ஒரு குட்டிக்குரங்கின் கதை( மும்மொழியில்)

அறிமுகம்:

ஒரு குட்டிக்குரங்கின் கதை ( மும்மொழியில் )

         ( குழந்தை இலக்கியம் ) –   ஷோபா பீரிஸ்

                                                  முருகபூபதி

குழந்தைகளுக்காக இலக்கியம் படைப்பது மிகவும் சிரமமானது.  எனினும் தமிழ் – சிங்களம் – ஆங்கிலம் உட்பட உலகமொழிகள் பலவற்றில்  குழந்தைகளுக்கான இலக்கிய நூல்கள், குழந்தைகளின் கண்களையும் கருத்தையும் கவரத்தக்க வகையில்  வெளியாகிக்கொண்டுதானிருக்கின்றன.

நாம் குழந்தைப்பருவத்தில்  வாழ்ந்த காலத்தில், எமது தாத்தா – பாட்டிமார், மற்றும் அப்பா, அம்மா சொன்ன குழந்தைகளுக்கான கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள்தான்.

ஆமையும் – முயலும், சிங்கமும் – முயலும்,  – கொக்கும் – நரியும், கோழியும் – பூனையும் –  நாயும் – பூனையும் , குரங்கும் – தொப்பி வியாபாரியும் முதலான பல குழந்தைகளுக்கான கதைகளை கேட்டு வளர்ந்திருக்கின்றோம். 

பெரும்பாலும், குழந்தைகளுக்கான கதைகள் வண்ணப்படங்களுடன்தான் வெளியாகிக்கொண்டிருக்கும்.  நவீன தொழில் நுட்ப வளர்ச்சி அசுரவேகம் எடுத்துள்ள இக்காலத்தில்,  குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளும் பெருகிவிட்டன.

குழந்தைகள் பெற்றோரின் கைத்தொலைபேசியின் தொடுதிரை மூலமாக தமக்குப்பிடித்தமானவற்றை பார்த்து கேட்டு ரசிக்கின்றனர்.

இதனால், அவர்களின் கண்பார்வைக்கும் பாதிப்பு நேர்கிறது.

ஆயினும், இந்த அவசர யுகத்தில், பெற்றோர்கள் தமது குழந்தைகளை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

பத்திரிகை – இதழ்கள் உட்பட பல ஊடகங்களும் கைத்தொலைபேசி தொடுதிரைக்குள் பிரவேசித்துவிட்டன.

இந்தப்பின்னணிகளுடன்தான் எனக்கு அண்மையில் கிடைத்த ஒரு சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கான வண்ணப்படங்கள் அடங்கிய நூலை இங்கு அறிமுகப்படுத்துகின்றேன்.

இதனை படைத்தவர் ஷோபா பீரிஸ். ஓவியங்களை வரைந்திருப்பவர் சிந்துபமா சந்திரசேன, தமிழ் மொழிபெயர்ப்பு,  தமிழ் இலக்கியத்துறைக்கு அறிமுகமான, பிரித்தானியாவில் வதியும் கலா. ஶ்ரீரஞ்சன்.

ஒரு அடர்ந்த காட்டில் வாழ்ந்த இரண்டு முயல்களுக்கும், சில குட்டிக்குரங்களுக்குமிடையிலான கதைதான்  ஒரு குட்டிக்குரங்கின் கதை.

குரங்குகள் குட்டி முயல் பிந்துவை எப்போதும் சீண்டிக்கொண்டிருக்கின்றன.  அதற்கு ஆறுதல் சொல்வது மூத்த முயல் லூசி.

இறுதியில், லூசியின் அறிவுரைகேட்டு, குட்டிக்குரங்குகள் திருந்தி, பிந்துவை அணைத்துக்கொள்கின்றன.

கொழும்பு சரஸவி வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.

நூலாசிரியர் ஷோபா பீரிஸ், ஏற்கனவே தமது குழந்தை இலக்கிய நூல்களுக்காக விருதுகள் பெற்றவர்.

இந்த நூலின் கூட்டு முயற்சியிலிருந்து , இலக்கியத்தின் மூலமும் இன நல்லிணக்கத்தை பேண முடியும் என்று இந்த இலக்கிய சகோதரிகள் எமது சமூகத்திற்கு சொல்கின்றனர்.

அதிலும் குழந்தைகளுக்கான இலக்கியத்தின் மூலம் என்று சொல்ல முனைந்துள்ளனர்.

—-0—

“ஒரு குட்டிக்குரங்கின் கதை( மும்மொழியில்)” அதற்கு 2 மறுமொழிகள்

  1. Letchumanan Murugapoopathy அவதார்
    Letchumanan Murugapoopathy

    Thanks 🙏

  2. பிரியத்திற்குரிய எழுத்தாளர் முருகபூபதி அவர்களின் ஆக்கபூர்வமான அறிமுகத்திற்கும், அதனைப் பிரசுரித்த எழுத்தாளர் நொயல் நடேசனுக்கும் நன்றிகள்.

Letchumanan Murugapoopathy -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.