ஐஸ்லாந்து :1

இதுவரை உலகத்தில் ஒரே ஒரு நாட்டின் தலைநகர் பெயரை   எனது எட்டு வயது பேரனுக்கு உடனே   சொல்ல முடியாது தவிப்பேன். அதுவே   ஆங்கிலத்தில் உச்சரிக்க கடினமாக இருக்கும் ஐஸ்லாந்தின் தலைநகரான  ரீச்சவிக் ( (Reykjavik) என்ற பெயராகும். இந்த தேசத்திற்கு  போகப் பயணப் பதிவு செய்தபோது ஒரு முக்கிய  விடயத்தை  சியாமளாவிடம்    மறைத்தேன்.  ஐஸ்லாந்தில் எப்பொழுதும்  எரிமலை பொங்கும்   என்ற விடயத்தை நான் சியாமளாவிடம் பேசவில்லை. ஏற்கனவே  சிறிய அளவில் எரிமலைகள்  பொங்கிக் கொண்டிருந்தது  எனக்குத் தெரியும்.

 அதைச் சொல்லி என்ன பயன்?

இதேபோல் எகிப்திற்கு  நாங்கள் செல்லும் காலங்களில் பல குண்டுத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம் பெற்றிருந்தன. நல்ல வேளையாக  இரண்டு தேர்தல்களின் இடையில் எங்கள் பயணம் இருந்தது. அங்கு பயங்கரவாதம்  இங்கு  எரிமலை – இது சின்ன விடயம் அல்ல.  2010 ஆம் ஆண்டில்  ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு  (Öræfajökull) எரிமலை பொங்கியபோது  விமானப் போக்குவரத்து முற்றாக பல கிழமைகள் தடைப்பட்டிருந்தன.

ஐஸ்லாந்து நாட்டின் கால்பகுதி எரிமலையாலானது – 130 மேலாக பொங்கும் எரிமலைகள் உள்ளன. விடிந்தும் விடியாத காலை நேரத்தில் ரீச்சவிக் விமான நிலையத்தில்  இறங்கியதும்,  ஒரு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த   கார் சாரதி என்னை தனது காரில் ஏற்றினார். 

நான் கேட்ட முதல் கேள்வி 

‘இப்பொழுது எரிமலை ஏதாவது பொங்குகிறதா?’

 இதற்கு இரு  வருடங்கள் முன்பு யாவாவில் நாங்கள் எரிமலையைப் பார்த்துவிட்டு அடுத்த நாள் வெளியேறியதும்,  அந்த  எரிமலை பொங்கி பலர் இறந்ததாகச் செய்தி வந்தது .  அதில் சில உல்லாசப்  பயணிகள் இருந்தார்கள். மேலும் வனவாத்துவில் (Vanuatu) ஒரு சிறிய விமானத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி எரிமலை மேல் பறந்த நினைவுகள்,  சியாமளாவுக்கு நினைவு வந்ததால்  “இம்முறை  எரிமலை வேண்டாம் “என்றார்.

 ‘அதோ ‘ என அவர்  கையை காட்டிய திசையில் நான் பார்த்தபோது,  நமது ஊரில் யாராவது ஒருவர் இருட்டில் சுருட்டு குடிக்கும்போது வரும் புகையாகத் தெரிந்தது. இதை விட  தற்போது  ‘எரிமலைகளுக்கு செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது’ என்றார். சியாமளாவின் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது.

ஐஸ்லாந்து, வட அமெரிக்கா -ஐரோப்பா என்ற  இரு கண்டத்திட்டுகளில் ,   எங்களூரில் குழிக் கக்கூசுகளில் இரண்டு காலை பிரித்துக்  குந்தியிருப்பது போல் இருக்கும் நாடு என்பதால் கீழே  அடிக்கடி  அதிரும் நிலம் .மற்றொரு சிக்கல் இங்குள்ள எரிமலைகள் பல  பனிப்பாறைகளாக தோற்றம் அளிக்கும்.  மற்ற நாடுகள் போல் எரிமலைகளுக்கு வாயில்லை . பனியால் பெரும்பாலும் மூடப்பட்டிருக்கும்போது, உள்ளே அழுத்தம் கூடியதும் திடீரென தண்ணீர்,  பனிப்பாறைகள்,  நெருப்பு,  கற்கள் எனக் கலந்து தீபாவளி மத்தப்பூவாக வெடிக்கும்.

வழக்கம்போல் வாடகை சாரதியின் வாயை  நோண்டினேன் .

ஐஸ்லாந்தில் இருப்பவர்கள் பத்தாம் நூற்றாண்டு காலப்பகுதியில் நோர்வே , டென்மார்க் ஆகிய நாடுகளில் இருந்து வந்து குடியேறினார்கள். நீலக்கண்ணும் சிவப்புத் தலைமயிரும் அவர்களது அடையாளம் . 

‘எப்படி ஆப்கானிஸ்தானிலிருந்து? ‘

‘ எங்களது ஒரு சமூகம் இங்குள்ளது.

‘எப்படி ?’

‘நாங்கள் அமெரிக்காவின் படைகளுக்கு,  ஆப்கானிஸ்தானில் வேலை செய்தோம்.  அவர்கள் வெளியேறும்  முன்பே,  நாங்கள் பலர் அமெரிக்காவிற்கு சென்று, பின்  அங்கிருந்து இங்கு வந்தோம். நான் ஒரு விமான பைலட் . ‘

 ‘ விமான பைலட், இப்ப கார் பைலட்டா ?

சிரித்தபடி,  ‘முட்டாள்தனமான அமெரிக்கனால் வந்தது . தொடர்ச்சியாக இருந்திருந்தால் ஆப்கானிஸ்தான்  நன்றாக நடந்திருக்கும்’   என்ற முகமத்தின் வார்த்தையில் ஏக்கம் வழிந்தது. .

முகமத்தின் முகத்தை நான் ஏறிட்டு  பார்த்தபோது அவர் ஹசரா  (Hazara) இனத்தைச் சேர்ந்தவர் என நினைக்க முடிந்தது. அவுஸ்திரேலியாவில் பலரை சந்தித்திருப்பதால் என்னால் அவர்களை இலகுவில் அடையாளம் காணமுடியும்.

 தற்பொழுது பாலஸ்தீனியர்கள்படும் துன்பம் எங்கள் வீடுகளுக்குத் தொலைக்காட்சியில்  தினமும் வருகிறது.  அதன் முன்பு அதாவது 75 வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சிகள் இல்லாதபோதிலும்  வரலாற்றின் பக்கங்களை புரட்டும்போது  யூதர்கள் பல காலமாகத் துன்புறுத்தப்பட்ட இனம் என்பது தெரிகிறது.  ஆனால், இவர்களுக்கு இணையாக ஏன் ? அதிகமாகத் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் இந்த ஹசரா மக்கள்.  ஆனால், பலருக்குத் தெரியாது. அதுவும் ஒரே மத நம்பிக்கை கொண்டவர்களால்  இந்தக் கொடுமைகள்  நடந்தது என்பது ஆச்சரியமான விடயம் 

ஆப்கானிஸ்தானின் மத்திய பகுதியான பமீர் பீடபூமி பகுதியில்  வாழும் இவர்கள்,  மங்கோலிய முக அமைப்பையும், மஞ்சள் தோல் நிறத்தையும் கொண்டவர்கள். 12 ஆம் நூற்றாண்டில் ஜெங்கிஸ்கானின் தலைமையில்  மங்கோலியர்கள் மேற்கு நோக்கி ஐரோப்பாவரையும் படை எடுத்தபோது அவர்களின் பெரும் படைப்பிரிவு,  ஆப்கானிஸ்தானின் இந்தப் பகுதியில் பல காலமாக  இருந்ததாகவும்,  அவர்களின் வாரிசுகள் இவர்கள் என்ற பொதுவான கருத்து இருந்தபோதிலும் ஹசரா  இனத்தினர் துருக்கிய கலப்பானவர்கள் அத்துடன் மேற்கு  சீனாவில் வாழ்பவர்களது நிறமூர்த்த கூறுகளைக் கொண்டவர்கள் என நிறமூர்த்தங்களால் அடையாளபடுத்தப்படுகிறார்கள் . இந்தியாவில் முகலாய சாம்ராச்சியத்தை உருவாக்கிய மன்னர் பாபர் இவர்களின் இனத்தைச் சேர்ந்தவராவார்.

இவர்கள் ஷியா இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள்.  

இவர்களது டாரி மொழியில், பேர்சிய மொழி அதிகமாகவுள்ளது. பெரும்பான்மையான சுனி இஸ்லாமிய பட்டாணியர்கள் வாழும் நாட்டில் இந்த வேறுபாடுகள்  போதாதா?  உயரமான இந்தோ- ஆரிய பட்டாணி இனத்தவர்களிருந்து,  மொழி-  இனம்- நிறம் என பலவற்றிலும்  வித்தியாசப்பட்டதால் இவர்கள் நான்கு நூற்றாண்டுகளாக படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு பல நாடுகளுக்கு தொடர்ந்து வெளியேறினார்கள்.

