தாத்தாவின் வீடு – நிலத்தின் கதை.

திருஞானசம்பந்தன் லலிதகோபன்.

தாத்தாவின் வீடு-அதிகம் புழக்கமுறாத நிலத்தின் கதை.

ஒரு பிரதி வாசகன் மீது ஏற்படுத்தும் அதிர்வென்பது பிரதி நிகழும் காலம் மற்றும் நிலம் என்பற்றில் பெருமளவில் தங்கியுள்ளதாக உணர்கிறேன். முப்பது ஆண்டு கால போர் என்பது கிட்டத்தட்ட பல தலைமுறைகளை பாதித்த விடயம்.இதனாலேயே போர்க்கால பிரதிகள் இன்றளவிலும் பேசப்பட்டும் வாசிக்கப்பட்டும் வருவதை காணலாம். போரும் வாழ்வும் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்திருந்தமையே போருக்குள் வாழ்ந்த வாசகன் அதனை பிரதிகளிலும் அடையாளம் காணவும் ஒப்பிடவும் ஆகுமாக கூடியதாகவிருந்தது.

நோயல் நடேசன் அவர்களின் வேரல் பதிப்பக வெளியீடாக வந்த  “தாத்தாவின் வீடு” நாவலானது சர்வநிச்சயமாக போருக்கு முந்தைய காலத்தை கூறும் பிரதிதான்.ஆனால் இது கூறும் பால்ய கால மீட்டல் என்பது எல்லோருக்கும் உரியதோர் விடயமாக இருப்பதனால் அனைவருக்கும் நெருக்கமான பிரதியாகிறது.வெறுமனே புனைவுகளை மாத்திரமே நம்பி எழுதப்படும் பிரதிகள் படைப்பாளிக்கு திருப்தியையும் மேன்மையையும் தந்தாலும் வாசகனை தன்னுள்  உள்ளீர்ப்பதில் தடங்கல்களை எதிர்கொள்கிறது.

இந்த நாவல் நாவலாசிரியரின் வாழ்வியல் அனுபவங்களை கொண்டு எழுதப்பட்ட பிரதியாயினும் இது அவரின் முற்று முழுதான வாழ்வியல் குறிப்பாக அமையாது அவர் தனது பூர்விக கிராமத்தில் வாழ்ந்த காலத்தை மீட்பதாய் அமைகிறது.

பொதுவாக யாழ் மாவட்டத்தை மையமாக கொண்டு எழுதப்படும் பிரதிகள் பெருநிலமான குடாநாட்டினையே காட்சிப்படுத்துகின்றன.ஆனால் எனது வாசிப்பு அனுபவத்தின் பிரகாரமாக தீவுப்பகுதிகளை மையப்படுத்தி எழுதப்பட்ட பிரதிகள் வெகு சிலவே.தீவுப்பகுதிகளை அடிப்படையாக கொண்டெழுந்த புதினமொன்றை வாசிப்பினூடே அடைந்த எனது முதல் அனுபவமும் இதுவாகிறது.

தீவுப்பகுதிகள் என்கையில் நம் மனதில் வரும் காரைநகர், புங்குடுதீவு, நயினாதீவினை தவிர்த்து அதிகமாக நாமறியாத எழுவைதீவே இந்த நாவல் பேசும் நிலமாகவும் நாவலாசிரியரின் சொந்த நிலமுமாகிறது.நாவலின் ஆரம்பத்திலேயே குறிப்பிடப்படுவது மாதிரி இந்த நாவல் பேசும் காலம் 70 இற்கு முற்பட்ட காலமாகையால் போரின் நினைவுகளை அறவே தாங்காத பிரதியாக இது முகிழ்வதுடன்  நாவலின் பேசுபொருள் அந்த காலத்தின் சமூகவியல் பரப்பாகவும் அமைகிறது. இதுவே இந்த நாவலை உன்னிப்பாக அவதானிக்க வைக்கிறது. ஏனெனில் நவீன வசதிகள் முக்கியமாக போக்குவரத்து என்பது கடல் மார்க்கமாகவே மட்டும் வரையறுக்கப்பட்ட ஒரு தீவில் மனிதர்களின் வாழ்வென்பது அவரவரின் ஓர்மத்திலேயே தங்கியிருக்கிறது.ஆக இது ஓர்மம் மிகுந்த மனிதர்கள் குறித்தான நாவல்.

ஐந்து பாகங்களாக இருக்கும் நாவலில் எழுவைதீவின் தொன்மங்கள் மற்றும் வழக்காறுகள் குறித்து நெடிய தகவல்கள் இருக்கின்றன. இதில் பல நாம் புழங்கிய கிராமங்களில் இருக்கும் கதைகள் போல இருப்பினும் எழுவைதீவிற்கான பிரத்தியேக வழக்காறுகளும் பதிவாக்கப்பட்டிருக்கின்றன.

குடும்பங்கள் தனித்தனி தீவுகளாக போய்விட்ட இந்த காலத்தில் தாத்தா பாட்டியுடன் வாழ்ந்த கூட்டுக்குடும்ப வாழ்வியலின் அழகியலை தனது எழுத்தினூடே வாசகனிற்கு கடத்துகிறார் நாவலாசிரியர்.தாத்தாவை மையமாக வைத்து நகரும் கதையில் பல்வேறு பாத்திரங்கள் வருகின்றன.

எனக்கு ஆச்சரியமூட்டும் பாத்திரம் சமரசம் என்ற பாத்திரம்தான்.அனேகமாக அதிகமாக உரையாடாத ஆனால் தனது கனவுகள் மூலமாக தீர்க்கதரிசனங்களை அறிவிக்கும் பாத்திரம் இது.நாவலின் இறுதிப்பகுதியில் இறந்து போகும் இந்த பாத்திரத்தின் நிறைவேறாத கனவொன்றில் ஐந்து நாய்கள் இந்தியாவிலிருந்து வருவதாக கூறப்படும்.பிற்காலத்து இனப்போரினை பூடமாக கூறியதாக நாம் இதனை எடுத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் நாவல் நகரும் திசையில் இந்த பாத்திரம் நாவலாசிரியரின் முற்று முழுதான புனைவோ என சிந்திக்க தூண்டுகிறது.

அடுத்து இந்தியாவில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த இராமலிங்கம்.இந்தியாவிருந்து வந்து இலங்கையில் “கள்ளத்தோணியாக” பார்க்கப்பட்டாலும் நாவலின் கனத்தை அதிகரிக்க வைக்கும் பாத்திரம் இது.

தனது தாயாகிய இராணியோடு ஒத்துக்போகும் தாத்தாவின் பேரனான நட்சத்திரன் தனது தந்தையிடம் எட்டியே இருக்கிறார். என்னதான் தீவுப்பக்கமாக இருந்தாலும் நட்சத்திரனின் தந்தை என்ற இந்த பாத்திரம் யாழ்.சமூகத்தின் ஆணாதிக்கத்தை பிரதிபலிக்கும் ஒன்றாக சித்தரிக்கப்படுகின்றது.

பல்வேறு சம்பவங்களினூடு நகரும் நாவல் முடிவில் வாசகர்கள் அனைவரும் தங்களின் பூர்விக நிலத்திற்கு சென்று வந்த உணர்வினை பெறுவர்.இதுவே இந்த நாவலின் இலக்குமாகிறது.

அதிகம் பேசப்படாத ஆனால் இரசனை மிகுந்த நாவல் இது

“தாத்தாவின் வீடு – நிலத்தின் கதை.” அதற்கு 2 மறுமொழிகள்

  1. வாழ்த்துக்கள் நியங்களை உணர்வுக்குள் எடுத்து வாசகர்களுக்கு கொடுக்கும்
    உங்கள் உணர்வுக்குஎன் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.