தெளிவத்தை ஜோசப்பின்  எண்பத்தி எட்டு அகவை

தெளிவத்தை ஜோசப்பின்  எண்பத்தி எட்டு அகவையில் செம்பதிப்பாக வெளியாகும் கதைத் தொகுதி

          06 முதல் சந்திப்பு – அங்கம்                                                    முருகபூபதி

மலையக இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர்கள் வரிசையில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் தெளிவத்தை ஜோசப். சந்தனசாமி ஜோசப் என்ற இயற்பெயரைக்கொண்டிருந்த இவர்  1934  ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தில்  ஊவாக்கட்டவளை என்ற கிராமத்தில் பிறந்தார்.

பின்னாளில்  பெற்றோரின் பூர்வீகமான தமிழ்நாடு கும்பகோணத்தில் படித்துவிட்டு, மீண்டும்  தாயகம் திரும்பி பதுளை புனித பேதுருவானவர் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து, தெளிவத்தை என்ற மலையகத் தோட்டத்தில் ஆசிரியராக பணியாற்றினார்.

இலக்கியப்பிரதிகளை அந்த ஊரின் பெயரை முன்னிறுத்தி தனது பெயரையும் இணைத்துக்கொண்டு எழுதியதனால், இன்றும் தெளிவத்தை என்றால்,  எங்கள் எழுத்தாளர் ஜோசப் அவர்களைத்தான் குறிக்கும் எனச்சொல்லும் அளவுக்கு புகழ்பெற்றவர். அந்த ஊருக்கும் ஒரு அடையாளத்தை வழங்கினார்.

1970 களில் நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில், வீரகேசரியிலும் வத்தளையிலிருந்து வெளியான அஞ்சலி இதழிலும் தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதைகளை படித்தேன்.

எழுத்தை மாத்திரம் படித்துவிட்டு ஒதுங்கிவிடும் இயல்பு என்னிடத்தில் இல்லாதிருந்தமையால்,  இலக்கியப்  பிரதியை எழுதியவர்களையும் தேடிச்செல்லும் பண்பினையும் கொண்டிருந்தேன்.

அக்காலப்பகுதியில்  நான் விரும்பிச்  சுவைக்கும் இனிப்புவகையான ஸ்டார் பிராண்ட் டொபி உற்பத்திசெய்யும்  Modern Confectionary Works Ltd  என்ற நிறுவனத்தில்  தெளிவத்தை ஜோசப் கணக்காளராக பணியாற்றுகிறார் என்ற செய்தி எனக்கு கிட்டியது.

அந்த நிறுவனம்  எங்கள் நீர்கொழும்பிலிருந்து கொழும்பு செல்லும் மார்க்கத்தில்,  களனி பாலத்தை கடந்தவுடன் வரும் செயின்ஸ்தான் திரைப்பட அரங்கிற்கு அருகில் அமைந்திருந்தது. 

தெளிவத்தை ஜோசப் அவர்களை நேரில் சென்று பார்ப்பதற்காக அங்கு சென்றேன். ஆனால், அன்று அவர் வெளியே சென்றிருப்பதாக வாயிலிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் சொன்னார்.

ஏமாற்றத்துடன் திரும்பினேன்.  அக்காலப்பகுதியில் பொரளை கொட்டா வீதியில் அமைந்திருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்  காரியாலயத்திலிருந்து வெளியான தேசாபிமானி பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய இலக்கிய நண்பர் மு. கனகராஜனிடம் தெளிவத்தையை பார்க்கவேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவித்தேன்.

தெளிவத்தை வத்தளையில் வசிப்பதாக தகவல் தந்த அவரே என்னை அவரிடம் அழைத்துச்சென்றார்.  இது நிகழ்ந்தது 1972 ஆம் ஆண்டு .  அன்று முதல் கடந்த அரைநூற்றாண்டு காலமாக தெளிவத்தை ஜோசப்  அவர்களுடனான இலக்கிய நட்புறவு எத்தகைய விக்கினமுமின்றி ஆரோக்கியமாகத் தொடருகின்றது.

இவருக்கு தற்போது 88 வயதாகிவிட்டது. சுகவீனமுற்றிருக்கிறார் என அறிந்து தொடர்புகொண்டு பேசினேன்.  முன்பிருந்த உற்சாகமான குரல் அவரிடமிருந்து வெளிப்படவில்லை.  உடல் உபாதையின் தாக்கம் அவரது குரலில் தென்பட்ட சோர்வில் புலப்பட்டது.

மிகுந்த கவலையுடன் இருந்த எனக்கு அண்மையில் இவர் பற்றி வெளியான செய்தி மிகுந்த மகிழ்ச்சியை தோற்றுவித்தது.

தெளிவத்தை ஜோசப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை தொகுத்து செம்பதிப்பாக தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள் என்ற நூலை, இவரது நீண்ட கால நண்பர்கள் மாத்தளை செல்வா என அழைக்கப்படும் எச். எச். விக்கிரமசிங்காவும் லண்டனில் வதியும் எழுத்தாளர் மு. நித்தியானந்தனும்  வெளியிடவிருக்கிறார்கள்.

இந்தப்பதிவில் ஒரு முக்கிய தகவலையும் இங்கே தெரிவிக்கின்றேன்.

இலங்கை பொருளாதாரத்திற்கு ஒரு காலத்தில்  அறுபது சதவீதமான அந்நியசெலாவணியை ஈட்டித்தந்த   மலையகத்தின் தேயிலைத்  தோட்டத் தொழிலாளர்களின் அந்தக்குடியிருப்புக்குப்பெயர் லயன் காம்பரா.

அந்தகுடும்பத்தின் தலைவன் இரவில் வெளியே சென்றுவிட்டு அந்த ஒரு அறை வீட்டுக்கு திரும்புகின்றான். ( ஒரு அறை என்றால் அதற்குள்தான் சமையல், படுக்கை, பிள்ளைகளின் படிப்பு) திடீரென்று அந்த அறைக்குள்ளிருந்து அவன் அலறிக்கொண்டு வெளியே வருகின்றான்.

அப்படி அங்கு என்னதான் நடந்தது?  கும்மிருட்டில், மனைவி என நினைத்துக்கொண்டு தெரியாத்தனமாக தனது பருவமகளின் பக்கத்தில் போய் படுத்திருக்கின்றான். 

மறுநாள் தோட்டத்தின் துறையிடம் தங்களின் அவல வாழ்வுபற்றி முறையிடச்செல்கின்றான்.

இப்படிப்பட்ட அவலமான  காட்சிகள் மலையகத் தோட்டங்களில் நடந்திருக்கலாம்.  1975 ஆம் ஆண்டு வெளியான இலங்கை தமிழ்த்திரைப்படத்தில் இக்காட்சி வருகிறது! அந்தப்படம்தான் புதிய காற்று. இதற்குதிரைக்கதை வசனம் எழுதியவர்தான்இந்தப்பதிவில் நான் குறிப்பிடும்  தெளிவத்தை ஜோசப்.

இந்தத்திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் இருவர்.  இன்று இலங்கையில் பிரபல அரசியல் தலைவர்கள். அவர்கள்தான் மனோ கணேசன் – பிரபா கணேசன்.  இவர்களின் தந்தையார் வி.பி. கணேசன் இலங்கை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் செயலாளராக இருந்தவர்.

எஸ். இராமநாதனின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படத்தை வி.பி.கணேசன் தயாரித்து கதாநாயகனாகவும் தோன்றினார்.

தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள் எழுதிக்கொண்டே ஆய்வுகளிலும் ஈடுபட்டவர்.  அந்த ஆய்வுகளில் மகுடமாகத் திகழ்வது மலையக சிறுகதை வரலாறு. 

தொடர்ந்தும் இவர் தமிழ்நாடு  கும்பகோணம் வாசியாக இருந்திருப்பின் இன்று இவருக்கு கிடைத்திருக்கும் பிரபல்யத்திற்கு  வாய்ப்பில்லை.

கும்பகோணத்தில் ஆயிரத்தில் ஒரு மனிதராக சந்தனசாமி ஜோசப் இருந்திருப்பார். தான் பிறந்த இலங்கை மலையகத்தை இவர் நேசித்தார். மலையகமும் இவரை நேசித்து வளர்த்தது. மலையக இலக்கியத்திற்கும் வளம் சேர்த்தார். மலையக எழுத்தாளர் மன்றமும் இவரைத்  தலைவராக ஏற்றுக்கொண்டது.

1960 களில் இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கிய இவருடைய ஒரு சிறுகதை ஜி. உமாபதி அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வெளியிட்ட உமா என்ற இதழில் வெளிவந்திருக்கிறது.

யார் இந்த உமாபதி?

