இத்தாலியப் பயணம்:1

எல்லாப் பாதைகளும் ரோமாபுரியை நோக்கிச் செல்கின்றன என்ற வாசகம், அக்காலத்து ரோம ராச்சியத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காகச் சொல்லப்படுகிறது. அதைப் போலவே, நாங்கள் ஏற்கனவே கட்டார் வழியாகச் செல்ல திட்டமிட்டிருந்த எங்களது இத்தாலியப் பயணம் திசை மாறியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்டிருந்த போரின் காரணமாக, மத்திய கிழக்கு வழியாகச் செல்லும் எங்களது பயணம் ரத்து செய்யப்பட்டதாகவே நினைத்திருந்தோம். ஆனால், இறுதி இரண்டு நாட்களுக்கு முன்பு, மத்திய கிழக்கைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தகவல் வந்தது: “புறப்படுங்கள்” என்ற அறிவிப்பு.

அவர்களின் திட்டமிடலின்படி, எங்கள் பயணம் மெல்போர்னிலிருந்து தென் பசிபிக் சமுத்திரத்தைத் தாண்டி, சிலி நாட்டின் தலைநகரமான சாண்டியாகோ சென்றது. அங்கிருந்து தென் அமெரிக்கக் கண்டத்தைக் குறுக்காகக் கடந்து, அத்திலாந்திக் சமுத்திரத்தின் மேலாக பறந்து  ஸ்பெயின் தலைநகரமான மாட்ரிட் சென்று, பின்னர் ரோம் சென்றடைந்தோம்.

சில நிமிடங்களில் பயணம் குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் தள்ளப்பட்டோம். ஒரு வருடத்திற்கு முன்பே பணம் செலுத்தி பதிவு செய்த பயணத் திட்டம் என்பதால் குழப்பம் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் வரலாற்று நாயகர்களான ஜு லியஸ் சீசர்(Julius Caesar) மற்றும் மார்க் அந்தனி(Mark Antony)  நினைவுக்கு வந்ததுடன் அவர்கள் எனது கையை பிடித்து அழைத்தது போன்ற நினைப்பு என்னிடம் எழுந்தது. சியாமளாவின் சம்மதமும் கிடைத்ததால், பயணத்தைத் தொடர முடிவு செய்தோம்.

இந்தப் பயணம் 36 மணிநேரம் நீடித்தது — சுமார் 28,000 கிலோமீட்டர் விமானப் பயணம். பூமியின் மொத்த சுற்றளவு 40,000 கிலோமீட்டர் என்பதால், அதன் நாலில்  மூன்று பங்கு தாண்டிய பயணமாக இது அமைந்தது. ரோமில் இறங்கியபோது, கால்கள் யானைக்கால் வியாதி வந்தவர்களைப் போல வீங்கி இருந்தாலும், இதயமும் சுவாசமும் நன்றாகச் செயல்பட்டன.

பகலும் இரவும் மாறி மாறி சென்ற இந்தப் பயணத்திற்குப் பின், இரண்டு நாட்கள் ரோமாபுரியைச் சுற்றிப் பார்க்கும் திட்டம் இருந்தது. 40 பேராக இருந்த குழுவில் 21 பேர் மட்டுமே வந்திருந்தனர் என்று எங்களது இத்தாலிய வழிகாட்டி அலிஸ் தெரிவித்தார்.

அப்போது எங்களுடன் வந்த கலி என்ற பெண், “நாங்கள் விடுமுறை செல்ல வேண்டுமா இல்லையா என்பதை டொனால்ட் ரம் (Donald Trump )அல்லது வேறு யாரும் தீர்மானிக்க முடியாது” என்றாள்.

 அவளது பதில் எனக்குப் பிடித்திருந்தது.

இத்தாலியின் நகரங்கள் அனைத்தும் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டவை. அவற்றைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து மக்கள் வருகிறார்கள். இத்தாலியின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமான — சுமார் 80 மில்லியன் — சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வருகிறார்கள். நகர மையங்களில் வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், பழைய நகரங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு நடப்பதே எங்களது முக்கியமான வழிமுறை. இதுவரை எந்த விடுமுறையிலும் இல்லாதபடி, தினமும் சுமார் பத்து கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்தது.

நான் தேர்ந்தெடுத்த காலம் முன் வசந்தம் — அதிகமான சுற்றுலாப் பயணிகள் இருக்கமாட்டார்கள் என நினைத்தேன். ஆனால், எங்கு சென்றாலும் திருவிழா கூட்டம் போல மக்கள் நிரம்பியிருந்தனர்.

நான் முன்கூட்டியே பதிவு செய்திருந்த முக்கிய இடம் கொலோசியம்  (Colosseum) மட்டுமே. பல அருங்காட்சியகங்கள் மற்றும் குறிப்பாக வத்திக்கான், செயின்ட் பீட்டர் பேராலயம் போன்ற இடங்களை முன்பே பதிவு செய்ய வேண்டுமென்பதை அப்போது தான் உணர்ந்தேன்.

