ஆண்கள் பெண்கள்.

நன்றி – அபத்தம், கனடா.

சமீபத்தில் நான் முதுகு வலியால் அவஸ்தைப்பட்டபோது அக்குபஞ்சர் எனும் குத்தூசி மருத்துவமே கைகொடுத்தது. இது ஊசிகளை உடலின் முக்கிய அக்கு புள்ளிகளில் சொருகி சிகிச்சை செய்யும் சீன வைத்திய முறை ஆகும். ஏற்கனவே நான் மிருகங்களுக்கு அக்குபஞ்சர் வைத்தியம் செய்வதுபற்றி படித்திருந்தேன் என்பதால் வலி நிவாரண மருந்துகளை விட அக்குபஞ்சர் ஊசிகளை நம்புகிறேன். எனக்கு வைத்தியம் செய்த மியா என்ற அந்த சீன இளம்பெண் (30 வயதின் மேல்) பல ஊசிகளை முதுகின் அக்கு புள்ளிகளில் சொருகிவிட்டு இருபது நிமிடங்கள் வரை என்னுடன் பேசிக்கொண்டிருப்பார். ஒரு முள்ளுப் பன்றியின் உருவில் குப்பற ஊசியுடன் தரையைப் பார்த்தபடி கட்டிலில் படுத்திருப்பது இலகுவானதல்ல! கடலாமையைத் தரையில் திருப்பி போட்டது போன்ற நிலை – மியாவின் உதவியின்றி நெளியக்கூட முடியாது! அத்துடன் ஊசிகள் மெதுவான மயக்கம் கலந்த தூக்கத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு அமைதி நிலையைக் கொடுத்தன.

வைத்தியரான அவளும் நானும் எப்படியும் அந்த நேரத்தில் ஏதாவது பேசியாக வேண்டும். எனக்குக் கொஞ்சம் சீன வைத்தியம் புரியும் என்பதால் எங்கள் உரையாடல் தொடரும். முதுகில் சொருகிய ஊசிகளை அவள் இடையிடையே திருகியபடி, எனது வேலை – திருமணம் – குழந்தைகள் பற்றிக் கேட்டாள். இறுதியில் ஊசிகளை அவள் அகற்றிய பின் நான் அவளிடம் ‘உனக்குத் திருமணமாகிவிட்டதா?’ என்ற கேள்வியை தொடுத்தேன்.

அவள் அதற்கு பதில் சொல்லாது ‘சீன ஆண்களை நம்பமுடியாது… எல்லோரும் கெட்டவர்கள்’ என்றாள்.

இப்பதில் எனக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கவேண்டும் அல்லவா? ஆனால் அதற்கு மாறாக அது நான் படித்த பண்டைய ஒரு கிரேக்க துயர நாடகத்தில் (Greek tragedy) வந்த கதாநாயகியைதான் எனக்கு நினைவூட்டியது. 

யூறிப்பிடிஸ் (Euripides) என்ற கிரேக்க நாடக ஆசிரியர் கிறிஸ்துவிற்கு 430 வருடங்கள் முன் எழுதி அரங்கேற்றிய மீடியா என்ற (Medea) கிரேக்க துயர் நாடகம் அது. மீடியா என்பவள் கிரேக்க புராணங்களில், சொல்லப்பட்டுள்ள கொல்கிஸ் மன்னன் ஏயெட்ஸின் மகளும், சிர்ஸின் மருமகளும் சூரியக் கடவுளான ஹீலியோஸின் பேத்தியுமாவாள். தெய்வாம்சம் மற்றும் மந்திர சக்தியுள்ள அவள் ஜேசன் (Jason) என்ற இளவரசனை மணம் முடிக்கிறாள். அவள், ஜேசனுக்காக தனது தந்தையை எதிர்த்து அவனுடன் போவது மட்டுமல்லாது போர் செய்த தனது சகோதரனைக் கொலை செய்து, கணவனைப் பாதுகாக்கிறாள். ஜேசனது மற்றொரு எதிரியான மாமனை (சக அரசனை) தனது மந்திர சக்தியாலும் வஞ்சத்தாலும் அழிக்கிறாள். கணவனுக்காக இப்படிப் பல சாகசங்களை செய்த அவளில் சில காலத்தின் பின் ஜேசன் சலிப்படைந்து கொருந்திய நாட்டு (Corinth ) இளவரசி கிரூசாவை மணம் முடிப்பதற்கு விரும்புகிறான். அதேவேளையில் மீடியாவை நாடு கடத்தவும் ஒரு திட்டம் உருவாகிறது. தன்னை விட்டு விலகி, ஜேசன் இளவரசியைத் திருமணம் செய்ய முனைந்தபோது மீடியா சீறும் பாம்பாகிறாள். இந்த நாடகத்தில் பாடல் இசைக்கும் கொருந்தியப் பெண்களிடம் அவள் பேசும் ‘பராசத்தி’ வசனங்கள், இக்காலத்திலும் நாங்கள் எதிர்பாராதவை. அவை ஒவ்வொன்றும் ஆண்கள் மீது குத்தீட்டியாகப் பாயும் வார்த்தைகள்.

 “ஆண்களை நாங்கள் பணம் கொடுத்து வாங்கவேண்டும். அதைவிட வாங்கியவர்கள் நல்லவர்களா என்பது எங்களுக்குத் தெரியாது. எதையும் சகித்தபடி இருக்கவேண்டும். சலிப்படைந்தால் வேறு பெண்ணிடம் போவார்கள். தாங்கள் போருக்குப் போவதாகவும் நாங்கள் வீடுகளில் உல்லாசமாக இருப்பதாகவும் சொல்வார்கள். நாங்களும் பிள்ளை பெறாது மூன்று முறை போர்முனையில் நிற்பதற்குத் தயார்!“. இவளது வசைவார்த்தைகள் நாடகத்தில் பாடல் இசைக்கும் தொருந்தியப் பெண்களை வாயடைக்கச் செய்கிறது.

ஜேசனது திருமண நிகழ்வின்போது மீடியா தனது குழந்தைகளை வைத்து கொருந்திய இளவரசியை கொலை செய்யும்போது மீடியாவின் பிள்ளைகளும் இறக்கின்றதாக நாடகம் முடிகிறது. மீடியாவின் பாத்திரம் கிரேக்க நாடகங்களில் மக்கள் மனத்தில் நீங்காத ஒன்றாகும்.

அக்குபஞ்சர் வைத்தியம் செய்யும் மியா எனக்கு யூறிப்பிடிஸ் என்ற கிரேக்க நாடக ஆசிரியரின் கதாநாயகியாகவே என் முன் தோன்றினாள்.

மெல்பேனில் மிருக வைத்தியராக வேலை செய்த காலத்தில் பல சீன பெண்கள், நாய் பூனைகளைக் கொண்டு வருவார்கள் – அவர்களில் பலர் தனியாக வாழ்பவர்கள். இது ஆஸ்திரேலியாவிற்கு மட்டும் தனித்துவமானதல்ல. சிங்கப்பூர், அமரிக்கா கனடா போன்ற நாடுகளிலும் இதே நிலை நிலவுகிறது. ஆனால் இந்த வாழ்க்கைமுறை தற்போது சீனாவிற்கும் பரவி பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

சீன மொழியில் பெண்களுக்கு முப்பது வயதாகியதும் அவர்களை  “Sheng nu”  என்பார்கள். அதைத் தமிழாக்கினால் “வீணாக்கப்பட்ட பெண்கள்” (Wasted Women) என்று பொருள்படும். இவர்களின் தொகை சிறிது என்றால் இதை கடந்துபோய்விடலாம். ஆனால் நிலமை அப்படியல்ல. மேலும் இவர்கள் படித்தவர்கள், உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள். இவர்கள் பிள்ளைகள் பெறாது போனால் சமூகம் நலிவடைந்துவிடும் எனச் சீன அரசு எண்ணி இவர்களுக்கு இலகு கடனில் குடியிருப்பு உட்பட பலவிதமான முன்னுரிமைகள் வழங்கி ஆதரிக்கிறது. மேலும் பிரமசாரிகளாக உள்ள விவசாய இளைஞர்களை திருமணம் செய்யும்படி அறிவுறுத்துகிறது – ஆனால் நடக்கக்கூடிய விடயமா இது?

சீனாவின் சமூக கட்டமைப்பில் ஒரு குடும்பத்திற்கு ‘நாம் இருவர்; நமக்கு ஒருவர்’ என்ற அரச கட்டுப்பாடு இந்த நிலமைக்கு மேலும் வலுச்சேர்த்தது என்பது உண்மை. தற்போது ‘வீணாக்கப்பட்ட பெண்கள்’ தாங்கள் அப்படி இருப்பதால் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்கள் என முழக்கமிடுகிறார்கள். தற்போது தாய்வானில் ஜனாதிபதியாக இருக்கும் சாய் இங்-வென் இப்படியான ஒருவர்தான்.

இந்த நிலை சீனாவில் மட்டுமா?

இந்தியாவில் இல்லையா என நீங்கள் கேட்கலாம்.? இதுபற்றிய சமூக ஆய்வுகள் மற்றும் தரவுகள் இந்தியாவில் இல்லாதபடியால் இது பற்றி உறுதியாக குறிப்பிட்டுப் பேசமுடியாத நிலை உள்ளது. மேலும் சீனாவோடு ஒப்பிடும்போது கல்வி , நகரமயமாக்கம், பெண்களின் பொருளாதாரம் இந்தியாவில் குறைவானதால் பிரச்சனைகள் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தெற்காசியர்கள் வாழும் மேற்கு நாடுகளில் இந்த பிரச்சனை கண்ணுக்குத் தெளிவாய் தெரிகிறது. எனக்குத் தெரிந்தவரையில் பல பெண்கள் ஆஸ்திரேலியாவிலும் முப்பது வயதின் பின்பும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளாமல் வாழ்கிறார்கள். இவர்களில் பலர் மிக உயர்ந்த பதவி வகிப்பவர்கள். பெருமளவு பணம் சம்பாதிப்பவர்கள். இவர்களின் பெற்றோர் ஆரம்பத்தில் பேசி நடத்தும் திருமணங்களுக்கு முயன்று மாப்பிள்ளை தேடுவார்கள். ஆனால் இந்தப் பெண்கள் பல நியாயமான காரணங்களைச் சொல்லி வரும் வரனை நிராகரித்துவிடுவார்கள் அல்லது பெற்றோர்களின் மனம் குளிர்வதற்காகத் திருமணம் முடித்து, சொற்ப காலத்தில் மனம் பிரிவடைந்து திருமண பந்தத்தை முறித்து வாழ்கிறார்கள் – இதை ஒரு குறையாக கணிக்க முடியாது. தொடர்ந்து மாறும் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களாக இவற்றையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

மேலும் இதை ஆழமாக நோக்கினால், முக்கிய காரணமாகப் படுவது தற்காலத்தில் பெண்கள் உயர் கல்வி கற்பதுடன் பொருளாதார சுதந்திரமும் அடைந்து விடுகிறார்கள். அக்காலத்தைப் போல் ஆண்களில் தங்கியிருக்க வேண்டியதில்லை.

பெண்கள், ஆண்களைவிட வேகமாக மனமுதிர்ச்சி அடைவதுடன் அவர்களது திறமையை வெளி உலகில் பாவிக்கும் தன்மையை பெற்றுவிடுகிறார்கள். ஆண்கள் அந்த விடயத்தில் எப்பொழுதும் பின்தங்கியவர்களே.

எனது வீட்டில் எனது மகளுக்கும் எனக்கும் ஏதாவது கருத்துப்பரிமாற்றம் வரும்போது தனது பக்கத்து நியாயத்தை சாமர்த்தியமாக பேசி மகள் நிலைநிறுத்துவாள். ஆனால் மகனோ அதைப் பொருட்படுத்தாது எதாவது பேசிவிட்டோ அல்லது மறுப்பு சொல்லிவிட்டு விலகிவிடுவான். இருவரும் படித்தவர்கள், நல்ல வேலைகள் செய்பவர்கள்.

ஆனால் ஏன் இந்த வேறுபாடு? 

ஆண்கள் காலகாலமாக வாய் பலத்தை விட, உடல் பலத்தை வைத்து வாழ்ந்தவர்கள். வீரம், ஆண்மை, உடற்பலம் எனப் பல்லாயிரம் வருடங்களாக அவர்களுக்குக் கை கொடுத்தது. நமது இதிகாசங்கள் காப்பியங்கள் எல்லாம் இதைப் பற்றியே புகழ் பாடின. வரலாறு என்பதே ஆண்கள், ஆண்களுக்காக எழுதியதுதானே! இதைவிட மதங்களும் ஆண்களை மேல் நிறுத்துவதில் அளப்பரிய உதவி செய்தன. பெண்களை சயன சுகம் தரும் போகபொருளாகவும் அடிமைகளாகவும் விபரித்து கடந்து சென்றன. இவை ஆசியாவில் தற்போது நடந்தாலும் ஐரோப்பிய வரலாற்றை படித்தாலும் இதே கதைதான். ஒவ்வொரு ஆணும் தனது வீட்டில் சர்வாதிகாரி. அவனுக்குக் கீழே குறைந்தது மனைவி என்ற ஒரு அடிமையாவது இருக்க மதங்கள் வழி சமைத்தன. சில மதங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ‘அடிமைகளையும்’ வைத்திருக்க உதவி செய்தன. இவை எல்லாம் ஆணின் சிந்தனையை ஒரு சர்வாதிகாரியாகக் கட்டமைக்க வழி கோலியது. பாடசாலைகள் . போர்க்களங்கள் வேலைத்தலங்கள் ஏன் வணக்கத் தலங்கள் கூட இந்த சிந்தனைக்கு உரம் போட்டு வளர்த்தன. இதை விட ஆணின் குருதியில் ஓடும் தெஸ்தஸ்ரோன் என்ற ஹோமோன் இதற்கு நீர் பாச்சியது. இதை விட மத கலாச்சார பாரம்பரியத்தில் வாழ்ந்து வளர்க்கப்பட்ட தாய்மார் ஆண் சிறுவர்களைக் குட்டி சர்வாதிகாரிகளாக வளர்த்தெடுத்தனர். 

அதேவேளை இருபதாம் நூற்றாண்டு முதலாளித்துவம், மற்றும் கைத்தொழில் புரட்சிக்குப் படித்தவர்கள் தேவைப்பட்டனர். அங்கு லாபம் ஈட்ட அவர்களுக்கு தேவைப்பட்ட ஒரே இனம்: தொழிலாளிகள் மட்டுமே! இதுவே அவர்களின் இலக்கு. தொழிலாளர்கள் ஆணா பெண்ணா என முதலாளித்துவம் பார்ப்பதில்லை. பெண்கள் வீடுகளைவிட்டு வெளியேறி நகரங்களில் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். நகரமயமாக்கம் கிராமப்புறத்துப் பெண்களை நகர்களுக்குத் தள்ளியது. கல்வியைச் சகலருக்கு பொதுவாக்கியதால் ஒடுக்கப்பட்ட பெண்கள் விழித்துக்கொண்டார்கள். இன்று மேற்கு நாடுகளில் வேலை செய்யாத பெண்களுக்கும் அரசின் உதவிப்பணம் கிடைக்கிறது. தனியாக வாழ்வதில் எந்த சுமையும் இல்லாத நிலையில் இன்று பெண்களால் வாழமுடியும்.

ஆனால் ஆண்கள் நிலை வேறு. இதுவரை கிடைத்த வசதிகளால் அறிவு பெற்றாலும் அவர்கள் சிந்தனைகள் ஆமை வேகத்திலேயே நகர்கின்றன. மதங்கள் இன்னமும் பெண்களை, ஆண்களின் உடைமைகளாக பார்க்கச் சொல்கின்றன. ‘பெண் உனது வயல்’, ‘உனது உடமை’ என்பது போன்ற பதங்கள் மதங்களில் பாவிக்கப்படுகின்றன. இப்படியான சிந்தனையில் ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்ந்தவர்களுக்கு அதை விட்டு வெளியே வருவது இலகுவானதல்ல. இருண்ட குகையில் பல தசாப்தங்கள் வாழ்ந்தவனுக்கு வெளிச்சத்தில் வாழ்வது கடினம். 

சாமானிய மனிதர்களான நாம் வாழ்வின் சின்ன சின்ன சுகங்களைக் கூட களையமுடியாது வாழ்கிறோம்.

யாருக்குத்தான் சிற்றின்பங்களையும் சுகமான வாழ்வையும் இலகுவில் துறக்க முடியும்?

ஜனநாயக அரசியலில் ஆண் அரசியல்வாதிகளை (அவர்களிலும் பலர் மொக்கையானவர்கள்) விட மற்றவர்கள் தங்களது வார்த்தை பிரயோகங்களை கூர் தீட்டவில்லை. ஆனால் சாதாரணமாகவே பெண்கள் மொழி திறமையுள்ளவர்கள். கல்வி, பதவி, அதிகாரம் என்பன மேலும் அவர்களின் வார்த்தைகளின் சாரத்தையும் ஆளுமையையும் (Content) கூர்மைப்படுத்துகிறது என்பது உண்மை.

இவற்றால் பல பெண்கள், ஆண்கள் புத்திசாலியல்ல(Jerk , Idiot ) என நினைகிறார்கள். பல ஆண்கள், பெண்களை கண்டு அஞ்சும் தன்மையும் கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் கயிற்றில் கட்ட மறுக்கும் குட்டி நாய்போல் எந்த ஆணும் ஆரம்பத்திலே அடிமையாக விரும்புவதில்லை, பல குடும்பங்களில் ஆண்கள் அடிமையாகப் பிற்காலத்திலிருந்தாலும்.

இவைகள் பற்றிய ஆய்வுகள் செய்யப்படவில்லை. இயற்கையின் சூட்சுமத்தால் பிறந்த காமத்தால் உருவாகும் ஆண்-பெண் உறவு என்பது தவிர்க்க முடியாது. காலம் காலமாக உடலுறவு, குழந்தை பேறு எனும் செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை தொடர்ச்சியான குடும்ப உறவின் விளைவாக மட்டும் இருக்கும் என்பது நிச்சயமில்லை . இந்தியா சீனா போன்ற நாடுகள் சுதந்திரமடைந்து 75 வருடங்கள் மட்டுமே. ஆனால் இங்கு நடக்கும் பொருளாதார மாற்றங்கள் ஐரோப்பிய நாடுகளில் பல நூற்றாண்டுகள் நடப்பதை விட வேகமானவை. அதேபோல் கலாச்சார மாற்றங்களும் நடக்கும் என்பது எனது நம்பிக்கை. ஆனால் அவற்றிற்குத் தயாராகாத பெற்றோர்கள், அரசுகள் நிலை தடுமாறுவதும் நடக்கும் என நினைக்கிறேன்.

இந்த விடயத்தை எண்ண வைத்த சீன அக்கியுபங்சர் வைத்திய பெண்ணுக்கு நன்றிகள்.

“ஆண்கள் பெண்கள்.” மீது ஒரு மறுமொழி

  1. சிறந்த சிந்தனைப் பகிர்வு.

    உலகில் பெண்களின் அரசியல், பொருளாதார, வாழ்வியல் சார்ந்த விடயங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
    வெறுமனே திருமணம், குடும்பம், குழந்தை வளர்ப்பு என்ற சமூகக் கட்டுமானத்திற்குள் வருவது மட்டுமே தம் வாழ்வு என்ற சமூக எதிர்பார்ப்பை உடைக்கும் கல்வி, பொருளாதார முன்னேற்றம், உலக மயமாதல் போன்றவற்றால் பெண்களின் அடிமை வாழ்வு ஒரளவுக்கேனும் பல நாடுகளில் தளர்ந்து போய் விட்டது.

    கற்பு என்ற மாயையைப் பெண்களின் கால்களுக்கிடையில் கட்டிக் காக்க நினைக்கும் எமது சமுதாயம் போன்றவற்றில், பெண் சமத்துவம் ஏற்பட இன்னும் எத்தனை வருடங்கள் செல்லும் என்பது இன்னொரு கேள்வி. இருப்பினும் எமது அடுத்த சந்ததிப் பெண்களின் வாழ்வில், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெரும் மாற்றங்கள் இருப்பதை, வளர்ந்த நாடுகளில் காணக் கிடைக்கிறது.

Kala -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.