இவர்தான் சிவாஜி கணேசன் நடிப்பில் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் வெளியான ராஜராஜசோழன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்.

உமாபதியை  மணிரத்தினம்இயக்கிய அக்கினி நட்சத்திரம் திரைப்படத்தில் வில்லனாகப்பார்த்திருப்பீர்கள்.

1960 களில் தெளிவத்தை ஜோசப் சிறுதைகள் எழுதத் தொடங்கியிருந்தாலும், நூலுருவில் முதலில் வெளிவந்தது காலங்கள் சாவதில்லை  நாவல்தான். இதனை வீரகேசரி பிரசுரம் 1974 இல் வெளியிட்டது. அதற்குப்பின்னர்தான், மு. நித்தியானந்தனின் வைகறை வெளியீடாக இவருடைய கதைகளின் தொகுதி நாமிருக்கும் நாடே 1979 இல் வெளிவருகிறது.

 சிலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து வந்து        குடியேறி துன்பக்கேணியில் உழன்ற சந்ததியின் வாரிசு இவர்.

 சிறுகதை, நாவல், விமர்சனம், பத்தி எழுத்துக்கள், ஆய்வுத்    தொடர்கள், திரைப்பட வசனம், தொலைக்காட்சி-வானொலி நாடகம் என தனது எழுத்தூழியத்தை                                  அகலிக்கச்செய்தவர். 

தேசியசாகித்திய விருதினை இரண்டு தடவை பெற்றுள்ள          தெளிவத்தை , சம்பந்தன் விருதும் பெற்றவர். கலாசார             அமைச்சின் கலாபூஷணம் பட்டமும்  கிடைத்தது. பேராதனை          பல்கலைக்கழகம் அழைத்து பாராட்டி கௌரவித்திருக்கிறது.  தமிழ்நாட்டில் 2003 இல் காலச்சுவடு நடத்திய தமிழினி            மகாநாட்டிலும் அவுஸ்திரேலியாவில் 2009 இல் நடந்த தமிழ் எழுத்தாளர் விழாவிலும்  கலந்துகொண்டவர். இலங்கையில் இலக்கியத்திற்கான உயர் விருது – சாகித்திய ரத்னாவும் இவருக்கு கிடைத்துள்ளது.

பின்னாளில் இவருக்கு ஜெயமோகன் ஏற்பாட்டில் வழங்கப்படும் விஷ்ணுபுரம் விருதும் கிடைத்திருக்கிறது.

1983 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின்போது தான் பணியாற்றிய  ஸ்டார்  இனிப்புக் கம்பனிக்கு அருகிலிருந்த அந்த ஸெயின்ஸ்தான் திரையரங்கில் இரண்டு நாட்கள் சிறைப்பட்டிருந்த அவலத்தை நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983 என்ற உண்மைப்புனைவு நாவலில் தெளிவத்தை சித்திரித்திருக்கிறார்.

இன்று அந்த இனிப்புக் கம்பனியும் இல்லை ஸெயின்ஸ்தான் திரையரங்கும் இல்லை. அன்று நடந்த அவலக்கதை மாத்திரம் தெளிவத்தையின் படைப்பில் வாழ்கிறது!

இவரது வாசிப்புத்தளமும் விரிவானது. எந்தவொரு இலக்கியக்கூட்டத்திலும் மேம்போக்காக பேசமாட்டார். தான் எடுத்துக்கொண்ட தலைப்புக்காக பல நாட்கள் ஆதாரங்களையும்                 தகவல்களையும் திரட்டி கோவைப்படுத்திக்கோண்டே                பேசுவார்.

நாவல், சிறுகதை எழுதிக்கொண்டே பத்திரிகைகளில் ஆய்வுத்தொடர்களையும் தந்திருப்பவர்.  பல வருடங்களுக்கு முன்னர், தினகரன் வாரமஞ்சரியில் பல தமிழக – ஈழத்து முன்னோடி             எழுத்தாளர்களின் சிறுகதைகளைத்  தேடி எடுத்து பிரசுரித்து   வந்தார். கதையை மாத்திரம் அறிமுகப்படுத்தாமல் குறிப்பிட்ட அக்கதையை எழுதியவரின் வாழ்க்கைச்சரிதத்தையும்                சுருக்கமாக பதிவுசெய்தார்.

—-0—-

( நன்றி:  யாழ். தீம்புனல் 30-09-2022 )

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: