தைலம்  “ அவுஸ்திரேலியக் கதைகள் அறிமுகம்

 புகலிட இலக்கியத்தின்  மற்றும் ஒரு வரவு                             “

                                            முருகபூபதி

 “ எமது முன்னோர்கள் ஐவகைத் திணைகளை எமக்கு அறிமுகப்படுத்தினர்.

குறிஞ்சி – மலையும் மலைசார்ந்த நிலமும் / முல்லை – காடும் காடு சார்ந்த நிலமும் / மருதம் – வயலும் வயல் சார்ந்த நிலமும் / நெய்தல் – கடலும் கடல் சார்ந்த நிலமும் / பாலை – மணலும் மணல் சார்ந்த பகுதிகளும்

தமிழர்களின் அந்நிய நாடுகளை நோக்கிய புலப்பெயர்வையடுத்து அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் இலக்கியங்கள் அறிமுகமானதும் அந்தப்பிரதேசங்களின் நிலங்களும் பருவகாலங்களும் ஆறாவது திணையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பனியும் பனிசார்ந்த நிலங்களுமே அந்த ஆறாம் திணையாகியிருக்கிறது.  “

கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு வேரல் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தைலம் ( அவுஸ்திரேலியக் கதைகள் ) நூலைப்  படித்தபோது,  மேற்குறிப்பிட்ட எனது முன்னைய பதிவே  நினைவுக்கு வந்தது.

அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் எழுத்தாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி இந்த நூலை தொகுத்திருக்கிறார். இவரதும் கதை உட்பட அவுஸ்திரேலியாவில் வதியும் மேலும் பதினொரு படைப்பிலக்கியவாதிகளின் சிறுகதைகள்  இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

அவுஸ்திரேலியாவை தமிழக எழுத்தாளர் ஜெயமோகன்                         “ புல்வெளி தேசம்  “ என வர்ணித்துள்ளார்.  மரங்களும் செழித்து வளருவதற்கு ஏற்ற பருவகாலங்களை கொண்டிருந்தாலும்,  கோடை காலத்தில் காட்டுத்தீ பரவல் தவிர்க்கமுடியாத நாடு இந்த கடல் சூழ்ந்த கண்டம்.

இங்கு யூகலிப்ரஸ் இனத்தைச்சேர்ந்த மரங்கள் செழித்து வளர்ந்து, இந்த காட்டுத்தீக்கு தீணி தருகின்றன. அவை எரிந்துபோனாலும்,  மீண்டும் துளிர்த்து பசுமையை போர்த்திவிடும்.

தைலம் நூலின் தொகுப்பாசிரியர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, இந்தப்பெயரை சூட்டுவதற்கு சொன்ன காரணத்தை இங்கே காணலாம்.

 “ அவுஸ்திரேலியாவின் அடையாளங்களில் ஒன்று யூகலிப்ரஸ்       ( Eucalyptus ) தமிழில் இதை தைலமரம் என்று குறிப்பிடுவதுண்டு. இங்கே தைலம் என்பது தனியே யூகலிப்ரஸை மட்டும் குறிக்காமல், வாழ்க்கையின் சாரத்தை – அதன் தைலத்தைக் குறிப்பதாகவே கொள்ளப்படுகிறது. அதைப்போல அவுஸ்திரேலியச் சூழலின் சாரத்தை –  அதன் தைலத்தைக் குறிப்பதாகவே கொள்ளப்படுகிறது. அதைப்போல அவுஸ்திரேலியச் சூழலின் சாரத்தை – அதன் தைலத்தையும்.  “

  எட்டு மாநிலங்கள் கொண்ட பெரிய தேசம் அவுஸ்திரேலியா.  அனைத்து மாநிலங்களிலும் எழுத்தாளர்கள் – குறிப்பாக தமிழ்ச் சிறுகதை படைப்பாளர்கள் வசிக்கிறார்கள். அவர்களில் சிலர்  கதைத் தொகுதிகளையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளனர். அத்துடன் அவர்களில் சிலரது கதைகள்  பனியும் பனையும், உயிர்ப்பு முதலான முன்னர் வந்த தொகுப்புகளிலும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் சில கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு Being Alive என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளன.

அந்த வரிசையில் தற்போது மற்றும் ஒரு வரவாக எஸ். கிருஷ்ணமூர்த்தி தொகுத்திருக்கும் தைலம் வெளிவந்துள்ளது.

கன்பரா யோகன், தெய்வீகன், அருண். விஜயராணி, அசன், முருகபூபதி, நடேசன், எஸ். கிருஷ்ணமூர்த்தி, ஜே.கே., தாமரைச்செல்வி, ஆசி கந்தராஜா, கே. எஸ். சுதாகர், தேவகி கருணாகரன் ஆகியோரின் 12 சிறுகதைகள் தைலம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு சிறுகதையும் புகலிட வாழ்வின் கோலங்களை சர்வதேச பார்வையுடனும் தாயகம் பற்றிய நினைவுகளுடனும் பேசுகின்றன. Bloom where you are planted என்ற பைபில் வாசகம் ஒன்றிருக்கிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகளை எழுதிய பன்னிரண்டுபேருமே இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

இவர்கள் தாயகத்தில் ஆழமாக வேர்பதித்து வாழ்ந்து,  பிடுங்கப்பட்ட மரங்களாக  புலம்பெயர்ந்து வந்து புதிய தேசத்தில்,  முற்றிலும் மாறுபட்ட பருவகாலங்களில் வாழ நேர்ந்தவர்கள்.  அனைத்தும் அந்நியாமாகியிருக்கும் புகலிட மண்ணில் தங்கள் வாழ்வின் தரிசனங்களை கதைகளாக்கியிருக்கிறார்கள்.

சமகாலத்தில்  இலங்கை பல்கலைக்கழகங்களில் மாணவர்கள்  தமது MPhil , B. A பட்டங்களின் ஆய்வுக்காக சிறுகதைகளை உட்படுத்தி வருகிறார்கள்.  அந்தவகையில் எவரேனும் மாணவர்கள்,   தத்தம் தாயகம்விட்டு புலம்பெயர்ந்து சென்று  எழுதுபவர்களின்     புகலிட இலக்கியக்  கதைகள்  தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளத்  தயாரானால்,  அவுஸ்திரேலியாவில் தமிழ்ச் சிறுகதைகளின்  படைப்பு மொழி, இங்குள்ள தமிழ்  எழுத்தாளர்களின் படைப்பூக்கம் பற்றி எழுதுவதற்கு தைலம் என்ற இக்கதைத் தொகுப்பும் உசாத்துணையாகலாம்.

 “ தமிழில், புலம்பெயர் இலக்கியம் புதிய திணையைச் செலுமையாக அடையாளப்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு பிராந்தியங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் விதவிதமான குணமும் அழகும் கொண்டவை. / அந்த வகையில் இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அவுஸ்திரேலியச் சூழலையும் அங்குள்ள வாழ்க்கையையும் சாராம்சப்படுத்துகின்றன. இந்தத் தொகுப்பில் அதுவே கவனம் கொள்ளப்பட்டுள்ளது./  இது போல இன்னும் ஒரு தொகுதியைக் கொண்டு வரக்கூடிய அளவுக்குக்  கதைகளும் எழுத்தாளர்களும் அவுஸ்திரேலியாவில் உண்டு. அதை இன்னொரு தொகுதியாக கொண்டுவரலாம்  என்று திட்டமிட்டுள்ளோம். / இத்தொகுப்புக்குக் கிடைக்கும் வரவேற்பு அடுத்த தொகுதியை விரைவு செய்யும்  “ எனவும் தொகுப்பாளர்  எஸ். கிருஷ்ணமூர்த்தி இந்நூலில் தெரிவித்துள்ளார்.

பிரதிகளுக்கு: veralbooks2021@gmail.com

                                   sellakrish@gmail.com

நன்றி: யாழ். தீம்புனல்

                                                   —-0—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: