விழுந்த பிறகே வந்த அறிவு.

சமீபத்தில் எனது பத்து வயதுப் பேரன் வீட்டுக்குள் ஒரு பந்தை என்னை நோக்கி உதைத்தான். அதைப் பார்த்த நான், அந்தப் பந்தை காலால் ஓங்கி அடிக்க, காலைத் தூக்கி உதைக்க முயன்றபோது திடீரென நிலை தடுமாறி தரையில் விழுந்துவிட்டேன். அதிர்ஷ்டவசமாக அது மரத்தரை. இல்லையெனில் விளைவு வேறாக இருந்திருக்கலாம்.

நான் விழுந்ததைப் பார்த்த பேரன் பதற்றமடைந்தான். பள்ளியில் கற்றிருந்த முதலுதவி அறிவு நினைவுக்கு வந்திருக்க வேண்டும்; உடனே எனக்கு செயற்கை சுவாசம் (CPR) அளிக்கத் தயாரானான். அந்த நேரத்தில் சியாமளா ஓடிவந்து, “தலையில் அடிபட்டதா?” என்று கேட்டார்.

“இல்லை, தோளில் மட்டும் தான் அடி. எங்கள் வீட்டு தரை மரமாக இருப்பதால் தப்பித்தேன்,” என்றேன். ஆனால் உடனே எழுந்திருக்க முடியவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகே மெதுவாக எழுந்தேன்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக வாரத்திற்கு குறைந்தது மூன்று நாட்கள் உடற்பயிற்சி செய்கிறேன். மேலும் மூன்று நாட்களாவது மூன்று கிலோமீட்டருக்குக் குறையாமல் நடப்பேன். பல ஆண்டுகளாக என் உடல் எடையும் பெரிதாக மாறவில்லை. இரத்த அழுத்தமும் நீரிழிவும் இருந்தாலும் ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளன. வீட்டிலேயே வைத்தியர் இருப்பதால் பரிசோதனைகளும் தொடர்ந்து நடைபெறும். உடற்பயிற்சி முடிந்து வந்தபின் என் குளுக்கோஸ் அளவு 5.1–5.4 mmol/L ஆகவே இருக்கும்.

இந்தச் சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்பு உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து வெளியே வந்தபோது ஒரு நடுத்தர வயது பெண்மணி என்னை அணுகினார்.

“நீங்கள் நவீன இயந்திரங்களில் பயிற்சி செய்வதைப் பார்த்தேன். மிகவும் நன்றாகச் செய்கிறீர்கள். உங்களைப் பார்த்து நானும் ஊக்கமடைந்தேன்,” என்றார்.

வீட்டிற்கு வந்து இதை சியாமளாவிடம் சொன்னேன்.

அவர் உடனே, “நீங்கள் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டவர் என்று அவளிடம் சொன்னீர்களா?” என்று கேட்டார்.

“நன்றி” என்று மட்டுமே சொன்னேன் என்றேன், சிரித்தபடி.

அரை நூற்றாண்டு கடந்த தாம்பத்திய வாழ்க்கையிலும் பெண்களின் இயல்பு மாறுவதில்லை என்பதற்கான இன்னொரு சான்று அது.

சமீபத்தில் சிட்னியில் வசிக்கும் என் நெருங்கிய நண்பர், என்னைவிட இரண்டு வயது மூத்தவர், தனது முன்தோட்டத்தில் வேலை செய்யும்போது விழுந்து தலையில் அடிபட்டார். மூளைக்குள் இரத்தக் கசிவு ஏற்பட்டது. அவசர சிகிச்சையால் உயிர் காப்பாற்றப்பட்டாலும், மருத்துவமனையிலிருந்து வெளியே வர பல மாதங்கள் பிடித்தன. சிறுவயதிலிருந்து விளையாட்டு வீரர்; அறுபத்தைந்து வயது வரை கிரிக்கெட் விளையாடியவர். தொடர்ந்து உடற்பயிற்சி செய்த திடகாத்திரமான மனிதர்.

எனக்குத் தெரிந்த மற்றொரு வைத்தியர் இலங்கையில் வீட்டில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிர் தப்பினாலும், மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் நினைவாற்றலின் பெரும்பகுதியை இழந்தார். அவரைப் பார்த்தபோது மிகவும் கவலையாக இருந்தது.

இவர்களும் நானும் விழுந்ததற்கு காரணம் உடல் பலவீனம் அல்ல. பெரிய நோய்களும் அல்ல.

அப்படியானால் ஏன் விழுகிறோம்?