 ஹசரா மக்கள் தொகை  வீதம் இன்னமும் 20 வீதமாக  ஆப்கானிஸ்தானில் உள்ளது.  அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இருந்த காலத்தில் இவர்கள் அமெரிக்கர்களோடு சேர்ந்து இருந்தார்கள்.  அமெரிக்கா வெளியேறும்போது  விமான நிலத்தில் வெளியேற முற்பட்டவர்களாக தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டவர்களில் 90 வீதமாவது ஹசரா இனத்தவர்களாக இருக்கலாம் . ஆனால், இவர்களைப் பற்றி எவரும் பேசவில்லை.  அவுஸ்திரேலியா,   அமெரிக்கா இவர்களுக்கு   அகதி அந்தஸ்து கொடுத்துள்ளன.

ஹோட்டலில் வந்து இறங்கிய போது ஐஸ்லாந்தின் கோடைக்காலம், மெல்போன் குளிர்காலத்தை விடக் குளிராக இருந்தது. எங்கள் ஹோட்டல்,  கடற்கரையில் உள்ளதால் குளிர்காற்று தேகத்தை மருத்துகொண்ட  ஊசிகளாக உள்ளே   ஊடுருவியது.   இதுவரை மற்றைய ஐரோப்பிய நாடுகளில்  போட்ட ஆடைகள் இங்கு பொருந்தாது என்ற விடயம் புரிந்ததும்  குளிரைத் தாங்கும் உடைகள் வாங்க கடைகளுக்குச் சென்றோம்  

ரீச்சவிக், ஐஸ்லாந்தின் தலைநகர் என்ற  போதிலும் அவுஸ்திரேலியாவிலுள்ள சிறிய நகரம் ஒன்றுபோல் தெரிந்தது .  எப்படி அலைந்து திரிந்தாலும் நாங்கள் தொலைந்து போக முடியாத பாதுகாப்பான இடம். துணிக் கடைகளில், ஆடைகளின் விலைகள் மெல்பேனை விட மூன்று மடங்கு அதிகமாகத்  தெரிந்தது. கிட்டத்தட்ட நான்கு லட்சம் மக்கள் உள்ள நாட்டில்,  20  வீதமானவர்கள் மில்லியனர்கள். இது உலகத்தில் விகிதாசாரத்தில் முதன்மையானது. இதன் பின்பே லக்சம்பேர்க்,  சுவிஸ்லாந்து என்பன வருகின்றன.

மதிய உணவாக உருளைக்கிழங்கு வறுவல், பொரித்த மீன் என வாங்கும்போது உணவின் விலை,  நாசா விடும் ரொக்கட் உயரத்தில் இருந்தது. ஒருவரது  உணவை இருவரும் பகிர்ந்தோம். முக்கியமாக கொட்        (Cod fish) மீன் எனப்படும்  பிரித்தானியர்களின் தேசிய உணவு, (Fish and Chips)  இங்கிருந்தே போகிறது. 

கடற்கரை வீதியில் நடந்தபோது,  தூரத்தில் ஒரு வெண் மேகம் கூட்டமாக தெரிந்தது. கூர்ந்து பார்த்தபோது அது ஒரு மலையின் வாயிலிருந்து எரியும் புகையாக எழுகின்றது. பல வருடங்களுக்கு முன்பாக ஒரு முறை   டெல்லியைச் சுற்றிய காலத்தில் பல செங்கல் சூளைகள் புகைத்தபடி  இருந்ததைப் பார்த்த நினைவு என் மனதில்  நிழலாடியது.

எரிமலைகளோடு வாழ்பவர்களுக்கு  அவற்றால் ஒரு நன்மை உண்டு.   ஐஸ்லாந்தில்,  நிலத்தின் வெப்பத்திலிருந்து (Geothermal) மின்சாரம் எடுக்கிறார்கள். அதனால் இங்கு மின்சாரம் மலிவானது,  அத்துடன் சுத்தமானது.

கடற்கரை பகுதியில் சில கலை வடிவங்கள் அமைக்கப்பட்டு காட்சியாக இருந்தன. ஒரு இடத்தில் முற்றாக உருக்கில் வடிக்கப்பட்ட படகு வடிவத்தில் ஒரு மாதிரி வடிவம் – அது வெயிலில் ஒளிர்ந்தது.   அக்காலத்தில் இங்கு வந்த  வைக்கிங் என்ற நோர்வே இன  மூதாதையர் நினைவாக அமைக்கப்பட்டிருந்தது .

அதற்கப்பால் இரண்டடுக்கில்  கட்டப்பட்ட  வீடு தனியாகத் தெரிந்தது. அழகாக செதுக்கிய பச்சைப் புல் வெளியுடன், சிறிய சுற்றுமதில் கொண்ட கடலோர வீடு . அதைப் பற்றி  விசாரித்தபோது,  அது  1909 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீடு என தெரியவந்தது . ஒரு காலத்தில் பிரித்தானிய தூதரின்  வாசஸ்தலமாக இருந்தது. அக்காலத்தில் ரீச்சவிக்கிலுள்ள இதுவே பெரிய வீடாகும். இங்கு பிரித்தானிய பிரதமர் வின்சன்ட் சேர்ச்சில் தங்கியதாக  அறிந்தேன்.  அதைவிட  1986இல்,  டோனால்ட்  ரீகனும்- கோர்பசேவ் இருவரும் இந்த வீட்டில் அமர்ந்தே அணுவாயுதக் குறைப்பு பற்றி  பேசிய இடம்.  இந்த வீட்டை ஒரு தேசிய  சின்னமாக  பாதுகாக்கிறார்கள். அந்த வீட்டின் முன்பாக பேர்லின் சுவரின் ஒரு பகுதி கடற்கரை வீதியோரமாக நிறுத்தி  வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து  அந்த வீதியில்  நடந்தபோது , முக்கியமான ரீச்சவிக் அருங்காட்சியகம்  வந்தது. மிகவும் நவீனமான,கலை நேர்த்தியான கட்டிடம் . உள்ளே செல்ல கட்டணம். ஆனால், உள்ளே சென்று  முழுவதும் பார்க்க நேரம் போதாததால் மற்றொரு நாளில் பார்ப்போம் என பின்போட்டோம். 

மாலையில் எங்கள் வழிகாட்டி வந்தார்  அவர் ஐஸ்லாந்தைச் சேர்ந்த இளைப்பாறிய ஆங்கில  ஆசிரியர், ஸ்கொட்லாந்தில் படித்தவர் . அவரை சந்திக்க சென்ற எங்களுக்கு , அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.  எங்களது குழுவை சேர்ந்த மற்றைய ஆறு பேரும்,  நாற்பது வயதிற்கு கீழ்பட்டவர்களாக இருந்தார்கள்.  அவர்களுடன் எப்படி நாங்கள் ஈடு கொடுத்து ஏழு நாட்கள்  நடக்கப் போகிறோம் என்ற கவலையை நாங்கள் வெளிப்படுத்த,  வழிகாட்டி ‘ தனக்கு 70 வயது என்றும்,  என்னால் நடக்க முடிந்த இடங்களுக்கே நான் அழைத்துச் செல்வேன்- பயப்பட வேண்டாம்.

எரிமலை ஏறுதல், ஆழ்கடல் நீந்துதல் என்ற சாகச செயல்கள்  எங்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லை ‘ என மேலும்  சொல்லி புன்னகைத்தார்.  அடுத்தநாள் காலநிலை நன்றாக இருக்கிறது என்றும் சொல்லி வைத்து,  காலையில் எட்டு மணியளவில் வாகனத்தில் வெளிச்செல்லத் தயாராக இருக்கும்படி சொன்னார்.

சூரியன் மாலையில்  அஸ்தமித்து இரவில்  இருளாகுமென, வாழ்க்கையில்  இதுவரை நாளும் பொழுதும் நாங்கள் அறிந்த  மிகப் பெரிய உண்மை ஐஸ்லாந்தில்,  பொய்யாகியது. நடுநிசி  பன்னிரண்டு மணிவரை இரவின் வரவுக்காக காத்திருந்தோம் . எதுவும் நடக்கவில்லை .பொறுமை இழந்து,  ஜன்னல்களை இழுத்து மூடிவிட்டு படுத்தோம்.

அடுத்த நாள் எங்களுடன் வந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்,  இரவு இரண்டு மணியளவில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தேன் எனக் கைத் தொலைபேசியில்  படத்தைக் காட்டினாள். அழகாக இருந்தது. அவளுக்கு 23 வயது. அவளால் இரவு முழுவதும் காத்திருக்க முடிந்தது.  நானும் இரவு இரண்டு மணிவரையும் விழித்திருந்து புத்தகம் படித்துவிட்டு,யாழ்ப்பாணம்  இந்துக் கல்லுரிக்கு சென்ற காலம் நினைவுக்கு எனக்கு வந்தது .இப்பொழுது நாங்கள்  இலையுதிர்காலத்தில் வீசும் காற்றுக்கும் நடுங்கும்  மரத்தில் உள்ள பழுத்த  இலைகளின் நிலையில் இருந்தோம்.

“ஐஸ்லாந்து :1” மீது ஒரு மறுமொழி

  1. Great Service to Tamil World with Great Courage Dedication Enthusiasm
    Happiness Knowledge Talent Hardwork Truth Dialogue etc! Great to know Great
    People & Great places! Kind regards to ur wife too! How many countries u
    visited so far! We visited 52 Countries! God Bless Guide Protect Help U All
    Always!

dragonsillyc26c663145 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.