
நடேசன்
பொன்னியின் செல்வன் மட்டுமல்ல கல்கியின் எல்லாக் கதைகளையும் சிறுவயதில் படித்திருக்கின்றேன். எங்கள் எழுவைதீவுக்கு கல்கி தபாலில் வரும். சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு முதலான தொடர்களை அம்மாவோடு போட்டியிட்டுப் படிப்பேன். அந்த பழைய தொடர்களை அம்மா புத்தகமாக தொகுத்து பைண்ட் செய்து வைத்திருந்தார்.
பொன்னியின் செல்வனில் முக்கியமாக நினைவுக்கு வருவது அதில் வரும் பாத்திரங்களான வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான், நந்தினி என்பன.
இலக்கியத்தை ருசிப்பது ஒன்று, அதை அறிந்து கொள்வது மற்றொன்று. நட்சத்திர உணவகத்தில் உண்பவனுக்கும் அந்த உணவைத் தயாரிப்பவரினதும் நிலைக்குச் சமானமானது .
ஆங்கிலத்தில் மிருக வைத்தியம் படித்த நான், இலக்கியத்தை அறிந்து கொள்ள ஆங்கில இலக்கிய விளக்க உரைகளைக் கேட்டேன். தொடர்ந்தும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதன்படி இலக்கியத்தில் முழுமையான அல்லது ஆங்கிலத்தில் ( Round) வட்டமான பாத்திரங்கள் உருவாகும்போது, அவை மனதில் நிற்கும். தட்டையான (Flat) பாத்திரங்கள் கதை சொல்வதற்கு பாவிப்பது மட்டுமே . அதாவது நெருப்புக்குச்சி மாதிரி . மெழுகுவர்த்தியை கொளுத்தியபின் அதை எறிந்து விடுவோம்.
பொன்னியின் செல்வனை படிக்கும்போது அதனை நாவலாகப் பல குறைகளைக் காணலாம். ஆனாலும் இதுவரையில் கல்கியைப்போன்று நினைவில் நிற்கும் பாத்திரங்களை தற்கால இலக்கியத்தில், தமிழ்ப் புனைவு வெளியில் படைத்தவர்கள் எவருமில்லை. நவீன தமிழ் இலக்கியத்தில் ஓரளவு மனதில் நிற்கும் ஒரே பாத்திரம் மோகமுள்ளில் வரும் யமுனா மட்டுமே. இலங்கையில் எஸ். பொ. வின் சடங்கில் வரும் செல்லப்பாக்கியம் அதனைப் படித்தவர்களின் மனதில் நிற்கும் பாத்திரம் . இவைகள் எனது வாசிப்பு அனுபவத்தில் முழுமையான பாத்திரங்கள்.
நாவல் இலக்கியத்தில் 1800 களில் வந்த கற்பனாவாத நாவல் அமைப்பு, அதன்பின் வந்த யதார்த்தம், 1900-1920 இல் வந்த நவீன நாவல்கள் என பல படிகளில் வளர்ந்து விட்டது. 1960 இல் பின்நவீனத்துவ நாவல்கள் வந்துவிட்டன.
1950 இல் வெளியாகிய கல்கியின் நாவல் பின்தங்கியது என்றாலும், கல்கி தமிழர்களுக்காக எழுதும்போது, நவீத்துவ நாவலாக கடவுளை நிராகரித்து எழுத முடியுமா? கல்கி, தான் வாழ்ந்த காலத்து மக்களுக்காக, தமிழகத்தின் வரலாறு கலந்த நாவல்களை எழுதினார்.
அவரது காலத்திற்குத் தேவையானதை எழுதினார். அந்தவிதத்தில் அவரது நாவல்கள் முக்கியமானது . அத்துடன் அவர் , காலனி ஆதிக்கத்திலும் மொகாலய அரசின் ஆதிக்கத்திலும் 800 வருடங்களுக்கு மேலாக அரசாளப்பட்ட மக்களது வரலாற்றின் சில பக்கங்களை புரட்டுவதற்கு சாமானிய மக்களைத் தூண்டுகிறார். ஒரு சில அறிவுஜீவிகளுக்காக மட்டும் அவர் எழுதவில்லை. அந்த விதத்தில் அவர் கொண்டாடப்படவேண்டியவர்.
உலகத்தில் முதன் முதலாக, எகிப்தில் அந்த நாட்டின் அரசால் ராணுவம் வைத்திருக்க முடிந்ததற்குக் காரணம், நைல் நதியின் நீர்வளமே. அரச பாதுகாப்புக்கு மேலாகப் பெரிதளவில் படையெடுப்பு நடத்த முழு நேர ராணுவம் வைத்திருந்தால், அதற்குப் பணம் வேண்டும். வேதனம் கொடுக்கவேண்டும் . அல்லாதபோது விவசாயிகளே பகுதி நேரப் படைவீரர்களாவர் .
தென் இந்தியாவில் பல பட்டங்களுடன் அரச படையில் இருப்பவர்கள் பகுதி நேரப் படைவீரர்கள், மழைக்காலத்தில் விவசாயம் செய்பவர்கள் . அவர்களது சேவையின் நிமித்தம் அரசு காணிகளைப் பெறுவார்கள் . தொண்டமான், சேர்வை, நாயகர், படையாச்சி எனப் பட்டங்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டது . அவை பிற்காலத்தில் சாதிப் பெயராகியது. இது உலகமெங்கும் நிலவுடைமை சமூகத்தில் நடந்தவையாகும் . அரசர்கள் நில உடமை சமூகத்தின் முக்கோணத்தின் உயரத்தில் இருப்பவர்கள் . அவர்களது பாதுகாப்பு அந்த சமூகத்தைப் பாதுகாப்பதிலேயே இருந்தது .
சோழர்களது நடவடிக்கைகள் கோவில்களிலும் நீர்நிலைகளைப் பெருக்குவதிலும் இருந்தது ஆச்சரியமில்லை. தற்கால பாராளுமன்ற ஜனநாயக சமூக கண்ணோட்டங்களால் அக்காலத்தை விமர்சிப்பது சிறுபிள்ளைத்தனம்.
சோழ அரசு , தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் தோன்றிய அரசுகளில் முக்கியமானதாகும். சோழ நாட்டின் நீர்வளமே அந்நாட்டால் ராணுவத்தை வைத்திருக்கக் கூடியதாக இருந்தது . காவிரி நீரின் மீதே சோழர்கள் சாம்ராச்சியம் அமைத்தனர். நாட்டில் செல்வம் பெருக உபரியான பண்டங்களால் வர்த்தகம் உருவாகிறது. சோழர் காலத்தில் பல தென் ஆசிய நாடுகளோடு வியாபாரம் நடக்கிறது. இவைகள் விரிவடைந்த காலம் சோழர் காலம் . எனினும் தொடக்கியவர்கள் பல்லவர்களே.
என்னைப் பொறுத்தவரை பல்லவர்களே தமிழ்நாட்டில் பல கோவில்கள் உருவாக காரண கர்த்தாக்களாக இருந்தவர்கள். அவர்கள் அமைத்த கைலாசநாதர் கோவிலை காஞ்சிபுரத்தில் பார்த்தேன். எல்லா கோவில்களுக்கும் தாய் கோவிலாக நரசிம்ம பல்லவனால் அது அமைக்கப்பட்டது . தஞ்சைப் பெரிய கோவிலைச் சோழர்கள் அமைக்க இந்த கைலாசநாதர் கோவிலே முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. வெளிநாட்டு வர்த்தகம் மாமல்லபுரத்தில் ஏற்பட்டதற்கு இன்றும் அங்குள்ள கலங்கரை விளக்கம் சாட்சி . இந்தியக் கலாச்சாரத்தை தென்கிழக்காசியாவிற்கு எடுத்துச் சென்றவர்கள் அவர்களே
பல்லவர்களைக் கொண்டாடாமல் இருப்பதற்குப் பலருக்குப் பல காரணம் இருகக்கலாம். ஆனால், தெற்காசியாவில் 6 ஆம் நூற்றாண்டிலிருந்து தென் இந்தியக் கலாச்சாரத்துடன் இந்திய மதங்களான சைவம், பௌத்தம் உட்பட , கட்டிடக்கலையும் பரவியது பல்லவர் காலத்திலேதான். வட இந்திய மதமான வைணவம், தென்னாசியவிற்கு பெரிதாகச் செல்லவில்லை என்பதையும் அறிந்து கொள்க.
மாமல்லனா – ராஜராஜசோழனா எனக்குப் பிடித்தவர்கள் என்றால் எனது வாக்கு மாமல்லனுக்கே . மாமல்லன் படை எடுத்து சாளுக்கியரை வென்றான். ஆனால், ராஜராஜ சோழன் ( சோழர்கள்) மற்றைய தமிழனாகிய பாண்டியரை கருவறுத்தான்.
இது குதர்க்கமாக இருந்தாலும் இது உண்மையே .
உண்மையில் அரசகுலங்களிலோ, ஏன் இன்றைய நவீன அரசிலோ இனம் – மொழி என்ற பேதம் கிடையாது. ராஜீவ்காந்தி சோனியாவை மணம் செய்தது போன்று, எங்கு அழகிய பெண் இருந்தாலும் அல்லது அரசுக்கு ஆதரவு தேடியும் திருமண பந்தம் செய்வார்கள். இக்காலத்திலும் தமிழ் நாட்டில் நடக்கும் வரலாறும் அதுவே . விடுதலைப் புலிகளின் காலத்தில் மெல்பனில் தமிழ்த்தேசியத்தை நாளும் பொழுதும் வானொலியில் பேசியவர் சிங்களப் பெண்ணை கந்தர்வ மணம் செய்தார். தமிழ் இனத்திற்காக உயிர் கொடுக்க நினைத்தவர்களது இரண்டாம் தலைமுறையில் சிங்களவர்களை மணந்தவர்கள் பலர். பேரக் குழந்தைகளில் இன மொழிக் கலப்பு பார்க்க முடியுமா?
மறுமொழியொன்றை இடுங்கள்