பண்ணையில் ஒரு மிருகம் – நூல் விமர்சனம்

– கிறிஸ்டி நல்லரெத்தினம் –

சரி, இந்த குன்றின் மேல் ஏறிக்கொள்ளுங்கள். அதோ தெரிகிறதே..பார்த்தீர்களா?…அந்த அயனாவரம் கிராமம்தான் எமது கதைக்களம். அதற்கு அடுத்துள்ள கிராமம் பண்டூர். சாதியால் பிரிந்து கிடக்கும் இரு கிராமங்களை காண்கிறோம். அதோ தெரியும் நான்கு ஓட்டுவீடுகளும் அதைச்சுற்றியுள்ள நாற்பது ஓலைக்குடிசைகளும் அவற்றை ஒட்டி ஓடும் அந்த குளக்கரையுமே நீங்கள் சஞ்சரிக்கப்போகும் தளங்கள். தளம் என்றா சொன்னேன்? வெவ்வேறு மட்டங்களில் ஓலை, ஓடு என பிரிந்து கிடக்கும் இந்த சமுதாய கட்டமைப்பை வேறு என்னவென்று கூறுவதாம்?

செங்கல்பட்டிற்கு அருகே உள்ள இந்த 150 ஏக்கர் பண்ணைக்குள் ஆசிரியர் பல பாத்திரங்களை தன் எண்ணக்கூடையில நிரப்பி வந்து இங்கே கொட்டுகிறார். எண்ணிக்கொள்ளுங்கள்: கதைசொல்லி இலங்கை கால்நடை வைத்தியர், பண்ணை மனேஜர் கறுப்பையா, முதலாளி நீலமேகம், பண்ணை வாசிகள்: மாணிக்கம், கிருஷ்ணன், வீரராகவன், பால்காரர் ராமசாமி, மேஸ்திரி, நாயகி: கமலம், பார்வதி, சுமதி, சிறுவர்கள் : ராசு, ராமு, சுப்பு, அறுபது மாடுகள் : சிவப்பி, பொன்னி, மூக்கன் கடா. ஆடுகள்: வேலன். பயிர்கள்: நிலக்கடலை, காய்கறி போதுமா? இல்லையென்றால் அமானுஷ்ய பாத்திரமான கற்பகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அதென்ன அமானுஷ்யம்? அமானுஷ்யம் அல்லது Magical realism என்பது ஒரு வகை மாயாவாதம்: கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையே பாலம் போட்டு அதில் கதாபாத்திரத்தை நடமாடவிடும் வித்தையே இது. 1925ல் ஜேர்மனியில் பிறந்த இந்த வார்த்தை ஓவியங்களை விபரிக்கவே ஆரம்பத்தில் பாவிக்கப்பட்டது. இவ் வார்த்தையின் தந்தை: Franz Roh. ஆனால் 1836ல் Nikolay Gogol தனது The Nose நாவலில் இதை தொட்டுவிட்டாரே என்று சொல்வோரும் உண்டு.

 அரசியல் மாற்றங்களின் உந்துதலால் பல இலத்தீன்- அமெரிக்க நாவலாசிரியர்கள் இதை ஒரு யுக்தியாக்கி நாவல்களில் முதலில் புகுத்தியதாய் அறிகிறோம். Gabriel Garcia Marquez, Isabel Allende ,Juan Rulfo போன்றோர் இவர்களுள் முன்னோடிகள். வங்காளி எழுத்தாளர்களான Nabarun Bhattacharya, Jibanananda Das, Shahidul Zahirஐயும் கன்னட எழுத்தாளர்களான சிவராம் காரந்தையும் தேவனூர் மகாதேவாவையும் அதே கூடைக்குள் நிரப்பிக்கொள்ளலாம்.

இவர்கள் படைக்கும் இந்த அமானுஷ்ய பாத்திரங்கள் ஒரு குறியீடாக அல்லது கனவியல் உருவாக வந்து கதையில் குந்திக்கொள்ளும்.

ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’ நாவலின் நாயகன் முதிர்வயதான சாந்தியாகோ எண்பது நாட்கள் ஒரு மீனும் பிடிபடவில்லையே என்ற சோர்வில் தூங்கி கனவுலகில் சஞ்சரித்து ஆப்பிரிக்க கடற்கரையில் உலவும் சிங்கங்களை மட்டுமே கனவில் காண்கிறான். இதுவே அவனுக்கு மீண்டும் தனியே கடலுக்குச் செல்ல உந்தியது எனலாம். ”மாலை வேளைகளில் பூனைக்குட்டிகளைப்போல் அவை விளையாடிக் கொண்டிருந்தன” என எழுதிப்போகிறான். இது அவனின் வாலிபப்பருவத்தை உருவகிக்கும் குறியீடாக கதையில் விரிகிறது. அது அவனுக்கு உற்சாகமளிக்கிறது. கதையின் கடைசி வரி: ” கிழவன் சிங்கங்களைப் பற்றி கனவு கண்டுகொண்டிருந்தான்!”.  இவ்வகை கதைகளை ருசிக்க உருவகம், allegory, metaphor போன்ற வார்த்தைகளையும் தொட்டுக்கொண்டால் உங்கள் புரிதல் மேலும் விரியும்.

நூலாசிரியரின் முந்திய நாவலான “அசோகனின் வைத்தியசாலை”யிலும் கொலிங்வுட் எனும் பூனை அமானுஷ்ய பாத்திரமாய் உலாவியது நினைவில் இருக்கலாம்.

இனி கதைக்குள் புகுமுன் ஒரு சில வார்த்தைகள். நாவலின் தலைப்பு “பண்ணையில் ஒரு மிருகம்” என இருந்தாலும் இது மிருகங்களைப் பற்றியதே அல்ல! நூலாசிரியர் பேசுவது இப்பண்ணையில் உள்ள ‘மனித மிருகங்களை’ பற்றியே என்பதை பக்கங்களை புரட்ட வாசகனுக்கு புரியும். வர்க்க பேதம், பெண்ணடிமை, சாதிப்பாகுபாடு, மலடி எனும் மடுவுக்குள் வாழும் மங்கை, உடல் பசிக்கு அதிகாரம் துணைபோகும் அவலம், கெளரவக் கொலை செய்யும் உரிமை, சமுதாயத்தில் பெண்ணின் வைப்பிடம், கீழ்தட்டு மக்களின் மௌனராகங்கள் என கதை விரிகிறது. இந்த சமுதாய அவலங்களை பல தமிழ் எழுத்தாளர்கள் ஏற்கனவே எழுதிப்போயிருந்தாலும் அயல் சூழலில் இருந்து வந்த ஒரு ‘அன்னியனின் பார்வையில்’ இவை எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகின்றன என்பதை சொல்லும் முதல் நூல் இது எனலாம்.

ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் 1945 ல் எழுதிய ‘விலங்குப் பண்ணை’ (Animal Farm) எனும் உருவகக்கதையை படித்திருப்பீர்கள். இதில் வரும் பாத்திரங்கள் 1917 – 1923ல் போல்ஷிவிக் ருஸ்யாவில் ஏற்பட்ட அரசியல் சமூக மாற்றங்கள் எப்படி கம்யூனிசம் என்ற பெயரில் வகுப்புவாதங்களை வளர்த்துவிட்டது என்பதை பண்ணையில் உள்ள மிருகங்களை உருவகப்படுத்தி எழுதப்பட்டது. ருஷ்ய புரட்சியின் சம்பவங்களையும் அதை முன்னின்று நடத்தி பின்னர் தம்மை மட்டும் வளர்த்துக் கொண்ட அரசியல் தலைர்களின் போக்குகளையும் அறிந்திராவிடில் இக்கதை வால்ட் டிஸ்னி கார்ட்டூனை பார்த்த குதூகலிப்பை மட்டுமே கொடுக்கும். இதில் வரும் இரு ‘தலைமைப் பன்றிகளான’ நெப்போலியன், ஸ்னோபால் முறையே ஸ்டாலினையும், டிராட்ஸ்கியையும் குறிப்பன. பென்ஜமின் (கழுதை), மியூரியல் (ஆடு) ஆகிய மிருகங்களுக்குப் பின்னாலும் வாழ்ந்த நிஜ மனிதர்களுண்டு. தலைதெறித்த சோஷலிச ஆட்சியின் விளைவை பேசும் உருவகக்கதை இது. இதையொத்த கதையே “1984”. இதில் வரம்புடைத்த சர்வாதிகாரத்தின் சீரழிவை கதாசிரியர் ஜார்ஜ் ஆர்வெல் 1949ல் எழுதிப் போனார். ‘பண்ணையில் ஒரு மிருகம்’ வாசகனுக்கு மேலே உள்ள கதைகளை நிச்சயம் ஞாபகமூட்டிச்செல்லும் என எதிர்பார்க்கலாம்.