ரோமன் காலத்து பல இடிபாடுகள், பின்னாளில் முசோலினி(Benito Mussolini) காலத்தில் சாலைகளை விரிவுபடுத்துவதற்காக அழிக்கப்பட்டதாக அறிந்தேன். அவர் கொலோசியத்தையே இடம் மாற்றி அமைக்க நினைத்திருந்தார் என வரலாறு கூறுகிறது.

ரோமில் தெருக்களிலேயே ஜு லியஸ் சீசர்(Julius Caesar) போன்ற பலரின் சிலைகள் இருந்தன. அப்போது நைல் நதி (Nile River) அருகே கிளியோ பட்ரா (Cleopatra) உடன் சீசர் பயணம் செய்த காட்சிகள் என் நினைவில் தோன்றின. கிளியோபாட்ராவின் மகன் சிசேரியன் (Caesarion,) பதவிப் போட்டியைத் தவிர்க்க ஆகஸ்ரஸ் சீசரின்  (Augustus) ஆணையின்படி கொல்லப்பட்டார் என்பது வரலாறு மனத்தில் தோன்றியது .

 மார்ச் மாதம் 14ம் திகதி.

ரோமர்களின் ஃபோரம் (Roman Forum) எனப்படும் இடிபாடுகளிடையே சுற்றுகிறபோது எனக்கு 44 BC மார்ச் மாதம் 15ம் திகதி (2700 வருடங்கள் முன்பாக)  மனைவி கல்பூர்ணியா கனவு கண்டு சீசரை அன்று செனட்சபைக்கு செல்லவேண்டாம் எனத் தடுத்ததை எதிர்த்துச் சென்ற  55 வயதான சீசரை,  மார்ச் 15 திகதி  புரூட்டஸ் உட்பட 23 செனட்டர்களால் இதே பகுதியில் குத்திக் கொலை செய்யப்பட்ட வரலாற்றுச் சம்பவம் நினைவு வந்தது.

ஏன் கொலைசெய்தார்கள்?

அதுவரை குடியரசாக இருந்தபோது,  செனட்டர்களுக்கு அதிகாரம் உண்டு ஆனால் யூலியஸ்  சீசர்  சர்வாதிகார மன்னராக விரும்பியதால், அதைத் தடுக்கவே இந்த கொலை நடந்தது. சீசரின் கொலையின் பின் சீசரால் எடுத்து வளர்க்கப்பட்ட ஓக்ரேவியன் அரசனாகவும் சர்வாதிகாரியாகவும் வருகிறார்.

ரோம் மக்களுக்காக நடந்த கொலையில் ,மக்கள் கொலைகாரருக்கு எதிராகத் திரும்பினர் காரணம் யூலியஸ் சீசர் தனது சொத்து முழுவதும் மக்களுக்கே உயில் எழுதி வைத்திருந்தார். அதனால் கொலைகாரர்கள் புரூட்டஸ்  உட்பட  உடனே ரோமை விட்டுத் தப்பி ஓடினார்கள் ஆனால் இறுதியில் மார்க்கஸ் அந்தனியாலும் ஓக்ரேவியனாலும் மூன்று வருடங்களில் கொலை செய்யப்பட்டார்கள்.

முதுகில் குத்திய புரூட்டஸ்  ஏற்கனவே சீசரின் மகன் என்பதாலே சீசர்,   “ நீயுமா மகனே”  எனக்கேட்டதாக அறிந்தேன்.

ரோமர் உலகிற்கு அளித்த பங்களிப்புகள் எண்ணற்றவை — செங்கல், சீமெந்து, கற்களால் செய்யப்பட்ட சாலைகள், மற்றும் நமது இன்றைய சட்ட அமைப்புகளின் அடிப்படை. ஆட்சியை மூன்று பிரிவுகளாகப் பிரித்த அமைப்பு — நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை — இவற்றின் விதைகள் ரோமர்களிடமே இருந்து வந்தன.  அவர்கள் உருவாக்கிய ‘செனட்’ என்ற வார்த்தையே அரசருக்கு ஆலோசனை வழங்கும் சபையை குறிக்கிறது.

இதில் மட்டுமல்ல; ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தோற்றம், இத்தாலிய நகரங்களில் தான். கட்டிடக்கலை, ஓவியம், மற்றும் கத்தோலிக்க மதத்தின் வளர்ச்சி — இவை அனைத்தும் இத்தாலியோடு தொடர்புடையவை. இன்றைய உலகத்தை ரோமர்களின் தாக்கம் இல்லாமல் கற்பனை செய்வது கடினம்.

