
நோயல் நடேசன்
மாயா யதார்த்தம் எனப்படும் இலக்கிய வகை, Salman Rushdie (Midnight’s Children), Gabriel García Márquez (One Hundred Years of Solitude), மற்றும் அமெரிக்க கறுப்பின பெண் எழுத்தாளர் Toni Morrison (Beloved) போன்றோரின் படைப்புகளைப் படித்தபோது எனக்கு மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தியது.
யதார்த்த இலக்கியம் அன்றாடம் நாம் உண்ணும் இட்லி, தோசை போன்ற உணவாக இருந்தால், மாயா யதார்த்தம் விடுமுறையில் சுவைக்கும் இத்தாலிய அல்லது வியட்நாமிய உணவுப் போல புதுமையையும் இனிமையையும் தருகிறது.
இந்த உணர்வின் தாக்கத்தில்தான் நான் எழுதிய அசோகனின் வைத்தியசாலையில் போன்ற படைப்புகளில், பேசும் பூனை, கொல்லப்பட்ட பெண்ணின் ஆவி கதாநாயகியாக வருவது போன்ற அம்சங்களை பயன்படுத்தினேன். அதேபோல் தாத்தாவின் வீட்டில் என்ற படைப்பில், மனக்குழப்பமான கனவுகளின் வழியாக இந்தியாவில் இருந்து நாய்களை வரவழைத்து, எதிர்கால இலங்கை அரசியலைப் பற்றியும் சிந்தித்தேன். இவற்றை மாயா யதார்த்தம் எனக் கருதி, ஒரு சாதனை உணர்வுடன் நாவல்களாக உருவாக்கினேன்.
ஆனால், என்னை ஆரம்பப் பள்ளி மாணவனாகவே உணரச் செய்தது யுடா அக்னாரியின் மழை (Ueda Akinari) அவர்களின் சிறுகதைத் தொகுப்பு. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த ஜப்பானிய எழுத்தாளரின் ஏழு கதைகள் ‘மழை நிலாக் கதைகள்’ என்ற பெயரில், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வாழும் தமிழ்ப் பெண் எழுத்தாளர் கீதா மதிவாணன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பொதுவாக ஐரோப்பிய மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளை நான் தவிர்ப்பது வழக்கம். மொழிபெயர்ப்பில் திருத்தங்களின் குறைபாடு, மேலும் மொழி என்பது கலாச்சாரத்தின் அங்கமாக இருப்பது—ஆங்கிலம் கூட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா என மாறுபடுவது—இதற்குக் காரணங்கள்.
ஆனால் கீதா மதிவாணன் அவர்களின் மொழிபெயர்ப்பு எந்த சிக்கலும் இல்லாமல், குழந்தையின் பின்புறத்தைத் தடவுவது போல மிருதுவாக ஓடுகிறது. நான் இதுவரை படித்த மொழிபெயர்ப்புகளில் இதைச் சிறந்ததாகக் கருதுகிறேன். ஜப்பான் சென்றதாலும், அதன் வரலாற்றை அறிந்ததாலும், இந்தக் கதைகளில் எந்த கலாச்சாரப் பிழையும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடிகிறது.
இந்த ஏழு கதைகளில், மகாயான புத்தமதத்தின் மறுபிறவி மற்றும் ஆவிகள் பற்றிய நம்பிக்கைகள் இயல்பாகவே பின்னிப் பிணைந்துள்ளன. உறவினர்கள் வீட்டிற்கு வருவது போலவே ஆவிகள் கதைகளில் வருகின்றன.
அந்தக் காலத்தில், பெயருக்கு மட்டும் சக்கரவர்த்தி இருந்தாலும், உண்மையான அதிகாரம் ஷோகுன்களிடமும் சமுராய்களிடமும் இருந்தது. இந்தியாவைப் போலவே வர்க்க வேறுபாடுகள் இருந்த சமூகத்தில், சாதாரண மக்கள் நீதிக்காக புத்த துறவிகளையும் அமானுஷ்ய சக்திகளையும் நம்பிய காலகட்டத்தின் பிரதிபலிப்பே இந்தக் கதைகள்.
இந்தக் கதைகளில் சமூக நெறிகள் வலியுறுத்தப்படுகின்றன. துறவிகள், சமுராய்கள், மற்றும் சாதாரண மக்கள்—அனைவரும் ஒழுக்கத்தையும் கடமையையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இதில் வெளிப்படுகிறது.
கதைகள் குறித்து:
என் கனவுகளில் கெண்டைமீன்: இறந்துவிட்டார் என நினைத்த துறவி, தனது கனவில் கெண்டைமீனாக மாறி மீனவனிடம் பிடிபடுவது—கதை நயமாக தொடங்கி, நம்பகமாக முடிகிறது.
சாமந்திப் பூ பிரமாணம்: “மீண்டும் வந்து சந்திப்பேன்” என்ற வாக்குறுதியை காப்பாற்ற, உயிரையே மாய்த்து ஆவியாக திரும்பி வருகிறான். சமுராய்களின் நேர்மை மற்றும் வாக்குப்பிடிப்பு இங்கே வலியுறுத்தப்படுகிறது.
கிபிட்சுவின் கொப்பரை: தவறான இளைஞனை நல்ல பெண்ணை மணக்கச் செய்தால் திருந்திவிடுவான் என்ற நம்பிக்கையை சாடுகிறது. இறுதியில் மனைவி ஆவியாக வந்து கணவனைச் சந்திப்பது தாக்கமிக்க முடிவாக அமைகிறது.
நீல முடாக்கு: ஆவிக் கதையல்ல; ஆனால் புத்த துறவியின் ஒழுக்கச் சிதைவும்(Homosexual Behaviour) , மனித இறைச்சி உண்ணும் அளவுக்கு வீழ்ச்சியடையும் நிலையும் பேசப்படுகிறது. 200 ஆண்டுகளுக்கு முன்பே இப்படியான கருவை கையாள்வது ஆச்சரியம் தருகிறது.
ஷிராமைன் வெண்சிகரம்: அநியாயமாக பதவி நீக்கப்பட்ட அரச குடும்பத்தவர், ஆவியாகி எதிரிகளை பழிவாங்கும் கதை.
நரகத்தின் மோகம்: தனது அழகால் ஆவியால் காதலிக்கப்படும் மனிதனை மையமாகக் கொண்ட விசித்திரமான கதை.
புதர் மண்டிய வீடு: வியாபாரத்திற்குச் சென்ற கணவனை காத்திருக்கும் மனைவி, இறுதியில் ஆவியாக அவனைச் சந்திக்கிறாள். சிறிய கதை என்றாலும், அக்கால ஜப்பானிய சமூகம் இந்திய சமூகத்துடன் ஒத்திருப்பதை உணர்த்துகிறது.
மொத்தத்தில், இந்தக் கதைகள் ஒரு வேறு மொழி அல்லது கலாச்சாரத்தைப் படிப்பது போன்ற உணர்வைத் தராமல் வாசகனை ஈர்க்கின்றன. அதுவே இந்த மொழிபெயர்ப்பின் மிகப்பெரிய வெற்றியாகும்.
பின்னூட்டமொன்றை இடுக