– நடேசன்


கவிஞர்களை நம்பி…
-நொயல் நடேசன்
“கவிஞர்களை மதித்து அவர்களைக் கௌரவியுங்கள். ஆனால், அரச விடயங்களில் அவர்களைத் தொலைவில் வையுங்கள்” என்ற பிளாட்டோவின் 2300 வருடங்களுக்கு முந்திய வாசகம் பலகாலமாக எனது மனத்திலிருந்தது.
In the Republic, Plato states that poets have no part in an ideal state. They spread misinformation and corrupt the young people’s minds.
Socrates believes that poetry is like lollies: tasty but not good for us.
இந்த வார்த்தைகளை இலகுவாகத் தள்ளிவைத்து விடமுடியாது. தற்காலத்தில்கூட.
அக்காலத்தில் காவியத்தில் பாடிய விடயங்கள் உண்மை என வால்மீகியின் உண்மையைத்தேடி இந்தியா, இலங்கையில் மட்டுமல்ல, ஹொமரின் ரோய்யை (Troy) த்தேடி (துருக்கி) என்ற இடத்திலும் நிலத்தை தோண்டுகிறார்கள். கவிஞர்களின் கற்பனைக்கு உருவம் கொடுக்க முயல்கிறார்கள்.
கவிஞர்கள், ஓசைகளுக்கு ஏற்ப வார்த்தைகளைக் கொண்டு பொருள் தேடுவதால் பல வேளைகளில் பொருள் வரும். சில வேளைகளில் அதனால் ஆபத்து ஏற்படும்
எனது இளமைப் பருவத்தில் (1970 களில்) காசி ஆனந்தன் என்ற கவிஞனின் பாடல்கள் எனக்கு இன உணர்வை ஊட்டின. அதைக் கேட்டு இளைஞர்கள், தங்களுடைய கைகளில் கீறி, இரத்தத்தை எடுத்து, தமிழ் அரசியல்வாதிகளுக்கு இரத்தப் பொட்டு (வீரத் திலகம் – வெற்றித் திலகம்) வைத்ததையும் பல கூட்டங்களில் பார்த்திருக்கிறேன்.
அந்தப்பேச்சுகளைக்கேட்டு என்னுடைய இரத்தம் கொதித்தாலும் என்னைக் காயப்படுத்தத் துணிவு கிடைக்காததால் நான் அதைச் செய்யவில்லை. பிற்காலத்தில் அதிலிருந்த இனத்துவேசம் எனக்குப் புரிய, ‘அந்த வார்த்தைகள் தமிழர்களுக்கு ஆதரவானவை அல்ல, எதிரான குண்டுகள்‘ என்பதை உணர்ந்தேன்.
இரத்தப் பொட்டு வைத்தவர்கள் அப்படியே ஆயுதம் ஏந்தும் போராட்டத்தில் குதித்தனர். காசி ஆனந்தன் மேலும் உஷார் அடைந்து,
“எடுகையில் வெடிகுண்டை புலியே நீ வாடா..”,
”கரும்புலி மாமகள் வருகிறாள்…”,
“நஞ்சு கழுத்திலே நெஞ்சு களத்திலே…”,
“நெருப்பில் நீராடுவோம் நாங்கள் நிமிர்ந்து போராடுவோம்….”,
பொறிகக்கும் விழியோடு புறப்பட்டுவிட்டோம்…”,
”வெட்டி வீழ்த்துவோம் பகையே…”
என்று போர் வெறிப்பாடல்களை எழுதினார்.
இந்தப் பாடல்கள் ஏற்படுத்திய உற்சாகத்தில் பல்லாயிரக்கணக்கானோர் போரில் குதித்து மாண்டனர். அவர்கள் எதிர்பார்த்த விடுதலை கிடைக்கவில்லை. தமிழ் மக்களுக்கு அழிவும் தோல்வியுமே கிடைத்தது.
காசி ஆனந்தன் எந்த கவலையும் இல்லாது இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறார்.
ஆனால் அவரால் ஈர்க்கப்பட்ட இளைஞர்களின் வாழ்க்கையும் உயிரும்?
அவருடைய கவிதைகள் உண்டாக்கிய இன உணர்வலை ஏற்படுத்திய எதிர்மறைத் தாக்கம் பாரியது. ஆனால், காசி ஆனந்தன் இன்னும் புகழோடுதான் இருக்கிறார். ஏற்பட்ட அழிவைக் குறித்து எந்தக் குற்றவுணர்ச்சியும் அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
பேராதனை பல்கலைக்கழகத்தில் நான் படித்த காலத்தில், பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்க மேடையில் இடதுசாரி – நல்ல கவிஞராக நான் பார்த்த கவிஞர் புதுவை இரத்தினதுரை, பிற்காலத்தில்
“சிங்களக் கிணறுகள் யாவும் சீக்கிரம் ஊற்றடைக்க வேண்டும்
மணநாளிலும் மரணமே நிகழ வேண்டும்
ஆக்கும் சோற்றில் புழுக்கள் நெளிய வேண்டும்
சிங்களப் பெண்களெல்லாம் மலடாக வேண்டும்
முற்றிய வயல்கள் எல்லாம் பற்றி எரிய வேண்டும்
வற்றாத கங்கையும் வற்றி புழுதியாக்க வேண்டும்
பஞ்சம் வந்து அவர்கள் சாக வேண்டும்’’
என்று இனவெறி பாடினார்.
