அவன் வந்தபோது…

– அலெக்ஸ்பரந்தாமன்.”””””””””””””””””””””””””””””””””””””

    வைகாசிமாத சோளகக்காற்று தெருவிலே கிடந்த குப்பை கூழங்களை மட்டுமல்லாது, கூடவே மண்ணின் புழுதிகளையும் வாரிச் சுருட்டிக்கொண்டு, வடதிசைநோக்கி வீசிச் செல்கையில், ஐயனார் கோவிலின் பெருங்கோபுர மணியோசை நேரம் பகல் பன்னிரெண்டு மணியென்பதை காற்றோடு காற்றாய் பறைசாற்றிக் கொண்டிருந்தது. 

    உச்சிவானத்திலிருந்து வரும் பகலவனின் கதிர்கள் பெரும் உஷ்ணமாய்… அதைப் பூமியெங்கும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்க, கூட்டுறவுச் சங்கக்கடையில் உலர்உணவு அட்டைக்குக் கொடுக்கப்பட்ட அரிசி, சாமான்களை வாங்கிக்கொண்டு, அவசரமாக வீடு திரும்பிக்கொண்டிருந்தாள் நல்லம்மா. உச்சிவெயிலின் தாக்கத்தினால் அவளது உடம்பிலிருந்து வியர்வைத்துளிகள் வழிந்து கொண்டிருந்தன.

    ‘ வீட்டில பெடிபெட்டை என்னபாடோ தெரியாது…?’

    வீட்டு நினைவுகளால் மனம் அவதிப்பட, தன் நடையை வேகப்படுத்தினாள் நல்லம்மா. வீட்டுக்குப்போகும் பாதையில் இடப்பக்கமாகச் செல்லும் அந்தக் குச்சு ஒழுங்கையினூடாக, சிலயார் தூரத்துக்கப்பால்  தெரியும் கள்ளுத்தவறணை அவளது பார்வையில் படுகிறது. அங்கு ‘தாகசாந்தி’ செய்து கொண்டிருந்தவர்கள்மீது சுற்றிச்சுழன்ற அவளது பார்வை… திரும்பவும் தெருவிலே தாவியது. 

    ‘அவர் இண்டைக்கு வரமாட்டாரா.. ?’

    கானல் நீராகிப்போன தனது நிகழ்கால வாழ்க்கைக்கு இறந்தகாலத்தில் தன்கணவனின் செயற்பாடுகளைச் சீர்செய்ய முடியாமல்போன அந்தநாள்களை நினைத்து,  அவள் கவலைப்பட்டாள்.

    ஆரம்பகால தாம்பத்திய வாழ்வில் இருந்த அந்தச் சந்தோஷமும், மனநிறைவும்…?

    அதை நினைக்கும்போது… நல்லம்மாவால் அழுகையை அடக்க முடியவில்லை. தலையிலே அரிசியின் பாரம் பெருஞ்சுமையாய் அழுத்த, கண்களில் இருந்து வழியும் கண்ணீரை சேலைத்தலைப்பால் துடைத்தபடி… அவள் வேகமாக நடந்து கொண்டிருந்தாள். 

    தூரத்தே அவளது குடிசை தெரிகிறது.

    தாயைக் கண்டுவிட்ட சந்தோஷத்தில் பிள்ளைகள் மூன்றும் அவளைச் சூழ்ந்து கொள்கின்றன. தலையில் இருந்த சுமையை மெதுவாக இறக்கி, குடிசைக்குள் வைத்துவிட்டு, அரிசிக்கடகத்துக்குள் கிடந்த இனிப்புச்சரையை எடுத்துப் பிள்ளைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு, தானும் ஓர் இனிப்பை வாய்க்குள் போட்டுக் கொண்டாள். வெயிலில் நடந்து வந்த களைப்பினால் வரண்டுபோன நாக்கு சற்று ஈரலிப்பாகிக் கொண்டது. 

    ‘ நேரம் போட்டுது. உலையை வார்த்து அடுப்பில வைப்பம்…’ 

    அவள் தனக்குள் எண்ணியவாறு…  உடுத்திருந்த சேலையைக் களைந்து, மாற்றுச்சேலையை அணிந்து கொண்டு, சமையலில் ஈடுபடத்தொடங்கினாள். 