சரி, இனி கதைக்குள் வருவோம். நூலின் முதல் அத்தியாயத்திலேயே பால்காரன் ராமசாமி பண்ணையின் மனேஜர் கறுப்பையாவைப்பற்றி சொல்லும்போது “அது கறுப்பையா சேர்வை, அவரும் ராமநாதபுரம். அவர் அகமுடையார் சார்” என்கிறார். இங்கு சாதிய முத்திரை எத்தனை பலமாய் இப்பண்ணையில் வீழ்ந்துள்ளது என புரிந்துகொள்ள முடியும். உயர்சாதியினரும் தாழ்த்தப்பட்டவரும் அருகருகே மனையமைத்து வாழ்ந்தாலும் “உயர்சாதியினர், தாழ்த்தப்பட்டவர்கள் என்பது நாடியும் நாளமும் உடலின் பக்கத்திலிருந்தாலும், பிரிந்து இருப்பதுபோல் தெரிகிறது” என வெளிச்சம் போட்டு காட்டுகிறார் நாவலாசிரியர். கறுப்பையா இளவயதில் திருமணம் செய்து தாம்பத்திய வாழ்வில் தோல்விகண்ட நாயகன். இதுவே அவனை ஆண் புணர்ச்சிக்கு தூண்டி சிறுவர்களை சிதைக்க வைத்ததா? மாடுகளை சினைப்படுத்தும் படலத்தில் சிவப்பியில் ஏற மறுக்கும் மூக்கனையும் பின்னர் மூக்கன் பொன்னி மீது வேட்டை நாயாக பாய்வதையும் நாவலாசிரியர் மனித மிருகங்களுள் பிணைத்து எழுதிச்செல்கிறார். கதைமாந்தர்களின் பாலியல் விருப்பு வெறுப்புகளும் இதையே பிரதிபலிக்கின்றன.

எழுத்தாளர் நடேசன் கதாபாத்திரங்களைப்படைத்து அவர்களை கொலு பொம்மைகளாக்கி அடுக்கிவைத்து அழகு பார்க்காமல் அவர்களை சதுரங்கக்காய்களாக்கி நகர்த்தி கதை சொல்லும் யுக்கியில் முழு வெற்றி பெற்றுள்ளார் என்றே கூறவேண்டும். காய்களாய் நகரும் கதைமாந்தர்கள் சமூக விதிமுறைகளை தகர்த்து வெற்றி கொள்ள முடியாமல் தவிப்பதை வாசகன் கைகட்டி மௌனித்து பார்க்கும் ஒரு அசௌகரிய நிலை கடைசிப்பக்கம் வரை தொடர்கிறது. சாமர்த்தியமான காய்நகர்த்தல்களை உன்னிப்பாக நோக்காவிடில் அர்த்தங்கள் சமாதியாகிவிடும் அளவு இறுக்கம் இந்த எழுத்துக்களில் உண்டு. இதுவே இந்நூலை இருமுறையாவது படித்து கிரகிக்கும் கட்டாயத்தை வாசகனுக்கு ஏற்படுத்துகிறது. புசிக்க ஒரு முறை ருசிக்க ஒரு முறை என இருமுறை படித்தாலே வாசகன் முத்துக்களை கண்டடைவான்.

அமானுஷ்ய பாத்திரமான கற்பகத்தை முதல் அத்தியாயத்திலே நூலாசிரியர் எமக்கு அறிமுகப்படுத்தி “வெங்காயக் கலரில் சேலை கட்டியவள்” என முத்திரை குத்தி எமக்கு இவள் ஒரு மாறாத பாத்திரம் என சொல்லாமல் சொல்கிறார். கற்பகத்துடன் கதைசொல்லி நடத்தும் சம்பாஷணைகள் சுவாரசியமானவை. தன் கணவனுடன் சயனசுகம் காணாத கற்பகம் அதன் காரணத்தை இப்படி சோகத்துடன் பச்சையாகவே சொல்கிறாள்: “ஒரு நாளாவது நாட்டுச்சாராய வாசனை வீசாத வாயாக இருக்குமென அந்த டாக்டரிடம் விட்டுக் கொடுத்தேன்”. இந்த வரிகளில்தான் எத்தனை தாகம் கலந்து வேதனை? கற்பகத்தின் அந்தரங்க விரக்தியை கொச்சைப்படுத்தாமல் பக்குவமாக கதாசிரியர் வார்த்தைப் பொட்டலமாக கட்டி வாசகன் கைகளில் திணிப்பது இன்னும் அழகு.

இங்கு ‘சமூக சௌகரியம்’ பற்றியும் பேசியாக வேண்டும். சமூகத்தின் அடிமட்டத்தில் வாழும் கற்பகம் போன்றவர்கள் சமூக நியதிகளை இலகுவாக உடைத்தெறிந்து கடந்துபோவதை இங்கு காண்கிறோம். படுக்கையில் ‘பன்றி போல் ஏறி இறங்கும்’ தன் கணவனை அவள் நிராகரித்து பண்ணை டாக்டருடன் ஒர் இரவு உறவு கொள்கிறாள். மேல்குடியில் இதுபோன்ற வரம்பு மீறல்கள் லாவகமாக தோன்றி மறைவதில்லை. இதை இப்படி வெளிச்சம் போட்டு காட்டுகிறார் கதாசிரியர்: “சாதி, பரம்பரை, தனி மனித வைராக்கியம். ஒழுக்கம், கற்பு எனப் பல பெயர்களில் மணிமகுடம் சூட்டப்படுகிறது…போற்றப்படுகிறது… புகழப்படுகிறது. கதை – காவியம் – இதிகாசம் – புராணமாகிறது”.

நவீன இலக்கியத்தில் இந்த வரம்பு மீறல்கள் புதிதல்ல. தமிழ் நவீன இலக்கியத்தின் பிதாமகனான புதுமைப்பித்தனின் “பொன்னகரம்” சிறுகதையில் வரும் அம்மாளுவை மறந்திருக்க மாட்டீர்கள். ரெயில்வே தண்டவாளத்துக்கு அருகே உள்ள சாராய டிப்போவிற்கு அருகில் உள்ள சந்தில் வசிக்கும் அம்மாளு தன் கணவனுக்கு பால்கஞ்சி வாங்க பணமில்லாமல் சமுதாயம் சமைத்து வைத்த வரம்பை மீறுகிறாள். இப்படி முடிகிறது கதை : “சந்தின் பக்கத்தில் ஒருவன் – அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாகக் ‘கண்’ வைத்திருந்தவன். இருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம், புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான்! என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்!”

நமது கதையிலும் இதே வரம்பு மீறலைத்தான் மீழ்விஷயம் செய்கிறார் கதாசிரியர் நடேசன். ”பொன்னகரம்’ 1934ல் பிரசுரமான போது இலக்கியவாதிகள் மெரீனா கடற்கரையில் வட்டம் போட்டு அமர்ந்து கதையின் கருத்தாடல்களை பல மாதங்கள் விவாதித்தார்களாம். ஜெயகாந்தனின் “அக்கினிப் பிரவேசம்”, “சமூகம் என்பது நான்கு பேர்” போன்ற சிறுகதைகள் இதே சலசலப்பை தமிழ் வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது ஞாபகத்தில் இருக்கலாம். இது போன்ற காத்திரமான வாசிப்பு தமிழ் வாசகர்களிடையே இன்றில்லையே என்பது வேதனையே. சரி, அதைவிட்டு மீண்டும் அதைக்குள் நுழைவோமா?

கற்பகம் என்ற பாத்திரப்படைப்பை நூலாசிரியர் மிக நுணுக்கமாக வடிவமைத்தது மட்டுமல்லாமல் அவளின் சோகக்கதை மெதுவாய் அத்தியாயங்கள் புரள ஒரு மேடையில் திரை விலக விலக காட்சிகள் கண்ணுக்கு தெரிவதைப் போல் வெளிப்படுத்துகிறார். கற்பகம் என்ன ஆவியா, பேயா அல்லது கதைசொல்லியின் மனப்பிராந்தியில் முளைத்த உருவகமா எனும் வாசகனின் ஐயங்கள் கதையை நிச்சயம் சுவாரசியமாக நகர்த்த உதவுகின்றன. இறுதிச் சந்திப்பில் (அட, இரகசியத்தை உடைத்து விட்டேனோ?)  கற்பகம் கதை சொல்லிக்கு தெளிவுபடுத்தும் விடயங்கள் சில முடிச்சுகளை லாவகமாக அவிழ்க்கின்றன. நாவலின் சினிமாத்தனம் இல்லாத முடிவுக்கு இது நிச்சயம் துணைபோகின்றது.

