இத்தாலியப் பயணம்:5

ஃபுளோரன்ஸ் நகரம்

இத்தாலியின் வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் முக்கியமானவர்கள் பிறந்த நகரம் ரஸ்கனிலுள்ள ஃபுளோரன்ஸ் நகரம்தான். நவீன அரசியல் ராஜதந்திரி எனப் புகழப்படும் பிரின்ஸ் மக்கியவில்லி, ஓவியம் மற்றும் சிற்பக்கலை எனப் புகழ் பெற்ற மைக்கேலஞ்சலோ, அதேபோல் மேதை இலியனாடோ டாவின்சி மற்றும் கவிஞர் தத்துவமேதை டான்டே ஆகியவர்கள் அவதரித்த நகரமே இது. விஞ்ஞானி கலிலியோ பீசா நகரத்தில் பேராசிரியராக இருந்தார்; ஆனால் கத்தோலிக்க தலைமைப்பீடத்திற்குப் பயந்து வந்த இடம் இதுதான். ஃபுளோரன்ஸ் நகரம் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தோற்றுவாயாக இருந்தது.

இதுவரை நான் அரையும் குறையுமாகக் கேட்டு, படித்த இடத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோது, அங்கு ஒரு பகல் மட்டுமே அலையமுடியும் என்பது, பலநாள் பட்டினியானவனுக்கு ஒரு கவளம் சோறு மட்டும் பிச்சையாக கிடைத்ததுபோலிருந்தது.

ஆணோ (Arno) என்ற நதி புளோரன்ஸ் நகரத்தின் மத்திய பகுதியில் ஓடுகிறது. நதியின் இரு பக்கமும் கடைகள் மற்றும் வீடுகள் அலங்கரிக்கப்பட்டன. ஆரம்பத்தில் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் இருந்தனர்; இந்த இடம் மறுமலர்ச்சி காலத்தில் கலைஞர்கள் வாழும் இடமாக மாறியது. தற்போது முக்கியமாக உல்லாச பயணிகள் வருவதற்கான இடமாகியுள்ளது.

ஆணோ ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலம் ( Ponti Vechchio)மிகவும் பழமையானது: பெயரே பழைய பாலம் என்பதாகும்   ரோம் மன்னன் ஏட்ரியனால் 1900 வருடங்கள் முன்பாக கட்டப்பட்டது . இது  வெள்ளம் படையெடுப்புகள் என்பவற்றைக் கடந்து மட்டுமல்ல, இரண்டாம் உலக போரில் வீசப்பட்ட குண்டுகளிலிருந்து தப்பித்தது .  இப்போது வரலாற்றில் முக்கிய இடமாகும்.  இந்த பகுதி மறுமலர்ச்சி காலத்தின் தொட்டிலாக யுனெஸ்கோ நிறுவனம் பாதுகாக்கின்றது.

அந்த பாலத்தின் மீது நடந்தபோது எல்லா இடங்களிலும் நகைக்கடைகள் மட்டுமே இருந்தன. தற்போது, மற்றைய கடைகளை அகற்றி நகைக்கடைகளை மட்டும் அனுமதித்துள்ளனர். பாலத்தின் மேலாக வாகனங்கள் போவது தடுக்கப்பட்டுள்ளது.

ஃபுளோரன்ஸ் நகரின் மத்திய பகுதியில்  புகழ்பெற்ற சாந்தா மரியா (Santa Maria Novella) தேவாலயம் அமைந்துள்ளது.  அதனருகே அருங்காட்சியகம் அதன் முன்பாக ஞானஸ்நானம் பெறுவதற்கான  தேவாலயம் உள்ளது . அக்காலத்தில்  ஞானஸ்நானம் பெற்றவர்கள் மட்டுமே தேவாலயத்துள் செல்லமுடியும் என்ற சட்டம் இருந்தது.

