


அடுத்த நாள் பயணத்தில் இத்தாலியில் புதிய ஒரு நகரத்திற்கு போக நினைத்திருந்த எனக்கு, புதிதான ஒரு நாகரிகத்தை (Etruscan civilization) காணப்போகிறோம் என்று எதிர்பார்க்கவில்லை. அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. இத்தாலியின் மத்திய பகுதியின் மேற்கு பகுதியில் உள்ள பிரதேசம், ரோமின் கலாச்சாரத்திற்கு முற்றிலும் வித்தியாசமானது. மொழி மற்றும் நாகரிகம் வித்தியாசமாக மூன்று ஆயிரம் வருடமாக இயங்கி வந்தவை. தற்போதைய இத்தாலியின் டஸ்கனி மற்றும் உம்பிரியா போன்ற பிரதேசங்களை உள்ளடக்கியது. கிறிஸ்துவுக்கு முன் 500 வருட காலங்களில் ரோமர்களால் உள்வாங்கப்பட்டதால் அவர்களது மொழி மற்றும் நாகரிகம் மறைந்ததுவிட்டது.
இத்தாலியின் மத்திய பகுதியில் நான் பார்த்த நகரங்கள் பல மலை உச்சியில் அமைந்துள்ளன, மத்திய காலத்தில் நகரங்கள் பாதுகாப்புக்காக அப்படி அமைக்கப்பட்டன. கோட்டை சுற்று சுவர்களால் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரமும் தேவாலயங்கள், சந்தைகள், மக்கள்கூடும் நகர மையங்களைக் கொண்டவை. பல நகரங்கள் 500 வருடங்கள் பழமையானவை என்பதால் அவற்றின் வரலாற்றை அறிய தற்போது உல்லாசப் பயணிகள் தேனிகளாக மொய்க்கிறார்கள்.
இந்த பிரதேசத்தில் நாங்கள் சென்ற முதல் நகரம் ஓவியற்டறோ(ORVIETO)
இங்கு ஒரு குன்றின்மேல் ஏறி நகரத்துக்கு சென்றபோது , ஒரு கோட்டை இருந்தது. உள்ளே தொடர்ந்து சென்றபோது, 14ம் நூற்றாண்டில் இருந்து 300 வருடங்களாக கட்டப்பட்ட மேரி மாதாவின் அழகான தேவாலயம் பார்த்தோம். உள்ளே சென்றபோது, அங்குள்ள ஒவியங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. அதைவிட சிற்பங்கள் முக்கியமாக, பழய, புதிய பைபிளின் காட்சிகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. யேசு நாதர் சிலுவையில் இறக்கப்பட்டு மேரியின் மடியில் கிடத்தப்பட்டு இருக்கும் காட்சியும், யேசுநாதர் கண்ணற்றவருக்கு பார்வை கொடுக்கும் நிகழ்வும் என்னைக் கவர்ந்து .
எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் வாழ்ந்த காலத்தில் இந்த ஓவியங்கள் மக்களின் மனத்தில் எவ்வளவு தாக்கத்தை கொடுத்திருக்கும் என்ற சிந்தனையுடன் வெளியே வந்தேன்.
ஐரோப்பாவில் பல இடங்களில் தேவாலயங்கள் உள்ளே பணம் செலுத்தாது போகலாம், ஆனால் இத்தாலியில் நான் சென்றவை எல்லாம் பணம் செலுத்தியே சென்றோம். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் பார்பதற்கு அரிய செல்வங்கள் உள்ளது
ஊரைச் சுற்ற பார்க்கும் போது வீடுகள், பாதைகள், ஆறு நூற்றாண்டுகள் பழமையானவை உள்ளன, இதிலிருந்து பார்க்கும்போது கீழ் திராட்சை விளையும் நிலங்கள் தெரியும்.
அடுத்து நாங்கள் சென்ற சிறிய நகரம் பியன்சா(Pienza)
இந்த நகரம் 1916 ஆம் ஆண்டின் முதல் யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் நகரமாக உள்ளது. சுற்றி வர திராச்சை தோட்டங்கள் சுற்றியிருக்கும் நிலப்பரப்பில், ஒரு குன்றின் மேல் அமைந்துள்ள இந்த நகர், கோட்டைச் சுவர்களால் பாதுகாக்கப்பட்டது.
அக்காலத்தால் வந்த இந்த ரஸ்கனி (Tuscany)என்ற ,இதே பிரதேசத்தில் பிறந்த (Piazza Pio 11) பாப்பண்டவரின் பேரில் அவர் பின்பு பாப்பாண்டவராகியபின் (Pope Pius II), இந்த மாதிரி நகரம் கட்டப்பட்டது
பாப்பாண்டவரின் வேண்டுகோளின் பேரில், பேர்னாடோ (Bernardo Rossellino) என்ற கட்டடக் கலைஞரால் நிறைவேற்றப்பட்டது. அந்த இடத்திலிருந்த ஊரின் அமைப்பை மாற்றி, புதிதாக இந்நகரத்தை மனிதவுணர்வுத் தத்துவம் (Humanist Philosophy) அடிப்படையாகக் கொண்ட முதலாவது நகரமாக அமைக்கப்படுகிறது. இங்கு மக்கள் கூடும் பிரதேசம், அதைச் சுற்றி மக்கள் வாழும் இடங்களாக இந்த நகரம் உருவாக்கப்பட்டது.
ஆரம்பக் காலத்தில் அரச மாளிகைகள்,பிரபுக்களின் வசிப்பிடங்கள் மற்றும் முக்கிய இடங்கள் தவிர்ந்தவை எல்லாம், சாதாரண மக்கள் வாழ்வது குடிசை போன்ற அமைப்புகளாகவே இருந்தது. ஐரோப்பாவில் முக்கியமாக இத்தாலியில் 15ம் நூற்றாண்டுகளில் உருவாகிய மறுமலர்ச்சி யுகம் உருவாக கத்தோலிக்க பாப்பாண்வரகளது பங்கு மிகவும் முக்கியமானது. இதுவே (Humanist Philosophy) பிற்காலத்தில் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் ஓவியம்,சிற்பம், கட்டிடக்கலைகள் வளர்ச்சியடைந்தது மேலும் பல்கலைக்கழகங்கள் பல நகரங்களில் தோன்றக் காரணமாகும்.
இங்கு உள்ள 1459ல் கொத்திக்(Gothic) அமைப்பிலுள்ள தேவாலயம் முக்கியமானது இந்த தேவாலயத்தில் உட்பகுதியின் அமைப்பு உயரம் அதன் கண்ணாடி யன்னல்கள் முன்பு நான் பார்த்த கோலோன் நகர தேவாலயத்தை நினைவூட்டியது . இந்த மாதிரியான கட்டிட(Gothic) அமைப்பு, பிரான்சிலிருந்து வந்தது என்கிறார்கள். கொத்திக் அமைப்பென்பது உட்பகுதியின் விசாலத்தை அதிகரித்து, உயரத்தைக் கூட்டி பெரிதான கண்ணாடி யன்னல்களை அமைப்பதற்காகக் கட்டிடத்தின் மேற்தளத்தின் பாரத்தை வெளியே இருந்து உருவாக்கிய அமைப்புகளால் உறுதிப்படுத்துவது: இதை (Flying buttress) என்பார்கள்.
தஸ்கெனியின் முக்கிய நகரம் கோட்டோனா( Cortona)


இந்த நகரம் 2800 வருடங்கள் மக்கள் தொடர்ந்து வாழும் இடம். இதைப்பற்றி அறிய நான் அங்குள்ள அருங்காட்சியகத்துக்குக் சென்றேன். இங்கு ரோமர்கள் காலத்திற்குச் சமனான ஒரு மக்கள், தங்கள் கலாச்சாரம், மொழி என்பவற்றுடன் தோன்றினார்கள். இவர்களை றஸ்கன் (Etruscan) என்பார்கள். கிறிஸ்துவிற்கு முன்பாக 900- வருடங்கள் முன்பாக இவர்களது நாகரீகத்தின் தோன்றிய காலமாக வரலாற்றாசிரியர்கள் கணிக்கிறார்கள். இவர்கள் பல நூற்றாண்டுகள் தனித்துவமாக வாழ்ந்தார்கள். இவர்கள் பிற்காலத்தில் ரோமரோடு போர் புரிந்ததுடன் பின் ஒன்றாகக் கலந்து சம உரிமை பெற்றார்கள்.
அருங்காட்சியகத்தில் இரு மணி நேரம் செலவிட்டுப் பார்த்தபோது அங்கு 2000 ஆண்டுகள் முந்திய பானை ஓடுகள், நாணயங்கள், பாத்திரங்கள், பெண்களின் ஆபரணங்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன இவற்றைவிட, அவர்கள் பளிங்கு பாறைகளில் மூதாதையரது இறந்த உடலை வைத்திருக்கும் தாழிகள், உடல்களை அடக்கம் செய்த கல்லறைகள் இருந்தன. இதற்கப்பால் 7 BC காலத்தில் எரிக்கப்பட்ட உடலின் அஸ்தியை வெண்கலக் கிண்ணங்களில் பாதுகாக்கப்பட்டு உள்ளதையும் பார்க்கக் கூடியதாக இருந்தது.
இவற்றைத் தமிழ்நாட்டில் பார்த்த, கேட்டவற்றோடு ஒப்பிட்டுப்பார்த்தபோது மனிதர்கள் எல்லாப் பிரதேசத்திலும் இறப்பை முக்கியமாகக் கருதியிருக்கிறார்கள். இறந்தவர்கள் உடல்களைப் பாதுகாப்பது முக்கிய விடயமாகிறது. பிற்காலத்தில் அதிலிருந்தே ஆன்மா , மேல் உலகம் என்ற மத நம்பிக்கைகள் வருகின்றன.
இந்த அருங்காட்சியகத்தில் நவீன மொசாக் (Mosaic), ஃபிரஸ்கோ(Fresco) ஓவியங்களின் தந்தையான கினொ செவெரினி( Gino Severrini) பார்க்க முடிந்ததுடன் அவரது பிறந்த ஊர் கோட்டோனா என அறிந்தேன்.
கோட்டோனா என்ற அந்த நகரத்தை அவசரமாகச் சுற்றி வந்தபோது அழகான பூங்கா அங்கு பல சிற்பங்கள் உள்ளன.அதற்கப்பால் சுற்று மதிலால் சூழப்படட நகரத்தில் வெளியே ஒரு வாவி(Trasimeno)தெரிந்தது கோடைக்காலத்தில் படகோட்டம் நடக்கும் இடம் ஆனால் தற்போது வாவி தூக்கத்திலிருந்தது.

இத்தாலியின் சிறிய நகரங்கள் பல நூற்றாண்டுகால நாகரிகத்தையும் வரலாற்றையும் காட்டுவதுடன் அதை அழகாக பாதுகாக்கிறார். அதனாலே மக்கள் வருகிறார்கள் என்ற எண்ணத்துடன் வெளியே வந்தபோது என்னோடு வந்தவர்கள் பல இத்தாலிய உணவு வகைகளை ருசி பார்தபடி இருந்தார்கள் . நாம் அறிந்தவை பாஸ்ரா பிர்சா என்பதற்கப்பால் இத்தாலிய உணவுகள் ஏராளம். அவை இத்தாலிய வரலாறு போல் உருசியானவை.
தொடரும்.
பின்னூட்டமொன்றை இடுக