இவ்வளவு பெருமைக்குரிய ரோம இராச்சியம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வீழ்ந்தது. அதன் பின், இத்தாலிய நகரங்கள், நகர அரசுகளாகத் தங்களை அமைத்துக் கொண்டன. அதே நேரத்தில், அதிகார துஷ்பிரயோகம், சகோதரக் கொலை, மனைவி கணவனை நஞ்சு கொடுத்து கொலை செய்தல் போன்ற கரும்புள்ளிகளும் ரோம வரலாற்றில் நிறைந்துள்ளன.

ரோம் ஒரு நாளில் கட்டப்படவில்லை: அதுபோல்  ரோமைப் பார்க்க  ஒரு நாள் போதாது . மேலும் ரோமின் வரலாற்றைப் புரிந்து கொள்ளாமல் அதைப் பார்க்க முடியாது. கிறிஸ்துவுக்கு முன் எட்டாம் நூற்றாண்டில் ரோம் உருவானது பற்றிய பல புராணக் கதைகள் உள்ளன. எனக்கு பிடித்தது Virgil எழுதிய Aeneid காவியம். டிராய் போரிலிருந்து தப்பிய Aeneas இத்தாலி வந்து குடியேறுகிறார். அவரது சந்ததியில் பிறந்த ரோமுலஸ் ( Romulus)தான் ரைபர்(Tiber Rive) நதி பள்ளத்தாக்கை சுற்றியுள்ள குன்றுகளின் மீது ரோம் நகரை நிறுவியதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கதைக்கு உறுதியான வரலாற்று ஆதாரம் இல்லாவிட்டாலும், பலர் அதை நம்புகின்றனர். ஆரம்பத்தில் ஏழு அரசர்கள் ஆட்சி செய்தனர். பின்னர் கி.மு. 503-இல் குடியரசு அமைப்பு உருவானது. இந்தக் காலத்தில் ரோமன் பேரரசு மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளுக்கு விரிந்தது.

பின்னர் கொன்ரன்ரைன் (Constantine the Great) கிறிஸ்தவ மதத்தை அரச மதமாக்கி, கிழக்கு ரோமப் பேரரசை நிறுவினார். காலப்போக்கில், கிபி 410-இல் ஜெர்மானியர்களால் ரோம் தாக்கப்பட்டு வீழ்ந்தது.

ரோமில் உள்ள கட்டிடங்களில் கிரேக்கக் கட்டிடக்கலையின் தாக்கம் இருந்தாலும், அவை தனித்துவமானவை. பல கட்டிடங்கள் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டவை; இன்னும் உறுதியாக உள்ளன. ஆகஸ்து சீசர்(Augustus காலத்தில் செங்கற் கட்டிடங்கள், பளிங்கால் மாற்றப்பட்டன.

சீமெந்து முதலில் பயன்படுத்தியவர்களும் ரோமர்களே. எரிமலைச் சாம்பல், சுண்ணாம்பு, கடல் நீர் ஆகியவற்றின் கலவையால் உருவான இந்தச் சீமெந்து, இரசாயன மாற்றங்களால் காலப்போக்கில் மேலும் உறுதியடைந்தது.

இத்தாலியின் நடுப்பகுதியில் பளிங்கு மலைகள் காணப்படுகின்றன. உலகின் சிறந்த பளிங்கு கற்கள்  அங்கிருந்தே அகழப்படுகிறது.

ரோமாபுரி பாதுகாப்பிற்காக ஏழு மலைகளின் மேல் அமைக்கப்பட்டது. அதனால் நகரைச் சுற்றிப் பார்ப்பது எளிதல்ல.

எங்களது வழிகாட்டியிடம் “சாபோ” என்ற மலை உள்ளதா என்று கேட்டேன். அவருக்கு தெரியாது என்றார். அப்போது நான் கேட்டிருந்த ஒரு கதையை பகிர்ந்தேன்:

“ரோமர்கள் சாபோ மலையின்  உச்சியில் மிருகங்களை பலி கொடுத்து எரித்தபோது, அங்கிருந்து வந்த சாம்பல் (பொட்டாசியம் ஹைட்ராக்சைடு) மற்றும் மிருகக் கொழுப்பு மழை நீரில் கலந்து கீழே இறங்கியது. அந்த நீரில் துணி துவைத்த பெண்களின் துணிகள் எதிர்பாராத விதமாக சுத்தமாக ஆனது. இதுவே சவர்க்காரம் உருவான வரலாறு. இதனால் தான் இன்றும் அந்த இரசாயன செயல்முறையை ‘Saponification’ என்று அழைக்கிறார்கள்.”

அவர், “இது வரலாறு அல்ல, ஆனால் இதிகாசக் கதையாக இருக்கலாம்,” என்று சிரித்தபடி பதிலளித்தார்.

தொடரும்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.