    சட்டி பானை வைக்கும் பரணில் கிடந்த சருவப்பானையை எடுத்துக்கொண்டு வந்து, உலையை வார்த்து அடுப்பில் வைத்தவள், அதை மூட்ட ஆரம்பிக்கும்போதுதான், குடிசைக்குள் விறகில்லை என்பது தெரிய வந்தது. 

    ‘இனி இந்த மத்தியான வெய்யிலுக்கை விறகுக்கு எங்கை போறது…?’

    அவள் தன்னைத்தானே நொந்துகொண்ட நிலையில், குடிசையைவிட்டு வெளியே வந்து பார்த்தாள். குடிசைக்கு சற்று தூரத்துக்கு முன்பாக நன்கு செழித்து வளர்ந்து நின்ற மாமரத்து நிழலில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்பது அவளது கண்களில் தென்படுகிறது. 

    ‘கனநாளைக்குப்பிறகு கடவுளேயெண்டு அரிசி கிடைச்சிருக்குது. அதுகளுக்கு நல்ல கறியோடை சமைச்சுக் குடுக்க வேணும்.. ‘

    அவள் தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டே , குடிசையின் பின்புறமாய் சென்றவள், குறுக்குவேலியில் கறையானுக்கு இரையாகிப்போன காவோலைகளின் அடிமட்டைகளைப் பிரித்தெடுத்துக்கொண்டு வந்து, அடுப்பை மூட்டிவிட்டு அரிசியைக் கிளையத் தொடங்கினாள். 

   ‘அவர் இண்டைக்கெண்டாலும் வர மாட்டாரா.. ?’ 

    அவள் கண்கள் தெருப்படலையைப் பார்த்து ஏமாற்றமடைந்தன.

    கைகள் சட்டியில் அரிசியைக் கிளைந்து கொண்டிருக்க… மனமோ பழைய நினைவுகளைக் கிளற ஆரம்பித்தது. 

    நல்லம்மா கந்தையாவைத் திருமணம் முடித்த புதிதில், அவளது குடும்ப வாழ்க்கை மிகவும் குதூகலமாத்தான் அமைந்திருந்தது. ஏழு, ஐந்து, மூன்று… என்ற வயதடிப்படையில் முன்று பிள்ளைகளுக்குத் தந்தையான கந்தையா, நாளாந்தம் வெயிலில் நின்று வேலை செய்யும் ஒரு கூலித்தொழிலாளி.

    உடல்களைப்புக்கும், உடற்சூட்டைத் தணிப்பதற்கும் அவன் தன் நண்பர்கள் சொன்ன புத்திமதிக்கிணங்கி, நாளடைவில் பனங்கள்ளுக் குடிக்கத் தொடங்கவே நல்லம்மா மனம் பதறிப்போனாள்.

    குடியினால் பல குடும்பங்கள் சீர்கெட்டு அழிந்ததைப் பார்த்த அவள், அந்தநிலை தனது குடும்பத்திற்கும் வந்துவிடக்கூடாது… என்றே நினைத்தாள். ஆரம்பத்தில் அவனுக்கு எவ்வளவோ புத்திமதி சொன்னாள். அவனைத் தன்வழிக்குத் திருப்ப, அவள் எடுத்த முயற்சிகள் யாவும் பயனளிக்காது போயின. அந்த நிலைமையிலும் அவள் தன் நம்பிக்கையை இழக்கவில்லை. 

    ஒவ்வொருநாளும் மாலையில் நேரம் கழித்து நிறைவெறியில் வரும் தன் கணவன்மீது இரக்கப்பட்டு,  ஒரு மனைவிக்குரிய கடமையோடு அவனைக் கவனித்து, உபசரித்து… அவன் உறங்கிப்போகையிலும் அவனுக்குப் புத்திமதி சொல்லிக்கொண்டே இருப்பாள். 

    பனங்கள்ளை மாத்திரம் குடிக்கப் பழகின கந்தையா, பின்பு தென்னங்கள், சாராயம்… எனத் தொடர்ந்தான். இதைவிட, அவனோடு வேலை செய்கின்ற ஒருசிலர் வேலை முடிந்ததும், ‘வெட்டிரும்பு’ , ‘ வடிவேலன்’ மற்றும் ‘காச்சான்’ போன்ற பல புனைபெயர்களால் அழைக்கப்படுகின்ற சட்டத்திற்குப் புறம்பானவகையில் இருள் சூழ்ந்த நேரத்தில் தயாரிக்கப்படுகின்ற ‘உள்ளூர் உயிர்க்கொல்லி’களையும் அவனுக்குக் குடிக்கப் பழக்கினார்கள். 

    தனக்குக் குடும்ப பந்தமொன்று இருப்பதையே மறந்துவிட்ட கந்தையா, தனது குடிசைக்குச் செல்வதையும் நிறுத்திக்கொள்ள, அவனுக்குக் குடிபழக்கின கூட்டாளிமாருக்குப் பெரும் வாய்ப்பாகப் போய்விட்டது. நாளடைவில் அவனது உழைப்பையும் ஊதியத்தையும் அவர்களே உறிஞ்சத் தொடங்கினார்கள். 

    போதை கொடுக்கும் சுகத்தில் மெய்மறந்தவனாக… ‘வெறிக்குட்டி கந்தையன்’ என ஊரவர்கள் உதாசீனப்படுத்துவதை அலட்சியம் செய்தவனாக… யாரும் தட்டிக்கேட்க ஆளில்லாத நிலையில், தன்னிச்சையாகவே  ஊரில் நடமாடிக்கொண்டிருந்தான் கந்தையா. 

    என்றாவது ஒருநாள் தனது கணவன் குடியை மறந்து தன்னிடம் வருவான்… பழைய நாள்களைப்போல் தன்னுடைய குடும்ப வாழ்க்கை அமையும்… என்ற நம்பிக்கையில், அவள் தனது கணவனின் வரவை எதிர்பார்த்தவண்ணம் இருக்க, மாதங்கள்பல ஒன்றன்பின் ஒன்றாய் வேகமாக ஓடிவிட்டன.

    ‘அவர் இண்டைக்கு வரமாட்டாரா…?’

    அடுப்பிலே உலை கொதித்துக் கொண்டிருந்தது. 

    பழைய நினைவுகளிலே அமிழ்ந்து போயிருந்த நல்லம்மா, தெருவில் மீன்வியாபாரியின் குரலைக் கேட்டு சுயநிலைக்கு வந்தவள், நீண்டதொரு பெருமூச்சு விட்டுக்கொண்டே  குடிசையைவிட்டு வெளியே தெருவுக்கு வந்தாள். 

    தெருவிலே சில பெண்கள் மீன்வியாபாரியிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் 

    ” என்ன மீன் தம்பி கிடக்குது..?” 

    “சூடை, ஒட்டி, யப்பான்…”

    மீன்வியாபாரி கூறிக்கொண்டே … மீன்பெட்டியின் விளிம்புப் பலகையில் சிறுசிறு கூறுகளாக சகல மீன்களையும் எடுத்து வைத்தான். 

    “சூடை ஒரு கூறு என்ன விலை தம்பி…?”

    “பத்து ரூபா.”

    ” நாறிப்போச்சுப்போலை கிடக்குது.”

    கூறிக்கொண்டே, அவள் திரும்பவும் குடிசைக்குள் சென்று, அரிசிக்குறுணல்களைச் சேமித்து வைக்கின்ற பழைய ‘நெஸ்டோமோல்ட்’ பேணிக்குள் போட்டு வைத்திருந்த ஐம்பது சதங்கள் மற்றும் ஒருரூபாய்க் குற்றிகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு வந்து, மீன்காரனிடம் கொடுத்தாள். 

    பக்கத்தே வேலியில் சடைத்து வளர்ந்து நின்ற பூவரசங்குழையில் இரண்டொன்றைப் பிடுங்கி, அதிலை சூடைமீன்களை வைத்துக்கொண்டு குடிசைக்குள் வந்தவள், சோறு வெந்துவிட்டதை அறிந்து, அதை வடித்து கஞ்சியை ஓரமாக வைத்துவிட்டு, மீனைக் கழுவத் தொடங்கினாள்.

    திடீரென குடிசையின் கோடிப்புறத்தே கரப்புப் பட்டைக்குள் கிடந்த கோழியொன்று கொக்கரிக்கத் தொடங்கியதும், அவளின் மூத்தமகள் கரப்புப்பட்டையை நோக்கி வேகமாக ஓடினாள். 

    “எடி பிள்ளை!  பட்டைக்குள்ளை திடீரெண்டு கையை வையாதை. பாம்பைப் பூச்சியைக் கண்டாலும் கோழி கொக்கரிக்கும்…”

    ” இல்லையம்மா கோழி முட்டை இட்டிட்டுது.. “

    மகளின் குரல் குடிசைக்குப் பின்புறமாக இருந்து கேட்கிறது. 

    ” அப்ப உடைச்சுப்போடாமல் கவனமாக் கொண்டு வா…”

    மகள் மிகவும் பக்குவமாக அந்த முட்டையைக் கொண்டு வந்து தாயிடம் கொடுத்துவிட்டு, திரும்பவும் மாமரத்தின்கீழ் இருக்கும் தனது தம்பிகளுடன் விளையாடப் போய்விட்டாள். 

    ‘இண்டைக்கு இந்த முட்டையைப் பொரிச்சுக் குடுப்பம்…’

    அவள் தன் மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டு, கறித்தண்ணீரை வெளியே ஊற்ற வந்தவளது கண்களில் தென்படுகிறது  கறிமுருங்கை மரம்.

    ‘ நாலு முருங்கை இலையிலை வறை கொஞ்சம் வறுத்தால் என்ன? கனநாளைக்குப் பிறகு என்ர பிள்ளையள்  நாலு கறியோடை  சோறு தின்னட்டுமன்.’

    நல்லம்மா பலவற்றையும் சிந்தித்துக் கொண்டே, வடித்த கஞ்சிக்கு உப்புப்போட்டு, சூடு ஆற்றியபின், குடிசையின் கோடிப்புறத்தே தாழ்வார நிழலில் கட்டப்பட்டிருந்த ஆட்டுக்கு அதைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, முருங்கை மரத்தை நோக்கி நடந்தாள். 

    மாமரத்து நிழலின்கீழ் தேங்காய்ச்சிரட்டை, தகரப்பேணிகளில் சோறுகறி சமைத்து விளையாடிக்கொண்டிருந்த அவளது பிள்ளைகளில் கடைசிப்பையனுக்கு சாப்பாட்டு நினைவு வந்துவிட்டது. 

    நேரே தாயிடம் வந்தான்.

    ” அம்ம! சோச்சி…”

    கொக்கச்சத்தகத்தினால் முருங்கை இலைகளை ஒடித்துக் கொண்டிருந்த நல்லம்மா, திரும்பி மகனை வாஞ்சையோடு அணைத்துக்கொண்டு, மகனின் கன்னத்தில் முத்தமிட்டாள். 

    “கொஞ்சம் பொறு ராசா… இண்டைக்குப் பிள்ளைக்கு மின்னாக்(மீன்) கறியோடை சோச்சி தல்லாம்…”

    தாய் கூறியது குழந்தைக்குப் புரிந்திருக்க வேண்டும். அது தாயைப் பார்த்துச் சிரித்துவிட்டு,  திரும்பவும் மாமரத்து நிழலுக்குச் சென்று விட்டது. 

    நல்லம்மா சமையலைச் சுறுசுறுப்பாகச் செய்து முடித்துவிட்டு, பிள்ளைகளுக்கும் குளிக்க வார்த்து, தானும் குளித்து முடித்தபின், குடிசைக்குள் வந்தாள். முட்டைப் பொரியலின் வாசத்தால், பிள்ளைகள் மூவரும் சாப்பாட்டுக் கோப்பைகளுக்கு முன்பாக மிகவும் மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தார்கள்.

    “எங்கடை அம்மா இண்டைக்கு மூண்டு கறியோடை சோறு சமைச்சிருக்கிறா…”

    நல்லம்மாவின் மூத்தமகன்,  திருகணையில் சட்டிகள் ஒன்றின்மேல் ஒன்றாய் அடுக்கிக் கிடந்த எண்ணிக்கையைக் கவனித்துவிட்டுக் கூறினான். 

    சூடைமீன் குழம்பு…

    முருங்கை இலை வறை…

    முட்டைப் பொரியல்…

    கல்யாண வீட்டு விருந்தொன்றில் சகல மரக்கறிவகைகளோடு வடை, பாயாசம் சகிதம் உண்பதுபோன்ற உணர்வுடன், பிள்ளைகள் சந்தோஷமாக சாப்பிட அமர்ந்தவேளை…

    ” எடியேய் நல்லம்மா…” என்ற குரல் குடிசையின் வாசலருகே பெருஞ்சத்தமாகக் கேட்டது. குடிசைக்குள் இருந்த அனைவரும் ஒருகணம் திடுக்கிட்டவர்களாக, குடிசையின் வாசலை நோக்கிப் பார்த்தார்கள்.

    அங்கே – 

    நீண்டநாள்களுக்குப்பின், நிறைவெறியில்… கன்கள் இரண்டும் உள்ளிழுத்த தோற்றத்துடன், சவரம் செய்யப்படாத முகத்தோடு, கசங்கி அழுக்கேறிப்போன உடைகளுடன்…  கந்தையா நின்றிருந்தான். 

    தனது கணவனைக் கண்டதும் நல்லம்மாவுக்கு முதலில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவன் வந்திருந்த கோலம்… அவளை வேதனையில் ஆழ்த்தியது.

    “இஞ்சை என்னடி நடக்குது…?”

    பிள்ளையள் சாப்பிடுகிறதுக்கு இருக்குதுகள். நீங்களும் வாங்கோ. சாப்பிடுங்கோ.. “

    அவனது கையைப் பிடித்து உட்கார வைப்பதற்கு அவள் முயற்சித்தபோது, அவன் திமிறியபடி… அவளிடமிருந்து விலகினான்.

    “சீ… விடடி நாயே!  நான் கதிரன் வீட்டில கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதானா…?”

    நல்லம்மாவுக்கு எதுவும் புரியவில்லை. குடிவெறியில் ஏதோ பிதற்றுவதாக நினைத்தவள், 

” முதல்ல சாப்பிடுங்கோ. பிறகு ஆறுதலாக் கதைப்பம்…” என அவனை அமைதிப்படுத்த முயற்சித்தாள்.

    ” எளிய நாயே… என்னடி வேசம் போடுகிறாய்? நீயும் உன்ர சாப்பாடும்…” கூறிக்கொண்டே, அவன் தன் காலால் சோற்றுப்பானையை உதைக்க, அடுப்புமேடையின்மேல் கிடந்த குண்டான் சட்டியோடு பானை மோதி… சோற்றுப்பருக்கைகள் யாவும் சிதறி…

    இதைக்கண்ட குழந்தைகள் மூன்றும் வீரிட்டு அலறியபடி… குடிசையைவிட்டு வெளியே ஓடின.

    நிலைமை விபரீதமாகி விட்டதை உணர்ந்தாள் நல்லம்மா. அவன் திரும்பவும் மேற்கொள்ளாதபடிக்கு, அவனது கரங்கள் இரண்டையும் பற்றிப்பிடித்தபோது, அவன் உதறிவிட்டு அவளது கன்னம் இரண்டிலும் மாறி மாறி அறைந்தான். அந்த அடியினால் வலி பொறுக்கமுடியாத நல்லம்மா, குடிசைக்குள் இருந்து கொண்டே அவலக்குரல் எழுப்பினாள். 

    அவள் குளறுவதைக் கண்டதும், கந்தையாவுக்கு இன்னும் வெறி அதிகரிக்கத் தொடங்கியது.

    சூடைமீன்கறி…  முருங்கை இலைச்சட்டி… முட்டைப்பொரியல்..  சீனிப்போத்தல்… தேயிலைப்பேணி..  உப்புச்சிரட்டை… என தன் கண்ணிலே தென்பட்ட எல்லாவற்றையும் அடித்துத் துவம்சம் செய்கையிலும், இடைக்கிடை நல்லம்மாவுக்கு கைகளினாலும் காலினாலும் மாறிமாறி அடித்தான்.

    ” இதெல்லாம் அடிச்சு நொருக்கவே இவ்வளவு நாளும் இருந்திட்டு  இப்ப வந்தனிங்கள்…?”

    வெறியுடன் திரும்பினான் கந்தையா.

    ” நான் வராமல் வேறை ஆரடி இஞ்சை வாறது? கதிரன் வீட்டில கசிப்புக் குடிக்கப்போன இடத்திலதாண்டி எல்லாம் அறிஞ்சனான். நான் இருக்கத்தக்கதாக நீ என்னடி செய்துபோட்டு இருக்கிறாய்…?”

    அவளது குடுமிமயிரைச் சுருட்டிப் பிடித்தவன், குடிசையைவிட்டுத் தரதரவென வெளியே இழுத்துக்கொண்டு வந்தான். இதைக்கண்ட பிள்ளைகள் திரும்பவும் வீரிட்டுக் கத்தத் தொடங்கின. 

    உதடொன்று வெடித்து, பொய்மூக்கு  உடைந்து இரத்தம் வழிந்தோடிய நிலையிலும், அவன் அவளை விடவில்லை. அடித்துக் கொண்டே இருந்தான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இக்காட்சியைப் பார்ப்பதற்கு கறையான் அரித்த காவோலை வேலியை மேலும் பிரித்துவிட்டு, வேலிக்கு மேலாக வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள்.

    எதிர்பார்த்த நினைவுகளுக்கு மாறாக அவன் வந்து, மிருகத்தனமாக நடந்து கொண்டது மட்டுமின்றி, தனது நடத்தையிலும் சந்தேகப்பட்டு விட்டதோடு, இவ்வளவு நாள்களும் அவனுக்காக் காத்திருந்தது வீணாகப் போய்விட்டதே… என்ற கவலை…  பெருமூச்சாய், ஆத்திரமாய் அவளது உள்ளத்தில் மேலெழுந்து கொண்டது.

    உடலிலே ஏற்பட்ட வலிகளைத் தாங்க முடியாத நிலையில், தன் பிள்ளைகளோடு சேர்ந்து அவளும் பலமாகக் குளறி அழத் தொடங்கினாள். 

    “ஆ… பாழ்படுவார்… பத்தியெரிவார்… பறநாசமாய்ப் போவர்… என்ர புருசனுக்குக் குடி பழக்கி, என் குடும்பத்தை நாசமாக்கினவன் குடி இடியேறு விழுந்து நாசமாப்போக…”

    கசிப்பு வடிக்கும் கதிரன் வீட்டுப் பக்கமாக… இரு கைகளினாலும் முற்றத்து மண்ணை அள்ளித் திட்டியபடி… அவள் இருக்க, அவளிடத்தில் ஏற்பட்ட திடீர் மாறுதலைக்கண்ட கந்தையா, சற்று வெறி அடங்கியவனாய் அந்த இடத்தைவிட்டு மெல்ல வெளியேறினான்.

    தகப்பன் வெளியேறியதைக் கண்டதும், பிள்ளைகள் ஓடிவந்து  தாயைக் கட்டிப்பிடித்து அழத்தொடங்கின. அதிலும், அவளது கடைசிக் குழந்தை தாயின் மூக்கிலிருந்து வழிந்த இரத்தத்தை தனது பிஞ்சுக்கையால் தடவிப் பார்த்துவிட்டு,  தாயைக் கட்டி அணைத்துக் கொண்டு, அழத்தொடங்கியது.

    பிள்ளைகள் தன்னருகில் நின்று, தன்னைப் பார்த்து அழுது கொண்டிருப்பதை, மனம் பொறுக்க முடியாத நிலையில், மிகுந்த சிரமத்துடன் நிலத்தைவிட்டு எழுந்து கொண்டாள் நல்லம்மா. காலில் ஏற்படும் வேதனையுடன், பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தன் குடிசையை நோக்கிச் சென்றபோது…

    சிதறிக்கிடந்த சோற்றுப் பருக்கைகள்… சூடைமீன்கள்… முருங்கை இலைகள்…  முட்டைப் பொரியல்… யாவற்றையும் அவர்களது வளர்ப்புப் பிராணிகளான நாயும், பூனையும் சுவைத்து மகிழ்ந்த நிலையில், அவர்களைக் கண்டதும் அங்கிருந்து வெளியே ஓடத் தொடங்கின.

            (வீரகேசரி வாரவெளியீடு : 10 – 12 – 2000)

“அவன் வந்தபோது…” அதற்கு 2 மறுமொழிகள்

  1. மிக்க நன்றி.

சுந்தர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.