாம்,” என்றேன்.

அவர் ஆச்சரியமடைந்தார். இன்றைய உலகம் டி.என்.ஏ. பரிசோதனைகள் மூலம் வேர்களைத் தேடிக்கொண்டிருக்கிறது. ஆனால் சில நேரங்களில் ஒரு குடும்பப் பெயரே பல தலைமுறைகளின் கதையைச் சொல்லிவிடுகிறது.

பயணத்தின் முடிவில் எனக்கு தோன்றிய உணர்வு இதுதான்.

நாம் ஒரு நாட்டிற்குச் செல்லும்போது மலைகளையும் கடற்கரைகளையும் கோயில்களையும் பார்க்கிறோம். ஆனால் வீடு திரும்பிய பிறகு நம் நினைவில் நிற்பவை அவை மட்டுமல்ல. ஒரு படகோட்டியின் சகிப்புத்தன்மை பற்றிய வார்த்தைகள், ஒரு வெளிநாட்டுப் பெண்ணின் வேர்களைத் தேடும் ஆர்வம், ஒரு வழிகாட்டியின் அறியாமை, ஒரு சந்தையின் மணம், ஒரு மாலைச் சூரியன்—இவையே பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகின்றன.

பயணம் என்பது இடங்களைப் பார்ப்பது மட்டுமல்ல; மனிதர்களைப் படிப்பதும் கூட.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.