சாதனைகள் படைத்த திலகவதி ஐ. பி. எஸ்.

முதல் சந்திப்பு :

சவால்களினூடே சாதனைகள் படைத்த திலகவதி ஐ. பி. எஸ். முருகபூபதி

சென்னைக்கு 1990 ஆம் ஆண்டு சென்றிருந்தபோது, அச்சமயம் தாம்பரத்திலிருந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனை சந்தித்தேன். அன்றைய தினம் மாலை சென்னையில் எழுத்தாளர் சிவகாமியின் பழையன கழிதல் நாவல் வெளியீடு நடந்தது.அந்த நிகழ்வில் தானும் பேசவிருப்பதாகச் சொன்ன ராஜம் கிருஷ்ணன், என்னையும் அங்கே வரச்சொன்னார். அவரது இல்லத்தில் மதியவிருந்தை முடித்துக்கொண்டு அவர் குறிப்பிட்ட மண்டபத்திற்கு அன்று மாலை சென்றேன்.

எழுத்தாளர் சிவகாமி அப்போது ஐ. ஏ. எஸ். அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரது நாவல் பற்றி உரையாற்றுவதற்கு ராஜம் கிருஷ்ணனுடன் மேலும் மூன்று இலக்கிய ஆளுமைகள் வந்திருந்தனர்.அவர்கள்: கவிஞர்கள் மு. மேத்தா, இன்குலாப், படைபிலக்கியவாதி திலகவதி. முதலிருவரும் கல்லூரி விரிவுரையாளர்கள். ஆனால், திலகவதி அப்போது தமிழ்நாடு காவல் துறையில் உயர் அதிகாரி. இவர்கள் மூவரையும் அன்றுதான் முதல் முதலில் சந்திக்கின்றேன். மூவருடனும் உரையாடினேன். காவல் துறையிலிருப்பவர் எவ்வாறு கலை, இலக்கிய , இதழியல் துறைகளுக்கு வந்திருப்பார் என்று அப்போது வியப்படைந்தேன்.

திலகவதியை நேருக்கு நேர் முதல் முதலில் சந்தித்து மூன்று தசாப்த காலம் கடந்துவிட்டிருந்தாலும், கடந்த 2022 ஆம் ஆண்டு எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் 22 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகர் அரங்கில் நடந்தபோது, மீண்டும் இணையவழியில் அவரை சந்தித்து பேச முடிந்தது.இந்த அரங்கில் திலகவதி, “ தமிழ்ச்சிறுகதைகள் – இன்று “ என்ற தலைப்பில் விரிவான உரையை நிகழ்த்தினார். திலகவதியை இந்தத் தலைப்பில் உரையாற்றுமாறு எமது சங்கத்தின் செயலாளர் நடேசன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திலகவதி, விரிவும் ஆழமும் கொண்ட அந்தத் தலைப்பில் பேசினார். அதனை தொடக்கப் புள்ளியாக வைத்து, இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மற்றும் தமிழர் புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச்சிறுகதை வளர்ச்சி பற்றி தனித்தனியாக ஆய்வு செய்யவேண்டும் என்ற வேண்டுகோளை இந்தப்பதிவின் ஊடாக முன்வைத்துக்கொண்டே, சவால்களின் ஊடாக சாதனைகள் நிகழ்த்தியிருக்கும் திலகவதி பற்றிய எனது அவதானக் குறிப்புகளை இங்கே எழுதுகின்றேன்.

திலகவதிக்கு மகாத்மா காந்தியும் மகாகவி பாரதியும் மாத்திரம் ஆதர்சமாகத் திகழவில்லை. குடும்பத்தில் ஏக புத்திரியாக பிறந்திருக்கும் இவருக்கு தாயும் தந்தையும்தான் இதர ஆதர்சங்கள்.பாரதியின், “ வையகம் காப்பவரேனும் – சிறு வாழைப் பழக்கடை வைப்பவரேனும் பொய்யகலத் தொழில் செய்தே – பிறர்போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர் “ என்ற கவிதை வரிகளையே தனது மனதிலிருத்தி, சவால்கள் நிரம்பிய காவல் துறை வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொண்டவர்தான் திலகவதி.

2019 இல் வெளிவந்த மிக மிக அவசரம் என்ற திரைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா..?

காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின சமத்துவமின்மையை பேசும் திரைப்படம் இது.இலங்கையில் அண்மையில் அநாதரவாகக் கைவிடப்பட்டு கண்டெடுக்கப்பட்ட ஒரு சிசுவுக்கு ஒரு பெண் காவலர்தான் பாலூட்டினார் என்ற செய்தி வெளியானது. இது போன்ற செய்திகள் பல முன்னரும் வெளியாகியிருக்கின்றன.

காவல் துறையில் பணியாற்றிக்கொண்டே தேவைப்பட்ட வேளையில் தாயாகவும் மாறவேண்டிய தேவை பெண் பொலிஸாருக்கு நேர்ந்திருக்கிறது.இத்தகைய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் பின்னணியிலும் திலகவதி ஐ. பி. எஸ் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் எழுத்துலகத்தையும் அவதானிக்கலாம்.பாடசாலைப் பருவத்திலேயே வாசிப்பு அனுபவத்தையும் வளர்த்தவாறு இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கிய திலகவதி, தனது மேற்கல்வியை நிறைவுசெய்துகொண்டு, தொழில் வாய்ப்புக்காக விண்ணப்பங்களும் எழுதிக்கொண்டே இருந்தவர். எங்கிருந்தாவது நேர்முகத்தேர்வுக்கு கடிதம் வருமா..? என வீட்டு வாசலில் தினம் தினம் காத்திருந்தவர்.

அவரது காத்திருப்புக்கும் ஒரு நாள் விடை கிடைத்தது. அவ்வாறு கிடைத்த தொழில் வாய்ப்பு இந்திய காவல் துறையிலிருந்து வந்தது. இந்தத் துறையில் , பாரதி சொன்னது போன்று பொய்யகலத் தொழில் செய்ய முடியுமா..? ஆனால் “ முடியும் “ என சாதித்துக்காட்டியவர் திலகவதி. எம். ஜி. ஆர், ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்த காலப்பகுதிகளிலும் பல முக்கிய பொறுப்புகளையும் வகித்திருப்பவர்.அன்று 1990 ஆம் ஆண்டு, இவரை முதல் முதலில் சந்தித்தபோது, காவல் துறைக்குரிய சீருடையுடன் அவர் மேடையில் தோன்றவில்லை. சிவகாமியின் பழையன கழிதல் நாவல் பற்றி திலகவதி உரையாற்றும்போதுதான் அவர் தமிழ்நாடு காவல் துறையில் முதலாவது பெண் பொலிஸ் உயர் அதிகாரி என்ற தகவலை அறிந்தேன். கவிதை, சிறுகதை, நாவல் , விமர்சனம், மொழிபெயர்ப்பு, பதிப்பு, தொகுப்பு, இதழியல் என பல்துறை ஆற்றலும் ஆளுமையும் மிக்க திலகவதி, கல்மரம் நாவலுக்கு இந்திய மத்திய அரசின் சாகித்திய அகடமி விருதும், சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதினை தமிழக அரசிடமிருந்தும் பெற்றவர்.

திலகவதியின் படைப்புகள் தொடர்பாக சில மாணவர்கள் இளம் முனைவர் பட்டத்திற்கும் முனைவர் பட்டத்திற்கும் ஆய்வு செய்துள்ளனர்.தமிழ்நாட்டிலிருந்து இந்திய காவல்துறை பணிக்குத் தெரிவான முதல் தமிழ்ப்பெண்மணி என்ற பெருமைக்குரிய திலகவதி, அங்கே பல பாகங்களிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தவாறே பல சவால்களையும் சந்தித்திருப்பவர். பல குற்றவியல் ஆணைக்குழுக்களிலும் பங்கேற்று நீதிக்காக குரல் எழுப்பியவர். பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் இலக்கியப்பிரதிகளை எழுதியவர். இதுவரையில் முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை வரவாக்கியிருக்கும் திலகவதி தொடர்ந்தும் அயராமல் எழுதிக்கொண்டிருப்பதுடன், அம்ருதா இலக்கிய இதழின் கௌரவ ஆசிரியராகவும் இயங்குகிறார். (

நன்றி: யாழ். தீம்புனல் வார இதழ் ) –

–0—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: