இத்தாலியப் பயணம்:4

சீயன்னா என்று அழைக்கப்படும் இத்தாலிய நகரம் பல நாட்கள் தங்கி ரசிக்க வேண்டியது; ஒரு நாளில் அதன் சிறப்பை முழுமையாக அனுபவிக்க முடியாது. கோட்டை சுவரால் பாதுகாக்கப்பட்ட முழு நகரமும் வரலாற்றுப் பொக்கிஷமாக யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படுகிறது. ஒரு நகர அரசாக   பல நூற்றாண்டுகள் வரலாற்றைக்கொண்டது.  ஃபுளோரன்ஸ் நகரத்துடனும் சீயன்னா நகர அரசு தொடர்ந்து சண்டை நடந்தது.

வழிகாட்டி,  ஐரோப்பாவில் முதலாவது வங்கி வர்த்தகம் இங்கு தொடங்கியது என்று சொல்லிவிட்டு, பல நூறு வருடங்களாக தொடர்ந்து இயங்கி வரும் வங்கியின் கட்டிடம் ஒன்றைக் காட்டினார் . நகர் உள்ளே பேருந்துகள் செல்லாததால், வெளியிலிருந்து நடந்தே நாங்கள் பயணம் தொடங்கினோம்.

முதலில் சென்றது “கத்தரின் பசிலிக்கா” எனப்படும் தேவாலயம்.

உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. அதனால், கண்களால் மட்டுமல்ல, மனதாலும் அந்த இடத்தை ஆழமாக ரசித்தேன். காமெரா வழியாகப் பார்க்கும் அனுபவத்தை விட, நேரடியாகக் கண்களால் பார்க்கும் கவனிப்பு நீண்ட காலம் நினைவில் நிலைத்திருக்கும். அந்த இடம் ஒரு விதத்தில் பயங்கரமான திரைப்படத்தைப் பார்க்கும் எதிர்பார்ப்பைத் தூண்டியது.

அங்கு புனித கத்தரின் (St. Catherine of Siena) என்ற ஆசீர்வதிக்கப்பட்ட பெண்ணின் தலை இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. எகிப்திய மம்மிகளைப் பார்த்த அனுபவமுள்ள எனக்கும், இது இன்னும் தத்துரூபமாகத் தோன்றியது: ஒருவரின் தலைவை வெட்டியபின் அதைக் காணும் அனுபவம் போல. அதேபோல், நகத்துடன் விரலும் பாதுகாக்கப்பட்டிருந்தது; அந்த விரல் இன்னும் இரத்த ஓட்டம் கொண்டது போல மென்மையான சிவப்பு நிறத்தில் இருந்தது. இந்தத் தலை எக்ஸ்ரே மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அது உண்மையானது என்பதை நிரூபித்ததாக நான் அறிந்தேன்.

சீயன்னாவைச் சேர்ந்த கத்தோலிக் பெண்ணான (St Catherine of Siena) இவர் ரோமில் இறந்தபின், அவரது உடல் பகுதிகள் மீண்டும் சீயனாவிற்கு கொண்டு வரப்பட்டு இந்த தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

 யார் இந்த கத்தரின்?

1347 ஆம் ஆண்டு சீயான்னாயில் பிறந்த இவர், ஏழு வயதிலேயே கடவுளைக் கண்டதாகக் கூறப்படுகிறது, மேலும் அவர் கடவுளையும் அவரது சீடர்களையும் மனதில் அனுபவித்ததாகவும். (சில கிராம பெண்களின் மனங்களில் கடவுளின் இறக்கம் போன்ற அனுபவம்.) இதன் விளைவாக, அவர் திருமணத்தை நிராகரித்து, குடும்ப வாழ்வைத் துறந்தார், ஆனால், கிறிஸ்துவுடன் “மாயமான மணவாழ்க்கை” வைத்து கொண்டதாக உணர்ந்தார். மேலும், இயேசுவின் ஆண்குறியின் முன் தோலை மோதிரமாக அணிந்திருப்பதாகவும், அது மற்றவர்களுக்குத் தெரிவதில்லை என்றும் கூறினார்.

கன்னியாஸ்திரி மடத்தில் சேர்ந்த அவர், ஆரம்பத்தில் சாதாரண பெண்ணாக இருந்தாலும், தனது அறிவால் போப்பின் நம்பிக்கையைப் பெற்றார். நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் சேவை செய்தார். அக்காலத்தில் ஐரோப்பாவில் பிளேக் நோய் பரவி, மக்களின் மூன்றில் ஒருவரை பலி எடுத்திருந்தது.

இவர், சண்டையிடும் நகர அரசுகளுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டார். பயணங்களும், எண்ணற்ற கடிதங்களும் மூலம் சமாதானத்தைக் கோரினார். இவ்வாறு சமாதான தூதுவராக செயல்பட்டதால், அவர் கொலை முயற்சிகளையும் எதிர்க்கொண்டார். பெண்களுக்காக கன்னியாஸ்திரி மடங்களையும் நிறுவினார்.

அந்த காலத்தில் இத்தாலி பல சிறு அரசுகளாக பிரிந்திருந்தது; அங்குள்ள கர்தினால்கள் பலரும் போப்பின் தலைமையை ஏற்க மறுத்தனர். இந்த நிலையிலும் கத்தரின், போப்பின் சமாதான தூதுவராக செயல்பட்டார். இறுதியாக, தனது கொள்கைக்காக உண்ணாவிரதத்தை ஆயுதமாகக் கொண்டு போராடி, 33 வயதில் உயிரிழந்தார். உண்ணாவிரதத்தை எதிர்ப்பின் ஒரு வடிவமாகப் பயன்படுத்தியவர்களில் அவர் ஒரு முன்னோடி.

அவரது பல கடிதங்கள் பிரான்ஸ் மற்றும் ஹங்கேரி அரசர்களுக்கு எழுதப்பட்டவை; சமாதானத்தை கேட்டு எழுதப்பட்டவையாகவே அவை இன்று முக்கிய வரலாற்று ஆவணங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன.

பல ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த தேவாலயத்தை விட்டு வெளியேறும்போது, இதுவரை அறியாத ஒரு புதிய உண்மையை அறிந்த திருப்தியுடன் வெளியேறினேன்.

அதன் பின்பு நகரத்தின் மத்தியில், முன்றல் எனப்படும் மக்கள் கூடும் பகுதி, சிப்பி வடிவத்தில் சுற்றியுள்ள கட்டிடங்களுக்கு இடம் பெற்றிருந்தது. இதில் மீனின் முதுகுத் தண்டு வடிவத்தில் அழகாக செங்கல் பதிக்கப்பட்டிருந்தது. எதிரில் நகராட்சி மண்டபம் உயரமான மணிக்கோபுரம் அடங்கியது, அதற்குக் கீழே நீர்த்தடாகம் இருந்தது. 600 வருடங்களுக்கு பழமையான அந்த நீர்த்தடாகத்தின் சுவரில் ஓய்வாக இருந்தபோது, தாய் ஓநாயின் சிற்பம் இருந்தது. ரோம சாம்ராட்சியத்தை உருவாக்கியவர் ரோமுலஸ் (Romulus) மற்றும் சகோதரன் ரெமஸ் (Remus) ஓநாயிலே பால் குடித்து வளர்ந்த புராதனக் கதையின் நிகழ்வு: இந்த சிற்பத்தை ரோமின் அனைத்து பகுதிகளிலும் பார்க்க முடியும். 

நகராட்சி மண்டபம் வளைவுகள் கொண்ட அழகான கட்டிடம். உள்ளே அருங்காட்சியகம் உள்ளது, அங்கு பல அழகான ஓவியங்கள் தற்போது உள்ளன.

 இந்த மூன்றில் வருடங்களுக்கு இருமுறை குதிரைப் பந்தயம் நடை பெறுகிறது அது மிகவும் பிரபலமானது. 13-ஆம் நூற்றாண்டில் இந்த நகரத்தின் பாதுகாப்பிற்காக 17 இராணுவப் பிரிவுகள் இருந்தன; அவைகளுக்குள் இந்த குதிரைப் பந்தயம் ஒரு போட்டி நடவடிக்கை என இருந்தது. அது இன்னும் முக்கிய நிகழ்வாக தொடர்கிறது. 

சீயன்னாவை தொடர்ந்து போனபோது, புனித மேரியின் அழகான பளிங்கு கல்லான முகப்பு கொண்ட தேவாலயம் இருந்தது. இதுவரை நான் பார்த்த தேவாலயங்களில் இது என்னை மிகவும் கவர்ந்தது – உள்ளே சென்றால் பல ஓவியங்கள் இருந்தாலும் அது நேரம் இல்லை என்பதால்  எங்கள் பயணம் வெளிப்பகுதியுடன் நிறுத்தப்பட்டது.

சிறிது துறையில் ஒரு தேவாலயம் பாதி முடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. தேவாலயங்கள் ஒவ்வொரு நகரத்தின் பணச்செழிப்பையும் கவுரவத்தையும் அறிவிக்கும் கருவியாக இருந்தன. நமது அரசர்கள் கட்டிய கோவில்களும் அதே நோக்கமானவையே.

மேலும் தொடர்ந்து நடந்தபோது மத்திய கால நகர அமைப்பு அழகாக அப்படியே பேணப்படுகிறது. 

சீயன்னாவிலிருந்து ஃபுளோரன்ஸ் போகும் வழியில் ஒரு சிறிய,ஆனால் யுனெஸ்கோ பாதுகாக்கப்பட்ட சிறிய நகரமான சான் ஜிமினானோ (San Gimignano என்ற மலைப்பாங்கிய நகரத்தை பார்த்தோம். இது 1700 ஆண்டுகளுக்கு முன்பே இயங்கும் நகரமாகும். இங்கு பல கோபுரங்கள் உள்ள அழகான நகரம் என்பதால் பல திரைப்படங்கள் (Gladiator, Portrait of a Lady. The English patient ) இங்கே எடுக்கப்பட்டன. மூன்று பக்கங்களும் மதிலால் சுழன்றிய ஒரு குன்றில் இந்த நகரம் அமைந்துள்ளது.து

போட்ரெயிட் ஒவ் லேடி(Portrait of a Lady by Henry James) என்ற திரைப்படம் இங்கு எடுக்கப்பட்டது காரணம் பழய கால படங்களுக்கு செட்டிங் போடாது எடுக்கமுடியும்.  

இந்த பிரதேசம் திராட்சைகள் விளையும் இடம் என்பதால் இங்கு உள்ள ஒரு வைன் தயாரிப்பிடத்திற்கு அழைத்து சென்றார்கள். அந்த வைனரியை நடத்துபவர் தான் ஒன்பதாவது தலைமுறை சேர்ந்தவர் என்றார்.

சியன்னா மற்றும் புளோரன்ஸ் போன் இடங்களிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் வரக்கூடிய இடமானதால் , பலர் ஒரு நாள் சுற்றுலாவாக வருகிறார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.