அப்படியே இடதுசாரியத்தைத் தூக்கி எறிந்து விட்டு, விடுதலைப்புலிகளின் அரசவைக் கவிஞர் ஆனார்.
புலிகளின் சிவப்புக் குருதி படிந்த விடயங்களையும் மஞ்சள் நிறத்தால் மங்கலமாக்கினார். இறுதி வரையும் கறள் பிடித்த துப்பாக்கியோடு பயணித்த பின் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார்.
கடைசியில் தன்னையும் அழித்தார்!
இவர்கள் எல்லோரையும் விடக் கல்வி வாய்ப்புகளைப் பெற்ற பேராசிரியரும் கவிஞருமான சேரன் உருத்திரமூர்த்தி,
“கைகளைப் பின்புறம் இறுகக் கட்டி
யாருக்காகக் காத்திருந்தீர்கள்?
முகில்களின் மீது
நெருப்பு,
தன் சேதியை எழுதியாயிற்று!
இனியும் யார் காத்துள்ளனர்?
சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து
எழுந்து வருக.”
எனப் போர்ப்பரணி பாடினார். ‘மரணத்துள் வாழ்வோம்‘ என நேரடியாக அந்தக் கவிதையை இவர் எழுதாது விட்டாலும் சேரனுடைய பல கவிதைகள் இதே தொனிப்பொருளைக் கொண்டவை. அதோடு, ‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற கவிதைத் தொகுப்பை உருவாக்குவதில் சேரன் முனைப்பாக நின்று சக போராட்ட ஆதரவாளர்களோடு இணைந்து தொகுத்து வெளியிட்டார். அந்தத் தொகுப்புக்கு சேரனே முன்னுரையும் எழுதியிருந்தார்)
‘மரணத்தில் வாழ்வோம்’ என ஆயுதமேந்தக் கூடிய உணர்வலைகளை ஏற்படுத்தும் விதமாகக் கவிதை எழுதிய சேரன், வரலாற்றுப் படிப்பினைகளில் இருந்து எதையும் படித்துக் கொள்ளாமல், பாதையற்ற ஊருக்குத் தமிழ்த் தேசியத்தின் பெயரால் அழைத்துச் செல்ல முயல்கிறார். அவருடைய புத்திஜீவித்தனத்துக்கும் கவிஞனுக்கும் என்ன தொடர்புண்டு? என்ன நியாயம் உள்ளது? இந்த நிலையில்தான் தன்னுடைய கவிதைகளை உலக மயமாக்க முயற்சிக்கிறார் சேரன்.
மனிதர்கள் வாழவேண்டும், கவிஞர்களே!
எனக்குப் பிடித்த நல்ல கவிஞர், நண்பன் வ.ஐ.ச ஜெயபாலன். சில அரசியல் செவ்விகள் (தீராநதி) மூலம் இந்திய அரசுக்கும் புத்தி சொல்லி, தமிழீழத்தை உருவாக்க முயன்றார் . ஜெயபாலன் மற்ற மூவரும் போல் இனவாதி அல்ல என்பது ஆறுதல்.
நான் பார்த்து வளர்ந்து, பின் முதிர்ந்த காலங்களில், இப்படிக் கவிஞர்கள் சிந்தித்தது எதனாலே என எனது மருத்துவ அறிவின் வழியாகப் பார்த்தபோது அவர்கள் எல்லாம் உணர்வு மயப்படுகிறார்கள். அவர்கள் மூளையின் உணர்வுப் பகுதியால் (Temporal lobe of the brain) வழி நடத்தப்படுகிறார்கள். மூளையின் முன்பகுதியில் அமைந்துள்ள (Frontal lobe) பகுத்தறிவைப் பாவித்து அவர்கள் வேலை செய்யவில்லை. தரவுகள் , தர்க்கங்கள், உண்மைகள் அவர்களுக்குத் தேவையில்லை. உணர்வெழுச்சியே அவர்களுடைய அடைப்படையாக – ஆதாரமாக இருக்கிறது.
இதனால் ஏற்கனவே சர்கரை வியாதி உள்ளவனுக்கு இரண்டு கையால் சர்க்கரைப் பொங்கல் அள்ளிக்கொடுக்கும் பூசாரியாகினார்கள். இதைத்தான் கிரேக்க அறிஞர்கள் அக்காலத்தில் சொன்னார்கள் என நினைக்கிறேன்.
நமது இலங்கைக் கவிஞர்கள் போல தீவிர அரசியலைப் பேசி ஆபத்துகளை உருவாக்காத போதும் நமக்கு 22 மைல் தூரத்தில் உள்ள தமிழ்நாட்டிலும் சில விடயங்கள் நடந்திருக்கிறது. அவற்றைச் சீரியஸாக எடுக்காது சிரித்துவிட்டுக் கடந்து போகலாம்.
கண்ணதாசனின் அருமையான திரைப்படப் பாடலொன்று, ‘செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்’ நான்கு கில்லாடிகள் படத்தில். எனக்குப் பிடித்த பாட்டு. ஆனாலும், எப்படி செவ்வானத்தில் நட்சத்திரம் தெரியும்? என பாடலைக் கேட்கும்போது நினைப்பேன்.
‘மிருகங்களுக்குச் சர்க்கரை வியாதி இல்லை ‘ என்றார் வைரமுத்து. ஆனால் நாய், பூனைகளின் சர்க்கரை வியாதிக்கு நாற்பது வருடங்களாக வைத்தியம் பார்த்த எனக்கு ஆச்சரியமாக இருந்தது இது. அவருக்கு இதைப் பற்றித் தெரியாதது அல்ல பிரச்சினை. பலருக்குப் பல விடயங்கள் தெரியாது குறை அல்ல. தெரியாத விடயத்தைக் குறைந்த பட்சம் சென்னையில் ஒரு கால்நடை வைத்தியரிடம் கேட்டிருக்கக் கூடாதா? என்பதே பிரச்சினையாகும்.
நான் பெருவில் உள்ள மச்சுபிசுவுக்குப் போய் வந்தேன். மச்சுபிசுவை ஸ்பானிய காலனி ஆட்சியாளரால் பல நூற்றாண்டுகளாக கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் இன்கா மக்கள் இறுதிவரையும் அங்கு சுதந்திரமாக வாழ்ந்தார்கள். மச்சுபிசுவைவை பார்த்த புரட்சியாளர் சேகுவாரா ‘இறுதியான சுதந்திர இன்கா மனிதர்கள் வசித்த இடம்’ என்றார்.
எந்திரன் படத்தில், அங்கே படமாக்கிய ரஜினியும் ஐஸ்வர்யாராயும் ஆடிப்பாடும் காட்சி உள்ளது. அதில் வரும் வார்த்தைகளில் சம்மந்தமே இல்லாமல் ஆபிரிக்காவின் கிளிமாஞ்சாரோ மலை வருகிறது. இப்படியான ஒரு இடத்தை ஆப்பிரிக்க மலையின் பெயரால் கவிஞர் பா விஜய் பாடியது அந்த இன்கா ஆதிக்குடிகளை அவமானப்படுத்தும் விடயம்.
யாராவது ஒருவர் அந்த வார்த்தையைத் திருத்தியிருக்கக் கூடாதா?
நம் கால கவிஞர்கள் இப்படி என்றால், அக்காலத்தில் பாடியவர் மிகவும் கருத்தானதாக திருவிளையாடல் படத்திலும் வரும் குறுந்தொகை – கொங்குதேர் வாழ்க்கை பாடல் இப்படி உள்ளது.
———————
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே !
(குறுந்தொகை 2 ஆம் பாடல்-இறையனார்)
நானூறு (401?) பாடல்களைக் கொண்ட நான்கு முதல் எட்டு அடிகளாலான குறுந்தொகையின் இரண்டாம் பாடலாகிய இப்பாடல், திருவிளையாடல் திரைப்படத்தால் புகழ்பெற்றது. இறைவனே (இறையனார்) எழுதியதாக நம்பப்படுகிறது.
கொங்கு- பூவின் மகரந்தம்
தேர்- தேர்தெடுக்கும்
வாழ்க்கை – வாழும்
அஞ்சிறைத்தும்பி – உள்ளே சிறகுகளை உடைய தும்பி (வண்டு) – (அம் சிறை -அழகிய சிறகுகள்)
காமம் செப்பாது – நான் விரும்பியதைச் சொல்லாது
கண்டது மொழிமோ – நீ கண்டறிந்ததைக் கூறு
பயலியது கெழீய நட்பின் – பல பிறவிகளிலும் நட்புடன் விளங்கும்(கெழி – நட்பு)
மயிலியல் – மயில் போன்ற
செறியியெற் றரிவை- செறிவான பற்களைக் (எயிறு) கொண்ட பெண்
கூந்தலின்- கூந்தலை விட
நறியவும் உளவோ- மணமிகுந்த ஏதேனும் உள்ளதோ
நீ அறியும் பூவே- நீ அறிந்த பூக்களிடம்.
ஆனால் உண்மையில் தும்பிகள் மாமிச பட்சணிகள். அவை தேன் உண்பதில்லை. தேனியைத்தேடி வரும் சிறிய வண்டுகளையே உண்ண வருகின்றன
இறையனார் என்னைப்போல் தாவர இயல், விலங்கியல் படித்தவரில்லை.
இங்கே நான் எழுதியவை நல்ல, எனக்கு பிடித்த கவிஞர்கள் இவர்கள் என்பதால் மட்டுமே.
நமது ஆசான் திருவள்ளுவர் கூறியதுபோல் –
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
00
00
noelnadesan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி