தமிழாக்கம்: கீதா மதிவாணன்

நாங்கள் 1987 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது, அது ஒரு வளர்ந்த செல்வந்த நாட்டிற்கான இடம்பெயர்வாக அமைந்தது. மெல்பேனில் கார்கள், ரயில்கள் மற்றும் மின்சார டிராம்களைப் பார்த்தோம். பெருநகரங்களைத் தாண்டி மாட்டுப் பண்ணைகளில் வைத்தியப் பணிக்காகச் சென்றபோது, ஆஸ்திரேலியாவின் பரந்த பாதைகள், வாகன வசதிகள் மற்றும் செழிப்பான பகுதிகளில் வாழும் மக்களைப் பார்க்க முடிந்தது.
இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியைச் சேர்ந்த நினைவுகளே இன்று நான் சுமக்கும் அனுபவங்கள். அவையே எனது அசோகனின் வைத்தியசாலை போன்ற நாவல்களில் இடம்பெறும் சம்பவங்களுக்கு ஆதாரமாகின்றன.
அந்த நினைவுகளோடு நான் ஆஸ்திரேலிய சிறுகதை எழுத்தாளர் ஹென்றி லோசன் (Henry Lawson) அவர்களின் கதைகளைப் படிக்கும்போது, அந்நாளைய ஆஸ்திரேலியாவை—குறிப்பாக நகரங்களிலிருந்து விலகிய புதர்க்காடுகளில் வாழ்ந்த மக்களை, சுரங்கத் தொழிலாளர்களை, செம்மறி ஆடுகளின் ரோமம் கத்தரிக்கும் உழைப்பாளர்களை—நேரில் சந்தித்ததுபோன்ற அனுபவம் கிடைத்தது.
சில கதைகளை முன்பே வாசித்திருந்தாலும், கீதா மதிவாணனின் மொழிபெயர்ப்பில் மொத்தம் 30 கதைகளையும் வாசித்தபோது, நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த ஆஸ்திரேலியாவுக்கு ‘பாஸ்போர்ட், விசா இன்றி பயணம் செய்தது’ போன்ற உணர்வு ஏற்பட்டது. கதைகளை வாசித்த பின், என் 10 வயது பேரனிடம் “ஹென்றி லோசனை அறிவாயா?” என்று கேட்டேன். அவன் எந்த தயக்கமும் இன்றி “சிறுகதையாசிரியர்” என்று பதிலளித்தான்.
இலங்கையில் ஒரு 10 வயது தமிழ் சிறுவனுக்கு எஸ் பொன்னுத்துரை அல்லது தமிழ்நாட்டில் புதுமைப்பித்தன் பற்றிய அறிவு இருக்குமா என்பது சிந்திக்கத் தூண்டும் கேள்வியாக உள்ளது.
ஹென்றி லோசனின் கதைகள் அனைத்தும் அக்கால புதர்க்காடுகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை நம்முன்னே உயிர்ப்பிக்கின்றன. இக்காலத்திலும் பொருந்தக்கூடிய கிளாசிக் தன்மையை அவை தக்கவைத்துள்ளன. அதற்கேற்ப மொழிபெயர்ப்பும் எளிமையான, இயல்பான தமிழில் அமைந்துள்ளது.
‘இரட்டை இருக்கை கோச்சு வண்டி’ என்ற கதை என்னை மிகவும் கவர்ந்தது. ஒருவன் தனது மனைவியை மகிழ்விக்க முயலும் சாதாரண குடும்ப நிகழ்வுகள் இதில் பிரதிபலிக்கின்றன. மனைவிகளின் பொருளாதார ஆலோசனைகள் பல சமயங்களில் புறக்கணிக்கப்படுவது போன்ற உண்மைகளையும் கதை வெளிப்படுத்துகிறது. இந்த இரண்டிற்கும் இடையே மனிதன் எவ்வாறு தவிக்கிறான் என்பதைக் கதை நுட்பமாகச் சொல்கிறது.
