குடும்ப வன்முறை

எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ஐ ஏ ஸ் அதிகாரியுமான சிவகாமியிடம் பேசிக் கொண்டிருந்தபோது,    “ பிள்ளைகள், பெற்றோர்களிடமிருந்து தங்களை விலத்தி,  தங்களுக்கான ஒரு புதிய பாதையைத் திறக்கவேண்டும்.  அதுவே அவர்கள் முன்னேறுவதற்கான ஒரேவழி.  “  என்றார்.

 “ உண்மைதான் அதை ஏற்றுக்கொள்கிறேன.  “  எனத் தலையாட்டினேன் .

இது பற்றி பலர் சிந்திக்காதபோதிலும் இது  ஒரு முக்கியமான விடயம். எனது வாழ்வில் இதையே நான் காலம் முழுவதும் செய்தேன். ஆனால்,  அதை ஒரு பொது உண்மையாகச் செய்ய வேண்டிய காரியமாகவும் எழுத்தாளர் சிவகாமி சொன்னபோது எனது நெஞ்சில்,  ஓடும் குதிரைக்கு விழுந்த  சவுக்கடியாக உறைத்தது . காரணம் இப்பொழுது நான் இரண்டு பிள்ளைகளின் தந்தை. நான் அவர்களை இப்படிச்  செய்யச் சொல்லியோ அல்லது இதைத்தான்  படிக்கச் சொல்லியே கட்டாயப்படுத்தவில்லை . ஆனாலும்  ஒரு தந்தையாக எழுத்தாளர் சிவகாமி சொன்னதை எப்படி ஏற்றுக்கொள்வது?  கசப்பான கஷாயமாக இருந்தது என்பது உண்மை .

அறுபது வயதிற்குப் பின்பு  பெரும்பாலான ஆண்கள் மனைவியிடமிருந்தும் குழந்தைகளிடமிருந்தும் தனக்கான வெளியை,  சுதந்திரத்தை பாதுகாத்துக் கொள்வதற்குப் போராடவேண்டும். மனிதவாழ்வில்  படிகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது அல்லவா?

எழுத்தாளர் சிவகாமி மீண்டும்,    “ எமது எழுத்தாளர்கள் எவரும் இது பற்றி எழுதவில்லை.  நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?   “ என்றபோது தலையாட்டாது சிரித்தேன் .

எனது சிரிப்பைப் பார்த்துவிட்டு,  பின்பு தனது குரலை மாற்றி                            “ நீங்கள் எழுதியிருப்பீர்கள்!!  “  எனச் சிரித்தார் .

அப்பொழுது  நான் அண்மையில் எழுதிய   தாத்தாவின் வீடு என்ற நாவலே அதைப் பற்றியதுதான்   எனச் சொல்லி, அதில் ஒரு பிரதியை  அவரிடம் கொடுத்தேன்.

ஒவ்வொரு தந்தையும் தான்  கண்ட , வாழ்ந்த உலகத்தை வைத்து,  தனது குழந்தைகளுக்கு ஒரு உலகம் உருவாக்க விரும்புகிறான். ஆனால்,  அவனுக்கு ஒரு உண்மை  புரிவதில்லை. அவனது உலகம் ஒரு தலைமுறை முந்தியது.  அல்லது கால் நூற்றாண்டு காலாவதியானது . தற்போது உலகம் வேகமாக முன்னேறி வருகிறது.  

ஒரு வருடத்தில் கம்பியூட்டரும்,  இரு வருடங்களில் தொலைக்காட்சியும் , மூன்று வருடங்களில் காரும் பழையதாகிறது. அதைவிடப்  புற உலகம் தொடர்ந்து  விரிந்துள்ளது . குழந்தைகள்,  புதிய உலகத்தைப் பெரியவர்களிலும் பார்க்க இலகுவாகப்  புரிந்து கொள்வார்கள்.   இந்த உண்மையை பெரும்பாலான தந்தைமார்   கருத்தில் எடுக்க மறுக்கிறார்கள். அரசியல்வாதிகள்,  மதவாதிகள்போன்று  கொண்டன விடேல் என இறுகப்பிடித்தபடி கையைவிட மறுக்கின்றனர் . அவர்கள் மறுப்பதுடன் மற்றையோரையும் தங்களது அறியாமையில் மூச்சுத் திணற வைக்கிறார்கள். சில வேளைகளில் தாய்மாரும் இந்த கட்டியத்தில் ஈடுபடுகிறார்கள்.   இதுவே பல குடும்ப   பிரச்சினைகளின் தொடக்கப்புள்ளியாகிறது. 

தந்தை , விடாக்கண்டனாக,  தனது பாதையில் பட்ட துன்பங்களையும் பாதிப்புகளையும் சொல்லி,  தனது விருப்பத்தையும் அபிலாசைகளையும்  மகனது  அல்லது பிள்ளைகளின் தலைக்குள் திணிக்கப் பார்க்கிறான். அந்தத்  திணிப்பு முடியாத பட்சத்தில்  தந்தை என்ற அதிகாரத்தில் சிம்மாசனம்  அமைத்து கால் போட்டமர்ந்து வார்த்தைகளால்  மற்றும் உடலால் வன்முறையைக் கையிலெடுக்கிறான்.

இந்த நேரத்தில் தாய்  மகனைத் தந்தையிடமிருந்து பாதுகாக்க உள்ளே வரும்போது,  தாய்மீது வன்முறை பாய்கிறது. இந்த வன்முறைகள் குழந்தைகளின் மனதில் நிரந்தர விரிசலை உருவாக்கி,  பத்து வயதான பின்பு தந்தையை எதிரியாகவோ அல்லது அலட்சியப்படுத்தியோ நடக்கிறான் . இப்படியான விடயங்கள் எதுவும் வெறுப்பிலோ கோபத்திலோ அல்லது திட்டமிட்டோ  நடப்பதில்லை.  அன்பு,  ஆவல், ஆசை என்பதால் மட்டுமே நடப்பது.   ஆனால்,  அதை எப்படிப் பாவிப்பது எனத் தெரியாது அல்வாவை சர்க்கரை வியாதிக்காரனுக்கு ஆசையாக  ஊட்டி, கோமாவுக்கு அழைத்துச் செல்லும்   செயலாகிறது.

இலங்கை,  இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் இவை பண்பாடு, கலாச்சாரம்,  மதம் முதலான  போர்வைகளால் மறைக்கப்படுகிறது.  காயங்கள் சுத்தப்படுத்தாது மறைக்கப்படுவதால் தொடர்ந்தும் புரையோடி  மணக்கிறது . மனங்களில் விசமாகிறது.  இவை மேற்கு நாடுகளில் குறைவாக நடந்தாலும்கூட   நடந்துகொண்டுதானிருக்கிறது.  அதற்கு குடும்ப வன்முறை எனப் பெயரிடப்படுகிறது. குடும்பங்கள் சிதைகிறது.  குழந்தைகள் அரசால் பொறுப்பேற்கப்படுகிறார்கள். அவர்கள் சமூகத்திற்குச் சுமையாகிறார்கள்.

இப்படியான ஒரு விடயம் எனது வீட்டிலும் நடந்தது. தந்தையார் ஆசிரியராக இருந்தார்.  அக்கால ஆசிரியர்கள் குழந்தைகளைக் கீழ்ப்படிவாக நடத்துவதே தங்களது வெற்றியின் முதல் படி எனக் காலம் முழுவதும் பிரம்போடு அலைபவர்கள். யாழ்.  இந்துகல்லுரியில் அதிபர்  சபாலிங்கம் போன்றவர்கள் அதற்காகவே கொண்டாடப்பட்டார்கள்.  சில ஆசிரியர்களே பிரம்பற்று பாடசாலையில் இருப்பார்கள்.  நான் படித்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில்  பணியாற்றிய பிரான்சிஸ் மாஸ்டர்  எனக்கு உடனடியாக நினைவுக்கு வருவார்.  அப்படி  அவரைப்போன்று  பிரம்பைக் கொண்டு திரியாத ஆசிரியர்கள் எங்கும்  குறைவு

இந்த நிலையில் எனது தந்தையார் ஆங்கிலேயரது இராணுவத்தில் மூன்று  வருடங்கள் இருந்தவர் . தந்தை தாயற்று வளர்ந்தவர் . இதனால் அவரது  ஒழுக்கம் –  கீழ்ப்படிவு என்பதன் அர்த்தம்  என்ன என்று நீங்களே கற்பனை பண்ணமுடியும். இப்படியான தந்தைக்கு எதிராகச் செயல்படுவது ஒரு பிள்ளையின்  முக்கிய கடமையாகிறது.  அதைச்  சிரம் மேற்கொண்டு செய்தேன்.

அவரது வாழ்க்கையின் இலட்சியங்கள், தந்தைக்கு  அடங்கிய பிள்ளையாக  நான் வளர்ந்து பல்கலைக்கழகம்போய்,  கொழுத்த சீதனத்தில் திருமணம் செய்யவேண்டும் என  இருந்தன . இவைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக நான் செயல்படும்போது எனக்கெதிரான அவரது கோபம் அம்மாவின் மேல் திரும்பும் . 

பிள்ளையை  வளர்க்கத் தெரியவில்லை என்ற  அவரது குற்றச்சாட்டு இறுதியில் வன்முறையாகிவிடும். 13 வயதிற்குப் பின்பு வீட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன்பின் இடையிடையே  கோபத்தில் நனைந்தாலும் இலகுவாக என்னால் துடைத்துவிட்டுத் தொடர்ந்து பயணிக்க முடிந்தது.   ஆனால்,  அம்மாவின் வாழ்வில் அப்படியல்ல. அவரது கோபம், ரோகமாகி அதுவே வாழ்க்கையாகியது .

இவைகள் எனக்கு மட்டுமல்ல,  பலரது வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம் ! அவற்றை எப்படி வெளியில் சொல்வது ? 

ஒவ்வொரு குடும்பத்திலும் பிரச்சினைகளைப்  பேசித் தீர்க்கவும்,  ஜனநாயகமான தீர்மானங்களை எடுப்பதும்  முக்கியமானது. எங்களது ஆசைகள் தாபங்களை நாம் எங்களது பிள்ளைகள்மேல் திணிக்காது அவர்களை,  அவர்களாக சுதந்திரமாக வளரவிடவேண்டும். அவர்களுக்கு சுயம் உள்ளது. அதற்கான வெளியைக் கொடுப்பதே பெற்றோர் கடமை.  அல்லாதபோது ஒவ்வொரு பிள்ளையும் தனது வீட்டில் புரட்சி நடத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். அதன் விளைவுகள்,  அக்டோபர் புரட்சியாகவோ அல்லது ஒத்துழையாமையானதாகவோ முடியலாம்.  

பிள்ளைகளுக்குப் பதிலாகப் பெற்றோர் இதைக் கவனத்தில் எடுக்கவேண்டும் என்ற ஆதங்கமே எனக்கிருந்தது.  நேரடியான வார்த்தைகள் சம்பவங்கள் அலுத்துவிடும். பத்தோடு பதினொன்றாகிவிடும்.   அதனாலே பிரச்சினையை வைத்து  எனது தாத்தாவின் வீடு நாவல் எழுதினேன்.   இதுவரையில்  இலங்கை வன்முறையைக் கருவாக வைத்து எழுதிய நான்,  குடும்ப வன்முறையைக் கருவாக வைத்து எழுதியது தாத்தாவின் வீடு நாவல்.  வன்முறைகள் ஒன்றோடு ஒன்று தொடர்பானது. குடும்பத்தில் வன்முறையை அனுபவித்தவன் சமூகத்தில் தனது கோபத்தைக் காட்டுவது இயற்கையே.

மொத்தத்தில் குடும்பம், பாடசாலை ,சமூகம் , அரசு இவை எல்லாம் ஒன்றிலிருந்து வரும் கிளைகளே. வன்முறையின் ஆரம்பம் குடும்பமே . அதனால், விழிப்புணர்வை குடும்பத்திலிருந்தே ஆரம்பிக்கவேண்டும் என்பது எனது கருத்து.

நன்றி அபத்தம்.

—0—

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.