
எழுவைதீவில், துணிப்பையில் பொத்தி வைக்கப்பட்ட வீட்டு உறுதிப்பத்திரம்போல் வீட்டுக்குள் இருந்த எனக்கு, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கக் கிடைத்த காலம் அது. பதினொரு வயதில், ஆறாம் வகுப்பு படிப்பதற்காக எழுவைதீவிலிருந்து நயினாதீவிலுள்ள மாமி வீட்டுக்கு அனுப்பப்பட்டேன். அங்கு தங்கி படித்துவிட்டு, வார இறுதிகளில் வள்ளத்தில் வீடு திரும்புவேன். ஒரு மணி நேரக் கடற்பயணம்.
நயினாதீவில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். தனியாக எதையும் சமாளிப்பது, எதிர்த்து நிற்பது, போராடுவது ஆகியவை அங்கிருந்தே தொடங்கின. அதேபோல் தனித் தென்னைக் கள்ளின் சுவையை முதன்முதலாக அறிந்ததும் அங்கேதான்.
ஒரு மாலை நேரக் கருக்கலில், எங்கள் மாமியின் வீட்டுத் தென்னை மரங்களில் ஒருவர் கள்ளிறக்குவார். அவருடைய பெயர் இப்போது மறந்துவிட்டது. மாமியின் பின்வளவில் இருந்த மூன்று தென்னை மரங்களும் கள்ளுக்கட்டப்பட்டிருந்தன. மரத்திலிருந்து இறக்கிய கள்ளை முட்டியில் நிரப்பி, அடுத்த மரத்தில் ஏறுவதற்காக, அதன் அடியில் வைத்து விடுவார்.
நாங்கள் கீழே விளையாடிக்கொண்டிருந்தபோது, ஏற்கனவே ஒரு முட்டி அங்கே இருந்தது. நானும் எனது மச்சானும், பனையேறியவர் மரத்தின் மேல் இருக்கும்போதே அந்த முட்டியிலிருந்து அரைவாசி கள்ளை எடுத்துக்கொண்டு மேற்கு கடற்கரையை நோக்கிச் சென்றோம்.
நயினாதீவின் மேற்கு கடற்கரை உயரமான பாறைகளால் ஆனது. பாறைகளின் கீழே இருந்தால் மேலிருந்து எவருக்கும் தெரியாது. அங்கே அரைமணி நேரம் அமர்ந்து கள்ளைக் குடித்துவிட்டு, இருட்டிய பிறகு வீடு திரும்பினோம்.
“இந்தத் தறுதலைகள் எங்கே தொலைந்தார்களோ? இன்னும் காணவில்லை!” என்று சொல்லிக்கொண்டே மாமி, புட்டை ஒரு கோப்பையில் போட்டு, அருகில் அரிக்கன் லாம்பையும் வைத்துவிட்டு, அடுத்த வீட்டிற்கு வேறு வேலையாகச் சென்றுவிட்டார்.
நான் குசினியில் ஒரு பலகையில் குந்தியிருந்தபடி புட்டுக் கோப்பையை எடுக்க முயன்றேன். கோப்பை என் கைக்கு வரவில்லை. மறுமுறை முயன்றபோதும் அதே நிலை. கோப்பை தானாகவே விலகிச் செல்வதுபோன்ற உணர்வு. மூன்றாவது முயற்சிக்குப் பிறகே, எழுந்து நின்று அதை கையில் எடுத்தேன்.
அதிகமாக சாப்பிட முடியவில்லை. கோப்பையிலிருந்த பொரித்த மீனையும் பருப்பையும் மட்டும் சாப்பிட்டுவிட்டு, புட்டை நாய்க்குக் கொட்டிவிட்டு உடனே சென்று படுத்துக்கொண்டேன். மச்சானும் அதே நிலையில்தான் இருந்தான் என்பதால் அவனுடன் பேசவில்லை.
நிமிர்ந்து படுத்தபோது, அந்த அறை மட்டுமல்ல, மின்சாரம் இல்லாத நயினாதீவின் முழு வீடும் காற்றாடிபோல் சுழன்றது. குப்புறப் படுத்து தலையைத் தலையணையில் புதைத்துக்கொண்டேன். அன்றுதான் குடியால் வரும் வெறி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டேன். அதன் விளைவாக, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வரையிலும் மதுவிலக்கைக் கடைப்பிடித்தேன்.
பிற்காலத்தில் இடைக்கிடையே குடிப்பது வழக்கமானாலும், அளவோடு மட்டுமே குடித்ததால் ‘வெறி’ என்பது எனக்கு மீண்டும் ஏற்பட்டதில்லை. அதிகபட்சம் தூக்கம் வந்துவிடும். அப்படியான நாட்களில் சியாமளாவுடன் முகங்கொடுத்து பேசாத நாளாகிவிடும்.
முக்கியமாக இந்தியாவில் இருந்த காலத்தில், தனிமையும் வாழ்க்கையின் நோக்கம், குறித்த குழப்பமும் நிறைந்த அந்த மூன்று ஆண்டுகளில், நான் அதிகமாகக் குடித்தேன்.
அவுஸ்திரேலியா வந்த பிறகும் நண்பர்கள் கூட்டத்தால் அந்தப் பழக்கம் தொடர்ந்தது. ஆனால் எப்போதும் எனக்குள் ஒரு கட்டுப்பாடு இருந்தது. இரண்டு நாட்கள் குடித்தால், அடுத்த இரண்டு நாட்கள் குடிக்காமல் இருக்க முடியும். மேலும், நான் குடிக்காமல் இருந்தபடியே குடிப்பவர்களுடன் அமர்ந்து பேச முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது.