‘பிரைட்டனின் மைத்துனி’ என்ற கதை, வைத்திய வசதிகள் இல்லாத காட்டுப்பகுதியில் குழந்தைக்கு வலிப்பு வந்தபோது பெற்றோர் எதிர்கொள்ளும் அவலத்தை மிகத் தத்ரூபமாக சித்தரிக்கிறது. இன்றைய அம்புலன்ஸ், வைத்தியசாலை மற்றும் நிபுணர்கள் கொண்ட உலகத்துடன் அக்கால துயர வாழ்க்கையை ஒப்பிடுகிறது.
என்னை மிகவும் பாதித்த கதை ‘மந்தையோட்டியின் மனைவி’. கணவன் தூரதேசத்திற்குச் சென்று விட்ட நிலையில், மனைவி தனியாக குழந்தைகளுடன் வாழ்கிறாள். ஒரு இரவில் பாம்பு வீட்டுக்குள் நுழைய, அவள் தனது நாயுடன் போராடி அதை கொன்று காப்பாற்றுகிறாள். சிறிய குழந்தைகள் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும்போது, மூத்த சிறுவன் தாயை அணைத்துக் கொண்டு, “நான் ஒருபோதும் மந்தையோட்டியாக போக மாட்டேன்; போனால் என்னை விளாசித் தள்ளுங்கள்” என்று கூறும் காட்சி மிகவும் உருக்கமானது.
நகைச்சுவை கதைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. ‘சீனத்தவனின் ஆவி’ கதையில், இரவில் யூகலிப்டஸ் காடுகளில் கேட்கும் சத்தத்தை ஆவியாக நினைத்து பயப்படும் மனிதன், இறுதியில் அது தன் தொப்பியின் நாடா சத்தம் என்பதை உணர்கிறான்.
தங்கச் சுரங்க காலத்தில் பல சீனர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்தனர். அவர்களுக்கு அக்கால அரசாங்கம் கொடுமையாக நடந்துகொண்டது என்பது வரலாறு. அதனால் அவர்கள் ஆவிகளாகத் திரிகிறார்கள் என்ற நம்பிக்கைகளும் பரவியிருந்தன.
‘வெடிகுண்டு நாய்’ கதையில், மீன்பிடிக்கத் தயாரிக்கப்பட்ட குண்டை, அதில் தடவிய மிருகக் கொழுப்பின் வாசனைக்காக நாய் கவ்விக்கொண்டு ஓடுவதும், இறுதியில் குண்டு வெடிப்பதும் நகைச்சுவையுடன் சித்தரிக்கப்படுகிறது.
ஹென்றி லோசன் சிறுகதை எழுத்தாளராக மட்டுமன்றி கவிஞராகவும் விளங்கினார். அவருக்கு ஆஸ்திரேலிய அரசு அரச மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தியது. அவரது உருவம் தபால் முத்திரைகளிலும் பத்து டாலர் நோட்டிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை வறுமையாலும் சிக்கல்களாலும் நிரம்பியது. குடும்பத்திலிருந்து பிரிந்து, குடிபழக்கத்திற்கு அடிமையாகி, மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் உதவாத காரணத்தால் பலமுறை சிறைக்குச் சென்றார். அவர் 55 வயதிலேயே மறைந்தார். இறுதிக் காலத்தில் இஸபெல் என்ற பெண் அவரை பராமரித்ததாக அவரது வாழ்க்கை வரலாறு கூறுகிறது.
இந்த 30 கதைகளையும் தமிழில் மொழிபெயர்த்த கீதா மதிவாணன் ஆஸ்திரேலியாவில் வசிப்பவர். எனக்குப் பொருத்தவரையில், அவரது இந்த முயற்சி மிக முக்கியமானது. ஒரு ஆஸ்திரேலிய இலக்கியவாதியை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம், “சென்றிடுவீர் எட்டுத்திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொண்டு வந்து சேர்ப்பீர்” என்ற சுப்பிரமணி பாரதியின் கனவை நனவாக்கியுள்ளார்.
திருச்சியில் உள்ள கோதை அச்சகம் இந்த சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
பின்னூட்டமொன்றை இடுக