நகரின் மத்திய பகுதியில்  சுற்றிப் பார்த்தபோது அந்த பகுதியே ஒரு அருங்காட்சியகமாக காட்சியளித்தது. அருங்காட்சியகத்து வாசலில் டேவிட்டின் பளிங்குச் சிலை வைக்கப்பட்டிருந்தது. எனது பக்கத்தில் வந்த சீன பெண் (அவுஸ்திரேலியா) ‘அது ஒரு மாதிரி, மைக்கலஞ்ஞலோவின்  புகழ்பெற்ற டேவிட் உள்ளே இயற்கையின் தாக்கத்திற்கு உட்படாது உள்ளே வைக்கப்பட்டுள்ளது ‘ என்றாள்

மதியத்தில் உள்ளே போவோமா என யோசித்தபோது அருங்காட்சியகத்தின் வாசலில் பெரிய வரிசை நின்று கொண்டிருந்தது. சாப்பிட்டு வருவோம் என்று நினைத்து மதிய உணவும் சாப்பிடப் போய்விட்டு வந்தபோது அந்த வரிசை நகரவில்லை. எங்களுக்கு  அரை நாள் மட்டுமே உள்ளது. நேரத்தை சிக்கனமாக செலவிட வேண்டும்.

காலையில் வெளியே நின்று பார்த்த அழகிய பளிங்கு முன்பக்கத்தைக் கொண்ட சாந்தா மரியா தேவாலயம் உள்ளே செல்ல நினைத்து அங்கு சென்றபோது பிரவேச கட்டணம் அரைவிலையில் உள்ளது என அங்குள்ள பெண் சொன்னதும் உள்ளே சென்றோம். 14 நூற்றாண்டில் கட்டப்பட்ட தேவாலயத்தின் உள்ளமைப்பு அழகாக இருந்தது. 200 வருடங்கள் எடுத்துக் கட்டப்பட்ட கடடிடத்துள்ளே இத்தாலியின் மறுமலர்ச்சிக் காலத்தது ஓவியங்கள், சிற்பங்கள் கண்களையும் இதயத்தையும் மீட்டியபடி இருந்தன.இங்கு உள்ள ஓவியங்களை 13 வயதில் உள்ள மைக்கேலஞ்லோ பார்த்து படித்ததாகவும் பிற்காலத்தில்  “எனது காதலி”  கூறியதாகஅறிந்தேன். பல அருங்காடசியங்களை பார்க்கத் தவறியபோதும் இந்ததேவாயத்துள் போகக் கிடைத்தது அதிஸ்டமே. 

இதை விடத் தேவாலயத்தின் அருகே இருந்த கட்டிடத்துள் நுழைந்தபோது எனக்கு இதுவரை அறியாத அதிசயம் காத்திருந்தது. இந்த சாந்தா மரியா தேவாலயம் ஒரு டொமினிக்கன் பிரிவு சேர்ந்த தேவாலயம். இந்த தேவாலய பிரிவு சேர்ந்தவர்கள் இறந்தபோது இவர்களின் மையங்கள் இங்கு புதைக்கப்பட்டிருந்த இடம். இதைத் தேவாலயத்தின் கீழறை (Cloister of the Dead) என அழைக்கின்றனர். ஆரம்பத்தில் இந்த தேவாலயத்திற்கு அருகே அடக்கம் செய்யப்பட்ட சவக்காலை வெள்ளம் பெருக்கால் அழிவடைவதைத் தொடர்ந்து, இங்கு மீண்டும் அமைத்ததாகவும், சுவரோவியங்கள் மற்றும் அலங்கார வளைவுகளும் கொண்ட அழகான இடமாக தற்போது மக்கள் பார்வைக்கு வைத்திருக்கின்றன. அக்காலத்தில் ஃப்ளோரன்ஸ் நகரில் நடமாடிய முக்கியமானவர்களின் பெயர்களை அங்கு பார்க்க முடிந்தது.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.