உடலின் நரம்பு மண்டலத்திற்கும் தசைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மெதுவாகக் குறைவதால்தான். இதனை Neuromuscular Coordination குறைபாடு என்று கூறலாம்.

மூளையும் முதுகுத்தண்டின் நரம்புகளும் தொடர்ந்து தசைகளுக்கு கட்டளைகள் அனுப்புகின்றன. அந்தத் தொடர்பு வயதுடன் சற்றுச் சற்றாக மங்கும்போது, நாம் எதிர்பாராத அசைவுகளைச் சரியாகக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. அதன் விளைவாக நிலைதடுமாறி விழும் அபாயம் அதிகரிக்கிறது.

வயது ஆகும்போது நரை, ஞாபக மறதி, உடல் பலக் குறைவு போன்றவை கண்களுக்கு தெரியும். ஆனால் இரவில் கள்ளன் வருவது போல அமைதியாக நம்மை அணுகுவது இந்த நரம்பு–தசை ஒருங்கிணைப்புக் குறைபாடுதான்.

இதனை உணர்வதற்கு என் பேரன் ஒரு பந்தை உதைக்க வேண்டியிருந்தது. அதன் விளைவாக ஏற்பட்ட தோள்வலி இப்போது எனக்கு ஒரு நல்ல ஆசானாக மாறியுள்ளது.

பலர், நான் பயணம் செய்யும்போது மிகவும்  ‘கவனமாக நட’ என்பார்கள் . நான் அவர்களிடம் கூறுவது:

“புள்ளிவிவரங்களைப் பார்த்தால், வயதானவர்கள் அதிகமாக விழுவது வீடுகளில்தான். குறிப்பாக படுக்கையறை, குளியலறை, வழுக்கும் தரைகள், பல படிகள் கொண்ட வாசல்கள் — இவை அனைத்தும் இரகசியமான மரணப்பொறிகள்.”

சமீபத்தில் நான் விழுந்த சம்பவத்தை உடற்பயிற்சிக் கூடப் பயிற்சியாளரிடம் கூறினேன். அவர் ஒரு கேள்வி மட்டுமே கேட்டார்:

“உங்களால் அரை நிமிடம் ஒற்றைக் காலில் நிற்க முடியுமா?”

முயற்சி செய்தேன். முடியவில்லை.

அப்போதுதான் எனக்குப் புரிந்தது. பந்தை உதைக்கும் போது உடல் எடையை மற்றொரு காலில் முழுமையாகச் சமநிலைப்படுத்தியிருக்க வேண்டும். மிகவும் எளிய விஷயம். ஆனால் நான் அதைச் செய்ய முடியவில்லை.

 வீட்டிற்கு வந்து சியாமளாவிடம் அதே கேள்வியைக் கேட்டேன். அவரால் சுலபமாக ஒற்றைக் காலில் நிற்க முடிந்தது. அதுவும் செயற்கை இடுப்பு பொருத்தப்பட்ட நிலையில்!

அதற்குக் காரணம் அவர் தொடர்ந்து யோகாசனம் செய்வதுதான். யோகாசனம் , நரம்புகளுக்கும் தசைகளுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துகிறது.

மகாபாரதத்தில் அர்ஜுனன் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்து பாசுபதாஸ்திரத்தைப் பெற்றதாகப் படித்திருக்கிறோம். மாமல்லபுரத்தில் உள்ள “அர்ஜுனன் தவம்” சிற்பத்தையும் பார்த்து அதன் உள்விடயத்தை சிந்திக்காது கடந்துவிட்டேன் . ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக நின்றபடியே உள்ளாடை அணியும்போது ஏற்படும் சிறிய தடுமாற்றங்களைக் கூட நான் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளவில்லை.

இரண்டு பல்கலைக்கழகப் பட்டங்கள், மருத்துவ அறிவு, பொது அறிவு என நான் எவ்வளவு பெருமை கொண்டாலும், வாழ்க்கையின் சில பாடங்கள் அனுபவத்திற்குப் பிறகே புரிகின்றன.

உலகத்தில் மிக முக்கியமான உண்மை இதுதான்:

மனிதன் அறிவால் வாழ்கிறான் என்று நாம் நினைக்கிறோம். உண்மையில் அனுபவங்கள்தான் அவனை அறிவாளியாக்குகின்றன. பல பாடங்கள் புத்தகங்களில் இல்லை; விழுந்த பிறகே கற்றுக்கொள்ளப்படுகின்றன.

One response to “விழுந்த பிறகே வந்த அறிவு.”

  1. Letchumanan Murugapoopathy அவதார்
    Letchumanan Murugapoopathy

    Vanakkam very good article. Thanks for sharing 👍

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.