முன்னுரை– பெருமாள் முருகன்

உழவுக் குடும்பப் பின்னணி கொண்டவன் என்பதால் பிறந்தது முதலே பூனை, நாய், ஆடு, மாடு, கோழி ஆகியவற்றோடு தான் வளர்ந்து வந்தேன். நீர்வளம் அற்ற மேட்டுக்காட்டு வேளாண்மையில் இந்த வளர்ப்பு விலங்குகள் எங்கள் பொருளியல் தேவைகளை நிறைவு செய்வனவாக இருந்தன. எங்களை மட்டுமல்லாமல் ஆடு மாடுகளையும் காவல் காக்கும் நாய்களும் தானியத்திற்குப் பெருஞ்சேதம் விளைக்கும் எலிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வேலையைச் செய்யும் பூனைகளும் பொருளியலுக்கு அவசியமானவை.
ஆடுமாடுகளின் பட்டியிலும் கட்டுத்தறிகளிலும் உழன்று கிடந்தவன் என்பதால் அவற்றைப் பற்றி மிகுதியும் அறிந்தவன் என்னும் சிறுகர்வம் எனக்குண்டு. அதைச் சற்றே மட்டுப்படுத்தியவை கால்நடை மருத்துவரும் எழுத்தாளருமான நோயல் நடேசன் அவர்களின் கட்டுரைகள். அவர் தம் அனுபவங்களைச் சுவையாக விவரிக்கும் கட்டுரைகளைக் கொண்ட ‘வாழும் சுவடுகள்’ என்னும் நூல் ஏற்கனவே வெளியாகியுள்ளது. இப்போது இருபது கட்டுரைகளைத் தொகுத்து ‘நாலு கால் சுவடுகள்’ நூல் உருவாகியுள்ளது. ‘அசோகனின் வைத்திய சாலை’, ‘பண்ணையில் ஓர் மிருகம்’ என அவர் எழுதியுள்ள இருநாவல்களும் கால்நடை மருத்துவராக அவர் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் உருவானவைதான்.
வளர்ப்பு விலங்குகள் குறித்து என்னைப் போன்ற உழவுக் குடும்பத்தினர் கொண்டிருக்கும் விழுமியங்களும் இன்றைய நடுத்தர, மேல்தட்டுக் குடும்பங்கள் பேணும் விழுமியங்களும் ஒன்றல்ல. குறிப்பாக நாய், பூனை தொடர்பானவை. இவை இன்று வளர்ப்பு விலங்குகள் என்னும் தன்மையிலிருந்து ‘வீட்டு விலங்குகள்’ ஆகிவிட்டன. நாயை ஒருபோதும் வீட்டுக்குள் நாங்கள் அனுமதித்ததே இல்லை. சங்கிலி பிணைத்துக் கட்டிப் போடும் இரவிலும் பட்டிக்கு வெளியிலோ கட்டுத்தறியை ஒட்டியோ தான் நாய்க்கு இடம். இன்றும் என்னால் அந்த மனோபாவத்திலிருந்து மாற முடியவில்லை. நாய்க்கு உரியது வெட்டவெளிதான். மழைநாளில் வீட்டோரம் ஒதுங்கிக் கொள்ள அனுமதியுண்டு. அவ்வளவுதான்.
இன்றைய வீட்டு விலங்குக் கருத்தோட்டத்தில் நாய்க்கு வீடுதான் வெளி என்றாகிவிட்டது. வீட்டுக்குள் மனிதர்கள் புழங்கும் எல்லா இடங்களும் நாய்களுக்கும் உரியவை. ஆனால் புறவெளி சுருங்கிவிட்டது. வெளியே அழைத்துச் செல்லும் போது பிணைத்த சங்கிலியின் நீளத்திற்கு உட்பட்ட வெளியில் அவை புழங்கிக் கொள்ளலாம். வீட்டையும் வெளியாகவே கருதித் திரிந்த பூனைகள் இப்போது வீட்டுக்குள் மட்டும் அடைந்து கிடக்கின்றன. மனிதர்க்குப் பொருளியல் பயனை ஈட்டித் தர உதவி புரிந்த அவை வீட்டு விலங்குகள் ஆனதும் செலவுக்குரியவை ஆயின. வீட்டில் நாயோ பூனையோ வளர்ப்போர் அவற்றுக்கெனத் தம் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டியிருக்கிறது. இம்மாற்றங்களுக்கு ஏற்ப மனித மனோபாவங்களும் மாறியிருக்கின்றன.
பெரும்பாலும் வீட்டு விலங்குகளுக்கு சிகிச்சை செய்வதைத் தொழிலாகக் கொண்டிருந்த கால்நடை மருத்துவர் நோயல் நடேசன். அவர் கற்ற கல்வியும் பயிற்சி அனுபவமும் அவ்விலங்குகளுக்கான நோய்களைச் சட்டென அறிந்து ஏற்ற மருத்துவத்தைக் கையாள உதவியிருக்கின்றன. பல்வேறு வகையான நாயினங்களையும் அவற்றின் இயல்புகளையும் தம் கட்டுரைகளில் போகிற போக்கில் பதிவு செய்திருக்கிறார். கூடுதலாக அவரது கவனம் விலங்குகளை வளர்ப்போர் மனோபாவம், அவர்களின் பின்னணி, பிரச்சினைகள் என விரிந்திருக்கின்றன. அத்தகைய கவனம் அவர் எழுத்தாளராக இருப்பதால் சாத்தியமாயிருக்கிறது என்றே தோன்றுகிறது. ஆழ்ந்த மருத்துவ அறிவும் அனுபவச் செழுமையும் நுட்பமான அவதானிப்பும் மனோபாவங்களைப் படிக்கும் கூர்ந்த நோக்கும் இணைந்த பார்வை கொண்டவை இவரது நூல்கள்.
எத்தனையோ விதமான மனிதர்கள்; எத்தனையோ வகை மனோபாவங்கள். கணவன் மனைவி விவாகரத்துப் பெற்றுவிட்ட பிறகு இறந்த வளர்ப்பு நாயின் அஸ்தியை இருவரும் பாதிபாதியாகப் பங்கிட்டுக் கொண்ட சம்பவத்தை ஒரு கட்டுரை பதிவாக்கியிருக்கிறது. அதை வாசித்த பிறகு வெகுநேரம் ஒன்றும் ஓடாமல் அப்படியே சமைந்திருந்தேன். ஆஸ்திரேலியச் சம்பவம் ஒன்று. கணவன் இறந்த பிறகு நினைவாக அவன் குதிரையை ஒரு பெண் வளர்க்கிறார். நாய்களே நூலெங்கும் ஆக்கிரமித்திருக்கின்றன. அதுதான் இன்று பெரும்பாலும் வீட்டு விலங்கு. பூனைகளை அங்கங்கே காண முடிகிறது. இந்தக் கட்டுரையில் குதிரை வருவது விலக்கு. அக்குதிரையைப் பற்றிய விவரணைகளும் அதற்கு மருத்துவம் செய்யும்போது முன்னங்கால்களைத் தூக்கிக் கொள்ளச் செய்வதும் எனக்குப் புதிதாக இருந்தன. பின்னங்காலால் உதைக்கும் குதிரையின் செயலைத் தடுக்க முன்னங்கால்களைத் தூக்கிப் பிடிப்பது உதவுகிறது. பூனைகளைப் பிடரியில் பற்றித் தூக்கினால் அவை சகல புலன்களும் ஒடுங்க அப்படியே சமைந்திருக்கும் காட்சி நினைவு வந்தது. மருத்துவர்கள் அதையும் பின்பற்றுகிறார்கள்.
இலங்கை, மலையகப் பகுதியில் பணியாற்றிய போதான அனுபவத்தைக் ‘கலப்பு உறவுகள்’ என்னும் கட்டுரை விவரிக்கிறது. வெள்ளை இனத் தோற்றம் கொண்டிருந்தாலும் சாரம் கட்டிக்கொண்டு தமிழை இயல்பாகப் பேசியபடி தோட்ட வேலை பாலு, ராமு என்னும் சகோதரர்களைப் பற்றிய கட்டுரை அது. வெள்ளைத்துரைக்கும் ‘மாரியம்மா’ என்னும் தமிழ்ப் பெண்ணுக்கும் பிறந்த பிள்ளைகள் அவர்கள். வெள்ளைத்துரையுடன் பங்களாவாசியாக இருந்த மாரியம்மாள் அதே தோட்டத்தில் தொழிலாளியாகும் நிலையைக் காலம் உருவாக்கியிருக்கிறது. வெள்ளையர் தோற்றம் கொண்ட பிள்ளைகள் தோட்டத் தொழிலாளர்களாகவே வாழ்ந்தனர். அவர்கள் கந்தசாமி என்னும் தமிழரை ‘தொர’ என்று அழைக்கும் காட்சி மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.
இத்தகைய கலப்புகள் பற்றிய சில சித்திரங்களை முத்தம்மாள் பழனிசாமி எழுதிய ‘நாடு விட்டு நாடு’ நூலில் வாசித்திருக்கிறேன். மலேசியத் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்கள் வாழ்வைப் பற்றிய பல்வேறு சம்பவங்கள் பதிவாகியிருக்கும் அந்நூலில் இத்தகைய கலப்பு விஷயங்களும் உண்டு. தோட்ட நிர்வாகியான வெள்ளையர் ஒருவரைப் போன்ற தோற்றத்தில் அங்கு வேலை செய்த பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அப்பெண் சொல்கிறாள்: ‘நாள் தவறினாலும் நட்சத்திரம் தவறாம அந்த வெள்ளைக்கார நாய் முகத்துல காலையில எழுந்து முழிச்சதினால வந்த வினை இது.’ நடேசன் எழுதுவது போன்ற வாழ்க்கைச் சம்பவம் ஒன்றும் அந்நூலில் உண்டு. வெள்ளையர் ஒருவரோடு பங்களாவில் ராணி போல வாழ்ந்த பெண் இரண்டாம் உலகப் போரின் போது நாட்டை விட்டுச் சென்றவர் திரும்பாத காரணத்தால் தொழிலாளியாக மாறிய கதைதான் அதுவும். நடேசன் அவர்கள் காட்டும் பாலுவும் ராமுவும் தம்மைப் போலவே மாட்டிலும் ஒரு கலப்பை உருவாக்க முயன்ற சம்பவம் கூடுதல் சுவாரசியம்.
இந்த நூலின் ஒவ்வொரு கட்டுரையை முன்வைத்தும் இப்படி எத்தனையோ செய்திகளைப் பேசலாம்; நினைவுகூரலாம். சிக்கலான சிகிச்சை முறைகளைக்கூட வாசகருக்குப் போதுமான அளவிலும் எளிமையாகவும் விவரணை செய்கிறார். ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு மனோபாவம் கொண்ட மனிதரைச் சந்திக்க முடிகிறது. வீட்டு விலங்குகளின் இயல்புகளும் அவை மனிதருக்கு ஆதரவாக இருக்கும் நிலையும் பின்னணியில் வந்துகொண்டே இருக்கின்றன. தமிழில் அனுபவக் கட்டுரைகளுக்குக் கிட்டத்தட்ட நூறாண்டு வரலாறு உண்டு. அதில் கால்நடை மருத்துவர் ஒருவரின் அனுபவம் இவ்வகையில் பதிவானதில்லை. ஆகவே இக்கட்டுரைகளே முன்னோடி என்று சொல்லலாம்.
அவர் கையாளும் பல சொற்கள் பற்றியும் பேசலாம். அவை தமிழ்நாட்டுத் தமிழிலிருந்து வேறுபட்டிருக்கின்றன. சான்றுக்கு ஒன்று. கால்நடை மருத்துவம், கால்நடை மருந்தகம், கால்நடை மருத்துவர் என்றெல்லாம் இங்கே பயன்படுத்துகிறோம். ‘கால்நடை’ என்பது விலங்குகளுக்கான பொதுச்சொல்லான வரலாறு தெரியவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் ‘கால்நடை’ இடம்பெற்றிருக்கிறது. அதன் முதன்மைப் பொருள் ‘காலால் நடக்கை (walking).’ இன்று ‘நடைப்பயிற்சி’ என்கிறோம். முந்தைய நாளில் இச்சொல் ‘பாதயாத்திரை’ என்னும் பொருளில் புழங்கி வந்ததாகவே தோன்றுகிறது. ‘பழனிக்குக் கால்நடையாவே வர்றன்னு வேண்டுதல் வெச்சிருக்கறன்’ என்று சொல்லும் வழக்கு உண்டு. பேரகராதியில் இச்சொல்லுக்கு இரண்டாம் பொருளாக ‘ஆடுமாடுகள்’ எனக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பேச்சு வழக்கு என்னும் குறிப்பும் உண்டு.
ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்வந்த க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் ‘(பால், இறைச்சி முதலியவற்றுக்காக அல்லது விவசாயத்துக்காக வளர்க்கும்) ஆடு, மாடு முதலிய விலங்குகள்’ என்பது முதன்மைப் பொருளாகிவிட்டது. மனிதர் நடையைக் குறிக்கும் பொருள் சுருங்கிக் ‘கால்நடையாக’ என ‘ஆக’ ஒட்டுப் பெற்று வரும் வினையடைச் சொல்லாக மட்டும் இப்போது வழங்குவதை இவ்வகராதி குறிக்கிறது. ‘கால்நடை’ என்பது பேச்சு வழக்கிலிருந்து துறை சார்ந்த கலைச்சொல்லாக ஏற்றம் பெற்று பெருவாழ்வு அடைந்திருப்பதை அறிய முடிகிறது. ஈழத்தமிழில் இப்போதும் ‘மிருக வைத்தியம், மிருக வைத்தியர்’ என்றே வழங்கி வருகிறது. பல்லாண்டு காலம் வெளிநாடுகளில் வசித்தும் ஈழத்தமிழை அவர் கைவிடவில்லை.
வாசிக்கவும் அசை போடவும் அதை முன்னிறுத்தி வெவ்வேறு செய்திகளைப் பேசவும் ஒரு நூல் வெளிகளைக் கொண்டிருக்கிறது என்றால் அதைவிட வேறென்ன வேண்டும்?
16-07-24
நாமக்கல் பெருமாள்முருகன்.
Shan Nalliah -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி