



அடுத்த நாள் காலை பஸ்சில் லா ஸ்பீசியா(La Spezia) கால் மணி நேர ரயில் பயணத்தின் பின்பு ஐந்து கடற்கரை ஊர்களுக்கு (Monterosso, Vernazza, Corniglia, Manarola மற்றும் Riomaggiore) சென்றோம். இவை அக்காலத்தில் முக்கியமான நகரமான மான்ரெஸ்சோயை அடைந்தோம். உள்ளே பெரிய ஊர்: ரயில் நிலையத்திலிருந்து பாதை நேரடியாக கடற்கரைக்கு இறங்குகிறது. அழகான கடற்கரை தொடர்ச்சியாக நடந்தபோது என்னைக் கவர்ந்தது மலைப்பாறையில் செதுக்கப்பட்ட நெப்டியூன் சிலையாகும். ஆரம்பத்தில் கையிலுள்ள சூலத்துடன் நேப்டியூன், இரண்டாம் உலக யுத்தத்தில் குண்டுவீச்சில் சூலத்தையும், கையையும் இழந்த நிலையில், இன்னும் கம்பீரமாகக் காட்சியளித்தது.
போரில் கடவுளருக்கும் அதே கதியே?
சூரியக் குடும்பத்தில் எட்டாவது கோள் ஆனால் ரோமர்களது ஆறு, கடல் மற்றும் எரிமலைக்கு மட்டுமல்ல, குதிரைகளுக்கும் உரிய கடவுளாகும். ஐந்தாயிரம் வருடங்கள் பழமையான கிரிக்கர்களின் பொசிடோன்தெய்வத்தின் ரோமானியப் பதிப்பே நெப்டியூனாகும். கடல் மாலுமிகளது முக்கிய தெய்வமாகும்.
ரோம அரசு இருந்த ஆயிரம் வருடங்கள் இயற்கையின் சக்திகளை( Pagan Gods) தங்கள் தெய்வங்களாக வழிபட்டார்கள். கிரிக்க தெய்வங்களை விட ரோமர்களது தெய்வங்களின் எண்ணிக்கை அதிகமானவை . நாங்கள் இப்பொழுது பாவிக்கும் ஃபுளோரா(Flora) இயற்கையில் உள்ள தாவரங்களைச் சொல்வது: ரோமர்களது முக்கிய தெய்வமாகும் அதேபோல் காட்டு விலங்குகளுக்கு ஃபோனா(Fauna) என்ற பெண் தெய்வம் உண்டு. கதவு, பிணைத்தல், படலை எல்லாவற்றிற்கும் தெய்வங்கள் உள்ளது. நுழைவாசலின் தெய்வம் ஜானா: அதனாலே ஜனவரி என்ற பெயர் வந்தது – புதிய வருடம் ஜனவரி மூலம் உள்ளே நுழைக்கிறது. விவசாயத்திற்கு கைத்தொழில்கள் ஒவ்வொன்றிற்கும் கடவுள் உண்டு. இதற்கப்பால் தெய்வங்களுக்கு மிருகப்பலிகள் பலிகள் கிடைக்கும். . பன்றிகள் வெட்டப்பட்டுப் படைக்கப்படும். தெய்வங்கள் மனித உருவிலானவை. அவைகளுக்கும் எங்களைப்போல் கோபம், காதல் இரக்கம் என்ற குணங்கள் ஏற்படும்
இந்த ரோமர்களின் மதத்தில், இந்து மதம்போல் சடங்குகள் உண்டு. மேலும் சடங்குகள் ஊர் கூடி நடத்தப்படவேண்டும். ஓரே வித்தியாசம்: தியானம் தவம்போல் அகவணங்கங்கள் இல்லை. புறம் சார்ந்த வழிபாடல்கள் ஒவ்வொரு ஊரிலும் உள்ளது அதை ஒவ்வொரு ஊருக்கும் உள்ள மதத் தலைவர் மேற்பார்வையிடுவார்.
மான்ரெஸ்சோ கடற்கரையிலிருந்து மற்றைய மூன்றுக்கு நகரங்களுக்கு நடந்தும் போகலாம் ஆனால் நாங்கள் ரயிலில் போனோம் .மலை உச்சியிலுள்ள கோனிலியா (Corniglia) என்ற நகரத்திற்கு நடந்து போக முயன்றபோது எங்களுடன் அமெரிக்காவிலிருந்து வந்த எங்கள் வயதான தெலுங்கு தம்பதிகள் சேர்ந்து கொண்டார்கள். இறுதியில் அவர்கள் தங்கள் முயற்சியைக் கையை விட நாங்களும் கையை விட்டோம்
ஆரம்பத்தில் இவை ஐந்தும் மீன்பிடி கிராமங்களே – கடற்கரைகள் சுத்தமாகவும் அழகாகவும் உள்ளன. அங்கிருந்த வீடுகள் பல வண்ணங்களில் இருந்தன. அதே நேரத்தில் மீனவர்கள் தங்களுடைய தொழிலைச் செய்கிறார்கள். தொடர்ச்சியாக நடந்து கால் முடியாது என கெஞ்சியது . இறுதியில் ஒரு கைத்தடியை வாங்கி கால்களுக்கு உதவினேன் .
அடுத்த நாள் எங்கள் பயணம் போலோனா என்ற புரதன நகரமாக இருந்தது. போலோனா நகரில் நடக்கத் தொடங்கியபோது, கடைகளின் முன்பான கொரிடோர் ஒரு கிலோ மீட்டர் நடந்தோம், ஆனால் பல பிரிவுகளாக அமைந்துள்ள கொரிடோரின் மொத்த நீளம் 62 கிலோ மீட்டர் ஆகும். கொரிடோர்கள் பல வளைவுகள் கொண்டது. இங்கு கொரிடோர்கள் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஒரு பக்கம் கடைகள், மறுபக்கம் பாதை என்பவை உள்ள கொரிடோர்கள் யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்டது. இந்த நகரத்தின் இவை முக்கியமானவை. நாங்கள் போனபோது மழை தூறியது, கலாச்சார முக்கியத்துவத்துடன் பாதுகாப்பாக நகர் முழுவதும் பார்க்க உதவுகிறது.



இந்த கொரிடோரில் நடந்து போகும்போது, கொஞ்சம் நிதானித்து நின்று படம் எடுப்போமென்று தயங்கியபோது ஒரு இளம்பெண் என் கையை பிடித்து இழுத்தார். சியாமளா பார்ப்பதற்கு முன்பாக என் கையை இழுத்தபடி விலகிச் சென்றேன். பெரும்பாலும் பணம் கேட்பதற்காக என நினைத்தேன்: பல நாடுகளிலிருந்து வந்த அகதிகள் இங்கும் உள்ளார்கள்.
அப்படியே சென்று நகரின் மத்திய இடத்தில் நீர் நிலையில் அழகான நெப்டியூன் சிலை, தேவதைகள் சூழ இருந்தது . அதற்கப்பால் தேவாலயங்கள் உயரமான இரு மணிக் கோபுரங்கள், நகரசபை கட்டிடங்கள் உள்ளன. அருகருகே பல கடைகள் என அந்த இடம் மக்கள் திரளாக இருந்தது. பொலோனாவில் பல முக்கியமான அருங்காட்சியங்கள் உள்ளது.
எட்டாம் வகுப்பில் படித்தபோது தெரிந்த கரிபால்டி என்ற பெயர் நினைவுள்ளது. அந்தப் பெயரைக் கறுப்பாக இருந்த சகமாணவனை அழைப்பதற்குப் பாவித்தது நினைவு வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் சேகுவாரா எப்படி மற்றைய நாடுகளின் சுதந்திரத்திற்குப் போராடியது போல 19 ம் நூற்றாண்டில் கரிபால்டி நகர அரசுகளாக இருந்த இத்தாலியை ஒன்றாக்க ஆயுதமெடுத்து போராடியவர். பிற்காலத்தில் மரணதண்டனை கிடைத்தபோது தென் அமரிக்கைக்குத் தப்பிச்சென்று அங்கு பிரேசில் உருகுவே நாடுகளுக்காக 14 வருடங்கள் ஆயுதப்போராட்டம் செய்தவர்.
இத்தாலியை ஒன்றிணைக்கப் போராடிய கரிபால்டியின் (Giuseppe Gaibaldi) சிலையைப் பார்த்தபோது பல காலத்தின் பின் பார்த்த நண்பரைப் பார்த்தால் ஏற்படும் உணர்வை அடைந்தேன்.
பொலானா இத்தாலிய உணவிற்கு பேர் போன இடமாகும் என்பதால் அங்கு உண்பதற்காக ஒழுங்கு பண்ணியிருந்தார்கள். ஃபெரேராரி(Ferrari) மற்றும் மசராட்ரி (Maceratti) போன்ற வேகமான கார்கள் தயாரிக்கும் இடங்கள் பொலானா நகரிலிருந்து அதிக தூரத்தில் இல்லை என அறிந்தேன். பொலானா நகரில் நான் பார்க்கவிரும்பி அரைவாசி தூரம் நடந்துவிட்டு நேரமில்லை எனத் திரும்பியது 1088 ஸ்தாபிக்கப்பட்ட ஐரோப்பாவின் முதல் பல்கலைக்கழகமாகும்.
பின்னூட்டமொன்றை இடுக