காலங் காலமாகத் தர்க்கமற்ற செயல்கள் நமது சமூகத்தில் நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. அதைப் புரிந்து கொண்டு மௌனமாக இருந்துகொண்டால் நமக்கு நல்லதுதான். ஆனால் சில நேரங்களில் அது நம்மால் முடியாததாக இருக்கிறது.
அவ்வாறான ஒரு செயற்பாடு அண்மையில் நடைபெற்று, எனது மௌனத்தைக் கலைக்க வைத்துவிட்டது. விடயம் இதுதான்!
“கனவுச்சிறை” என்பது ஓர் அற்புதமான நாவல். அது கனடாவில் உள்ள தேவகாந்தன் எழுதியது. வசன நடையில் அமைந்திருந்தாலும், காப்பிய தன்மையைக் கொண்டது. கடந்த கால் நூற்றாண்டுகளில் நான் வாசித்த இலங்கைத் தமிழ் நாவல்களில் முதல் இடத்தில் வைக்கக் கூடியது. அதன் நிறை குறைகளைப் பல வருடங்களுக்கு முன்பு நான் எழுதியிருந்தேன். அந்த நாவலுக்குச் சில வருடங்களுக்கு முன்னர், கனடா இயல் விருதைக் கொடுத்திருந்தார்கள். அது நல்ல விடயம் பாராட்டுக்குரியது!
ஆனால் அந்தக் “கனவுச்சிறை” நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு, 2024ஆம் ஆண்டுக்கான கனடா இயல் விருதை அண்மையில் கொடுத்திருக்கிறார்கள்!
ஆங்கிலத்திலோ அல்லது வேறெந்த மொழியிலோ எழுதப்பட்ட ஒரு நூலின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஒரு தமிழ் அமைப்பு விருது கொடுப்பது சரியானது. “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்று பாரதி சொன்னதைச் செயற்படுத்துவதாக அதைக் கொள்ளலாம், பாராட்டவும் செய்யலாம். ஆனால், ஒரு தமிழ்நூலை வேறு மொழிகளில் மொழிபெயர்த்தமைக்கு விருதுகொடுக்கும் தேவைப்பாடும், தகுதியும் தமிழ் அமைப்புக்களுக்கு உண்டா என்பதுதான் எனது கேள்வி.
இந்தக் கேள்வி என்னைப்போலப் பலரது மூளைகளிலும் குடைந்துகொண்டிருக்கும். ஆனால், அவர்களது பணத்தை, அவர்கள் செலவு செய்கிறார்கள், யாருக்கு எதை, எப்படிக் கொடுக்க வேண்டும் என்பது அவர்களது உரிமை, அதனால் நாம் எதுவும் சொல்லமுடியாது, நமக்கேன் வீண் வம்பு என்று அவர்கள் மௌனம் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி என்னால் இருக்க முடியவில்லை.
இதை எழுதுவதன் காரணம் பிற்காலத்தில், ஆங்கில நூல் ஒன்றைத் தமிழில் மொழி பெயர்த்த ஒருவருக்கு யாராவது விருது கொடுத்து, பாரதியின் கனவாக நம் மொழியைச் செழுமைப் படுத்தியவரைப் பாராட்டியதாகப் பெருமை கொள்ள ஏதுவாகலாம் என்பதுதான்.
உண்மையில் கனவுச் சிறையின் மொழி பெயர்ப்புக்கு யாராவது ஆங்கில குழுவினர் பாராட்டிப் பரிசுகொடுப்பதே உகந்ததாகும்!
எனது மௌனத்தை உடைத்துவிட்டேன்! மற்றவர்கள் எப்போது உடைக்கப்போகிறார்கள்?
பின்னூட்டமொன்றை இடுக