ஐம்பது வயதிற்குப் பிறகு கலக்கப்பட்ட (Blended) விஸ்கி குடித்தால் தலைவலி ஏற்படத் தொடங்கியது. அதனால் கலக்கப்படாத தனி விஸ்கி (Single Malt) மட்டுமே குடித்தேன். பின்னர் அதையும் தவிர்த்துவிட்டேன்.
பியரைக் குடிப்பதையும் நிறுத்தினேன். காரணம், அதில் நொதிக்காத மாப்பொருட்கள் அதிகமாக இருப்பதால் இரத்தச் சர்க்கரையை அதிகரிக்கக்கூடும் என்ற எண்ணம். விஸ்கி, பியர், வைன் போன்ற மதுபானங்களின் நொதித்தல் மற்றும் வேதியியல் குறித்து, உயிரித் தொழில்நுட்பத்தில் (MPPSc in Biotechnology) பெற்ற கல்வியின் மூலம் எனக்கு ஓரளவு அறிவு உண்டு.
கடந்த பத்து ஆண்டுகளாக நான் பெரும்பாலும் வைனையே குடித்து வந்தேன். அவுஸ்திரேலியாவில் நல்ல தரமான வைன் மலிவாகக் கிடைப்பதால், இரவு நேரத்தில் இரண்டு கிளாஸ் வைன் குடிப்பது வழக்கமாக இருந்தது.
ஆனால் அதற்கும் ஆப்பு வைக்கப்பட்டது.
கல்லீரல் பாதிப்பு, வயிற்று வீக்கம், தயமின் (Thiamine) குறைவால் மூளைச் சுருக்கம் போன்ற வழக்கமான மதுபானப் பிரச்சினைகள் எதுவும் எனக்கு வரவில்லை. ஆனால் போர்க்களங்களில் பெரிய குண்டுவீச்சு விமானங்களை விட சிறிய ட்ரோன்கள் இப்போது அதிக பாதிப்பை ஏற்படுத்துவது போல, எனது விஷயத்தில் வைனிலுள்ள ஹிஸ்டமின் (Histamine) அமைதியாகத் தாக்கியது.
கடந்த சில மாதங்களாக, வைன் குடித்தால் அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணியளவில் தூக்கம் கலைந்துவிடும். அதன் பிறகு மூன்று மணி நேரம் வரை மீண்டும் தூங்க முடியாது. அப்படிப் புரண்டு புரண்டு படுத்திருக்கும் நேரங்களில் கைபேசியைப் பார்ப்பது வழக்கம்.
சியாமளா, அந்த நேரங்களில் மொட்டையடிக்காத கிருபானந்த வாரியாராக மாறி உபதேசம் செய்வதும் உண்டு. அதன் விளைவாக, இப்போது எப்போதாவது மட்டுமே வைன் அருந்துகிறேன்.
அதையும் விட வியப்பூட்டிய அறிகுறி ஒன்று தோன்றியது. சிறிதளவு வைன் குடித்தாலும் மறுநாள் காலை தொண்டையில் நான்கு ஆந்திரா குண்டு மிளகாய்களைக் கடித்ததுபோன்ற எரிச்சல் ஏற்படும். அது சில மணி நேரம் நீடிக்கும்.
ஒருநாள் வைன் குடித்த பிறகு, அவுஸ்திரேலியாவின் வசந்த காலத்தில் வரும் மகரந்தத் தூள் ஒவ்வாமைக்கு (Hay Fever) பயன்படுத்தும் எதிர்-ஹிஸ்டமின் (Antihistamine) மருந்தை எடுத்தேன். மறுநாள் தொண்டை எரிச்சல் எதுவும் ஏற்படவில்லை.
அதன்பிறகு சிறிது ஆராய்ந்தேன். வைன் நொதிக்கும் போது ஹிஸ்டமின் உருவாகிறது. சாதாரணமாக உடலில் அதை உடைத்து செயலிழக்கச் செய்யும் சில நொதிகள் உள்ளன. ஆனால் அல்கஹோல் அவற்றின் செயல்பாட்டைத் தடுக்கக்கூடும்.
இதனால் உடலில் அதிகரிக்கும் ஹிஸ்டமின், மூளை மற்றும் இதயத்தை விழிப்பூட்டும். அதன் விளைவாக நமது தூக்கம் கலைந்து விடுகிறது. குறிப்பாக அதிகாலை இரண்டு மணி முதல் நான்கு மணி வரையிலான நேரத்தில் இந்த விளைவு அதிகமாக உணரப்படலாம்.
குடியால் மூளைச் சுருங்கலாம், கல்லீரல் பாதிக்கப்படலாம், குடும்பம் சிதறலாம் என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் எனக்கு இப்படிப்பட்ட ஒரு காரணம் வந்து சேரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
எனக்கு சொர்க்கம், நரகம், மறுபிறப்பு போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. பஞ்சமா பாதகங்களில் கொலை, களவு போன்றவற்றைச் செய்ய நினைத்தாலும், இந்த வயதில் அவற்றைச் செய்ய முடியாது. குறைந்தபட்சம் குடியையாவது அனுபவிப்போம் என்று நினைத்தபோது, அதற்கும் உலை வைக்கப்பட்டுவிட்டது.
பலர் சில விஷயங்களைத் தவிர்ப்பதற்கு இப்படிப்பட்ட தனிப்பட்ட காரணங்களும் இருக்கலாம் அல்லவா?
குறிப்பு: இந்த ஹிஸ்டமின் தொடர்பான விளக்கம் எனது வாசிப்பு, அனுபவம் மற்றும் அனுமானத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. இது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மருத்துவ ஆலோசனையாகவும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
பின்னூட்டமொன்றை இடுக