சிறுகதை : எலுமிச்சை மரம்

நானும் மனைவியும் மெல்பேனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நண்பர்களின் வீட்டில் இரவு உணவை முடித்துவிட்டு புறப்பட்டபோது, ஏற்கனவே பத்து மணியைத் தாண்டிவிட்டது. நேரம் ஆகிவிட்டதே என்று பேசிக்கொண்டபடி நான் காரை சற்று வேகமாக ஓட்டினேன்.

ஒரு புறநகர் பகுதியை கடந்து செல்லும்போது, சமீபத்தில் இறந்திருந்த ஒரு உறவினர் பற்றிய பேச்சு தொடங்கியது.

“நிர்மலா வீட்டைப் போய் பார்த்துவிடலாமா?” என்று மனைவி சிரித்தபடி கேட்டாள்.

“இறந்து இன்னும் ஒரு மாதமே ஆகவில்லை. வீட்டில் ஆவியாக இருந்தால்?” என்று நானும் சிரித்தபடி பதிலளித்தேன்.

நிர்மலா, உடல்நிலை மிகவும் தளர்ந்திருந்தாலும், அந்த வீட்டை விட்டு பிரியாதவர். பல முறை சத்திரசிகிச்சை செய்யப்பட்டதால் உடல் சோர்ந்து போயிருந்தது. ‘முதியோர் இல்லத்திற்குப் போனால் பராமரிப்பு எளிதாக இருக்கும்’ என்று பலர் அறிவுரை கூறியிருந்தாலும், அவர் உறுதியாக மறுத்துவிட்டார்.

அவர் வீட்டை விட்டு செல்லவில்லை; அதற்கு பதிலாக உறவினர்களும் பராமரிப்பாளர்களும் அந்த வீட்டிற்கே வந்து இறுதி வரை கவனித்தார்கள்.

எனது அனுபவத்தில், பலர் வாழ்ந்த வீட்டை விட்டு விலகிய சில நாட்களிலேயே உயிரிழக்கிறார்கள். புதிய இடங்கள் வசதியாக இருந்தாலும், வயதானவர்களுக்கு அது ஒரு விதமான ‘தன்னை இழந்துவிட்டோம்’ என்ற உணர்வைத் தருகிறது. அந்த உணர்வே அவர்களின் வாழ்வுப் பற்றை மெதுவாகக் குறைத்து விடுகிறது. ஆனால், பிள்ளைகளும் உறவினர்களும் அதை ‘பிடிவாதம்’ என்று மட்டுமே பார்க்கிறார்கள்.

வெளியே பார்த்தபோது, மெல்பேனின் இரவு மழையால் மெதுவாக நனைந்துகொண்டிருந்தது. இன்னும் சில வாரங்களில் குளிர்காலம் தொடங்கிவிடும். இந்த நகரில் மழையும் குளிரும் பிரியாத இரட்டையர்கள் போல—ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டு வரும்.

மழைத்துளிகள் கண்ணாடியில் விழ, காரின் வைப்பர் தானாக இயங்கத் தொடங்கியது.

“சில சமயம் வீட்டை யாருக்காவது விற்றிருக்கலாம். அப்படியென்றால்  ‘விற்பனைக்கு’  போர்டு இருக்கும்,” என்றேன்.

“அப்படியானால் போய் பார்த்துவிடலாம்,” என்றாள் அவள்.

அந்த எண்ணம் இருவருக்கும் ஏற்றதாக இருந்ததால், அந்த தெருவில் திரும்பினோம்.

நாங்கள் பலமுறை சென்ற வீடு என்பதால் தயக்கமின்றி உள்ளே சென்று, முன்புறத்தில் காரை நிறுத்தினேன். வீட்டு முன்புறத்தில் ஒரு விளக்கு மட்டும் மங்கலாக எரிந்துகொண்டிருந்தது—அது தனிமையையே வெளிச்சம் போட்டு காட்டுவது போல.

எந்த விற்பனைப் பலகையும் இல்லை.

“இறங்கி பார்த்துவிடலாமா?” என்று கேட்டேன்.

“வேண்டாம். வீடு விற்கப்படவில்லை என்பது தெரிந்துவிட்டதே. அதுவும் இன்னும் முப்பது நாள் கூட ஆகவில்லை… நிர்மலா இங்கேயே இருந்தால்?”

அவள் குரலில் இப்போது நகைச்சுவை குறைந்து, பயம் கலந்து இருந்தது.

“அது எல்லாம் கதைகள்,” என்றேன். “இவ்வளவு தூரம் வந்த பிறகு வெறுமனே போய்விடலாமா?”

“நான் வரமாட்டேன். இப்போது இறங்கி என்ன செய்யப் போகிறீர்கள்?”

“பின்புறம் சென்று எலுமிச்சை பழம் பறித்துக் கொண்டு வருகிறேன். வந்ததற்காவது ஒரு பயன் இருக்கட்டும்.”

“அப்படியானால் நீங்கள் போங்கள். நான் காரிலேயே இருப்பேன்.”

“உங்களுக்குத்தானே உறவினர்? நீங்கள்தானே பார்க்கலாம் என்றீர்கள்?”

“அது சும்மா சொன்னது. நீங்கள் இதை இவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கவில்லை… எனக்கு பயமாக இருக்கிறது.”

நான் சிரித்தபடி, “சரி, நான் மட்டும் போய்விட்டு வருகிறேன்,” என்று சொல்லி கைப்பேசி லைட்டை ஏற்றி இறங்கினேன்.

அந்தச் சமயம், காரின் கதவு உள்ளிருந்து பூட்டப்பட்ட சத்தம் தெளிவாகக் கேட்கப்பட்டது.

மனைவியின் பயத்தை நினைத்து சிரித்தபடி பின்வாசலை மெதுவாகத் திறந்தேன். அது பூட்டப்படாமல் இருந்தது.

பின்வளவுக்குள் சென்றபோது, இரண்டு அங்குல உயரத்திற்கு புல் வளர்ந்திருந்தது. நிர்மலா இருந்தபோது இந்த இடம் எப்போதும் சுத்தமாக இருந்தது. அந்த அளவுக்கு சுத்தம் சில நேரங்களில் நம்மையே பயமுறுத்தும்.

எலுமிச்சை மரம் வேலியோரத்தில் சற்றே சாய்ந்து செழித்திருந்தது. இரண்டு பழங்களைப் பறித்துக்கொண்டு திரும்பப் போகும் வேளையில்—

“ஏன் இரண்டு மட்டும்? இன்னும் பறித்துக்கொள்ளலாமே…”

அந்தக் குரல்.

நான் திரும்பிப் பார்த்தேன்.

நிர்மலா—நான் இறுதியாக பார்த்த அதே உடையில்—சிவப்பு பாவாடை, வெள்ளை சட்டை, மூக்குக்கண்ணாடி—இருட்டிலும் தெளிவாக நின்று சிரித்துக்கொண்டிருந்தார்.

என் உடல் உறைந்தது. இதயம் தொண்டைக்குள் ஏறியது போல. கால்கள் தளர்ந்தன. வேலியைப் பிடித்துக் கொண்டேன்.

“உங்கள் மனைவி?”

“காரில்தான்… பயந்து.”

“நான் யாரையும் தின்பதில்லை. அழைத்து வாருங்கள்.”

அந்த குரல்… பழக்கமானது. அமைதியானது.

“நான் மட்டும் வந்தேன்… எலுமிச்சை எடுக்க…”

“அதை மட்டும் தர முடியாது.”

“ஏன்?”

அவர் மெதுவாகக் கூறத் தொடங்கினார்.

கணவன் சந்திரனின் அஸ்தி, கங்கை, மீண்டும் வந்த பெட்டி… அதில் மீதமிருந்த சாம்பல்…

அதை யாரிடமும் சொல்ல முடியாத குற்ற உணர்வு…

அதை இந்த மரத்தின் அடியில் புதைத்தது…

“அதனால் இந்த மரத்தின் காய்களை நான் எடுக்கவும் முடியாது… யாருக்கும் தரவும் முடியாது…”

அவர் குரலில் ஒரு மெதுவான பிடிவாதமும், துக்கமும் கலந்திருந்தது.

“பிறகு இந்த வீடு விற்கப்பட்டால்?” என்று கேட்டேன்.

அவர் சிரித்தார்.

“இந்த மரம் காய்க்காமல் செய்ய எனக்குத் தெரியும்…”

அந்தச் சிரிப்பு இருளில் சற்றே  ஒலித்தது

என் கையில் இருந்த இரண்டு எலுமிச்சைகளை மரத்தின் அடியில் வைத்துவிட்டு, வார்த்தையின்றி திரும்பினேன்.

காரில் ஏறியவுடன் மனைவி கேட்டாள்:

“எங்கே எலுமிச்சை?”

“ஒன்றும் இல்லை… பார்த்தேன்… இல்லை…”

காரை ஸ்டார்ட் செய்தேன்.

முன்புற விளக்கின் வெளிச்சத்தில்—

ஒரு நொடி— மூக்குக்கண்ணாடி மட்டும் மின்னியது போல தோன்றியது.

அது உண்மையா?

அல்லது மனப்பிரமையா?

மனிதர்கள் உருவாக்கிய நம்பிக்கைகள்-

அவை ஆவிகளுக்கும் பொருந்துமா?

நன்றி: அம்ருதா

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.