நாங்கள் சென்ற குரூஸ் கப்பல், வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் பிரிக்கும் பனாமா கால்வாயை கடக்க, ஒரு பகல் முழுதும் எடுத்தது. கால்வாயைக் கடக்கும் கப்பலை அதன் பல தளங்களில் நின்று ரசித்துவிட்டு, நேராக இரவு உணவு மண்டபத்துக்குச் சென்று உணவருந்தினோம். அறைக்குத் திரும்பியபோது, இரண்டு சான்றிதழ்கள் எங்கள் கட்டிலில் வைக்கப்பட்டிருந்தன.

அவற்றில் எங்கள் பெயர்கள் எழுதப்பட்டு, பனாமா கால்வாயை கடந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டு, கப்டனின் கையெழுத்தும் இருந்தது.
“நாங்கள் நீந்திக் கடந்து சாதனை செய்தது போலல்லவா இது இருக்கு!” என்று சொல்லியபடி நான் அவற்றை தூக்கி எறிய நினைத்தேன்.
அப்போது சியாமளா, “இல்லை, இருக்கட்டும்,” எனச் சொல்லி அவற்றை பத்திரமாக பெட்டிக்குள் வைத்தார்.
அந்தச் சம்பவத்தை நினைத்தபோது, கிட்டத்தட்ட 2000 பேருக்கு அன்றைய தினம் கப்டன் கையெழுத்து வைத்திருப்பார் என நினைத்தேன். அது உண்மையான கையெழுத்தா, இல்லை ஜோ பைடன் பாவித்தது போல ஏதோ AI பேனாவா என தெரியவில்லை.
அவர்களுக்கு இது எங்களை மகிழ்ச்சிப்படுத்தும் வணிக உபாயம். எங்களுக்கு பொருந்தாததாக இருந்தாலும், தந்தவர்களின் திறமையை நாங்கள் கேள்வி எழுப்ப முடியாது. பனாமா கால்வாயில் கப்பல் கடக்கும் இடைவெளி ஒரு அங்குலத்திற்கும் குறைவாக இருக்கும் — அதிசயமான பொறியியல்!
அந்தச் சான்றிதழ்களைப் பார்த்தபோது, எங்கள் இலக்கிய விருதுகள் நினைவுக்கு வந்தன. ஆனால், கொடுப்பவரின் தகுதியும் பெறுபவரின் தகுதியும் இரண்டும் பல நேரங்களில் கேள்விக்குறியாகிவிடும் — ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்தது போல.
உண்மையில் பாராட்டுதலும் சான்றிதழும் சிறுவர்களுக்கு உற்சாகத்தைத் தருவது உண்மை. காரணம், குழந்தைகளில் விஷயங்களை தர்க்க ரீதியாக அணுகும் அறிவு இன்னும் வளராத காலம் அது. இதேபோல் மிருகங்களைக் கூட பழக்கும்போது உணவு கொடுத்து ஊக்குவிப்போம் — reward incentive என்பார்கள். இப்படிச் செய்யும்போது மூளையில் serotonin என்ற ஹார்மோன் சுரக்கும். அதுதான் “மகிழ்ச்சி ஹார்மோன்.” இதன் மூலம் நாய்கள், டால்பின்கள் போன்ற முலையூட்டிகள் மட்டுமல்ல, ஊர்வனங்களையும் பறவைகளையும் கூட பழக்க முடிகிறது.
என் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு இளமையில் அவுஸ்திரேலியாவில் இத்தகைய விருதுகள் கிடைத்திருக்கிறது — சந்தோஷமான விடயம்.
என்னைப் பொறுத்தவரையில், சிறுவயதில் இலங்கையில் இவை நடக்கவில்லை. எனது முதல் சான்றிதழ் என் மிருக வைத்தியர் சான்றிதழ் தான். அதன்பின் அவுஸ்திரேலியாவில் பெற்றவைகள்.
யாழ் இந்து கல்லூரியில் நான் 1974-ல் படித்தபோது, அந்த வருடம் நான் மட்டுமே பல்கலைக்கழகத்துக்குச் சென்றேன். வழக்கமாக அதிக புள்ளிகள் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு செய்வார்கள். ஆனால் அந்த வருடம் பரிசளிப்பு நிகழ்ச்சி நடக்கவே இல்லை.
அந்த வருடம் பள்ளியில் இருந்து சபாலிங்கம் அதிபரால் நான் வெளியேற்றப்பட்டவன். எந்த ஆதாரமும் இல்லாதபோதும், அந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பில்லை என பல ஆண்டுகள் நம்ப முடியவில்லை.
எங்கள் சமூகத்தில் கறள் வைத்தல் — பழிவாங்கும் மனநிலை — எப்போதும் மாறுவதில்லை. பல்கலைக்கழகங்களிலும் வேலை இடங்களிலும் இதை அடிக்கடி காணலாம்.
ஆனால், எனது கருத்தில், விருது என்பது இராணுவத்தில் கொடுப்பது போல் இருக்க வேண்டும். பல யுத்தங்களில் களம் கண்ட உயர் அதிகாரி, போரில் சாதனை செய்த வீரனுக்கே விருது வழங்கப்பட வேண்டும்.
இதே நேரத்தில் நமது விடுதலைப் புலிகள் பெரும்பாலும் ராணுவம் போல் நடந்தவர்கள். ஆனால் உள்ளூரில் அப்பாவிகளை கொன்று பதவி உயர்வு பெற்றவர்களும் இருந்தனர்.
மொத்தத்தில், இந்த விருதுகள் பற்றிய விஷயம் சிக்கலானது. நம் இலங்கையில் இன்னும் ஒரு “பொன் மனசெம்மல்” அல்லது “புரட்சி தலைவர்” வராதது ஒரு விதத்தில் நிம்மதியாகவே இருக்கலாம். அதைவிட — கவிஞர்கள், எழுத்தாளர்கள் தவிர்ந்தவர்கள் முக்கியமாக டாக்டர் பொறியிலாளர்கள் இவ்வகை விருது ஆசைகளில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
dragonsillyc26c663145 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி