கவிஞர் அம்பி நினைவுகள்.

இலக்கிய உலகில்  இணைந்து பயணித்தவரின் பூதடலுக்கு  இம்மாதம் 05 ஆம் விடைகொடுக்கின்றோம் !

                                                                             முருகபூபதி

” தமிழுலகில் நன்கறியப்பட்ட ‘ அம்பி’ என அழைக்கப்படும் படைப்பாளி இராமலிங்கம் அம்பிகைபாகர் கடந்த 27 ஆம் திகதி, அவுஸ்திரேலியா – சிட்னியில் தமது 95 ஆவது வயதில் மறைந்தார்.

  “ என இனிய நண்பரான அம்பி ,   எழுத்துலகில் நான் பிரவேசித்த 1972 ஆம் ஆண்டு முதலாக  அறிவேன். அக்காலப்பகுதியில் கொழும்பில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் அவர் பணியாற்றினார்.

எங்கள் நீர்கொழும்புக்கும் பலதடவைகள்  வருகைதந்து இலக்கியம் பேசியவர். எமது பிரதேச ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட கல்விக்கருத்தரங்குகளிலும் உரையாற்றினார்.

இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியில் அம்பியுடனான இலக்கிய உறவு ஆரம்பித்தபோதிலும், நாம் மிகவும் நெருங்கிய ஆத்மார்த்தமான நண்பர்களானது அவுஸ்திரேலியாவில்தான்.

அவர் எமது குடும்ப நண்பராகத் திகழ்ந்தார்.  எனது செல்வங்களுக்கு கனிவான “அம்பித்தாத்தா.” நான் வசிக்கும் மெல்பனுக்கு வருகைதரும்போதெல்லாம் அவர் எம்முடனேயே இருப்பார். நாமிருவரும் இரவில் நேரம் கழிவதே தெரியாமல் அதிகாலை வரையில் உரையாடிக்கொண்டிருந்த நாட்களும் பசுமையானவை. ” 

இவ்வாறு தொடங்கும் முன்னுரையுடன் 2004 ஆம் ஆண்டு அம்பியின் பவள விழாக்காலத்தில்  அம்பி வாழ்வும் பணியும் என்ற ஆய்வு நூலை எழுதி வெளியிட்டேன். இந்நூலை அம்பியினதும் எனதும் இனிய நண்பரான  ( அமரர் ) சுந்தா சுந்தரலிங்கம் அவர்களுக்கே சமர்ப்பித்தேன்.

அந்த நூலை தமிழ்நாட்டில் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கன் அச்சிட்டுத்தந்தார். எமது நான்காவது தமிழ் எழுத்தாளர் விழா கன்பராவில் 2004 ஆம் ஆண்டு  நடந்தவேளையில் அதனை வெளியிட்டோம்.

மெல்பன், சிட்னி, கன்பரா ஆகிய நகரங்களைச்சேர்ந்த எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும் வானொலி ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பித்த இவ்விழாவில், அம்பியின் முன்னாள் மாணவியும் கன்பராவில் வதியும் பல்மருத்துவருமான திருமதி அபிராமி யோகநாதன் தனது நடன வகுப்பு மாணவிகளுக்கு அம்பியின் வேலம்மா என்ற கவிதையை நடனமாகப்பயிற்றுவித்து அரங்காற்றுகையை நிகழ்த்தினார்.

இலங்கை மலையகத்தில் பாடுபட்டு  கொழுந்து பறித்து நாம் அருந்தும் தேநீராக விருந்து படைக்கும் பெண்கள் பற்றிய பாடலாகும்.  மெல்பனிலிருந்து வருகை தந்திருந்த இசை ஆசிரியர் திருமதி ரமா சிவராஜாவின் மாணவர்கள் அம்பியின் மற்றும் ஒரு பாடலுக்கு இசையமைத்து பாடினார்கள்.

அம்பியின் பவளவிழா பின்னர் மெல்பனிலும் சிட்னியிலும் நடைபெற்றன. அக்காலப்பகுதியில் மெல்பனிலிருந்து வெளியான உதயம் பத்திரிகையின் ஆண்டுவிழாவிலும் அம்பி வரவழைக்கப்பட்டு பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அம்பி,  யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய காலப்பகுதியில் கலைஞரும் எழுத்தாளருமான மாவை நித்தியானந்தன் அம்பியின் மாணவராவார். மாவை நித்தி 1995 இல் மெல்பனில் பாரதி பள்ளியை ஆரம்பித்தபோது அதனை தொடக்கிவைத்தவரும் அம்பிதான்.

எமது தமிழ் எழுத்தாளர் விழாக்கள் மெல்பன், சிட்னி, கன்பராவில் நடந்தவேளைகளில் அம்பியும் முன்னர் தவறாமல் கலந்துகொள்வார்.

மெல்பனில் பண்டூரா என்னுமிடத்திலிருக்கும் பூங்காவில் அம்பி தலைமையில் கவியரங்குகளும் நடத்தியிருக்கின்றோம். இவ்வாறு ஒரு காலப்பகுதியில் உற்சாகமாக இயங்கி மற்றவர்களையும் உற்சாகப்படுத்திய அம்பி அவர்கள், உலகெங்கும் சுற்றியலைந்து, உலகளாவிய தமிழர் நூலை எழுதியவர்.

95 வயதிலும்  நினைவாற்றல்  மிக்கவராகவிருந்தார்.  கடந்த ஆண்டு  தமது 94 ஆவது பிறந்த தினத்தின்போது,  அவர் எழுதிய சொல்லாத கதைகள் நூலை அமேசன் கிண்டிலில் வெளியிட்டோம்.

 அன்பின் மறுபெயர் அம்பி என சில வருடங்களுக்கு முன்னர் மல்லிகை, ஞானம் அட்டைப்பட அதிதி கட்டுரையில் இவர் பற்றி எழுதியிருக்கின்றேன்.

 இலங்கையில்  வடபுலத்தில் நாவற்குழியில் 17-02- 1929 ஆம் திகதி  பிறந்த அம்பி,   ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் .     பாடசாலையிலும்  உயர் கல்வியை யாழ். பரியோவான்                          கல்லூரியிலும் தொடர்ந்து   விஞ்ஞான மற்றும் கணித                    ஆசிரியராக 1950 ஆம் ஆண்டு முதல் 1968 ஆம் ஆண்டு வரையில் யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் பணியாற்றினார்.

 கொழும்பு கல்வி வெளியீட்டுத்திணைக்களத்தில் 1969 இல் கணித பாடநூல் எழுத்தாளராகவும்  பணியாற்றிய அம்பி,             சனத்தொகை பயிற்சிக்கல்விக்கான புலமைப்பரிசில் பெற்று அமெரிக்கா  சென்றார். அங்கு  University of Connecticut  (Institute of public service)  இல் பயிற்சியை முடித்துக்கொண்டு, தாயகம் திரும்பி, மீண்டும் கொழும்பில் சனத்தொகை கல்விப் பாடத்திட்ட அதிகாரியாக பணியாற்றினார். அதன் பின்னர், 1981 இல் பாப்புவா நியூகினி நாட்டிற்கு பணிநிமித்தம் சென்று  அங்கு தொலைக்கல்விகல்லுரியில் கணிதத்துறை தலைவராக பணியாற்றினார்.   

அங்கிருந்து,  1992 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.

இளம் பராயத்திலிருந்தே கவிதை, கவிதை நாடகம்,  சிறுகதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு முதலான துறைகளில் அவர்             அளப்பரிய பணிகளை மேற்கொண்டிருந்தபோதிலும்                            தமிழ்கூறும் நல்லுலகில் கவிஞர் என்றே அறியப்பட்டவர்.

அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராகப்பதவி ஏற்றதையடுத்து தமிழ்நாட்டில் 1968 இல்  நடந்த இரண்டாவது                                    தமிழாரய்ச்சி மாநாட்டிற்காக நடைபெற்ற அகில உலக கவிதைப்போட்டியில் பங்கேற்ற கவிஞர் அம்பி, அதில் வெற்றியீட்டி தங்கப்பதக்கம் பெற்றவர். இதனை அம்பி அவர்களுக்கு,                      அச்சமயம் தமிழக அரசில் அங்கம் வகித்த மக்கள் திலகம்                     எம்.ஜி.ஆர். அவர்கள் வழங்கினார்.  .


பதினைந்திற்கும்மேற்பட்ட  நூல்களை எழுதியிருக்கும் அம்பி , இலங்கையின் தமிழ்மருத்துவத்துறை முன்னோடியான               அமெரிக்க பாதிரியார் மருத்துவகலாநிதி சாமுவேல் கிறீன்          அவர்களைப்பற்றிய  ஆய்வு நூலை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

அத்துடன்  குறிப்பிட்ட மருத்துவ முன்னோடிக்கு இலங்கையில் தபால் தலை வெளியிடுவதற்கும்  பரிந்துரைத்தார்.   இலங்கை அரசு குறிப்பிட்ட தபால் தலையை வெளியிட்டது.
இந்த மதிப்பிற்குரிய செயலைப்புரிந்தமைக்காக  அமெரிக்க தூதுவராலயம் அம்பியை  அழைத்து கௌரவித்து பாராட்டியது.

சாமுவேல் கிறீன் அவர்களின் கல்லறை அமெரிக்காவில் மசாசூசெட் மாநிலத்தில் கிறீன் அவர்கள் பிறந்த ஊரான வூட்சரில் அமைந்துள்ளது. அவ்விடத்திற்கு இரண்டு தடவைகள் நேரில்சென்று மலரஞ்சலி செலுத்தியவர் அம்பி என்பதும் முக்கிய தகவல்.

இலங்கையில் இவரிடம் கற்ற பல மாணவர்கள் பிற்காலத்தில் இவரது தூண்டுதலாலும் ஊக்குவிப்பினாலும்                                             எழுத்தாளர்களாக  உருவாகியிருக்கிறார்கள். கவிதைத்துறையில் இவரது ஆற்றலை வியந்து தமிழக இலக்கிய இதழான                  சுபமங்களா இவரை ஈழத்தின் கவிமணி என்று புகழாரம்                     சூட்டியுள்ளது.


பாப்புவா நியூகினியிலும் அவுஸ்திரேலியாவிலும் குழந்தை            இலக்கியத்தின் வளர்ச்சிக்காக ஆங்கிலத்திலும் தமிழிலும்              சிறுவர் இலக்கிய வரிசையில் சில கவிதை நூல்களையும்              எழுதியிருக்கிறார். அத்துடன் அவுஸ்திரேலியா சிட்னியில்              தமிழ்மொழியை ஒரு பாடமாகப்பயில தமிழ் மாணவர்கள் முன்வந்தபோது அவர்களின் தேவைகருதி உருவாக்கப்பட்ட தமிழ்ப்பாட நூலாக்கக்குழுவில் பிரதம ஆலோசகராக பணியாற்றி               இங்கு வாழும் தமிழ்க்குழந்தைகளின் தமிழ் அறிவுத்     தேவையை பூர்த்தி செய்வதற்கு தொடர்ச்சியாகத் தொண்டாற்றினார்.

தமிழ்சார்ந்த மாநாடுகள், கருத்தரங்குகள், விழாக்கள்  உட்பட பல கவியரங்குகளிலும் அம்பி அவர்கள் புகலிட நாடுகளில்              வாழும் தமிழர்கள் தமிழை மறந்துவிடக்கூடாது என்ற தொனிப்பொருளிலேயே தொடர்ச்சியாக குரல் எழுப்பிவந்துள்ளார்.             அத்துடன் இதுதொடர்பாக பல கட்டுரைகளும் எழுதியுள்ளார். தேமதுர தமிழ் ஓசை உலகமெலாம் பரவச்செய்யவேண்டும்           என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்க தமிழின்                      சிறப்பை ஏனைய மொழிகள் அறிந்தவர்களுக்காக ஆங்கிலத்திலும் எழுதி தமிழுக்கு தொண்டாற்றியுள்ளார்.

எழுத்துலகில்

தினகரன் வாரமஞ்சரியில்   வெளிவந்த இலட்சியச் சோடி என்ற சிறுகதையின் மூலம் இலக்கிய உலகில் அறிமுகமானஅம்பியின்  படைப்புகள் :

  • கிறீனின் அடிச்சுவடு
  • அம்பி பாடல் (சிறுவர் பாடல்கள்)
  • வேதாளம் சொன்ன கதை (மேடை நாடகம்)
  • கொஞ்சும் தமிழ் (சிறுவர் பாடல்கள்)
  • அந்தச் சிரிப்பு
  • யாதும் ஊரேஒரு யாத்திரை
  • அம்பி கவிதைகள்
  • மருத்துவத் தமிழ் முன்னோடி
  • Ambi’s Lingering Memories (Poetry, பப்புவா நியூ கினி
  • Scientific Tamil Pioneer Dr Samuel Fisk Green
  • உலகளாவிய தமிழர்
  • A String of Pearls
  • பாலர் பைந்தமிழ்

அம்பியின்  நாடகங்கள்

அம்பியின் வேதாளம் சொன்ன கதை கவிதை நாடகம்,               இலங்கையில் பிரபல நாடக இயக்குநர் சஹேர் ஹமீட் நெறியாள்கையிலும், யாழ்பாடி என்ற கவிதை நாடகம் அவுஸ்திரேலியாவில் அண்ணாவியார்                              இளையபத்மநாதனின்  அண்ணாவியத்திலும் அரங்கேறியுள்ளன.

தமிழில் விஞ்ஞானக்கட்டுரைகளை இலங்கையில் எழுதிய முன்னோடி கவிஞர் அம்பி அவர்கள்  என்று பிரபல இலக்கிய விமர்சகர் கே. எஸ். சிவகுமாரன் அம்பியைப்பற்றி  இலங்கையில் வெளியாகும் The Island பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.  

அம்பி இதுவரையில் பெற்றுள்ள விருதுகள்:

உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு விருது ( தங்கப்பதக்கம்)

 இலங்கை இந்து கலாசார அமைச்சின் ‘தமிழ்மணி விருது’

கொஞ்சும் தமிழ் சிறுவர் இலக்கிய நூலுக்கு இலங்கை                தேசிய சாகித்திய விருது.

 அவுஸ்திரேலியாவில்  மெல்பன் ‘நம்மவர்’ விருது.

 கனடாவில் சி.வை. தாமோதரம் பிள்ளை விருது                                                  (தங்கப்பதக்கம்)

 அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழ் இலக்கிய                                    கலைச்சங்கத்தின் விருது.

அவுஸ்திரேலியா அக்கினிக்குஞ்சு இணைய இதழின் விருது.


 இலங்கையில் மல்லிகை, ஞானம் ஆகிய இலக்கிய இதழ்கள்  முகப்பில் அம்பியின் உருவப்படத்துடன் அவரது பணியை                பாராட்டி கட்டுரை எழுதி கௌரவித்துள்ளன.

இம்மாதம் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் அம்பி அவர்களின் இறுதி நிகழ்வுகள் நடைபெறும்.

—0—

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.