கதையில் சிறுவர்கள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகிறார்கள். பாடசாலைக்குச் செல்லாத, கல்வி சூறையாடப்பட்ட, இச்சிறுவர்கள் பண்ணையில் கூலி வேலை செய்து பிழைக்கும் பரிதாப வாழ்வு. பண்ணை மேஸ்திரி எனும் அதிகார துஷ்பிரயோகம் இவர்கள் வாழ்வை சீரழிப்பதை மௌனமாக பார்த்து நிற்கின்றனர் இப்பண்ணை ‘மிருகங்கள்’. “யாராவது பொம்பிளைக்குச் செய்தாலும் பரவாயில்லை. அதைவிட்டுப் பசங்களுடன்?” எனும் பால்காரன் ராமசாமியின் கோணல் நியாயங்கள் அடிமட்ட சமுதாயத்தின் அளவுகோலில் பெண்களின் இடம் எந்த அளவு தாழ்ந்துள்ளது என்பதை வேதனையுடன் சொல்லிப் போகிறது. வேதனை தொடர்கிறது…… இப்பாலியல் அனர்த்தம் பற்றி கதைசொல்லி துரைநாயக்கரிடம் முறையிட அதற்கு கிடைத்த பதில்: “மேஸ்திரிக்கு இது முதவாட்டி இல்ல. பையன்களுக்கும் இது முதவாட்டி இல்லை சார். இரண்டு நாளில் அவங்க மறந்துவிடுவாங்க. அவங்க ஆம்பிளைக” என்றார் சாந்தமாக. ஆண் என்பதற்கு புது அர்த்தம் கற்பிக்கும் அதிகார (நாயக்கர்) வர்க்கத்தை இங்கு காண்கிறோம்.

பெண்ணடிமைத்தனம் என்பது இரு வெவ்வேறு சமூக மட்டங்களில் மட்டும் நிலவும் பிணி எனும் கருத்தை மாற்றிப்போடும் தருணங்களும் உண்டு. தனது சொந்த மருமகளையே வார்த்தைகளால் சிறுமைப்படுத்தும் மாமியை இச்சமூகத்தில் காண்கிறோம்: “மாமிக்கு எனது பெயர் மறந்துவிட்டது. புழு பிடிக்காதவள், பூச்சியில்லாதவள், வக்கற்றவள், மலடி என எல்லா வார்த்தைகளையும் சொல்லித் திட்டுறா.” மேலும் குழந்தை பெற்றுக்கொள்ளாததற்கான பழியை சுமக்கும் பாவம் எல்லா அடிமட்ட சமூகங்களிலும் பெண் மீதே சுமத்தப்படுகிறது. தாம்பத்திய உறவில் ஆணின் மலட்டுத்தன்மை ஒரு பேசுபொருளாகக் கூட ஏனே இச்சமூகங்களில் இருப்பதில்லை. இந்த மனோபாவத்தையும் தொட்டுச் செல்கிறது இந்நூல்.

நூலாசியர் ஒரு தேர்ச்சி பெற்ற கால்நடை வைத்தியர் என்பதால் பல நுணுக்கமான மிருக வைத்திய உண்மைகளையும், சினைப்படுத்தல், கன்று ஈனும் செயல்முறை, ஆட்டிற்கு கொம்பு தறித்தல் போன்ற அருந்தகவல்களை அக்கறையுடன் மிக லாவகமாக கதைக்குள் புகுத்தி கதை நகர்த்தியது சிறப்பு.

மொத்தத்தில், தமிழ் சமுதாயத்தில் புரையோடிக் இடக்கும் வர்க்கபேதங்களையும் சாதிக் கொடுமைகளையும் மிக துல்லியமாய் ஆராய்ந்து மனதில் உறைக்கும்படி எழுதியுள்ள இந்நாவல் நிச்சயம் படிக்கப்பட வேண்டியதொன்று. வார்த்தை ஜோடனைகள் இன்றி கதைமாந்தர்களையே பேச விட்டு அவர்கள் வார்த்தைகளாலேயே சமுதாய அவலங்களை எடுத்துக் கூறும் இந்நாவல் ஒரு சிறந்த வாசிப்பனுபவத்தை வாசகனுக்கு அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி: பதிவுகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: