இத்தாலியப் பயணம்:2

தற்போதைய ஏழு உலக அதிசயமும் இத்தாலியின் அடையாளமுமான குலோசியத்தைப் (Flavian Amphitheatre–Colosseum) பார்க்க இரண்டாவது நாள் பதிவு செய்திருந்ததால் வழிகாட்டியுடன் விசேடமான சுற்றுலா இருந்தது. இது ஒரு திறந்த வெளி மைதானம் – தற்காலத்தில் உள்ள மெல்பேன் கிரிக்கெட் மைதானம் போல். குலோசியம் என்ற பெயர் வந்ததற்கு காரணம் மன்னர் நீரோவின் 100 அடிக்கு மேலான உயரமான வெண்கலச் சிலை (Colossus of Nero) இந்த மைதானத்திற்கு அருகே 400 வருடங்கள் இருந்தது. 5ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த பூகம்பத்தில் அது அழிந்துபோனது. ஆலமரத்தருகே இருக்கும் பாடசாலையை ஆலடி பாடசாலை என்பதுபோல் இந்தப் பெயர் இக்காலம்வரையும் நிலைத்துவிட்டது. இதைவிட, மன்னன் நீரோவின் பின்பாக வந்த அரசர்கள் ஃபிளேவியன் (Flavian Amphitheatre) அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.

மூன்று தளங்கள் கொண்ட இந்த மைதானத்தை சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டது. வேஸ்பாசியன் (Vespasian) என்ற ரோம அரசனின் காலத்தில் கிபி 72–80ல் கட்டப்பட்டது. அரங்கம் திறக்கும் நிகழ்வில் 5000 காட்டுமிருகங்கள் பலியிடப்பட்டன.

இப்படியான ஒரு பெரிய மைதானத்தை கட்டுவதற்கு ரோமர்களுக்கு எப்படி பணம் வந்தது என்று ஆராய்ந்தபோது, அக்கால ஜெருசலேமில் இருந்த யூதர்களது கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தில் இது நிர்மாணிக்கப்பட்டது என்ற பதில் எனக்கு கிடைத்தது. மற்றவர்களது செல்வத்தை சூறையாடுவதில் பிரித்தானியர், பிரான்சியர் மற்றும் அமெரிக்கர்களுக்கு முன்னோடியாக இருந்தவர்கள் ரோமர்களேயாகும்.

இங்கு ஏற்கவே நாம் அறிந்த விளையாட்டுகள் (Gladiatorial Battle), மிருகங்களுடன் சண்டைகள் நடப்பதற்காக, அதை மற்றவர்கள் வேடிக்கை பார்க்கும் இடமாக இது அமைந்தது. அக்காலத்தில் 50,000–80,000 பேர் இருந்து பார்க்கக்கூடிய மைதானமாகும். கீழ்ப்பகுதியில் மிருகங்கள் மற்றும் அடிமைகள் அடைத்து வைப்பதற்கான இரும்புக் கூடுகள் உள்ளன. கீழ்தளப் பகுதி மரத்தில் அமைந்து அதன்மேல் மண் தூவியிருக்கும்; இரத்தத்தை உறிஞ்சவும், பின்னர் சுத்தப்படுத்த இலகுவாகவும் இருக்கும். கூரை அக்காலத்தில் படகுகளின் பாய் போன்றதால் பெரும்பகுதி மூடப்பட்டிருக்கும். கீழ்ப்பகுதியில் அரசர்கள், பிரதானிகள் இருப்பார்கள்; மேல்ப்பகுதி சாதாரண பிரஜைகள் அமர்வதற்கு உரிய இடமாகும்.

எரிமலைக் கற்கள், சுண்ணாம்புக்கற்கள் மற்றும் செங்கற்கள் கொண்டு இரும்புடன் கலந்து ரோமர்களது சீமெந்தால் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தில் பல ஓட்டைகள் தெரிந்தன. அங்கெல்லாம் இரும்பு உள்ளே இருந்து, பிற்காலத்தில் ரோம் நலிந்துபோனபோது அங்கிருந்த இரும்பை மிகத் திறமையாக வெளியே எடுத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 2000 வருடங்கள் பழமையான கட்டிடம் மழை, காற்று மட்டுமல்ல பூகம்பங்கள் என இயற்கையின் சக்திகளை எதிர்த்து நிற்பதென்றால், அக்கால கட்டிடக்கலையை வியக்காது இருக்க முடியாது.

குலோசியத்தில் ஒரு இடத்தில் சிலுவையை கண்டேன். அதைப் பற்றி விசாரித்தபோது, பல கிறிஸ்தவர்கள் இங்கு உயிர்ப்பலியிடப்பட்டார்கள் என்றார்கள். உண்மையில் ரோம் மன்னன் கொன்ஸ்டாண்டைன் காலம்வரை (AD 306) கிறித்துவ மதத்தை வழிபடுபவர்கள் மதரீதியாக பழிவாங்கப்பட்டார்கள். அவர்கள் பலர் குலோசியத்தில் அடைக்கப்பட்டிருந்த சிங்கங்களுக்கு உணவாக்கப்பட்டார்கள் என கருதப்படுகிறது என்ற போதிலும், இன்னமும் அதற்கான சாட்சியங்கள் கிடைக்கவில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் ரோம சாம்ராஜ்யத்தில் பழிவாங்கப்பட்டதும், அவர்கள் பல காலமாக தலைமறைவு இயக்கமாக இருந்ததும் வரலாற்று உண்மையாகும்.

மன்னன் நீரோவின் காலத்தில் கிறித்துவ மதத்தை ஸ்தாபித்த புனித போல் ரோமிலே சிறை வைக்கப்பட்டு இறுதியில் தலை வெட்டப்பட்டார். நீரோ ரோமைவிட்டு வெளியே சென்றிருந்த காலத்தில் (18–23 ஜூலை 64 AD) ஐந்து நாட்களாக ரோம் பற்றி எரிந்தது. எல்லோரும் நீரோவே அந்த நெருப்புக்கு காரணம் என்றார்கள். ஆனால் நீரோ, அந்த நெருப்பை வைத்தவர்கள் கிறிஸ்தவர்களே என சொல்லி அவர்களை பழிவாங்கினான் என்பது வரலாறு.

இப்படி கிறிஸ்தவர்களை துன்புறுத்திய இடமான குலோசியத்தை சிலுவையை வைத்து புனிதமாக்க ஒரு பாப்பாண்டவர் முயன்றார் என அறிந்தேன். இன்னுமொருவர் ரோமில் உள்ள விபச்சாரிகளுக்கு வேலை கொடுத்து அவர்களை இங்கு குடியேற்றவும் திட்டம் வைத்திருந்தார். ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் பின் பாப்பாண்டவர்களே பல நூற்றாண்டுகள் ரோமை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். பிற்காலத்தில் ஜோன் போல் II பாப்பாண்டவர் 2000ஆம் வருடத்தில் குலோசியத்தில் வைத்த சிலுவையே நான் கண்டதாகும். இந்த சிலுவையே பிற்காலத்தில் வந்த மன்னர்கள் குலோசியத்தை அழிக்காது நமக்கு பார்ப்பதற்கு பாதுகாத்தது.

குலோசியத்தின் சுற்றளவு அரை கிலோமீட்டர். அடிப்பாகத்தை சுற்றிப் பார்க்க தற்போது அனுமதியில்லை. அங்கு பிரேதங்களை சேகரித்து வைக்கும் இடமாக இருந்தது. அத்துடன் அந்தப் பகுதியூடாக கால்வாய் போய் நீரை அனுப்பி, குலோசியத்துள் கப்பல்களை அனுப்ப முடிந்தது. அக்காலத்தில் சில கப்பல் சண்டைகள் பயிற்சிக்காக இங்கு செய்யப்பட்டது.

தற்போது அங்கு கட்டிட வேலை நடக்கிறது. அங்குதான் அக்காலத்தில் பழிவாங்கப்பட்ட யூதர்கள், கிறிஸ்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்று சொன்னார்கள்.

குலோசியத்தின் அருகாமையில் உள்ள முக்கிய இடம் டைட்டஸ் வளைவு. அது டைட்டஸ் அரசனால் ஜெருசலேமில் படையெடுத்து அங்குள்ள செல்வத்தை கொண்டுவந்ததை நினைவுகூரும்முகமாக கட்டப்பட்டது. 2000 வருடங்களாக உறுதியாக உள்ளது.

தொடர்ச்சியாக நடக்கும்போது, ஒக்டேவியன் எனும் ஆகஸ்டஸ் சீசரின் வசிப்பிடம் மற்றும் ஜூலியஸ் சீசரை புதைத்த இடம் என 1000 வருட வரலாறு அந்த இடங்களில் சிதறிய அடையாளங்களாக எங்கும் உள்ளது.

இறுதியாக ரோமர்களது தாவரவியல் தோட்டத்தைப் பார்த்ததும் கால்கள் கெஞ்சத் தொடங்கின. கடிகாரத்தை பார்த்தபோது 10 கிலோமீட்டர் தூரம் நடந்தோம் எனக் காட்டியது. “இன்று போதும்” என மற்றவர்களை விட்டுவிட்டு ஒரு டாக்ஸியை எடுத்துக்கொண்டு ஹோட்டலை வந்தடைந்தோம்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.